Saturday, 1 October 2016

ஒன்பது நலன்களை அருளும் காசியின் நவதுர்கைகள்!

"பராசக்தியின் அம்சம் துர்க்கை. துர்க்கையை வழிபட்டால் துன்பம் போகும்; எதிலும் வெற்றி கிட்டும்' என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

இந்த துர்க்கையை நவராத்திரியின்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிறார்கள்- ஒவ்வொரு திருநாமம் கொண்டு!அந்த வகையில் காசி மாநகரத்தில் வாழும் மக்கள் சைலபுத்ரி, பிரம்மசாரிணீ, சித்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயிணி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என்னும் திருப்பெயர்களில் போற்றி வழிபடுகிறார்கள்.

காசி மாநகரத்தில் கங்கை நதியின் தென் பகுதியில்- அசி நதிக்கரை ஓரத்திலுள்ள துர்க்கா கோவில் மிகவும் புகழ் பெற்றுத் திகழ்கிறது. இக்கோவிலை நவதுர்க்கா கோவில் என்று போற்றுகிறார்கள்.

இத்திருக்கோவிலில் மூலவராக நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளாள் துர்க்கை.

நவராத்திரி காலத்தில் இக்கோவிலில் தினமும் துர்க்கைக்கு ஒவ்வொரு விதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு, கங்கை நதியின் கரையோரமுள்ள அழகிய மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள்.

காசி மாநகரில் துர்க்கை, காளி, அம்மன் கோவில்கள் பல இருந்தாலும், காசிவாழ் மக்கள் ஒன்பது நாட்களிலும் சாஸ்திர சம்பிரதாயப்படி தினமும் ஒவ்வொரு துர்க்கை அல்லது அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே உள்ள துர்க்கைக் கோவிலுக்குச் செல்ல இயலாத வர்கள் கங்கை நதிக்கரையோரம் உள்ள நவதுர்க்கைக் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.

நவராத்திரியின் முதல் நாளன்று காசி வருணை நதிக்கரையில் உள்ள மலைமகள் "சைலபுத்ரி' கோவிலுக்குச் செல்கிறார்கள். இமவான் மகளாகிய பார்வதி தேவியே இங்கு சைலபுத்ரியாக அருள்புரிகிறாள்.
 
காளையை வாகனமாகக் கொண்ட இந்த தேவி, வலக்கையில் சூலமும் இடக் கையில் தாமரையும் ஏந்தி மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ளாள். இத்தேவியை வழிபட வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.

இரண்டாம் நாள் கங்கைக்கரையோரம் உள்ள துர்க்கா காட் படித்துறையருகே உள்ள பிரம்மசாரிணி கோவிலுக்குச் சென்று வழிபடுகிறார்கள். இந்த தேவி எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருப்பாள். வெண்ணிற ஆடையுடன், வலக்கையில் ஜெபமாலையும் இடக்கையில் கமண்டல மும் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த தேவியை வழிபட மனதில் உறுதி பிறக்கும்; எதையும் சாதிக் கும் சக்தி கிட்டும்.

மூன்றாம் நாள் காசி சௌக் கடைத் தெருவில் உள்ள சித்திரகாண்டா துர்க்கை கோவிலுக்குச் செல்கிறார்கள். தங்கமயமான அழகிய தோற்றம் கொண்டவள் இந்த தேவி. புலி மீது அமர்ந்த திருக்கோலம். மூன்று கண்களும் பத்து கரங்களும் கொண்டவள். சூலம், கதை, கத்தி, கமண்டலம், வில், அம்பு, தாமரை, ஜெபமாலை, அபய, வரத முத்திரைகளுடன்  காட்சி தருகிறாள். வீரத்தின் திருவுரு வான இந்த தேவியை வழிபட்டால், சகல இடர்களையும் களைந்து மனதிற்கு தைரியத்தை அளிப்பாள். சித்திரகாண்டாவை சந்திர காண்டா தேவி என்றும் சொல்வர்
 
நான்காம் நாள் காசியின் தென் எல்லை யாகக் கருதப்படும் கூஷ்மாண்டா நவதுர்க்கை கோவிலுக்குச் செல்வது வழக்கம். இந்த தேவியின் புன்சிரிப்பு உலகத்தை வாழ வைக்கும் சக்தி கொண்டது என்று தேவி பாகவதம் போற்றுகிறது. சூரிய மண்டலத்தில் வசிக்கும் இத்தேவி, சூரியனைப்போல் பல திசைகளிலும் தன் ஒளியை வீசி அருள்புரிகிறாள். புலியை வாகனமாகக் கொண்டவள். எட்டு கைகளில் சக்கரம், கதை, ஜெபமாலை, அமிர்த கலசம், தாமரை, வில், அம்பு, கமண்டலம் கொண்டு வீற்றிருக்கிறாள்.

