Friday 7 April 2017

உன்னத வாழ்வருளும் உஜ்ஜயினி காளி!

51 சக்தி பீடங்கள் - 48  

மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி பிரசித்தி பெற்ற திருத்தலம். ஏழு மோட்சபுரிகளுள் ஒன்றான இத்தலத்தில்தான் மகாகவிகாளிதாசர் அன்னை காளிகா தேவியின் அருள் பெற்று கவிச் சக்ரவர்த்தி ஆனார். இந்த காளி தேவியின் திருவருளைப் பெற்ற விக்ரமாதித்தன் உலகம் புகழும் வண்ணம் அரசாட்சி செலுத்தினான். தண்டி எனும் கவிஞர் பெருமைபட வாழ்ந்ததும் உஜ்ஜயினியே. ஒரு சமயம் உஜ்ஜயினியைத் தலை நகராகக் கொண்ட அவந்திகாபுரியில் ஒரு அந்தணர் தன் நான்கு மகன்களுடன் வசித்து வந்தார். அப்பொழுது தூஷணன் எனும் கொடியவன் அந்த அந்தணர் புரியும் யாகங்களுக்கும் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அதனால் அவ்வூரில் வாழ்ந்து வந்த அனைவரும் அந்த அந்தணரின் தலைமையில் ஒன்று கூடி மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி சிவ பூஜை செய்தனர். 

சிவ பூஜை செய்த மண் எடுத்த இடம் பெரிய குளமாக மாறியது. வழக்கப்படி தூஷணன் சிவ பூஜைக்கு இடையூறு செய்ய வந்தபோது அக்குளத்தினின்று ஈசன் மகாகாளேஸ்வரராக வெளித் தோன்றி அவனை வதைத்தார். அந்த அந்தணரின் வேண்டு கோளுக்கிணங்க ஈசன் அங்குள்ள பக்தர்கள் அனைவருக்கும் காட்சி கொடுத்தார். இத்தலம் 12 ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்று.  கிருஷ்ண பகவானால் ஆராதிக்கப்பட்டும், விக்ரமாதித்தனுக்கு திருவருள்புரிந்தும் அருளிய தேவி இந்த சக்திபீடத்தில் ஹரசித்திமாதா என்று வணங்கப்படுகிறாள். சக்தி பீடங்களுள் இப்பீடம் ருத்ராணி பீடமாக போற்றப்படுகிறது.  இந்த தேவி சரணடைந்தோரைக் காப்பவள். மாங்கல்ய பாக்யம் அருள்பவள். அன்பானவள். மகாசக்தி. உலகம் முழுவதும் சக்தியாக பரவி நிற்பவள். 

பேராபத்துகளிலிருந்து காத்தருள்பவள். தன் பாத கமலங்களை வணங்குவோரைக் காப்பாற்றுபவள். பைரவகிரி எனும் இப்பீடத்தில் அவந்தி சக்தியாய் அமர்ந்த பேரழகி. திருநீலகண்டரின் உயிராக விளங்குபவள். துன்புறும் மானிடர்களுக்கு உதவ உஜ்ஜயினியில் ஒப்பற்ற மாமணியாய் துலங்குபவள். நவ வித ஸித்திகளையும் தன் பக்தர்களுக்கு நல்குபவள். ஆயகலைகள் 64ம் இந்த சக்திபீட நாயகியைச் சரணடைவோரைச் சரணடைகின்றன.  அப்பகுதி மக்களுக்கு இவளே கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள். விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள அணையா குண்டத்திலிருந்து ஆரத்தி எடுத்து அம்பிகையை ஆராதிக்கின்றனர். 

