Thursday 31 March 2016

கோலாப்பூர் மகாலக்ஷ்மி!



கோலாகலமாக நவராத்திரி விழா கொண்டாடப்படும் ஆலயங்களுள் ஒன்று, கோலாப்பூர் மகாலட்சுமி ஆலயம். கோலாசுரன் என்ற அரக்கனை சிம்ம வாகினியாக வந்து தேவி மகாலட்சுமி அடக்கி அருளிய தலம் என்று “கர வீர மகாத்மியம்’ கூறுகிறது.
 
“ஸ்ரீ அம்பா’ என்று போற்றி வணங்கப்படும் கோலாப்பூர் மகாலட்சுமியை பக்த துக்காராம், பக்த ராமதாசர் போன்ற மகான்கள் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.

கோலாப்பூருக்கென்று பல தனிச் சிறப்புகள் உண்டு. சரஸ்வதி, சிவாநதி, கும்பி நதி, பாக்வதி, பத்ரா நதி என்ற ஐந்து புண்ணிய நதிகள், இங்கு கூடுவதால் இத்தலம் “பஞ்சகங்கா’ என்று சிறப்பிக்கப்படுகிறது.
இந்த பஞ்ச கங்கா நதிக்கரையில்தான் பல கோயில்களுக்கு நடுவே கம்பீரமாக காட்சி தருகிறது மகாலட்சுமி திருக்கோயில். இது சக்தி பீடங்களுள் ஒன்று.


மகாராஷ்டிரம் தேவி பூஜைகளுக்கு பெயர் போனது. இம்மாநிலத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் மகாலட்சுமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள். அவர்கள் “மகாலட்சுமியின் அடிமை’ என்ற பட்டப் பெயருடன் பல சேவைகள் புரிந்துள்ளனர்.தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பேறு கிட்டவும், வியாபாரம் பெருகி சுகமாக வாழவும் இங்கு வந்து அன்னையை வேண்டி பயன்பெற்றவர்கள் ஏராளம்
.
கோலாப்பூர் மகாலட்சுமியை தரிசிக்க ஆண்டு முழுவதுமே பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். தேங்காய், பழம், கடலை, இனிப்புகள், பேடா, குங்குமம் ஆகிய பொருட்கள் அன்னையின் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் “கோஹ்லா’ என்ற பழம் நைவேத்தியமாக வைக்கப்பட்டு பக்தர் அனைவர்க்கும் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் தேவியல்லவா இவள்! அதனால் நவராத்திரிக்கு கோலாப்பூர் மகாலட்சுமியை அலங்கரிக்க திருப்பதி திருத்தலத்திலிருந்து பெருமாளின் பரிசாக பட்டுப்புடவைகள் வந்து சேர்கின்றன.

தங்க ஜரிகையுடன் ஒளிரும் அந்த அழகிய பட்டுப் புடவையை அணிந்து, முத்துமணி, ரத்தின மணி மாலைகள் புனைந்து மந்தஹாஸத்துடன் அருள் பொழியும் மகாலட்சுமியின் திவ்விய தரிசனக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.எத்தனையோ விழாக்கள் வந்தாலும் நவராத்திரி திருவிழாவே இவ்வாலயத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
 
 

Wednesday 30 March 2016

சகல வைபோகங்களையும் தரும் அதிர்ஷ்ட தேவி!

 
 
 
செல்வத் திருமகளான மகாலக்ஷ்மியை ஐஸ்வர்ய லக்ஷ்மி, சௌபாக்ய லக்ஷ்மி, சௌந்தர்ய லக்ஷ்மி, யோக லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி என பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம். வட இந்தியாவில்  அதிர்ஷ்டத்தை தரும் லக்ஷ்மியை அதிர்ஷ்ட தேவியாக வழிபடுகின்றனர்.

இந்தியாவில் சில பிரிவினர், அக்னி பூஜை செய்வதால் அதிர்ஷ்டதேவியின் அருளைப் பெறலாம் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.

