Monday 27 February 2017

திருச்சத்திமுற்றம் தழுவக் குழைந்த நாதர்!








இறைவன்  பெயர் : சிவக்கொழுந்தீசர்

இறைவி பெயர் : பெரியநாயகி அம்மை

தல வரலாறு: காஞ்சீபுரத்தில் அம்பிகை இறைவனைத் தழுவக் குழைந்தது போலவே திருசத்திமுற்றத்திலும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 


சிவபெருமான் ஒருமுறை அம்பிகையை பூலோகத்தில் இத்தலத்தில் தம்மை பூஜை செய்யுமாறு பணித்தார். அம்பிகையும் இத்தலத்திற்கு வந்து காவிரிக்கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து வந்தாள். 


இறைவன் அம்பிகையை சோதிக்க விரும்பி காவிரியில் வெள்ளம் வருமாறு செய்தார். ஆற்று வெள்ளம் லிங்கத்தை அடித்துச் சென்று விடுமோ என்று அஞ்சி அம்பிகை இறைவனை ஆரத் தழுவினார். இறைவன் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அம்மையை தழுவக் குழைந்தார். சக்தி இறைவனை தழுவக் குழைந்ததால் இத்தலம் திருசத்திமுற்றம் என்று அழைக்கப்படுகிறது. 


மேற்கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த அன்னையின் பக்திக்குக் கட்டுப்பட்டு அம்பிகையை மேலும் சோதிக்கும் வகையில் சோதி ரூபமாய் காட்சி கொடுத்தார். தீப்பிழம்பாய் எழுந்து நிறபது ஈசனே என்றுணர்ந்த அம்பிகை மகிழ்ந்து அத்தீப்பிழம்பையே தழுவிக் குழைந்தாள். இறைவன் மகிழ்ந்து அன்னைக்கு அருள் பாலிக்கிறார். அன்னை தழுவி முத்தமிட்டதால் "சக்தி முத்தம்" என்பது மருவி "சத்தி முற்றம்" என்று ஆகி இருக்கிறது. 


கருவறையின் நுழைவு வாயிலின் வ்லதுபுறம் அம்பிகை சிவனை தழுவியபடி காட்சி கொடுக்கும் சந்நிதி உள்ளது. 

அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து, தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம் வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும். 

இத்தலத்தை வழிபடுவோருக்குத் திருமணம் கைகூடும்.


கோவில் அமைப்பு: இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. கோபுர வாயிலில் வல்லபை கணபதி காட்சியளிக்கிறார். முதல் கோபுர வாயிலைக் கடந்தால் பெரிய வெளிப் பிரகாரத்தைக் காணலாம். அடுத்துள்ள இரண்டாம்   கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. 


மூலவர் சிவக்கொழுந்தீசர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி கொடுக்கிறார். திருமேனியில், தீச்சுடர்கள் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால் தீப ஆராதனை செய்து காட்டுகிறார். நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன.

அன்னை பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.

சுவாமி சன்னதிப் பிரகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில் பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்றக் கோவில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர் இங்கே நிஜமான ஒரு ஆள் போல இருக்கிறார்.  நடராஜர் மற்றும் சரபேஸ்வரர் சந்நிதிகளும் பார்க்க வேண்டியவை. உட் பிராகாரத்தில் தலவிநாயகரும் சோமாஸ்கந்தரும் ஆறுமுகர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன.


திருப்புகழ் தலம்: இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.


செங்கற்களால் கட்டபட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ ராஜ வம்சத்தைச் சேர்ந்த செம்பியம் மாதேவி ஆவார். முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜ ராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகின்றன.

திருமணம் ஆகாதவர்களும், பிரிந்து போன தம்பதியரும் தழுவக்குழைந்த அன்னைக்கும், ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி நல்ல இல்வாழ்க்கை அமையும்.

அப்பர் இத்தலத்தில் தங்கி ஆலயத் திருப்பணி செய்துகொண்டு இறைவனை வணங்கித் தொழுது வந்தார். ஒருநாள் திருநாவுக்கரசர் இறைவனை விழுந்து வணங்கி இறைவன் திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருளவேண்டும் என்று பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். 