இத்தேவியின் திருவருளைப் பெற்ற விக்ரமாதித்தனைப் பற்றி அறிவோம். சரித்திரம் பல விக்ரமாதித்தர்களைக் கண்டாலும், பட்டி விக்ரமாதித்தனே மிகவும் புகழ் பெற்றவன். அவன் காளிதேவியை நேரில் தரிசித்து வரம் பெற்றவன். காளியின் திருவருளால் அரிய சிம்மாசனம் கிடைக்கப்பெற்று அதிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் அரசாட்சி புரிந்தவன். விக்ரமாதித்தனுக்கு பட்டி எனும் நண்பன் இருந்தார். ஒரு நாள் அவர்கள் இருவரும் வீதியில் சென்று கொண்டிருந்த போது காளியின் உருவம் பதித்த கருங்கல்லைக் கண்டனர். அதனருகில் மகாகாளியின் திருவருளைப்பெறும் வழிமுறைகள் குறித்த வாசகங்கள் கற்களில் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். 

அதன்படி அங்குள்ள ஆலமரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஐந்து உறிகளை ஒரே வீச்சில் அறுத்தெறிந்து விட்டு அருகில் உள்ள திரிசூலத்தில் பாய்ந்தான் விக்ரமாதித்தன். அதனால் மனமகிழ்ந்த காளிதேவி அங்கு தோன்றி, விக்ரமாதித்தனை ஆட்கொண்டு அவன் விருப்பப்படி அழகிய அரண்மனையையும் ஆயிரம் வருட ஆயுளையும் அருளினாள். அதை அறிந்த விக்ரமாதித்தனிடம் மிகுந்த அன்பு கொண்ட பட்டி தானும் அவனுடன் என்றும் இருக்க காளிதேவியை நோக்கித் தவம்புரிந்தான். தவத்துக்கு மெச்சிய அன்னை அவனுக்கு 2000 ஆண்டுகள் நீண்ட ஆயுளை வரமாக அளித்தாள். இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து மறைய வேண்டுமென்று நினைத்த விக்ரமாதித்தன் தனக்கு கொடுக்கப்பட்ட 1000 வருட அரசாட்சியை நீட்டிப்பதற்காக ஆறு மாதங்கள் காட்டிலும் ஆறு மாதங்கள் நகரிலுமாக கழித்தான். 

விக்ரமாதித்தனுக்கு திருவருள் புரிந்த இந்த காளி அடுத்து ஒரு மூடனை மகாகவியாக்கினாள். அதை அறிவோம். சுதன்மன் மற்றும் சுந்தரவதி எனும் அரசதம்பதியர்க்கு மகளாகப் பிறந்த வித்யாரத்னம் மிகவும் புலமை பெற்று விளங்கினாள். பல புலவர்களையும் கவிஞர்களையும் வாதில் தோற்கடித்து அவமானப்படுத்தி எள்ளி நகையாடினாள். அதனால் பலரின் வெறுப்புக்கும் ஆளானாள்.  அவளைப் பழிவாங்கக் காத்திருந்த அவர்கள் ஒரு மூடனைக் கண்டுபிடித்து அவனை சிறந்த கவிஞன் என அவளிடம் அறிமுகப்படுத்தி சூழ்ச்சி செய்து அவளுக்கு மணமுடித்தனர். திருமணமான பின் அவன் மூடன் என்பதை அறிந்து அவள் அவனை ஒதுக்கினாள். 

அதனால் மனம் நொந்து இந்த காளியிடம் நீயே துணை என சரணடைந்த மூடனை மகாகவிஞனாக்க திருவுளம் கொண்ட தேவி தன் திரிசூலத்தால் ப்ரணவமந்திரத்தை அவன் நாவில் எழுத அவன் பார் புகழும் கவிஞனானான், காளியின் திருவருள் பெற்ற அவன் ‘‘காளிதாஸன்’’ என்றானான். காளிதாசன் எழுதிய ஸ்யாமளாதண்டகம், மேகசந்தேஸம். குமாரசம்பவம் போன்ற நூல்கள் காலத்தால் அழியாதவை. இத்தலத்தருகே க்ஷிப்ரா நதிக்கரையில் குண்டலேஸ்வரர் எனும் சிவாலயம் உள்ளது. அங்கு உள்ள நந்தியம்பெருமான் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். அவர் அமர்ந்தால் உலக ப்ரளயம் ஏற்படும் எனும் கருத்து நிலவுகிறது.

