Saturday, 1 October 2016

காசியில் அருள்புரியும் த்வாதச ஆதித்யர்கள்!

சூரிய பகவான் ஈசனை வழிபட்ட தலங்கள் அநேகம். அவற்றில் முதன்மையானது புனித கங்கை பாய்ந்தோடும் காசி. இத்தலத்தில் 12 ஆதித்யர்கள் அருள்புரிவதாக காசிகண்டம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைத்தான் வேதங்கள் த்வாதச ஆதித்யர்கள் என்று குறிப்பிடுகின்றன. தை மாதம் பிறக்கும் இவ்வேளையில் காசியில் அருள்புரியும் அந்த 12 சூரிய பகவான்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

கங்காதித்யர் : பகீரதன் கடுந்தவம் செய்து கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த அதே சமயத்தில், காசிக்கு வந்து கங்கைக் கரையில் தங்கி, காசி விஸ்வநாதரை வழிபட்டான் சூரியன். அந்த சமயத்தில், ஆகாயத்திலிருந்து கங்கை பொழிவது கண்டு மகிழ்ந்த சூரியன், தானும் கங்கையை உளமாற வழிபட்டான். இதனாலேயே இவர் கங்காதித்யர் என அழைக்கப்பட்டார். காசியில் லலிதாகாட்டில் உள்ளது இந்த சூரிய பகவானின் ஆலயம்.

விருத்தாதித்யர் : நான்கு வேதங்களையும் கற்ற விருத்தன் என்பவன், சூரிய பகவானைக் குறித்து கடுந்தவம் புரிந்து தன் இளமை மீட்கப் பெற்றான். இந்த விருத்தனுக்கு அருளிய சூரிய பகவான், காசியில் மீர்காட் எனும் இடத்தில் நிலை கொண்டுள்ளார். இவரை தரிசித்தால் வயதான காலத்தில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளிலிருந்து மீளலாம்.

திரௌபதி ஆதித்யர் : பஞ்சபாண்டவர்களின் மனைவியான திரௌபதி வழிபட்ட சூரியன் இவர். இவரிடமிருந்துதான் திரௌபதி அட்சய பாத்திரத்தைப் பெற்றதாக  ஐதீகம். இவரின் ஆலயம் விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் அட்சய பீடத்தில் அமைந்துள்ளது.

லோலார்க்கர் ஆதித்யர் : மாந்தரின் மன அழுக்குகளையும், சஞ்சலங்களையும் தனது ஞானத்தால் தீர்ப்பதால் லோலார்க்கர் எனும் பெயர் பெற்ற சூரியனின் ஆலயம் அதிசங்கமத்தில், லோலார்க்க குண்டம் அருகில் உள்ளது. அந்த குண்டத்தில் நீராடி அங்கு அருளும் சூரியபகவானை வணங்கினால் தீராத நோய்களும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

மயூகாதித்யர் : பஞ்சகங்கா காட் அருகில் மங்களாகௌரி ஆலயத்தில் அருள்கிறார் மயூகாதித்யர். முன்னொரு சமயம் ஈசனையும், உமையையும் மங்களாகெளரி, கபஸ்தீஸ்வரர் எனும் திருநாமமிட்டு காசியில் பிரதிஷ்டை செய்து கடுந்தவம் புரிந்தார் சூரியபகவான். அவரது தவத்தை மெச்சிய அம்மை-அப்பர், சூரியனுக்கு மயூகன் என பெயர் சூட்டி அருளினர். மயூகன் வழிபட்ட ஈசன் மயூகாதித்யர் ஆனார்.

அருணாதித்யர் : காஷ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்த மூன்று முட்டைகளில் முதல் முட்டையில் இருந்து ஆந்தையும், இரண்டாவது முட்டையில் இருந்து ஊனமுடன் அருணனும், மூன்றாவது முட்டையில் இருந்து கருடனும் தோன்றினர். இம்மூவரில் ஆந்தையும், அருணனும் காசிக்கு வந்து சூரிய பகவானை வணங்கினர். அவர்களுக்கு அருள் புரிந்த சூரியன், அருணனை தனது தேரோட்டியாக நியமித்துக் கொண்டார். இந்த அருணாதித்யர், த்ரிலோசனர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

ஸாம்பாதித்யர் : விஸ்வநாதர் ஆலயத்திற்கு மேற்கே உள்ளது இந்த சூரியனின் ஆலயம். ஸாம்பன் என்பவன் கிருஷ்ணரால் குஷ்டரோகியாகும்படி சாபம்  பெற்றான். பின் கிருஷ்ணர் இரக்கப்பட்டு சொன்ன ஆலோசனையின் பேரில், காசிக்கு வந்து சூரியபகவானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். ஸாம்பன் வழிபட்ட ஆதித்யனாதலால் ஸாம்பாதித்யர் என பெயர் பெற்றார்.

உத்திர அர்க்கர் : காசிமாநகரின் வடக்கே அலேம்புரா எனும் இடத்தில் உள்ள சூரிய தீர்த்தமே உத்திர அர்க்க குண்டம். அதை வக்ரியா குண்டம் என்றும்  அழைக்கின்றனர். அங்கு ஒரு ஆட்டிற்கும், ஒரு பெண்ணிற்கும் அவர்கள் மேற்கொண்ட தவத்தை மெச்சி சூரியன் அருளிய இடம் அது. வக்ரி எனில் ஆடு என்று பொருள். இங்கு அருளும் சூரிய மூர்த்தி உத்திர அர்க்கர் எனும் திருப்பெயரோடு அருள்கிறார்.

சுஷோல்கா ஆதித்யர் காசியில் புகழ்பெற்ற த்ரிலோசனர், காமேஸ்வரர் ஆலய பிராகாரத்தில் அருளும் சுஷோல்கா ஆதித்யர் என்ற சூரிய பகவான் கருடனாலும்,  அவர் தாய் வினதையாலும் வழிபடப்பட்டவர்.