அவர் பாடிய பதிகம்:

1. கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

2. காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற் கருளாயுன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

3. பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
அத்தா அடியேன் அடைக்கலங் கண்டாய் அமரர்கள்தஞ்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

4. நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

5. கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியிற்
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி யேனைத் திகைப்பொழிவி
உருவிற் றிகழும் உமையாள் கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

6. வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாளென்றன் நெஞ்சத் தெழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

7. விட்டார் புரங்கள் ஒருநொடி வேவவோர் வெங்கணையாற்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளுஞ்
சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

8. இகழ்ந்தவன் வேள்வி அழித்திட் டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

9. தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்றிற மல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னுந்
திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

10. பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப் புற்றவன் பொன்முடிதோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட் டலற இரங்கிஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
இறைவன் சிவக்கொழுந்தீசர் "lதிருநல்லூருக்கு வா!" என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்பருக்கு இவ்வாறு அருள் புரிந்த தலம் திருச்சத்திமுற்றம்.


அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்
திருச்சத்திமுற்றம்
பட்டீஸ்வரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612

திருக்கோகர்ணம் பிரகதாம்பாள்!



உமாதேவி, விநாயகர், முருகன் ஆகியோருடன் சிவபெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்கள் தமிழ்நாட்டில் நிறைய உண்டு. அப்படிப்பட்ட தலங்களில் திருக்கோகர்ணமும் ஒன்று. புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் வெள்ளாற்றின் வடகரையிலும் புதுக்கோட்டை நகரின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளது. 


ஆதிகாலத்தில் மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் மகிழவனம் என்று அழைக்கப்பட்டது.  


இங்கு கபில முனிவரும் மங்கள முனிவரும் ஆசிரமம் அமைத்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.  ஒருநாள் தேவலோகத்தில் இந்திர சபை கூடியது. தேவர்களும் முனிவர்களும் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். 


ஆனால், தேவலோக பசுவான காமதேனு குறித்த நேரத்தில் வராமல் காலதாமதமாக வந்தது. இதனால் கோபமடைந்த தேவேந்திரன் காமதேனுவை பூலோகத்தில் காட்டுப் பசுவாக ஆகும்படி சாபமிட்டான். இதனால் வேதனைப்பட்ட காமதேனு இந்திரன் மனைவியான இந்திராணியின் வழி காட்டுதலால் கபில வனத்தில் காட்டுப்பசுவாக வந்து சேர்ந்தது. கபில வனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்தை தினமும் கங்கை நீரைக் கொண்டு வந்து பூஜித்தால் சாப விமோசனம் பெறலாம் என கபில முனிவரும் மங்கள முனிவரும் கூறினர். அதன்படி அப்பசு கங்கை நீரை தன் காதுகளில் நிரப்பிக் கொண்டு வந்து மகிழவனேசுவரருக்கு தினம் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. அபிஷேகம் செய்த பின் எஞ்சிய நீரைத் தன் கொம்புகளால் பாறையைக் கீறி ஏற்படுத்திய பள்ளத்தில் விட்டு வந்தது. 



அந்த பள்ளத்தில் தற்போது நீர் நிறைந்திருக்கும் காட்சியை இப்போதும் காணலாம். நீர் நிறைந்த அந்த பள்ளம் கங்கா தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. 


இந்தப் பசுவின் பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் காமதேனு இறைவனை வழிபட்டுக் கொண்டு வரும்போது இறைவன் வேங்கை உருவம் கொண்டு அந்த பசுவின் முன்னே வந்து நின்றார்.  வேங்கையைப் பார்த்த பசு திகைத்து நின்றது. வேங்கை பசுவைத் தின்னப் போவதாகப்பயமுறுத்தியது. அப்போது பசு வேங்கையிடம் இறைவனை வழிபட்டு தன்  கடமைகளை முடித்து விட்டுத் திரும்பி  வருவதாகவும் அப்போது தன்னைக் கொன்று பசியாறலாம் என்றும் வேங்கையிடம் சத்தியம் செய்தது.  வேங்கையும் இதற்கு சம்மதம் தெரிவித்தது.


