Monday 30 January 2017

நெமிலி பாலா திரிபுரசுந்தரி!



சுண்டு விரல் அளவு அம்மன், குசஸ்தலை ஆற்றில் தோன்றியவள், அடியாரின் வீட்டையே ஆலயமாக்கிக் கொண்ட அன்னை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குபவள், வேலூர் மாவட்டம் நெமிலியில் எழுந்தருளியுள்ள பாலா திரிபுரசுந்தரி!



உலகைக் காக்கும் மாதாவின் செல்ல மகளே பாலா. ஒன்பது வயதான இவள் ஆற்றலில் அன்னைக்கு நிகரானவர். அன்னை வித்யா என்றால், இவள் வித்யாபாலா. ஸ்ரீலலிதோ பாக்யானம் என்ற புராணத்தில் இவளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.



அன்னை லலிதா தேவியோடு போரிட்டு வெல்ல முடியாத பண்டாசுரன், தனது முப்பது மைந்தர்களை போருக்கு அனுப்பினான். லலிதாவின் மகளான பாலா தன் அன்னை லலிதாவிடம் கலசங்களையும், ஆயுதங்களையும் பெற்று ரதம் ஏறி போருக்கு புறப்பட்டாள். போரில் பண்டாசுரன் மகன்களுடன் போரிட்டு அனைவரையும் அழித்தாள். இதன்பின் பாலா, அன்னை லலிதாவோடு ஐக்கியமானாள் என்கிறது புராணம்.

அதன்பின் இந்தக் கலியுகத்தில் மீண்டும் கண்கண்ட தெய்வமாகத் தோன்றினாள் பாலா.



வேலூர் மாவட்டத்தில் உள்ள நெமிலியில், அம்மன் உபாசகரான சுப்பிரமணியர் என்பவர் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அவரது கனவில் தோன்றிய அன்னை பாலா, ‘உன்னோடு வாழும் அன்னை ராஜராஜேஸ்வரியின் கட்டளைக்கு இணங்க, ஆற்றில் மிதந்து குழந்தை பாலாவாக உன் ஊருக்கு வருகிறேன். என்னை உன் வீட்டில் வைத்து வழிபாடு செய்!’ என்றாள்.



கனவு கலைந்ததும் அந்த நடு இரவிலேயே கண் விழித்த சுப்பிரமணியர், உடனடியாக தன் வீட்டில் அருகில் ஓடும் குசஸ்தல ஆற்றிற்குச் சென்றார். 

அப்போது எதுவும் கிடைக்கவில்லை. மனம் தளர்ந்து போகாத நிலையில் மூன்றாம் நாளன்று அவர் ஆற்றில் மூழ்கி எழும்போது, அவரது கரங்களில் தவழ்ந்தாள் அன்னை பாலா.



ஒரு சுண்டு விரல் அளவே அன்னையின் உருவம் என்பது தனிச் சிறப்பு.

அன்னையின் ஆணைப்படி தன் வீட்டிலேயே வைத்து வழிபாடலானார். இந்த வீடே பிற்காலத்தில் பாலாபீடமாக உருமாறி, வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து வந்து அருள்பெற்றுச் செல்லும் ஆலயமாக மாற்றம் கண்டுள்ளது. 


அன்னை, பாலா திரிபுரசுந்தரி என்று அழைக்கப்படுகிறாள். அன்னை பாலாவிற்கு இசை மீது அளவற்ற பிரியம். கருவூர் சித்தர் இந்த அன்னையைப் பற்றி பாடல் பாடியுள்ளார்.


பாலா திரிபுரசுந்தரி!

ஒரு கையில் ஜெப மாலை, மற்றொரு கையில் புத்தகம் கொண்டு காட்சி தருவது பாலா திரிபுரசுந்தரியின் தோற்றம் ஆகும். 




உலகத்து தெய்வ உருவங்களில் சிறிய உருவம் கொண்டு விளங்குவது நெமிலி பாலா மட்டும்தான். சுண்டு விரல் அளவில் ஒளி வீசும் அமைப்பில் அன்னையானவள் காட்சி தருகின்றாள்.


சித்தர்களும், ஞானிகளும் போற்றும் தெய்வம் இவள். தெய்வங்களே சீராட்டும் குழந்தை இவள். அளவற்ற சக்தியை பெற்ற மையப்புள்ளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னையானவள் கோவிலில் குடிகொள்ளாமல், அடியாரின் வீட்டை தேர்வு செய்து குடி கொண்டு அருளாட்சி செய்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்னை பாலா திரிபுரசுந்தரி வீற்றிருக்கும் இடம் பாலாபீடம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.


காலை 9 மணிக்கு ஆலயம் திறந்திருக்கும். அப்போது பாலா திரிபுரசுந்தரியைத் தரிசிக்க முடியும்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா சத்திரம் தெருவில் அமைந்துள்ளது நெமிலி பாலா பீடம். இது அரக்கோணத்திற்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும், சோளிங்கருக்குக் கிழக்கே 26 கிலோமீட்டர் தூரத்திலும், காஞ்சீபுரத்திற்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவிலும், காவேரிப்பாக்கத்திற்கு கிழக்கே 20 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து மேற்கே 85 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மாதத்தின் முதல் ஞாயிறு, புத்தாண்டு, நவராத்திரி இன்னிசை விழா, தை, ஆடி வெள்ளிகள், ஐப்பசி பூரத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

நினைத்த வரம் பெற விரும்புவோர் நெமிலி பாலாவை தரிசிக்கலாம். பாலா பீடத்தினர் ஆன்மிக யாத்திரையை மேற்கொள்வதால்,  பாலாவை தரிசிக்க விரும்புவோர் 04177-247216 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசி விட்டுச் செல்லலாம்.


ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்குத் துலாபாரம்!



துலாபாரம் என்றால் இந்தக் காலம் போல வெங்காயம், விறகு, பத்துக்காசு நாணயம் அல்ல.

ங்கத்திலே துலாபாரம்! 

சத்தியபாமா தன் நகைகளையெல்லாம் கழற்றி வைக்கிறாள். தான் செல்வம் படைத்தவள் என்பதைக் காட்டத் தாய் வீட்டுச் சீதனங்களையெல்லாம் கொண்டுவந்து வைக்கிறாள். தட்டு நகரவில்லை.

மெதுவாக வருகிறாள் ருக்மணி. 

ஒரு துளசி தளத்தைக் கொண்டு வந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி விட்டு, அதைத் தட்டிலே வைக்கிறாள். 



என்ன ஆச்சரியம், தராசு சமமாகிறது! 

