Friday, 4 November 2016

26 - மகோன்னதமாக வாழவைப்பாள் மூகாம்பிகை!

51 சக்தி பீடங்கள் - 26
காசூரன் என்ற அரக்கன் சிவனிடம் பல வரங்கள் பெற்று நாட்டில் பல அட்டூழியங்கள் செய்து வந்தான். தேவர்கள், அனைவரும் அவனுடைய இம்சை  தாங்க முடியாமல் தலைமறைவாயினர். அதனால் தலைக்கனம் அதிகமான மூகாசூரனின் தொல்லைகள் அதிகரிக்க அனைவரும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். அரக்கனின் கொடுங்கோன்மைக்கு விரைவில் ஒரு முடிவு வரும் என்று அவர்களை ஆறுதல்படுத்தினார். கோலரிஷியின் ஆலோசனைப்படி ஒவ்வொரு தேவர், தேவியரின் தனிப்பட்ட சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மூகாம்பிகை தேவியாக உருவாயின. அவள் மூகாசூரனைப் போரிட்டு அழித்தாள். அவ்வாறு அவனை அழித்த இடம் மரணகட்டி என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம் கோலவ மகரிஷி என்பவர் கொல்லூரின் இயற்கை அழகைக் கண்டு அங்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் அவர்முன் எழுந்தருளி ஆசி வழங்கினார். அப்போது முனிவர் ‘தங்களை தினமும் வழிபட தங்களின் சிவலிங்க உருவம் வேண்டும்,’ என்று கோரிக்கை சமர்ப்பிக்க, ஈசனும் அங்கு ஸ்வர்ணரேகையுடன் அதாவது, அம்பாளுடன் கூடிய லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்தார்.

சிவனும் சக்தியும் அந்த லிங்கத்தில் இருப்பதை உணர்ந்த முனிவரும்  அவ்வுருவத்தைக் கொண்டு வழிபாடு நடத்தி வந்தார். ஆதிசங்கரர், கேரளப் பகுதியாகிய காலடி என்ற இடத்தில் சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். கோவிந்தபகவத் பாவதரின் சீடராக தன் ஆன்மிகப் பயணத்தை தொடங்கினார். உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம், அத்வைதம் என கற்று தேர்ந்த அந்த ஞானி, இந்து மதத்தை மென்மேலும் உயிர்ப்பிக்க வந்தவர். பகவத்கீதை, விஷ்ணுஸஹஸ்ர நாமம் போன்றவற்றிற்கு விளக்கவுரை எழுதிவைத்தவர். இந்திய துணை கண்டம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை எழுச்சி பெற வைத்தவர். கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என நான்கு இடங்களில் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். அவர் பயணம் மேற்கொள்ளும்போது கர்நாடகாவின் கொடசாத்ரி மலையின் மீது தியானம் மேற்கொண்டார்.

தியானத்தின் பலனாய் அம்பாள் அருளாசி வழங்க அவர் முன் தோன்றியபோது ‘‘அம்பிகையே தினம்தினம் நான் உன்னை வணங்க வேண்டும், உனது உருவத்தை நான் என் ஊரான காலடியில் பிரதிஷ்டை செய்ய விரும்புகிறேன்,’’ எனக்கேட்டார். அம்பாளுக்கோ அந்த இருப்பிடத்தை விட்டுப் போக மனதில்லை. இருந்தும் பக்தன் வேண்டிக்கொண்டதால் அவள் சம்மதித்தாள். ஆனால், பதிலுக்கு ஆதிசங்கரரிடம் ஒரு வாக்குறுதி பெற்றாள். அதாவது, ‘‘நீ என் உருவத்தைக் கொண்டு செல். ஆனால், நீ சென்றுசேரும் இடம்வரை திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படி திரும்பினால் அந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்துவிட வேண்டும்,’’ என்றாள். ஆதிசங்கரரும் அதை ஏற்று, கொடசாத்ரி மலையிலிருந்து அம்பாளை கைகளால் தாங்கியபடி பக்தியுடன் இறங்கி வந்தார். மலையின் அடிவாரம் வந்தபோது அம்பாள் தனது கொலுசை அசைக்க அதில் வந்த சத்தத்தைக் கேட்டு ஆதிசங்கரர் திரும்பிப் பார்த்தார்.