வட இந்தியர்களும், சீனர்களும், மலேசியா- சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சில பிரிவினரும் அதிர்ஷ்ட தேவதை என்ற ஒன்று இருப்பதாகவே நம்புகின்றனர். வீடுகளில் பஞ்ச பூதங்களையும் ஒவ்வோர் இடத்தில் நிறுத்தி, பென்சுயி அல்லது வாஸ்து முறையில் அதிர்ஷ்ட சக்தியை நிலை நிறுத்தமுடியும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

வட மாநிலங்களில் 'லக்கி மா’ என்ற பெயரில் அதிர்ஷ்ட தேவியை வழிபடுகிறார்கள்.



தெய்வ அனுக்கிரகத்தால் கைகூடும் வரமாக இருந்தாலும், அதோடு அதிர்ஷ்டமும் நமக்குத் துணை புரிந்து, நம் வாழ்க்கை வளமாக அதிகாலையில் எழுந்து செய்யும் வழிபாடு, பெறுகின்ற ஆசிகள் அனைத்தும் இரட்டிப்பான பலன்களைத் தரும். இல்லங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அதிகாலையில் எழுந்து தீபம் ஏற்றி, வாசலில் கோலம் போடுவார்கள். வீடு மங்களகரமாக உள்ள தென்று, பிரம்ம முகூர்த்த வேளையில் வாசல் வழியாகச் செல்லும் மகாலட்சுமி வீட்டினுள் நுழைந்துவிடுவாளாம்.

நமது ஞானநூல்கள் சில, அதிர்ஷ்ட தேவி வழிபாட்டை விவரிக்கின்றன.

 
அதிர்ஷ்ட தேவி பூஜை முறை
 
பௌர்ணமி, பூரம் நட்சத்திர நாள், வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

பூஜையறையைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரித்து, ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி திருவுருவப் படத்தை நடுநாயகமாக இருத்தி, சந்தன-குங்குமம் இட்டு, பூமாலைகள் சார்த்தவேண்டும். நிவேதனத்துக்கு இனிப்பு, பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.


முதலில், விநாயகர் துதி!

அடுத்து, அதிர்ஷ்ட தேவியின் தியான ஸ்லோகம் கூறவேண்டும்.

அன்றைய திதி, நாள்- நட்சத்திரத்தைச் சொல்லியபடி, கூப்பிய கரங்களில் மலர்களை வைத்துக்கொண்டு, கீழ்க்கண்ட தியான ஸ்லோகத்தைப் படிக்க வேண்டும்.
  

பங்கஜாட்சீம் சுவர்ணாபாம் சுரத்ன மகுடான் விதாம்
நாகாபரண சம்யுக்தாம் புஜத்வய சமன்விதாம்
சுதா பேடக சாலீஞ்ச வாம ஹாஸ்தேன தாரிணீம்
ஸவ்யேகரே சுபத்மஞ்ச லம்ப கேசேன சோபனாம்
பத்மோபவிஷ்டாம் ஸுவஸ்த்ராம் லம்பபாத யுகாம் சுபாம்
பாதாதஹ பங்கஜோ பேதாம் சங்கோலூக சமன் விதாம்
தீர்த்த மத்யே ஸ்திதாம் தேவீம் தான்ய லக்ஷ்மீ மஹம் பஜே.


கருத்து: தலையில் மாணிக்கக் கிரீடம் அணிந்து, செந்தாமரை மீது அமர்ந்தவளாக, வலக் கையில் தாமரையும் இடக்கையில் பொற்கிழியும் ஏந்தியவாறு, தன்னை வழிபடுபவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதற்காக நெற்கதிரும் வைத்திருக்கிறாள் அதிர்ஷ்ட தேவி.



தாமரைக் குளத்தில் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இந்தத் தேவியைக் கண்ட குபேரன் வலம்புரிச் சங்கின் வடிவிலும், திருமகள் சிந்தாமணி மற்றும் சாளக்கிராம வடிவிலும் அருகில் திகழ, மங்கலப் பொருட்களும் நிறைவாகச் சிதறிக் கிடக்கின்றன. இந்த தேவிக்கு ஆந்தையே சகுனப் பட்சியாக அமர்ந்துள்ளது.

 
அதிர்ஷ்டதேவியின் திருவுருவைச் சிறப்பிக்கும் இந்த தியான ஸ்லோகத்தைச் சொல்லி, தேவியை வணங்க வேண்டும்.