ஆணவத்தோடு கொடுக்கப்படும் தங்கத்தைவிட அன்போடு கொடுக்கப்படும் இலை தழைகளுக்குச் சக்தியும், மரியாதையும் அதிகம் என்பதை இந்தக் கதை நிரூபிக்கவில்லையா? 


 

பிணிகளை குணமாக்கும் வைத்தீஸ்வரன்!




சிவபெருமான் வைத்தியநாதராக வீற்றிருந்து வினைதீர்க்கும் தலம் தான், ‘புள் இருக்கு வேளூர்’ எனும் வைத்தீஸ்வரன் கோவில். 

றைவன் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு அருள்பாலிக்கும் தலம் இதுவாகும். 



இறைவியும் , தையல் நாயகி என்ற திருநாமத்துடன் கையில் தைல பாத்திரமும், வில்வ மரத்தடி மண்ணும் ஏந்தி காட்சியளிக்கிறார்.

.
புள்ளிருக்கு வேளூர்!
ராமாயண காவியத்தின் தலைவனாக ராமபிரான், தன்னுடைய பெரிய தந்தையாக ஏற்றுக் கொண்ட ஜடாயு என்னும் பறவை (புள்) இங்கே தகனம் செய்யப்பட்டுள்ளது. 

நால்வகை வேதங் களில் முதன்மையான ‘இருக்கு’  (ரிக்) வேதம் இறைவனை வழிபட்ட தலம் இது.

‘வேள்’ – முருகப் பெருமான் செல்ல முத்துக்குமரனாக இங்கே எழுந்தருளி தந்தை வைத்தியநாதரைப் பூசித்து பேறுபெற்ற திருத் தலம். 

எனவே தான் இந்தத் தலம் ‘புள்ளிருக்கு வேளூர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றுள்ளது.


மேற்கு திசை நோக்கி வைத்திய நாதரும், தெற்கு திசை நோக்கி நின்று தையல்நாயகி அம்பிகையும் திருவருள் வழங்கும் பெருங்கோவில். 

இந்தத் தலத்தில் பதினெட்டு தீர்த்தங்கள் இருக்கின்றன. இருப்பினும் அம்பாள் சன்னிதிக்கு எதிரே, திருக்கோவில் வளாகத்தின் உள்ளேயே, சுற்றிலும் அழகிய மண்டபங்களுடன் காட்சிதரும் ‘சித்தாமிர்த தீர்த்தம்’ என்னும் திருக்குளம் சிறப்பு பெற்றதாக திகழ்கிறது.


செல்வ முத்துக்குமரன்!

சிவபெருமானின் உள் பிரகாரச் சுற்றில் தென்புறம் கிழக்கு நோக்கிய வலம்புரி விநாயகரும், வடபுறம் சிவசக்தியின் செல்லப் பிள்ளையாக அருணகிரிநாதர், குமரகுருபர் ஆகியோர் பாடல் பெற்ற பெருமைக்குரிய ‘செல்வ முத்துகுமரன்’ வள்ளி– தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 



கார்த்திகை தோறும் இரவில் தங்கத்தேரில் முருகன் வலம் வரும் காட்சியை கண்டு தரிசிக்கலாம். 

அடுத்தடுத்த சன்னிதிகளில் கஜலட்சுமியும், அஷ்டலட்சுமியும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இவர் களுக்கு அருகே நடராஜர் சபை உள்ளது. கோஷ்ட தேவதைகளாக துர்க்கை தேவியும், தென்புறம் நோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி சன்னிதியும், மேலே விமானத்தில் சீர்காழி சட்டைநாதர் திருக்காட்சியும், எதிரே விபூதி நிறைந்த ஜடாயு குண்டமும் சிறப்புடன் விளங்குகின்றன.  

ஆலய பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கியபடி ஒன்பது கிரகங்களும் ஒரே வரிசையில் நிற்கின்றன. எங்கே இறைவன் அருளாட்சி உயர்ந்து கோள்கள் வலிமை குறைந்து இருக்கின்றனவோ, அங்கேதான் நவக்கிரங்கள் இப்படி ஒரே வரிசையில் இருக்குமாம். இந்தத் தலத்தில் வைத்தியநாதரின் ஆணைக்கு கட்டுப்பட்டு கிரகங்கள் இயங்குகின்றன. 

தென்கிழக்கு பகுதியில் வைத்தியநாதரை வழிபட்டு முக்தி அடைந்த, மருத்துவ சித்தரான தன்வந்திரி சன்னிதி அமைந்துள்ளது.


நோய் நீங்க இத்திருத்தலம் வரும் பக்தர் களுக்கு விபூதியும், திருச்சாந்துருண்டையும் வழங்கப்படுகிறது. சுக்ல பட்சத்தில் ஒரு நன்னாளில் அங்க சந்தான குளத்தின் மையத்தில் உள்ள மண்ணை எடுத்து, புதுப்பாத்திரத்தில் வைத்து விபூதி குண்டத்தில் உள்ள விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தையும் கலந்து வில்வ இலை, வேம்பு இலை மற்றும் சந்தனக் குழம்பினையும் சேர்த்து அரைத்து மாத்திரைகளாகத் தயார் செய்கின்றனர். இதனை அம்பிகை திருவடியில் வைத்து மந்திரம் சொல்லி உரு ஏற்றி நோய் பாதிப்புள்ள பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். 

இந்தத் திருக்கோவிலுக்கு வந்து மனமுருக தையல் நாயகியையும், வைத்திய நாதரையும் வணங்கி விட்டு, இந்த மாத்திரையை நம்பிக்கையுடன் பெற்றுச் சென்று சாப்பிடுவது சிறப்பு.

வேப்பமரம்!

இந்த ஆலயத்தில் அமைந்துள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், அடர்ந்து பரந்து கம்பீரமாக நிற்கும் வேப்பமரம் காட்சியளிக்கிறது. இது ‘நோய் தீர்க்க நானிருக்கிறேன்’ என்று சொல்லாமல் சொல்லி, தன்னுடைய மூலிகைக் காற்றை வருபவர்களுக்கெல்லாம் வாரி வழங்குகிறது. மற்ற சிவத்தலங்களில் இல்லாத சிறப்பாக, மருத்துவ குணம் கொண்ட வேப்பமரம் இந்த ஆலயத்தில் தல விருட்சமாக இருக்கிறது. 

இந்த இடத்திற்கு ஆதி வைத்திய நாதபுரம் என்ற பெயரும் உண்டு. 

