Friday 25 December 2015

சேந்தனார் வரலாறு!



தில்லையில் சேந்தனார் என்னும் சிவபக்தர் வாழ்ந்துவந்தார். விறகு வெட்டி விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்யத் தவறமாட்டார். அத்துடன் தன்னால் இயன்ற அளவு சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவபெருமானே வந்து உண்பதாக எண்ணி மகிழ்வார்.

சிவனடியார் களை உபசரித்தபின் தான் அவர் உண்பது வழக்கம்.சேந்தனாரின் பக்திப் பெருமையை அனைவரும் அறியவேண்டுமென்று தில்லைவாசன் திருவுள்ளம் கொண்டார். மார்கழி மாத திருவாதிரை முதல் நாள் இரவிலிருந்து கடுமையாக தொடர்மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் விறகு வெட்ட வெளியில் செல்லமுடியாமல் தவித்தார் சேந்தனார். விறகு வெட்டி அதை விற்று வந்தால்தான் அன்றைய பொழுது ஓடும். மறுநாளுக்கென்று எதையும் சேமித்துவைக்க முடியாத வாழ்க்கைச் சூழல்.

அந்த நிலையில் சேந்தனார் வீட்டு வாசல்முன், "திருச்சிற்றம்பலம் சம்போ மகாதேவா...' என்ற குரல் கேட்டது. வெளியே வந்த சேந்தனாரும் அவரது மனைவியும் சிவனடியார் ஒருவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டனர். அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்துச்சென்று ஆசனம் அளித்து பணிவிடை செய்தனர். சிவனடியாரின் பசியைப் போக்க சமைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால், சேந்தனாரின் மனைவி வீட்டிலிருந்த சிறிதளவு அரிசிமாவில், வெல்லப்பாகு தயாரித்து கலந்து களி கிளறினாள். அதை அடியாருக்குப் படைக்க, அவரும் அதை மகிழ்வுடன் உண்டு அவர்களை வாழ்த்திச் சென்றார்.

மறுநாள் காலை சேந்தனாரும் அவர் மனைவியும் நடராஜப் பெருமானை தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோவிலைத் திறந்த தில்லைவாழ் அந்தணர்கள், இறைவன் சந்நிதியில் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு வியந்தார்கள். சேந்தனாரும் அவர் மனைவியும் அதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சேந்தனார் முதல் நாள் நடந்த நிகழ்வுகளைக் கூற, இது நடராஜப் பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து தில்லைவாழ் அந்தணர்கள் சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றிமகிழ்ந்தனர். அவர்களது பக்தியைப் பலரறியச் செய்தனர்.

அன்றிலிருந்து மார்கழித் திருவாதிரை நாளில்களி செய்து நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது.மார்கழித் திருவாதிரை அன்று விரதம் மேற்கொண்டு, ஸ்ரீநடராஜப் பெருமானை தரிசித்து, திருவாதிரைக் களியை உண்பவர்கள் பிறவாப்பேரின்ப நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை!

பிறவாப் பேரின்பம் தரும் ஆருத்ரா தரிசனம்!


சிவாலயங்களில் ஆடலரசனான நடராஜப் பெருமானுக்கு ஆகமநியதிப்படி ஆறுகால பூஜையின்போது அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தேவர்களும் இதுபோன்று ஆறுகால பூஜை நிகழ்த்துவதாக சாஸ்திரம் கூறுகிறது.

நமக்கு ஓராண்டு என்பது தேவர் களுக்கு ஒரு நாளாகும்.


மார்கழி திருவாதிரைத் திருநாள் தேவர்களின் வைகறை வழிபாடு.
மாசி வளர்பிறை சதுர்த்தி காலசந்தி பூஜை.
சித்திரை திருவோணம் உச்சிக்கால பூஜை.
ஆனி உத்திரம் சாயரட்ச பூஜை.
ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாள் இரண்டாம் கால பூஜை.
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி நாள் அர்த்தஜாம பூஜை.