அப்படிப் பார்த்ததால் அம்பாளுக்கு தந்த வாக்குப்படி அந்த இடத்திலேயே அம்பாளை பிரதிஷ்டை செய்து விட்டார். அந்த இடமே கொல்லப்புறா என்கிற கொல்லூராகும். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்தச் சிலையே தற்போதும் ஆலயத்தில் ஆசிவழங்குகிறது. அழகும், அமைதியும் கொண்ட இடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு அருள்கிறாள் மூகாம்பிகா. மூன்று கண்கள் கொண்ட, காணக்கிடைக்காத அரிய சிற்பம் இது. அன்பு நிறைந்த சாந்த சொரூபிணி இவள். அம்பிகையின் சக்தி பீடங்களுள் இது அர்த்தநாரீ சக்தி பீடமாக போற்றப்படுகிறது. அம்பிகையின் கருவறை விமானம் தங்கத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. தேவி சிம்மவாகனத்தில் காட்சியளிக்கிறாள். திருமுடியில் வைரக்கிரீடம், நாகம், பிறை போன்றவற்றோடு பல்வேறு அணிகலன்களால் தேவியின் அழகு மேலும் மிளிர்கிறது. அம்பிகையின் மார்பில் தவழும் மரகதக்கல்லின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்குமாம்!

அம்பிகையின் இரு புறங்களிலும் மகாகாளி, மகாசரஸ்வதி இருவரும் பஞ்சலோக வடிவினராக அருள்கின்றனர். அனைத்து அபிஷேகங்களும் அர்ச்சனைகளும் மூகாம்பிகையின் கீழேயுள்ள சக்தி லிங்கத்திற்கே செய்யப்படுகின்றன. இந்த லிங்கத்திற்கு ராணி சென்னம்மாள் அளித்த தங்கமுகம் சாத்தப்படுகிறது. மூகாம்பிகைக்கு ஆண்டுதோறும் ஆனியில் ஜெயந்திவிழா, ஆடியில் மகாலக்ஷ்மி ஆராதனை, புரட்டாசியில் நவராத்திரி, மாசியில் தேர்த்திருவிழா என்று விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. தினமும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. அதேபோல் கோயில் உட்பிராகாரம் முழுவதும் ஆற்று நீரால் கழுவப்படுகிறது. வெள்ளிக்கிழமைதோறும் கோயில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீப மரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல் கருவறையை சுற்றிலும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டு அவையும் தீப ஒளியால் மின்னுகின்றன.

இரவு சந்நிதானம் அடைக்கப்படுவதற்கு முன் அம்பாள் கோயிலுக்குள்ளே தங்க ரதத்தில் பிராகார வலம் வருகிறாள். தேவலோக தேவர்கள் அதை தினமும் கண்டு வணங்குகிறார்கள் என்பது புராண நம்பிக்கை. தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்கு நீர் வழங்கப்படுகிறது. அதை அருந்தினால் மனதில் தெம்பு வரும், நோய்கள் அண்டாது, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். புன்முறுவல் பூத்த திருமுகத்தினளாகவும், உலகோரை ஈர்க்கும் வைரமூக்குத்தியை அணிந்தவளாகவும் தாமரைப் பாதங்கள் கொண்ட தாய் மூகாம்பிகையை தரிசித்து நம் முக்கால பிணிகளையும் களைவோம். அம்பாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம், இரவு என இரண்டு முறை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒரே வரிசையில் வரவழைத்து, சமமாக அமரவைத்து போதும், போதும் என்கிற அளவுக்கு உணவு வழங்கப்படுகிறது.

சென்னையிலிருந்து மங்களூருக்கு ரயில் மூலம் சென்றால் அங்கிருந்து பேருந்துகள் மூலம் இத்தலத்தை அடையலாம். பெங்களூரு, ஷிமோகா, கோவையிலிருந்து கொல்லூருக்கு நேரடியாக பேருந்து வசதியுள்ளது.

 

27 - கோலாகலமாய் வாழச்செய்வாள் கோகர்ண நாயகி!

51 சக்தி பீடங்கள் - 27
கர்நாடக மாநிலம், கார்வார் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அரபிக்கடலோரம் உள்ள திருத்தலம் கோகர்ணம். தேவியின் கர்ணசக்தி பீடமாய் திகழ்கிறது திருத்தலம். இத்தல ஈசனான மகாபலேஸ்வரரின் தெற்கு வாயில் அருகே மகாசக்திபீட நாயகி, பத்ரகாளி வடிவத்தில் அருட்காட்சியளிக்கிறாள். இவள் கருவறை கோபுரம் ஸ்ரீசக்ரமேருவின் வடிவில் உள்ளது அற்புதமான அமைப்பாகும். இப்பீடத்தில் அமர்ந்தருளும் தேவி ஜகதாம்பிகை ஆணவம், மாயை, கன்மம் எனும் மும்மலங்களை அகற்றி அன்பர்களின் துயர்தீர்க்கும் பரமேஸ்வரி. கலங்கித் தவிக்கும் சித்தத்தை தெளிய வைத்து அறியாமை இருளை அகற்றி ஞானப்பேரொளி நம் மனதில் வீச அருள்பவள். நன்மை தரும் நல்வழியைக் காட்டி நல்ல உபதேசங்களைச் செய்யும் நல்லதோர் குருவாக விளங்கும் அன்னை. அவள் ஆயிரம் திருநாமங்களும் கல்லையும் கனிய வைக்கும். பல ஜென்மங்கள் எடுத்தும் நற்கதி பெறாது வருந்துவோர்க்கு தொல்லைகள் நீக்கி பேரானந்தத்தை அளிக்கும். ஞானமானது ஒளிவீச, பந்த பாசங்களை நீக்கி, உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தி ஆதார சக்தியான தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொள்ளும். இவளை வேண்டி அருள் பெறுவோம். இப்பீடம் மிகவும் விசேஷமான சக்திபீடமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.

