Monday 26 September 2016

திருமீயச்சூர் லலிதாம்பிகை!



தமிழகத்தில் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாத வகையில் 70 மாடக்கோயில்கள் கட்டிச் சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்திற்கு அருகில் உள்ள பேரளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர்க் கோயிலும் அவற்றில் ஒன்று.


இந்த இரண்டு கோயில்களும் சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன. இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் கோயில் திருப்பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. சோழ நாட்டின் காவிரி தென்கரை பாடல் பெற்ற திருத்தலங்களில் 56, 57-வது திருத்தலங்களாக விளங்குகின்றன.

தொன்மை வாய்ந்த திருக்கோயிலும், திருமீயச்சூர் இளங்கோயிலும் ஆக இரண்டு கோயில்கள் இத்திருக் கோயிலுக்குள்ளேயே உள்ளது மற்றொரு சிறப்பு.  திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம்.



யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள "கஜப்ரஷ்ட விமானம்" மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன.

திருத்தலக் குறிப்பு:

இத்திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் இக்கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த கலை நயம் மிக்க சிற்பங்களைக் கொண்ட சிவ தலமாக விளங்குகிறது.



லலிதாம்பிகை திருக்கோயில் குறிப்பு:

தல மூர்த்தி : அருள்மிகு மேகநாத சுவாமி
தல இறைவி : அருள்மிகு லலிதாம்பிகை (சாந்த நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி

பெருங்கோயிலின் இரண்டாவது உள் கோபுரத்தில் நுழையும்போது ரத விநாயகர் நம்மை வரவேற்கிறார்.



திருமீயச்சூர்  திருத்தலத்தில் சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின்  கருவறையில், சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார்.

திருக்கோயில் சிறப்பு:

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சூரியன் உதிக்கும் நேரத்தில் இவ்வாலய சிவலிங்கத்தின் மேல், கதிரவனின் செங்கதிர்கள் விழுவது திருக்கோயில் சிறப்பு.
 
அனைவருக்கும் அருள் புரிந்து வருகிறார், அந்தத் திருத்தலம், திருமீயச்சூர்  எனப்படும்.  இங்கே, ரதசப்தமி விழா விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது.

 உட் பிரகாரத்தின் தென் பகுதியில் நாக பிரதிஷ்டைகள், சேக்கிழார், போன்றோரது திருவுருவங்களும், சப்த மாதாக்கள் பூஜித்த லிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில், அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட லிங்கங்கள், வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், ஈசான லிங்கங்களும் உள்ளனர்.



 கோயிலின் உட்பிரகாரத்தை விட்டு வெளியே வந்தால் வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை கோயிலைக் காணலாம். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள்.



வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது.



சூடாமணி முதல் பாதாங்குலீயகம் வரை பல ஆபரணங்கள் அணிந்த அன்னை, தனது பக்தை ஒருவரிடம் கொலுசு வாங்கி போட்டுக் கொண்டுள்ள அதிசயமும் சமீப காலத்தில் நிகழ்ந்துள்ளது.

 இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
அன்னையின் திருவாயிலிருந்து வசினீ என்ற தேவதைகள் தோன்றி அவர்கள் துதித்த பாடல்களே சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் எனப் படுகிறது. அம்பாளே அருளிச் செய்ததால் லலிதா சஹஸ்ரநாமம் என்று அழைக்கப் படுகிறது.
 
 
அன்னப்பாவாடை அல்லது திருப்பாவாடை மஹோற்சவம்!
இந்த அன்னப்பாவாடை அல்லது திருப்பாவாடை என்னும் மகா நைவேத்தியத்தில் அம்மனை தரிசிப்பது லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்த பலனை தரும். திருமீயச்சூர் லலிதாம்பிகை சன்னதியில் மட்டும் ஆண்டு தோறும் சித்திரை பூர்ணிமா  அன்று நடப்பது வழக்கம்.
 
அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர்சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.

 சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த காட்சியை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருந்து கண்டு களித்து மீண்டும் மீண்டும் தரிசித்து இன்புறுவர்.

பக்தர்கள் தரிசனத்திற்கு பின் அந்த படையல் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.



இக்கோயில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக, சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர புராணேஸ்வரர் திருவுருவம் அமைந்துள்ளது.
 
 
இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் ஒரு புறத்தில் இருந்து பார்க்கும்போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து காணும் போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.


இப்பெருமானைப் பார்த்துவிட்டு அப்படியே சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர், ஆகியோரது திருவுருவங்களையும் கடந்து செல்கின்றோம்.
 
 
இந்த பெருங்கோயிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், போதிகை தூண்களும் அழகு சேர்க்கின்றன.
 
இக்கோயிலின் வடப் பக்கத்திலே இளங்கோயிலை தரிசனம் செய்யலாம்.
 
இளங்கோயிலின் குறிப்பு:

தல மூர்த்தி : அருள்மிகு ஸகல புவனேஸ்வரர்
தல இறைவி : அருள்மிகு வித்வன் மேகலாம்பிகா (மின்னும் மேகலையாள்)
தல விருட்சம் : மந்தார மரம்
தீர்த்தம் : காளி தீர்த்தம்
 


இத்திருக்கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.


கோபுர தரிசனத்திற்கு பின்னர் அங்கேயே சற்றுதள்ளி, இளங்கோயிலின் சுற்றுச் சுவர்களில் லிங்கோத்பவர், பிரம்மா, மகாவிஷ்ணுவாகிய மும்மூர்த்திகளின் தரிசனம் நமக்கு ஒருசேரக் கிடைக்கிறது.


இக்கோயிலின் பிரகார சுவற்றில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சதுர்முக சண்டிகேஸ்வரர் உள்ளனர். தலவிநாயகர், சண்டிகேஸ்வரர், அருணாசலேஸ்வரர், பைரவர், சூரிய பகவான், ஆகாச லிங்கம், வாயுலிங்கம் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

திருத்தல வரலாறு:

காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை என்ற இருவரும் சிவபெருமானை மனதில் நினைத்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி இருவருக்கும் ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்தார். இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் ஒரு மகன் பிறப்பான் எனக் கூறி விட்டு மறைந்தார்.
 
ஆனால் ஒரு வருடம் கழித்து விநநையின் அண்டத்தில் இருந்து ஒரு பறவை பிறந்து அது பறந்து சென்று விட்டது. தனக்கு மகன் பிறக்காமல், இப்படி ஆகிவிட்டதே என்று ஈஸ்வரனிடம் வருந்தி கேட்கிறாள். அதற்கு முக்கண்ணன் ''நான் கூறியது போலவே அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாக கருடன் என்ற பெயருடன் உலகமெங்கிலும் போற்றிப் புகழப் படுவான்'' என்று  கூறினார்.

இதனிடையே விநநைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்று அவசரப்பட்டு தனக்குக் கொடுக்கப் பட்ட முட்டையை பிரித்துப் பார்த்தாள் கர்த்துரு. இவளது அவசரத்தினால் அந்த முட்டையில் இருந்து சரியானபடி வளர்ச்சி அடையாத தலை, முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த குழந்தை பிறந்தது. தான் செய்த தவறை உணர்ந்த கர்த்துரு இறைவனை நாடி, இப்படி ஆகி விட்டதே என மனம் வருந்தினாள். சிவபிரானும், ''நான் சொல்லியதுபோல் இக்குழந்தை சூரியனுக்கு சாரதியாக விளங்கி உலகப் புகழ் பெறுவான்'' என்று கூறினார்.

இந்நிலையில் கர்த்துரு தனது மகனுக்கு அருணன் எனப் பெயர் சூட்டினாள். இறைவனின் ஆணைப் படி சூரியனுக்கு சாரதியாக விளங்கினான். அருணன் சிவனின் இருப்பிடமான கைலாசம் சென்று அவரை தரிசித்து வர சூரியனிடம் அனுமதி கேட்டான். சூரியன் அருணனை பரிகசித்து, பெருமானை பார்க்கச் செல்ல உன்னால் முடியாது என்றும் கூற நம்பிக்கை இழக்காத அருணன் இறைவனை நினைத்து தவமியற்றினான்.

இதனைக் கண்ணுற்ற கைலாசநாதன், அருணனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். சூரியனிடம், ''என்னைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் தவமிருந்த அருணனுக்கு நீ கொடுத்த கஷ்டங்கள் என்னை வருத்தமடையச் செய்தது. இதன் காரணமாக உன் மேனி கார் மேக வண்ணமாய் மாறட்டும்'' என்று சாபமிட்டார். இதன் காரணமாக இப்பூவுலகமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ட பரமேஸ்வரி தாய் சிவனிடம், சூரியன் கரு நிறமாய் ஆனதினால் உலகமே இருண்டுவிட்டது. சூரியன் இன்றி உலகம் இயங்காதே என வினவினார். கவலை கொள்ள வேண்டாம் தேவி. அருணனின் தவ பலத்தினால் உலகம் வெளிச்சம் பெரும் என பெருமான் கூறினார். தனது தவறினை உணர்ந்த கதிரவன் இறைவனிடம் மன்னித்தருள வேண்டினார்.
 
ஏழு மாதங்கள்,  மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போது தான் உனது பாவம் தீரும்'  என அருளினார்.  இதை அடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை  வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே,  சிவனாரிடம் சென்று, 'என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?' என்று  கேட்க...  வெகுண்டாள் ஸ்ரீபார்வதி.  'உரிய ‍‌‌‍‌நேரம் வரும் வரை பொறுக்க மாட்டாயா?' என்று கடும்  உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபமிட முற்படுகிறார்.
 
பதறிப்போன சிவனார், 'ஏற்கெனவே  கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன்.  இன்னொரு சாபம் கொடுத்தல், இந்த உலகம்  இருளில் தவிக்கும்.  வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!' என்று உமையவளை அமைதிப்படுத்தினார்.  பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்கு சாப விமோசனம் அளித்தார்.  
 
அவரி தடுத்தாட்கொண்ட இறைவன், இவ்வுலகம் பிரகாசம் பெறவும், நீ சாந்தமடையவும் தவமிருப்பாயாக என்று கூறிவிட்டு, உரிய காலம் வந்ததும், சூரிய பகவானுக்கு சாப விமோசனம் அளித்தார். சூரியனும் தனக்கிட்ட சாபத்திலிருந்து மீண்டு வந்ததினால் இத் திருத்தலம் மீயச்சூர் என அழைக்கப் படுகிறது.

அம்பாளும் சாந்த நாயகி ஆகிறார்.
 
வழிபட்டோர் :  
 
ஸ்ரீசனிஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் தலம் இது!
 
சூரிய பகவான், அருணன், காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை, அகத்திய முனிவர், என்று இவர்களோடு அல்லாமல் , எமன் இக்கோயிலிலேயே தங்கி எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருந்து பூஜை செய்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் தோன்றுவதால் சங்கிற்கு ஆயுளைக் கூட்டும் சக்தி உள்ளது என்பதால், சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், அதிக ஆயுளைத் தரவல்ல சங்கினைக் கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, சக்தி வாய்ந்த மூலிகைகள், எமலோகத்தின் தலவிருட்சமான பிரண்டை கலந்த சாதத்தினை அன்னதானம் செய்து சிவபிரானை வழிபட்டார் என்பது இக்கோயில் ஐதீகம்.

ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீ லலிதாம்பாளை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார். 'அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்ல அதற்குக் கிடக்கும் பலனே தனி என ஸ்ரீ ஹயக்ரீவர் பெருமான் கூறி அருளினார்.
 
 அவ்வாறே அகத்தியரும் இத்தலம் வந்து லலிதா சஹஸ்ரநாமம் ஜபித்து, அர்ச்சனை செய்து பூரண பலனைப் பெற்றார். அகத்தியர் பெருமானும் இத்தலத்தில் அன்னையை ஆராதித்து அழகிய செந்தமிழில் ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையைப் பாடியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக பாட அன்னையின் அருள் கிடைக்கப் பெறலாம்.

அருள்மிகு மேகநாதர் திருக்கோயில், திருமீயச்சூர்
திருமீயச்சூர் அஞ்சல், வழி பேரளம்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் - 609405

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 
 
 
திருமீயச்சூர் திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிச் செய்த தேவாரப் பாடல்:

காயச் செல்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன்று அறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரைத் தொழுது வினையை வீட்டுமே !!

பூவார் சடையின் முடிமேல் புனலர் அனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண் தலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம்பு எரிவாங்கி
மேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே !!

பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைகள் உடையான் மீயச் சூரானைச்
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்
அந்நேர் இமையோர் உலகம்எய்தற் கரிதன்றே !!

வேக மதநல் லியானை வெருவ உரிபோர்த்துப்
பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட
நாகம் அரைமேல் அசைத்து நடமாடியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே !!

விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாடல் ஆடலார்
பெடையார் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன்று உடையார் மீயச் சூராரே !!

குளிரும் சடைகொள் முடிமேல் கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன்று உடையான் ஒருவன் கைகொடி
நளிரும் மணிசூழ் மாலை நட்ட(ம்) நவில்நம்பன்
மிளிரும் அரவம் உடையான் மீயச் சூரானே !!

நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாம் கொள்கை யறிவொண்ணார்
காலர் கழகர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே !!

புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற்கரந்தார் உமையஞ்ச
வலிய திரள்தோள் வண்கண் அரக்கர் கோன்றன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே !!

காதில் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
போதிலவனு(ம்) மாலும் தொழப் பொங்கெரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே !!

கண்டார் நாணும் படியார் கலிங்கம் உடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகார் உயர்ந்த கொள்கையார்
பெண்தான் பாகம் உடையார் பெரிய வரைவில்லா
விண்டார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே !!

வேட முடைய பெருமான் உரையு மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞானசம் பந்தன்
பாட லாய தமிழீ ரைந்து மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே !!

திருச்சிற்றம்பலம் !!!!!
 
 

மைசூரு சாமுண்டீஸ்வரி!


 
மைசூரு மாநகரில் கால்பதிக்கும் ஒவ்வொருவரும் முதலில் கைகூப்பி வணங்குவது சாமுண்டீஸ்வரிதேவி குடி கொண்டிருக்கும் சாமுண்டிமலையை நோக்கிதான்.
 
 
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 486 அடி உயரத்தில் செங்குத்தாக காணப்படும் சாமுண்டிமலை தேவி குடி கொண்டிருக்கும் கோயிலாகவுள்ளது.
 

சாமுண்டிமலையின்  எழிலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மேலே சென்று என்ன இருக்கிறது என்று பார்க்க தோன்றும். மலைமீது சென்றால், உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி 18 கரங்களுடன் எழிலுடன் காட்சி தருகிறார்.





கோயில் முற்றத்தில் பிரமாண்ட நந்திசிலையும், எதிர் வரிசையில் மஹிசாசுரன் சிலையும் வரவேற்கும். கஷ்டத்தோடு வரும் பக்தர்கள் மனமுருகி வேண்டினால், அதை நிறைவேற்றும் அன்னையாக தேவி விளங்குகிறார்.

 
மன்னர் ஆட்சிகாலம் தொடங்கி மக்களாட்சி காலம் வரை கர்நாடக மண்ணை ஆட்சி செய்வோர் சாமுண்டீஸ்வரியின் அருளாசியை பெறாமல் ஆட்சி நடத்துவதில்லை.

 
 
ஸ்தல புராணம் :

தற்போது மைசூரு என்று அழைக்கப்படும் நகரம் முற்காலத்தில் மஹிஷாசூர, மஹிஷா மண்டலம் என்ற பெயரில் இருந்தது. மஹிஷாசூரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான்.



அவனின் தவத்திற்குமெச்சிய சிவன், நேரில் வந்து காட்சி கொடுத்ததுடன், என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். சிவனை அடிபணிந்த மஹிஷாசுரன், தனக்கு சாகாவரம் வேண்டும் என்றான். அவனின் வேண்டுதலை ஏற்று சாகாவரத்தை சிவன் வழங்கினார்.



சிவனிடம் வரம் பெற்றம ஹிஷாசுரன், தனக்கு மரணமில்லை என்பதால், அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்தான். அவனின் கொடுமையை தாங்க முடியாமல், மக்கள் தேவர்களிடம் முறையிட்டனர். மஹிஷாசுரனை அழிக்க தேவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியாக சிவனிடம் சென்ற தேவர்கள், நீங்கள் வரம் கொடுத்ததால், மஹிஷாசுரன் அட்டகாசம் செய்கிறான். அவனுக்கு கொடுத்த வரத்தை திரும்ப பெறுங்கள் அல்லது அவனை அழிக்க மாற்று வழி சொல்லுங்கள் என்று முறையிட்டனர்.



தேவர்களிடம் பேசிய சிவபெருமான், நான் வரம் கொடுக்க மட்டுமே பிறந்தவன். கொடுத்தவரத்தை திரும்பபெற என்னால் முடியாது. அதே சமயம் என்னிடம் வரம் பெற்றுள்ள மஹிஷாசுரனுக்கு ஆண்கள், பிராணிகள், ஜலம் மூலம் மரணம் ஏற்படாது. ஆனால் பெண்ணால் கண்டிப்பாக மரணம் வரும். அதுபோன்ற வரத்தைதான் நான் கொடுத்துள்ளேன்.



அவனை அழிக்க வேண்டுமானால், பெண்கள் பக்தியுடன் பார்வதியிடம் முறையிட வேண்டும் என்றார். சிவனின் யோசனையை ஏற்று பெண்பக்தர்கள் பார்வதியிடம் பக்தியுடன் வேண்டி முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்று கொண்ட பார்வதிதேவி அசுரனை அழிக்க தீர்மானித்தாள். பிரம்மா, விஷ்ணு, மகேஷ்வரனின் வரம் பெற்றும் சாமுண்டீஸ்வரி தேவியாக ஆடிமாதம் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிஷாசுர மண்ணில் பிறந்தாள்.



மஹிஷாசூரன் வதம் :

சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மஹிஷாசுரனிடம் போர் தொடுத்து அவனை வதம் செய்தார்.



அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று சாமுண்டிமலையில் குடிகொண்டாள்.



சாமுண்டீஸ்வரி தேவியை யதுகுலத்தை சேர்ந்த உடையார் பேரரசர்கள் தங்கள் குலதெய்வமாக போன்றி வணங்கி வருகிறார்கள்.  அந்த குடும்பத்தை மட்டுமில்லாமல், மாநிலத்தையும் ஆசீர்வதித்து வருகிறாள்.



உடையார் பேரரசர்கள் கடந்த 1823ம் ஆண்டு திராவிட கலையில் கோயில் அமைத்தனர். பின் 16 அடி உயரம், 26 அடி நீளத்தில் நந்திசிலை அமைக்கப்பட்டது. கோயிலுக்கு வரமலையின் நான்கு திசையிலும் பாதை அமைத்துள்ளனர். கடந்த 1827ம்ஆண்டு கிருஷ்ணராஜ உடையார் கோயில் கோபுரத்தில் 7 தங்ககலசங்கள் பொருத்தி கும்பாபிஷேகம் நடத்தினார்.



ஆடிமாதம் வரும் 3வது வெள்ளிக்கிழமை சாமுண்டீஸ்வரி தேவி பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டுகள் ஆடிமாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மூன்றாவது வெள்ளிக்கிழமை தேவிபிறந்தநாள் என்பதால் மைசூரு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
 


 
 

நிமிஷத்தில் வரமருளும் நிமிஷாம்பாள்!



நிமிஷாம்பாள் அம்மனை வழிபாட்டால் முற்பிறவி சாபங்கள், இந்தப் பிறவியில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள், தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.                                
பராசக்தி அன்னையின் சிறந்த பக்தனாக திகழ்ந்தவன் முக்தராஜன் என்ற மன்னன். அவன் தன்னுடைய நாட்டை எந்த வித குறைகளும் இல்லாதபடிக்கு ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், வறுமை இன்றும் வாழ்ந்து வந்தனர். அவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு அசுரனால் இடையூறு ஏற்பட்டது.



ஜானுசுமண்டலன் என்னும் அந்த அசுரனுக்கு, முக்த ராஜனின் பக்தியைக் கண்டு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அந்த அசுரன், முக்தராஜனுக்கு இடையூறு செய்வதையே வேலையாக மாற்றிக்கொண்டான். முக்தராஜனுக்கு, ஜானுசுமண்டலனின் இடையூறுகளை சமாளிப்பதே பெரும் சுமையாக இருந்தது. ஆகையால் நாட்டையும், நாட்டு மக்களின் குறைகளையும் உடனடியாக கவனித்து, சரி செய்ய முடியாமல் திணறினான்.

இப்படியே போனால் என்னதான் முடிவு. ஒரு நாள் இதுபற்றி முக்தராஜன் சிந்தித்தபோது, தன் அன்னையான பராசக்தியிடமே தன் குறையை கூறி வேண்டுவது என்று முடிவு செய்தான். ஜானுசுமண்டலனை அழிக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டி யாகம் செய்தான். மனமுருகி வேண்டும் பக்தனுக்கு மனம் இறங்காமல் இருப்பது தெய்வம் அல்லவே!



யாகத்தில் உதித்த நிமிஷாம்பாள் :

யாகத்தில் இருந்து உதித்த அம்பிகை, முக்தராஜன் மற்றும் அவனது நாட்டு மக்களின் வேண்டுகோளின் படி, ஜானுசுமண்டலனைப் பார்த்து ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தாள். அந்த நொடிப் பொழுதில் அசுரனான ஜானுசுமண்டலன் சாம்பலாகிப் போனான். கண நேரத்தில் தன் பக்தன் முக்தராஜனுக்கு அருள்புரிந்ததால், ‘நிமிஷாம்பாள்’ என அழைக்கப்பட்டாள்.



அசுர வதம் செய்ததால், அம்பிகைக்கு உண்டான தோஷம் நீங்க, நிமிஷாம்பாள் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தின் அருகில் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபனம் செய்து வழிபாடு செய்தாள். அதைத் தொடர்ந்து அம்பிகையின் தோஷம் நீங்கியது. அம்பிகை வழிபட்ட அந்த லிங்கம், ‘முக்தீஸ்வரர்’ என்னும் பெயரில் அழைக்கப்பட்டது.



