Monday 23 May 2016

பார் புகழும் பழனி!



Pazhani

திரு ஆவினன்குடி

முருகப்பெருமானின் அறுபடை வீடு களுள் மூன்றாவது திருத்தலம்- ‘ஆவினன் குடி’யாகிய பழநி. இந்தத் தலம், உடலின் உயிர்நாடியான மணிபூரகத்தை (இதயம்) குறிப்பது என்பர். குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது.


திண்டுக்கல்லில் இருந்து சுமார் 55 கி.மீ. தூரத்திலும், மதுரையில் இருந்து 115 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது பழநி.


வையாபுரி’ என்றும் பழநிக்கு ஒரு பெயர் உண்டு.


பழநியில் மலைக்கோயில் தவிர ஆவினன்குடி கோயில், பெருவுடையார்- பெரியநாயகி கோயில், மாரியம்மன், அங்காளம்மன், படிப்பாறைக் காளியம் மன் ஆகிய அம்மன் கோயில்களுடன், விநாயகர் கோயில்கள் ஐந்து மற்றும் வேணுகோபாலர், லட்சுமி நாராயணர், சங்கிலி பரமேஸ்வரர், அகோபில வரத ராஜ பெருமாள் ஆகிய கோயில்களும் உள்ளன.


கொடைக்கானல் மலைக்கும் மேற்கு மலைத் தொடர்ச்சியில் இடம்பெற்றுள்ள வராக மலைக்கும் நடுவே அமைந்துள்ளது பழநி மலை. இது கடல் மட் டத்தில் இருந்து சுமார் 1,500 அடி உயரம் கொண்டது. பூமி மட்டத்திலிருந்து உயரம் 450 அடி.


Pazhani


‘அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று சிறப்பிக்கிறார் அருணகிரியார். இவர், பழநித் திருத்தலம் பற்றி திருப்புகழில் 90 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவற்றில்



பழநியை ‘ஆவினன்குடி’ என்றே குறிப்பிடுகிறார். மேலும் அவர், பழநி முருகனை ஞானமூர்த்தி, ஞானநாதா, ஞானாசிரியன், ஞானசொரூபன் என்றெல்லாம் அழைத்து மகிழ்கிறார். அருணகிரிநாதர் பழநி தண்டாயுதபாணியிடமிருந்து ஜப மாலை பெற்றார். இதை, ‘ஜப மாலை தந்த சற்குருநாதா திரு ஆவினன்குடி பெருமாளே’ என்ற திருப்புகழ் சொற்றொடரில் இருந்து அறியலாம்.


மலையடிவாரத்தில் மலையைச் சுற்றியுள்ள நகர்- ‘ஆவினன்குடி’ என்றும், மலை- பழநி மலை என்றும் அழைக்கப் பட்டன. தற்போது நகரம் மற்றும் மலையையும் சேர்த்தே ‘பழநி’ என்கின்றனர். ஒரு தலத்தில் இரு ஆலயங்கள் கொண்ட படை வீடு பழநி மட்டுமே.


அடிவாரக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார் முருகன். இதை ‘ஆதிகோயில்’ என்கிறார்கள்.


‘பழனங்கள்’ (வயல்கள்) சூழ்ந்ததால், இந்தத் தலம் ‘பழநி’ எனப்பட்டது. ‘சித்தன் வாழ்வென்று சொல்கிற ஊர் முன் காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றிருந்தது!’ என்று திருமுருகாற்றுப்படை உரையில், நச்சினார்க்கினியர் குறிப்பிடுவதால், ‘சித்தன் வாழ்வு’ என்ற பெயரிலும் பழநி அழைக்கப் பட்டதாகத் தெரிகிறது.


சேரன் செங்குட்டுவனின் தாத்தா வேளாவிக்கோமான் ஆட்சி செய்த பகுதி பழநி. இவன் வழியில் வந்தவன் வையாவி கோப்பெரும் பேகன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆவியர் குல தலைவனான இவனது தலைநகராகத் திகழ்ந்ததால், பழநிக்கு ‘ஆவினன்குடி’ என்ற பெயர் வந்ததாம்.
ஒரு முறை கோபம் கொண்ட திருமால், திருமகளை புறக்கணித்தார். தனது பதியை அடைய திருமகள், இங்கு தவம் இருந்து பலன் பெற்றாள். விஸ்வாமித்திரர்- வசிஷ்டர் ஆகியோருக்கு இடையே நடந்த போரில் விஸ்வாமித்திரரது ஆயுதத்தை வென்றதால் அகம்பாவம் கொண்டது காமதேனு. இதனால் ஏற்பட்ட பாவம் தீர காமதேனு வழிபட்ட தலம் இது.


‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானை சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன்.


சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் ஈசனிடம் தண்டனை பெற்ற அக்னியும், வாயு பகவானும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இப்படி திரு= லட்சுமி, ஆ= காமதேனு, இனன்= சூரியன், கு= பூமி, டி= அக்கினி- வாயுபகவான் ஆகியோர் தவமிருந்து பலன் பெற்றதால் பழநி திருஆவினன்குடி என்று ஆனது.


அகத்தியர், ஒளவையார், நக்கீரர், சிகண்டி முனிவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக் கூத்தர், சாது சாமிகள், பாம்பன் சாமிகள், வள்ளிமலை சுவாமிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பாடிய திருத்தலம் இது.


Pazhani


ஒரு முறை நாரதரை வாழ்த்தி அபூர்வ மாங்கனி ஒன்றைக் கொடுத்தார் பிரம்மன். அந்த ஞானப் பழத்துடன் ஈசனை தரிசிக்கச் சென்றார் நாரதர். அதை தம் மைந்தர்களுக்குத் தர விரும்பினார் ஈசன். ஆனால், பழத்தை ஒருவருக்கே வழங்க முடியும். இதற்காக கணபதிக்கும் கந்தனுக்கும் போட்டி வைக்கப்பட்டது. ‘யார் முதலில் உலகை வலம் வருகிறார்களோ அவருக்கே கனி!’’ என்றார் சிவ பெருமான்.



‘பெற்றோரே உலகம்’ என்று தாய்- தந்தையரை வலம் வந்து விநாயகர் பழத்தைப் பெற்றுக் கொண்டார். மயில் வாகனத்தில் பயணித்து தாமதமாக வந்து சேர்ந்த முருகன், பழம் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு, கோவணத்துடன் தண்டாயுதபாணியாக தென்திசையில் வந்து சேர்ந்த இடம் சிவகிரி. சிவபெருமானும் உமையவளும் அங்கு வந்து, ‘அடியாருக்கு ஞானம் அருளும் ஞானப்பழம் நீ’ என்று முருகனை சமாதானப் படுத்தினர். அதனால் முருகன் வசிக்கும் மலை, ‘பழம் நீ’ என்று ஆகி, பிறகு ‘பழநி’ என்று மருவியது என்பர்.


பழநியின் கிரிவலப் பாதை சுமார் இரண்டேகால் கி.மீ. தூரம் உள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கப்பட் டுள்ளது. மலையின் நான்கு திசைகளிலும் மயில் மண்டபமும், அவற்றில் கல்லால் ஆன பெரிய மயில் உருவங்களும் உள்ளன.


கிரிவலப் பாதையில் மதுரைவீரன் சுவாமி, ஐம்முக விநாயகர் கோயில், சந்நியாசியப்பன் கோயில், அழகு நாச்சியப்பன் ஆலயம் ஆகியன உள்ளன. தவிர நந்தவனங்கள், திருக்கோயிலின் ஏழை மாணவர் இல்லம், நாகஸ்வர- தவில் இசைப்பள்ளி, சண்முக விலாசம் (அன்னதான சமாஜம்), நந்தனார் விடுதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.


697 படிகள் கொண்டது பழநி மலை. மலைக்கோயிலை அடைய நான்கு தடங்கள் உண்டு. அவை: படிக்கட்டுப் பாதை, யானைப் பாதை, இழுவை ரயில் பாதை மற்றும் ரோப் கார் பாதை.


யானைப் பாதையின் தொடக்கத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. முருகனின் காவல் தெய்வமான இவரை வணங்கி விட்டே பக்தர்கள் மலையேறத் தொடங்குவர். வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் இவரை வணங்கிச் சிறப்பித்துள்ளார்.


இந்தியாவிலேயே முதன் முதலாக பழநி ஆலயத்தில் இழுவை ரயில் அறிமுகமானது. ஆண்டு 1966. இதற்குக் காரணமானவர் காமராஜரது அமைச் சரவையில் அமைச்சராக இருந்த பக்தவச்சலம்.


இரண்டாம் வழித்தடம் 1981-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் இரு பெட்டிகளில் 32 பேர் பயணிக்கலாம். மலைக்குச் செல்ல சுமார் 8 நிமிடங்கள் ஆகின்றன. இந்த இழுவை ரயில்கள் காலை 5 முதல் இரவு 9 மணி வரை இயங்குகின்றன. விசேஷ காலங்களில் காலை 4 மணி முதல் இயங்கும்.
முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர் மற்றும் பூஜைப் பொருட்கள் எடுத்து வருவதற்காக ‘திரு மஞ்சனப் பாதை’ என்பது மலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை.


பழநி அடிவாரத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று. அவை: வையாபுரிக் குளம், சண்முக நதி, சரவணப் பொய்கை. சரவணப் பொய்கை ஒரு காலத்தில் கல் கிணறாக இருந்ததாம். சட்டிசாமி எனும் துறவி பிச்சை எடுத்த பணத்தால் அதைப் புதுப்பித்தாராம்.


புனித நீராடியபின் பாத விநாயகர், குழந்தை வேலாயுத சுவாமி, பெரிய நாயகி அம்மன்- பெரு வுடையார் கோயில்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கோயில்களை வழிபட்ட பின்னர் மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை வணங்க வேண்டும் என்பது மரபு.


மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் சூரசம்ஹாரம், சுப்ரமண்யர்- தேவசேனை திருமணக் காட்சிகள், காளத்திநாதருக்கு கண்களை அப்பும் கண்ணப்பன் மற்றும் வீரபாகு தேவர் ஆகியோரது சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.


இதன் அருகே உள்ள மயில் மண்ட பத்திலிருந்து படியேற வேண்டும். வழியில் களைப்பாற மண்டபங்களும், விநாயகர், வள்ளி, இடும்பன் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. யானைப் பாதையில் தல வரலாற்றுச் சிற்பங்களுடன் வள்ளியைச் சோதிக்க வேடனாக வந்த முருகனின் திருவுருவங்களும், வள்ளியம்மன் சுனையும் உள்ளன.


மயில் மண்டபத்தில் கூத்தாடும் பிள்ளையாரை வணங்கி தொட்டியில் சிதறு தேங்காய் அடிக்கலாம். தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது, தல விநாயகரின் முன் தோப்புக் கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்.


மலைக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.


கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பிரதான கோயிலை, சேர மன்னன் சேரமான் பெருமாள் கட்டியதுடன், தினசரி பூஜை மற்றும் விழாக்கள் கொண்டாட மானியங்களும் அளித்துள்ளான். முருகன் சந்நிதி தெற்குச் சுவரின் வெளிப் புறம் குதிரை மீது கம்பீரமாகக் காட்சியளிக்கும் சேரமானின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.
பழநி திருக்கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மலைப் பாதை வழியாக வருவோர், 2- வது பிராகாரத்தை அடைவர். இங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம் உள்ளது. இங்கு வல்லப விநாயகர் சந்நிதி, கொடிமரம், அக்னி குண்டம், தங்க ரத மண்டபம் ஆகியவை உள்ளன.


முதல் பிராகாரம், பாரவேல் மண்டபத்திலிருந்து கோயிலைச் சுற்றிச் செல்கிறது. இதன் வட பாகத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர், நவவீரர் ஆகியோர் சந்நிதி. மலைக்கொழுந்தீஸ்வரர் சந்நிதியின் முன்புறத் தூண் இரண்டும் ரத வடிவில் அமைந்துள்ளன.


Pazhani


இதன் தென்கிழக்கில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு அவரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன் மற்றும் மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. இங்குள்ள சுரங்கப் பாதை, ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவடி வரை செல்கிறது என்றும், போகர் இறுதியாக இதில் நுழைந்து தண்டாயுதபாணியின் திருவடியில் ஐக்கியமானார் என்றும் கூறப்படுகிறது.

நவரங்க மண்டபம் அருகே உலோகத்தாலான சேவற்கொடி உள்ளது. இதன் மீது ஒரு சேவல் அடிக்கடி வந்து அமர்ந்து கூவுவது பழநியின் சிறப்புகளுள் ஒன்று. இதன் நிழலில் அமர்ந்து தியானிப்பது பக்தர்களது வழக்கம். இந்த மண்டபத்தில் சண்முகருக்கும், ஞான தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தியான சின்னக் குமாரருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இதை அடுத்து அர்த்த மண்டபம்; கர்ப்பக்கிரகம். கர்ப்பக் கிரகச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன.


பழநியாண்டவர் முன்பாக ‘மாக்கல்’ எனப்படும் பெரிய கல் ஒன்று உள்ளது. இது, பள்ளியறைக்கு எழுந்தருளும் முருகனின் திருவடியை (ஸ்ரீபாதம்) தாங்கும் மேடையாகக் கருதப்படுகிறது.
கருவறையின் கிழக்குப் பகுதி மாடத்தில் ஊது வத்தி தூபம் காட்டி, இஸ்லாமியரும் ‘பழநி பாபா’ என ஓதி வழிபடுகின்றனர்.


காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர், மாலையில் ராஜ அலங்காரத்தையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும்.


இங்குள்ள மற்றொரு சிறப்பு பிரம்மன் விக்கிரகம். இந்த பிரம்மன் அம்பு- வில்லோடு வேடுவ வடிவத்தில் காணப்படுகிறார்.


ஒரு முறை பிரம்மா, தானே முதன்மையானவர் என ஆணவம் கொண்டார். இதனால் சினம் கொண்ட ஸ்ரீருத்ரன், வேடுவனாக பிறக்கும்படி பிரம் மனுக்கு சாபமிட்டார். தன் தந்தை பிரம்மனுக்கு சாப விமோசனம் தரும்படி முருகனை பிரார்த்தித்துக் கொண்டார் நாரதர். பிரம்மன் தவறை உணர்ந்து இங்கு வந்து முருகனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார்.


திருநள்ளாறு சனி பகவானைப் போன்றே இங்குள்ள சனீஸ்வர பகவானும் சிறப்பானவர். திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனி யால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். எனவே, சனி தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது பழநி. அங்காரகனான செவ்வாயும், பழநி முருகனை வழிபட்டு நலம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம் .