 இப்படி ஆறுகால பூஜையை தேவர்கள் நடத்துகிறார்கள். இவற்றில் மார்கழியில் நடைபெறும் அபிஷேகத் திருநாள் திருவாதிரைத் திருநாளாகும்.

இவ்வாறு அபிஷேகங்கள் காணும் ஆடல்வல்லான் யுகயுகமாய் பற்பல காரணங்களுக்காக நடனமாடி வருகிறார். அவர் ஆகாசவெளியில் ஆனந்தத் தாண்டவமாடும் திருத்தலம்தான் பொன்னம்பலம், சிற்றம்பலம், பெரிய கோவில், தில்லை எனப்படும் சிதம்பரமாகும்.

இத்தலத்திலுள்ள மூலஸ்தான லிங்கத்தில் சிவகலைகள் ஆயிரமும் ஒடுங்கியிருக்கிறதாம். இதிலிருந்து ஒரேயொரு கலை மட்டும் புறப்பட்டு, உலகிலுள்ள அனைத்து சிவத்தலங்களுக்கும் சென்றுவிட்டு, யாமத்தில் மீண்டும் தில்லைக்கு வந்து சிவலிங்கத்தில் ஒடுங்குகிறதாம். சுயம்பு லிங்கமாக அருள்புரியும் இறைவன் இங்கு மூலட்டானத்தார் என்று போற்றப்படுகிறார்.

தில்லையில் அருள்புரியும் சிவனாரின் ஆடல் திருவுருவம் சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சிதருகிறது.ராமநாதபுரத்திற்குத் தென்மேற்கில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் உத்தரகோசமங்கை. இங்கு ஒரே மரகதக் கல்லாலான பிரம்மாண்டமான நடராஜர் விக்ரகம் உள்ளது.

ஒளிவெள்ளத்தில் பார்த்தால், இந்த விக்ரகம் உயிரோட்டத்துடன் இருப்பது போல் தோன்றும். அபூர்வமான இந்த விக்ரகத்தில் மனித உடலில் உள்ளதுபோல் பச்சை நரம்புகள் இருப்பதை பக்தர்கள் பலரும் தரிசித்திருக்கிறார்கள்.இந்த விக்ரகம் ஒலி- ஒளி அதிர்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்க இந்தக் கோவிலில் மேளதாளங்கள் வாசிப்பதில்லை. எந்தவிதத்திலும் விக்ரகம் சேதப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆண்டுமுழுவதும் சந்தனக் காப்பிட்டு பாதுகாத்து வருகிறார்கள்.

வருடத்திற்கு ஒருநாள் மார்கழித் திருவாதிரைத் திருநாளன்று மட்டும் சந்தனக்
காப்பு களையப்படும். அன்று முழுவதும் மரகதக்கல் மேனியனான நடராஜப் பெருமானை பக்தர்கள் கண்டு பேருவகை கொள்ளலாம். இரவு மீண்டும் நடராஜருக்கு சந்தனக் காப்பு அணிவிக்கப்படும்.

முற்காலத்தில் கடல் வணிகத்தில் சிறந்துவிளங்கிய அப்துல்ஹமீது மரைக்காயர் என்பவருக்கு ஒரு பெரிய மரகதக்கல் கிடைத்தது. அவர்
அந்தக் கல்லை சேதுபதி மன்னருக்குப் பரிசளித்தார். மன்னர், சிறந்த ஸ்தபதிகளை வரவழைத்து அந்த மரகதக் கல்லை நடராஜர் விக்ரகமாக வடிக்கச்செய்தார். மரைக்காயர் என்ற அன்பர் கொடுத்த பச்சைக் கல்லால் செய்யப்பட்டதால் இதை "மரைக்காயர் பச்சை' என்கிறார்கள்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பிரம்மதேசம் கயிலாயநாதர் ஆலயத்திலுள்ள நடராஜரும் சந்தனக்காப்பிலேயே காட்சியளிப்பவர். ஓம் என்ற வடிவம் கல்லில் செதுக்கப்பட்டு ஸ்ரீநடராஜரைச் சுற்றி திருவாட்சியாக அமைக்கப்பட்டுள்ள ஒரே கோவில் இதுதான் என்று கூறப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஆறு முறை மட்டும் அபிஷேகம் காணும் நடராஜர், மற்ற நாட்களில் சந்தனக்காப்புடன் திகழ்கிறார்.