இத்தலத்திற்கு ஏமகூடம் என்ற பெயரும் உண்டு. கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணிய பலன் இத்தலத்தை தரிசிப்பவர்களுக்குக் கிட்டும். வடக்கே காசிபோல் தெற்கே கோகர்ணம் சிறந்த தலமாகும். இத்தலம் பசுவின் காதுபோல தோற்றமளிப்பதால் இப்பெயர் வந்தது. முற்காலத்தில் சிருஷ்டித் தொழிலைப் புரிய நான்முகன் ஈசனைப் படைத்தாராம். ஆனால், ஈசனோ தவம் செய்யச் சென்றுவிட நான்முகனே படைக்கும் தொழிலை மேற்கொண்டாராம். அதனால் சினமடைந்த ஈசன் பூவுலகம் வரஎண்ணி வெளியே வர சிறிதும் இடமின்மையால் வளம் சுரக்கும் இப்பூமியில் சூட்சும வடிவம் தாங்கி பசுவின் காது வழியே தோன்றினாராம். கோ(பசு) கர்ணம்(காது). இதுவே இத்திருத்தலத்தின் பெயர்க் காரணம். பிரளய காலத்திலும் அழியாத இடம் என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.
ராமர் ராவணனைக் கொன்ற பிரம்மஹத்திதோஷம் இத்திருத்தலத்தில் தங்கியதால் நீங்கப்பெற்றதாக ஐதீகம். அதனால் இத்தல தீர்த்தம் ராமதீர்த்தம் என வழங்கப்படுகிறது. தேவர் தலைவன் இந்திரன், சிவன், கணபதி, கண்ணன் போன்றோரும் தம் தோஷங்களை நீக்கிக்கொண்ட திருத்தலமும் இதுவே.

ராவணன் ஈசனிடமிருந்து பெற்ற ஆத்மலிங்கத்தை இலங்கையில் பிரதிஷ்டை செய்து பூஜித்தால் அவனை யாருமே வெல்ல முடியாது என்பதை உணர்ந்த தேவர்கள் விநாயகர் உதவியுடன் அந்த லிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்ய வைத்துவிட்டனர். அந்த லிங்கத்தை இழுக்க முயன்று தோல்வியுற்றான் ராவணன். ராவணனை விட பலம் மிக்கவராக இந்த ஈசன் விளங்கியதால் மகாபலேஸ்வர் என வழங்கப்படுகிறார்.   சிவலிங்கத்தைப் பெயர்க்க நினைத்த ராவணன் அன்னையின் கோபாக்னியால் ரத்தக்காயம் அடைந்தான். ராவணனுடைய ஆணவத்திற்கு அன்னையின் எச்சரிக்கை இத் தலத்திலேயே விடுக்கப்பட்டது என்பதற்கு அவன் இங்கு ரத்தம் சிந்திய நிகழ்ச்சியே முன்னோடியானது. ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக அன்னை விளங்குகின்றாள். இறைவன் வேறு, இறைவி வேறு என்றில்லை என்பதால் கோகர்ண தலத்தில் இறைவனின் சிறப்புகள் எல்லாம் அன்னையின் சிறப்பு களாகவே விளங்குகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமமும் இதையே சிவ ஞானப்ரதாயினீ என்று கூறுகிறது.