தண்டாயுதபாணிக்கு கடம்ப மரமும் திரு ஆவினன்குடி முருகனுக்கு நெல்லி மரமும் ஸ்தல விருட்சங்கள்.


மலைக்கோயில் கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தி இடக் கையை இடையில் அமர்த்தி, ஞான தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி கோவணக் கோலத்தில் காட்சி தருகிறார் முருகன். ஸ்கந்த வடிவமான இது, போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. பாதரசம், மதார்சிஸ், தானகம், லிங்கம், கந்தகம், வீரம், பூரம், வெள்ளை, மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள்.
திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், இலவண பாஷாணம், பவளப் புற்று பாஷாணம், கௌரி பாஷாணம், ரத்த பாஷாணம், அஞ்சன பாஷாணம் ஆகியவையே நவபாஷாணங்கள் என்றும் கூறுவதுண்டு.


சாதி லிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரச கற்பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகியவையும் நவபாஷாணங்கள் எனப்படுகின்றன.


நவபாஷாணக் கலவையைக் கல்லாக்குவது, சித்து வேலை. இதை அறிந்தவர் அகத்தியர். அவரிடம் இருந்து கற்றவர் போகர். இந்த விக்கிரகம் காற்று, நீர், எண்ணெய், தேன், நெய் ஆகியவற்றால் கரையாது. நெருப்பால் பாதிப் படையாது. தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவபாஷாணத்துக்கு உண்டு.


போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியை பராமரித்து வந்தனர். போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரி யின் அறிவுரைப்படி போகர், பழநி மலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னை பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லி மறைந்தார். அதன்படி தண்டபாணி வடிவை உருவாக்கி ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர்.


போகருக்கு பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலிப் பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவர் சந்ததியினருக்கு கோயில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் உள்ளது.


ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரது சமாதி உள்ளது. அதில் அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகத லிங்கமும் உள்ளன. இவற்றுக்கு தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.


நவபாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். ஏனெனில், இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே காரணம். மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும்.


தினமும் இரவில் முருகப்பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் காலையில் இது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சந்தனத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பின், மறு நாள் காலையில் பார்க்கும்போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதை துணியால் ஒற்றி எடுத்து தீர்த்தமாக வழங்குகின்றனர்.


தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத்தின்போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.


காலை பூஜையின்போது தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம்.
அப்போது காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள்.
காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம்.
உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம். சாயரட்சையில் ராஜ அலங்காரம்.
ராக்காலத்தில் முதிய வடிவம்.


மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பாலசுப்பிரமணியர், விபூதி அதாவது ஆண்டிக் கோலம். ஒரு காலத்தில் செய்து வந்த பெண் அலங்காரம் தற்போது செய்யப்படுவது இல்லை.


மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் சாளக்கிராம ஸ்படிக லிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். இவர்களை தண்டாயுத பாணி பூஜிப்பதாக ஐதீகம்.
இங்கு பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது. ஓதுவார்களும், கட்டியக் காரர்களும் இறைவனின் புகழ் பாட மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது.


(வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்) அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும். அங்கு பாதுகைகள், பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன. கடைசியாக அன்றைய வரவு-செலவு கணக்குகளை படித்துக் காட்டுவர். இறுதியில் நடை சாத்தப்படுகிறது.


மூலவர் சந்நிதி வழக்கமாக காலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும், கார்த்திகை மற்றும் திரு விழா நாட்களில் காலை 4 முதல் இரவு ராக்கால பூஜை முடியும் வரையில் திறந்திருக்கும். இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.


பழநியில் பக்தர்களது காவடி பிரார்த்தனை பிரசித் தம். கயிலாயத்தில் இருந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை அகத்தியருக்குத் தந்தருளினார் இறைவன். அகத்தியரின் கட்டளைப்படி இந்த மலைகளை இடும்பன் என்பவன் பொதிகைக்குத் தூக்கிச் சென் றான். ஓய்வுக்காக ஓரிடத்தில் அவற்றை இறக்கி வைத்து விட்டு மீண்டும் எடுக்க முற்பட்டபோது, முடியவில்லை. காரணம் சிவகிரி மீது ஏறி நின்ற ஒரு சிறுவன். அவனுடன் போரிட்டு மாண்டான் இடும்பன். சிறுவனே முருகப் பெருமான் என்று உணர்ந்த இடும்பனின் மனைவி தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு முருகனிடம் வேண்டினாள்.


முருகன் அவ்வாறே அருளியதுடன் இடும்பனை தன் காவல் தெய்வமாக்கினார். அவனது விருப்பத்தின் படி பழநிக்குக் காவடி தூக்கி வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக வரமும் தந்தார். திருவிழா காலங்களில் பக்தர்கள்- தங்கக் காவடி, வெள்ளிக் காவடி, பால் காவடி, சந்தனக் காவடி உட்பட பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.


பழநியின் தனிச்சிறப்பு பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது. இதை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும்போது பாஷாண சக்தியால் மருத்துவ குணம் பெறுகிறது.


பழநி மலையில் ஆசிமுகத் தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த் தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.


கொடைக்கானல்- குறிஞ்சி ஆண்டவர் கோயி லும், பழநி கோயிலும் நேர்க் கோட்டில் அமைந்து உள்ளன. குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து பழநி மலையைக் காண முடியும்!


15- ஆம் நூற்றாண்டில் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம். அப்போது ராமப்ப ஐயர் என்பவர் தளவாயாக இருந்தார். இவர் பழநி கோயிலுக்கு வந்தபோது, புலிப்பாணியின் வழி வந்த பாத்திரசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். ஐயர் அல்லாத அவரிடம் இருந்து பிரசாதம் வாங்க வேண்டாம் எனக் கருதி, கொடுமுடியிலிருந்து சரசுவதி ஐயரை குருக்களாகவும், அவருக்குத் துணையாக மருதூர் தம்பா ஐயன், நாட்டார் அப்பன் கோயில் அகிலாண்ட ஐயன் ஆகியோரை பரிசாரகர் மற்றும் நம்பிமார்களாகவும் நியமித்தார் தளவாய் ராமப்ப ஐயர். இந்த தகவல்களை செப்பேட்டில் குறித்து, ராமப்ப ஐயர் செப்பேடு கொடுத்த காலம் கி.பி. 1477-ஆம் ஆண்டு (தமிழ் ஸ்ரீமுக வருஷம் தை மாதம் 15-ஆம் தேதி திங்கட்கிழமை, ரோஹிணி நட்சத்திரம்).


1960- ஆம் ஆண்டு கருவறைக்குத் தங்க விமானம் அமைக்கப்பட்டது.


இங்கு வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் உலா வருவது தனிச் சிறப்பு. கார்த்திகை, விசாகம், சஷ்டி, மாதப் பிறப்பு, அமாவாசை ஆகிய நாட்களிலும், விசேஷ விழாக்களிலும் மலை மீது உற்சவர் சின்னக் குமாரர் பவனி வருகிறார்.


பழநியின் பங்குனி உத்திர விழாவை ‘நாட்டுப் புறத் திருவிழா’ என்பர். வருடம்தோறும் சூலமங்கலம் சகோதரிகளது கச்சேரி அன்று நடை பெறும். ‘பழநி எனும் ஊரிலே, பவனி வந்தான் தேரிலே’ என்ற பாட்டை அவர்கள் பாடுவதற்கும் முருகனின் தங்கத் தேர் அங்கு வருவதற்கும் சரியாக இருக்குமாம்!
தமிழகத்தில் முதன் முதலாக பழநி தண்டாயுத பாணி திருக்கோயிலில்தான் முருகேச முதலியார் என்ற பக்தரின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தங்க ரதம் ஓடத் துவங்கியது.


தங்க ரதம் இழுக்க, மலைக்கோயில் அலு வலகத்தில் பணம் செலுத்தி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கட்ட ணம் 2,000 ரூபாய். 8.4.07 தேதியன்று அதிகபட்சமாக 162 பேர் தங்க ரதம் இழுத்துள்ளனர்.


கொடைக்கானல் மலைவாழ் மக்கள் புதிய செருப்பு தைத்து, தலையில் சுமந்தபடி பாத யாத்திரையாகப் பழநி மலைக்கு வந்து முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கின்றனர். அன்றிரவு அவற்றை அணிந்து கொண்டு பழநி முருகன் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வேட்டையாட வருவதாக ஐதீகம். மறு நாள் காலையில் காட்டுப் பகுதியில் அந்தச் செருப்புகள் காணப்படுமாம்.


முடி காணிக்கை செலுத்த திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகமாக வரும் இடம் பழநி என்கிறார்கள்.


அபிஷேகத்தின்போது மூலவருக்கு அணிவிக்கப் படும் கோவணத்தை ஏலம் விடுகிறார்கள். இதை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டால் நன்மை கள் சேரும் என்பது நம்பிக்கை.


கேரள பக்தர்கள் பலர், தங்கள் குழந்தைகளின் சோறூட்டு விழாவை இங்கு நிறைவேற்றுகின்றனர்.
இங்கு, நாளன்றுக்கு குறைந்தபட்சம் 100 அபிஷேகங்களும், அதிகபட்சமாக சுமார் 1000 அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.


தைப்பூசம், பங்குனி உத்திரம், அக்னி நட்சத்திர திரு விழா, விசாக விழா, கந்த சஷ்டி விழா ஆகியவை இங்கு நடைபெறும் முக்கியத் திருவிழாக்கள்.


பங்குனி உத்திரத் திருவிழாவின்போது பத்து நாள் உற்சவத்தில் முருகப் பெருமான், வள்ளி- தெய்வானையுடன் பற்பல வாகனங்களில் கிரிவலம் வருவார்.


Pazhani


கந்தசஷ்டியின்போது சூரபத்மனை வதம் செய்வதற்காக மலையிலிருந்து கீழே இறங்கி வருவார் முருகப்பெருமான். அவர், மலையின் நான்கு புறங்களிலும் கஜமுகாசுரன், தாரகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்து வெற்றி வீரராக கோயிலுக்குத் திரும்புவார்.

பத்து நாள் நடைபெறும் விசாகப் பெருவிழாவின் ஏழாம் நாளன்று திருத்தேர் வடம் பிடிப்பார்கள்.
தைப்பூசத் திருவிழாவின் 10-ஆம் நாள் மண்டகப் படியாக பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் பழநி முருகன், வள்ளி- தெய்வானையுடன் தெப்பத்தேரில் மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.


தைப்பூச விழாவின்போது நடைபெறும், முருகனுக்கு அம்பாள் வெற்றி வேல் வழங்கும் காட்சி குறிப்பிடத் தக்கது. ஏழாம் நாள் பூச நட்சத்திரத்தன்று தேரோட்டம். அன்று இடும்பன் குளம், சண்முக நதி, பழநி அடிவாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.


‘போகர் வடித்த தெய்வச் சிலை முருகப் பெருமான் அல்ல; தண்டாயுத பாணிதான். தேவ ஸ்தானத்தின் பெயரும் ரசீதுகள், விடுதிகள் மற்றும் கோயில் சொத்துகள் எல்லாவற்றிலும் உள்ள பெயர் தண்டாயுதபாணியே என்றும் சொல்கிறார்கள்.


போகரால் செய்யப்பட்ட சிலையில் வேல் இல்லை; தண்டமே உள்ளது. உற்சவர் கையில் வேலும் தண்டமும் மயிலும் இல்லை. அடிவாரத்தில் உள்ள குழந்தை வேலாயுதசாமியே மயில் வாகனத்தில் வேலுடன் காட்சி தருகிறார்.


அரோகரா சொல்லி தண்டாயுதபாணியின் அருள் பெறுவோம்.









திருவருள் பெருக்கும் திருத்தணி!



Thiruthani


முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஐந்தாவது படைவீடான திருத்தணிகை, சென்னையில் இருந்து சுமார் 84 கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் மும்பை செல்லும் இருப்புப் பாதை தடத்தில் வரும் ஜங்ஷன் அரக்கோணம். இங்கிருந்து வடக்கே சுமார் 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருத்தணி.


தெற்கில் காஞ்சிபுரம், மேற்கில் சோளிங்கபுரம், கிழக்கில் திருவாலங்காடு, வடக்கில் திருக்காளத்தி மற்றும் திருப்பதி ஆகிய திருத்தலங்கள் சூழ நடுநாயகமாக அமைந்துள்ளது திருத்தணி.


Thiruthani


 மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்று கிறது கந்த புராணம்.



 ‘திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும்’ என்று நினைத்தாலோ... தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ... தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ... நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.


 ‘திருத்தணிகையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, என் திருவடிகளை தியானித்து வழிபடுபவர்கள் வீடு பேறு பெறுவர்’ என்று ஸ்ரீமுருகப் பெருமான் திருத்தணி மலையின் மகிமையை வள்ளிக் குறத்தியிடம் விவரித்ததாக கந்த புராணத்தில் குறிப்பிடுகிறார் கச்சியப்ப சிவாசார்யார்.


 தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.


Thiruthani


 ஸ்ரீசுப்பிரமணியர் தானே தேர்ந்தெடுத்து அமர்ந்த தலமாதலால் ஸ்கந்தகிரி, செல்வங்கள் யாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் ஸ்ரீபரிபூரணகிரி, உலகின் மூலாதாரமான ஈசனே தணிகாசலனை இங்கு பூஜித்ததால் மூலாத்திரி, பக்தர்களின் கோரிக்கைகள் நிமிடத்தில் நிறைவேறும் தலம் ஆதலால் க்ஷணிகாசலம், இங்கு நாள் தோறும் கருங்குவளை மலர்கள் மலர்வதால் அல்லகாத்திரி, முருகப் பெருமான் பிரணவப் பொருளை உரைத்த தலம் ஆதலால் பிரணவதான நகரம், இந்திரன் வரம் பெற்ற தலம் ஆதலால் இந்திரநகரி, நாரதருக்கு விருப்பமான தலமாதலால் நாரதப்ரியம், அகோரன் என்ற அந்தணன் முக்தி பெற்ற தலமாதலால் அகோரகல்வயைப்ரமம், நீலோற்பல மலர்கள் நிறைந்த இடமாதலால் நீலோத்பலகிரி, கழுநீர்க் குன்றம் மற்றும் நீலகிரி, கல்பத்தின் முடிவிலும் அழியாத தலம் ஆதலால், கல்பஜித் என்றும் பெயர் பெற்றது திருத்தணிகை. உற்பலகிரி, செங்கல்வகிரி, சாந்தரகிரி, நீலகிரி, குவளைச் சிகரி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு.