கும்பமேளாவைப் போலவே இங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘‘ஹம்ஹஸித் மேளா’’ கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது க்ஷிப்ரா நதியில் நீராடி, ஈசனையும் ஹரசித்திமாதாவையும் தரிசித்தால் மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. கண்கண்ட தெய்வமாய் கவலைகளைப் போக்கும் காளியை சரணடைவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்


பீடத்தின் பெயர் குருக்ஷேத்திரம். அம்பிகையின் வலது கணுக்கால் விழுந்த சக்திபீடம். அக்ஷரத்தின் நாமம்(  ). அக்ஷர சக்தியின் நாமம் வரதாதேவி எனும் நாராயணி தேவி. இவள் ஸ்படிகம் போன்ற தூய வெண்ணிறம் கொண்டவள். பட்டாடை அணிந்து ஸர்வாபரண பூஷிதையாக பொலிபவள். நான்கு திருக்கரங்களில் மேலிரு திருக்கரங்கள் தாமரை மலர்களைத் தரிக்க கீழிரு திருக்கரங்கள் அபய வரத முத்திரைகள் தரிக்கின்றன. அழகே உருவாய் அருளே வடிவாய் திகழ்பவள் இந்த நாராயணி தேவி. பீட சக்தியின் நாமம் ஸாவித்ரி. ஸ்தாணு பைரவர் இந்த சக்திபீடத்தின் காவலர். குருக்ஷேத்திரம் த்வைபாயனஸரோவரம் அருகே இந்த சக்திபீட நாயகி திருவருட்பாலிக்கிறாள்.

கரும்பன்ன வாழ்வருளும் கரும்பார்குழலி!

51 சக்தி பீடங்கள் - 49

சிறிக்கும் குளித்தலைக்கும் இடைப்பட்ட மலை ரத்னாசலம் எனப்படும். தமிழக சக்தி பீடங்களுள் இந்த சக்திபீடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சக்திபீடநாயகி அராளகேசியம்மன் என்றும் கரும்பார்குழலியம்மை என்றும் வணங்கப்படுகிறாள். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் தேவி கோலோச்சுகிறாள். இந்த சக்திபீடத்தைச் சுற்றியுள்ள சிவாலயங்களில் ஈசன் காலையில் கடம்பர், மதியத்தில் சொக்கர், மாலையில் திருஈங்கோய் மலைநாதர், அர்த்தசாமத்தில் சிம்மேசர் என வழிபடப்
படுகிறார். மதியம் சொக்கர் என்று வணங்கப்படுபவர். இந்த ரத்னாசலமலையில் வீற்றிருக்கும் ரத்னகிரீஸ்வரரை வாட்போக்கிநாதர், சொக்கர் என வணங்குகின்றனர். இவருக்கு அபிஷேகம் செய்யும்பால் உடனே கெட்டித்தயிராக மாறும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது. இம்மலையின் மீது காகங்கள் பறப்பதில்லை. 