அடுத்து, காமாட்சி விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து, யோக சக்தியான அதிர்ஷ்டதேவியை வர்ணித்து, 26 நாமாவளிகளைக் கூறி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.



அவை:

ஓம் ஸ்ரீம் தாராயை நம,
ஓம் ஸ்ரீம் வித்யாயை நம,
ஓம் ஸ்ரீம் முநின்யை நம
ஓம் ஸ்ரீம் சரத்தாயை நம,
ஓம் ஸ்ரீம் ஜராயை நம,
ஓம் ஸ்ரீம் மேதாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வதாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வஸ்தியை நம,
ஓம் ஸ்ரீம் வர்மின்யை நம,
ஓம் ஸ்ரீம் பாலின்யை நம,
ஓம் ஸ்ரீம் ஜ்வாலின்யை நம,
ஓம் ஸ்ரீம் க்ருஷ்ணாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்மிருத்யை நம,
ஓம் ஸ்ரீம் காமாயை நம,
ஓம் ஸ்ரீம் உன்மத்யை நம,
 ஓம் ஸ்ரீம் ப்ரஜாயை நம,
ஓம் ஸ்ரீம் சிந்தாயை நம,
ஓம் ஸ்ரீம் க்ரியாயை நம,
ஓம் ஸ்ரீம் க்க்ஷாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் சாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் தாந்த்யை நம,
ஓம் ஸ்ரீம் தயாயை நம,
ஓம் ஸ்ரீம் ஸ்வஸ்திதாயை நம,
ஓம் ஸ்ரீம் தூத்யை நம,
ஓம் ஸ்ரீம் கத்யாயை நம,
ஓம் ஸ்ரீம்  அதிர்ஷ்ட கலாயை நம:


நாமாவளி அர்ச்சனை முடிந்ததும், தூப- தீபங்கள் காட்டி, நிவேதனம் செய்து,



'ஓம் ஸ்வர்ண ரூப்யைச வித்மஹே
கமல ஹஸ்தாய தீமஹி
தந்தோ அதிர்ஷ்டதேவி ப்ரசோதயாத்’

என்ற அதிர்ஷ்டதேவி காயத்ரீ மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி, ஆரத்தி செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட தேவி படம் முன்பு அமர்ந்து,
 
 'ஓம் ஸ்ரீம் அதிர்ஷ்ட தேவ்யை ஸ்வர்ண வர்ஷின்யை சுவாஹா’

என்று 108 முறை ஜெபம் செய்வது விசேஷம்!

 
 

Sunday 27 March 2016

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ... கௌரி தரிசனம்!


 
ஈஸ்வரனின் அருள்பெற 21 நாட்கள் விரதம் இருந்தாள் அம்பிகை; அது கேதாரீஸ்வர விரதம். அதன் பலனாக, ஈஸ்வரனின் உடம்பில் சரிபாதி இடம் கிடைத்தது அம்பாளுக்கு. அதைக் கொண்டாடும் விதமாக அம்பிகையை நாம் வழிபடும் விரதம், கேதார கௌரி விரதம்.

ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் (தீபாவளியன்று) அனுஷ்டிக்கப்படும் விரதம் இது. அம்பிகையை கலசத்தில் ஸ்தாபித்து, 21 முடிச்சுகள் கொண்ட நோன்பு சரடு சார்த்தி, முறுக்கு, அதிரசம், வெண்தாமரை என பட்சணங்களையும் மலர்களையும் 21 என்ற எண்ணிக்கையில் படைத்து வழிபடும் இந்த விரதத்தால், சகல சௌபாக்கியமும் ஸித்திக்கும்.

வெண்மையை கௌவர்ணம் என்பர். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் தங்கியதாலும் 'கௌரீ’ என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் ஸ்ரீகௌரிதேவியை, 'உலகு தரு கௌரி’ எனப் போற்றுகிறார். ஸ்ரீகௌரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ- தேவியரையும் வழிபடுவதற்குச் சமம்; ஸ்ரீகௌரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கௌரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் 16 திருவடிவங்களைப் போற்றி, சோடச கௌரி வழிபாடு செய்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும். மகா ஸ்கந்த புராணத்திலும் சோடச கௌரி வழிபாடு சொல்லப்பட்டுள்ளது. நாமும் தரிசிப்போம் 16 தேவியரையும்!