இந்த இறைவனை கர்நாடகாவில் ‘மவுத்திகேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். தனக்கு அருள்புரிந்த அன்னைக்கு, கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள கஞ்சம் என்னும் இடத்தில் கோவில் எழுப்பினான் முக்தராஜன். அந்த அம்பிகைக்கு, ‘நிமிஷாம்பாள்’ என்று பெயரிட்டான். சமயபுரம் மாரியம்மனைப்போலவே பக்தர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுப்பவளாக திகழ்கிறாள் இந்த நிமிஷாம்பாள் தேவி.

ஆலய அமைப்பு :

அம்மனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு ஐந்து நிலை கோபுரம் முதலில் வரவேற்பு அளிக்கும். அதன் வழியாக கருவறைக்கு சென்றால், அங்கு அன்னை கிழக்கு நோக்கி நான்கு திருக் கரங்களுடன் துர்க்கையின் அம்சமாக அருள்பாலித்து கொண்டிருக்கிறார். நிமிஷாம்பாள் தேவியின் முன்பாக சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தலைக்கு மேல் தர்ம சக்கரமே குடையாய் அமைக்கப்பட்டுள்ளது. மேல் இரு கரங்களிலும் சூலமும், உடுக்கையும் உள்ளன. கீழ் இரு கரங்களிலும் அபய, வரத ஹஸ்தங்கள் உள்ளன.



நிமிஷாம்பாள் வழிபட்ட சிவலிங்கமான மவுத்திகேஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அதன் அருகிலேயே லட்சுமி நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. விநாயகர், அனுமன், சூரியன் ஆகியோருக்கும் தனிச் சன்னிதி உள்ளது.

இத்தலத்தில் சிவராத்திரி, மாத பவுர்ணமி, நவராத்திரி, நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



சென்னையில்...

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சம் என்னும் இடத்தில் நிமிஷாம்பாள் ஆலயம் உள்ளது. இதுதவிர பெங்களூரில் அக்கிப்பேட் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர், கர்நூல், தவணகிரி ஆகிய இடங்களிலும் நிமிஷாம்பாள் கோவில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் சென்னை பிராட்வேயில் உள்ள காசிச்செட்டித் தெருவில் நிமிஷாம்பாள் கோவில் இருக்கிறது.



சென்னை காசிச்செட்டி தெருவில் உள்ள கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் தென்படுவது கருவறை தான். அதனுள் நின்ற கோலத்தில் தெற்கு பார்த்த வண்ணம் நிமிஷாம்பாள் எழுந்தருளி உள்ளாள். அம்மனின் எதிரில் சிம்ம வாகனமும், சூலமும் உள்ளன. நிமிஷாம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றி, மரிக்கொழுந்து மலர் சூட்டி தொடர்ந்து 18 வாரங்கள் வழிபட்டு வந்தால் திருமணத் தடைகள் அகலும். வேலைவாய்ப்பு கிட்டும்.

கருவறை வெளிப்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி, முக்தீஸ்வரர், ஆஞ்சநேயர், முருகப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் கிழக்கு பார்த்து அருள்பாலித்து வருகின்றனர். நிமிஷாம்பாள் கருவறையின் பின்புறம் நவக்கிரக சன்னிதி உள்ளது. இதில் சூரியன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பது போன்ற சிலை கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்த தலத்தில் நிமிஷாம்பாள் ஜெயந்தி அன்று அம்மனுக்கு 108 கலச அபிஷேகமும், துர்க்கா ஹோமமும் நடைபெறுகிறது. நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆண்டு தோறும் வைகாசி மாதம் வளர்பிறை தசமி நாளில் கொண்டாடப்படுகிறது.



அம்பிகை வழிபட்ட லிங்கம் :

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள கஞ்சத்தில் அமைந்துள்ளது நிமிஷாம்பாள் ஆலயம். இங்கு அம்பாள் வழிபட்ட லிங்கம், ‘மவுத்திகேஸ்வரர்’ என்ற பெயரில் தனிச் சன்னிதியில் இருக்கிறது. மவுத்திகேஸ்வரர் என்னும் முக்திகேஸ்வரருக்கு, முகம் போன்ற கவசம் இந்த தலத்தில் சாத்தப்பட்டுள்ளது. இத்தல ஈசனை பிரதோஷ நாட்களில் வழிபட்டால் முற்பிறவி சாபங்கள், இந்தப் பிறவியில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள், தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.
 
 

||ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் “ஸெளபாக்யவர்த்தனீ”||

சீர்மிகு வாழ்வு சிறப்புடனும் செழிப்புடனும் அமையவே!

ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜன விதி:

ஸீதா ஸீதேச் சந்த்ரோபல ஜலல வைராக்ய ரசனா |

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸெளஹித்ய கரணம்

த்வதீயாபிர் வாக்பிஸ் தவஜனனி வாசாம் ஸ்துதிரியம் ||

 

சிறந்த செல்வம் பெற, இதைக் கூறிவர தன தான்யங்கள் பெருகி நன்மை உண்டாகும்.

இந்த துதியில் சகலவிதமான ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் “ஸெளபாக்யவர்த்தனீ” இரகசியம் அடங்கி இருக்கிறது, ஸ்ரீ சக்ர ராஜத்தை துதித்து நித்யமும் 12 முறை இரு

ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரம்!

துர்வாச முனிவர் அருளிய கீழ்க்காணும் ‘ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரத்தை சொல்லிவர விரைவில் மணவாழ்க்கை அமையப்பெறும்.

ஓம் ஹ்ரீம் யோகின்யை நம:
ஓம் ஹ்ரீம் யோகேஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் பயங்கர்யை நம:
ஓம் ஹ்ரீம் பந்தூக வர்ணாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸுகாத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் அம்போஜருத்யை நம:
ஓம் ஹ்ரீம் அபிலாஷ தாத்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் நிர்ஜாதாரு கல்பாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் மந்த்ராண்யை நம:
ஓம் ஹ்ரீம் காமாயை நம: (10)

ஓம் ஹ்ரீம் க்ஷேமங்கராண்யை நம:
ஓம் ஹ்ரீம் பால்யாவஸ்தாயை நம:
ஓம் ஹ்ரீம் லலிதாயை நம:
ஓம் ஹ்ரீம் பவத்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீகண்டபாமின்யை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரபதீன வேண்யை நம:
ஓம் ஹ்ரீம் நவயெளவனாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ துர்க்காயை நம:
ஓம் ஹ்ரீம் விலாச பயாக்ஷிண்யை நம:
ஓம் ஹ்ரீம் க்ருச்சாயை நம: (20)

ஓம் ஹ்ரீம் விலக்ராயை நம:
ஓம் ஹ்ரீம் பர்யுஸ்த்ரிதாயை நம:
ஓம் ஹ்ரீம் குசபராயை நம: 
ஓம் ஹ்ரீம் ஜகன்யை நம:
ஓம் ஹ்ரீம் ஜனகாயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரசுர பக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் கிரிசாயை நம:
ஓம் ஹ்ரீம் பரிசாரிண்யை நம:
ஓம் ஹ்ரீம் அனுகூலாயை நம:
ஓம் ஹ்ரீம் ஈச்வர்யை நம: (30)

ஓம் ஹ்ரீம் க்ரியாட்ஹ்யஜாயை நம:
ஓம் ஹ்ரீம் பஞ்ச ஹுதாசனாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸதாசிவாயை நம:
ஓம் ஹ்ரீம் வித்ராச தாத்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் வர்ணதாமல ஸத்கராயை நம:
ஓம் ஹ்ரீம் மந்தஹாஸாயை நம:
ஓம் ஹ்ரீம் மோஹாவஹாயை நம:
ஓம் ஹ்ரீம் பவான்யை நம:
ஓம் ஹ்ரீம் பத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரமோத ஜனன்யை நம: (40)

ஓம் ஹ்ரீம் நந்தானுபூதி ரஸிகாயை நம:
ஓம் ஹ்ரீம் கல்யாண்யை நம:
ஓம் ஹ்ரீம் மஹேஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் சம்முக்த மன்மத சராசன
சாருரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் அம்பிகாயை நம:
ஓம் ஹ்ரீம் புவன ஸுந்தர்யை நம:
ஓம் ஹ்ரீம் தீஷ்ணாம்பராலாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸுந்தர்யை நம:
ஓம் ஹ்ரீம் ருத்ரப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் கஸ்தூரிகா திலகின்யை நம: (50)

ஓம் ஹ்ரீம் ரக்தாம்பராபரண
மால்யதராயை நம:
ஓம் ஹ்ரீம் நவகுங்கும மாத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் சாருரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் கிரிஜாயை நம:
ஓம் ஹ்ரீம் கனகமங்கள சூத்ர சோபாயை நம:
ஓம் ஹ்ரீம் சந்த்ரார்த்த சாரு மகுடாயை நம:
ஓம் ஹ்ரீம் நவபத்ம ஸம்ஸ்த்தாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரிநேத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் கதம்ப வன வாஸின்யை நம:
ஓம் ஹ்ரீம் உத்வேலமத்ய வஸத்யை நம: (60)

ஓம் ஹ்ரீம் மதுராங்காயை நம:
ஓம் ஹ்ரீம் மாயாயை நம:
ஓம் ஹ்ரீம் தத்வாத்மிகாயை நம:
ஓம் ஹ்ரீம் பகவத்யை நம:
ஓம் ஹ்ரீம் சம்பு ப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் சசிகலா வதம்ஸாயை நம:
ஓம் ஹ்ரீம் பாசபாண்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸம்பத்ப்ரதான நிரதாயை நம:
ஓம் ஹ்ரீம் புவனேச்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் அபாக்ருபாயைக்ஷ நம: (70)

ஓம் ஹ்ரீம் ஆருட துங்க துர்காயை நம:
ஓம் ஹ்ரீம் ம்ருது பாஹுவல்யை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரகல்பாயை நம:
ஓம் ஹ்ரீம் மனோஞாயை நம:
ஓம் ஹ்ரீம் காமாத்மிகாயை நம:
ஓம் ஹ்ரீம் அகில தர்ம மூர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் ஜயாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரிகுணஸ்வரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் கருணாம்ருதாயை நம:
ஓம் ஹ்ரீம் சமஸ்த மூர்த்யை நம: (80)

ஓம் ஹ்ரீம் விஸ்வஜன மோஹன
திவமாயாயை நம:
ஓம் ஹ்ரீம் ஜகதீஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் கர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் பர்த்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹர்த்ர்யை நம: 
ஓம் ஹ்ரீம் விதிஹராத்ம சக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் புக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் அமிதப்ரஸூத்யை நம:
ஓம் ஹ்ரீம் பக்தானுகம்பின்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹாயை
நம: (90)

ஓம் ஹ்ரீம் ஸாகர ஸுதாயை நம:
ஓம் ஹ்ரீம் முனிமண்டல
த்ருச்யமூர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸுராபகாயை நம:
ஓம் ஹ்ரீம் வ்யாஹாரரூப கக்ஷமாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரிப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் நீஹாரசைல தனயாயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ருஹத் ப்ரகாச ரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் பரேச மஹிஷ்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹரஜீவ நாதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரிப்ர முகாபி வந்த்யாயை நம: (100)

ஓம் ஹ்ரீம் ஹேரம்ப சக்திதர நந்தின்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹேம வாண்யை நம:
ஓம் ஹ்ரீம் சண்டிகாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹேமவத்யை நம:
ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
ஓம் ஹ்ரீம் மதுகமலாயை நம:
ஓம் ஹ்ரீம் ச்யாமாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரைலோக்ய ஸமயோகின்யை நம:
ஓம் ஹ்ரீம் பரதேவதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஜகன்மோஹின்யை
நம: (110)

ஓம் ஹ்ரீம் அத்ரிஸுதாயை நம:
ஓம் ஹ்ரீம் இஷ்டார்தததாயை நம:
ஓம் ஹ்ரீம் தேவ முனீந்த்ர வந்தித
பதாயை நம:
ஓம் ஹ்ரீம் பார்வத்யை நம:
ஓம் ஹ்ரீம் வரப்ரதாயை நம:
ஓம் ஹ்ரீம் தரா தரேந்த்ர கன்யகாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரித்ரா ஸமன்விதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்வயம்வரா பார்வத்யை நம: (118)
 
 

அம்பிகை அருள் வலம்! 51 சக்தி பீடங்கள்!