 திருத்தணி முருகப் பெருமானை மும்மூர்த்திகள் மட்டுமின்றி நந்திதேவர், வாசுகி நாகம் மற்றும் அகத்திய முனிவர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.


சிவபெருமான், திருத்தணிகையில் முருகப் பெருமானை தியானித்து பிரணவ மந்திரத்தின் பொருள் உபதேசிக்கப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. மைந்தனின் உபதேசத்தால் மகிழ்ந்த சிவனார், வீர அட்டகாசமாகச் சிரித்ததால், வீரட்டானேஸ்வரர் எனும் பெயர் பெற்றார். இவர் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவீரட்டா னேசுவர் திருக்கோயில் திருத்தணிக்கு கிழக்கே, நந்தியாற்றின் வட கரையில் உள்ளது.
நந்தியாற்றின் தென்கரையில் ஆறுமுக சுவாமி திருக்கோயில் உள்ளது.


இங்குள்ள முருகப் பெருமானே சிவபெருமானுக்கு உபதேசித்ததாக ஐதீகம். இங்கிருந்த ஆறுமுக சுவாமி, தற்போது திருத்தணி மலை மீது உற்சவ மூர்த்தியாக தரிசனம் தருவதாகக் கூறுகிறார்கள். இங்குள்ள சுப்பிரமணியரை, ஆண்டுதோறும் பங்குனி மாதம் குறிப்பிட்ட 3 நாட்களில் ஆதவன் வழிபடுவது கண் கொள்ளாக் காட்சியாகும். சூரியனின் கிரணங்கள் முதல் நாள் சுவாமியின் பாதங்களிலும், 2-ஆம் நாள் மார்பிலும், 3-ஆம் நாள் சிரசிலும் விழுவது அற்புதம். நந்தியாற்றின் கரையில் உள்ள வீரராகவஸ்வாமி திருக்கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்று.


 ஸ்ரீமகாவிஷ்ணு, திருத்தணிகை முருகனை வழிபட்டு சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்ராயுதத்தை மீண்டும் பெற்றாராம். அவர் உருவாக்கியது விஷ்ணு தீர்த்தம். பங்குனி உத்திரமும், ஞாயிற்றுக்கிழமையும் கூடிய நன்னாளில் இதில் நீராடி தணிகை முருகனை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்.


 ஒரு முறை பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப் பெருமான். இதனால் சிருஷ்டித் தொழில் பாதிப்படைவதை விரும்பாத சிவனார், சிறையிலிருந்த பிரம்மனை மீட்டார். பிறகு, கர்வம் நீங்கிய பிரம்மன் சிவனாரது ஆலோசனைப்படி, இங்கு வந்து தவம் இயற்றி தணிகைவேலனை வழிபட்டு, அட்ச சூத்திரம், கமண்டலம் மற்றும் சிருஷ்டி வல்லமையை மீண்டும் பெற்றார். அவர் உருவாக்கிய பிரம தீர்த்தம் மற்றும் பிரமேஸ்வரர் லிங்கத்தை மலைப்பாதையில் தரிசிக்கலாம்.


 பிரம்மனின் மனைவி சரஸ்வதிதேவியும் தணிகை வேலனை வழிபட்டு அருள்பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்தத் தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தமும் ஸ்ரீசரஸ்வதீஸ்வரர் லிங்கமும் இதற்குச் சான்று.


Thiruthani


 ஸ்ரீராமபிரான் இங்கு வந்து குமாரக் கடவுளை வணங்கி ஞானோபதேசம் பெற்றதாகக் கூறுவர். சீதா பிராட்டி சமேத ஸ்ரீராமர் சந்நிதானம், ஸ்ரீராமர் பூஜித்த சிவலிங்கம் மற்றும் அவர் உருவாக்கிய தீர்த்தமும் திருத்தணிகையில் உண்டு.



 நந்திதேவர் இங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டு, பதி- பசு- பாசம் ஆகிய முப்பொருள் இயல்பைக் கூறும் சைவ சித்தாந்த உபதேசம் பெற்றார். இதற்காக முருகப் பெருமான் வரவழைத்த, ‘சிவதத்துவ அமிர்தம்’ எனும் நதி ‘நந்தி ஆறு’ என்றும், நந்திதேவர் தவம் செய்த குகை ‘நந்தி குகை’ என்றும் வழங்கப்படுகின்றன.


 இந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து சுனை ஒன்று (இந்திர நீலச்சுனை) ஏற்படுத்தி, அதன் கரையில் நீலோற்பலக் கொடியை வளர்த்தான். அதன் மலர்களால் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையும் தணிகை வேலனை பூஜித்து சங்க- பதும நிதிகள், கற்பகத்தரு, சிந்தாமணி மற்றும் காமதேனு ஆகியவற்றைப் பெற்றான். இதனால் தணிகை முருகன், ‘இந்திர நீலச் சிலம்பினன்’ என்று பெயர் பெற்றார். இன்றும் இவரது அபிஷேகத்துக்கு இந்திர நீலச்சுனையின் தீர்த்தமே பயன்படுகிறது. இதில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி இல்லை.


‘திருத்தணியில் முருகப் பெருமானை தியானித்து தவம் இயற்றினால் முத்தமிழறிவும், ஞானமும் கிட்டும்!’ என்று சிவபெருமான் அருளியபடி அகத்தியர் இங்கு வந்து, தவம் இயற்றி முருகப் பெருமானின் அருள் பெற்றார்.


 பாற்கடலைக் கடைந்தபோது மந்திர மலையினால் தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாக வாசுகி நாகம் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நலம் பெற்றதாக திருப்புகழ் கூறுகிறது. மலையின் மேற்குப் பக்கம் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, தணிகை வேலனை வழி பட்டால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.


 தணிகை மலையின் தென்கிழக்குத் திசையில் சப்த ரிஷிகள், தணிகை முருகனை பூஜித்த இடம் உள்ளது. இங்கு அவர்கள் அமைத்த ஏழு சுனைகள் மற்றும் கன்னியர் கோயில் ஆகியன உள்ளன. அமைதியான இந்த இடம் தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.


 துவாபர யுகத்தில், அர்ஜுனன் தீர்த்த யாத்திரை போகும் வழியில் தணிகைக்கு வந்து முருகப் பெருமானை வணங்கிச் சென்றானாம்.



 திருப்புறம்பயம் திருத்தாண்டகத்தில், ‘கல்மலிந் தோங்கும் கழுநீர் குன்றம்’ என்று திருத்தணியைப் பற்றிக் குறிப்பிடுகிறார் திருநாவுக்கரசர்.


 கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல் வகுப்பு, போர்க்கள தல கை வகுப்பு, திருஞான வேழ வகுப்பு, திருக்கையில் வழக்க வகுப்பு, சித்து வகுப்பு, கந்தரந்தாதி, மயில் விருத்தம் மற்றும் திருப்புகழில் 65 பாடல்களால் திருத்தணி முருகப் பெருமானை போற்றிப் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.


 கந்தப்ப தேசிகர், பாம்பன் சுவாமிகள், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் ஆகியோரும் இந்தத் தலத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.


 தொண்டை நாட்டில் மேற்பாடி எனும் ஊரின் அருகிலிருந்த வள்ளிமலையையும் அதைச் சார்ந்த வனப் பகுதிகளையும் நம்பிராசன் என்ற வேடுவ அரசன் ஆட்சி செய்து வந்தான். இந்தப் பகுதியில் உள்ள காட்டில் மான் ஒன்று குட்டி ஈன்றது. ஆனால், குட்டி மானாக இல்லாமல் பெண் குழந்தையாக இருந்தது. அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றது மான்.


இந்த நிலையில் வேட்டையாட வந்த நம்பிராசன், காட்டில் தனியே அழுது கொண்டிருந்த பெண் குழந்தையைக் கண்டான். வள்ளிக் கிழங்கை அகழ்ந்தெடுத்த குழியில் கிடந்ததால் குழந்தைக்கு வள்ளி என்று பெயர் சூட்டி வளர்த்தான். அவள் வளர்ந்து பருவமெய்தியதும் குல வழக்கப்படி அவளை தினைப்புனம் காக்க அனுப்பினான். அங்கு வள்ளியைக் கண்ட நாரதர், ‘இவள், முருகனுக்கு ஏற்ற மங்கை!’ என்று கருதி, முருகப் பெருமானிடம் சென்று அவளது அழகை எடுத்துரைத்தார். பிறகு முருகன், வேடனாகி, விருத்தனாகி, வேங்கை மரமாகி, விநாயகப் பெருமான் அருளால் வள்ளியை மணந்து வள்ளி மணாளனாக திருத்தணியில் எழுந்தருளினார்.


 வேலூருக்கு அருகே திருவலம் என்ற ஊரில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள வள்ளி மலை என்ற தலத்தில்தான் முருகப்பெருமான் வள்ளியைக் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்ததாக ஐதீகம்.


 இங்குள்ள தீர்த்தங்களுள் முக்கியமானது குமார தீர்த்தம். சிவபெருமானிடமிருந்து ஞான சக்தியாகிய வேலாயுதத்தைப் பெற விரும்பிய முருகப் பெருமான், தணிகை மலையின் அடிவாரத்தில் தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் கரையில் ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார்.


இந்தத் தீர்த்தத்தை குமார தீர்த்தம், கங்கா தீர்த்தம், சரவண பொய்கை ஆகிய பெயர்களாலும் அழைப்பர். இதன் கரையில் திருமடங்கள் பல அமைந்துள்ளதால், இதற்கு ‘மடம் கிராமம்’ என்றும் பெயர் உண்டு. வைகாசி மாதம் விசாகத் திருநாளில் இதில் நீராடி, முருகப் பெருமானையும், அவர் ஸ்தாபித்த ஸ்ரீகுமாரேஸ் வரரையும் வழிபட்டால், பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.


 வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கும் விதம் 365 படிகளுடன் திகழ்கிறது திருத்தணி மலை. மலையின் மீது கார் மற்றும் பேருந்து செல்வதற்கேற்ற சாலை வசதியும் உண்டு. மலைக்கு மேல் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தேவ சிற்பியான தேவதச்சனால் கட்டப்பட்டது என்கின்றன புராணங்கள்.


 சுமார் 4000 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு அபராஜிதவர்ம பல்லவன், பராந்தகச் சோழன், மதுரை கண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், விக்கிரம சோழன், வீரகம்பன உடையார், வீரபிரதாப சதாசிவதேவ ராயர், விஜயநகர மன்னர்கள் மற்றும் கார்வேட் ஜமீன்தார்கள் ஆகியோரால் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கார்வேட் ஜமீன்தார்கள் பொன், வெள்ளியாலான அணி கலன்கள் மற்றும் வாகனங்களை இந்தக் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளனர்.


 திருத்தணி திருக்கோயில் சாளுக்கியர் காலக் கட்டட பாணியிலானது. தற்போது சுமார் 4 கோடி ரூபாய் செலவில், சுமார் 101 அடி உயரத்தில் 9 நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கில் அமைய இருக்கும் இந்த ராஜ கோபுரம், சுமார் 25 கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தால் கூட தெரியும் அளவுக்கு நிர்மாணிக்கப்பட உள்ளது.


 திருக்கோயில் நான்கு பிராகாரங்கள் கொண்டது. மலையின் மீது படிகள் ஏறிச் சென்றால் முதலில், தேரோடும் வீதியான நான்காம் பிராகாரத்தை அடையலாம். இங்கு வாகன மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியன உள்ளன. இங்கிருந்து மூன்றாம் பிராகாரத்துக்குச் செல்லும் நுழை வாயிலின் அருகே கற்பூர அகண்டம் உள்ளது. நான்காம் பிராகாரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள நவாப் வாத்திய மண்டபம் சிறப்பு பெற்றது. இங்கு தினசரி பூஜைகளின்போதும்,உற்சவ காலங்களிலும், இஸ்லாமிய வாத்தியக் காரர்கள், வாத்தியம் வாசிப்பது வழக்கம். இந்த மண்டபம் ‘காதர்’ என்ற இஸ்லாமிய அன்பர் ஒருவரால் கட்டப்பட்டது என்கிறார்கள்.


 நான்காம் பிராகாரத்தின் கிழக்கு வாசல் வழியாக சில படிகள் ஏறி, மூன்றாம் பிரகாரத்தை அடையலாம். இங்கு கொடிமர விநாயகர், உமா மகேஸ்வரர், உச்சிப் பிள்ளையார் ஆகியோரது சந்நிதிகளும் ஐராவதம் எனும் யானை சிலையும் உள்ளன. இங்கு மயிலுக்குப் பதிலாக இந்த ஐராவத யானையே முருகப் பெருமானின் வாகனமாகத் திகழ்வது சிறப்பு. இது மூலவர் சந்நிதியை நோக்கி அல் லாது கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறது.


Thiruthani


முருகப் பெருமானுக்குத் தன் மகள் தெய்வானையை மணம் செய்து வைத்த இந்திரன், அவளுக்குச் சீதனமாக அபூர்வ சக்தி வாய்ந்த ஐராவதம் யானையை வழங்கினான். இதனால் இந்திரனின் செல்வம் குறைய ஆரம்பித்தது. எனவே, அவன் தனது குறை தீர தணிகை வேலனை வழிபட்டான். முருகப் பெருமான் அவனிடம், ஐராவதத்தை திரும்ப அழைத்துச் செல்லுமாறு கூறினார். அதை ஏற்க மறுத்த இந்திரன், ‘ஐராவதம் எப்போதும் தேவலோகத்தை பார்த்தவாறு நின்றால் போதும்!’ என வேண்டினான். முருகப் பெருமானும் ஏற்றுக் கொண்டார். அதன்படியே இந்த ஐராவதம் கிழக்கு நோக்கி- தேவலோகத்தைப் பார்த்தபடி நிற்பதாக ஐதீகம்.



 இந்திரன் அளித்த மற்றொரு சீதனப் பொருள், பெரிய சந்தனக் கல். இரண்டாம் பிராகாரத்தில் யாக சாலைக்கு எதிரில் உள்ள இந்தக் கல்லில் அரைக்கப்படும் சந்தனமே சுவாமிக்கு சார்த்தப் பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சர்வரோக நிவாரணியான இந்த பிரசாதத்தை ‘ஸ்ரீபாதரேணு’ என்கிறார்கள். நெடுங்காலமாக சந்தனம் அரைக்கப்பட்டு வந்தாலும் இந்த சந்தனக் கல் சிறிதும் தேய்மானம் அடையாமல் உள்ளது!