ஸ்ரீஞான கௌரி: ஒருமுறை சக்திதேவி, ''உலக உயிர்கள் செயல்படுவது தனது சக்தியால். எனவே, எனது செயலே உயர்ந்தது'' என்று சிவனாரிடம் வாதிட்டாள். சிவனாரோ, ஒருகணம் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் பெரும் குழப்பம் நேர்ந்தது. அதைக் கண்ட தேவி திகைத்தாள். உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்று உணர்ந்தவள், நாயகனைப் பணிந்தாள். சிவம், உலக உயிர்களுக்கு மீண்டும் ஞானம் அளித்தது. கௌரி தேவிக்கு அறிவின் திறத்தை உணர்த்திய சிவமூர்த்தியை, 'கௌரி லீலா சமன்வித மூர்த்தி’ என்று சிவபராக்கிரமம் போற்றுகிறது.

இதன் பிறகு, வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த அம்பிகைக்கு தன் உடலின் பாதி பாகத்தைத் தந்த ஈசன், அவளை அறிவின் அரசியாக்கினார். இதனால் ஸ்ரீஞான கௌரி எனப் போற்றப்பட்டாள் அம்பிகை. பிரம்மன் அவளை ஞானேஸ்வர கௌரியாக கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமியில் வன்னி மரத்தின் அடியில் இருத்தி வழிபட்டான். அந்நாள் ஞான பஞ்சமி, கௌரி பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. வீரர்கள் இவளைப் புரட்டாசி வளர்பிறை தசமியில் வழிபடுகின்றனர். அந்த நாளே விஜயதசமியாகப் போற்றப்படுகிறது. இவளுடன் ஞான விநாயகர் வீற்றிருப்பார். இந்த தேவி, மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் கல்வியையும் அருள்கின்றாள்.


ஸ்ரீஅமிர்த கௌரி: உயிர்களுக்குக் குறையாத ஆயுளைத் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான சிவனாரின் தேவியானதால் கௌரிக்கு, 'அமிர்த கௌரி’ என்று பெயர். இவளுக்குரிய நாள் ஆடி மாத பௌர்ணமி. ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிபடுவதால் ஆயுள் விருத்தியாகும்; வம்சம் செழிக்கும். இவளுடன் ஸ்ரீஅமிர்த விநாயகர் வீற்றிருப்பார். திருக்கடவூர் அபிராமி, அமிர்த கௌரியாவாள். அங்குள்ள ஸ்ரீகள்ளவாரணப் பிள்ளையார் அமுத விநாயகர் ஆவார்.

ஸ்ரீசுமித்ரா கௌரி: உயிர்களுக்கு இறைவன் தலைசிறந்த நண்பனாக இருக்கிறான். சுந்தரரின் தோழனாக ஈசன் அருள் பாலித்த கதைகள் நமக்குத் தெரியும். அவரைப் போன்றே உயிர்களின் உற்ற தோழியாகத் திகழும் அம்பிகையை, 'அன்பாயி’, 'சினேகவல்லி’ எனப் போற்றுகின்றன புராணங்கள். திருஆடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ஸ்ரீசுமித்ரா கௌரி எனப் போற்றுவர். இவளை வழிபட, நல்ல சுற்றமும் நட்பும் வாய்க்கும்.


ஸ்ரீசம்பத் கௌரி: வாழ்வுக்கு அவசியமான உணவு, உடை, உறைவிடத்தை சம்பத்துகள் என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் (கால்நடைகள்) உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ஸ்ரீசம்பத் கௌரி. சம்பத்துகளை உணர்த்தும் வகையில் பசுவுடன் காட்சி அளிப்பாள் இந்த தேவி. அவளே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் இறைவன், சம்பத் கௌரி உடனாய நந்தீசுவராகக் கோயில் கொண்டுள்ளார்.காசி அன்னபூரணியையும் மகாமங்கள கௌரி, சம்பத் கௌரி என்பர். இவளுடன் ஐஸ்வர்ய மகாகணபதி வீற்றிருக்கிறார்.