யம ஆதித்யர் : சூரிய பகவானின் புதல்வனான யமதர்மராஜன் காசியில் தன் தந்தைக்கு ஆலயம் அமைத்து தவமியற்றி, வரங்களைப் பெற்றதாக ஐதீகம். இந்த யம ஆதித்யர் ஆலயம் காசியில் சங்கடா காட் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

கேசவாதித்யர் : கேசவாதித்யர் என்ற இந்த சூரிய பகவான் வருணா சங்கமத்தில் உள்ள கேசவர் ஆலயத்தில் அருள்கிறார். கேசவனாகிய நாராயணனின் அருளால் லிங்கம் அமைத்து வழிபட்டதால் கேசவாதித்யர் எனப் புகழ் பெற்று விளங்குகிறார்.

விமலாதித்யர் : தொழுநோயால் பாதிக்கப்பட்ட விமலன் என்பவர் காசிக்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி ஈசனையும் சூரியனையும் வழிபட்டார். இதனால்  மகிழ்ந்த சூரியன், இனி உன் வம்சத்திற்கே தொழுநோய் வராது என வரமருளினார். கதோலியாவுக்கு அருகே ஜங்கம்பாடியில் இந்த விமலாதித்யர் அருள் புரிகிறார்.
 
 

ஒன்பது நலன்களை அருளும் காசியின் நவதுர்கைகள்!

"பராசக்தியின் அம்சம் துர்க்கை. துர்க்கையை வழிபட்டால் துன்பம் போகும்; எதிலும் வெற்றி கிட்டும்' என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

இந்த துர்க்கையை நவராத்திரியின்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிறார்கள்- ஒவ்வொரு திருநாமம் கொண்டு!அந்த வகையில் காசி மாநகரத்தில் வாழும் மக்கள் சைலபுத்ரி, பிரம்மசாரிணீ, சித்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயிணி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என்னும் திருப்பெயர்களில் போற்றி வழிபடுகிறார்கள்.

காசி மாநகரத்தில் கங்கை நதியின் தென் பகுதியில்- அசி நதிக்கரை ஓரத்திலுள்ள துர்க்கா கோவில் மிகவும் புகழ் பெற்றுத் திகழ்கிறது. இக்கோவிலை நவதுர்க்கா கோவில் என்று போற்றுகிறார்கள்.

இத்திருக்கோவிலில் மூலவராக நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளாள் துர்க்கை.

நவராத்திரி காலத்தில் இக்கோவிலில் தினமும் துர்க்கைக்கு ஒவ்வொரு விதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு, கங்கை நதியின் கரையோரமுள்ள அழகிய மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள்.

காசி மாநகரில் துர்க்கை, காளி, அம்மன் கோவில்கள் பல இருந்தாலும், காசிவாழ் மக்கள் ஒன்பது நாட்களிலும் சாஸ்திர சம்பிரதாயப்படி தினமும் ஒவ்வொரு துர்க்கை அல்லது அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே உள்ள துர்க்கைக் கோவிலுக்குச் செல்ல இயலாத வர்கள் கங்கை நதிக்கரையோரம் உள்ள நவதுர்க்கைக் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.

நவராத்திரியின் முதல் நாளன்று காசி வருணை நதிக்கரையில் உள்ள மலைமகள் "சைலபுத்ரி' கோவிலுக்குச் செல்கிறார்கள். இமவான் மகளாகிய பார்வதி தேவியே இங்கு சைலபுத்ரியாக அருள்புரிகிறாள்.
 
காளையை வாகனமாகக் கொண்ட இந்த தேவி, வலக்கையில் சூலமும் இடக் கையில் தாமரையும் ஏந்தி மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ளாள். இத்தேவியை வழிபட வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.

இரண்டாம் நாள் கங்கைக்கரையோரம் உள்ள துர்க்கா காட் படித்துறையருகே உள்ள பிரம்மசாரிணி கோவிலுக்குச் சென்று வழிபடுகிறார்கள். இந்த தேவி எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருப்பாள். வெண்ணிற ஆடையுடன், வலக்கையில் ஜெபமாலையும் இடக்கையில் கமண்டல மும் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த தேவியை வழிபட மனதில் உறுதி பிறக்கும்; எதையும் சாதிக் கும் சக்தி கிட்டும்.

மூன்றாம் நாள் காசி சௌக் கடைத் தெருவில் உள்ள சித்திரகாண்டா துர்க்கை கோவிலுக்குச் செல்கிறார்கள். தங்கமயமான அழகிய தோற்றம் கொண்டவள் இந்த தேவி. புலி மீது அமர்ந்த திருக்கோலம். மூன்று கண்களும் பத்து கரங்களும் கொண்டவள். சூலம், கதை, கத்தி, கமண்டலம், வில், அம்பு, தாமரை, ஜெபமாலை, அபய, வரத முத்திரைகளுடன்  காட்சி தருகிறாள். வீரத்தின் திருவுரு வான இந்த தேவியை வழிபட்டால், சகல இடர்களையும் களைந்து மனதிற்கு தைரியத்தை அளிப்பாள். சித்திரகாண்டாவை சந்திர காண்டா தேவி என்றும் சொல்வர்
 
நான்காம் நாள் காசியின் தென் எல்லை யாகக் கருதப்படும் கூஷ்மாண்டா நவதுர்க்கை கோவிலுக்குச் செல்வது வழக்கம். இந்த தேவியின் புன்சிரிப்பு உலகத்தை வாழ வைக்கும் சக்தி கொண்டது என்று தேவி பாகவதம் போற்றுகிறது. சூரிய மண்டலத்தில் வசிக்கும் இத்தேவி, சூரியனைப்போல் பல திசைகளிலும் தன் ஒளியை வீசி அருள்புரிகிறாள். புலியை வாகனமாகக் கொண்டவள். எட்டு கைகளில் சக்கரம், கதை, ஜெபமாலை, அமிர்த கலசம், தாமரை, வில், அம்பு, கமண்டலம் கொண்டு வீற்றிருக்கிறாள்.

ஐந்தாம் நாள் காசியில் ஜைத்புரா என்ற பகுதியிலுள்ள ஸ்கந்தமாதா கோவிலுக்குச் செல்வார்கள். சைலபுத்ரி, பிரம்மசாரிணியாகத் தவமிருந்து சிவனை மணந்து, முருகப் பெருமானை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்றவள் இந்த தேவிதான். மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவள். மேலிரண்டு கரங்களில் தாமரை மலரை ஏந்தி, கீழிரண்டு கரங்கள் அபய, வரத முத்திரையுடன் சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கிறாள்.