சிவ விஷயமான ஞானத்தை அம்பிகை தன் பக்தர்களுக்கு தருகிறாள் என்று சொல்லப்பட்டுள்ளது. தேவி ‘தக்ஷிணாமூர்த்தி ரூபிணி ஸனகாதி ஸமாராத்யா’ என மேலும் தேவியை ஈசனின் வடிவமாகவே லலிதா ஸஹஸ்ரநாமம் புகழ்கிறது. இப்படி குருமூர்த்தமாகி, சனகாதி முனிவர்களால் ஆராதிக்கப்பட்டு சிவஞானம் எனும் ப்ரம்மரஸத்தை பரமேஸ்வரன் பரமேஸ்வரி இருவரின் பேரருளாலேயே அடையமுடியும். காமேஸ்வரனான ஈசனின் பத்தினியாதலால் தேவி காமேஸ்வரியாகிறாள். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் இந்த அம்பிகையையும், ஈசனையும் அர்ச்சனை செய்து வழிபடுவது கையிலயங்கிரியில் இருக்கும் அம்மையப்பனை வணங்கி வழிபடுவதற்குச் சமம். இங்கு சதச்ருங்க மலையும், கோடி தீர்த்தமும், காயத்ரி நதியும் இருப்பதே அன்னையின் அருளுக்குக் கட்டியம் கூறுகிறது.  இத்தல விநாயகர் இரு கரங்களுடன் அழகு மிளிர தரிசனமளிக்கிறார். இந்த ஆத்மலிங்கத்திற்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விழா விமரிசையாக நடைபெறுகிறது. காசியைப்போலவே இங்கும் பக்தர்கள் தாங்களே ஈசனை அபிஷேகித்து பூஜைகள் செய்யலாம். தன்னை வணங்குவோர் வாழ்வை கோலாகலமாக்கியருளும் கோகர்ணநாயகியின் பாத கமலங்களை பணிவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் பெயர் உஜ்ஜயினி. அம்பிகையின் இடது முழங்கை விழுந்த சக்தி பீடம். அக்ஷர சக்தியின் நாமம் ஜ(   ). அக்ஷர தேவியின் நாமம் ஜயா தேவி எனும் போகதாதேவி. ரத்தவர்ணத்தினள். முக்கண்ணி. நாற்கரங்களிலும் கட்கம், கேடயம், வரமுத்திரை, அபயமுத்திரை தரித்தவள். சிம்மவாகனம் இத்தேவிக்குரியது. பீட சக்தியின் நாமம் மங்கள சண்டிகா. இத்தலத்தை கபிலாம்பரர் எனும் பைரவர் பாதுகாப்பதாக ஐதீகம். இத்தலம் மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினியில் ருத்ரஸாகர் அருகேயுள்ள சபார் நதிக்கரையில் அமைந்துள்ளது. அங்குள்ள ஸ்ரீயந்திரத்திற்கருகே அன்னை முழங்கை வடிவில் அமைந்திருப்பதாகவும், பகலில் இங்கும், இரவில் குஜராத்திலுள்ள மூல த்வாரகாவிலும் தேவி அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது.






 

28 - கல்யாண வரம் அருளும் காமாக்யா பீடம்!

51 சக்தி பீடங்கள் - 28
கெளஹாத்தி, அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரம். இந்நகர் பிரம்மபுத்ரா நதிக்கரையில் உள்ளது. முற்காலத்தில் இவ்விடம் ‘‘பாண்டு’’  (மகாபாரதத்தில் மிகவும் பிரசித்தமான பெயர்) என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. அங்குள்ள பிரம்மபுத்திரா நதியில் செய்யும் படகுப்பயணம் நம்  அன்னையின் அருளைப் போலவே மிகவும் இனிமையானது  சுகம் தருவது. ‘பிஹு’ என்ற பண்டிகை வருடத்தில் மும்முறை இங்கு கொண்டாடப்படுகிறது.  இங்கு அமைந்துள்ள காமாக்யா திருக்கோயில் அம்பிகையின் பெருமைகளைப் பறைசாற்றுகிறது. இத்திருத்தலத்தில் கொலுவீற்றருளும் அம்பிகையின் திருநாமம்  காமாக்யாதேவி. ஈசன் உமாநந்தாவாக திருவருட்பாலிக்கிறார். இந்த சக்திபீடம் அஸ்ஸாம் கெளஹாத்திக்கு சமீபத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் நீலாத்ரி  என்னும் பர்வதத்தில் அமைந்துள்ளது. இந்த மலை சுமார் 600 அடி உயரம், ஆலயம் 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

அதை ஒட்டினாற்போல் ஒரு குகை அமைந்துள்ளது. அந்த குகையில் த்ரிகோணாகாரமாகவும், நீர் நிறைந்ததாகவும், ஒரு சிறிய குளம்போல முப்பத்திரண்டு  அங்குல அளவில் இந்த சக்திபீடம் விளங்குகிறது. இந்த பீடத்தில் முக்தியை வேண்டுவோர்க்கு அதை அருள்கிறாள் தேவி. இத்தலம் உருவானதற்கு ஒரு புராண  சம்பவம் கூறப்படுகிறது. நான்முகன் தான் படைப்புத் தொழில் செய்வதால் அகம்பாவம் கொண்டு அலைய, அதை அழிக்க தேவி தன் கூந்தலில் இருந்து ஒரு  அசுரனை சிருஷ்டித்தாள். கேசிகன் எனும் அந்த அசுரனால் நடுநடுங்கிய நான்முகன் தேவியைச் சரணடைய, தான் உண்டாக்கிய அசுரனை தானே சாம்பலாக்கி,  அந்த சாம்பலால் ஒரு மலையை உண்டாக்கி, அதில் தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு நான்முகனிடம் கூற, அப்படியே நீலாத்ரி மலையையும் அங்கே நிறைய  துளசிச்செடிகளோடு கூடிய நந்தவனமும் அமைத்தான் நான்முகன் என்று ஒரு புராணம் கூறுகிறது.