பங்குனி- வளர்பிறை திருதியையில் விரதம் இருந்து ஸ்ரீசம்பத் கௌரியை வழிபட, வீட்டில் தான்யம், குழந்தை குட்டிகளுடன் கூடிய வம்சம், செல்வம் எல்லாம் விருத்தியாகின்றன. வயதான பெரியோர்கள் சுகம் அடைகிறார்கள்.


ஸ்ரீயோக கௌரி: யோக வித்தையின் தலைவியாக ஸ்ரீமகா கௌரி திகழ்கிறாள். இவளையே 'ஸ்ரீயோக கௌரி’ என்கிறோம். மகா சித்தனாக விளங்கும் சிவனாருனுடன் அவள் யோகேஸ்வரியாக வீற்றிருக்கிறாள். காசியில் அவர்கள் இருவரும் வீற்றிருக் கும் பீடம் 'சித்த யோகேஸ்வரி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது.

சித்தர்கள் யோகங்களை அருளும் அம்பிகையை யோகாம்பிகை, யோக கௌரி என்று அழைக்கின்றனர். யோக கௌரியுடன் வீற்றிருக்கும் விநாயகரை யோக விநாயகர் என்பர். திருவாரூரில் தியாகராஜர் மண்டபத்தில் வீற்றிருக்கும் (மூலாதார) விநாயகரை யோக கணபதி என்பர். திருவாரூரிலுள்ள கமலாம்பிகை யோக கௌரி ஆவாள். அங்குள்ள தியாகராஜரின் ரகசியங்கள், 'யோக வித்தை’ எனப்படுகின்றன. திருப் பெருந்துறையில் அன்னை யோக கௌரி, யோகாம்பிகையாக வீற்றிருக்கிறாள்.


ஸ்ரீவஜ்ர ச்ருங்கல கௌரி: உறுதியான உடலை வஜ்ர தேஹம் என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் கௌரிதேவி ஸ்ரீவஜ்ர ச்ருங்கல எனப் போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இவள் அமுத கலசம், சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியை ஏந்திக் காட்சியளிக்கிறாள். ச்ருங்கலம் என்பதற்கு, சங்கிலி என்பது பொருள். வைரமயமான சங்கிலியைத் தாங்கி இருப்பதால், வஜ்ர ச்ருங்கல கௌரி எனப்படுகிறாள். உயிர்களுக்கு வஜ்ர தேகத்தை அளித்து நோய் நொடிகள் அணுகாமல் காத்து, அருள்புரிவதுடன் இறுதியில் மோட்சத்தையும் தருகிறாள். இவளுடன் இருப்பது ஸ்ரீஸித்தி விநாயகர்.

ஸ்ரீத்ரைலோக்ய மோஹன கௌரி: ஆசைக் கடலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, இவளை வழிபட வேண்டும். மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்குத் தெய்விக சக்திகளையும் அளிக்கிறாள் இவள். இவளுடன் த்ரைலோக்கிய மோஹன கணபதி வீற்றிருக்கின்றார். காசியில் நளகூபரேஸ்வரருக்கு மேற்குப் பக்கத்தில் குப்ஜாம்பரேசுவரர் என்னும் சிவாலயம் உள்ளது. அதில் த்ரைலோக்ய (மோஹன) கௌரி வீற்றிருக்கிறாள்.



ஸ்ரீசுயம்வர கௌரி: சிவனாரை தன் மண மகனாக மனதில் எண்ணியவாறு, நடந்து செல்லும் கோலத்தில் அருள்பவள். திருமணத் தடையால் வருந்தும் பெண்கள் சுயம்வர கௌரியை வழிபட, நல்ல கணவன் வாய்ப்பான். ருக்மிணி, சீதை, சாவித்ரி முதலானோரின் வரலாறுகள் கௌரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நல்ல இல்லறத்தை நல்கும் இந்த அம்பிகையை சாவித்ரி கௌரி என்றும் அழைக்கின்றனர். இந்த தேவியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கின்றார்.