ஆறாம் நாள் ஆத்ம விசுவேசுவரர் கோவி லில் எழுந்தருளியுள்ள காத்யாயிணி தேவியை வழிபடுகிறார்கள். காத்யாயனவர் என்ற முனிவர் அம்பாளை நோக்கித் தவமிருந்து வேண்டிக் கொண்டபடி, தேவியானவள் அவருக்கு மகளாகப் பிறந்த தால் இப்பெயரைப் பெற்றாள். தங்கம் போன்ற ஒளியுடன் பிரகாசிக்கும் காத்யாயிணி புன்சிரிப்புடன் சிம்மத்தின்மீது அமர்ந்திருக்கி றாள். நான்கு கரங்கள் கொண்டவள். அபய, வரத முத்திரைகளுடன் வாளும் தாமரையும் ஏந்தியிருப்பவள். எதிரிகளை அழிக்கும் சக்தி கொண்ட இத்தேவியை வழிபட்டால் எதிரிகள் அழிவர்.

ஏழாம் நாள் காசியில் காளிகாகலி என்ற இடத்திலுள்ள காளராத்திரி கோவிலுக்குச் சென்று துர்க்கையைத் தரிசிக்கிறார்கள். இந்த தேவியின் தோற்றம் சற்று வித்தியாசமானது. உடலின் நிறம் கறுப்பு, தலைமுடி பறந்து கொண்டிருக்கும். கழுத்தில் மின்னல் போன்ற ஒளி உமிழும் மாலை அணிந்தவள். மூன்று கண்களும் சிவந்து பெரிதாகக் காணப்படும். கழுதை வாகனம் கொண்டவள். நான்கு கைகளிலும் கத்தி, அரிவாள், அபய, வரத முத்திரை கொண்ட இவள் துஷ்டர்களை அழித்து வெற்றி கொள்பவள். இத்தேவியை வழிபட, தீயவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போவார்கள்.

எட்டாம் நாள் பார்வதியின் அம்சமான மகா கௌரியை வழிபடுவார்கள். இக்கோவில் ஸ்ரீ அன்னபூரணி கோவிலுக்கு அருகிலுள்ளது. எட்டு திருக்கரங்கள் கொண்டவள். ஆட்டுக் கிடா வாகனத்தில் அமர்ந்திருப்பாள். வலது கரங்களில் அபய முத்திரை, சூலம், வாள், சக்கரம்; இடது கரங்களில் வரத முத்திரை, கதை, கத்தி, சிறிய துடுப்பு வைத்திருக்கும் இந்த தேவி சாந்த முகத்துடன் காட்சி தருவாள். இவளை வழிபட பசிப்பிணி நீங்கும்; மனதில் அமைதி நிலவும்.

ஒன்பதாம் நாள் காசி சித்தாத்திரி சங்கடா கோவிலுக்கு அருகேயுள்ள சித்திதாத்திரி (சித்திமாதா) எனப்படும் துர்க்கை கோவிலுக் குச் செல்வார்கள். இவள் தாமரை மலர்மீது அமர்ந்திருப்பாள். நான்கு கரங்கள் கொண்ட வள். வலது கீழ் கரத்தில் கதையும் மேல் கரத்தில் சக்கரமும்; இடது கீழ் கையில் தாமரையும் மேல் கரத்தில் சங்கும் வைத்து அருள்புரிகிறாள். இவளின் திருமுகத்தைத் தரிசித்தாலே முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை.

கடைசியாக பத்தாம் நாள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ காசி விசாலாட்சியை வழிபட்டு, அருகிலுள்ள ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்குச் சென்று  வழிபாடு முடித்து பிரசாதம் பெற்று அல்லது அன்னதானத்தில் கலந்துகொண்டு, பிறகு காலபைரவரையும் தரிசித்து, தங்களுக்கு உள்ள தோஷங்களைக் களைந்து, கையில் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டு வேண்டுதலை நிறைவு செய்கிறார்கள்.

பராசக்தியின் வடிவமான அன்னை துர்க்கா தேவியை வழிபட்டால் வாழ்வில் எதிலும் வெற்றிகிட்டும் என்பதால், நவராத்திரி காலங்களில் துர்க்கா தேவியை மூன்று விதமாக வகைப்படுத்தி வழிபடுவது வழக்கம். பராசக்தி, சரஸ்வதி, லட்சுமி என்று ஒன்பது நாட்கள் போற்றப்பட்டு, பத்தாவது நாளில் விஜயதசமியாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் கோயில்!

 

 அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் கோயில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இறைவனுக்கு ஆனேசர், கரிவனநாதர், ஆனைக்காரப் பெருமான், கஜ ஆரோகணேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.

இறைவி, காமாட்சி.

தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் வஜ்ரதீர்த்தம், இந்திர கூபம்.

திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவில் முன் காலத்தில் சிவபெருமான் வெண் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். மரத்தின் சருகுகள் விழாதவாறு சிலந்தி ஒன்று சிவலிங்கத்திற்கு மேல் வலையைப் பின்னி வைத்தது. அதே சமயம், யானை ஒன்று துதிக்கையில் காவிரி நீர் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்தது. சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலையை கண்ட யானை அதனை அறுத்தெறிந்தது.



இதுகண்டு வெகுண்ட சிலந்தி இன்னொரு வலை பின்னியது. மறுபடி யானை அறுத்தெறிந்தது. இப்படி தினந்தோறும் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த சிலந்தி ஒருநாள் யானை அபிஷேகம் செய்யும்போது துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. யானை துதிக்கையை தரையில் அடித்தது. இதில் யானையும் இறந்தது. சிலந் தியும் இறந்தது. அந்த சிலந்தியே சிவனருளாளரான சோழ மன்னர் சுபதேவர்-கமலாவதிக்கு மகனாக பிறந்த கோச்செங்கணான் (கோச்செங்க சோழன்). இவர் தன் முற்பிறவி வாசனையால் திருவானைக்கா கோயிலை கட்டினார். மேலும், யானையால் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, யானை ஏற முடியாதபடி மாடக் கோயில்களாகக் கட்டினார்.