 2-ஆம் பிராகாரத்தில் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீஆறுமுக சுவாமி, குமரேசுவர லிங்கம் (முருகனால் பூஜிக்கப்பெற்றது), உற்சவ மூர்த்திகள், ஸ்ரீஆபத்சகாய விநாயகர், வீரபத்திரர், அருணகிரிநாதர், நவவீரர்கள் மற்றும் ஸ்ரீசூரிய பகவான் ஆகியோரது சந்நிதிகளையும் தரிசிக்கலாம். இந்த பிராகாரத்தின் வடக்குச் சுற்றில், தூண் ஒன்றின் அருகில் உள்ள துவாரத்தின் வழியே மூலவர் கருவறை விமானத்தை தரிசிக்கலாம்.


 இரண்டாம் பிராகாரத்தில் இருந்து, ‘பஞ்சாட்சரப் படிகள்’ எனப்படும் ஐந்து படிகளில் ஏறி முதல் பிராகாரத்தை அடையலாம். இங்கு ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீபைரவர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள ருத்திராட்ச மண்டபத்தில் (சுமார் ஒரு லட்சம் ருத்திராட்சங்களால் ஆனது) உற்சவர் அருள் பாலிக்கிறார்.


 முதல் பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் ஸ்ரீபாலமுருகன் சந்நிதி உள்ளது. ஆருத்ரா தரிசனத்தன்று இவருக்கு வெந்நீர் அபிஷேகம் நடைபெறுகிறது.


Thiruthani

முதல் பிராகாரத்தில் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி ஸ்தான மண்டபமும் அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன. இந்த பிராகாரத்தின் தென் புறம் வள்ளியம்மை தன் இடக் கரத்தில் தாமரை மலரோடும், வட புறம் தெய்வானை தன் வலக்கரத்தில் நீலோற்பல மலரோடும் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.



 மூலவரான ஸ்ரீதணிகைநாதரது சந்நிதி சற்று பின்னேயும், வள்ளி-தெய்வானை தேவியரது சந்நிதிகள் முன்புறம் சற்றுத் தள்ளியும் அமைந்துள்ளன. தமிழின் ஆயுத எழுத்து (ஃ) போன்ற இந்த அமைப்பு, தணிகைக் கோயிலின் தனிச் சிறப்பு.


கோயிலின் கர்ப்பக் கிரகத்தில் தணிகை பிரானான முருகப் பெருமான் கடம்பமாலை அணிந்து, தன் வலக் கரத்தில் வேலாயுதம் தாங்கி, இடக் கரத்தை ஊரு அஸ்தமாக தொடையில் வைத்து நின்ற திருக்கோலத்தில் சாந்த சொரூபியாக காட்சி தருகிறார். சூரபதுமனை அழிக்க தன் அன்னையிடம் சக்திவேல் பெற்ற முருகப் பெருமான், பக்தர்களுக்கு ஞானம் அருளும் பொருட்டு தன் தந்தையிடம் இருந்து ஞானவேல் பெற்று அருள் புரிவதால், இவரை ஞானசக்திதரர் என்பர்.


 திருமாலிடம் இருந்து தான் கைப்பற்றிய சக்ராயுதத்தை முருகன் மீது ஏவினான் தாரகாசுரன். அதைத் தன் மார்பில் ஏற்றுக் கொண்டார் முருகன். பிறகு, அந்த சக்ராயுதத்தை திருமாலிடமே ஒப்படைத்தாராம். இன்றும் தணிகை முருகனின் திருமார்பில் சக்ராயுதம் பதிந்த தழும்பைக் காணலாம். இவரின் பாதத்தின் கீழே ஆறெழுத்து மந்திரம் பொறித்த யந்திரம் உள்ளது
.
 இங்கு, பள்ளியறை பூஜையின்போது ஒரு நாள் வள்ளிதேவியுடனும், மறு நாள் தெய்வயானையுடனும் பள்ளியறைக்கு எழுந்தருள்கிறார் முருகப் பெருமான். எந்த முருகன் தலத்திலும் இல்லாத சிறப்பு இது.
 கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சந்நிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத் சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.


 திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோயிலின் தனிச் சிறப்பு.


 முருகப் பெருமான் சினம் தணிந்து அருளும் தலம் ஆதலால், திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. கந்த சஷ்டி ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.


 நவ கன்னிகைகள் தினமும் இங்கு வந்து தணிகை முருகனை பூஜித்துச் செல்வதாக புராணங்கள் கூறுகின்றன. கோயிலின் தென்புறம் நவ கன்னிகை கோயில் உள்ளது. இங்கு தேவி உமாமகேஸ்வரி ‘புற்று’ வடிவில் குடி கொண்டுள்ளாள். இதன் அருகே எப்போதும் நீர் வற்றாத ஏழு சுனைகள் உள்ளன. இங்கு வந்து தீர்த்தமாடி, திருத்தணி மலையேறி தணிகை முருகனை வழிபட்டுச் செல்வதாகக் கூறுகிறார்கள்.


 இந்தத் தலத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன.


 பேச்சுக் குறைபாடுள்ள குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் பிரதோஷ நேரத்தில் (மாலை 4:30 முதல் 6.00 மணி வரை) இந்தக் கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்து முருகப் பெருமானை வேண்டிக் கொண்டால் குறை தீர்ந்து நலம் பெறுவர் என்பது பக்தர்களது நம்பிக்கை.


 முடி காணிக்கை, எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனக்காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல் ஆகியன இந்தத் தலத்தின் முக்கியமான பிரார்த்தனைகளாகும்.
 திருத்தணியில் பக்தர்கள் எடுக்கும் காவடி, வித்தியாசமானது. நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம்.


 திருத்தணி- பள்ளிப்பட்டு சாலையில் உள்ள தலம் நெடியமலை (நீண்டமலை). சுமார் 600 படிகள் ஏறிச் சென்றால் மலைக்கு மேல் உள்ள ஸ்ரீசெங்கல்வராய சுவாமி (முருகன்) ஆலயத்தை அடையலாம். முருகப் பெருமான் திருத்தணிக்குச் செல்லும்போது இங்கு சிறிது காலம் தங்கியிருந்தாராம். அதனால் நெடிய மலை ஸ்ரீசெங்கல்வராய சுவாமியை தரிசித்து வழிபட்ட பிறகே திருத்தணி முருகனை தரிசிக்க செல்ல வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


Thiruthani


 திருப்பதிக்குச் சென்று மாலவனை வணங்கும் பக்தர்கள் அங்கு செல்வதற்கு முன்பாகவோ அல்லது திரும்பும்போதோ திருத்தணி வந்து மால்மருகனையும் வணங்கிச் செல்வது வழக்கம்.

திருத்தணிக் கோயிலில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன: காலை 5 மணி- விஸ்வரூப தரிசனம், காலை 8 மணி- காலைச் சந்தி அபிஷேக பூஜை, காலை 10 மணி- உச்சிகால அபிஷேக பூஜை, மாலை 5 மணி- சாயரட்சை அபிஷேக பூஜை, இரவு 8 மணி- அர்த்தஜாம பூஜை, இரவு 9 மணி- பள்ளியறை பூஜை.


 திருத்தணி படித்திருவிழா பிரசித்திப் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், புது வருடப் பிறப்பின்போது பழங்கள் மற்றும் மாலை மரியாதைகளுடன் சென்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த துரைமார்களை சந்திக்கும் வழக்கம் இருந்து வந்தது. இதற்கு மாற்றாக, தேச பக்தியுடன் தெய்வ பக்தியையும் வளர்க்கும் விதம் புத்தாண்டு தினத்தில் திருத்தணி முருகனை வணங்கும் விதம் ஏற்படுத்தப்பட்டதே திருத்தணி படித் திருவிழா.


வள்ளிமலை சுவாமிகளால் 31.12.1917 மற்றும் 1.1.1918 ஆகிய நாட்களில் திருத்தணி படித் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர், ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளால் ‘திருப்புகழ் மணி’ என்று பட்டம் சூட்டப்பட்ட டி.எம். கிருஷ்ணஸ்வாமி மற்றும் மௌனகுரு சுவாமிகள் ஆகியோரால் இந்த விழா பிரபலமானது.


 1921-ஆம் ஆண்டு தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை மற்றும் பல அடியார்களுடன் திருத்தணி சென்று, ‘திருத்தணித் திருப்புகழ்த் திருவிழா’வை திருப்புகழ் சச்சிதானந்த மகான் தொடங்கி வைத்தார்
 திருப்புகழ் முத்துஸ்வாமி ஐயர் மற்றும் அவர் மகன் திருப்புகழ் டாக்டர் மணி ஐயர் ஆகியோர், ‘அடியார் திருக்கூட்ட இறைபணி மன்றம்’ என்ற அமைப்பின் மூலம் திருத்தணி படி விழாவை ஏற்பாடு செய்தனர். அது இன்றளவும் தொடர்கிறது.


 வருடம்தோறும் டிசம்பர் 31-ஆம் தேதி திருத்தணி ஆலயத்தில் தீபம் ஏற்றியதும், அடிவாரத்தின் முதல் படிக்கட்டில் ஆரம்பித்து ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு பாடல் வீதம் திருப்புகழ் பாடி நிவேத்தியம் செய்து தீபம் ஏற்றுவார்கள் பக்தர்கள். இவ்வாறு 365 படிக்கட்டுகளிலும் தீபம் ஏற்றப்படுகிறது.
 தமிழ் புத்தாண்டு தினத்தில் திருப்படி உற்சவத்துடன் 1008 பால்குட விழாவையும் (1980-ஆம் ஆண்டு) ஏற்படுத்தியவர் மயிலை மாமுனிவர் குருஜி சுந்தராம சுவாமிகள். தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், கீழேயுள்ள ஸ்ரீஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற சரண கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால் குடங்கள் மலை மேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி.
 ஆனி மாதம் 29-ஆம் தேதி ‘வர்தந்தி’ எனப்படும் ஓர் உற்சவம் திருத்தணியில் நடைபெறும். அன்று முருகப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. இரவில், முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் தரிசனம் தருவார். மேலும் இந்தத் தலத்தில் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, திருக்கார்த்திகை மற்றும் மாசி மாத கிருத்திகை நாட்கள் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன.
 வள்ளலார் வழிவந்த கர்ணீகர் சமூகத்தவரால் ஏற்படுத்தப்பட்ட தைப்பூச கமிட்டி சார்பில் தைப்பூசத்தன்று காலையில் திருத்தணி முருகனுக்கு சந்தனக் காப்பு, வள்ளி- தெய்வானை தேவியருக்கு மஞ்சள் காப்பு மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகிய வைபவங்கள் நடைபெறும்.


மதியம் அன்னதானம். மாலை வேளையில் மதுக்கவச ஸ்தாபனம், மூலவர் அபிஷேகம் மற்றும் புத்தாடை சார்த்துதலும் இரவில் குதிரை வாகனம் மற்றும் தங்கத் தேரில் உற்சவரது பவனியும் நடைபெறும். திருக்கோயில் யானை முன்னே வர தைப்பூச முழு நிலவில் முருகப் பெருமான் உலா வரும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தைப்பூசக் கமிட்டித் தலைவர் கே. பரசுராம பிள்ளை தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
 மாசி மாதம் முருகப் பெருமான்- வள்ளிதேவி திருக்கல்யாணமும், சித்திரை மாதம் முருகப் பெருமான்- தெய்வானை திருக்கல்யாணமும் பிரம்மோற்சவ விழாக்களாக வெகு விமரிசையுடன் நடைபெறுகின்றன.


 மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.


 ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதியன்று திருத்தணியில் ராமலிங்க அடிகளாருக்கு விழா நடைபெறுகிறது.


எண்ணற்ற அருளாளர்கள் தணிகை வேலனை வழிபட்டு அருள் பெற்றுள்ளார்கள். ஒரு முறை அடியார்கள் சிலருடன் திருப்புகழ் பாடியபடி தணிகை மலையை வலம் வந்து கொண்டிருந்தார் அருணகிரிநாதர். அப்போது, அவரை சிலர் கேலி செய்தனர். மனம் வருந்திய அருணகிரிநாதர் தணிகை முருகனை மன தில் தியானித்து, ‘சினத்தவர் முடிக்கும்...’ எனத் துவங்கும் திருப்புகழ் பாடலின் நான்கு அடிகளைப் பாடினார். மறு கணம் அவரைக் கேலி செய்தவர்கள் சாம்பலாயினர்.


அதன் பிறகு, அருணகிரிநாதர் அந்தப் பாடலின் அடுத்த நான்கு அடிகளைப் பாட... முருகப் பெருமான் அருளால் மாண்டவர்கள் மீண்டும் எழுந்தனர். மனம் திருந்தி முருகப் பெருமானின் அடியார்களாயினர்.
 ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள் முருகனின் தீவிர பக்தர். நாடெங்கும் திருப்புகழ் மகிமையை பரப்பியவர்.
ஒரு முறை அடியார்கள் புடைசூழ சுவாமிகள், ‘வேல் மயிலோனுக்கு அரோஹரா!’ என்ற கோஷத்துடன் தணிகை மலையை வலம் வந்து கொண்டிருந்தார். சுவாமிகள் ‘அரோஹரா’ கோஷம் எழுப்ப... அவரை பின்பற்றி அடியார்களும் கோஷமிட்டபடி வலம் வந்தனர். அப்போது பசியால் தவித்த அடியார் ஒருவர், ‘இட்லி, காபிக்கு அரோஹரா’ என்று கோஷமிட்டாராம்!


சற்று நேரத்தில் வயோதிகர் ஒருவர் எதிர்ப்பட்டு, சுவாமிகளுக்கும் அவருடன் வந்த அடியார்களுக்கும் தான் கொண்டு வந்திருந்த இட்லி- காபியை வழங்கினாராம். எவரும் எதிர்பாராவிதம் வயோதிகராக வந்து தங்களது பசியாற்றியது சாட்சாத் தணிகை முருகனே என்றுணர்ந்து மெய்சிலிர்த்தார் ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள்.


 அது 1917-ஆம் ஆண்டு ஜூன் மாதம். ஒரு நாள் ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள் அடியார்களுடன் சேர்ந்து திருப்புகழ் பாடல்களை மெய்ம்மறந்து பாடிக் கொண்டிருந்தார். அப்போது, ‘திருப்புகழோதுங் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே...’ என்பதற்கு பதிலாக ‘தெருத் திண்ணைதோறும் திருப்புகழ் ஓதுந் திருத்தணி மேவும் பெருமாளே...’ என்று சுவாமிகள் பாட அடியார்கள் திகைத்தனர். எனினும் அவர்களும் அப்படியே பாடினர். பஜனை முடிந்ததும் அடியார்கள் அவரிடம் ‘‘ஏன் இப்படி?’’ என்று கேட்டனர்.