காமதேனு சொன்னபடியே சென்று தன் கடமைகளை முடித்து விட்டு திரும்பி வந்து வேங்கையின் முன் நின்றது. காமதேனுவின் கடமை உணர்வையும் கடவுள் பக்தியையும் கண்டு மனம் நெகிழ்ந்த வேங்கை உருவில் இருந்த இறைவனும் உமாதேவியும் காளை மீது அமர்ந்து காமதேனுக்கு காட்சி தந்தனர்.

காமதேனு சாப விமோசனம் பெற்றது. காமதேனு பசு தன் காதுகளில் அபிஷேக நீர் கொண்டு வந்து வழி பட்டதால் இத்தலத்திற்கு திருக்கோகர்ணம் (கோ என்றால் பசு. கர்ணம் என்றால் காது என்று பொருள்) என்ற பெயர் ஏற்பட்டது. 

இத்தலத்திலுள்ள ஆலயம்தான் அருள்மிகு பிரகதாம்பாள் ஆலயம். ஆலயம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. 


பெரிய கோயிலென்று அழைக்கப்படும் இந்த ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையானது. நீண்ட அலங்கார மண்டபத்தைத் தாண்டியதும் மகா மண்டபம் உள்ளது. மண்டபத்தின் இடது புறம் அன்னை பிரகதாம்பாள் சந்நதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள். 


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு நாணயம் அடிக்கும் உரிமை வழங்கப்பட்டது. மன்னர் தன் மக்களையும் தன்னையும் காக்கும் பிரகதாம்பாள் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டார்.  அதை அம்மன் காசு என்று மக்கள் கொண்டாட,  அந்தப் பெயர் நாளடைவில் மருவி அரைக்காசு  என்றானது.  அம்மனும் அரைக்காசு அம்மன் என்றே அழைக்கப்படலானாள்.  




அந்த செப்புக்காசை வீட்டின் பூஜையறையில் வைத்து வேண்டிக்கொண்டால் களவுபோன பொருள் கிடைக்கும்.  நினைத்த செயல் நடக்கும்.  வீட்டில் ஐஸ்வரியம் பெருகும்  என நம்புகின்றனர் பக்தர்கள். 

இந்த ஆலயம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது. மண்டபத்தின் நடுவே பிள்ளையாரும் தட்சிணாமூர்த்தியும் ஒரே சந்நதியில் அருள்பாலிக்கின்றனர். இது அபூர்வமான அமைப்பு என்கின்றனர். 





அதையடுத்து கோகர்ணேஸ்வரரின் சந்நதி உள்ளது. இங்கு வடதிசை நோக்கி ஒரு பிள்ளையாரும், தென்திசை நோக்கி கங்காதரரும், அருள்பாலிக்கின்றனர்.

 


கொடிமரம் வந்து படிகள் வழியே மேலே சென்றால் சுனை இருப்பது தெரியும். இதுவே கங்கா தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. 

சுனைக்கு கிழக்கில் ஜ்வரேஷ்வரர் சந்நதி உள்ளது. 

கடுமையான ஜூரம் குறைய இவருக்கு இரண்டு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் ஜூரத்தின் கடுமை குறையும் என்கின்றனர் பக்தர்கள். 

இந்த ஆலயத்தில்  நவகிரகங்கள் இல்லை. ஆனால், சூரிய சந்திரர் இருவர் மட்டும் உள்ளனர். 





இந்த ஆலயத்தின் ஆதிமூர்த்தி மகிழவனநாதர். இந்த லிங்கத்தின் மீது பசுவின் காலடிச் சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறுகின்றனர். 



இறைவியின் பெயர் மங்கள நாயகி. 

ஆலயத்தின் தல விருட்சம் மகிழமரம்.  

இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. சித்திரையில் சித்திரை பெருந்திருவிழாவும், வைகாசியில் வசந்த விழாவும், ஆனியில் ஊஞ்சல் திருவிழாவும், ஆவணி மூல நாளில் காமதேனுவுக்கு  மோட்சம் கொடுத்த திருவிழாவும் நடைபெறுகிறது. ஐப்பசியில் கந்த சஷ்டி விழா, சூரசம்ஹாரவிழா, அன்னாபிஷேகமும், புரட்டாசியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவைத் தொடர்ந்து 10ம் நாள் அம்பு போடும் விழாவும் நடைபெறும். 


திருமணம் நடந்தேற வேண்டியும் குழந்தை  பேறு வேண்டியும் வருவோர் பள்ளியறையில் 48 நாட்கள் பால் வாங்கி வைத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள். கார்த்திகையில் சொக்கப்பனை கொளுத்தும் விழாவும், மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி விழாவும், தை மாதத்தில் தைப்பூசத் திருவிழாவும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழாவும், பங்குனியில் உத்திரத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. புதுக்கோட்டை செல்லும்போது நாமும் ஒருமுறை  அரைக்காசு  அம்மனை தரிசித்துவிட்டு வரலாமே!







திருக்குற்றால நாயகி குழல்வாய்மொழி அம்மை!


திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,""நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை இங்கிருந்தபடியே தரிசிக்கலாம்,''எனக்கூறி அனுப்பிவைக்கிறார். 



சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்க செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் லிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார். 



தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன், ""அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்,''என யோசனை கூறுகிறார். 



முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், ரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது. 



அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, திருமேனி குறுக குறுக என சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமண காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட லிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம். 



இலஞ்சியில் அகத்தியர் பூஜித்த சிவன், "இருவாலுக நாயகர்' என்ற பெயரில் அருளுகிறார். குற்றாலநாதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் இந்த சிவனை தரிசித்துவிட்டு இங்கு வருவது விசேஷ பலனைத் தரும். இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதைக் காணலாம். திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி, கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து இந்த வடிவத்தை பார்க்கலாம். 



மகாலட்சுமியின் அம்சமான சங்கு, ஆற்றலின் வடிவமாகும். இதன் ஒலி, சக்தியைத் தருவதாகும். எனவேதான், சிவபூஜையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் உண்டு. இதன் அடிப்படையிலும், இக்கோயில் சங்கின் அமைப்பில் அமைந்திருப்பதாகச் சொல்வர். இங்கு 8 கால பூஜையிலும், சிவன் சன்னதியில் சங்கு ஊதுகின்றனர். 

சிறப்பம்சம்: 


அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.



மூலவர் : குற்றாலநாதர்

அம்மன்/தாயார் : குழல்வாய்மொழி, பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்)

தல விருட்சம் : குறும்பலா

தீர்த்தம் : சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி

ஆகமம்/பூஜை : மகுடாகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திரிகூட மலை

ஊர் : குற்றாலம்

பாடியவர்கள்: ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், அருணகிரிநாதர்



தேவாரப்பதிகம்!

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம் 
பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்த செல்வர் 
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின வண்டுயாழ்செய் 
குருந்த மணநாறும் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்பலாவே.

திருஞானசம்பந்தர்!

தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 13வது தலம்.


திருவிழா:

ஆடி அமாவாசையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. நவராத்திரியில் பராசக்திக்கு 10 நாள் திருவிழா. ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, தை மகத்தில் தெப்போற்ஸவம் பங்குனி உத்திரம். ஆடி அமாவாசையன்று கோயில் முழுதும் 1008 தீபம் ஏற்றும், "பத்ரதீப' விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.



இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


குற்றாலநாதர் லிங்கத்தின் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடங்கள் தற்போதும் இருக்கிறது. அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்தியதால், சிவனுக்கு தலை வலி உண்டானதாம். எனவே, இவருக்கு தலை வலி நீங்க தினமும் காலையில் 9.30 மணிக்கு நடக்கும் பூஜையில், தலையில் (லிங்க பாணத்தின் மீது) தைலம் தடவுகின்றனர்.


பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகளைச் சேர்த்து 90 நாட்கள் வேகவைத்து, அந்த கலவையில், செக்கில் ஆட்டி எடுத்த தூய நல்லெண்ணெய் சேர்த்து, இந்த தைலம் தயாரிக்கின்றனர்.