இதுயானை ஏறாத் திருப்பணி’ என்றே அழைக்கப்பட்டது. திருவானைக்காவிற்கு கிழக் கேயுள்ள அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் கோயில் இச்சோழனால் கட்டப்பட்ட முதல் மாடக்கோயில் ஆகும். 1750 ஆண்டுகள் பழமையானது.
மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது திருவரங்கம், திருவானைக்காவில் இருந்த மூர்த்திகளை காடாக (ஆரண்யம்) இருந்த இப்பகுதியில் மறைத்து வைத்திருந்து பின்னர் எடுத்துச் சென்றமையால் அரங்கநாதபுரம் என்றும் கஜாரண்யம் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருசமயம் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை நேமத்தில் எழுந்த ருளியுள்ள சிவபெருமானை மெய்மறந்து வழிபட்டது. அதைத் தேடி வந்த இந்திரன் கோபம் கொண்டு யானை மீது வஜ்ராயுதத்தை ஏவினான்.


அப்போது சிவபெருமான் செய்த ஊங்காரத்தால் வஜ்ராயுதம் கஜாரண்ய தலத்துள் வந்து விழுந்தது. விழுந்த இடத்தில் நீரு ற்று ஏற்பட்டது. அதுவே வஜ்ரதீர்த்த குளமாகியது. வஜ்ராயு தத்தை எடுக்க வந்த இந்திரன் அங்கு இந்திர கூபம் என்ற கிணற்றை வெட்டி அந்த தீர்த் தத்தால் கஜாரண்யேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டு பேறு பெற்றான்.



பரிவார மூர்த்திகளாக வலம்புரி விநாயகர், வள்ளி- தேவசேனா சமேத சுப்ரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இறைவன் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறார். எதிரில் நந்திதேவர்.



தெற்கு நோக்கியபடி காமாட்சியம்மன். மாடக்கோயிலை கஜேந்திரன் தாங்குவது போல் கட்டப்பட்டு ள்ளது சிறப்பு. இது, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாகும். 25வது நட்சத்திரமான பூரட்டாதி 7ன் மகிமையை விட மிகச் சக்தி வாய்ந் தது. 2ம் எண்ணான மதிகாரகனான சந்திரனுக்கும், 5ம் எண் வித்யாகாரகனான புதனுக்கும் உரியது.

சந்திரனின் புதல்வரே புதன். சந்திரன் மனதை ஆள்பவர். புதன் அறிவை ஆள்பவர். இத்தலத்தில் இறைவனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் ஏழு திரவியங்களுடன்

கூடிய சப்தாமிர்த காப்பு (பஞ்சாமிர்தம் + பாதாம் பருப்பு, முந்திரி) ஏழுவகை நிவேதனங்களால் வழிபடுவதால் ஏழேழு ஜென்மங்களாக தொடரும் சாபங்களை அழித்து கடைத்தேற கஜாரண்யேஸ்வரர் அருள்பாலிகிறார். ஐராவதம் மற்றும் இந்திரன் வழிபடும் இத்தலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் சந்திரஹோரையில் இறைவனை வழிபடுவதால் பதவியில் ஏற்படும் ஆப த்துகள் நீங்கி பதவி உறுதியாகும் என்பது நிதர்சனமான உண்மை.

இசையில் அவரோகண (ஏழு) பீஜங்கள், தட்சிணாமூர்த்தியால் வில்வ தளங்களில் வைத்து ஆஞ்சநேயருக்கு அளிக்கப் பெற்ற திருத்தலம் இது. ஸ்ரீசாகம்பரி தேவி இங்குள்ள திருக்குளத்தில் ஏழு அல்லிமலர்களை தோற்றுவித்து வேத அல்லிமலர் குருபீடத்தை உலகிற்கே அளித்தாள். இதனால் ஏழேழு ஜென்மங்களும் கடைத்தேற இங்கு ஏழு தினங்கள் வில்வ மரத்தின் கீழ் தியானம் மேற்கொள்ளலாம். ஏழு வண்ண ஆடைகளை தானம் அளித்தல் இன்னும் சிறப்பாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கல்லணை செல்லும் (அகரப்பேட்டை வழி) சாலையின் தென்புறம் இத்தலம் உள்ளது.
 
ஆலயத் தொடர்புக்கு: 94439 70397.
 
 

ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்!