சுவாமிகள், ‘‘ஏன் அப்படி பாடினேன் என்று எனக்கே தெரியவில்லை’’ என்று பதிலளித்தார்.
மறு நாள் இரவு 8 மணியளவில் திருத்தணி சீர்கர்ணீக மடத்தின் திண்ணையில் அமர்ந்து திருப்புகழ் பாராயணத்தைத் தொடங்கினார் சுவாமிகள். இது நள்ளிரவு வரை தொடர்ந்தது. திடீரென வானில் பேரொளி ஒன்று எழும்பியது. அதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.


Thiruthani


சிறிது நேரத்தில் கையில் விசிறியுடன் அங்கு வந்த வேதியர் ஒருவர், திண்ணையின் மீது ஏறி சுவாமிகளின் அருகில் அமர்ந்தார். எல்லோரது கவனமும் திருப்புகழ் பாடலில் லயித்திருந்தனர். திடீரென திண்ணையில் இருந்து இறங்கிய வேதியர், அருகில் உள்ள திருக்குளத்தின் படிக்கட்டு பகுதிக்குச் சென்று களிப்புடன் நடனமாடினார். பின்னர் மாயமாக மறைந்து போனார்.



அப்போதுதான் ‘வந்தவர் வேதியரல்ல; உலகு போற்றும் தணிகைநாதனே!’ என்று சுவாமிகள் உட்பட அனைவரும் உணர்ந்தனர். ‘தனது வருகையை முன் கூட்டியே உணர்த்தவே ஸ்ரீசுப்பிரமண்ய ஸ்வாமி தெருத் திண்ணை தோறும் திருப்புகழோதுந் திருத்தணி மேவும் பெருமாளே என்று வள்ளிமலை சுவாமிகளை பாட வைத்தார் போலும்!’ என்று மெய்சிலிர்த்தனர் அடியார்கள்.


 இந்துக்களும், முஸ்லிம்களும் சமய பேதமின்றி வணங்கி வழிபடும் தெய்வமான தணிகை முருகன், ஒரு முஸ்லிம் பெரியவராக வள்ளிமலை சுவாமிகளுக்கு காட்சி தந்ததாராம்!


 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திருவாரூர் முத்துஸ்வாமி தீட்சிதரும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமியின் அருள் பெற்றவர்.


ஒரு முறை தன் குருநாதரது ஆணைப்படி திருத்தணி முருகனை தரிசிக்க வந்தார் முத்துஸ்வாமி தீட்சிதர். அவர் படிக்கட்டுக்களில் ஏறிச் செல்லும்போது எதிர்ப்பட்ட முதியவர் ஒருவர், ‘முத்துஸ்வாமி!’ என்று அழைத்து தீட்சிதரின் வாயில் கற்கண்டு ஒன்றைப் போட்டாராம்.


அந்தக் கற்கண்டை சுவைத்ததும் பரவச நிலை அடைந்தார் தீட்சிதர். மறு கணமே ‘ஸ்ரீநாதாதி குரு குஹோ’ என்ற கீர்த்தனை பிறந்தது. முதியவராக வந்தது முருகப் பெருமானே என்றுணர்ந்த முத்துஸ்வாமி தீட்சிதர், திருத்தணி முருகன் மீது எட்டு கிருதிகளைப் பாடினார். அவையே, புகழ்பெற்ற ‘விபக்தி கீர்த்தனைகள்’ ஆகும்.


 திருவருட்பிரகாச வள்ளலார் தன் இளமை பருவத்தில் தியானத்தில் இருந்தபோது அவருக்கு திருத்தணி முருகன் கண்ணாடியில் காட்சி தந்தருளினார். இதை, திருவருட்பா- ஐந்தாம் திருமுறை- பிரார்த்தனை மாலை (சிர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்... தணிகாசலம் என் கண்ணுற்றதே...) பாடல் மூலம் அறியலாம்.


 கச்சியப்ப சிவாச்சார்யாரின் சீடர் கந்தப்ப தேசிகர். ஒரு முறை இவர் குன்ம நோயால் துன்புற்றார். அப்போது, கச்சியப்ப சிவாசார்யார், ‘திருத்தணிகைப் பதிற்றுப் பத்தந்தாதி’ தணிகையாற்றுப்படை எழுதி, அதை திருத்தணி முருகன் சந்நிதியில் பாட... குன்ம நோய் நீங்கி குணம் அடைந்தார் கந்தப்ப தேசிகர்.


தாண்டவசிவா என்பவர் முருகப் பெருமானின் தீவிர பக்தர். கௌபீனம் மட்டுமே அணிந்திருப்பார். இவர் திருத்தலங்கள் பலவற்றை தரிசித்து விட்டு திருத்தணிக்கு வந்தார். அவருக்கு முன்னே அடியார்கள் சிலர், தங்கள் கைகளில் அருட்பா நூலை ஏந்தி அதில் உள்ள பாடல்களைப் பாடியபடி சென்றனர். இதைக் கண்ட தாண்டவசிவா, ‘என்னிடம் ஓர் அருட்பா புத்தகம் இல்லையே’ என்று வருந்தினார். அதே எண்ணத்துடன் ஓரிடத்தில் படுத்தவர் உறங்கிப் போனார். அவர் கண் விழித்தபோது அருகில் ஓர் அருட்பா புத்தகமும் கமண்டலமும் இருந்தன. ‘என்னே முருகன் திருவருள்!’ என்று வியந்தவர், தணிகை நாதனை கைகூப்பித் தொழுதார்.


திருத்தணி முருகனை வழிபட்டு திருவருள் பெறுவோம்.











சுவாமிமலை (திருவேரகம்)!

Swamimalai


முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வதாக திகழ்வது சுவாமிமலை. கும்பகோணம்- திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் பேருந்து வழியில் திருவலஞ்சுழியில் இறங்கி, வடக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவு பயணித்தால், சுவாமிமலையை அடையலாம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரயில்பாதையில் சுவாமிமலை ரயில் நிலையத்தில் இறங்கி வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.


சுவாமிமலையை புராணங்களும் இலக்கியங்களும் திருவேரகம் என்று குறிப்பிடுகின்றன. 'ஏர்' என்றால் அழகு; 'அகம்' என்றால் வீடு என்பர். அழகு மிக்க படைவீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம். ஏர்த் தொழிலான விவசாயம் சிறக்கும் பகுதியில் உள்ள படைவீடு ஆதலால் திருவேரகம் ஆனது என்பாரும் உண்டு. அடியவர்களின் மனதை 'அருள்' எனும் ஏர் கொண்டு உழுது, 'அன்பு' எனும் பயிரை வளர்ப்பவர் முருகப் பெருமான். இவர் அருள் பாலிக்கும் தலம் ஆதலால் இந்தப் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். தவிர... சிரகிரி, சிவகிரி, முருகப் பெருமான் இங்கு குரு அம்சமாக அருள் பாலிப்பதால் குருமலை, குரு கிரி, ஸ்வாமிநாத ஸ்வாமியின் கோயில் கட்டுமலை அமைப்புடன் அழகுற காட்சி தருவதால் சுந்தராசலம், நெல்லி (தாத்ரி) மரத்தைத் தல மரமாகப் பெற்றதால் தாத்ரிகிரி ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு வழங்கப்படுகிறது.


முருகப் பெருமான், குரு அம்சமாகத் திகழும் இரண்டு தலங்களில் ஒன்று சுவாமிமலை. மற்றொன்று திருச்செந்தூர்.


Swamimalai
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளும் ஆறு ஆதார மையங்களைக் குறிப்பன என்பர். அதாவது, திருப்பரங்குன்றம்- மூலாதாரம்; திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம், திருவாவினன்குடி (பழநி)- மணிபூரகம், திருத்தணி- விசுத்தி, பழமுதிர்ச்சோலை- ஆக்ஞை. இந்த வரிசையில் சுவாமிமலை- அனாகதம் என்பர்.
'குரோசம்' என்பது, கூப்பிடு தூரத்தில் உள்ள அளவு. இப்படி, கும்பகோணத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள ஐந்து தலங்களை பஞ்ச குரோசத் தலங்கள் என்பர். அவற்றில் சுவாமிமலையும் ஒன்று. மற்றவை திருவிடைமருதூர், திருப்பாடலவனம், தாராசுரம், திருநாகேஸ்வரம்.
சுவாமிமலைக்குத் தெற்கே காவிரியும், அதன் கிளை நதியான அரசலாறும் ஓடுகின்றன.


மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கட்டு மலை (செயற்கையான குன்று) கோயிலைக் கொண்டிருப்பது, இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.
சோழ நாட்டை சிவாலயமாக பாவித்து, வழிபடும் ஒருமுறை உண்டு. அதில், திருவலஞ்சுழி மற்றும் சுவாமிமலை திருத்தலங்களை முறையே விநாயகர் மற்றும் முருகன் சந்நிதிகளாகக் கொள்வர்.
திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருவிடைமருதூர் தல புராணம், திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானை மையமாக வைத்து திருவலஞ்சுழி (விநாயகர் தலம்), சுவாமிமலை (முருகன் தலம்), திருச்சேய்ஞலூர் (சண்டேசர் தலம்), சீர்காழி (சட்டநாதர் தலம்), சிதம்பரம் (நட ராஜர் தலம்), திருவாவடுதுறை (நந்தி தேவர் தலம்), சூரியனார்கோயில் (நவக்கிரக தலம்), ஆலங்குடி (தட்சிணாமூர்த்தி தலம்) என்று வரிசைப்படுத்துகிறது.


சிற்ப வல்லுனர்களை தன்னகத்தே கொண்ட தலம் என்பது சுவாமிமலையின் தனிச் சிறப்பு. இங்கு வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் (பஞ்சலோகம்) உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றன. செய்குன்று (செயற்கை மலை) ஆகிய சுவாமிமலையை கயிலைமலையின் கொடுமுடி என்கிறார் அருணகிரிநாதர். இதை, 'கொடுமுடியாய் வளர்ந்து புயல் நிலையாய் உயர்ந்த திருமலை' என்ற அவரது பாடல் வரிகளால் அறியலாம்.


அருணகிரிநாதரின் 38 திருப்புகழ்ப் பாடல்கள் பெற்ற தலம் சுவாமிமலை. அவரால், 'திருவேரகம்' என்றும், 'சுவாமிமலை' என்றும் தனித்தனியே குறிப்பிடப்பட்டு, திருப்புகழ் பாடல்கள் பாடப் பெற்றிருந்தாலும் இரண்டும் ஒன்றே என்பதைக் குறிக்கும் பாடல்களும் திருப்புகழில் உண்டு. உதாரணமாக, 'ஏரக வெற்பெனும் அற்புதம் மிக்க சுவாமிமலைப் பதி' என்ற பாடல் வரிகளைச் சொல்லலாம்.



சிலப்பதிகாரத்தில், 'சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்' என்று ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றுகிறார் இளங்கோவடிகள்.


நக்கீரரது 'திருமுருகாற்றுப் படை'யில் 177 முதல் 190-வரையுள்ள பாடல் வரிகள் சுவாமி மலையைக் குறிப்பன.


சுவாமிமலையில் வாழ்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர், 'திருஏரக நவரத்தின மாலை' என்ற நூலை இயற்றியுள்ளார். 'ஒரு தரம் சரவணபவா...' எனத் துவங்கும் நவரத்தின மாலையின் 3-வது பாடல் பிரபலமானது.


ஸ்வாமிநாத ஸ்வாமியைப் போற்றும் சுவாமிநாத ஷட்பதீ ஸ்தோத்ரம் மகிமை வாய்ந்ததாகும். இதை இயற்றியவர் ராம கிருஷ்ணானந்தர் என்ற யதீந்த்ரரின் சீடரான ராமச் சந்திரன் என்ற முருக பக்தர் ஆவார். இதைப் பாராயணம் செய்து, முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும்.


பிரம்மன், பூமாதேவி, இந்திரன், சுகபிரம்ம மகரிஷி, பிரகதீஸ்வரர் என்ற அந்தணர், யக்ஞமித்திரன், ரவிமித்திரன், கார்த்தவீரியன், வசு, சரவணன், சுமதி, சோழ மன்னன் ஒருவன் மற்றும் வரகுண  பாண்டியன் ஆகியோர் இங்கு வந்துஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.


அருணகிரிநாதருக்கு, முருகப் பெருமான் பாத தரிசனம் தந்த திருத்தலம் இது என்பதை,
முதுமறைக்குளரு மா பொருட்டுள்
மொழியே யுரைத்த
தகையா தெனக்குனடி காணவைத்த
தனியேரகத்தின் முருகோனே! என்ற பாடல் வரிகளால் அறியலாம்.

 ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலின் தல புராணம் 'படைப்புக்கு தானே காரணகர்த்தா!' என்ற கர்வத்துடன் திரிந்தார் பிரம்மன். ஒரு முறை அவர், திருக்கயிலைக்கு வந்தார். அங்கிருந்த முருகப் பெரு மானை, ஆணவம் மிகுந்த பிரம்மன் கவனிக்காது சென்றார்.


உடனே பிரம்மனை அழைத்த முருகப் பெருமான், பிரணவத்தின் பொருளைக் கூறுமாறு பிரம்மனிடம் கேட்டார். பொருள் தெரியாத பிரம்மன் திகைக்க... அவருடைய தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன். அத்துடன் படைப்புத் தொழிலையும் தானே ஏற்றார். இறுதியில் சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்மனை விடுவித்ததுடன் தந்தைக்கும் பிரவணப் பொருளை உபதேசித்தார்.
முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவனார், தம் உள்ளத்தில் உவகை பொங்கிட... தன் மகனை 'நீயே சுவாமி!' என்று கூறினாராம். இதனால் இந்தத் தலம் சுவாமிமலை எனும் பெயர் பெற்றது. முருகப் பெருமான் ஸ்வாமிநாத ஸ்வாமி மற்றும் தகப்பன் ஸ்வாமி ஆகிய திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டார்.