51 சக்தி பீடங்கள்! பிரம்மாவின் புதல்வர்களுள் ஒருவன் தட்சன். அவனை தட்சப் பிரஜாபதி என அனைவரும் அழைப்பர். அவன் மகள் சதி தேவி எனப்படும் தாட்சாயணி. அவள்  சிவபெருமானை மணந்து கொண்டாள். தட்சன் மிகப்பெரிய அளவில் யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து விண்ணுலகிலுள்ள தேவர்கள் அனைவரையும்  யாகத்தில் கலந்து கொள்ள அழைத்தான். சதிதேவியையும், சிவபெருமானையும் தவிர தேவர்கள், முனிவர்கள் அனைவரும் யாகத்தில் கலந்து கொண்டனர். தன்  தந்தை யாகத்திற்கு அழைக்காவிட்டாலும் தன் கணவரான ஈசனுக்குச் சேர வேண்டிய ஹவிர்பாகத்தைப் பெற தீர்மானித்தாள் சதி தேவி. அதற்கேற்றாற்போல்  வானவீதியில் அனைவரும் தட்சயாகத்திற்குப் போகும் காட்சி அவள் மனதை மேலும் தூண்ட, யாகத்திற்குச் செல்ல ஈசனிடம் அனுமதி கேட்டாள் சதிதேவி.  அழையா விருந்தாளியாகச் சென்று அவமதிக்கப்படப்போகிறாளே எனும் ஆதங்கத்தில் ஈசன் அதற்கு அனுமதி மறுத்தார். இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது.  அப்போது தன் சக்தியைக் காட்ட சதிதேவி ஈசனுக்கு எடுத்துக் காட்டிய பத்து உருவங்களே தசமகாவித்யாவாக உபாசகர்களால் போற்றப்படுகின்றன.

மை போன்ற கருநிறம் கொண்டவளாய்காளியாய் உருமாறி பயங்கரமான பற்களைக் காட்டி இடிமுழக்கம் போல் பயங்கர சத்தத்துடன் சிரித்தாள் சதி. தன்  முக்கண்களாலும் ஈசனை நோக்க சர்வநாடியும் ஒடுங்கி நின்றார் ஈசன். ஈசனுக்கு நேர் எதிரில் காளியாகவும், அவருக்கு மேலே தாராவாகவும், வலது புறம்  சின்னமஸ்தாவாகவும், இடது புறம் புவனேஸ்வரியாகவும், பின்புறம் பகளாமுகியாகவும், கீழ்ப்புறம் பைரவியாகவும், தென்கிழக்கே தூமாவதியாகவும், தென்மேற்கே  திரிபுர சுந்தரியாகவும் வடமேற்கில் மாதங்கியாகவும் வடகிழக்கில் கமலாத்மிகாவாகவும் உருமாறி நின்ற சதி தேவியின் சக்தி முன், தான் ஒன்றும் செய்ய  முடியாது என்பதை ஈசன் உணர்ந்தார். வேறு வழியின்றி யாகத்திற்குச் செல்ல அனுமதி தந்தார். யாகசாலையில் நுழைந்த சதியை அவமானப்படுத்திய  தட்சப்பிரஜாபதி ஈசனின் மகிமையை அறியாமல் அவரது தோற்றத்தை இகழ்ந்தான்.

அதனால் மனம் நொந்த சதிதேவி அந்த யாக குண்டத்தில் விழுந்தாள். அதை அறிந்த ஈசன் வீரபத்திரரை தோற்றுவித்து தட்சயாகத்தை அழித்தார். சதியின்  உடலை தன் தோளில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அதனால் உலகமே நடுங்கியது. திருமால் தன் சக்ராயுதத்தால் சதிதேவியின் உடலை 51  துண்டுகளாக்கினார். அவை பாரத தேசமெங்கும் சிதறி விழுந்து சக்தி பீடங்களாயின. தசமகாவித்யா தேவியர் தோன்ற காரணமான தட்சயாகம் 51 சக்திபீடங்கள்  தோன்றியதோடு முடிந்தது. பிறகு தாட்சாயிணி பர்வதராஜன் மகள் பார்வதியாகப் பிறந்து ஈசனை மணந்தாள். சனத்குமாரர்கள் (பிரம்மபுத்திரர்கள்) சதுச்ருங்க  மலையில் சதாசிவனை நோக்கித் தவம் செய்தனர். அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் ரிஷபாரூடராக தோன்றினார். ஆனாலும், ஆழ்ந்த தியானத்திலிருந்து  சனத்குமாரர்கள் கண் விழித்துப் பார்க்கவில்லை. அவர்களை எழுப்ப சிவன் டமருகத்தை (உடுக்கை) வேகமாய் ஆட்டினார்.

சனத்குமாரர்கள் கண்விழித்து சிவனடி பணிந்தனர். இதனை சிவமகா புராணம் சொல்கிறது. அந்த உடுக்கையிலிருந்து ‘டம்டம்’ என்று எழுந்த நாதமே  சமஸ்கிருதத்தின் 51 எழுத்துகளாயின என்றும், இவை பாரத தேசத்தின் 51 இடங்களில் எரிநட்சத்திரம்போல் தெறித்து விழுந்தன என்றும் சொல்வார்கள். அவை,  ‘அ’ முதல் ‘க்ஷ’ வரையிலான 51 எழுத்துகளாகும். சமஸ்கிருதத்தின் 51 அட்சரங்கள் (எழுத்துகள்) தோன்றிய இடங்களிலேயே பிறகு தேவியின் உடல்  பகுதிகள் விழுந்தன. ஆகவே அவற்றை 51 அட்சர சக்தி பீடங்கள் என்பர். இந்த அட்சர சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை மேரு தந்திரம் எனும் நூல்  கூறுகிறது. தேவி பாகவதம், ஸ்கந்த புராணம், பத்ம புராணம் ஆகிய நூல்களில் அம்பிகைக்கு 108 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. வேதவியாசரின்  தேவிபாகவதம் 108 சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது. காளிகா புராணம் நான்கு ஆதி சக்தி பீடங்கள் இருப்பதாகக் கூறுகிறது. மேலும் ஆதி சங்கராச்சாரியாரின்  ‘அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரம்’ 18 மஹா சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.

தந்திர சூடாமணி என்ற நூல் 51 அட்சர சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது. (52 என்று கூறுபவர்களும் உண்டு.) லலிதா ஸகஸ்ரநாம ஸ்தோத்திரத்திலும்  ‘பீடங்களும் அங்க தேவதைகளும்’ என்ற பகுதியில் சக்தி பீடங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. இதில் பஞ்சாசத் பீட ரூபிணீ என்ற பதம் வருகிறது.  மார்க்கண்டேய புராணமும் திருவிளையாடற் புராணமும் 64 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்த 64 பீடங்களும் தேவி பாகவதத்தில்  கொடுக்கப்பட்டுள்ளன. சம்ஸ்க்ருதத்தின் 51 அட்சரங்களுக்கும் 51 பீடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நவ சக்தி பீடங்கள் என்ற ஒன்பது பீடங்கள் உள்ளதாகவும்  கூறப்படுகிறது. நித்யோத்சவம், வாமகேஸ்வர தந்த்ரம் போன்ற நூல்களும் சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகின்றன. சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின்  ரூபமான சதிதேவி எனும் தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் உருவான கோயில்களாகும்.

சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருள் கொள்ளலாம். இதில் 51 சக்தி பீடங்கள் அக்ஷரசக்தி பீடங்கள் என்றும், 18 சக்தி பீடங்கள் மகா சக்தி  பீடங்கள் என்றும், நான்கு சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் வழங்கப்படுகின்றன.  சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியாவிட்டாலும் ஆதி  சக்தி பீடங்களான அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா ஆலயம், கொல்கொத்தாவின் காளிகாட் ஆலயம், ஒடிஸாவின் பெர்ஹாம்பூரிலுள்ள  தாராதாரிணி ஆலயம், பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கொலுவீற்றருளும் விமலா தேவி சந்நதி ஆகிய நான்கு சக்தி பீடங்களையாவது கட்டாயம் தரிசிக்க வேண்டும்  என தேவி தந்திரம் எனும் நூல் கூறுகிறது. எந்த ஊரில் அருளும் சக்திபீட நாயகியை தரிசிக்கச் சென்றாலும் அங்கு அருளும் பைரவரையும் கட்டாயம் வணங்க  வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக சொல்லப்பட்டுள்ளது. எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல் பாரதமெங்கும் மட்டுமல்லாமல் இலங்கையிலும்,  பாகிஸ்தான் பலூசிஸ்தானிலும் சக்தி பீட நாயகியாய் அம்பிகை அருள்கிறாள். இனி அடுத்தடுத்து சக்தி பீட நாயகியரை தரிசிப்போம்.