‘இத்தாரணியில் எவருடைய நோய் பிணியும்
சித்தாமிர் தக்கரையில் தீருமே – சக்திதையல் 
மாதுக் கியைந்த வைத்தியரே நீர்மருந்தை 
ஏதுக்கு மண்ணாக்கி னீர்’
என்ற பாடல் மூலமாகவும்,

‘திறன் கொண்ட அடியார் மேல்
தீவினை நோய் 
வாராமல் 
அறங் கொண்டு சிவதன்மம்
உரைத்த பிரான்
அமருமிடம் 
செடியாய  உடல்தீர்ப்பான் தீ
வினைக்கோர் 
மருந்தாவான் 
பொடியாடிக் கடிமைசெய்த
புள்ளிருக்கு வேளூர்’

என்ற பாடலும் இந்த தலத்தின் சிறப்பு பற்றி எடுத்துரைக்கின்றன. இது திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற நல்வாக்காகும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ராமலிங்க அடிகள், சிதம்பரநாத முனிவர், காளமேகப் புலவர் உள்ளிட்ட பலரும் பாடல் புனைந்த, காவிரி வடகரைத் தலங்களில் 16–வது தேவார திருத்தலமாக, இந்த ஆலயம் சிறப்புற்று விளங்குகிறது.


வைத்திய நாதருக்கு ஒரு கதை உண்டு!

அவருடைய வியர்வைத் துளியிலிருந்து உதித்த குஜன் தொழுநோயால் பாதிக்கப்பட்டபோது இங்கு வந்து நீராடி பிணி நீங்கப் பெற்றதாக ஐதீகம். 

செவ்வாய் என்னும் அங்காரகன் தனிச்சன்னிதியில் இருந்து, பக்தர் களின் தோஷம் நீக்குவதால் ‘அங்காரக ஷேத்திரம்’ என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இந்தத் திருக்கோவில் தருமபுர ஆதீனகர்த்தரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.



மனித இனத்தை எல்லாப் பிணிகளிலிருந்தும் நீக்கு வதற்காக இங்கு குடிகொண்டுள்ளார். அதனால்தான் வைத்தியநாதர், 

அடுத்து தையல் நாயகி அம்மன். சர்வ ரோக நிவாரணியாக அம்மன் தைலப் பாத்திரத்துடனும், சஞ்சீவி மற்றும் வில்வ மரத்து மண்ணுடனும் ஐயனுடன் இங்கு வந்து அமர்ந்தாராம். 
தைலாம்பிகையாக உருப்பெற்றார். இந்தச் சந்நிதி ஈஸ்வரன் சந்நிதிக்கு செங்குத்தாக தெற்கு நோக்கி உள்ளது. 



நேராக வந்தால் பெரிய குளம். பெயர் சித்தாமிர்த தீர்த்தம். இங்குதான் அங்காரகனும் வேறோர் அரசனும் குளித்து நோய் நீங்கப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. முனிவர் சாபத்தால் இன்றளவும் குளத்தில் பாம்புகளோ தவளைகளோ கிடையாதாம். குளத்தைச் சுற்றி அழகான மண்டபம். அதிலிருந்து கோபுர தரிசனம் அபாரம்.

கோபுரத்தைத் தாண்டிக் கோவிலினுள் சென்றால் முதலில் வருவது அங்காரகன் சந்நிதி. செவ்வாயன்று விசேஷ அபிஷேகம்.செய்யப்படுகிறது.
சாந்து உருண்டை என்ற பலகை தெரிகிறது. மணலையும் தீர்த்தத்தையும் கலந்து இறைவனுக்கும் படைத்துப் பின் வழங்கப்படுகிறது. காலையில் நீராடி சுத்தமாக உட்கொண்டால் பிணி தீரும் என்கிறார்கள்.  ராமர், குமரகுருபரர், பராசக்தி போன்றோர் சந்நிகளும் உள்ளன.

வரலாறு ; அங்காரகனுக்கு தீரா நோய் வந்த போது, ~வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று, அங்குள்ள சித்தாமிர்தத்தில் குளித்து வைத்தீஸ்வரனை வணங்கினால் நோய் குணமாகும்~ என்ற அசரீரி வாக்கைக் கேட்டு, அங்கு சென்று வழிப்ட்டதால் நோய் குணமானதாம், இந்த வைத்தியத்திற்கு சுவாமி தைல மருந்து  தயார் செய்யும் போது அம்பாள் தைல பாத்திரம் கொண்டு வந்த படியால், அம்மாளுக்கு தைலநாயகி என்ற பெயர் வந்தது.

தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் இந்தக் கோவில் நடை திறந்திருக்கும்.

நாகை மாவட்டத்தில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். மயிலாடுதுறையிலிருந்து வடக்கே 13 கிலோமீட்டர் வடக்கிலும், சீர்காழியில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

திருச்சிற்றம்பலம்!



தென் தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்!


சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.
அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார்.

இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.


அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.

உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும்,

அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும்,

கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப் படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது.


முதல் மலர் பாபநாசம் (சூரிய தலம்)
இரண்டாவது மலர் சேரன்மாதேவி (சந்திரன்)
மூன்றாவது மலர் கோடகநல்லூர் (செவ்வாய்)
நான்காவது மலர் குன்னத்தூர்  (ராகு)ஐந்தாவது மலர்முறப்பநாடு  (குரு)ஆறாவது மலர் ஸ்ரீவைகுண்டம் (சனி)ஏழாவது மலர் தென் திருப்பேரை (புதன்)எட்டாவது மலர் ராஜபதி (கேது)ஒன்பதாவது மலர் சேர்ந்தபூமங்கலம் (சுக்கிரன்)



சூரிய தலம்: பாபநாசம்
அம்சம்: சூரியன் நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம் மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர் அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


சந்திர தலம்: சேரன்மகாதேவி அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம் மூலவர்: ஸ்ரீஅம்மைநாதர் அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


செவ்வாய் தலம்: கோடகநல்லூர் அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம் மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


ராகு தலம்: குன்னத்தூர் (சங்காணி)அம்சம்: ராகு நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம் மூலவர்: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர்அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. இது சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.


குரு தலம்: முறப்பநாடு அம்சம்: வியாழன் (குரு)நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி மூலவர்: ஸ்ரீகைலாச நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


சனி தலம்: ஸ்ரீவைகுண்டம் அம்சம்: சனி நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி மூலவர்: ஸ்ரீ கைலாச நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


புதன் தலம்: தென் திருப்பேரை அம்சம்: புதன் நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


கேது தலம்: ராஜபதி அம்சம்: கேது நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம் மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி இருப்பிடம்: தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


சுக்கிரன் தலம்: சேர்ந்த பூமங்கலம் அம்சம்: சுக்கிரன் நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம் மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீசௌந்தர்ய நாயகி இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.




இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. 



புன்னைநல்லூர் மாரியம்மன் முத்துப்பல்லக்கு!


கடவுள் வாகனங்களில் இயற்கை வடிவான வாகனங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன வாகனங்கள், கலப்பு வடிவ வாகனங்கள், பூத கின்னர வாகனங்கள், அபூர்வ வகை வாகனங்கள் அபூர்வ வகை வாகனங்கள், கூட்டு வாகனங்கள் எனப் பல வாகனங்கள் உள்ளன. 



இவையல்லாது, இறைவனும் இறைவியும் பல்லக்கில் பவனி வருவது என்பதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.


இதர வாகனங்களைக் காட்டிலும், இறைவனோ இறைவியோ பல்லக்கில் பவனி வருகையில் அதிக அளவிலான அலங்காரங்களும், ஜொலிக்கும் மின் விளக்கு அலங்காரங்களும் பல்லக்கு வாகனத்தின் தனிச்சிறப்பு. 




அதிலும் இரவு நேரத்தில் மின்னொளிப் பாச்சலுடன், இறைவனையோ இறைவியையோ சுமந்து வரும் பல்லக்கினைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் திரள்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.



முத்துப்பல்லக்கு உருவாவதே பெரிய கலை. இதனை உருவாக்கிட, அவர்களுக்கு ஏழெட்டு தினங்கள் ஆகின்றன. முழுமையான முத்துப்பல்லக்கின் நீளம் முப்பத்தைந்து அடி, அகலம் பன்னிரெண்டு அடி, உயரம் ஐம்பத்தைந்து அடி. இந்த நீள, அகல, உயர பிரம் மாண்டம்தான் புன்னைநல்லூர் மாரியம்மன் முத்துப் பல்லக்கினை நேரில் காண அனைவரையும் ஈர்க்கிறது.



நான்கு சக்கர பட்டறை மீதாக இருபுறமும் நாற்பதடி நீள ஒரே மரவாரினைக் கட்டுகிறார்கள். அதன் மீதுதான் முத்துப்பல்லக்கு முழு வடிவம் பெறுகிறது. முன்பாக, பல்லக்கை வடிவமைக்கும் இருபது கலைஞர்களும், மூங்கில் பிளாச்சுகளை அளவுகளுக்கு ஏற்றாற்போல் வெட்டி, அலங்கார வடிவங்களை உருவாக்குகின்றனர். ஜிகினாக்களை வெட்டி ஒட்டுகின்றனர். ஜொலிக்கும் முத்துக்களை (டூப்ளிகேட்) பதிக்கின்றனர். 



கீழே கைவேலைகள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் அவற்றை அந்தப் பட்டறை மீது ஏற்றி ஆங் காங்கே கட்டி, ஒட்டி மிகப் பிரம்மாண்ட முத்துப்  பல்லக்கினை உருவாக்கி விடுகின்றனர். அதன் பிறகு முத்துப்பல்லக்குக்கு மின் விளக்கு அலங்காரங்கள் பொருத்தப்படுகின்றன. பூச்சரங்கள் மற்றும் பூமாலைகள் அலங்காரத்துடன் முத்துப் பல்லக்கு மிகுந்த பேரழகுடன் தோற்றமளிக்கிறது.


ஆடி மாதம், கடைசி ஞாயிற்றுக்கிழமை இக்கோயிலில் முத்துப்பல்லக்குப் பெருவிழா. அன்று காலை ஊர் மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கைலாசநாதர் கோயிலிலிருந்து பால் குடம் சுமந்து, பகல் பன்னிரெண்டு மணியளவில் மாரியம்மன் கோயிலுக்கு வந்து சேர்வார்கள். மதியம் இரண்டு மணிக்கு உச்சிக்கால பூஜை. அதன் பின்பு மாலை நான்கு மணியிலிருந்து சுவாமி அலங்கார மண்டபத்தில், உற்ஸவர் மாரியம்மனுக்கு இரவு ஏழு மணி வரைக்கும் அலங்காரம் நடைபெறும்.

அலங்கார மண்டபம் எதிரே, இசைக்கலைஞர்கள் பலர் இசைக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பர். இரவு பன்னிரெண்டு மணியளவில் மல்லாரி இசையினைக் கேட்டபடி, உற்ஸவர் மாரியம்மன் உள் பிராகாரம் வலம் வருவார். இரவு ஒரு மணியளவில் அம்பாள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளியவுடன் முத்துப்பல்லக்கு வீதியுலா தொடங்கி விடும். நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்பாள் திருக்கோயில் வந்து சேர, காலை ஆறரை மணியாகி விடும். தொடர்ந்து ஏழு மணியளவில், மீண்டும் மல்லாரி இசை கேட்டபடி, மாரியம்மன் கருவறை முன்மண்டபம் வந்து சேர்வாள்.

ஆடி மாதம் நடைபெறுகின்ற முத்துப்பல்லக்குத் திருவிழாதான் இக்கோயிலின் மிகப்பெரிய திருவிழா. இது தவிர, ஆவணி மாதம் பிரமோற்ஸவம், ஆவணி கடைசி ஞாயிறு அன்று திருத்தேர் உற்ஸவம் (ஒவ்வொரு ஆவணி ஞாயிறும் மிக விசேஷம்), புரட்டாசி மாதம் வசந்த உற்ஸவ தெப்பத் திருவிழா ஆகியவை இக்கோயிலின் சிறப்பு விழாக்கள்.



புன்னைநல்லூர் மாரியம்மன் பூச்சொரிதல் விழா!


தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூரில் கோயில் கொண்டிருக்கும் மாரியம்மனுக்கு, வருடம்தோறும் ஆடி மாத வெள்ளிக்கிழமையில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படும்.



வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் பூச்சொரிதல் விழாவுக்கு, வியாழக்கிழமை அன்றே பத்து டிராக்டர்களை தேர் போல் அலங்கரித்து, ஒவ்வொரு தேரிலும் அம்மனின் பெரிய அளவிலான படத்தை அலங்கரித்து தஞ்சாவூரைச் சுற்றிலும் உள்ள பல ஊர்களுக்கு அனுப்புவார்கள். தேர் எந்த ஊருக்குச் செல்கிறதோ அந்த ஊரின் பெயரிலேயே அந்தத் தேர் அழைக்கப்படும். ஒவ்வொரு தேரிலும் மூன்று பேர்கள் இருப்பார்கள்.