ஒரு முறை 'பிருகு' மகரிஷி தீவிர தவத்தில் ஆழ்ந்தார். தனது தவத்துக்குத் தடை ஏற்படுத்து பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தம் சிறப்பை இழப்பார்கள் என்று ஆணையிட்டிருந்தார். அவரது தவ வலிமையால் அகில உலகமும் தகித்தது. தேவர்கள் அனைவரும் சிவனாரை வேண்ட... அவர் பிருகு முனிவரின் தலையில் கை வைத்து தகிப்பை கட்டுப்படுத்தினார். இதனால் தவம் கலைந்தது.


முனிவரது ஆணைப்படி சிவனார் பிரணவ மந்திரத்தை மறந்தார். இதன் பிறகு, பிரம்மனுடன் முருகப் பெருமான் நிகழ்த்திய அருளாடலின்போது, அவரிடமே பிரண வப் பொருள் உபதேசம் பெற்றார் ஈசன். இந்தப் பெருமை சுவாமிமலை திருத்தலத்தையே சாரும். தந்தைக்கு வலக் காதில் பிரணவப் பொருள் உப தேசித்த வேலவன், தன் தாயாகிய பராசக்தியும் அதன் அர்த்தத்தை அறிய வேண்டும் என்பதற்காக சிவனாரின் இடக் காதிலும் உபதேசம் செய்தார் என்கிறது புராணம்.


இந்தத் தலத்தின் தல விருட்சம் நெல்லி மரம். இதன் பின்னணியை சுவாரஸ்யமாக விளக்குகிறது தல புராணம். 'சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகன் தன் மடியில் தவழாமல் பூமாதேவியின் மடியில் (சரவணக் காட்டில்) தவழ நேர்ந்ததே!' என்று கோபம் கொண்ட பார்வதிதேவி, பூமா தேவியை சபித்து விட்டாள். சாப விமோசனம் தேடி அலைந்த பூமாதேவி, இறுதியில் சுவாமிமலை தலத்தை அடைந்து, ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றாள். பிறகு, இங்கிருந்து பிரிய மனமின்றி நெல்லி (தாத்ரி) மரமாகி நின்று, இன்றும் தன் வழிபாட்டைத் தொடர்கிறாள் என்கிறது தல புராணம்.



தல விருட்சத்துக்கு மட்டுமின்றி இங் குள்ள தீர்த்தங்களுக்கும் தனித் தனி சிறப்புகள் உண்டு.
வஜ்ர தீர்த்தம் கீழக் கோயிலான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் கிணறாகக் காணப்படுகிறது இந்தத் தீர்த்தம். இதில் இருந்தே ஸ்வாமி அபிஷேகத்துக்கு நீர் எடுக்கிறார்கள். இதை சுவாமி கூபம், «க்ஷத்திர கூபம் என்றும் அழைப்பர். இந்த நீரை தெளித்துக் கொண்டால் எல்லா வித நோய்களும் பிரம்மஹத்தி தோஷமும் அகலும்;


 இங்கு பாயும் காவிரியின் கிளை நதியையே குமாரதாரை என்பர். எல்லோரும் தன்னிடம் வந்து பாவத்தைக் கழுவிச் செல்ல... அதை, தான் எங்கு போய் போக்குவது என்று கலங்கிய கங்காதேவி, ஈசன் அறிவுரைப்படி இங்கு வந்து, காவிரியுடன் கலந்து குமாரக் கடவுளை வழிபட்டு புனிதம் பெற்றாளாம். இப்படி கங்கை, தாரையாக (நீர்ப் பெருக்காக) வந்து காவிரியில் கலந்ததால், இங்குள்ள காவிரிக்கு குமாரதாரை என்று பெயர்.



சரவண தீர்த்தம் திருக்கோயிலின் வடகிழக்கில் உள்ள தீர்த்தம். ஜமதக்னி முனிவரது சாபத்தால் கரடி உருப் பெற்ற தன் தந்தை உய்வடையும் பொருட்டு... சரவணன் என்ற சிறுவனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இது. அவன் தந்தை இதில் நீராடி,ஸ்வாமி நாதரை வழிபட்டு சுயரூபம் பெற்றாராம்.


நேத்திர தீர்த்தம் (சுவாமி தீர்த்தம்) இது, திருக்கோயிலின் கிழக்கே உள்ளது. கந்தவேளின் வேலாயுதத்தால் உருவாக்கப்பட்டது. இதன் மகிமையை 'சப்த ரிஷி வாக்கியம்' என்ற சோதிட நூல் விவரிக்கிறது.


'பார்க்கக் கூடாததை பார்க்கக் கூடாது!' என்ற பெரியோரது ஆணையை மீறிய சுமதி என்பவன் பார்வை இழந்தான். பிறகு, பரத்வாஜ முனிவரது அறிவுரைப்படி இதில் நீராடி, கண்பார்வை பெற்றான். இதனால் இதற்கு நேத்திர (கண்) தீர்த்தம் என்று பெயர். கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில்,ஸ்வாமிநாத ஸ்வாமி இதில் தீர்த்தவாரி கொண்டருள்கிறார்.


சுக்லபட்ச அஷ்டமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாளில் இதில் நீராடி, ஸ்வாமி நாதரை வழிபட்டால் பிரம்ம ஹத்தி பாபம் நீங்கும்.


சுக்லபட்ச அஷ்டமியும் பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் நீராடி சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு கோ தோஷம் நீங்கும்.


ஆடி மாதம் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நீராடி வழிபட்டால், பிறரது பொருளைக் கவர்ந்ததால் ஏற்படும் பாவங்கள் நீங்கும்.


ஆவணி மாதம் பூரட்டாதி, உத்திரட்டாதி கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி, வழிபடுபவர்கள் உயர் பதவியை அடைவார்கள்.


புரட்டாசி மாதம் அஷ்டமியில் நீராடி வழிபடு பவர்கள், அன்னத்தை வீண் செய்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கப் பெறுவர்.


ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் கூடிய ஞாயிற்றுக் கிழமை அன்று இதில் நீராடி, கோயிலை(கிரி) வலம் வந்து அன்னதானம் செய்தால், தீவினைகள் நீங்கப் பெறுவர்.


கார்த்திகை மாதம் நீராடி வழிபட்டால், ஏழு பிறவி களில் செய்த பாவங்கள் அகலும்.


மார்கழி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய நாளில் நீராடி வழிபட்டால் பெரிய பதவிகள் கிடைக்கும்.


தை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் நீராடி இறை வனை வழிபட்டால் யாகங்கள் செய்த பலன் கிடைக்கும்.


மாசி மாதம் மக நட்சத்திர நாளில் நீராடி இறைவனை வழிபடுவோருக்கு வீடுபேறு கிடைக்கும்.


பங்குனி மாதம் உத்திர நாளில் நீராடி வழிபடுபவர்களுக்கு எல்லா இன்பங்களும் கிடைக்கும்.


பிரம்ம தீர்த்தம் பிரணவப் பொருளை அறிய விரும்பிய பிரம்மன், முருக வழிபாட்டுக்காக ஏற்படுத்திய தீர்த்தம் இது. புராணங்களில் இந்தத் தீர்த்தம் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்காலத்தில் இது எங்குள்ளது என்பது தெரியவில்லை. சிலர், சுவாமிமலையின் ஈசான திக்கில் உள்ள பெரமட்டான் குளத்தை, 'பிரம்ம தீர்த்தம்' என்கிறார்கள். ஆனால், இதற்கு ஆதாரங்கள் இல்லை.


சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருக்கோயில் நில மட்டத்தில் இருந்து, சுமார் 60 அடி உயரத்துடன் திகழும் கட்டுமலை (செயற்கைக் குன்று) மீது அமைந்துள்ளது.


மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மேலும் விஸ்தாரமாக்கப்பட்டது என்கிறார்கள்.
கட்டுமலை மீது எழுந்தருளி உள்ள ஸ்வாமி நாத ஸ்வாமியின் கோயிலை மேலக் கோயில் என்றும், மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்தை கீழக் கோயில் என்றும் அழைப்பர். ஸ்வாமிநாத ஸ்வாமி குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த தலம் ஆதலால் இங்கு, முருகப் பெருமான் கட்டுமலையின் மேலும், ஈசன் அடிவாரத்திலும் குடிகொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம்.


இந்தக் கோயிலுக்கு ஏழு கோபுரங்கள் இருந்த தாகச் சொல்கிறது தலபுராணம். யாத்ரீகர்கள் சுவாமி மலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வ பெண்கள் இருவரை வணங்கி வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.


கட்டுமலையில் ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதானத்தை அடைய 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைவதாக திருக்குடந்தை புராணம் குறிப்பிடுகிறது. இந்தப் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தேங்காய் உடைத்து வழிபட்ட பிறகே படியேற வேண்டும்.


இந்தக் கோயிலுக்கு மூன்று திருவாயில்கள் உண்டு. கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் மொட் டைக் கோபுரங்கள் அணி செய்கின்றன. பிரதான ராஜ கோபுரம் தெற்கு வாயிலில் அமைந்துள்ளது. 5 நிலைகளுடன் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது இது.


மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது கோயில். கட்டுமலையின் அடிவாரத்தில் உள்ள 3-ஆம் பிராகாரத்தை வலம் வந்து 28 படிகள் ஏறிச் சென்றால் 2-ஆம் பிராகாரத்தை அடையலாம். அங்கிருந்து 32 படிகள் ஏறிச் சென்று கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரத்தை அடையலாம்.


தெற்குக் கோபுர வாயில் முகப்பு மண்டபத்தின் மேற்கே திருக்கோயில் அலுவலகம். கோபுர வாயிலில் நுழைந்தால் இடப் புறம் விசாலமான திருமண மண்டபம். இதன் மேற்புறம் திருக்கோயில் அலுவலகம் உள்ளது. திருமண மண்டபத்தைக் கடந்து சென்றால் பெரிய சுற்று மண்டபம். அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் சந்நிதி (கீழக் கோயில்) தனிக் கோயிலாக திகழ்கிறது.


மதுரையை ஆட்சி செய்த வரகுண பாண்டியன், பிரம்மஹத்தி தோஷத்தால் அல்லலுற்றான். நிவர்த்தி வேண்டி அவன், திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்தில் தங்கி இளைப்பாறினான். தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடாமல் உண்பதில்லை என்று விரதம் கடைப் பிடித்த வரகுண பாண்டியன், இங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஸ்தாபித்து வழிபட்டானாம்.


மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வரும்போது,தட்சிணாமூர்த்தி, விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்கை, சண்டீகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களை தரிசிக்கலாம்.


Swamimalai


இந்தக் கோயிலை தரிசித்த பிறகு (28) படிகள் ஏறி 2-ஆம் பிராகாரத்தை அடைய வேண்டும். இதன் கிழக்குச் சுற்றில் முருகப் பெருமான், சிவபெருமானுக்குப் பிரணவ உபதேசம் செய்வதை விளக்கும் அழகிய சுதைச் சிற்பம் உள்ளது. சிவ பெருமானின் மடி மீது சுவாமிநாதன் எழுந்தருளி யிருக்க... இடப் பக்கத்தில் அகத்தியர், பிரம்மன், வீர பாகு ஆகியோரும், வலப் பக்கத்தில் திருமால், நாரதர் ஆகியோரும் சிவபெருமானின் திருவடியருகில் நந்தியம் பெருமானும் உள்ளனர்.



2-ஆம் பிராகாரத்தின் தெற்கு சுற்றுச் சுவரில், கந்தரனுபூதி இடம்பெற்றுள்ளது. மேலும் அருணகிரி நாதரது 'திருஎழு கூற்றிருக்கை' பாடலையும் தேர் வடிவ சித்திரகவியாக சலவைக்கல்லில் பொறித்து வைத்துள்ளனர். இதை ரதபந்தம் என்றும் கூறுவர்..


2-ஆம் பிராகாரத்தில் இருந்து 32 படிகள் ஏறிச் சென்றால் உச்சி (முதல்) பிராகாரம். இங்கு முதலில் தல விநாயகர் தெற்கு நோக்கி அமைந்துள்ளார். கொங்கு நாட்டில் இருந்து இங்கு வந்த பிறவிக் குருடன் ஒருவன், உணவில்லாமல் பட்டினி கிடந்து இந்த விநாயகரை வழிபட்டு, பார்வை பெற்றானாம். இதனால், இவருக்கு நேத்திர விநாயகர் என்று பெயர் (நேத்திரம்- கண்).


கருவறை மூலவர் தரிசனத்துக்கு முன் மகா மண்டபம். இதன் வாயிலின் வலப் புறத்தில் இடும்பனின் உருவமிருக்க, இடப்புறத்தில் அகத்தியர், அருணகிரியார் ஆகியோர் வடிவங்கள் உள்ளன.


இந்த மண்டபத்தில் உள்ள கருங்கல் தூண் மற்றும் சிற்ப வேலைப்பாடுகளும், வளைவான கொடுங்கைகளும், கல்லால் ஆன தொங்கும் தாமரை மொட்டும், யாளி உருவங்களும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. மகா மண்டபத்தில் தங்கக் கொடி மரத்தையும் தரிசிக்கலாம்.


மற்ற படைவீடுகளில் இல்லாத, சுவாமி மலையின் தனி சிறப்பம்சம்... இங்குள்ள பாகுலேய சுப்பிரமணியர் திருமேனி! மகா மண்டபத்தின் வடக்குச் சுவர் பக்கம் தெற்கு நோக்கி காட்சி தருகிறார் இவர். இரண்டு திருக்கரங்களை நீட்டியாவாறும், மேலும் இரு கரங்களை மேல் நோக்கி திகழ... நடராஜப் பெருமானைப் போன்று காட்சி தரும் இவரை சபாபதி என்றும் அழைப்பர். தெய்வானை யுடன் திகழும் இவர், மார்கழி மாதம் திருவாதிரை உற்சவத்தின்போது மட்டுமே வீதியுலா வருகிறார்.
உச்சி பிராகாரமாகிய முதல் பிராகாரத்தில் மகா மண்டபம் தவிர... வலத்தின்போது, பாலசுப்பிரமணியர், திருமகள், கலைமகள், அருணகிரிநாதர், ஸ்கந்த சண்டீசர், விசாலாட்சி- விஸ்வநாதர், நடராஜர், சண்முகர், பைரவர், சாஸ்தா, சூரியன், நவவீரர்கள், அகத்தியர், இடும்பன், கார்த்தவீரியன் முதலானோரையும் உற்சவ விக்கிரகங்களையும் தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் வள்ளி- தெய்வானை தேவியருக்கு தனிச் சந்நிதிகள் இல்லை.