தில்லை நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை நாளில் சிறப்பு நிவேதனமாக களி படைக் கப்படுகிறது.



 

திருச் செந்தூர் மகிமை!



திருச்செந்தூரின்   மகிமையை முனிவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.


வசிஷ்டர்: இந்த பூமியில் போக மோட்சங் களைத் தரும் பல தலங்கள் இருந்தாலும் அவை யாவும் சந்தேகமின்றி திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தவையே.

வாமதேவர்: பிரம்மஹத்தி செய்தவனும், வேதங்களை பழித்தவனும்கூட திருச் செந்தூரில் ஒருநாள் வசித் தால் பரிசுத்தவானாகிறான்.

ஜாபாலி: இத்தல தீர்த்த மகிமைக்கு ஈடானது எதுவுமில்லை.

விசுவாமித்திரர்: நூறு அஸ்வமேத யாகங்களின் பலனை திருச்செந்தூர் வாசத்தால் கோடி பங்கு அதிகமாகப் பெறலாம்.

காச்யபர்: ஒருவன் பிரயாகையில் வாழ்நாள் முழுவதும் நீராடும் பலனை கார்த்திகை நட்சத்திரத்தன்று ஒருமுறை இந்த தலத்தில் நீராடினால் அடைந்துவிடுகிறான்.

மார்க்கண்டேயர்: ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை திருச்செந்தூரில் ஒரே நாளில் அடைந்து விடலாம்.

மௌத்கல்யர்: பல நாட்கள் செய்துவரும் தவத்தை திருச்செந்தூர் தரிசனம் ஒன்றினா லேயே அடைந்துவிடலாம்.


குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஸ்ரீஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்தையோ, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். பூத, பிரேத, பைசாச உபாதைகளும் நீங்கி நலம்பெறலாம்.

இவ்வாறு முனிவர்களாலும், ஆச்சார்யர்களாலும் போற்றப்பட்ட திருச்செந்தூர் தலத்தை வாழ்வில் ஒருமுறையாவது தரிசித்தால் முருகன் அருளையும், குரு பகவானின் அருளையும் பெற்று சகல துக்கங்களிலிருந்தும் விடுபடலாம்.





வளம் தரும் வியதீபாத தரிசனம்!


(மார்கழி 28, புதன்,   13.01.2016, அதிகாலை 04.30 மணி)

 இந்த மார்கழி மாதத்தில் (பஞ்சாங்கத்தில் ஒரு அங்கமாகிய) வியதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் ஸ்ரீ சித்ஸபேசரை தரிசனம் செய்வது ஸர்வ பாபங்களையும் நீக்கி, பெரும் புண்யங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது. மார்கழி மாதத்தின் அனைத்து தினங்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுர்) வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும்.

பஞ்சாங்கத்தின் யோகம் என்பது சிறப்பு வாய்ந்த ஒரு அம்சம். சூர்யனுக்கும், சந்திரனுக்கு இடையே உள்ள தொடர்பை நிறுவும் அம்சம்.

 யோகங்கள் என்பது மூன்று வகைப்படும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் கிரஹங்கள் இணைவதால் உண்டாகும் யோகம். (கஜகேசரி யோகம், சகடயோகம்)

நக்ஷத்திரமும், தினமும் இணைவதால் உண்டாகும் யோகம் (அமிர்த, சித்த மற்றும் மரண யோகம்). அஸ்வினி நக்ஷத்திரம் திங்கட்கிழமையில் அமைந்தால் அது சித்த யோகம்.

சூர்யனும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் யோகங்கள் 27. (விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை) இந்த 27 யே¡கங்களுள் ஒன்றுதான் வியதீபாத யோகம், யோக நாயகர்களுக்கு அதிபதியாக விளங்குவது.