ஸ்ரீகஜ கௌரி: பிள்ளையாரை மடியில் அமர்த்தியபடி அருள்புரியும் தேவி இவள். ஆடி மாத பௌர்ணமி திதியில் இந்த தேவியை வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். காசி அன்னபூரணி ஆலயத்தில் சங்கர கௌரி கணபதியின் பெரிய திருவுருவம் உள்ளது. இலங்கையில், பல இடங்களில் தேர்ச் சிற்பங்களாகவும், தூண் சிற்பங்களாகவும் ஸ்ரீகஜ கௌரி காட்சியளிக்கிறாள்.

கீர்த்தி கௌரி (எ) விஜய கௌரி: நற்பயனால் ஒருவன் பெரிய புகழை அடைந்திருந்தபோதிலும், அதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் செய்யும் தேவியாக விஜய கௌரி விளங்குகிறாள். அவளுடைய அருள் இருக்கும் வரையில் அவனது நற்குணங்களும் செயல்களும் மேன்மைபெறும்; கெட்ட நண்பர்களும், பகைவர்களும் விலகுவர்.


ஸ்ரீசத்யவீர கௌரி: நல்ல மனம் படைத்தவர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றுவர். அத்தகைய மனப்பாங்கை அருள்பவள் ஸ்ரீசத்யவீர கௌரி. இந்த தேவியுடன் ஸ்ரீவீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கௌரிக்குரிய நாள்- ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெயகௌரி விரதம் என்று அழைக்கின்றனர்.


ஸ்ரீவரதான கௌரி: கொடை வள்ளல்களின் கரத்தில் ஸ்ரீவரதான கௌரி குடியிருப்பாள். அன்பர்கள் விரும்பும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ஸ்ரீவரதான கௌரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. அவளுடைய கணவன் ஸ்ரீஅறம்வளர்த்தீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். காஞ்சியிலும் ஸ்ரீஅறம்வளர்த்தீசுவரர் ஆலயத்தைத் தரிசிக்கலாம். புரட்டாசி- வளர்பிறை திருதியை நாளில், ஸ்ரீவரதான கௌரியை வழிபடுவது சிறப்பு.

ஸ்ரீசுவர்ண கௌரி: ஒரு பிரளய முடிவில், அலைகடலின் நடுவில் ஸ்வர்ண லிங்கம் தோன்றியது. தேவர்கள் யாவரும் பூஜித்தனர். அப்போது, அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே தேவியை, சுவர்ணவல்லி என்று தேவர்கள் போற்றினார்கள். ஸ்ரீஸ்வர்ண கௌரியை வழிபடுவதால் தோஷங்கள், வறுமை ஆகியன நீங்கும். குலதெய்வங்களின் திருவருள் கிடைக்கும். சுவர்ணகௌரி விரதத்தை, ஆவணி- வளர்பிறை திருதியை நாளில் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றன புராணங்கள். எனினும் நடைமுறையில், கடலரசியான அவளை மாசி மாதத்தில் வழிபடுவதால் பூரண பலனை அடையலாம் என்று அனுபவத்தில் கூறுகின்றனர்.

சாம்ராஜ்ய மஹாகௌரி மீனாட்சி: அன்பும் வீரமும் ஒருங்கே விளங்கும் தலைமைப் பண்பை தரும் தேவி இவள். இந்த அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வணங்குவர். இந்த தேவியுடன் ஸ்ரீராஜ கணபதி அருள்புரிவார். இவளை மனதார வழிபட, ராஜ யோகம் கிடைக்கும்.

ஸ்ரீஅசோக கௌரி: துன்பமற்ற இடமே அசோகசாலம் எனும் தேவியின் பட்டணமா கும். இங்கு தேவி, ஸ்ரீஅசோக கௌரி எனும் பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை- வளர்பிறை அஷ்டமியில் (அசோகாஷ்டமி) அசோக கௌரியை வழிபட, பேரின்ப வாழ்வை அடைவர். இவளுடன் சங்கடஹர விநாயகர் வீற்றிருக்கின்றார்.

ஸ்ரீவிஸ்வபுஜா மகாகௌரி: தீவினைப் பயன்களை விலக்கி, நல்வினைப் பயனை மிகுதியாக்கி, உயிர்களுக்கு இன்பங்களை அளிக்கும் தேவி. காசிக்கண்டம் இவளுடைய பெருமைகளை விவரிக்கிறது. தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, ஆசைகளைப் பூர்த்தி செய்பவளும் இவளே! எனவே, 'மனோரத பூர்த்தி கௌரி’ என்றும் அழைக்கப்படுகிறாள். சித்திரை மாத வளர்பிறை திருதியையில் இவளை வழிபடுவது விசேஷம். இவளுடன் ஆசா விநாயகர் வீற்றிருக்கின்றார்.
 