தேர்கள் அந்தந்த ஊர்களுக்குச் சென்றதும், தேர்களில் இருப்பவர்கள் கூடைகளுடன் வீதி வீதியாகச் செல்வார்கள். அப்போது ஊர் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் உடைத்து பூஜைகள் செய்து அம்மனை வணங்கி பூச்சொரிதல் வைபவத்துக்கு அவர்களால் முடிந்த அளவு பூக்களைத் தருவார்கள்.

இன்னும் பல ஊர்களில் கஞ்சி காய்ச்சி, பொங்கல் வைத்து அம்மனின் தேர் வரும் நேரத்தில் ஊரே திரண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்து, பூக்களைக் கொடுத்து முகமலர்ச்சியுடன் அனுப்பி வைப்பார்கள்.


எல்லா ஊர்களில் இருந்தும் பூக்களை வாங்கிக் கொண்டு தேர்கள் எல்லாம் தஞ்சை அரண்மனை வளாகத்துக்கு வந்து சேரும். வியாழக்கிழமை புறப்பட்ட தேர்கள் வெள்ளிக்கிழமை அன்றுதான் கோயிலுக்கு வந்து சேரும். பக்தர்கள் கொடுத்த பூக்கள் மொத்தத்தையும் கோயில் வளாகத்தில் வைப்பார்கள். பக்தர்கள் கொடுத்த பூக்கள் மூன்று டன்களுக்கு மேல் இருக்கும்.

கோயில் வளாகத்தில் குவிக்கப்பட்ட பூக்களில் இருந்து ஒவ்வொரு பக்தரும் ஒரு கூடை நிறைய பூக்களை எடுத்துச் சென்று அம்மன் சந்நிதியில் வைத்து வணங்கிவிட்டு, தங்கள் வேண்டுதல் நிறைவேற சிறிது பூக்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள்’’.

இந்த வைபவத்தில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மன் சந்நிதியை பூக்களால் நிரப்புவார்கள். பூச்சொரிதல் முடிந்ததும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

பூக்களின் நறுமணத்திலும் பக்தர்களின் பரவசத்திலும் அம்மன் சந்நிதி நிறைந்திருக்க, பக்தர்கள் அனைவரையும் தன் அருள்விழிகளால் அம்மன் நோக்கிய அழகைக் காணக் கண் கோடி வேண்டும். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள், ‘புன்னை நல்லூர் மாரிக்கு பூச்சொரிதல் நடக்குது; அந்தப் பூவோட வாசம் இந்த பூமி எங்கும் வீசுது’ என்ற பரவச உணர்வுடன் வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

பூஜைக்கு உகந்த மலர்கள்!



“புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்பது திருமுறை. மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் வழிபாடு செய்வது இன்றியமையாதது.

திருக்கோயிலுக்குச் செல்லும்போது இறைவழிபாட்டிற்குரிய மலர்கள், அபிஷேகத் திரவியங்கள், தூபம், தீபம் முதலியவற்றிற்கான பொருள்களைக் கொண்டு செல்லவேண்டும்.

வழிபாட்டிற்குரியனவற்றை இடுப்பிற்குக் கீழே இருக்குமாறு எடுத்துச் செல்லக்கூடாது. இரு கைகளாலும் கொண்டுசெல்ல வேண்டும். தூய்மையான இடங்களில் வைக்கவேண்டும்.



 

காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், (தாழை – இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது.) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.

நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் ஆகியன நன்மை தரும்.

மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன.

அஷ்ட புஷ்பங்கள்!

அறுகு, சண்பகம், புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டுமாம்.

உபயோகிக்க நாட்கள்!

தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறு மாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், சண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.

கையிற்கொண்டு வந்தது, தானாக விழுந்தது, காய்ந்தது, முகர்ந்துபார்க்கப்பட்டது, அசுத்தமான இடம், பொருள்களில் வைக்கப்பட்டது ஆகியன பூஜைக்கு ஆகாதனவாம். மலர்களைக் கிள்ளிச் சாத்தக்கூடாது (முழு மலராகவே சாத்த வேண்டும்). இலைகளைக் கிள்ளிச் சாத்தலாம். வில்வம், துளசி முதலியவற்றைத் தளமாகச் சாத்தவேண்டும்.

பூஜைக்குரிய இலைகள் (பத்திரங்கள்)!

துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியன.

தேவர்களுக்கு ஆகாத மலர்கள்!

அட்சதை, வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதாம். செம்பரத்தை, தாழம்பூ, குந்தம், கேசரம், குடஜம், ஜபாபுஷ்பம் இவை சிவனுக்கு ஆகாதன. அறுகு, வெள்ளெருக்கு, மந்தாரம் இவை அம்மைக்கு ஆகாதன. வில்வம் சூரியனுக்கு கூடாது. துளசி விநாயகருக்குக் கூடாது.

மூன்று தளங்களை உடைய வில்வம் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள், சோம, சூரிய, அக்னி ஆகிய முக்கண்கள், மும்மூர்த்திகள் ஆகிய தன்மைகள் பெற்றன. மூன்று ஜன்மாக்களில் செய்த பாபத்தைப் போக்கும். மூன்று தளங்களும் இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்று சக்திகளின் வடிவம்.

பஞ்ச வில்வங்கள்!

முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியன.

இறைவனுக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்து வழிபடாமல் உண்பவன் பொருள் நாசத்தை அடையும். எனவே உகந்தனவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும்.


உபசாரமில்லாவிடில் உண்டாகும் தீங்கு!

பூஜை இல்லாவிடின் ரோகமும், புஷ்பமில்லாவிடில் குலநாசமும், சந்தனமில்லாவிடின் குஷ்டரோகமும், ஜலமில்லாவிடில் துக்கமும், தூபமில்லாவிடில் சுகமின்மையும், தீபமில்லாவிடில் பொருள் முட்டுப்பாடும், நைவேத்யமில்லை எனில் வறட்சியும் மந்திரமில்லை எனின் வறுமையும் உண்டாலும்.


இத்தொகுப்பில் கண்ட செய்திகள் சிவாகமங்களில் கூறப்பெற்றவை. எனவே கூடுமானவரை விதிகளை உணர்ந்து தவறாது அபிஷேகம், அர்ச்சனை முதலிய வழிபாடுகளைச் செய்து நல்லன எல்லாம் பெருவோம்.

திருச்சிற்றம்பலம்!





 
 




 

வையம் இடந்த வராகர்!