1. மூகாம்பிகை-கொல்லூர் - (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம் - (காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்


--
பராசக்தியின் 51 சக்திபீடங்கள் இந்தியாவில் தமிழ்நாடு  
1.காஞ்சிபுரம் (காமகோடி பீடம்) காமாக்ஷி,
2.மதுரை (மந்த்ரிணீ பீடம், மனோன்மணி பீடம்) மீனாக்ஷி (மந்த்ரிணீ, இராஜமாதங்கி)
3.திருஆனைக்கா (தண்டினீ பீடம், ஞானபீடம்) அகிலாண்டேஸ்வரி (மஹாவாராகி, ஸ்ரீதேவி, தண்டநாதா)
4.ராமேஸ்வரம் (ஸேது பீடம்) பர்வதவர்த்தினி,
5.பாபநாசம் (விமலா பீடம்) விமலை (உலகநாயகி),
 6.திருவாரூர் (கமலை பீடம்) கமலாம்பாள்,
7.கன்யாகுமரி (குமாரி பீடம்) குமாரி,
8.திருவையாறு (தர்ம பீடம்) தர்மஸம்வர்த்தினி,
9.திருவண்ணாமலை (அருண பீடம்) அபீதகுசாம்பாள்,
10.திருக்கடவூர் (கால பீடம்) (அஸ்டவீரட்டானம்) அபிராமி,
11.திருக்குற்றாலம் (பராசக்தி பீடம், யோகபீடம்) பராசக்தி,
12.கும்பகோணம் (மந்திர சக்தி பீடம்) ஸ்ரீமங்களாம்பிகை,
13.தேவிப்பட்டினம் (வீரசக்தி பீடம்) மகிஷமர்த்தினி,
 14.திருவெண்காடு (ப்ரணவ பீடம்) ப்ருஹ்ம வித்யா,
15.திருநெல்வேலி (காந்தி பீடம்) காந்திமதி,
16.திருவொற்றியூர் (இக்ஷ பீடம்) திரிபுரசுந்தரி,
17.திருவாலங்காடு (காளி பீடம்) மகாகாளி, 
18.ஈங்கோய்மலை(திருச்சி) (சாயா பீடம்) ல்லிதா கேரளா
19.நந்திபுரம் (கல்யாணி பீடம், பகவதி பீடம்) நந்தினி (ஹேமாம்பிகை) கர்நாடகா
20.கொல்லூர் (அர்த்தநாரி பீடம்) மூகாம்பிகை,
 21.மைசூர் (சம்ப்ரதாய பீடம்) சாமுண்டி,
22.கோகர்ணம் (கர்ண பீடம்) பத்ரகர்ணி, ஆந்திரா
23.காளகஸ்த்தி (ஞான பீடம்) ஞானப்ரஸுந்தாம்பிகை,
 24.த்ராக்ஷாராமா (மாணிக்க பீடம்) மாணிக்காம்பாள்,
25.ஸ்ரீசைலம் (ஸ்ரீசைல பீடம்) பிரமராம்பாள், மகராஷ்டிரம் (மும்பை)
26. கோலாப்பூர்  (கரவீர பீடம்) மஹாலஷ்மி,
 27.த்ரியம்பகம் (திரிகோண பீடம்) த்ரியம்பகதேவி,
 28.துள்ஜாபுரம் (உத்பலா பீடம்) பவானி, ஒரிசா
29. பூரி (பைரவி பீடம்) பைரவி, குஜராத்
30.ஸோமநாதம் (ப்ரபாஸர பீடம்) சந்திரபாகா,
31.அம்பாஜி (பிருந்தாவனம்) (துவாரகை) (முத்தி பீடம்) குமாரி (பத்ரகாளி), ம.பி.
 32.மஹாகாளம் (மஹோத்பலா பீடம்) சங்கரி,
33.உஜ்ஜயனி (ருத்ராணி பீடம்) மஹாகாளி, ராஜஸ்தான்
 34.புஷ்கரம் (காயத்ரீ பீடம்) காயத்ரி, உ.பி.
35.காசி (மணிகர்ணிகா பீடம்) விசாலாஷி,
36.வைதரணி (விரஜா பீடம்) விரஜை, மே.வ.
37.கல்கத்தா (உக்ரசக்தி பீடம்) காளி, பீகார்
38.கயா (திரிவேணி பீடம்) மந்திரிணி, பஞ்சாப்
39.ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) திரிபுரமாலினி, ஹரியானா
40.ஹஸ்திணாபுரம் (ஜெயந்தி பீடம்) முக்திநாயகி,
 41.குருக்ஷேத்ரம் (உபதேச பீடம்) ஸ்தாணுப்பிரியை, இ.பி.
42.நாகுலம் (தேவிகா தடம்) (உட்டியாண பீடம்) நகுலேஸ்வரி,
43.ருத்ரகோடி (கேதாரம்) (ருத்ரசக்தி பீடம்) மார்க்கதாயினி (கௌரி),
 44.நீலபர்வதம் (சிம்லா) (ச்யாமளா பீடம்) நீலாம்பிகை,
45.ப்ரயாகை (ப்ரயாகை பீடம்) லலிதா, அஸ்ஸாம்
46.காமரூபம் (காமகிரி பீடம்) காமரூபிணி, மிர்ஜாப்பூர்
47.விந்தியாசலம் (விந்தியாசல  பீடம்) நந்தாதேவி, காஷ்மீர்
48.ஸ்ரீநகர் (ஜ்வாலாமுகி பீடம்) ஜம்புநாதேஸ்வரி,
 49.அம்பத்தூர் (வைஷ்ணவி பீடம்) வைஷ்ணவி, நேபாளம்
50.பசுபதி – காட்மாண்ட் (சக்தி பீடம்) பவானி, திபெத்
51.மானஸரொவர் (த்யாக பீடம்) தாக்ஷாயனி.

1 - ஒட்டியாண பீடம் - காஞ்சி காமாட்சி!

 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்புகள் இந்தக் காஞ்சியிலே விழுந்ததாகக் கருதப்படுகிறது. ஒட்டியாண பீடம் என இந்தப் பீடம் சிறப்பிக்கப்படுகிறது.

காஞ்சியில் அருளாட்சி புரியும் ஏகாம்பரநாதரும், வரதராஜப்பெருமாளும் உற்சவ மூர்த்திகளாக உலாவரும்போது அன்னை காமாட்சியை வலம் வந்து போவது வழக்கம். இத்தலத்தின் உள்ளே சென்றால் திசைகளை அறியமுடியாத ஆன்மிக உணர்வு மேலோங்குகிறது. சேக்கிழார் கூட இத்தலத்தை திசைமயக்கம் உள்ள ஆலயம் எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தலத்தில் சாஸ்தா, ராஜமாதங்கி, அன்னபூரணி, ஆதிசங்கரர் போன்றோர் பிராகாரத்தில் அருள்கின்றனர். தீபாவளியன்று பல்வேறு விதமான இனிப்புவகைகள் கொண்டு அன்னபூரணியை அலங்கரிப்பது வழக்கம். இன்றும் உற்சவ காலங்களில் உற்சவ காமாட்சி ஆலயத்தை விட்டு வெளியே போகும்போது ஆதி சங்கரர் சந்நதி முன் நின்று அனுமதி பெற்று பின்னரே ஊர்வலம் செல்வது வழக்கம். இத்தலத்தில் வெளி வாயில் அருகே ஞானகூபம் எனும் கிணறு உள்ளது.

பஞ்சமூர்த்திகளால் உருவாக்கப்பட்ட பஞ்சதீர்த்த குளமும் உள்ளது. இது உலகாணித் தீர்த்தம் என்றும் வழங்கப்படு கிறது. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வெளிப்பிராகாரத்திலிருந்தே தங்கம் வேய்ந்த கருவறை கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாக்ஷி. கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. க்ஷி என்றால் ஆறு. அதாவது படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் எனும் ஐந்தொழில்களையும் சக்தி பேதம் மூன்று. சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள். மற்றும் கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள். சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் காட்சிதருகிறாள். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு. கடைக்கண் பார்வையினாலே பக்தர்கள் கோரும் நலனைத் தரும் அன்புத் தாய், காமாட்சி. ஸ்ரீநகரத்தில் லலிதாம்பிகை எத்திருக்கோலத்தில் அருள்வதாக கூறப்பட்டுள்ளதோ அதே திருக்கோலத்தில் பூவுலகில் காமாட்சியம்மன் அருட்கோலம் கொண்டதாக ஐதீகம். காஞ்சிபுரத்திலுள்ள எல்லாக் கோயில்களும் காமாட்சியம்மன் கோயிலை நோக்கியே அமைந்துள்ளன. இக்கோயிலின் முதல் பிராகாரத்தில் ஆதிசங்கரர் யோகாசனத்தில், தியான நிலையில் அமர்ந்துள்ள காட்சியைக் காணலாம். காமாட்சி தேவி காரடையான் நோன்பு மேற்கொண்டு கம்பாநதி வெள்ளப் பெருக்கிலிருந்து ஈசனைக் காப்பாற்றியதால் இத்தலத்தில் காரடையான் நோன்பு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது.

அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்துள் அருள்பவள் என்று கூறப்பட்டுள்ளதால், கருவறை முக்கோண வடிவில் அமைந்துள்ளது. வாராஹியின் எதிரே உள்ள சந்தான ஸ்தம்பத்தை வலம் வந்து வணங்குபவர்களுக்கு மழலை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் மேற்கு, காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள அன்னபூரணியை தர்மத்வாரம், பிக்ஷத்வாரம் போன்ற துவாரங்கள் மூலமும் தரிசிக்கலாம். பிக்ஷத்வாரத்தின் மூலம் அன்னபூரணியை வணங்கி ‘பவதி பிக்ஷாம்தேஹி’ என கையேந்தி பிச்சை கேட்டு வழிபட்டால் நம் வாழ்வில் உணவுப் பஞ்சம் வராது என்கிறார்கள். இத்தலத்தில் மூலஸ்தான காமாட்சி, தபஸ் காமாட்சி, பிலாகாஸ காமாட்சி, உற்சவ காமாட்சி, பங்காரு காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் அருள்கின்றனர். கனிவான தன் கண் வீச்சிலேயே பக்தர்களைக் காப்பதால், அன்னை தன் கரங்களால் அபய, வரத முத்திரைகளைக் காட்டவில்லை. காமாட்சியை வழிபட வரும் ஆண்கள் மேலாடை அணிந்திருக்கக் கூடாது என்பது இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் ஒன்று.

இங்கு எழுந்தருளும் முன் செங்கழுநீரோடை பிள்ளையார் கோயில் தெருவில் ஆதிகாமாட்சியாக கோயில் கொண்டாள், தேவி. ஆகவே ஆதிகாமாட்சியை தரிசிப்பதும் அவசியம். ஆதிசங்கரருக்கே இத்தலத்தில் முதல் மரியாதை. அவரது அனுமதி பெற்றே அம்பாள் வீதியுலா வருவாள். அப்போது அம்பாளை நோக்கியபடியே உலா வருவார் ஆதிசங்கரர். அம்பிகையின் கருவறை விமானமும், ஆதிசங்கரரின் விமானமும் தங்கத்தால் ஆனவை. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று ஏலவார்குழலியம்மன், ஏகாம்பரநாதர் திருமணம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். அதே சமயம் நூற்றுக்கணக்கான பக்த ஜோடிகளுக்கும் திருமணமும் நடக்கும். காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் அவற்றில் அம்மன் சந்நதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழ்கிறாள். காமாட்சி அம்பாள் சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் காமகோடி காமாட்சி என அழைக்கப்படுகிறாள்.

சென்னையில் இருந்து 73 கிலோ மீட்டர் தூரத்திலேயே காஞ்சிபுரம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 90 நிமிடங்களில் செல்லக்கூடியதாக இருக்கும்.

 

2 - ஒட்டியாண பீடம் - காஞ்சி காமாட்சி!