இந்த பிராகாரத்தில், தண்டபாணி மூர்த்தியின் விக்கிரகம் ஒன்றையும் தரிசிக்கலாம். இவரின் மேனியில் இடது பாகம் பின்னம் அடைந்துள்ளது. அந்நியர்கள் படையெடுப்பின்போது, ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலைப் பாதுகாக்கும் பொருட்டு, கோயிலை மறைத்து பெரும் சுவர் ஒன்று எழுப்பி சிறிய சந்நிதி ஒன்றில், மயில் வாகனத்துடன் கூடிய இந்த தண்டபாணியை பிரதிஷ்டை செய்தார்கள்.


படையெடுத்து வந்த அந்நியர்கள் இதுதான் கோயில் என்று எண்ணி இதை மட்டுமே தாக்கினர். இதனால் தண்டபாணியின் திருமேனி பின்னம் அடைந்தது. பின்னம் அடைந்த உருவத்தை கோயிலில் வைக்கக் கூடாது என்றாலும், அழகான இந்த மூர்த்தியை அகற்ற விருப்பமில்லாமல் இந்தக் கோயிலிலேயே இடம்பெறச் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.


ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. கருவறையில், அகரம்- உகரம்- மகரம்- நாதம்- பிந்து... என ஐவகையான ஓங்காரத்தின் உருவினனாக, மெய்ஞான குருவாக அருள்பாலிக்கிறார் ஸ்வாமிநாத ஸ்வாமி. இவர், தம் இடது திருக்கரத்தை இடுப்பில் அமர்த்தி, வலக் கரத்தில்- திருத்தண்டம் (தண்டாயுதம்), தலையில்- ஊர்த்துவ சிகாமுடி (கிரீடம்), திருமார்பில்- முப்புரி நூல் மற்றும் ருத்திராட்சம் ஆகியன திகழ (சுமார் 6 அடி உயரத்துடன்) காட்சி தருகிறார்.


Swamimalai


ஸ்வாமிநாத ஸ்வாமியை உன்னிப்பாகக் கவனித்தால், அவர் எழுந்தருளியுள்ள பீடம், சிவ லிங்கத்தின் ஆவுடையாராகவும் ஸ்வாமிநாதர், லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம். இது, 'ஈசனே முருகன்; முருகனே ஈசன்!' என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

செவ்வாய்க் கிழமைகளில் மாலை வேளையில், நான்கு சரங்கள் கொண்ட சகஸ்ரார மாலை, வைரத்தா லான ஷட்கோணப் பதக்கம் முதலியனவும், வியாழக் கிழமைகளில் தங்கக் கவசம், வைர வேல் மற்றும் பல அணிகலன்களும் அணிவிக்கப் பெற்று காட்சி தரும் ஸ்வாமியைக் காண கண்கோடி வேண்டும்!


ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத் தினராகவும், சந்தன அபிஷேகத்தின்போது பால குமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் ஸ்வாமிநாதர்.
பழநியில் பால பருவத்தினனாகக் காட்சி தரும் முருகப் பெருமான் இந்தத் தலத்தில் இளங்காளை (வாலிப) பருவத்தினனாகக் காட்சி தருவதாக ஐதீகம்.


இவருக்கு ஸ்வாமிநாதன், தகப்பன்சாமி, சுவாமி, குருநாதன், புத்ரக குருக்கள் ஆகிய திருநாமங்களும் உண்டு. வடமொழியில் ஞானஸ்கந்தன் என்பர். இவரின் கொடி- சேவற்கொடி; ஆயுதம்- வேல்; மாலை- நீபம்; வாகனம் யானை!


அரிகேசன் எனும் அரக்கனை அழிக்க எண்ணிய இந்திரன், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமிநாதரை வழிபட்டு வல்லமை பெற்று அசுரனை அழித்தான். இதற்கு நன்றிக்கடனாக ஐராவதம் எனும் வெள்ளை யானையை ஸ்வாமிநாதருக்கு வாகனமாக அளித் தான். எனவே, இந்தத் தலத்தில், கருவறைக்கு முன் மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் காட்சி தருகிறது.


மூலவரை பூஜிக்கும்போது, 'நமோ குமாராய நம' என்று மந்திரம் உச்சாடனம் செய்யப்படுகிறது. இந்த மந்திரத்தை முதன் முதலில் ஓதி, முருகனை குருவாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான். இதை
'நாதாகுமரா நம' என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் 
பாதா! குறமின் பதசேகரனே' என்ற அருணகிரி நாதரது கந்தரனுபூதி பாடல், விளக்குகிறது.     
 

உற்சவர் திருநாமம் சந்திரசேகரர். இவரின் மற்றொரு பெயர் சேனாபதி. திருவிழாவின்போது 10-ஆம் நாளன்று தெய்வானையுடன் தீர்த்தம் தர எழுந்தருள்கிறார். இந்த மூர்த்தியை 'சேனாபதி' என்றும் அழைப்பர். இங்குள்ள ஆறுமுகப் பெருமான் தேவியர் இருவருடன் காட்சி தருகிறார்.


சிவபெருமான் 'ஞானோபதேசம்' பெற்ற திருத் தலம் ஆதலால் இங்கு 'யக்ஞோபவீதம்' நடத்துவது சிறப்பு என்கிறார்கள்.


ஸ்வாமிநாத ஸ்வாமி புத்திர பாக்கியம் அருள்பவர் ஆதலால், இங்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் பக்தர்கள் ஏராளம்!


திருவலஞ்சுழி பிள்ளையாரை வழிபட்ட பிறகே சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட வேண்டும் என்பது மரபு.


தமிழகத்தின் சுவாமிமலை திருத்தலத்தைப் போற்றும் விதம் புதுடில்லியில் உத்தர சுவாமிமலையும், அமெரிக்காவில் ஒரு ஸ்வாமிநாதன் ஆலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆலயத்தில் பிரம்மா வழிபட்ட சிவலிங்கம் முன்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரணவப் பொருள் உபதேசம் பெற வேண்டி இங்கு வந்த பிரம்மன் ஸ்தாபித்த லிங்கம் அது என்கிறார்கள்.


இங்கு காரணாகமம் முறைப்படி யும் குமாரதந்திர முறைப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன. ஆதி சைவ மரபினரே பூஜைகள் செய்து வருகிறார்கள்.


ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலின் திருவிழாக்கள் சித்திரை மாதம் - பிரம்மோற்சவம் (10 நாட்கள்), வைகாசி - வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி- பவித்ரோற்சவம் (10 நாட்கள்), புரட்டாசி- நவராத்திரி விழா (10 நாட்கள்), ஐப்பசி - கந்த சஷ்டிப் பெருவிழா (10 நாட்கள்), கார்த்திகை- திருக்கார்த்திகைப் பெருவிழா (10 நாட்கள்), மார்கழி- திருவாதிரைத் திருநாள்; தனுர்மாத பூஜை (10 நாட்கள்) தை- தைப்பூசப் பெருவிழா, பங்குனி-வள்ளிதேவி திருக்கல்யாண திருவிழா.


இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் துவஜாரோஹணத்துடன் (கொடியேற்றத்துடன்) நடைபெறுகின்றன.


இங்கு, வருடம்தோறும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) நடைபெறும் திருப்படி திருவிழாவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவின்போது, ஆன்மிக அடியார்கள் இங்கு ஆன்மிகக் கூட்டங்கள் நிகழ்த்தி விழாவை சிறப்பிக்கிறார்கள்.


பிரார்த்தனையாக நாள்தோறும் காவடி கள், பாற்குடங்கள் எடுத்து வந்து ஸ்வாமிநாத ஸ்வாமியை அபிஷேகித்து வழிபடுகிறார்கள். நேர்த்திக் கடன் செய்தவர்கள் உரிய கட்டணம் கட்டி தங்கத் தேர் இழுப்பதும் உண்டு.


இந்தக் கோயிலில், அரசு ஆணைப்படி 'அன்பு இல்லம்' ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கு உணவு- உடை- இருப்பிட வசதிகள் இலவசமாகத் தருவதுடன், அவர்கள் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தவிர, சுவாமி மலையின் தெருக்களைப் பராமரித்தல், மின் வசதி செய்தல் ஆகிய பணிகளிலும் திருக்கோயிலின் பங்கு, போற்றுதலுக்கு உரியதாகும்.


ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருவருள் பெற்ற அடியார்கள் ஏராளம். யக்ஞமித்திரன் என்பவன் தன் மகன் பேச்சுத் திறன் பெறும் பொருட்டு, சிவனாரின் ஆணைப்படி இங்கு வந்து, தினமும் குமாரதாரையில் நீராடி (தொடர்ந்து 12 ஆண்டுகள்) முருகப் பெருமானை வழிபட்டானாம். இதன் பலனாக அவனின் மகன் பேச்சாற்றலுடன் ஞானமும் கைவரப் பெற்று சிறந்த கல்விமானாகத் திகழ்ந்தானாம்.



பிரகதகலர் (பிரகத்கலர் என்றும் கூறுவர்) என்பவர் பெரும் ஞானி. ஒரு முறை இவர், இறைவனை நேரில் கண்டு தரிசிக்கப் போவதாகக் கூறினார். 'இது இயலாத காரியம்' என்று எல்லோரும் பரிகாசம் செய்தனர். ஆனால், பிரகதகலர் கலங்கவில்லை.


தனது நோக்கம் நிறைவேறும் பொருட்டு, தல யாத்திரை புறப்பட்டார். பல தலங்களுக்குச் சென்று தரிசித்தும் எண்ணம் ஈடேறாமல் போகவே, சுவாமிமலை திருத்தலத்துக்குப் போய்ப் பார்ப்போம் எனப் புறப்பட்டார். இந்த ஊரின் எல்லைக்குள் வந்ததும் அவருக்கு ஒரு புது உணர்வு ஏற்பட்டு முருகப் பெருமான் மயில் வாகனத்தில் புறக்கண்களுக்குக் காட்சியளிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். அதனால், அவர் இங்கு வஜ்ர தீர்த்தக் கரையிலேயே மடம் அமைத்து தங்கி விட்டார்.


ஒரு நாள் இவரைச் சந்தித்த அந்தணர் ஒருவர், தன்னைப் பற்றியுள்ள பிரமஹத்தி தோஷம் நீங்க வழி கூறுமாறு வேண்டினார். அவரிடம், ''முற்பிறவி களில் செய்த புண்ணியத்தால், இந்தத் தலத்துக்கு வந்துள்ளீர். இங்கே உமக்கு நன்மையே ஏற்படும்!'' என்ற பிரகதகலர், இந்தத் தலம் பற்றிய புராணச் சம்பவம் ஒன்றையும் விளக்கினார் ''ஆடைகளைத் திருடி விற்றுப் பிழைக்கும் கொடியவன் ஒருவன், தனது பாவத்தின் காரணமாக வெண்குஷ்ட நோயால் அவதியுற்றான்.


ஒரு நாள் உணவு கிடைக்காமல் அலைந்து வருந்தியவன் சுவாமி மலையை அடைந்தான். இரவில் ஒரு வீட்டுக்குள் புகுந்தவன், அங்கிருந்த ஆடை- ஆபரணங்களைத் திருட ஆரம்பித்தான். ஆனால், சத்தம் கேட்டு விழித்த அந்த வீட்டுக்காரர்கள் அவனை விரட்ட ஆரம்பித்தனர். தப்பியோடிய திருடன், இங்குள்ள வஜ்ர தீர்த்தம் அருகில் வரும்போது கால்தவறி உள்ளே விழுந்து விட்டான். இரவு முழுவதும் அந்தக் கிணற்றுக்குள்ளேயே இருக்க நேரிட்டது.


விடிந்ததும் ஊர்க்காரர்கள் அவனை வெளியே எடுத்தனர். அப்போது, வெண் குஷ்டம் நீங்கி அவன் உடல் பொலிவுடன் திகழ்ந்தது. அவன் மகிழ்ந்தான். வஜ்ர தீர்த்தத்தின் பெருமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினர். தாங்களும் வஜ்ர தீர்த்தத்தில் மூழ்கி ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நலம் பெறலாம்!'' என்றார். அதன்படி வஜ்ர தீர்த்தத்தில் நீராடி ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றார் அந்தணர்.


மிகச் சிறந்த சங்கீத மேதை துரைமாரியப்ப சுவாமிகள். இவர் ஒரு முறை, தனக்கு பாட்டுப் புலமை வாய்க்கவில்லையே என்று வருந்தி, ஸ்வாமிநாத ஸ்வாமிடம் முறையிட்டதுடன், சந்நிதியிலேயே தனது நாவை அறுத்துக் கொண்டாராம். பிறகு, முருகப் பெருமானின் அருளால் துரை மாரியப்ப சுவாமிகளின் அறுபட்ட நாக்கு வளர்ந்ததுடன், அவர் கவிபாடும் திறனும் பெற்றாராம்!


இந்த ஆலய ஓதுவராக இருந்தவர் ஏ.என். பஞ்சநாத தேசிகர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே நேரத்தில் ப்ளு, நிமோனியா ஜுரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார் இவர்.


மருத்துவர்கள் கைவிட்டு விட்ட நிலையில், ஓர் இரவில் கோயிலில் தங்கி நிந்தா ஸ்துதி செய்ய ஆரம்பித்ததார். சற்று நேரத்தில் தூக்கம் மேலிட உறக்கத்தில் ஆழ்ந்தார் ஓதுவார்.


அதிகாலையில், எவரோ ஒருவர் தன் முதுகில் மூன்று முறை தடவுவதாக உணர்ந்த ஓதுவார் கண் விழித்தார். அப்போது அழகிய குழந்தை ஒன்று அங்கிருந்து விலகி ஓடுவதைக் கண்டு மெய்சிலிர்த்தார்!
அத்துடன் அவரது நோய் முற்றிலும் நீங்கி நலம் அடைந்தாராம். (இந்தத் தகவலை சுவாமிமலை தேவஸ்தானம் வெளியிட்டிருக்கும் தல வரலாறு புத்த கத்தில் இருந்து அறிய முடிகிறது)


வள்ளிமலை சுவாமிகள் ஒரு முறை, 'அருணகிரிநாதர் முக்தி பெற்ற நாள் எது?' என்று ஸ்வாமிநாத ஸ்வாமியை வேண்ட... 'கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம்!' என்று அசரீரியாக பதிலளித்தாராம் ஸ்வாமிநாத ஸ்வாமி!


சுவாமிநாதனை வணங்கி சுபிட்ஷம் பெறுவோம்.











திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர்

Thiruchendur
திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர்

வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை- என்று புறநானூறும்,


சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்- என்று சிலப்பதிகாரமும் திருச்செந்தூரைப் போற்றுகின்றன.