சிவனுக்கு, அபிஷேகம் செய்த தைலம் பிரசாதமாகவும் தருகின்றனர். இதுதவிர, தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, "கடுக்காய் கஷாய' நைவேத்யம் படைக்கின்றனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர்காய்ச்சல் உண்டாகாமல் இருக்க இந்த கஷாயம் படைக்கின்றனர். சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து தயாரிக்கும் இதை, "குடுனி நைவேத்யம்' என்கிறார்கள்.


இத்தலத்தில் உள்ள தலமரம் லிங்க வடிவ பலாச்சுளை காய்கிறது இத்தலத்தில் உள்ள தலமரம் பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், "லிங்க'த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம்.




சக்தி பீடங்கள் 64ல் இது, "பராசக்தி பீடம்' ஆகும்.


இத்தல அம்பிகை, "குழல்வாய்மொழிநாயகி' என்றழைக்கப்படுகிறாள்.


ஐப்பசி பூரத்தன்று திருக்கல்யாண விழா நடக்கிறது. அன்று குற்றாலநாதர், குழல்வாய்மொழி நாயகி இருவரும் அகத்தியர் சன்னதிக்கு அருகில் எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி கொடுக்கின்றனர்.


அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றிய போது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி, குழல்வாய்மொழிநாயகியாகவும், பூதேவி, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள்.




பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இந்த பீடத்திற்கு, "தரணி பீடம்' (தரணி - பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் "நவசக்தி' பூஜை செய்கின்றனர். அப்போது, பால், வடை பிரதானமாக படைக்கப்படும்.


இவள் உக்கிரமாக இருப்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்க பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், "காமகோடீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.




மணக்கோல நாதர்:


கோயில் பிரகாரத்தில் மணக்கோலநாதர் (சிவன்) சன்னதி இருக்கிறது. சிவன், அம்பிகையை மணம் முடித்த கோலத்தில் இங்கு காட்சி தருவதால் இவருக்கு இப்பெயர். இவருடன் திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மா, தாரை வார்க்கும் கோலத்தில் விஷ்ணு, மகாலட்சுமி, திருமணக்காட்சி பெற்ற அகத்தியர் மற்றும் பிருங்கி மகரிஷி ஆகியோரும் இருக்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமைய, இவர்கள் ஏழு பேருக்கும் மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து, வாசனை புஷ்ப மாலை அணிவித்து, பாயச நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.


இக்கோயிலில் பெருமாளுக்கும் சன்னதி இருக்கிறது. இவரை, "நன்னகரப்பெருமாள்' என்று அழைக்கிறார்கள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நன்மைகள் தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். அருகில் கிருஷ்ணரும் இருக்கிறார்.


ரோகிணி நட்சத்திரத்தன்றும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. முற்காலத்தில் சிவன் சன்னதியில் இருந்த பெருமாளே, இங்கு எழுந்தருளியிருப்பதாகச் சொல்கிறார்கள்.




குற்றால அருவி நீர் விழும் பாறையில், பல சிவலிங்க வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அபிஷேகப் பிரியரான சிவனுக்கு, எப்போதும் அபிஷேகம் நடக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செதுக்கியிருக்கிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த தீர்த்தத்தில் நீராடுவது மேலான புண்ணியத்தைத் தரும். பிரகாரத்தில் அகத்தியர் சன்னதிக்கு எதிரில் அவரது சீடர், சிவாலய முனிவருக்கு சன்னதி இருக்கிறது.


இந்த சன்னதியில், சிவாலய முனிவர் சிலை, அகத்தியரின் பாதத்திற்கு கீழே இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. குருவிற்கு மரியாதை தரும்விதமாக இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.




தலபெருமை:


நான்கு வேதங்கள் 4 வாயிலாகவும், இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள துவாரபாலகர்களின் அமைப்பு மிகவும் சிறப்பானது. 