இந்த சக்திபீடநாயகி அபய வரதம் தாங்கிய கீழிரு கரங்களும், தாமரை மலர்களைத் தாங்கிய மேலிரு கரங்களுமாக திருவருட்பாலிக்கிறாள். இங்கு வரும் பக்தைகள் தங்கள் மாங்கல்யம் நிலைக்க தேவியை வேண்டி நிற்கின்றனர். வேண்டி நிற்போரின் குறைகளைத் தீர்ப்பவள்தானே அம்பிகை. குமாரி எனும் திருப்பெயரில் இந்த சக்தி பீடமாம் ரத்னாவளி பீடத்தில் அரசாள்பவள். இவளே சூரபத்மன் போன்ற அசுரர்களை அழித்த முருகப் பெருமானை ஈன்றவள். ஈசன் மகிழ முருகப் பெருமானுக்கு வேலாயுதத்தை தந்தருளியவள். அப்பெருங்கருணையை மனிதர்களும் பெற்ற ஐம்பத்தோரு சக்தி பீடங்களிலும் பரவி நிற்பவள். நீலகண்டனின் உயிர். இவளே மதுரையில் மலயத்வஜ பாண்டியன் மகிழ மீனாட்சியாகவும், காசியிலே விசாலாட்சியாகவும், காஞ்சியிலே காமாட்சியாகவும் திருவருட்பாலிப்பவள். இந்த அம்பிகை ஈசனுடன் இணைந்து இந்த ரத்னாவளி பீடத்தில் ஜொலிக்கிறாள். 

தேவி திருவருட்பாலிக்கும் ரத்னாசல மலைக்குக் கீழே ஐயனார் சந்நதியும், வைரப்பெருமாள் சந்நதியும் உள்ளது. பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஐயனார் சந்நதியில் பூட்டு வாங்கி பூட்டுகின்றனர். தங்கள் பிரச்னைகள் யாவும் பூட்டு போட்டதுபோல் தீர்ந்து விடும் என்பது அவர்கள் அனுபவ நம்பிக்கை. அதே போன்று அவர்களின் பிரச்னைகளும் ஐயனார் திருவருளால் தீரும் அற்புதம் இங்கே நிகழ்கிறது. அதே போன்று வைரப் பெருமாள் சந்நதியில் ஒரு தலையற்ற உருவம் உள்ளது. அதன் காரணம் யாதெனில், முன்னொரு காலத்தில் சிவபக்தரான பெருமாள் தன் தங்கைக்கு மழலை வரம் வேண்டி ரத்னேஸ்வரரிடம் வேண்டினார், அவ்வாறு மழலை வரம் கிட்டினால் மழலையின் தலையைக் கொய்து காணிக்கையாக்குவதாகவும் வேண்டிக் கொண்டார், அதன்படி ஈசன் அவருக்கு மழலைவரம் தர அந்த மழலையின் தலையைக் கொய்து காணிக்கையாக்கினார். 

ஈசன் அவர் பக்தியை மெச்சி அந்த மழலையை பழையபடி மாற்றியருளினார். இன்றும் ஈசனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த பின் வைரப் பெருமாளுக்கும் காண்பித்த பின்னரே பக்தர்களுக்கு ஆரத்தி அளிக்கப்படுகிறது. ஈசனின் நிர்மால்ய மாலையும் வைரப் பெருமாளுக்கு சாத்தப்படுகிறது. மழலை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வேண்டிக்கொண்டு பலன் பெறுகின்றனர். சுந்தரர் இம்மலைக்கு வந்தபோது இம்மலையே ரத்னமாக ஜொலித்ததாம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மழைக்காலத்தில் மழையினால் மண் கரைந்து போகும்போது இம்மலையின் ஏராளமான ரத்னங்கள் கிடைக்குமாம். ஒரு முறை பதினோரு செட்டியார்கள் ஒன்று சேர்ந்து தங்கள் வணிகத்தால் கிடைத்த லாபத்தைக் கோயிலில் பிரித்துக் கொண்ட போது எத்தனை முறை பிரித்தாலும் பன்னிரெண்டு பங்கே வந்து திகைத்தபோது அசரீரி வாக்கின்படி 12வது பங்கை ஈசனுக்கு அளித்தாராம். 