இவள் அன்பின்  உறைவிடம். கருவறையில் யோனி வடிவமாக ஒரு பாறை உள்ளது. அப்பாறையில் உள்ள தேவியின் யோனிக்கே வழிபாடு நடைபெறுகிறது.  மாதம் மூன்று நாட்கள் தேவி வீட்டு விலக்காக இருக்கும் நாட்களில் இப்பீடத்திற்கு பூஜைகள் நடப்பதில்லை. அப்போது அதை ஒரு சிவப்பு பட்டுத்துணி சாத்தி  மூடிவிடுகின்றனர். அந்த துணியை பிரசாதமாகப் பெறுவோர் வாழ்வில் பெறற்கரிய பேறு பெற்றவர்கள் என்பது ஐதீகம். தவநிலையில் ஈசன் இருந்தபோது  மலர்க்கணையை அவர்மீது எய்து அவர் தவத்தைக் கலைத்தான் மன்மதன். அவனை ஈசன் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார். ரதியின்  வேண்டுகோளுக்கிணங்கி மன்மதனை உயிர்ப்பித்தாள் பராசக்தி. அதற்கு நன்றிக்கடனாக மன்மதன் இத்தலத்தைக் கட்டியதாக வேறொரு புராணம் இந்த சக்திபீடம்  அமைந்ததற்குச் சொல்லப்படுகிறது. சக்தி பீடங்களிலேயே தலையாயதும், முதன்மையானதுமாகிய இந்த தலத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை காமேஸ்வரி,  காமரூபிணி, காம, காமாக்யா என்றும் அழைக்கின்றனர்.

இத்திருத்தலத்தில் அன்னைக்கு உருவம் கிடையாது. தேவியின் யோனியே சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறது. ஆலயத்தின் உள்ளேயே அழகான திருக்குளம்  ஸெளபாக்ய குண்ட் எனும் பெயரில் உள்ளது. ஆலயத்தின் மைய மண்டபத்தின் ஒருபுறம் தாழ்வான குகை போன்ற அமைப்பு உள்ளது. அதில் நுழைந்து பத்து  படிகள் கீழிறங்க புனிதமான கருவறையைக் காணலாம். அங்கே  முப்பத்திரண்டு அங்குல நீளத்தில் த்ரிகோணமாக அமைந்துள்ள தொட்டி உள்ளது. தொட்டியின்  மையத்தில்தான் கல்லால் வடிவமைக்கப்பட்ட யோனி அங்கம் உள்ளது. இவ்வங்கம் வெளியே தெரியாமலிருக்க அந்தத் தொட்டியிலே எப்போதும் நீர் நிரம்பி  மறைத்துக் கொண்டிருக்கும். அத்தொட்டியின் அருகிலேயே இந்நீர் சுரக்கிறது என்பது அற்புதமான தகவல். தேவியின் 51 சக்தி பீடங்களுள் இப்பீடம் யோனி  பீடமாகத் திகழ்கிறது. யோனி பீடத்திற்குப் பக்கத்திலேயே லக்ஷ்மி, சரஸ்வதி இருவரும் சுயம்பு வடிவில் அருள்கின்றனர்.

இன்றைக்கும் இரவு நேரங்களில் பல தெய்வீக  ஒலிகள் அங்கே கேட்பதுண்டு.  இந்த காமாக்யா தேவி திருமண வரமருள்வதில் நிகரற்றவளாகக் கருதப்படுகிறாள். இங்கு தேவியின் கெளலமார்க்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது சாக்தர்களுக்கும், ஞானிகளுக்கும் முக்தி அளிக்கவல்லது. அணிமாதி அஷ்ட ஸித்திகளும்  இத்தலத்தில் ஸித்திக்கும் என்பது ஐதீகம். இந்த யோனி பீடத்திற்கு வம்சா எனும் பெயரில்  உபபீடம் ஒன்றும் உள்ளது. ஸ்ரீவித்யா உபாசகர்கள், மந்த்ரோபதேசம்  பெற்றவர்கள், பூரணதீட்சை அடைந்தவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காமாக்யா கோயில் சென்று, மூன்று நாட்கள் தங்கி, மந்திரப்  பிரயோகங்களையும் தந்திரப் பிரயோகங்களையும் அவள் சந்நதியில் சமர்ப்பித்தால் ஜென்மம் சாபல்யமடையும் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை. தசமகா வித்யைகளுக்கான தேவியர்களின் இருப்பிடம் இம்மலையில் பரவலாக காணப்படுவது அற்புதம்.