*மீனாய், ஆமையாய் கொண்ட அவதாரங்கள் தேவருலகைக் காக்க அமைந்தது. நரசிம்ம அவதாரமோ தனது பக்தனைக் காத்து, துஷ்டனை சம்ஹரிக்க ஏற்பட்டது. வாமன, பரசுராம அவதாரங்கள் வழி தவறிப்போன அரசர், ஆட்சியாளர்களை அடக்கி அமைதியை நிலைநாட்ட அமைந்தது. ஸ்ரீராம, கிருஷ்ண அவதாரங் களோ, தர்மத்தை நிலைநாட்ட ஏற்பட்டது. 

ஆனால், வராக அவதாரமோ, வேத சம்ரட்சணத்துக்காகவும், ஹிரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமிப் பிராட்டியைக் காக்கவும் அமைந்தது.

தசாவதாரங்களில் வராக அவதாரம் வித்தியாச மானதுதான்! வராகம் எனில் பன்றி. அதுவும், மூக்கு நுனியில் கொம்பு உள்ள பன்றி. 

இந்த அவதாரத்துக்குக் காரணம்தான் என்ன?
அசுரன் ஹிரண்யாட்சன் தேவர்களுக்கும் மனிதர் களுக்கும் கற்பனைக்கு எட்டாத ஹிம்சைகளைக் கொடுத்து வந்தான். இதனால், அவர்கள் அடைந்த துயரங்கள் மிக அதிகம்! ஆனால், அசுரன் கொண்ட மகிழ்ச்சியே மிக மிக அதிகம். அசுரன் ஹிரண்யாட்சன் மகிழ்ச்சி நிறைவடையாததால் சலிப்படைந்த அவன், ஒரு கட்டத்தில் மொத்தமாக பூமியையே பிரபஞ்சத் திலிருந்து பிடுங்கிக் கொண்டு போ பெருங்கடலினுள் அமிழ்த்தி வைத்தான். பூமியை ஒளித்து வைத்ததில் அவனது மகிழ்ச்சி ஒரு நிறைவைக் கண்டது.

பூமிப் பிராட்டியைக் காணாது, வருணன், அக்னி, சூரியன் உள்ளிட்ட தேவர்கள் திகைத்தனர். பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஆற்றக்கூடிய தங்களின் கடமை தடைப்பட்டதைக் கண்டு தவியாத் தவித்தனர். வேறு வழியின்றி, காக்கும் தெய்வம் மஹா விஷ்ணுவிடம் முறையிட்டனர். 

அந்த பூமா தேவி...? ஆழ்கடலில் சிறைப்பட்டுக் கிடந்தாள்.
தம் பத்னி பூமிப்பிராட்டியை மீட்கவும், உயிரினங் கள் வாழவும் புதியதோர் அவதாரம் எடுத்தார் ஸ்ரீ மகா விஷ்ணு. அதுதான் வராக அவதாரம். 

வராக ரூபமா கடலினுள் பாந்தார். பூமிப் பிராட்டியை சிறைப் படுத்திக் கொக்கரித்துக் கொண்டிருந்த ஹிரண்யாட்சனைத் தம் மூக்குக் கொம்பால் குத்திக் கிழித்துக் கொன்றார். பின்னர், பூமா தேவியை மூக்கின் மேல் நிறுத்தி, கடலில் இருந்து மேலே கொணர்ந்தார். ஸ்ரீமந் நாராயணனின் இந்த அவதாரம் கண்டு, பூமி உள்ளிட்ட அனைத்து உலகங்களும் ஆனந்தத்தில் கொண்டாடின.

இத்தகைய அற்புதக் கோலத்தைத் தாங்கிய வராகப் பெருமான், பூவராகராகக் கோயில் கொண்டு அருள்பாலிப் பது கடலூர் மாவட்டம் , ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில்.
பிராட்டிக்கு அருள்புரிந்த பகவான், பக்தருக்காகவும் நிச்சயம் அருளுவான்!



நலம் தரும் நட்சத்திர விரதம்!

வழிபாடுகளில் நட்சத்திரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுப நட்சத்திர நாளிலும், விரத காலங்களிலும், வாரத்தின் ஏழு கிழமைகளிலும் வீட்டிலோ கோவிலிலோ சிவபெருமானைப் பூஜிக்க வேண்டுமென்றும், இறைவனுக்கு நட்சத்திரத் திருவிழா செய்யவேண்டுமென்றும் சைவாகமங்கள் கூறுகின்றன. 

அதிலும் திருவாதிரை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததென்றும், ஞாயிற்றுக்கி ழமையுடன் கூடிய திருவாதிரை மேலும் சிறப்பானதென்றும் கூறப்படுகிறது. இத்தகைய வழிபாட்டால் விளையும் சிறப்புப் பயன்களையும் எடுத்துக்கூறி, விரதகால வழிபாட்டைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றன. மேலும் நட்சத்திரங் களில் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், பூஜைகளுக்குரிய காலநிர்ணய விதிமுறைகளை சிவாகமங்கள் கூறியுள்ளன.

அதாவது சூரிய அஸ்தமனத்திலிருந்து சந்திர உதயம்வரை உள்ள காலம் நட்சத்திர விரத உபாசனத்திற்கான காலமாகும். ஆனால் திருவாதிரை மற்றும் திருவோண நட்சத்திரங் களுக்கு இதனைத் தவிர்த்து நாள் முழுவதும் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திலிருந்து மூன்று முகூர்த்த காலம்- ஏழரை நாழிகை (மூன்று மணி நேரம்) நட்சத்திர உபவாசம், ஸ்நானம், பூஜைகளுக்குரிய காலமாகும்.
இவ்வாறாக நட்சத்திர விரத பூஜை காலத்தை நன்கறிந்து, அந்நாளில் சிவனைக் குறித்தோ, விஷ்ணுவைக் குறித்தோ பூஜை, ஜெபம், உற்சவம், தானம் இவற்றைச் செய்து யாவரும் அரிய பயனை விரைவில் பெறலாம். பூஜை, விரதம், விழா ஆகியவை ஆதிரையில் செய்யப்படின் கோடிமடங்கு உயர்ந்ததாகி அனைத்துப் பயனையும் தரும் என்றும், ஆதலால் சைவ சமயத்தோர் யாவரும் தவறாது திருவாதிரை நட்சத்திரத்தன்று பன்னிரு மாதங்களிலும் விரதமிருந்து, இரவில் பூஜையையோ, ஆலயத்தில் தரிசனத்தையோ, தேவதா உற்சவத்தையோ, ஸ்நானம், தானம், விப்ரபோஜனம் ஆகியவற்றையோ கட்டாயமாகச் செய்ய வேண்டும். தவறினால் நரகத்தை அடைவர் என்றும் அறக்கட்டளையிடுகிறது. இவ்வாறே வைணவர்கள் திருவோணத்தில் விரதமிருந்து விஷ்ணுவை ஆராதித்து வைகுண்ட பதத்தை அடையலாம்.