 

அரசர் கோவில் ஆறு விரல் மகாலக்ஷ்மி!


ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிர கிரகத்துக்கு உரிய எண் ஆறு. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி செய்யும் இருபதாண்டு காலம், யோகம் நிறைந்த காலம் என்பார்கள். சுக்கிரன் என்றாலே அதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர். மக்களுக்கு செல்வத்தையும், செல்வாக்கையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் ஒவ்வொரு வெள்ளிகிழமைதோறும் பாலாற்றங்கரையில் உள்ள அரசர் கோயிலில் உறையும் சுந்தர மகாலட்சுமியை தரிசனம் செய்ய வருகிறார் என்பது காலத்தால் நிலைத்து நிற்கும் நம்பிக்கை.

சுக்கிரதிசை அடிக்கிறதுஎன்றாலே ஒருவர், ஓஹோவென்று வாழ்கிறார் என்று பொருள். அப்படி சகல சௌபாக்கியங்களையும் தரும் சுக்கிரனே வெள்ளிதோறும் சுந்தர மகாலட்சுமியை தரிசனம் செய்ய வருகிறார் என்றால், அந்த மகாலட்சுமியின் கடாட்சம் கிட்டுமானால், எப்படிப்பட்ட வாழ்க்கை ஒருவருக்கு கிடைக்கும்?

மகாலட்சுமி சுக்கிரனுக்கு ப்ரீதியானவர் என்பதற்கு மற்றொரு சான்று, அரசர் கோயிலில் வாசம் செய்யும் மகாலட்சுமிக்கு வலது பாதத்தில் ஆறு விரல்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? அது மட்டுமா? சகல ஐஸ்வர்யங்களையும் நமக்கு தருபவர்கள், அறுபத்தி நான்கு லட்சுமிகள். எல்லா லட்சுமிகளுக்கும் தாயார் இந்த சுந்தர மகாலட்சுமி தான். இவருக்கு பெருந்தேவி தாயார் என்ற திருநாமமும் உண்டு. சுந்தர மகாலட்சுமி தாயாருடன் உடனுறைபவர்கமலவரதராஜ பெருமாள். கமல வரதராஜர் காஞ்சி வரதருக்கும் மூத்தவராம்.
 
கமல வரதராஜர் உடனுறை சுந்தர மகாலட்சுமியும் அரசர் கோயிலில் எழுந்தருளியது குறித்து புராண வரலாறு என்ன சொல்கிறது?

பிரம்மா பாப விமோசனம் தேடிக் கொண்டிருந்த சமயம். பல தவச் சீலர்களை கலந்தாலோசிக்கிறார் பிரம்மா. மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் மாதவனும் சேர்ந்து எங்கு காட்சி தருகிறார்களோ அந்தத் திருத்தலத்தில் அவர்களின் தரிசனம் கிடைத் தால் தான் பாப விமோசனம்" என்று முனிவர்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் வைகுண்டவாசனின் விளையாட்டுதானே! பூலோகத்துக்கு வரும் நாராயணன், பாலாற்றங்கரையில் வாசம் செய்கிறார். அந்த சமயம் ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார். ஆண்டவரும் அரசரும் அங்கே சந்திக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட பிரம்மா விரைந்து வந்த இருவரையும் தரிசனம் செய்கிறார். நாராயணர் அவருக்கு பாபவிமோசனம் கொடுத்து, பாலாற்றிலிருந்து மண் எடுத்துச் சென்று யாக குண்டம் கட்டி வேள்வி செய்யச் சொல்கிறார். பிரம்மா மண்ணை எடுத்துக் கொண்டு போய் காஞ்சிபுரத்தில் வேள்வியைத் துவக்குகிறார்.