காளி, தாரா, சின்னமஸ்தா, பைரவி, பகலா, தூமாவதி ஆகியோருக்கான ஆலயங்களை இம்மலைச் சரிவுகளில் தரிசிக்கலாம். புவனேஸ்வரிக்கான ஆலயம்  இக்குன்றின் 212 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலை உச்சியிலிருந்து நாற்புறங்களிலும் இயற்கை எழில் நிரம்பி நிறைந்திருக்கிறது. அட்சர சக்தி மகிமை, அங்க  மகிமை, தல மகிமை, பைரவர் மகிமை ஆகிய இந்நான்கும் கொண்ட மகா சக்தி பீடம் காமாக்யா. இப்பீடத்தை உமாநந்தர் எனும் பைரவர் பாதுகாக்கிறார்.   மகாபாரதத்தின் உத்யோக பருவம், துரோண பருவம் மற்றும் காளிகாபுராணம், காமாக்யா தந்த்ரம், திரிபுராரஹஸ்யம், யோகினி தந்த்ரம் போன்ற அரிய நூல்கள்  இந்த காமாக்யா பீட நாயகியின் மகிமைகளைப் போற்றுகின்றன.

இங்குதான் அன்னை சத்யபாமா நரகாசுரனை வதம் செய்தாள். காமரூபமாய் மாதவர் காத்திட காமகிரி பீடத்தில் அமர்ந்தவள் இத்தேவி. பெருந்தவம் புரிவோர்க்கு  அருள்புரியவென்றே இப்பீடத்தில் ஒய்யாரமாக அழகுடன் காட்சி நல்குபவள். பேதமின்றி பாவியர்க்கும் அருள்புரியும் தரிசனத்திற்கு ஈடு இணையே இல்லை. சோதனைகள் நீக்கி மனமாசுகள் அகற்றி, வேதனை தீர்த்து அன்பர்கள் உய்ய வழிகாட்டு பவள் இந்த சக்திபீட நாயகி. ஆதியந்தமில்லாத ஈசனுடன் பேரழகியாய்க்  கலந்து உறைபவள். இவ்வன்னையை மனதில் இருத்தி நிறுத்தி துதிக்க பல சித்திகளைத் தந்தருள்பவள். திருமண வரம் தருவதில் நிகரற்றவள் இந்த அம்பிகை.  முக்தியைத் தரும் இந்த சக்தியை பக்தியுடன் வழிபட்டு உய்வோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் நாமம் மானஸம். தேவியின் வலது முன் கை விழுந்த பீடம். அக்ஷர சக்தியின் நாமம் ஜ (2). அக்ஷரதேவியின் நாமம் ஜங்காரிணிதேவி எனும்  நிர்ஜரநதி தேவி. பீடசக்தியின் நாமம் தாக்ஷாயணி. மழைக்கால மேகத்தை ஒத்த நிறமுடையவள் இந்த சக்திபீட நாயகி. நான்கு திருக்கரங்களிலும் தாமரை, பாசம்  மற்றும் வரத, அபய முத்திரைகள். முதலை வாகனத்தில் ஆரோகணித்தருள்பவள். அமரர் எனும் பெயர் கொண்ட பைரவர் இப்பீடத்தைக் காக்கிறார். இந்தியா  மற்றும் சீன அரசின் அனுமதியின் பேரிலேயே வருடத்தில் சில குறிப்பிட்ட மாதங்களில் சுற்றுலா பயணிகள் இப்பீடத்தை தரிசிக்க முடியும். இந்து மற்றும்  பெளத்த மதத்தவர்க்கு இது ஒரு புண்ணிய தலமாகும்.

 

29-கோலாகல வாழ்வருளும் கொடுங்களூர் அன்னை!

30 - சங்கடங்கள் தீர்க்கும் சாமுண்டீஸ்வரி!


51 சக்தி பீடங்கள் - 30
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் சாமுண்டிமலையில் அமைந்துள்ளது, ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயில். கர்நாடகாவில்  வைணவ, சைவ ஆலயங்கள், புகழ்பெற்ற அம்மன் கோயில்கள் என பல இருந்தாலும், மைசூரில் கோயில் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவி தனி  சிறப்புடையவள். சாமுண்டீஸ்வரியின் புகழ் பரவப்பரவ மகாபலகிரி என்ற இந்த மலை, சாமுண்டிமலை என்றே அழைக்கப்படலாயிற்று. மைசூரை ஆண்ட  மகாராஜாக்கள் இந்த சாமுண்டீஸ்வரியையே தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1573) மைசூரை நான்காம் சாமாராஜ  உடையார் ஆண்டுவந்தார். சாமுண்டியைத் தொழுதுவிட்டு மன்னர் மைசூருக்குத் திரும்பினார். திடீரென்று வானம் கிழிந்தது. கடலையே தூக்கி மேலேயிருந்து  கவிழ்த்தது போல வெள்ளமாக மழை பொழியலாயிற்று. மரங்களை வேரோடு சாய்க்கும் சீற்றத்துடன் காற்று வீசியது.