வ எண்
சமஸ்கிருதம்தமிழ்
1.ஓம் ப்ரக்ருத்யை நம:ஓம் இயற்கையே போற்றி!
2.விக்ருத்யைஓம் பலவடிவானவளே போற்றி!
3.வித்யாயைஓம் கல்வியே போற்றி!
4.ஸர்வபூத-ஹிதப்ரதாயைஓம் அனைத்துயிர்க்கும் அருள்பவளே போற்றி!
5.ச்ரத்தாயைஓம் இசைக்கப்படுபவளே போற்றி!
6.விபூத்யைஓம் செல்வமே போற்றி!
7.ஸுரப்யைஓம் விண்ணவளே போற்றி!
8.பரமாத்மிகாயைஓம் உள்ளுறைபவளே போற்றி!
9.வாசேஓம் சொல்லே போற்றி!
10.பத்மாலயாயை ஓம் தாமரைக் கோவிலே போற்றி!
11.பத்மாயைஓம் தாமரையே போற்றி!
12.சுசயேஓம் தூய்மையே போற்றி!
13.ஸ்வாஹாயைஓம் மங்கலமே போற்றி!
14.ஸ்வதாயைஓம் அமங்கலத்தைத் தீர்ப்பவளே போற்றி!
15.ஸுதாயைஓம் அமுத ஊற்றே போற்றி!
16.தன்யாயைஓம் நன்றியே போற்றி!
17.ஹிரண்மய்யைஓம் பொன்வடிவானவளே போற்றி!
18.லக்ஷ்ம்யைஓம் இலக்குமியே போற்றி!
19.நித்யபுஷ்டாயைஓம் என்றும் வலிமை அருள்பவளே போற்றி!
20.விபாவர்யை ஓம் ஒளியே போற்றி!
21.அதித்யைஓம் அளவில்லாதவளே போற்றி!
22.தித்யைஓம் வேண்டுதல் அருள்பவளே போற்றி!
23.தீப்தாயைஓம் கனலே போற்றி!
24.வஸுதாயைஓம் உலகமே போற்றி!
25.வஸுதாரிண்யைஓம் உலகைக் காப்பவளே போற்றி!
26.கமலாயைஓம் தாமரையே போற்றி!
27.காந்தாயைஓம் கவர்பவளே போற்றி!
28.காமாக்ஷ்யைஓம் காதற்கண்ணியே போற்றி!
29.க்ஷீரோதஸம்பவாயைஓம் பாற்கடலில் உதித்தவளே போற்றி!
30.அனுக்ரஹ ப்ரதாயை ஓம் அருளை அள்ளித் தருபவளே போற்றி!
31.புத்தயேஓம் அறிவே போற்றி!
32.அநகாயைஓம் குற்றமில்லாதவளே போற்றி!
33.ஹரிவல்லபாயைஓம் விண்ணவன் துணைவியே போற்றி!
34.அசோகாயைஓம் சோகமற்றவளே போற்றி!
35.அம்ருதாயைஓம் அழிவற்றவளே போற்றி!
36.தீப்தாயைஓம் சுடரே போற்றி!
37.லோகசோக-விநாசின்யைஓம் உலகக் கவலைகள் தீர்ப்பவளே போற்றி!
38.தர்மநிலயாயைஓம் அறத்தில் நிலைத்தவளே போற்றி!
39.கருணாயைஓம் அருளே போற்றி!
40.லோகமாத்ரே ஓம் உலக அன்னையே போற்றி!
41.பத்மப்ரியாயைஓம் தாமரையை விரும்புபவளே போற்றி!
42.பத்மஹஸ்தாயைஓம் தாமரை ஏந்தியவளே போற்றி!
43.பத்மாக்ஷ்யைஓம் தாமரைக்கண்ணியே போற்றி!
44.பத்மஸுந்தர்யைஓம் தாமரை அழகியே போற்றி!
45.பத்மோத்பவாயைஓம் தாமரையில் தோன்றுபவளே போற்றி!
46.பத்மமுக்யைஓம் தாமரை முகத்தவளே போற்றி!
47.பத்மநாபப்ரியாயைஓம் பத்மநாபன் துணைவியே போற்றி!
48.ரமாயைஓம் மகிழ்ச்சியே போற்றி!
49.பத்மமாலாதராயைஓம் தாமரை மாலை அணிந்தவளே போற்றி!
50.தேவ்யை ஓம் தேவியே போற்றி!
51.பத்மின்யைஓம் தாமரைத் திருவே போற்றி!
52.பத்மகந்தின்யைஓம் தாமரை மணமே போற்றி!
53.புண்யகந்தாயைஓம் புனித மணமே போற்றி!
54.ஸுப்ரஸன்னாயைஓம் எளிதில் மகிழ்பவளே போற்றி!
55.ப்ரஸாதாபிமுக்யைஓம் அருள்வதில் மகிழ்பவளே போற்றி!
56.ப்ரபாயைஓம் ஒளிவட்டமே போற்றி!
57.சந்த்ரவதனாயைஓம் மதி முகமே போற்றி!
58.சந்த்ராயைஓம் மதியே போற்றி!
59.சந்த்ரஸஹோதர்யைஓம் மதியின் உடன்பிறப்பே போற்றி!
60.சதுர்ப்புஜாயை ஓம் நான்கு கரத்தாளே போற்றி!
61.சந்த்ரரூபாயைஓம் மதிவடிவானவளே போற்றி!
62.இந்திராயைஓம் நீலத்தாமரையே போற்றி!
63.இந்து-சீதலாயைஓம் மதியின் குளிர்ச்சியே போற்றி!
64.ஆஹ்லாத ஜனன்யைஓம் பேரின்பப் பெருக்கே போற்றி!
65.புஷ்ட்யைஓம் உடல் நலமே போற்றி!
66.சிவாயைஓம் மங்கலமே போற்றி!
67.சிவகர்யைஓம் மங்கலம் அருள்பவளே போற்றி!
68.ஸத்யைஓம் உண்மையே போற்றி!
69.விமலாயைஓம் குறையில்லாதவளே போற்றி!
70.விச்வ ஜனன்யை ஓம் அனைத்திற்கும் அன்னையே போற்றி!
71.துஷ்ட்யைஓம் நல வடிவே போற்றி!
72.தாரித்ர்ய-நாசின்யைஓம் வறுமையைப் போக்குபவளே போற்றி!
73.ப்ரீதிபுஷ்கரிண்யைஓம் உயிர் காக்கும் நீர் நிலையே போற்றி!
74.சாந்தாயைஓம் அமைதியே போற்றி!
75.சுக்லமால்யாம்பராயைஓம் வெண்ணிற மாலையும் ஆடையும் உடுத்தியவளே போற்றி!
76.ச்ரியைஓம் அதிர்ஷ்டம் தருபவளே போற்றி!
77.பாஸ்கர்யைஓம் ஒளியைத் தருபவளே போற்றி!
78.பில்வநிலயாயைஓம் வில்வத்தில் உறைபவளே போற்றி!
79.வராரோஹாயைஓம் வரங்களை அருள்பவளே போற்றி!
80.யசஸ்வின்யை ஓம் புகழே போற்றி!
81.வஸுந்த்ராயைஓம் இயற்கைச் செல்வங்களைத் தாங்குபவளே போற்றி!
82.உதாராங்காயைஓம் ஒப்பற்ற அழகே போற்றி!
83.ஹரிண்யைஓம் மான் ஒத்தவளே போற்றி!
84.ஹேமமாலின்யைஓம் பொன்னணியாளே போற்றி!
85.தனதான்யகர்யைஓம் பொன்னையும் உணவையும் தருபவளே போற்றி!
86.ஸித்தயேஓம் பயனே போற்றி!
87.ஸ்த்ரைணஸெளம்யாயைஓம் பெண்களுக்கு அருள்பவளே போற்றி!
88.சுபப்ரதாயைஓம் சுபம் அருள்பவளே போற்றி!
89.ந்ருபமேச்மகதானந்தாயைஓம் அரண்மனைகளில் நிலைத்தவளே போற்றி!
90.வரலக்ஷ்ம்யை ஓம் வரலட்சுமியே போற்றி!
91.வஸுப்ரதாயைஓம் செல்வங்கள் தருபவளே போற்றி!
92.சுபாயைஓம் சுபமே போற்றி!
93.ஹிரண்யப்ராகாராயைஓம் பொன்னால் சூழப்பட்டவளே போற்றி!
94.ஸமுத்ரதனயாயைஓம் அலைமகளே போற்றி!
95.ஜயாயைஓம் வெற்றியே போற்றி!
96.மங்கள தேவ்யைஓம் மங்களதேவியே போற்றி!
97.விஷ்ணுவக்ஷஸ்தல-ஸ்திதாயைஓம் மாலவன் மார்பில் நிலைத்தவளே போற்றி!
98.விஷ்ணுபத்ன்யைஓம் மாதவன் துணையே போற்றி!
99.ப்ரஸன்னாக்ஷ்யைஓம் மகிழ்ச்சி பொங்கும் கண்களை உடையவளே போற்றி!
100.நாராயணஸமாச்ரிதாயைஓம் நாரணனுடன் அடைக்கலமாக அடையப்படுபவளே போற்றி!
101.தாரித்ர்யத்வம்ஸின்யைஓம் வறுமையை துவைப்பவளே போற்றி!
102.தேவ்யைஓம் தேவியே போற்றி!
103.ஸர்வோபத்ரவவாரிண்யைஓம் அனைத்து இடைஞ்சல்களையும் நீக்குபவளே போற்றி!
104.நவதுர்க்காயைஓம் நவதுர்க்கையே போற்றி!
105.மஹாகாள்யைஓம் மகாகாளியே போற்றி!
106.ப்ரஹ்மவிஷ்ணு - சிவாத்மிகாயைஓம் பிரமன் விண்ணவன் சிவன் வடிவானவளே போற்றி!
107.த்ரிகாலஜ்ஞானஸம்பன்னாயைஓம் முக்காலமும் அறிந்தவளே போற்றி!
108.புவனேச்வர்யை ஓம் உலகை ஆளும் அன்னையே போற்றி!