காஞ்சிபுரம் - ஒட்டியாண பீடம்
51 சக்தி பீடங்கள் :ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழ்வதும், காமகோடி பீடத்தினரால் உபாசிக்கப்படும் தேவியுமான காஞ்சி அன்னை காமாட்சி பேசும் தெய்வமாக போற்றப்படுகிறாள். வேண்டும் வரங்களை விரைந்து தரும் வரப்பிரசாதியும் இவளே. காமாட்சி எனும் திருநாமத்தில் கா என்பது சரஸ்வதியையும், மா என்பது லட்சுமியையும் குறிக்கும். அட்சி என்பது கண்ணாக உடையவள் என்று பொருள்படும். அதாவது, கலைமகளையும், திருமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டவள் காமாட்சி என்பதையே அவளது திருப்பெயர் உணர்த்துகிறது. நாடி வரும் பக்தர்களுக்கு கல்வியையும், செல்வத்தையும் ஒருங்கே தருபவளாக இந்த அம்பிகை விளங்குகிறாள். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளாள்.

தந்திர சூடாமணி எனும் நூலின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இத்திருத்தலம் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. காஞ்சிக்கு வந்து அன்னை கொலுவிருந்ததற்கு காரணம் உண்டு. கயிலையில் சிவனின் கண் பொத்தி விளையாடினாள் உமையவள். ஈசனின் நெற்றிக்கண் ஒளிபட்டு பார்வதி கருநிறம் கொண்டாள். சாபத்தின் விளைவாய் காசியில் சில காலம் அன்னபூரணியாகவும், மாங்காட்டில் பஞ்சாக்னி வளர்த்து அதன் நடுவே காமாட்சியாக தவமிருந்து, பிறகு சத்தியவிரத க்ஷேத்திரமான காஞ்சியில் மணலை லிங்கமாக பிடித்து பூஜித்தாள். அப்போது கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வர மணல் லிங்கத்தை தன் திருக்கரத்தால் கரையாவண்ணம் காத்தாள். பஞ்சாக்னி வளர்த்து  தவமிருந்து காம இச்சையை சுட்டெரித்ததால் காமாட்சி எனும் பெயருடன் சாப விமோசனம் பெற்றாள். அதேசமயம் மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உருவான பண்டாசுரன் எனும் அசுரனை அனைத்து தேவர்களின் துணையோடு வதைத்த லலிதா திரிபுரசுந்தரியின் வடிவினளாக இத்தலத்தில் நிலைகொண்டாள்.

தன் கணவரான ஈசன் அளித்த இரண்டு நாழி அளவு நெல்லினைக் கொண்டே  இவ்வுலகில் 32 அறங்களையும் வளர்த்ததால் அறம் வளர்த்த நாயகி என்ற சிறப்புப் பெயரும் இந்த அன்னைக்கு உண்டு. இத்தேவி அமர்ந்துள்ள இடம் காம கோட்டம் என அழைக்கப்படுகிறது. காம கோட்டம் என்றால் விரும்பியவற்றையெல்லாம் தருவது என்று பொருள். காமாட்சியை வலம் வந்து வரம் கேட்டால் தட்டாது தருவாள் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆலயத்தில் பலிபீடம் அஸ்திரதேவி எனும் தேவியோடு அபூர்வமாக உள்ளது. முதல் பிராகாரத்தில் இருபத்து நான்கு தூண்கள் கொண்ட காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது. காமகோடி காமாட்சி, அஞ்சன காமாட்சி எனும் அரூப லட்சுமி, ஸ்ரீசக்ரம் என மூன்று வடிவங்களில் இங்கு தேவி ஆராதிக்கப்படுகிறாள். முதல் வடிவான காஞ்சி காமாட்சி, காயத்ரி மண்டபத்தின் நடுவில் தென் கிழக்கு திசையை நோக்கி நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் தேவி அருட்காட்சியளிக்கிறாள்.

மற்ற அம்பிகை ஆலயங்களைப்போல அபயவரத முத்திரைகள் இல்லாது பாசம், அங்குசம், மலர்க்கணைகள், புஷ்ப பாணங்கள் போன்றவற்றை தன் திருக்கரங்களில் ஏந்தியுள்ளாள். அம்பிகையின் இடப்புற கோஷ்டத்தில் சேனா நாயகி எனப் போற்றப்படும் வாராஹியும், இரண்டாம் வடிவான அரூபலட்சுமியும் இடம் பெற்றுள்ளனர். வாராஹிக்கு முன்னே அம்பிகை பண்டாசுரனைக் கொன்று பூமியில் புதைத்ததின் நினைவாக ஜெயஸ்தம்பம் உள்ளது. இரு உருவில் பெரிய விநாயகர்களும் வாராஹிக்கு முன் அருள்கின்றனர். சௌந்தர்யத்திற்கே பொருள் தரும் லட்சுமி இத்தலத்தில் அரூபலட்சுமியாக அருள்கிறாள். வலப்புற கோஷ்டத்தில் திருமகளும் அந்தத் திருமகளைக்காண வந்த திருமாலான கள்ளவாரணரும் இடம் பெற்றுள்ளனர். நூற்றியெட்டு வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக இந்த சிறிய திருமாலின் சந்நதி இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் வடிவான ஸ்ரீசக்ரம், திருமியச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை அரங்கேற்றித் துதித்த வசின்யாதி வாக்தேவதைகள் என்னும் எட்டு தேவிகளை உள்ளடக்கி காமாட்சியம்மனின் திருமுன் தரிசனமளிக்கிறது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட பெருமையுடையது இந்த ஸ்ரீசக்ரம். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார். இந்த சக்ரத்திற்கே அர்ச்சனை, வழிபாடு, பூஜை எல்லாம் நடக்கின்றன. ஆதிசங்கரரின் வருகையால் இத்தலம் மேலும் சிறப்படைந்தது. காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்க்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்தும்.


 

3 - மங்களங்கள் அருள்வாள் மதுரை மீனாட்சி - 1

51 சக்தி பீடங்கள் - 3மதுரை மீனாட்சியம்மன் கோயில் அல்லது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இருப்பினும் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நதியே முதன்மை பெற்றது. ஆகையால், இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கிவிட்டு அதன்பிறகு சுந்தரேசுவரர் சந்நதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸு என்பவன், ஈசனருளால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அவளுக்கு வித்யாவதி என பெயர் சூட்டி வளர்த்தான். வித்யாவதி சிறுவயதிலேயே அம்பாள் மீது அதீத பக்தி கொண்டாள். ஒரு சமயம் அவளுக்கு பூலோகத்திலுள்ள புண்ணிய தலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை உண்டானது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விசுவாவஸு, கடம்பவனம் எனப்பட்ட மதுரை தலத்தைச் சுட்டிக்காட்டி இங்கு அருளும் அம்பிகை சியாமளையை வழிபடும்படி கூறினான்.

அதன்படி அம்பாளைத் தரிசிக்க வித்யாவதி இங்கு வந்தாள். சியாமளாதேவி சந்நதி முன்பு நின்று மனம் உருக வழிபட்டாள். அந்த தலம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி சேவை செய்தாள். அவளுக்கு 3 வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, “என்ன வரம் வேண்டும் கேள்!’ என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி எப்போதும் தான் அவள் மீது பக்தி கொண்டிருக்க வேண்டுமென்றும், குழந்தையாக காட்சி தந்த நீ எனக்கு மகளாகப் பிறக்கும் பாக்கியத்தை தர வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டாள்.அம்பாள், அவளது விருப்பம் அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று வாக்களித்தாள். இதன்படி, அடுத்த பிறப்பில் சூரிய வம்சத்தில் வந்த மன்னன் சூரசேனனின் மகள் காஞ்சனமாலையாக அவதரித்தாள் வித்யாவதி. அம்பாள் பக்தையாகத் திகழ்ந்த அவளை மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னன் மணம் முடித்தான்.

இவ்விருவருக்கும் புத்திரப்பேறு இல்லை. காஞ்சனமாலை, இத்தலத்தில் தனக்கு முற்பிறவியில் அருள் செய்த சியாமளையிடம் குழந்தை பாக்கியம் அருளும்படி வேண்டிக் கொண்டாள். மன்னனும் புத்திரப்பேறுக்காக, இங்கு புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அம்பிகை, அந்த யாகத்தில் மூன்று வயது குழந்தையாகத் தோன்றினாள். அப்போது காஞ்சனமாலைக்கு முற்பிறவியில் அவள் வாக்களித்தது நினைவுக்கு வந்தது. மகிழ்ந்த மலையத்துவசனும், காஞ்சனாதேவியும் அவளை சீரும், சிறப்புமாக வளர்த்தனர். ஆண் வாரிசு இல்லாத மன்னன், அவளுக்கு ஆய கலைகளையும் கற்றுக் கொடுத்தான். தனக்குப் பின்பு மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான். இவள் மீன்போல எப்போதும் விழிப்புடன் இருந்து, மதுரையை ஆட்சி செய்ததால், “மீனாட்சி’ என்று பெயர் பெற்றாள். இதன்பிறகு சியாமளை என்ற பெயர் மங்கி, மீனாட்சி என்ற பெயரே இவளுக்கு நிலைத்து விட்டது.

இவ்வாறு, தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர். ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை’ என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சிஅம்மனின் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது. தேவியின் 51 சக்தி பீடங்களில் மந்த்ரிணீ பீடமாக இத்தலம் வணங்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் அருளால் கவிபாடும் புலமை பெற்ற குமரகுருபரர், ஒரு சமயம் காசி யாத்திரை சென்றார். மதுரை வழியாக சென்ற அவர், இக்கோயிலுக்கு வந்தார். மீனாட்சியை வணங்கிய அவர், “பிள்ளைத்தமிழ்’ பாடினார். திருமலை நாயக்கர் அவர் பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தார். மீனாட்சியை குழந்தையாக பாவித்த குமரகுருபரர், அவளின் சிறப்புக்களை பாடியபோது, குழந்தை வடிவில் வந்து பாடலை கேட்டாள்.

அவருக்கு தன் கழுத்தில் அணிந்து இருந்த முத்து மாலையை எடுத்து அணிவித்தாள். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், அம்பாள் சந்நதியை சுற்றியுள்ள சுவரில் சிற்பமாக உள்ளது. குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் பாடியது, அம்பிகை மாலை அணிவித்தது ஆகிய நிகழ்ச்சிகளை அம்பாள் சந்நதி முன்புள்ள ஆறுகால் மண்டபத்தில் ஓவியமாக காணலாம். கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி: அன்னை மீனாட்சிக்கு அங்கயற்கண்ணி என்ற கண்ணோடு சம்பந்தப்பட்ட பெயர் உண்டு. இதற்கு மீன் போன்ற கண்களை உடையவள், மீன் தன் குட்டிகளை கண்களாலேயே பாதுகாப்பதுபோல காப்பவள் என்றெல்லாம் பொருள் சொல்வார்கள். ஆனால், தீயில் தன் கண்களை இழந்த ஒரு பக்தருக்கு அவள் கண்ணொளி வழங்கிய கதை தெரியுமா!