மார்கழி மாதம் & வியதீபாத யோகம் இணையும் வேளையில் ஸ்ரீ நடராஜப் பெருமானை வழிபடுவது மிகுந்த யோகங்களைத் தரவல்லது.

வியதீபாத தினம் - மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறைவனும் இறைவியும் இரண்டறக் கலந்த நன்னாளில் மனம் ஒன்றுபட்டு சிவபெருமானை வழிபடுவது நல் இல்லற வாழ்வை நல்கும்.

சிதம்பரம்.

கோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவது.

சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன.

பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து. நடராஜராஜர் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல்,) பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமந்த ஸ்தலங்கள் ஐந்து. மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஐந்து. (ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி). சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து. ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து. பரமேஸ்வரனின் முகங்கள் ஐந்து. சித்தாந்தக் கலைகளின் (சித்தாந்தம்) ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர்.

பஞ்சாங்கம் என்பது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது. 1.திதி, 2.வாரம், 3. நக்ஷத்திரம், 4. யோகம், 5. கரணம்.

அண்டத்தின் பரம்பொருள் நடராஜப் பெருமான். அலகிலாத உருவம் உடையவர். அடிமுடி காணமுடியாதவர். அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருப்பவர். அவரன்றி அணுவும் அசையாது. இயங்கு சக்திகளை தாள கதியுடன் ஆட்டுவிப்பவர். அண்டத்தின் பால்வெளியில் அமைந்த நவக்ரஹங்களையே மாலையாக அணிந்தவர்.

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் சன்னிதியில், பஞ்சாக்ஷர படிக்குக் கீழே, தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுவது ஆண்டாண்டு காலம¡ நிகழ்ந்து வருவது.

நக்ஷத்திரங்களும், ராசி மண்டலங்களும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கட்டளைக்கிணங்க இயங்குகின்றன.

1. திதி : திதிக்குக் காரணமாகிய சந்திரனை தலையில் சூடியவர்.

2. வாரம் : கிழமைகளுக்கு ¡யகராகிய சூர்யனை குண்டலமாக அணிந்தவர்.

3. நக்ஷத்திரங்கள் : இவற்றை மாலையாக அணிந்தவர்

4. யோகம் : வேண்டுவோருக்கு வேண்டும் யோகங்களை அருள்பவர்.

5. கரணம் : கரணங்களை தன்னுள் கொண்டவர்.

மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக அமைகின்றது. ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், மார்கழியில், அதிகாலைப் பொழுதாகிய பிரம்ம முஹூர்த்த நேரத்தில், மிகச் சிறப்பாக திருப்பள்ளியெழுச்சி காலம் நடைபெறும்.

புராண விளக்கம் :ஒரு சமயம், சந்திரன் குரு பகவானின் மனைவியான தாரையின் அழகில் மயங்குகிறார். இதை அறிந்த சூர்ய பகவான், சந்திர பகவானிடம் இது தகாத செயல் என எச்சரிக்கிறார். அச்சமயம் இருவரின் பார்வைகளும் ஒன்று சேர, அந்த சக்தியிலிருந்து ஒரு மிகப் பெரும் வடிவம் எழுந்து, உலகத்தையே விழுங்கப் பார்த்தது. அந்த உருவத்தைச் சாந்தப் படுத்திய சூர்ய சந்திரர்கள், யோகங்களில் ஒருவராக, வியதீபாதம் என்று பெயர் அளித்து, யோகங்களுக்கு அதிபதியாக பதவி அளித்தனர். உலகை விழுங்க ஆசைப்பட்டு, சாந்தப் படுத்தியதால், பூலோக மக்கள் உன் யோகம் வரும் நாளில் எந்தப் புனித காரியத்தையும் செய்யமாட்டார்கள் எனவும் கூறினர்.

மக்கள் புனித செயல்கள் செய்யாத திதிகளான, அஷ்டமி, நவமி திதிகள் மஹாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டு, அவரின் அவதார தினப் பெருமையைப் பெற்றனர்.