இன்றும் அந்தச் செட்டியார்களின் வம்சத்தவர் வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்து விலையுயர்ந்த ஆபரணங்களைச் செலுத்தி வழிபடுகின்றனர். 
ஒருமுறை ஆலயத்திற்கு வந்த ஆரிய அரசரிடம் அங்கிருந்த அந்தணர் காவிரி நீரைக் கொணர்ந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்ய கட்டளையிட, அதன்படி செய்த அரசர் எவ்வளவு நீரை எடுத்து வந்தாலும் நீர் கொட்டப்படும் பாத்திரம் நிரம்பாமல் போகவே தன் வாளால் அந்த அந்தணரை வெட்ட முயலும் போது அவர் ஈசனாக மாறி அருளியதால் இத்தலநாதர்  வாட்போக்கி நாதராக அருள்கிறார், இன்றும் இவருக்கு காவிரி நீரிலேயே அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. 
அம்பிகையின் கடைக்கண் பார்வை சிறிதே சிறிது பட்டாலும், அவர்கள் உலகம் முழுவதையும் ஒரு குடைகீழ் ஆள்வார்கள். 

அவன் தேவேந்திரனாகி ஐராவதத்தில் ஆரோகணித்துச் செல்வான், தேவர்கள் அவனுக்கு ஏவல் புரிவர். மன்மதன் பார்த்துப் பொறாமை கொள்ளும் வகையில் பேரெழில் படைத்து, தேவதாசிகள், அப்ஸரஸ்கள் போன்றோர் காதல் கொள்வர். அவன் வாக்குகளில் தாம்பூல நறுமணம் வீசும். அவர்கள் நித்திய யெளவனுத்துடன் வாழ்வர் என மூகர் தன் மூகபஞ்சசதியின் ஸ்துதி சதகத்தில் கூறியபடி கரும்பார் குழலி தன் பக்தர்களுக்கு மேற்சொன்ன பலன்கள் அத்தனையையும் தந்தருளும் ஸர்வசக்தி படைத்தவள். கரும்பார்குழலியின் பதமலர்கள் பணிந்து கரும்பைப் போல் இனிய வாழ்வு பெறுவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் பெயர் ஜயந்தி. தேவியின் இடது கணுக்கால் விழுந்த சக்தி பீடம். அக்ஷரத்தின் நாமம்(   ). அக்ஷர சக்தியின் நாமம் ஸ்ரீதேவி எனும் மங்கள கெளரி தேவி. இவள் ஒளிரும் பொன்னாபரணங்கள் அணிந்து, பொன்னிற ஆடை உடுத்தி, இரு கைகளிலும் தாமரை மலரை ஏந்தி கீழிரு கைகளை அபய, வரத
முத்திரை காட்டிய வண்ணம் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் எழுந்தருளி அருட்பாலிக்கிறாள். பீட சக்தியின் நாமம் ஜயந்தி.  இந்த சக்தி பீடம் க்ரமதீஸ்வரர் எனும் பைரவரால் காக்கப்படுகிறது. அஸ்ஸாம் ஷில்லாங்கிலிருந்து 52 கி.மீ. தொலைவில் ஜயந்தியா மலையில் இப்பீடம் உள்ளது. பார்பாக் (Paurbagh) என்பது இந்த சக்திபீடம் உள்ள கிராமத்தின் பெயரா

மங்களங்கள் பெருக்கும் மானஸரோவர்!

51 சக்தி பீடங்கள் - 50

திபெத்  மானஸரோவர் ஏரி நீல நிறமாக அருட்காட்சியளிக்கிறது. ஆதிசங்கரர் தரிசித்த சக்தி பீடங்களுள் இப்பீடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் தடாகமே  தேவியாக வழிபடப்படுகிறது. இது இமாலயத்தில் உள்ளதாலேயே சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த தடாகத்தின் நீர் உலகிலேயே மிகமிகத் தூய்மையானது.  இவ்வுலகில் தேவர்கள் மகிழ மானஸா எனும் இப்பீடத்தில் தாக்ஷாயணியாக தேவி விளங்குகிறாள். கருணையே வடிவான இவ்வன்னை தாங்க முடியாத  வேதனையில் வருத்தும் உயிர்களை அணைத்து ஆதரிப்பவள். உள்ளத்தில் புகும் பயனற்ற தீய குணங்களை நீக்குபவள். ஆதரவுடன் நல்ல உபதேசங்களைச்  செய்து மனித மனங்களில் பேதமற்று ஞானதீபத்தை ஏற்றுபவள். சோதனைகளை வெல்ல ஆற்றல் தருபவள். சாதனைகளைச் செய்ய அருள் பொழிபவள். இந்த  அன்னையை மனம் கசிந்து அன்புடன் பாடி நாத வெள்ளத்தைப் பெருக்க பேரின்பத்தைத் தருபவள். தாக்ஷாயணி அன்னையைப் பணிந்து அனைத்து நலன்களையும்  பெறுவோம். 