ஒரு பெரிய மரத்தடியில் மன்னரின் பல்லக்கு அவசரமாக இறக்கப்பட்டது. அன்னைக்குப் பூஜை செய்த குங்குமத்தை மன்னர் கையில் எடுத்தார். கோயில்  இருக்கும் திசை பார்த்து நெற்றியில் இட்டுக் கொள்வதற்காக முனைந்தபோது கோயிலை மரங்கள் மறைத்தன. பத்தடி தள்ளிப்போனபோது சந்நதி மங்கலாகத்  தென்பட்டது. மன்னர் அன்னையை வணங்கி குங்குமத்தை நெற்றியில் பூசிய கணத்தில் பார்வையைப் பறிப்பதுபோல் ஒரு மின்னல். அதைத் தொடர்ந்து வானமே  வெடித்தது போன்ற பேரொலியுடன் ஓர் இடி விழுந்தது.இத்தனை நேரம் பல்லக்கின் அருகில் எந்த மரத்தின் கீழ் மன்னர் ஒதுங்கி இருந்தாரோ, அந்த மரத்தின் மீது  இடி இறங்கி குபீரென்று பற்றி எரிந்தது. மன்னர் அதிர்ந்து போனார். அன்னையின் சந்நதியைத் தரிசிப்பதற்காக அவர் மட்டும் நகராமல் அங்கேயே நின்றிருந்தால்...?  நினைப்பே அவர் இதயத்துடிப்பை நிறுத்தியது. சொல்ல வேண்டியதை அவருக்கு சொல்லி முடித்து விட்டது போல சட்டென்று மழை ஓய்ந்தது.

மன்னர் அப்படியே அன்னையின் சந்நதி நோக்கி சாஷ்டாங்கமாக வணங்கினார். அந்த அன்னையின் கோயிலை மைசூரின் எந்த மூலையிலிருந்தும்  பார்க்கும்படியாக ஒரு கோயில் உருவாக்கினார். சாமுண்டி மலையில், கடல் மட்டத்திலிருந்து 3600 அடி உயரத்தில் ஆதிசக்தி சாமுண்டீஸ்வரிக்கு அழகான  ஆலயம் அமைந்திருக்கிறது. அன்னை சாமுண்டீஸ்வரியின் திருமுகம் காண மலை உச்சிக்கு வந்துசேரும் பக்தர்களை முதலில் வரவேற்பது மஹிஷாசுரனின்  வண்ணமயமான, நெடிதுயர்ந்த சுதைச்சிற்ப வடிவம். திராவிடப் பாரம்பரியத்தில் கட்டப்பட்ட திருத்தமான கோபுரம். கோபுர வாசல் கடந்ததும் வலதுபுறம்  விநாயகரின் சிறிய சிற்பம். சிலபடிகள் ஏறியதும் கொடிமரக் கம்பம். அன்னையின் பாதங்கள் பதிந்த அடையாளம். அவள் அருள் முகம் பார்த்து அமர்ந்திருக்கும்  சிறு நந்தி. சிறகசைக்கும் மணிப்புறாக்களும், மணங்கமழும் மலர்களும்,தொட்டுத் தழுவும் தென்றலும் அந்த அமைதிப் பிரதேசத்தில், கருவறையில் அன்னையின்  தரிசனம் கிடைத்ததும் உடல் சிலிர்க்கிறது. அம்பிகையின் 51 சக்திபீடங்களுள் இது சம்பத்ப்ரத பீடமாகப் போற்றப்படுகிறது.

பளபளக்கும் பட்டாடைகள், மின்னல் போன்று ஒளியை வாரி இறைக்கும் ஆபரணங்கள், சிறப்பு நகையாக மைசூர் மன்னர் வழங்கிய நட்சத்திர மாலை,  திருமேனியை அலங்கரிக்கும் பல வண்ண மலர்கள். மண்ணுலகைக் காத்து ரட்சிக்கும் அன்னை சாமுண்டீஸ்வரி, சக்திமயமாகக் காட்சி அளிக்கிறாள். மைசூரு என்ற பெயர் வருவதற்கு ஆதிதேவதை என்ற சாமுண்டீஸ்வரிதான் காரணம். மைசூரை காணவருபவர் யாராக இருந்தாலும், முதலில் சாமுண்டீஸ்வரி  தேவியின் தரிசனம் பெற்றபின்தான் பிற சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பார்கள். மலை மீது உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி 18 கரங்களுடன் எழிலுடன்  காட்சி தருகிறாள். கோயில் முற்றத்தில் பிரமாண்ட நந்தியும், எதிர் வரிசையில் மஹிஷாசுரனும் வரவேற்கிறார்கள். பக்தர்கள் மனமுருகி வேண்டினால், அதை  நிறைவேற்றும் அன்னையாக தேவி விளங்குகிறாள்.