கடல் அலைகள் வருடுவதால் திருச்சீரலைவாய் என்றும், முருகப்பெருமான் சூரபதுமனை வென்ற தலம் ஆதலால், ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கபாடபுரம், அலை வாய், கந்தமாதன மலை, திருச்செந்தில் என்ற வேறு பெயர்களும் உண்டு.


‘சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சூர சம்ஹாரம்’ என்பது பழமொழி. தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மன் மீது படையெடுத்தார். வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்து விட்டு, வீரபாகுத் தேவர் மற்றும் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கினார். அவர் அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார்.


அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். வியாழ பகவானால் பூஜிவால்மீகி ராமாயணத்தில் ‘கபாடபுரம்’ குறிப்பிடப்பட்டிருப்பதால், ராமாயண காலத்துக்கு முன்பே திருச்செந்தூர் புகழ் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.க்கப்பட்ட காரணத்தால் இது வியாழ க்ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது.
Thiruchendur
ஓரெழுத்தந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, நிரோட்டக யமக அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் மாதாந்தக் கலித்துறை, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர்க்கோவை, திருச்செந்தூர் ஷண்முக சதகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம், தசாங்க வகுப்பு, திருச்செந்தூர் தல புராணம், வழி நடைப்பதம், திருச்செந்தில் பதிகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி, திருச்செந்தில் சந்த விருத்தம் என்று திருச்செந்தூர் பற்றிய நூல்கள் ஏராளம்.


Thiruchendur


1.செந்திலாண்டவன் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு- தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துட னும் அமைந்துள்ளது. இதன் பிரதான வாயில் தெற்கு நோக்கியது.



2.கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது.


3.மேற்கு ராஜ கோபுரம், தெய்வானை திருமணம் நடைபெறும்போது மட்டும் திறக்கப்படும்.


4.முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வயானைக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.


5.மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீசுவரர், திருவாதபுரீசுவரர், நாகநாத சோமேசுவரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர இங்கு ஏழுமலையானுக்கும், சந்தான கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.


6.இரண்டாம் பிராகாரத்தின் மேற்கில் ஸித்தி விநாயகர், சகஸ்ரலிங்கம், ஆன்மநாதர், மனோன் மணி அம்மை, பானுகேசுவரர், சோமசுந்தரர், மீனாட்சியம்மை, திருமூலநாதர், திருக்காளத்தி நாதர் (வாயு லிங்கம்), உமா மகேஸ்வரி, அருணாசலேசுவரர் (தேயு லிங்கம்), உண்ணாமுலையம்மை, ஜம்புகேசுவரர் (அப்பு லிங்கம்), வன்மீக நாதர் (பிருதிவி லிங்கம்), அருணகிரிநாதர், வல்லப கணபதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இதன் தென்பகுதியில், முதல் பிராகாரம் செல்லும் வாசலில் வீரகேசரியும், வீர மார்த்தாண்டரும் காவல் புரிகின்றனர். இங்கு, நவக்கிரகங்கள் கிடையாது. ஆனால், சனி பகவானுக்குத் தனிச் சந்நிதி உண்டு


7.இந்தத் தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.


8.ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை.


9.கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்கு கிறார் என்பதை விளக்குவதற்காகவே!


Thiruchendur


10.முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப் பெறும். அஷ்ட லிங்கங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.



11.திருச்செந்தூரில் முருகப் பெருமான் ஐம்பெரும் தெய்வமாக வணங்கப்படுகிறார்.


அவருக்கு மஞ்சள் பட்டாடை- மஞ்சள் மலர் மாலை அணிவித்து நான்முகனாகவும்,


நீல மலர்கள்- நீல வண்ண ஆடைகளை அணிவித்து திருமாலாகவும்,


சிவப்பு நிற ஆடைகள்- சிவப்பு மலர்களை அணிவித்து அரனாகவும்,


வெண்பட்டு- வெண் மலர்களால் அலங்கரித்து மகேசனாகவும்,


பச்சை சார்த்தி சதாசிவனாகவும் போற்றப் படுகிறார்.


இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடை பெறுகின்றன. மார்கழி மாதம் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.


12.மூலவருக்கான நைவேத் தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிர சம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.


13.மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

14.மூலவரின் உற்சவர்- அலைவாய் உகந்த பெருமான். ஐம்பொன் திருமேனி. நவராத்திரி நாள்களில்- பாரிவேட்டை, சிறுத்தொண்டர் திருநாள், தைப் புனர்பூசம், பூசம் ஆகிய நாட்களில் இவர் எழுந்தருளுகிறார். இவரை தோழன்சாமி என்பர். வள்ளி- தெய்வானை இவருக்கு அருகில் உள்ளனர்.
திருவிழாக்களின்போது சந்திகளில் உலா வருவதால், இவர் சந்திச்சாமி என்றும் அழைக்கப்படுகிறார்.


15.இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள்.


16.உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடை பெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.


17.திருவிழாவின்போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராகக் காட்சி தருகிறார் செந்திலாண்டவர்.


18.ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.


19.ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களுக்கும் நடை பெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.


20. முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பர்.


21.அசுரனை வதம் செய்ததால், திருத்தணி மற்றும் பழநி தலங்களில் உள்ளது போல் க்ஷத்திரிய வடிவில் முருகன் இங்கு காட்சி தருகிறார். எனவே, மேற்குறிப்பிட்ட தலங்களில் தோஷ பரிகாரமாக நடைபெறும் ‘சேவல் விடும்’ நேர்த்திக் கடன் இங்கும் நடைபெறுகிறது.


22. தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங் களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. சூரபதுமன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.


23.மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய் வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர்!


24.காயத்ரி மந்திரத்தின் எழுத்துகளே இங்கு 24 தீர்த்தங் களாக விளங்குகின்றன என்பது ஐதீகம்.


25.முருகன் கோயிலுக்கு அருகே, கடற்கரையையட்டி இருக்கும் வள்ளிக் குகை தரிசிக்க வேண்டிய ஒன்று.


26.முருகப்பெருமான், படை வீரர்களின் தாகம் தணிக்க வேலாயுதத்தால் நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தியதாக ‘கந்த புராணம்’ கூறுகிறது. அதை ‘ஸ்கந்த புஷ்கரணி’ என்பர். ஒரு சதுர அடி பரப்பளவில் திகழ்கிறது. ஒரு படியைக் கொண்டு முகக்கும் அளவே நீர் இருப்பதால், ஒருபோதும் வற்றாத இதற்கு நாழிக் கிணறு எனப் பெயர். இதில் நீராடிய பிறகே கந்தபெருமானை தரிசிக்க வேண்டும்.


Thiruchendur


27.போர் நடந்த இடம் ஆதலால், செந்தி லாண்டவன் கோயில் அருகில் உள்ள கடல் நீர் சற்றே சிவந்து ரத்த நிறமாயிருக்கிறது.



28.மார்கழித் திருவாதிரை- திருமுழுக்கின் போது அபிஷேகத்துக்குப் பிறகு திருச்செந்தூர் நடராஜருக்கு முருகப் பெருமானின் அணி கலன்கள் அணிவிக்கப்படுகின்றன.


29.உச்சிக் காலம் முடிந்ததும், மேளதாளத்துடன் கடற்கரைக்குச் சென்று கங்கைக்கு சுத்த அன்னம் படைக்கப்படுகிறது.


30.மாமரமாக மாறிய சூரபதுமனை வேலாயுதத்தால் முருகப் பெருமான் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. அதனால் இங்கு மாமரங்கள் வளர்வதில்லை.


31..இங்குள்ள சண்டிகேஸ்வரருக்கு புதிய மாலைகளை சாத்த மாட்டார்கள். மூலவருக்கு சாத்திக் கழித்த மாலையையே சண்டி கேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.


32.மூலவர் சந்நிதி இரவில் அடைக்கப்பட்டதும் இங்கு அமைந்துள்ள பைரவர் சந்நிதியில் சாவியை வைக்கிறார்கள். இவரது சந்நிதியில் உள்ள விளக்கில் இருந்து வேறொரு விளக்கில் அக்னியை ஏற்றிச் சென்றுதான் மடைப்பள்ளி அடுப்பைப் பற்ற வைக்கிறார்கள். இரவில் இவருக்கு வடை நைவேத்தியம் செய்யப்படுகிறது.


Thiruchendur


33.முருகனின் வாகனமான மயிலுக்கு பொரி படைக்கிறார்கள்.

34.ஸ்ரீ செந்தில் ஆண்டவனை தரிசிக்கச் செல்லும் ஆண் பக்தர்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது மரபு. இங்குள்ள அர்ச்சகர்கள் ‘திரிசுதந்திரர்கள்’ எனப்படுவர். இவர்கள் கேரள தேச ஆசாரப்படி பூஜிக்கிறார்கள்.


35.தவத்திரு ஆறுமுக சுவாமிகள், தவத்திரு மௌன சுவாமிகள், தவத்திரு காசி சுவாமிகள் ஆகியோர் இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்துள் ளனர். கோயிலுக்கு தெற்கில் (சஷ்டி மேட்டுத் திடலுக்கு அருகில்) இவர்களது ஜீவ சமாதிகள் உள்ளன. வள்ளி சந்நிதிக்கு வலப்புறம் உள்ள தூண்களில் இவர்களின் சிலைகளைக் காணலாம். இவை மூலஸ்தானத்தை நோக்கியவாறு உள்ளன.


36.செந்தூரில் முருகப்பெருமான் முதலில் தங்கிய இடம் சிங்க கொழுந்தீசர் என்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் உற்சவங்கள் கிடையாது. முருகன் தந்தையைப் பார்ப்பதற்காக இங்கு எழுந்தருள்கிறார்.


37.கி.பி. 1670-ஆம் ஆண்டில் காயாமொழி பகுதியை அரசாண்ட பஞ்சாதித்தன் என்ற அரசன் செந்திலாண்டவனுக்கு தேர் செய்து அர்ப்பணித்துள்ளான்.


38.‘இங்கிருந்து நீவிர் அருள்பாலிக்கும் வரை கடலால் கோயிலுக்குத் தீங்கு நேராது!’ என்பது வருண பகவானின் சத்திய வாக்கு. சுனாமி தமிழ்நாட்டைத் தாக்கியபோது திருச்செந்தூருக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை என்பதே இதற்குச் சான்று.


39.பிரிட்டிஷ்- கிழக்கிந்தியக் கம்பெனியின் அதி காரி ஒருவர் 59 காசுகளுள்ள தங்கக் காசு மாலையை முருகனுக்கு அளித்துள்ளார். தவிர, 100 அமெரிக்கன் டாலர்களால் செய்யப்பெற்ற காசு மாலையும் இங்கு உள்ளது. சிறப்பு நாட்களில் மட்டுமே இந்த ஆபரணங்களை முருகனுக்கு அணிவிக்கிறார்கள்.


40.ஸ்ரீசண்முகரின் உயரத்துக்கு ஏற்ற வைர வேல் ஒன்று இங்குள்ளது. இது 100 பவுன் தங்கம், 40 காரட் வைரம் ஆகியவற்றால் செய்யப்பட்டது. நடுவில் பெரிய பச்சைக் கல் கொண்டது. கி.பி.1917-ல் கொத்தமங்கல் சி. ராம்ஜி குடும்பத்தாரால் அர்ப்பணிக்கப்பட்டது.


41.திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தால் ஆன அரிய பொருட்கள் உள்ளன. இறைவனுக்கு அமுது படைக்கும்போது கீழே விழும் பருக்கைகளை எடுக்க தங்க ஊசி ஒன்று பயன்படுத்தப் படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது குடத்துக்குள் இடப்படும் பொருட்களுள் தங்க மீன்களும், தங்கத் தாமரைப் பூக்களும் இடம்பெறுகின்றன. பூஜை முடிந்ததும் தங்கச் சாமரம் கொண்டு கவரி வீசுவர். மாசித் திருவிழாவின் 8-ஆம் நாளன்று ஸ்ரீசண்முகருக்கு அபிஷேகிக்கும்போது தங்கப் பிடியுடன் கூடிய காண்டாமிருகக் கொம்பின் வழியாக நீர் ஊற்றுகிறார்கள். இவை தவிர தங்க ஆமை ஒன்றும், கும்பாபிஷேகத்தின்போது தலைமைப் பட்டர் அணிந்துகொள்ள நவரத்தின மோதிரங்களும் உள்ளன.


42.தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார். சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.


43.கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின்போது கடல்நீர் உள் வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண் ணாடிக்கு அபிஷேகம் நடை பெறும். இதை ‘சாயாபிஷேகம்’ (சாயா- நிழல்) என்பர்.


44.திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பது சிறப்பு.இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோரது தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.


Thiruchendur


45.ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாளன்று தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன் புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சியளிப்பார்.



46.விசாகப் பெருவிழா பத்து நாள் வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது கோயிலின் எதிரிலுள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றி நான்கு புறமும் அகழி போல் கட்டி அதில் நீர் நிரப்பி வைத்திருப்பர். விழாவின் முதல் நாள் உச்சிகால பூஜை முடிந்ததும் முருகப் பெருமான் மாலை வரை இந்த வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார். இங்கு ஆராதனைகள் முடிந்ததும், சப்பரத்தில் ஏறி 11 தடவை வலம் வந்து, முருகன் கோயிலுக்குள் போவார்.


47. 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிக மூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவர். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார். தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்!


ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், ‘‘காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி!’’ என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது. பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் அடிக்கடி வழுக்கி விழுந்த சம்பவங்களாலும் கிழக்கு முகமாக சுப்பிர மணியர் சந்நிதிக்கு பின்புறம் அமைந்து விட்டதாலும் ராஜ கோபுர வாயில் மூடப்பட்டு விட்டதாம்.


Thiruchendur


48. ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற் கொண்டபோது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் அபிசார யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார். இங்கு மகா மண்டபத்தில் ஆதிசங்கரரது சிலை உள்ளது.



49.இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் இடம் பெற்றுள்ளது.


50.திருச்செந்தூர் கோயில் மடைப் பள்ளியில் வேலை பார்த்தவன் வென்றிமாலை. முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான்! அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய ஓர் அசரீரி, ‘செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்!’ என்றது. அப்படியே செய்தான். அவனிடம், ‘‘சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகன் கட்டளையிட்டிருக்கிறார்!’’ என்றார் சாஸ்திரியார்.


பிறகு சாஸ்திரியார் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூ ரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை. எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு ஒரு முருக பக்தரிடம் சிக்கியது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது.


திருப்பம் தரும் திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவரை போற்றுவோம்.