மெய்ஞானியான நீலகண்டதீட்சிதர், சிறுவயதிலேயே மீனாட்சி உபாசகராக திகழ்ந்தார். இவரது ஞானத்தைக் கண்ட திருமலை நாயக்கர், இவரை தனது முதலமைச்சராக நியமித்தார். அரசபதவி ஏற்றாலும் ஆன்மிக வாழ்க்கையை கைவிடாது தத்துவ மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கினார் தீட்சிதர். நீலகண்டருக்கு ஒரு பெருஞ்சோதனை காத்திருந்தது. திருமலை மன்னரின் மனைவியின் சிலையை தீட்சிதரின் நேரடிப்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி செதுக்கினார். ராணியின் வலது தொடையில் ஒரு லேசான சில்லுக்கல் சிதறி விழுந்தது சிலையில் குறையாக தெரிந்ததால் சுந்தரமூர்த்தி அதைச் சரி செய்ய முயன்றார். மீண்டும் அதே இடத்தில் சில்லு சிதறி விழுந்தது. தெய்வீகக் கலையில் கைதேர்ந்த தீட்சிதரிடம் சிற்பி இதுபற்றி தெரிவித்தார். ஞானக்கண் கொண்டு பார்த்த தீட்சிதருக்கு ராணியின் வலத்தொடையில் மச்சமிருப்பது தெரிந்தது.

ஆகையால், அது அப்படியே இருக்கட்டும் என்று சிலையை அமைத்துவிடும்படி கட்டளையிட்டார். நடந்த நிகழ்ச்சிகளை அறிந்த திருமலை நாயக்க மன்னர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் கைது செய்யும் படி உத்தரவிட்டார். காவலர்கள் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் நடந்ததை தெரிவித்து கைது செய்ய வந்திருப்பதாகக் கூறினர். அப்போது, தீட்சிதர் உலகை ஈன்ற நாயகி மீனாட்சியம்மைக்கு கற்பூர ஆரத்தி செய்து கொண்டிருந்தார். தன்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த மாமன்னர் தன்மீது சந்தேகம் கொண்டதை எண்ணி வருந்தினார். உணர்ச்சிவசப்பட்டவராய், கற்பூர ஜோதியை தம் கண்ணில் வைத்து கண்களைப் பொசுக்கிக் கொண்டார். மன்னருக்கு செய்தி பறந்தது. அவர் தம் தவறை உணர்ந்து தீட்சிதரின் இல்லத்துக்கு ஓடோடி வந்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். ஞானமே வடிவான தீட்சிதர் மீனாட்சியம்மை மீது “ஆனந்த சாகர ஸ்தவம்’ என்னும் 108 ஸ்லோகங்களைச் சொல்லிப் பாடினார். அப்போது மீண்டும் கண்ணொளி கிடைத்தது. பின்னர், திருமலை மன்னர், நீலகண்டருக்கு திருநெல்வேலி அருகிலுள்ள பாலாமடை என்ற இடத்தை தானமாக அளித்தார்.

அங்கே ஒரு சிவாலயம் அமைத்த தீட்சிதர், அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே சமாதிநிலை அடைந்தார். தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண் களால் நம்மையெல்லாம் கடைத்தேற்றும் ஜகன்மாதாவாக அவள் திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது. இந்த எட்டு காலங்களில் முறையே மஹா க்ஷோடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, க்ஷோடஸீ ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன. மீனாட்சியம்மன் சித்திரைத்திருவிழாவில் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியம்மன், அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்று, அதன்பின் சிவன் எதிரே நின்று அவரே தனது மணாளன் என அறிந்து மணந்து கொள்கிறார். இந்த நிகழ்வு சித்திரைத் திருவிழாவில் நடக்கிறது. திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அவள், சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வென்றாள். பின்னர், சுவாமியை எதிர்க்கச் செல்லும் போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதையறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந்ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். அதன்பின்பு, மீனாட்சி அம்மனை, சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது. இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை என சீர் பொருட்கள் கொண்டு வந்து, தங்கள் வீட்டுப்பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர். அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகில் வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

2. அட்சர சக்தி பீடங்கள் (ஆம்) கிரீடம்

பீடத்தின் பெயர் கிரீடம்.  தேவியின் கிரீடம் விழுந்த பகுதி. பீடசக்தியின் நாமம் புவனேஸி சித்தி, விமலா. இப்பீடத்தை ஸம்வர்தத்தர் எனும் பைரவர் காக்கிறார். ஹஸ்ரா பர்கர்வார் வழித்தடத்தில் அஜீம்கஞ்ச் எனும் இடம் உள்ளது. பட்நகரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த பீட சக்தியின் ஆலயம்.

 

4 - மங்கலங்கள் அருள்வாள் மதுரை மீனாட்சி - 2

51 சக்தி பீடங்கள் - 4

சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியதாகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை  தூக்கி ஆடிய கோலத்தில்தான் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி  ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது  விசேஷம். ஆலவாய், சிவராசதானி, பூலோக கயிலாயம், கடம்பவனம், கூடல், நான்மாடக் கூடல், மதுரை ஆகியவை இத்தலத்திற்குரிய பல்வேறு பெயர்கள்.  திருபாற்கடலை கடைந்தபோது நாகம் உமிழ்ந்த விஷத்தை இறைவன் அமுதாக மாற்றி மதுரமாக்கினமையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றதென்பர்.

கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றி கூறியதால், அவன்  காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி  வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த  நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில்  ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டது.

விருத்திராசூரனை கொன்ற இந்திரன், கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டான். மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம்,  இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்தக் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.  தெற்குக் கோபுரம் மிக உயரமானது - 160 அடி. இக்கோயிலினுள் உள்ள பொற்றாமரைக் குளம் ஓர் ஏக்கர் பரப்பு கொண்டது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள்  ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு அழகிய நுணுக்கங்களைக் கொண்டு, தனித்தனிச் சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ளன. மீனாட்சி அம்மன் சந்நதியின் முன்னே எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் அமைந்துள்ளது.

வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள  எட்டு  தூண்களில் கவுமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, யக்ஞரூபிணி, ஷியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய எட்டு சக்திகள் அழகுற  காட்சியளிக்கின்றனர். இவர்களை வணங்குவோர் மனோ தைரியம் கொண்டவர்களாக விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. ஒருகாலத்தில் இது அன்னதான  மண்டபமாக இருந்தது. பின்னாளில் ஆவணி மூல வீதி ஏற்பட்ட பிறகு தெற்கு ஆவணி மூலவீதியில் அமைக்கப்பட்ட சோற்றுக்கடைகளில் அன்னதானம்  செய்யப்பட்டது. எனவே இங்குள்ள ஒரு தெருவுக்கு சோற்றுக்கடைத்தெரு என்றே இன்றும் பெயர்! மீனாட்சி நாயக்கர் மண்டபம்,  முதலி மண்டபம்,  ஊஞ்சல்  மண்டபம், கம்பத்தடி மண்டபம் ஆகியவற்றையும் காணலாம்.

மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் இறைவி மீனாட்சி அன்னையின் சந்நதியை தரிசிக்கலாம். கருவறையில் அன்னை இரண்டு  திருக்கரங்களுடன் ஒரு கையில் ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தி, நின்றபடி அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன?  பக்தன் தன் கோரிக்கையை அன்னையிடம் சொல்ல, அதை கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறதாம்;  இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறதாம்! சுவாமி, கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர், சிவலிங்கத் திருமேனியராகத் திகழ்கிறார். அம்மன்  சந்நதி நுழைவாயிலில் சங்கிலி மண்டபம் உள்ளது. மேலும், நூற்றுக்கால் மண்டபம், புது மண்டபம் எனும் வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம்  போன்றவையும் எழிலுற அமைந்துள்ளன.

மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில் ஐந்து இசைத் தூண்கள், ஆயிரங்கால் மண்டபத்தில் இரு இசைத் தூண்கள் உள்ளன. இங்கே சித்திரைத்  திருவிழா, முடிசூட்டு விழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதம் சித்ரா  பவுர்ணமி விழா, வைகாசி கோடை வசந்த விழா, ஆனி ஊஞ்சல் உற்சவம், ஆடி முளை கொட்டுத் திருவிழா, ஆவணி மூலம், புரட்டாசி நவராத்திரி கொலு, ஐப்பசி  கோலாட்ட உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி எண்ணெய் காப்பு விழா, தை மாத தெப்பம், மாசி மாத மண்டல உற்சவம், பங்குனி மாத உத்திரம், சாரதா  நவராத்திரி போன்ற விழாக்கள் விமரிசையானவை.




 

5 - திருவருள் பெருக்கும் திருவானைக்கா தேவி!

சக்தி பீடம் - 5

திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெயிலிலும், மழையிலுமாகக் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாதபடி காத்தது. யானை காவிரி ஆற்றிலிருந்து துதிக்கையால் நீர் கொண்டுவந்து அபிஷேகித்து வழிபட்டது.

யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி, அதன் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவற்றின் பக்தியை மெச்சிய சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோயில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோயில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து, பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாம். இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்கிறார்கள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உட் பிராகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக (அப்பு என்றால் நீர்) எழுந்தருளியுள்ளார். நாகப்பழ மரத்திற்கு கீழே இறைவன் தோன்றியதால் அவருக்கு ஜம்புகேஸ்வரர் என்றுபெயர். இந்த லிங்கம், தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருந்தாலும் கருவறையில் இந்நீர்க் கசிவு வற்றுவதில்லை!

எனவே ஐப்பசி பெளர்ணமி தினத்தன்று செய்ய வேண்டிய அன்னாபிஷேகத்தை இத்திருத்தலத்தில் வைகாசி பெளர்ணமியன்று செய்கின்றனர். ஜம்புலிங்கேஸ்வரரை, கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாகத்தான் தரிசிக்க முடியும். வீணையில்லா சரஸ்வதி, தேவியருடன் சந்திரன், பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டா தேவியுடன் சனிபகவான், அருணகிரியின் விருப்பத்திற்கிணங்க காமத்தை அசுரனாக்கி அவனை அடக்கிய முருகப்பெருமான் என பல அரிய சந்நதிகளை இத்தலத்தில் தரிசிக்கலாம். நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிராகாரங்களும் கொண்ட கோயில் இது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நதி நான்காம் பிராகாரத்தில் உள்ளது.

தனி சந்நதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலத்துக்கெல்லாம் ஈஸ்வரியான இந்த நாயகி காட்சி தருகிறாள். இவளுடைய ஆட்சித்தலம், திருவானைக்கா. அகிலாண்டேஸ்வரி அணிந்திருக்கும் காதணிகள் (தாடகங்கள்) பெரிதானவை, பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். அம்பாள் முன்னொரு காலத்தில் மிகஉக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபட மிகவும் அச்சமுற்றதாகவும், அச்சமயம் இங்கு வந்த ஸ்ரீஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் எனும் இந்த இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்றும் தலவரலாறு கூறுகிறது. பின்னாளில் முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து அன்னையின் உக்கிரத்தை மேலும் தணித்தார்கள். 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞானபீடமாகத் திகழ்கிறது.