இந்த நிலையில் பாற்கடல்வாசனைக் கண்ட ஜனகர் தினசரி அவருக்கு பூஜை செய்து வருகிறார். ஒரு நாள் ஜனகர் ஏதோ வேலையாகச் சென்றவர் பூஜை நேரம் முடிந்ததும் திரும்புகிறார். வந்து பார்த்தால் பூஜை நடந்து முடிந்ததற்கான தடயங்கள் தெரிகின்றன. அதிர்ச்சியடைகிறார் ஜனகர். பெருமாளே வந்து தனக்குத் தானே பூஜை செய்துவிட்டு போனதாக சொல்கிறார் காவலாளி. அதிர்ச்சியடையும் ஜனகர், ‘இப்படி நடந்து விட்டதேஎன்று மனம் கலங்குகிறார். இதற்கிடையில் பெருமாள் ஜனகர் இருந்த இடத்துக்குப் போய் தனக்குத் தானே பூஜை செய்து கொண்டதைக் கேள்விப்பட்ட மகாலட்சுமி கோபப்படுகிறார். அவரை சமாதானப்படுத்தும் விதமாக இங்கே வந்து என்னை தரிசிப்பவர்களைவிட உன்னை தரிசிப்பவர்களுக்கே, ஐஸ்வரியங்கள் சேரும்" என்று சொல்கிறார்.

தன் தவறுக்கு பரிகாரமாக ஜனகர் பெருமாளுக்கு தேவ சிற்பி விஸ்வகர்மா மூலம் கோயில் கட்ட, அது அரசர் கோயிலென அழைக்கப்பட்டது. அங்கேகமலவரதராஜரும் சுந்தர மகாலட்சுமியும் எழுந்தருளி கால, காலமாக மக்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்கள்.

இந்தக் கோயிலில் முதலில் தாயாரைத்தான் வணங்க வேண்டும். தாமரை பீடத்தில் பத்மாசன நிலையில் காட்சி கொடுக்கிறார் தாயார். மேல் இரு கரங்களில் தாமரை. கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரையுடன் ரட்சிக்கின்றன. பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலுக்கு அடுத்து ஆறாவது விரல். பெயருக்கு ஏற்றார் போல்சுந்தரமாக காட்சியளிக்கிறார். வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்களையும் கொடுப்பாள் மகாலட்சுமி.

தாயார் சன்னிதி கருவறை முன் மண்டபத்து தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டினால் வித்தியாசமான சப்தத்தை எழுப்புகின்றன. தூணில் உள்ள ஒரு துவாரத்தில் தர்ப்பையை விட்டால் நான்காகப் பிரிந்து வெளிவருகிறது. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம் குபேர கோமுகம் என்கிறார்கள். தாயார் சன்னிதி சடாரியில் மேல் உள்ள பாதத்திலும் ஆறு விரல்கள். தாயாருக்கு பலாச்சுளை நைவேத்தியம் சிறப்பு. இப்படி பலாச்சுளைகளை கொடுத்த சித்தரின் சிற்பம் மண்டபத்தில் இருக்கிறது. தாயார் கருவறை முன் மண்டபம் முழுக்க சிற்பங்களின் அணிவகுப்பு.

பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம். வலது கரத்தில் தாமரை மொட்டு. தாயார் கொடுத்தது. ‘கமலவரதராஜர் என்ற திருநாமத்துக்கு காரணம் புரிந்திருக்குமே! பிள்ளையார் தும்பிக்கை ஆழ்வார் என்று வணங்கப்படுகிறார். பெருமாள் சன்னிதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் ஆகியோர் உற்சவர் கோலத்தில் இருக்கிறார்கள்.

கோயிலில் கஜபூஜை செய்தால் விசேஷம். மேலும் பின்புறம் ஓடும் பாலாற்றில் பித்ரு காரியம் செய்வது சிறப்பு. விஜயநகர பேரரசர்கள், மூன்றாம் ராஜராஜன், ஜடாவர்மன், சுந்தர பாண்டியன் ஆகியோர் கோயிலுக்கு திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் சொல்வது மட்டுமல்லாமல்; தொன்மையையும் வெளிப்படுத்துகின்றன. திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

செல்லும்வழி:
G.S.T.
சாலையில் மாமண்டூரை அடுத்து, படாளம் சந்திப்பிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது அரசர் கோவில்.

தொடர்புக்கு: 88706 30150