ஐந்தாம் நாள் காசியில் ஜைத்புரா என்ற பகுதியிலுள்ள ஸ்கந்தமாதா கோவிலுக்குச் செல்வார்கள். சைலபுத்ரி, பிரம்மசாரிணியாகத் தவமிருந்து சிவனை மணந்து, முருகப் பெருமானை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்றவள் இந்த தேவிதான். மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவள். மேலிரண்டு கரங்களில் தாமரை மலரை ஏந்தி, கீழிரண்டு கரங்கள் அபய, வரத முத்திரையுடன் சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கிறாள்.

ஆறாம் நாள் ஆத்ம விசுவேசுவரர் கோவி லில் எழுந்தருளியுள்ள காத்யாயிணி தேவியை வழிபடுகிறார்கள். காத்யாயனவர் என்ற முனிவர் அம்பாளை நோக்கித் தவமிருந்து வேண்டிக் கொண்டபடி, தேவியானவள் அவருக்கு மகளாகப் பிறந்த தால் இப்பெயரைப் பெற்றாள். தங்கம் போன்ற ஒளியுடன் பிரகாசிக்கும் காத்யாயிணி புன்சிரிப்புடன் சிம்மத்தின்மீது அமர்ந்திருக்கி றாள். நான்கு கரங்கள் கொண்டவள். அபய, வரத முத்திரைகளுடன் வாளும் தாமரையும் ஏந்தியிருப்பவள். எதிரிகளை அழிக்கும் சக்தி கொண்ட இத்தேவியை வழிபட்டால் எதிரிகள் அழிவர்.

ஏழாம் நாள் காசியில் காளிகாகலி என்ற இடத்திலுள்ள காளராத்திரி கோவிலுக்குச் சென்று துர்க்கையைத் தரிசிக்கிறார்கள். இந்த தேவியின் தோற்றம் சற்று வித்தியாசமானது. உடலின் நிறம் கறுப்பு, தலைமுடி பறந்து கொண்டிருக்கும். கழுத்தில் மின்னல் போன்ற ஒளி உமிழும் மாலை அணிந்தவள். மூன்று கண்களும் சிவந்து பெரிதாகக் காணப்படும். கழுதை வாகனம் கொண்டவள். நான்கு கைகளிலும் கத்தி, அரிவாள், அபய, வரத முத்திரை கொண்ட இவள் துஷ்டர்களை அழித்து வெற்றி கொள்பவள். இத்தேவியை வழிபட, தீயவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போவார்கள்.

எட்டாம் நாள் பார்வதியின் அம்சமான மகா கௌரியை வழிபடுவார்கள். இக்கோவில் ஸ்ரீ அன்னபூரணி கோவிலுக்கு அருகிலுள்ளது. எட்டு திருக்கரங்கள் கொண்டவள். ஆட்டுக் கிடா வாகனத்தில் அமர்ந்திருப்பாள். வலது கரங்களில் அபய முத்திரை, சூலம், வாள், சக்கரம்; இடது கரங்களில் வரத முத்திரை, கதை, கத்தி, சிறிய துடுப்பு வைத்திருக்கும் இந்த தேவி சாந்த முகத்துடன் காட்சி தருவாள். இவளை வழிபட பசிப்பிணி நீங்கும்; மனதில் அமைதி நிலவும்.

ஒன்பதாம் நாள் காசி சித்தாத்திரி சங்கடா கோவிலுக்கு அருகேயுள்ள சித்திதாத்திரி (சித்திமாதா) எனப்படும் துர்க்கை கோவிலுக் குச் செல்வார்கள். இவள் தாமரை மலர்மீது அமர்ந்திருப்பாள். நான்கு கரங்கள் கொண்ட வள். வலது கீழ் கரத்தில் கதையும் மேல் கரத்தில் சக்கரமும்; இடது கீழ் கையில் தாமரையும் மேல் கரத்தில் சங்கும் வைத்து அருள்புரிகிறாள். இவளின் திருமுகத்தைத் தரிசித்தாலே முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை.

கடைசியாக பத்தாம் நாள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ காசி விசாலாட்சியை வழிபட்டு, அருகிலுள்ள ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்குச் சென்று  வழிபாடு முடித்து பிரசாதம் பெற்று அல்லது அன்னதானத்தில் கலந்துகொண்டு, பிறகு காலபைரவரையும் தரிசித்து, தங்களுக்கு உள்ள தோஷங்களைக் களைந்து, கையில் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டு வேண்டுதலை நிறைவு செய்கிறார்கள்.

பராசக்தியின் வடிவமான அன்னை துர்க்கா தேவியை வழிபட்டால் வாழ்வில் எதிலும் வெற்றிகிட்டும் என்பதால், நவராத்திரி காலங்களில் துர்க்கா தேவியை மூன்று விதமாக வகைப்படுத்தி வழிபடுவது வழக்கம். பராசக்தி, சரஸ்வதி, லட்சுமி என்று ஒன்பது நாட்கள் போற்றப்பட்டு, பத்தாவது நாளில் விஜயதசமியாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

No comments:

Post a Comment