திபெத் என்ற சொல்லுக்கு ‘த்ரிவிஷ்டபம்’ என்ற சமஸ்கிருதப் பெயர் உண்டு. அதன் பொருள் சொர்க்கம் எனப்படும். மகாபாரதத்தில் இப்பகுதி தேவகுலம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனன் தவம் செய்த இடம் இதுவே. தவம் முடிந்து அர்ஜுனனை அழைத்துப் போக இந்திர ரதம் இவ்விடத்திற்குத்தான் வந்ததாம்.  எனவேதான் இவ்விடம் சொர்க்க பூமியாக கருதப்படுகிறது. இந்த மகாபுனிதமான ஏரியில் தேவகன்னிகைகள் குளிப்பதாகக் கூறப்படுகிறது. அன்னை இங்கு  மகாசக்தியாக விளங்குகிறாள். இமயமலையின் மணி முடியாம் கயிலயங்கிரிக்கு அருகில் இப்பீடமான மானஸரோவர் அமைந்துள்ளது. தட்சனின் மகள்  தாட்சாயணி. இப்பீட சக்தியின் பெயரும் அதுவே. பார்வதியின் அம்சமே அவள். இத்தடாகம் மிகவும் எழிலானது. அழகில் இதற்கு நிகரான தடாகம் உலகில்  எங்குமில்லை. 

கயிலை மலையும், மானஸரோவர் தடாகமும் சேர்ந்து கெளரி சங்கரம் எனும் சிவசக்தி வடிவாக அருட்காட்சியளிக்கின்றது. கயிலை மலைக்குத் தெற்கில் அதன்  அடியிலிருந்து 40 மைல் தொலைவில் இந்தப் புனிதத் தடாகம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில் உள்ளது. நான்முகனால்  தோற்றுவிக்கப்பட்ட தடாகம் இது எனும் ஐதீகம் உள்ளது. இதில் ஒருமுறை நீராடினால் பாவங்களும், தீவினைகளும் நீங்குவதாக திபெத்திய புராணத்திலும் இடம்  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலி சமஸ்கிருத நூல்கள் இந்தத் தடாகத்தை அனேடாடா அல்லது அனவடாட்பா என்றும் மகாபாரதம் பிந்துசாரா என்றும் ஜைன  நூல்கள் பத்மஹரோடா என்றும் போற்றுகின்றன. இந்த தடாகத்தின் நடுவே பெரிய அரண்மனையில் நாகராஜா வசிக்கிறார். ஏரியின் கரையிலுள்ள நாவல்  மரங்களிலுள்ள பழங்கள் ஏரியில் விழுவதால் அந்த நிலப்பகுதி ஜம்புலிங் என்று அழைக்கப்படுகிறது. 