இக்கோயில் வைணவக்கோயிலாக இருந்த போது, அகத்தியர் நேற்று வந்தாரா? என ஒரு துவாரபாலகர் கேட்பதைப்போலவும், இன்னொரு துவார பாலகர் அவர் வரவில்லை என கூறுவதைப்போலவும் உள்ளது.




இத்தலவிநாயகர் வல்லபகணபதி என்று அழைக்கப்படுகிறார். பிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர்.


லிங்க வடிவ பலாச்சுளை:


தலவிருட்சம் பலா மரத்தைச் சுற்றி சிறிய சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இம்மரத்தின் கீழ் "ஆதிகுறும்பலாநாதர்' பீட வடிவில் காட்சி தருகிறார். இந்த மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், "லிங்க'த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம்.


இதை பழமையான நூலான குற்றாலக்குறவஞ்சி,  "சுளையெலாஞ் சிவலிங்கம்'' என்று குறிப்பிடுகிறது. விசேஷ காலங்களில் சிவனுக்கு, பலா சுளையை பிரதானமாக படைக்கின்றனர். இதுதவிர பல்லாண்டுகள் பழமையான பலா மரம் ஒன்று பிரகாரத்தில் உள்ளது. இதனை சிவனாகவே பாவித்து, நைவேத்யமும் படைத்து தீபாராதனை செய்கின்றனர்.




தொலைந்த பொருள் தரும் சிவன்:


அர்ஜுனன், தான் பூஜை செய்த லிங்கம் வைத்திருந்த சம்புடத்தை (பெட்டி), காசியில் தொலைத்துவிட்டான். வருந்திய அர்ஜுனன் இங்கு வந்தபோது, அந்த பெட்டியைக் கண்டெடுத்தான். அதை இங்கேயே வைத்து பூஜித்துவிட்டுச் சென்றான். இந்த லிங்கம் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறது.


பொருளை தொலைத்தவர்கள் இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொள்ள, மீண்டும் அவை கிடைக்கும் என்கிறார்கள். பங்குனி உத்திரத்தன்று, அர்ஜுனன் இங்கு லிங்கத்தைக் கண்டான். எனவே, அன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இவரது சன்னதிக்கு அருகிலிருந்து இந்த லிங்கம், மேற்கு முக விநாயகர், குற்றாலநாதர் விமானம், திரிகூட மலை மற்றும் குற்றால அருவி ஆகிய ஐந்தையும் தரிசிக்கலாம்.




சித்திரசபை:


நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம். பஞ்ச சபைகளான பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்ற 5 சபைகளில் குற்றால நாதர் கோயில் அருகே சித்ர சபை அமைந்துள்ளது.


சித்திரைசபை தனிக்கோயில் அமைப்பில் இருக்கிறது.


இங்குள்ள மூலவர் நடராஜர் சித்திரமாக அருளுகிறார்.


தாமிரங்களால் வேயப்பட்ட இந்த சபையில் நடராஜர், திரிபுரதாண்டவ மூர்த்தியாக ஓவிய வடிவில் காட்சி தருகிறார்.




சித்திர சபைக்குள் அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்த அவர் லிங்கமாக மாறியது, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தெட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைகளால் வரையப்பட்டுள்ளது.




மாணிக்க வாசகர், கபிலர், பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தலம் பற்றி பாடியுள்ளனர். இக்கோயிலுக்கு மொத்தம் 5 வாசல்கள் உள்ளன.



நடராஜருக்கு மார்கழி திருவாதிரை விழா, தேரோட்டத்துடன் பத்து நாட்கள் நடக்கும்.



இவ்விழாவின் போது தினமும் காலை, மாலையில் நடராஜருக்கு செய்யப்படும் தீபராதனையை நடராஜரின் நடனத்தைப் போல, மேலும், கீழுமாக ஆட்டுகின்றனர். இதனை, "தாண்டவ தீபாராதனை' என்கின்றனர்.




இவ்விழாவில் நடராஜருக்கு வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி என இரண்டு விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. பச்சை சாத்தி அலங்காரத்திற்கு மரிக்கொழுந்தினால் பிரத்யேகமாக அலங்காரம் செய்கிறார்கள். சித்திரை பிரம்மோற்ஸவத்தின்போதும் இவருக்கு இந்த தீபாராதனை உண்டு.