அதுபோல, வியதீபாத யோகம், தன் நாட்களில் எந்தப் புனித காரியமும் செய்யாதிருக்கிறார்களே என்று எண்ணி, நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதத்தை (தூக்கிய திருவடியை) சரணடைய, பக்தர்களுக்கு வேண்டியதை உடனடியாக வரமளிக்கும் நடேசர், மார்கழி மாதமும், வியதீபாதம் யோகம் வரும் நாளில், திருப்பள்ளியெழுச்சியில் என்னைத் தரிசனம் செய்வே¡ருக்கு அனைத்துப் பலன்களும் கிடைக்கும் என்று, அந்த யோகத்திற்கு மகிழ்வையும், நற்பேற்றையும் அளித்தார்.

வல்லமை வாய்ந்த இந்த யோகத்தில் தரிசனம் செய்தால் பதினாறு பேறுகளும் கொண்ட பெரு வாழ்வினை சித்ஸபேசர் அருளுவார்.

வானவியல் சாஸ்திரப்படி, மார்கழி மாதம் தனுர் அல்லது தனுசு மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த ராசிக்கு அதிபதி குரு பகவான். இந்த ராசியில் சூர்யன் சஞ்சரிக்கும்போது, சந்திரன் சூர்யனுக்கு முன்பு வரும்போது, வியதீபாதம் யோகம் ஏற்படுகிறது.

ஸ்ரீ உமாபதி சிவம் அருளிய குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலில் (வியதீபாத யோகம் தோன்றக் காரணமான) சந்திரன், குரு பகவானின் மனைவியான தாரையை மோகித்ததால் ஏற்பட்ட தோஷத்தினை சிதம்பரத்தில் நடராசரைப் பணிந்து தோஷ நிவர்த்தி செய்துகொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் தனது சிவார்ச்சனா சந்திரிகையில் (தந்த சுத்தி படலம்), வியதீபாத யோகம் வரும் நாளில் பிரம்ம முஹூர்த்தத்தில் சிவனை வழிபடவேண்டும் என வலியுறுத்துகிறார்.

வியதீபாத யோக நன்னாளில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்வோம், நல்யோகங்கள் மற்றும் வளங்கள் அனைத்தயும் பெறுவோம்.

 

Thursday 24 December 2015

ஸ்ரீ சுப்ரமண்ய மூலமந்த்ர ஸ்தவம்



 

ஆறுமுகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த ஸ்தோத்ரம் குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது.

 

அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்

ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்

ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்

அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

 

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

 

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்

ரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ச்ரியம்

 

சரவணப் பொய்கையில் பிறந்தவரும், ஸ்கந்தனும், தன்னை சரணமடைந்தவர்களை காப்பவருமான, தங்களை சரணடையும் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

 

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்

தீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

 

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

 

பலாரி ப்ரமுகைர் வந்த்ய: வல்லீந்த்ராணி ஸுதாபதே!

ரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

 

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும், வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும், தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனும்  ஆன ஸ்கந்தனே! எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

 

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்

வவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்

 

நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும், சித்தர்கள்-கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும், வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன். எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

 

பகவன் பார்வதீஸுநோ! ஸ்வாமின் பக்தார்திபஞ்சன!

வத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

 

பகவானே! பார்வதி குமாரா! தலைவனே! பக்தர்களின் கவலைகளைப் போக்குகின்றவனே! தங்களுடைய பாத கமலங்களில் குறைவற்ற பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்க வேண்டும்.

 

ஸுதான்யம் யச: கீர்திம் அவிச்சேதம் ஸ்ந்ததே:

சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

 

தங்கம், தான்யம், அளவற்ற புகழ், மகன்-பேரன் என்று வம்ச விருத்தி, விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து, அளவற்ற செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

 

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்

: படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பத: சிந்திதாதிகா:

 

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர  ஸ்தோத்திரத்தை எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும் மேலாக அளவற்ற  செல்வங்கள் கிடைக்கும்.