அவற்றில் சில நாகங்கள் உண்ணுவதாவும் சில பொன்னாக மாறி நீரில் மூழ்குவதாகவும் தங்கத்தாமரைகள் மலர்வதாகவும், ராஜஹம்ஸங்கள் நீந்துவதாகவும்,  மானஸரோவரைப்பற்றி புராணங்கள் பகர்கின்றன. காலை சுமார் 3 மணியளவில் தேவர்கள் ஜோதி வடிவமாக ஏரிக்கு மத்தியில் மூழ்கி நீராடும் அற்புதம் இங்கு  நிகழ்கிறது. அம்மையப்பனிடம் ஆணவம் இருக்கக்கூடாது. ஒரு முறை ராவணன் தேரில் இவ்விடம் வந்தபோது இமயமலையானது தேரைத் தடுத்ததால்  கோபமடைந்த ராவணன் இந்த இமயமலையை தூக்க முற்பட்டபோது மலை சற்றே ஆடியது. உடனே ஈசன் தன் கால் கட்டைவிரலால் அழுத்த ராவண்னின்  கைகள் மலைக்கு அடியில் சிக்கிக் கொண்டது. மிகவும் தவித்த பின்னர் அவன் ஈசனை சாம கானத்தால் பாட ஈசன் அவன் கைகளை விடுவித்தான். ஈசனும்  சக்தியும் உறைந்துள்ள இவ்விடத்தில் ராவணனின் ஆணவமும் அவன் கைகளைப் போன்றே நசுக்கப்பட்டது. 

காரைக்கால் அம்மையோ ஈசனின் இருப்பிடமாதலால் இமய மலையை மிதிக்க அஞ்சி தலையால் நடந்து முக்தி பெற்ற இடம். ஈசனுக்கு அணுக்கத் தொண்டராக  விளங்கிய கசுந்தரர் திருத்தொண்டத் தொகை பாட தென்னாட்டில் அவதரித்தார். ஈசன் அவரை யானை மேல் ஆரோகணித்து வரச் செய்து கயிலையில்  ஆட்கொண்டது வரலாறு. அப்பருக்கு அருள்புரிந்த எம்பிரான் அவரை மானஸரோவரில் குளிக்கச் செய்து திருவையாற்றில் தரிசனம் தந்தருளினார். தர்மரும்,  அர்ஜுனனும் குருக்ஷேத்திரப் போரில் வெற்றி பெற வேண்டி கண்ணனோடு இங்கு வந்து ஆயுதங்களைப் பெற்றுச் சென்றதாக மகாபாரதம் கூறுகிறது. ஈசன்  கருணை மலையாகவும், அம்பிகை தடாக வடிவிலும் அருள் பாலிக்கும் மானஸரோவரில் தாட்சாயணியின் திருவருளைப் பெற அவள் பாதங்களைப் பணிவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் பெயர் கரதோயா எனும் யுசாத்யா. தேவியின் வலது கால் கட்டைவிரல் விழுந்த பீடம். அக்ஷரத்தின் நாமம் . அக்ஷர சக்தியின் நாமம் ஷண்டாதேவி.  சிவந்த நிறத்துடன் மஞ்சள் பட்டாடை உடுத்தி இரு தாமரை மலர்களை ஏந்தி வர அபய முத்திரைகள் தரித்து கம்பீரமான ராஜஹம்ஸத்தில் ஆரோகணித்து  அமர்ந்தவள் இத்தேவி. பீட சக்தியின் நாமம் பூததாத்ரி. இப்பீடத்தை க்ஷீரகண்டகர் எனும் பைரவர் பாதுகாக்கிறார்.  பங்களாதேஷ் பார்த்தமான் (Bardhaman)  ரயில் நிலைய சந்திப்பிற்கு 32 கி.மீ. வடக்கே ஷீர்கஞ்ச் உள்ளது. அங்குதான் இந்த சக்திபீடம் உள்ளது. இத்தேவியை வணங்குவோர் பாவங்களும் பந்த பாசங்களும்  நீங்கும். செந்தாமரையும் வெட்கும் படியான மென்மையான திருவடிகளைக் கொண்ட தேவியிவள். பங்களாதேஷில் வழிபடப்படுவதால் அங்குள்ள இந்தியர்கள்  உருவமில்லாமல்தான் தேவியை வழிபடுகின்ற