ஸ்ரீ ஹனுமத் புஜங்கம் (தமிழில்)!


ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதாஸௌர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்

பொன் போன்ற மேனியன். நவ வியாகரணங்களையும் கற்றவன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன்.
ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்களின் அனுமனே போற்றி.

`பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்

பேரொளி கொண்டவன். அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். சிறுவயதிலேயே
சூரியனை பழமென்று எண்ணி அதை விழுங்கப் பாய்ந்தவன்.  தீமைகளை அடியோடு அழிப்பதில் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

பஜே லக்ஷ்மணப்ராண ரஹாதிதக்ஷம்
பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்

லக்ஷ்மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி.
சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

கராலாட்ட ஹாஸம் க்ஷிதிக்ஷிப்தபாதம்
கநக்ராந்தப்பருங்கம் கடிஸ்தோருஜங்கம்
வியத்வ்யாப்வகேஸம் புஜாச்லேஷிதாச்சமம்
ஜயஸ்ரீ ஸமேதம் பஜே ராமதூதம்

சிம்மம் போல் கர்ஜனை செய்பவன். அழகான திருப்பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்யமான அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.

சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்

ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதம் போல் முழங்குபவனே போற்றி.
உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய்.
நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் ராமதாசனே போற்றி.

ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே

போரிலே நீ ருத்ரனைப் போல் பகைவர்களை எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது  ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது  நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமனின் பெருமைகளை யாரால் எப்படிக் கூற இயலும்?! எவராலும் முடியாது!

கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
ரணளக்ஷவணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்

பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீயே வானரக் கூட்டங்களுக்குத் தலைவன்.  நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன்.
 உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய

சகலவிதமான பீடைகளையும் போக்கியருள்பவனே. ராமனுக்கு இனியவனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:

பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:

பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் கடுஞ் சினத்திற்குத் தப்பியது?
உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி?

ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம

ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவ னே! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரனே. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறைப் பெற்ற தவசீலனே! இதற்கு என்ன தவம் செய்தனை?

ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
நீரதாரணரூட காட ப்ரதாபி
பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!

குருவே ஸ்ரீ ஹனுமனே! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன்மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபு வாக உள்ளவன் நீயே! உன்னைத் துதிக்கிறோம்.

மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே

ருத்ரனும் பிரம்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ!
 இசையில் லயிப்பவன்! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ,
 அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே! உன்னைப் போற்றுகிறேன்.

நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்

சத்யவடிவினனே போற்றி.
வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி.
சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி.
தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
நமஸ்தே பிங்களாக்ஷவய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்

நித்ய பிரம்மசாரியே போற்றி!
வாயு மைந்தனே போற்றி!
எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன்.
என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

ஹநூமத்புஜங்கப்ரயாதம் ப்ரபாதே ப்ரதோஷேபி வா
சார்தராத்ரேபி மர்த்ய படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால:
நமஸ் ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும்.
சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும்.
சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

ஆதிசங்கரர் அருளியது.
 

மங்களம் அருளும் மஹா கௌரி!

 

 
ச்யாம வர்ணாம் த்ரிநேத்ராம் சவராபயகராம் புஜாம்
ஸ பத்மாம் ஸாக்ஷமாலாம் ச ஸர்வாபரண பூஷிதாம்
ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் சுஸ்மிதாம் சுமனோகராம்
காமகோடீம் அஹம் வந்தே காமிதார்த்தப்ரதாயினீம்

 சிவ பெருமான் வேதங்களின் தத்துவத்தை தேவிக்கு உபதேசிக்கையில் கவனக்குறைவாக தேவி நடந்து கொண்டதால் ஈசனின் சாபத்திற்கு ஆளாகி கௌரி என்ற பெயரில் மனித வடிவமெடுத்து தவம் புரிந்து ஈசனை அடைந்ததாக வட மொழிப் புராணங்கள் கூறும்.