அருள்மிகு பார்த்தசாரதி, திருவல்லிக்கேணி!


மூலவர் : பார்த்தசாரதி
உற்சவர் : வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவி, பூதேவி
அம்மன்/தாயார் : ருக்மிணி
தல விருட்சம் : மகிழம்
தீர்த்தம் : கைரவிணி புஷ்கரிணி
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : பிருந்தாரண்ய க்ஷேத்ரம்
ஊர் : திருவல்லிக்கேணி
மங்களாசாசனம் பாடியவர்கள்: பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், ஸ்ரீ ராமானுஜர்
மங்களாசாசனம்:
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்இன்பன் நற்புவி தனக்கு இறைவன்தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம் வன்துணைபஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என்துணை எந்தை தந்தை தம்மானைதிருவல்லிக் கேணி கண்டேனே. - திருமங்கையழ்வார்
தலபெருமை:
பார்த்தசாரதி : தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார். ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது.
காயங் களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை. அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.

தீர்த்த தாயார்:
முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிஷி, இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது இங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில், தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு திருமணப்பருவம் வந்தபோது திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் இக்கோயிலில் மாசி மாதம், வளர்பிறை துவாதசியன்று நடக்கிறது.

வேதவல்லி தாயார் தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இவள் கோயிலைவிட்டு வெளியேறுவதில்லை. வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் கோயில் வளாகத்திற்குள் புறப்பாடாகி, ஊஞ்சலில் காட்சியளிக்கிறாள்.

குடும்பத்துடன் கிருஷ்ணர்:
மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இக்கோயிலில் பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள், அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர். 
தனிசன்னதியில் இருக்கும் ராமபிரானுடன் சீதை, லட்சுணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.

சக்கரம் இல்லாத சுவாமி:
பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமானவை. ஆனால், இக்கோயிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. மகாபாரத போரின்போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். பெருமாளை இத்தகைய கோலத்தில் தரிசிப்பது அபூர்வம். பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணனாகிய மானிட வடிவில் இருப்பதால் இரண்டு கரங்களே உள்ளன.
மீசையில்லாத தரிசனம்:
தேரோட்டிக்கு அழகு கம்பீரத்தை உணர்த்தும் மீசை. இதனை உணர்த்தும் விதமாக, இக்கோயிலில் வேங்கடகிருஷ்ணர் மீசையுடன் காட்சிதருகிறார். இதனால் இவருக்கு, "மீசை பெருமாள்' என்றும் பெயருண்டு.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம்.
உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக் கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.
ஐந்து மூலவர் ஸ்தலம்:

கோயில்களில் பெரும்பாலும் ஒரு மூர்த்தி மட்டுமே பிரதான மூலவராக இருப்பார். ஆனால், இக்கோயிலில் ஐந்து மூர்த்திகள் மூலவர் அந்தஸ்தில் வணங்கப்படுகின்றனர். பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். எனவே இத்தலம், "பஞ்சமூர்த்தி தலம்' என்றழைக்கப்படுகிறது. 
ரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும்.
திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் ""என்னவரே!'' என்ற பொருளில், ""ஸ்ரீமன்நாதா!'' என்றழைத்தார். எனவே இவருக்கு "ஸ்ரீமன்நாதர்' என்ற பெயரும் உண்டு.
கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.
ஒலி எழுப்பாத மணி:
யோக நரசிம்மர், யோக பீடத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. 