நலம் தரும் நட்சத்திர விரதம்!

உரிய நட்சத்திரம் கூடிய அன்று, அதிகாலை முதலே, தலைமுழுக்கு நீராடி, உபவாசத்துடன் அறநெறியில் வாழ்ந்து இறைவனைப் பூஜித்து, உரிய தானத்தைச் செய்தல் வேண்டும். தானத்தை வேதம் பயின்ற அந்தணருக்கு அளிப்பது உத்தம பயனைத்தரும். "தேவையானவை அனைத்தையும் வரமாக எனக்குக்கொடு' என்று வேண்டிடும் வேதப்பகுதியாகிய "சமகம்' எனும் பகுதி, "ஸுதினம் ச மே' என்று சுபதினத்தையும், "ருக்ஷா ச மே' என்று சுப நட்சத்திரத் தையும், முறையே அவை கூடிய சுபதினத்தையும் குறிப்பிடுகிறது. இதிலிருந்து அருள்கிட்டு வதற்கு அத்தகைய நன்னாளின் தேவை விளங்கும். இறைவனை வணங்கவும், அவனருள் தேவை என்பதை மணிவாசகர், "அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்கிறார் திருவாசகத்தில்.
28 நட்சத்திரங்களில் (அபிஜித் உட்பட) விரத பூஜையுடன் செய்திடும் சிவ உற்சவத்தின் பயன் களை சிவாகமம் குறிப்பிடுகிறது.

1. கிருத்திகையில் சௌக்கியத்தையும்;
2. ரோகிணியில் மகனை விரும்பியவன் மகனையும்;
3. மிருகசீரிடத்தில் தேகப் பொலிவழகையும்;

4. திருவாதிரையில் விரத பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் (ஸர்வ ஸம்பத்);
5. புனர்பூசத்தில் அரசரின் விருந்தோம்பலுடன் கூடிய நட்பையும்;
6. பூசத்தில் (புஷ்டி) வளத்தையும்;

7. ஆயில்யத்தில் சிறந்த பிள்ளைகளையும்;
8. மகத்தில் தன் மக்களிடம் மேம்பட்ட வாழ்வையும்;
9. பூரத்தில் ஸௌபாக்யத்தையும்;

10. உத்திரத்தில் மிகச்சிறந்த வள்ளல்குண ஒழுக்கத்தையும், கொடைத்தகுதியையும் (பிறருக்கு வழங்கி மகிழும் உள்ளத்தையும் பெறுதல்);
11. ஹஸ்தத்தில் ஹரனைப் பூஜிப்பவன் நல்லோர் நடுவில் உயர்வையும்;

12. சித்திரையில் பூஜிப்பவன் அழகு வாய்ந்த மனைவியையும்;
13. ஸ்வாதியில் (செய்தொழில்) வியாபார லாபத்தையும்;
14. விசாகத்தில் அதிக சுகம் தரும் இந்திரபோக விருப்பத்தையும்;


15. அனுஷத்தில் இந்திரபோக ஆதிபத்தியத்தையும்;
16. கேட்டையில் செல்வப்பெருக்கையும்;
17. மூலத்தில் உத்தமமான ஆரோக்கியத்தையும்;

18. பூராடத்தில் புகழையும்;
19. உத்திராடத்தில் மிக உயர்ந்த புகழின் உச்சத்தையும்;
20. திருவோணத்தில் சுகங்களையும், பொருள் போகங்களையும்;


21. அவிட்டத்தில் நல்ல தன மிகுதி யையும்;
22. அபிஜித்தில் வேத விக்ஞானத் தையும்;
23. சதயத்தில் மருத்துவ சித்தியையும் (தேகாரோக்கியம்),


24. பூரட்டாதியில் ஆடு, மாடு, வாகனங்களின் போகத்தையும்;
25. உத்திரட்டாதியில் கோகுல பசுக்களின் செல்வத்தையும்;
26. ரேவதியில் விஷ்ணுவிடம் நட்புப்பயனையும் (வைகுண்டபத போகம்);
27. அச்வினியில் சிறந்த குதிரைச் செல்வத்தையும்;
28. பரணி நட்சத்திரத்தில் விரத பூஜையைச் செய்பவர்  உத்தமமான பூரண நீண்ட ஆயுளையும் நட்சத்திர பூஜையின் பயனாகப் பெறுகிறார். 
ஆதலால் அனைத்து வகையிலும் பெருமுயற்சியோடு நட்சத்திர புண்ணிய காலங்களில் இந்த விரத பூஜையுடன் ஆலயத் தேவைக்கு உற்சவத்தையும் செய்து பயன் பெறலாம். இவற்றிலும் ஆதிரையில் பூஜை, உற்சவம் செய்வது பலமடங்கு உயர்வான பயனை அளித்திடும். திருவாதிரை தினத்தில் உபவாச விரதம் முதலியவற்றை செய்வது ஆயிரம் அச்வமேத யாகத்தின் பயனையும், கோடி கன்னிப் பெண்களை (பிறர் குலம் தழைக்க) தானமளித்த பெரும்பயனையும் அளித்திடுவதாகும்.

ஆதலால் புண்ணியரூபமாக ஒளிர்கின்ற நட்சத்திரங்களில் அனைத்து வகையினரும், பொதுமக்கள் யாவரும் சிறப்புப்பயனை விரும்புகிற கன்னிப் பெண்கள், விதவைகள், சுமங்கலிகள், சந்யாசி, விரதீ, தீக்ஷிதர், தீட்சை பெறாதவர் யாராயினும், ஒவ்வொரு நட்சத்திரத்தின் புண்ணிய காலத்திலும், விரத அனுஷ்டானத்துடன் வழிபாட்டை மேற்கொள்ள இயன்ற அளவில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, முன்னிரவில் இந்த நட்சத்திர காலம் கூடியிருக்கிற இரவு நேரத்தில், தீர்த்த ஸ்நானம், பூஜை, பிரதக்ஷிணம், நட்சத்திர ப்ரீதி தானம் செய்தல், தெய்வ தரிசனம், துதிபாடுதல், தரையில் விழுந்து வணங்குதல், ஆலயப் பிரதட்சிணம், அந்தணர்களுக்கு இயன்ற அளவில் பொற்காசு, புத்தாடை, அன்னம் ஆகியவற்றை வழங்கி தர்மங்களைச் செய்திட வேண்டும்.