கௌரி என்றாலே தங்கநிறமுள்ளவள் என்று பொருள். பக்தர்களுக்கு எல்லையற்ற செல்வத்தையும், பொன்னையும் அளிப்பவளாதலின் ஸ்வர்ணகௌரி என்றும், ஸம்பத்கௌரி என்றும் அழைக்கப்படுகிறாள்.


ஆடி மாதம் சுக்லபட்ச திருதியை ஸம்பத்கௌரி அல்லது ஸ்வர்ணகௌரி விரதநாள் ஆகும்.

இதேபோல ஆவணி சுக்லபட்ச சஷ்டீ தினம் மங்கள கௌரி விரததினமாகவும்,


 புரட்டாசி கிருஷ்ணபட்ச ஸப்தமியும், சுக்ல பட்ச பஞ்சமி யும் கஜகௌரி விரததினமாகவும்,


புரட்டாசி அமாவாசை விருத்தி கௌரிக்கு உரியதாக வும்,


 புரட்டாசி சுக்லபட்ச தசமி என்றும் விஜயதசமி தசரத லலிதா கௌரி விரதமாகவும்,


புரட்டாசி சுக்லபட்ச ஏகாதசியன்று துளசி கௌரி விரதமாகவும்,


ஐப்பசி அமாவாசையன்று கேதார ஈச்வரரை மகிழ்விக்கும் கேதார கௌரி விரதமாகவும்,


கார்த்திகை சுக்லபட்ச சதுர்த்தி பதரீகௌரி விரதமாகவும்,


பங்குனி சுக்ல பட்ச திருதியை ஸௌபாக்ய கௌரியை வழிபடுவதாகவும்,


சித்திரை சுக்லபட்ச சதுர்த்தி வரதாகவுரி விரதமாகவும்,


சித்திரை வளர்பிறை பஞ்சமி லாவண்ய கௌரிக்குரியதாயும்,


வைகாசிசுக்ல பட்ச பிரதமை புன்னாக கௌரி விரமாகவும்,


ஆனி சுக்லபட்ச திருதியை ரம்பா கௌரியை அனுஷ்டிக்கும் தினமாகவும்


ஆவணி சுக்லபட்ச பஞ்சமி சமீப கௌரி விரதமாகவும் கொண் டாடப்படுதல் வேண்டும்.

ஸம்பத் கௌரி செல்வத்தை அளிப்பாள். மங்கள கௌரி திருமணத்தையும் மாங்கல்ய மும் அருள்வாள். கஜகவுரி வலிமையையும், விருத்தி கவுரி மக்கட்பேற்றையும், துளசி கௌரி விஷ்ணுவின் அருளையும், கேதார கௌரி ப்ரமேச்வரனின் அருளையும், லாவண்யகௌரி அழகையும், ஸௌபாக்ய கௌரி எல்லா நன்மையும், புன்னாக கௌரி ஸர்ப்ப தோஷங் களை நீக்குதலையும், சமீப கௌரியம்மை தன் ஸாமீப்யமான மோட்சத்தையும் அருளுவார்கள்.

வரதம் என்னும் அம்பாள் காட்டும் முத்திரை எல்லா அபீஷ்டமும் (வேண்டுவன எல்லாம்) தரும் அபயமுத்திரை தன்னை அண்டியவர்கட்கு சரணாகதி அளித்து பயம் ஆபத்து இவற்றிலிருந்து காப்பாற்ற நான் இருக்கிறேன். நீ அஞ்ச வேண்டாம் என்று அம்பாள் அருளுவது ஆகும்.

எனவே, வரதா கௌரி பக்தர்கட்கு கேட்ட வரங்களை அளித்து அபயம் அளிப்பாள். ரம்பையினால் துதிக்கப் பெற்றவள் ரம்பாகவுரி. ‘ரம்பாதி வந்திதா’ என்று லலிதா சகஸ்ரம் கூறும், ரம்பா ஸேவித பாதுகா என்று பிரத்யங்கிரா ஸஹஸ்ர மும் இதை வலியுறுத்தும்.

ஸ்வர்ணகௌரி என்னும் ஸம்பத் கௌரியின் மூல மந்திரத்தை 16 பௌர்ணமி, 16 அமாவாசை பன்னீராயிரம் முறை உணவில் உப்பு எதுவும் சேர்க்காமல் அலவணாமாக (லவணம் என்றால் உப்பு. அல வணம் என்றால் உப்பு இன்றி என்று பொருள்) ஜபித்தால் கோரிய பலன் கிட்டும்.

ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூலமந்திரத்திற்கு உரிய ரிஷி ஆனந்த பைரவர். அனுஷ்டுப் சந்தஸ், ஸம்பத் கௌரி தேவதை, ஹ்ராம்-பீஜம், ஹ்ரீம்-சக்தி, ஹ்ரூம்-கீலகம் (ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ர-அங்கன்யாச கரநியாசங்கள்) மூல மந்திரம் பின் வருமாறு.

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி
ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி,
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத்ப்ரதம்
தேஹி குருகுரு ஸ்வாஹா

 மேற்படி மூலமந்திரத்தை வில்வதளங்களால் முக்கோண வடிவ ஹோமகுண்டத்தில் ஹோமம் செய்யின் எல்லையற்ற செல்வமும், மஞ்சள் தூயப்பட்டால் செய்தால் தங்கம், நகைகள் சேர்க்கையும், ரோஜா மலரால் ஹோமம் செய்தால் கல்வியில் தேர்ச்சியும், சிவந்த புஷ்பங்களால் செய்தால் மக்கள் கவர்ச்சியும், வேம்பு எண்ணையால் செய்யின் சத்ருநாசமும், தேனில் எள் கலந்து ஹோமம் செய்தால் பித்ருதோஷம் நீங்குதலும், சந்தனக்கட்டையால் செய்ய வியாபார அபிவிருத்தியும் ஏற்படும்.
 
 

பொன்மகள் புகழ் மாலை!