பக்தர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

மற்ற தலங்களில் குறிப்பிட்ட நாளில் - குறிப்பிட்ட நேரத்தில்தான் கருடசேவை வைபவத்தைக் காண முடியும். ஆனால் இங்கே வருடம் 365 நாளுமே கருடசேவைதான்! காரணம், கஜேந்திரனுக்கு மோட்சம் அருளிய அந்தக் கஜேந்திர வரதர் (மூலவர்), கருடாழ்வார் மேல் நித்திய வாசம் செய்கிறார். திருவல்லிக்கேணியில் குடும்ப சமேதராக அருளாட்சி செலுத்தும் வேங்கடகிருஷ்ணரை தரிசித்தால், வினைகள் யாவும் தீரும்; வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல வரலாறு:
திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு,பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் இங்கு தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி வேண்டவே, பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார். 
பாரதப்போரில் அர்ச்சுனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்று க் கொண்டு அர்ச்சுனனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன. "வேங்கடகிருஷ்ணர்' என்றும் பெயர் பெற்றார். இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோயில் அழைக்கப்பட்டது.
வியாச முனிவரால் இங்கே இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்கிறது ஸ்தல புராணம். இங்கு காணப்படும் மூலவர் திருமேனியே, கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது. 

நின்றான் திருக்கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர் இவரே மூலவர். அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்ற ஸ்ரீநரசிம்மர். கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் எனப்படும் ஸ்ரீரங்கநாதர். 
இந்த மூன்று நிலைகளுமே வீரம் யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கின்றன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.
திருவிழா:
ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை - பிப்ரவரி - 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோயிலில் கூடுவர்.
பிரம்மோற்ஸவம்! ஏப்ரல் - 10 நாட்கள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் வைகுண்ட ஏகாதேசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது. வருடத்தின் அனைத்து நாட்களுமே இங்கு உற்ஸவம் என்று சொல்லும் அளவுக்கு அலங்காரங்கள். புறப்பாடுகள்! எப்போதுமே விழாக் கோலம்தான். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீஜயந்தி விழா யாதவர்களைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஜயந்தி, அன்று இரவு மூலஸ்தானத்தில் இருந்து கண்ணன் சர்வ அலங்காரத்துடன், கைத்தலத்தில் மகாமண்டபத்துக்கு எழுந்தருளி சங்குப்பால் அமுது செய்து, பின்னர் பார்த்தசாரதி பெருமாளுடன் திருமஞ்சனம் கண்டருளுவார். மறுநாள், காலை கண்ணன் சேஷ வாகனத்தில் மாடவீதிகள் மற்றும் யாதவப்பெருமக்கள் இருக்கும் வீதிகளுக்கு செல்வார். அவர்கள் அன்புடன் தரும் பால், வெண்ணெய் மற்றும் பழங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு திருக்கோயிலுக்குள் எழுந்தருள்வார். இரவு புன்னை மர வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாளுடன் திருவீதிகளில் எழுந்தருளி, உறியடி உற்சவம் கண்டருளுவார்.
தல சிறப்பு:
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.
பொது தகவல்:
தியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர். அனுதினமும் பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டிருக்கிறார். சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர். 

பிரகாரத்தில் கஜேந்திரவரதர், கருடர் மீது காட்சி தருகிறார். எனவே இவரை, "நித்திய கருடசேவை சாதிக்கும் பெருமாள்' என்று அழைக்கின்றனர். 

திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.

திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோயில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும். 2 கிலோ அரிசியில் இந்த பொங்கல் தயாரிக்கப்பட்டால், 1 கிலோ 400 கிராம் முந்திரிப்பருப்பும், 700 கிராம் நெய்யும் சேர்க்கப்பட்டு மிக சுவையாக தயாரிக்கப்படுகிறது. பக்தர்களும் இந்த நைவேத்யத்தை கட்டணம் செலுத்தி சுவாமிக்கு படைக்கலாம்.
ஒரு காலத்தில் துளசிக் காடாக(பிருந்தா ஆரண்யம்) இருந்து பல்லவ மன்னர்கள் மற்றும் சோழ மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.
திருக்கோயிலுக்கு எதிரே கைரவிணி என்கிற திருக்குளம் காணப்படுகிறது. இந்திர,சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய ஐந்து புனித தீர்த்தங்கள் இந்தத் திருக்குளத்தில் அடங்கி உள்ளதாக ஐதீகம். கங்கையைவிட புனிதமானது இந்தத் திருக்குளம் என்கிறது ஸ்தல புராணம்.
பிரார்த்தனை:
இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். தவிர இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.