அகிலாண்டேஸ்வரி, வாராஹி தேவியின் அம்சமாக வணங்கப்படுகிறாள். உயரமான குத்துவிளக்கு தீபம் அசைய அந்த அசைவின் ஒளியில் புன்னகையோடு வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரியின் தரிசனத்தால் இருளில் தவிக்கும் பல குடும்பங்கள் ஒளி பெற்று விளங்குகின்றன. இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீவித்யா பூஜை வைதீக முறைப்படி செய்யப் படுகிறது. ஆடி வெள்ளியில் அகிலாண்டேஸ்வரியை மாணவியாக பாவித்து, இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரர் குருவாக இருந்து உபதேசம் செய்வதாக ஐதீகம். எனவே, அன்று மாணவ, மாணவியர் அதிகம் பேர் வந்து, தம் கல்வி மேம்பட வேண்டி செல்வர். அதனால் இத்தலத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருமண வைபவம் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இத்தல பள்ளியறைக்கு மீனாட்சி-சுந்தரேஸ்வரரே எழுந்தருள்கின்றனர்.

அந்தணர் ஒருவர் வாக்சித்தி பெற அகிலாண்டேஸ்வரியை உபாசித்து வந்தார். ஒருநாள் அவருக்கு திருவருள் புரிய தாம்பூலம் தரித்த நிலையில் ஒரு சாதாரண மானிடப் பெண்ணாக அந்த அந்தணரை அணுகிய அகிலாண்டேஸ்வரி ‘நான் இந்த தாம்பூல ரசத்தை தங்கள் வாயில் உமிழவா?’ எனக் கேட்டாள். அதனால் கோபமுற்ற அந்த அந்தணர் அவளை கடிந்து கொள்ள, அப்போது ஆலயத்தை கூட்டி பெருக்கும் வரதர் எனும் அடியவர், ‘ஆலயம் தூய்மையாய்  இருக்க வேண்டும். அதனால் என் வாயில் அந்த தாம்பூல ரசத்தை துப்புங்கள்,’ எனக்கூற தேவி அவன் வாயில் அந்த தாம்பூல ரசத்தை சேர்த்தாள். அந்த வரதரே பின்நாளில் கவி காளமேகமாய் புலமை பெற்றார்! அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகின்றன.

உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இங்கு இருக்கும் ஜம்புலிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒருமுறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட காவேரியிலிருந்து சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்து அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தாள். மற்றொரு சந்நதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்த லிங்கத்தை வழிப்பட்டு, சிவனருளால் அழகாபுரிக்கு அதிபதியானான் குபேரன். பல அரிய சிற்பங்களை இத்தலத்தில் கண்டு மகிழலாம்.

அவற்றில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சந்நதிக்கு இடதுபுறம் அமைந்துள்ள வெளிப்பிராகாரத் தூணில் இந்த சிற்பம் காணப்படுகின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவை அன்னை சந்நதிக்கு வெளியே உள்ள ஒரு தூணில் காணலாம். ஏகநாதர், மும்மூர்த்திகளும் சமமானவர்; மூவரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்குகிறார். நான்கு கால் தூணில் உள்ள ஆரணங்குகள் எல்லோர் மனதையும் கவருகின்றனர். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரமிக்க வைக்கிறது. சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமன்றி, விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் ஆற்றிய திருப்பணிகளை 154 கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. இவ்வாலயம் காலை 7 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். திருவருள் பெருக்கும் திருவானைக்கா தேவியின் தாள்கள் பணிவோம்.

 

6 - குற்றால நாயகி குழல்வாய்மொழி அம்மை!

சக்தி பீடங்கள் - 6 தன்னிகரற்ற தரணி பீடம்!தமிழகத்தில் அமைந்துள்ள குற்றாலம் பராசக்தி பீடம், அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடையது. தேவியின் சக்தி பீடங்களில் இது, பராசக்தி பீடம் என்று  வணங்கப்படுகிறது. திருக்குற்றாலத்தில் அருளும் அம்பிகை, குழல்வாய்மொழி அம்மை என்ற அழகுப் பெயர் கொண்டுள்ளாள். மூலவரான குற்றாலநாதரின்  சந்நதிக்கு வடதிசையில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம், யோகபீடம் மற்றும் பராசக்தி பீடம் என்றெல்லாம் அழைக்கப்படும் சந்நதி சிறுகோயிலாக  அமைந்துள்ளது. இது சிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயம். இங்கு பராசக்தியானவள் அரி, அயன், அரன் மூவரையும் படைத்து அருளினாள்.  இவளின் சந்நிதானத்தில் தாணுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கொண்டே இருக்கிறது. மலையுருவாய் மிளிர்கின்ற அம்பிகை, ஆலயத்தினுள்ளே மேரு உருவாகவும்  திகழும் சிறப்பைக் கொண்டவள். திரிகூடமலை என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. இங்கு நான்கு வேதங்களும் நான்கு வாயில்களாக விளங்குகின்றன.
திருக்குற்றாலம் முதலில் விஷ்ணுத் தலமாக இருந்து, அகத்தியரால் பின்னர் சிவத்தலமாக மாற்றப்பட்டது.

சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை குழல்வாய்மொழி அம்மையாகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றினார் என்பார்கள். இங்கு பராசக்தி, ஸ்ரீசக்ரமேரு  அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவிலேயே அருட்சுடரை பரப்புகிறாள். பூமாதேவியாக இருந்தவளே இந்த அம்பிகை என்பதால் பூமி எனும் பொருளிலேயே தரணி பீடம்  எனும் பெயர் பெற்று விளங்குகின்றது. ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இப்பீடம் இருப்பதாக நம்பிக்கை. எனவே, பெளர்ணமி இரவில் நவசக்தி பூஜை  நடத்தப்படுகிறது. அப்போது, பாலும் வடையும் நிவேதனமாக படைக்கப்படுகின்றன. பராசக்தி உக்கிர ரூபியாக இருப்பதாலேயே இவளுக்கு எதிரேயே  காமகோடீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் லிங்கமாக பிரதிஷ்டை ஆகியுள்ளார். பெளர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு  பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனையோடு விசேஷ பூஜைகள் நிகழ்த்தி வழிபட்டால் எண்ணியது ஈடேறும். இங்கு நவராத்திரி விழா கோலாகலமாக  கொண்டாடப்படுகின்றது.

ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தின்போது குற்றாலநாதர், குழல்வாய்மொழி இருவரும் அகத்தியர் சந்நதிக்கு அருகே  எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தருள்கின்றனர். குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர் என்றெல்லாம் பல்வேறு  திருப்பெயர்களின் அழைக்கப்படுகின்றார் இத்தல ஈசன். சுயம்பு லிங்கமாக கிழக்கு திக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அதுபோல குழல்வாய் மொழியம்மை சந்நதி,  ஈசனின் சந்நதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை அழகும் அருளுமாக கோலோச்சுகின்றாள். பிராகார வலம் வரும்போது அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படும் பராசக்தி பீடத்தை தரிசிக்கலாம். அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, எதிரில் கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி,  விநாயகர், சப்தகன்னியர் முதலிய சந்நதிகளையும் தரிசிக்கலாம். பஞ்சபூத லிங்கங்கள், நன்னகரப் பெருமாள், சுப்பிரமணியர், சனிபகவான் சந்நதிகளும் உள்ளன.
தலதீர்த்தங்களாக சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவை விளங்குகின்றன.

தலவிருட்சம், குறும்பலா. இந்தப் பலா மரத்தில் வருடம் முழுவதும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்தப் பலாவிலுள்ள  சுளைகள், லிங்க வடிவிலிருப்பதைப் பார்க்க பரவசமாகிறது. இக்கோயில் சங்கு வடிவில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். குற்றால மலையிலுள்ள  செண்பகாதேவி கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பிலிருந்து இதைக் காணலாம். நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர  சபை இங்கே அமைந்திருக்கிறது. குற்றாலநாதர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் தனிக்கோயிலாக உள்ளது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது.  சுற்றிலும் மதில் சூழ்ந்திருக்கிறது. மரத்தாலான, அற்புதமான வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது இந்த சித்திர சபை. மரக்கோயிலின் கூரை சிதம்பரத்தை  நினைவூட்டுகிறது. இந்த சபையில் இரண்டு மண்டபங்கள். ஒன்றில் நிறைய சாளரங்கள். இதன் நடுவே ஒரு சிறு மேடையைக் காணலாம்.

திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து காட்சி அருள்கிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புதமான, அழகிய ஓவியங்கள்  வரையப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களையும் அந்தச் சித்திரங்களில் கண்டு மகிழலாம். கிழக்கு நோக்கியுள்ள சித்திர சபையின்  உள்ளேயிருக்கும் நடராஜர் தெற்கு நோக்கியுள்ளார். கயிலையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தின்போது வடதிசை தாழ்ந்து தென்திசை  உயர்ந்தது. இறைவன் அகத்தியரிடம் தென்திசைக்குச் சென்று இரண்டு திசையையும் சமமாக வைக்குமாறு ஆணையிட்டார். ஆனால், இறைவனின்  திருக்கல்யாணத்தையும், திருநடனத்தையும் காண இயலாதே என வருந்தினார் அகத்தியர். இறைவன் திரிகூடமலையின் மகிமையைக் கூறி அங்கு விஷ்ணுவாக  இருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் காணலாம் என்று கூறி அனுப்பி வைத்தார்.

அகத்தியரும் அவ்வாறே  சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுக்குள் சென்று திருமாலைக் குறுக்கி வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று  முதல் இக்கோயில் சிவத்தலமாகியது. வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை காணாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். அவர் அவர்களிடம் கோயிலின்  தென்மேற்கு மூலையில் விஷ்ணு மூர்த்தத்தை வைத்து பூஜை செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி அவர்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் பொதுப் பெயர்களைச்  சொல்லி பாடி ஆலயத்திற்குள் சென்றனர். அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும்  பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

அபிஷேகிக்கப்பட்ட மகா சந்தனாதித் தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து  மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுவது. தலைவலி, வயிற்று வலி க்ஷயரோகம் (எலும்புருக்கி) முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்  படுகின்றது. ‘குற்றாலநாதருக்கு வற்றாக் குடி நீரும் மாறாத் தலையிடியும்’ எனும் சொலவடை வழக்கில் உள்ளது திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்
ஆகியோர் பதிகம் பாடிய தலம். தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் 13வதாகத் திகழ்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென் காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவிலும்,  செங்கோட்டையிலிருந்து  7 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது.

வட இந்திய அட்சர சக்தி பீடங்கள் (ஈம்)

பீடத்தின் பெயர் கரவீரம் எனும் சர்க்காராம். தேவியின் முக்கண்கள் விழுந்த இடம். பீட சக்தியின் நாமம் மஹிஷமர்த்தனி. அக்ஷர சக்தியின் நாமம் ஈஷித்ரி.   இப்பீடத்தை க்ரோதீசர் எனும் பைரவர் காவல் காக்கிறார். சர்க்காராம் என்றும், கரவீர பீடம் என்றும் வழங்கப்படும் கொல்ஹாபூர் மகாலட்சுமி ஆலயம்  மும்பையிலிருந்து 395 கி.மீ. தொலைவில் உள்ளது.