 பொன்நிறள் பொற்குணள் பொன்னிற முகத்தவள் பொன்னிற கரத்தவள் பொன்மகளே
பொற்கனி மழை பெய்து சத்குண சங்கரர் புகழை நிலைபெற செய்தவளே
பொன் நகை உடலையும் புன்னகை முகத்தையும் அணிசெய்ய அழகுடன் திகழ்பவளே
பொற்பதம் துதிப்பவர் அற்புத நலம் பெற பொற்கரம் உயர்த்தி அருள்பவளே

 
பொன் தோடுகள் தொங்கிடும் காதுகள் அது தந்து பக்தர்கள் குறையை கேட்பவளே
பொன் மூக்குத்தி அணிந்துள்ள நாசிகள் உடையவள் வளம் தரும் விழிகளால் அருள்பவளே
பொன் மகுடம் அணிந்துள்ள தலையதை அசைத்து பக்தர்கள் குறை செவி மடுப்பவளே
பொன் மாலைகள் புரளும் மார்பினில் பக்தர்கள் வாழ்ந்திட எண்ணங்கள் சுரப்பபவளே

 
பொற் கொலுசுகள் அணிசெய்யும் பாதங்கள் துதிப்பவர் வறுமையை ஏழ்மையை அழிப்பவளே
பொன் மெட்டிகள் அணிசெய்யும் அழகிய பாதங்கள் துதிப்பவர் வளம்பெற அருள்பவளே
பொன் வளையல்கள் அணிசெய்யும் கரங்களில் பங்கய மலர்களை உயர்த்தி பிடிப்பவளே
பொன் மோதிர விரல்கள் விளங்கிடும் கரங்கள் உயர்த்தி வரங்கள் அருள்பவளே

 
வைரம் வைடூரியம் மரகதம் முத்து மாணிக்கம் பவளம் புட்பராகம்
கோமேதகம் நீலம் நவ ரத்தினம் அனைத்தும் பதித்த பொன் இடை ஒட்டியாணம்
அணிந்துள்ள இடையோ இறையே உன்போல் உளதோ இலதோ எனத் தோன்றும்
உன் இடை போல் ஐயம் தராது உன் அன்பு உன் பக்தர்கள் வளமே அதைக் காட்டும்

 
பொற்றாமரை மேல் பொன்னிற பட்டு அணிந்து பொன்போல் மிளிர்கின்றாய்
பொற்குடம் உயர்த்தி வெண்ணிற இபங்கள் பூமழை பொழிந்திட குளிர்கின்றாய்
பொற்பதம் துதித்தேன் பொற்கரம் உயர்த்தி பொன் மகன் என்றென்னை செய்திடுவாய்
பொற்குணர் சற்குணர் நற்குணர் நாரணர் புகழ் புவியில் பரப்பிட உதவிடுவாய்

 
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் அன்பது அருள்வாய் பொருள் தருவாய்
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் அன்பது அருள்வாய் புகழ் தருவாய்
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் அன்பது அருள்வாய் வெல்ல வைப்பாய்
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் உலகெங்கும் என் புகழ் செல்ல வைப்பாய்

 
செய்யவள் துய்யவள் உண்மையள் நன்மையள் அன்பினள் பண்பினள் பெரும் செல்வி
துதிசெய்ய அருள்பவள் வரமது தருபவள் பொன்மழை பொழிபவள் பெரும் செல்வி
இனிமையள் கனிவினள் பொறுமையள் பெருமையள் அன்பினள் அறிவினள் பெரும்செல்வி
நன்மையை காத்திட தீமையை தீர்த்திட வன்மையாய் வெகுள்பவள் பெரும் செல்வி

 
பரம் பொருள் வடிவினள் வறுமைக்கு விடிவினள் துயருக்கு முடிவினள் பெரும் செல்வி
பாற்கடலில் தோன்றியே மாலவர் கரத்தினை மணம்செய்து பற்றிய பெரும் செல்வி
மாலவர் மார்பினில் மகிழ்ந்தே வசிக்கின்ற பார்கவர் தவ மகள் பெரும் செல்வி
மாலவர் பாதத்தை மடிமேல் வைத்து பதசேவை செய்யும் பெரும் செல்வி

 
சந்திரன் தங்கையே இந்திரன் தெய்வமே அரசரை அரசராய் செய்பவளே
சூரியன் மறைந்திடும் வேளையில் அனுதினம் இல்லங்கள் தோறும் வருபவளே
நாரணரின் ஆயிரம் பெயர்களை ஓதிட ஓதுவோர் கடன்களை தீர்ப்பவளே
தரும் குணம் கொண்டோர் இல்லத்தில் செல்வத்தை மழைபோல் அன்பால் வார்ப்பவளே

 
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி சந்திரன் தங்கையே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி மாலவர் மகிழ்ச்சியே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி பார்கவர் மகளே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி இதயவாசனார் இதயமே பெரும் செல்வி

 
கண்களால் அருள்பவள் செல்வத்தை தருபவள் வறுமையை துடைப்பவள் பெரும் செல்வி
கருவண்டென விளங்கிடும் அழகிய கண்களால் நோக்குவாய் ஊக்குவாய் பெரும் செல்வி
தாமரைக் கண்ணனை ரசித்திடும் கண்ணினள் கண் கண்டிடும் இடங்களில் வளம் கொழிக்கும்
அக்கண்களை கொண்டெனை கண்டிட வேண்டும் கண்களால் அருள்செய்யும் பெரும் செல்வி

 
பிள்ளையார் அத்தையே சரவணர் அத்தையே மாலவர் மனைவியே பெரும் செல்வி
தெய்வங்கள் யாவரும் கொண்டுள்ள செல்வங்கள் நீயே அருள்செய்தாய் பெரும் செல்வி
செல்வத்தின் உருவமே செல்வத்தின் வடிவமே செல்வத்தை தந்திடும் பெரும் செல்வி
நாரணர் நாயகி மாலவர் மார்பினள் பாற்கடல் வாசனார் பாசமே பெரும் செல்வி

 
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி ராமரின் சீதையே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி கண்ணனின் ருக்மிணி பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி ரங்கரின் நாயகி பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி வேங்கடரின் பத்மாவதி பெரும் செல்வி!