இவ்விதமாக எவர் ஒருவர் செய்கிறாரோ, அவர் இவ்வுலகில் வாழும் ருத்ரராக (இறைவனாகவே) திகழுவார் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு நட்சத்திர விரத சாந்திக்கிரியைகளைப் பின்பற்றுவோர்களுக்கு பேராபத்துகள், கொடியதாகிய நவகிரகப் பீடைகள் முதலியவை விலகும். அனைத்து வகையான வியாதிகளிலிருந்தும் விடுபட்டவர்களாகி வெகுகாலம் சுகவாழ்வு பெறுவர். நட்சத்திர விரத பூஜையைத் தொடர்ந்து செய்பவர்கள் ஒரு வருட காலத்திற்குள்ளாக சத்புத்திரனை அடைவது உறுதி என்றும் சைவாகமங்கள் வலியுறுத்துகின்றன. இதனை ஆகம பத்ததி ஆசிரியர்களும், நித்தமும் சிவசூரியனின் பூஜையை முதற்கடமையாகக்கூறி வலியுறுத்தியுள்ளனர்.

செல்வங்களின் சிறப்புப் பூஜைக்கு உகந்த நட்சத்திரம், ஜென்ம நட்சத்திரம் ஆகமங்களில் அனைத்து தெய்வங்களும் ஆவிர்பவித்த (வெளிப்பட்டு உதித்த) நட்சத்திரங்கள் கூறப்படுகின்றன.

அவற்றுள் சில தெய்வங்களுக்கு உரியவற்றை இங்கு காண்போம்.

1. அச்வினி நட்சத்திரத்தில் சண்டேசர், அச்வினி தேவர்கள், அச்வாரூடம், சரஸ்வதி, அங்காரகன்.
2. பரணி நட்சத்திரத்தில் யமதர்மராஜா, பூதங்கள், ருக்வேதம்.
3. கிருத்திகை நட்சத்திரத்தில் தண்டபாணியாகிய கந்தர், துர்க்கை, பூமி, அக்னி.


4. ரோஹிணி நட்சத்திரத்தில் சாமுண்டீச்வரி, பிரம்மதேவர், சப்தரோஹிணிகள், ரிஷிகள், கிருஷ்ணர், வாஸ்து, ப்ரஜாபதி, சுக்கிரர்.
5. மிருகசீரிட நட்சத்திரத்தில் சந்திரன்.
6. திருவாதிரை நட்சத்திரத்தில் (ஆதிரையில்) ஈச்வரர், சிவன், லிங்கம், மாஹேச்வர 64 மூர்த்தங்கள், காளி, பிரத்யங்கரா, பிராம்ஹி முதலான ஏழு மாதர்கள், பிசாசுகள், ஈசானர்.


7. புனர்பூச நட்சத்திரத்தில் இந்திரன், பிரம்மா, மன்மதன், ராமர், யஜுர்வேதம்.
8. பூச நட்சத்திரத்தில் சந்திரர், வியாழன், குரு.
9. ஆயில்ய நட்சத்திரத்தில் நாகர், நாகராஜா, ராகு- கேது.


10. மக நட்சத்திரத்தில் ஆதித்யர், தேவிகௌரி, பித்ருக்கள், வாஸ்து.
11. பூர நட்சத்திரத்தில் கௌரி தேவியர், சூரியன், பகர், அர்யமா.


12. உத்திர நட்சத்திரத்தில் நடராஜர், அப்சரசுகள், தேவிகள், சீதை, பகர், அர்யமா, அம்பர், மகாகாளி, மகாலக்ஷ்மி.
13. ஹஸ்த நட்சத்திரத்தில் தட்சிணா மூர்த்தி, கின்னார மிதுனம், சூரியன், ஸவிதா, காச்யபரிஷி.


14. சித்திரை நட்சத்திரத்தில் க்ஷேத்ரபாலகர், த்வஷ்டா, சூரியரில் த்வஷ்டா.
15. ஸ்வாதி நட்சத்திரத்தில் சாஸ்தா, வசுக்கள் எண்மர், வாயு, கருடன்.


16. விசாக நட்சத்திரத்தில் குஹர் என்னும் ஷண்முகர், பத்ரகாளி, தேவேந்திரன், அக்னிதேவர், உக்ரதேவர்.

17. அனுஷ நட்சத்திரத்தில் முனீச்வரன், ரிஷிகள்.
18. கேட்டை நட்சத்திரத்தில் ஜ்யேஷ்டாதேவி, இந்திரன்.
19. மூல நட்சத்திரத்தில் யமுனா தேவி, நிருருதி, சாமவேதம்.


20. பூராட நட்சத்திரத்தில் தர்மதேவதையான விருஷபதேவர், நதிதேவதைகள், சமுத்திரம், தீர்த்தங்கள்.
21. உத்திராட நட்சத்திரத்தில்  சோமாஸ்கந்தர், வைச்வ தேவர்கள்.
22. அபிஜித் நட்சத்திரத்தில் பிரம்மா, தும்புரு, நாரதர்.
23. திருவோண நட்சத்திரத்தில் மகாவிஷ்ணு, மாருதி.


24. அவிட்ட நட்சத்திரத்தில் சக்திகள், வசுக்கள், குபேரன், புதன்.


25. சதய நட்சத்திரத்தில் விநாயகர், வருணர், நதிகள், கடல், தீர்த்தங்கள், நீர்நிலைகள்.


26. பூரட்டாதி நட்சத்திரத்தில் அதர்வண வேதம், அஜர், ஏகபாதர், அகோரருத்ரர், வீரன், வீரேசர், சரபர்.


27. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நரசிம்மர், பரசுராமர், அஹிர்புத்னியர், வீரபத்ரர், விஷ்ணு, ஹரி, பாகவதர்கள்.


28. ரேவதி நட்சத்திரத்தில் பூமிதேவி, கங்கா தேவி, சனைச்சரன்.
பன்னிரு சூரியரில் பூஷா.


மூல நட்சத்திரத்தில் பக்த மூர்த்திகளும் எங்கும் எக்காலத்திலும் சிறப்பாகப் பூஜிக்கத்தக்கவர்கள். சைவ மூர்த்தங்களுக்கும் அனைத்து தேவர்களுக்கும் பொதுவாக ஆதிரை நட்சத்திரமும் வைஷ்ணவ மூர்த்தங்களுக்கு திருவோணமும் சிறந்தது என்றும் அறிந்து வழிபடவேண்டும். நட்சத்திரங் களுக்குரிய தெய்வத்தை அந்தந்த நாளில் சிறப்பாக வழிபடுவதால் திருவருளை விரைவில் பெற இயலும்.