தற்போது மைசூரு என்று அழைக்கப்படும் நகரம் முற்காலத்தில் மஹிஷாசூர, மஹிஷா மண்டலம் என்றழைக்கப்பட்டது.  மஹிஷாசூரன் என்ற அசுரன்,  சிவபெருமானை நோக்கி தவமிருந்து, தனக்குக் காட்சி கொடுத்த சிவபெருமானிடம், தனக்கு சாகாவரம் கோரினான். சிவன் வழங்கினார். தனக்கு மரணமில்லை  என்பதால், அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்தான் அசுரன். மஹிஷாசுரனை அழிக்க தேவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோற்க இறுதியாக சிவனிடம்  சென்று, ‘நீங்கள் வரம் கொடுத்ததால், மஹிஷாசுரன் அட்டகாசம் செய்கிறான். கொடுத்த வரத்தை திரும்பப் பெறுங்கள் அல்லது அவனை அழிக்க ஒரு வழி  சொல்லுங்கள்,’ என்று முறையிட்டனர். ‘நான் வரம் கொடுப்பவன் மட்டுமே. கொடுத்த வரத்தை திரும்பபெற என்னால் முடியாது. அதேசமயம் மஹிஷாசுரனுக்கு  ஒரு பெண்ணால் கண்டிப்பாக மரணம் வரும். அதுபோன்ற வரத்தைதான் நான் கொடுத்துள்ளேன்.

அவனை அழிக்க வேண்டுமானால், பெண்கள் பக்தியுடன் பார்வதியிடம் முறையிட வேண்டும்,’ என்றார். சிவனின் யோசனையை ஏற்று பெண் பக்தர்கள்  பார்வதியிடம் வேண்டி முறையிட்டனர். அசுரனை அழிக்கத் தீர்மானித்தாள். பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனின் வரம் பெற்று, சாமுண்டீஸ்வரி தேவியாக  ஆடிமாதம் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிஷாசுர மண்ணில் அவதரித்தாள். சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன்  பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த  மஹிஷாசுரனுடன் போர் தொடுத்து அவனை வதம் செய்தாள். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கி, தங்களுக்கு துணையாக இதே  இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதன்படி தேவி சாமுண்டிமலையில் குடிகொண்டாள். கோயிலில் விநாயகரைத்  தவிர, மகேஸ்வரனுக்கும், குமாரசுவாமிக்கும் சிறு சந்நதிகள் அமைந்துள்ளன.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தவிர பண்டிகை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அமைமோதுகிறது. தேவி மகிஷனுடன் போர் செய்த ஒன்பது நாட்களும் நவராத்திரி  பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த சமயத்தில் வேதபாராயணங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் என்று கோயில் மட்டுமல்லாது மைசூர் முழுக்க  உற்சவம்தான். தசரா பண்டிகை முடிந்ததும் பௌர்ணமியன்று ரதோற்சவம். அதைத் தொடர்ந்து இரவைப் பகலாக்கும் தெப்போற்சவம். உற்சாகமான பக்தர்கள்  ஆயிரம் படிகள் ஏறி கோயிலுக்கு நடந்தும் வருகிறார்கள். எண்ணூறு படிகள் ஏறியதும் மகா நந்தியை தரிசிக்கிறார்கள். நெஞ்சுக்கு நிம்மதி, அன்னை சாமுண்டியின்  சந்நதி. ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை சாமுண்டீஸ்வரி அவதரித்ததால், ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் சிறப்பு  வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மூன்றாவது வெள்ளிக்கிழமை தேவி அவதாரநாள் என்பதால் மைசூரு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் உள்பட  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

 

Wednesday, 26 October 2016

ஐப்பசி முழு மதி நாள் கோ ஜாகிரி!



வட இந்தியப் பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 22 வரையிலான ஆஸ்வின் (ஐப்பசி) மாத முழு நிலவு நாள், சரத்பூர்ணிமா. இந்நாளில், முழு மதியும், பூமியும் ஒன்றுக்கொன்று வெகு அருகில் அமையப்பெற்றிருப்பதால், நம் மீது படியும் சந்திர கிரணங்களால் நம் உடலும், உள்ளமும் ஊட்டம் பெறுகின்றன. இது, மகாராஷ்டிராவில் (கோ ஜாகிரி), ஒடிஷாவில் (குமார நிலவு), குஜராத்தில் (சரத் பூணம்), மே.வங்கத்தில் (லொக்கி பூஜோ), பீகார் மிதிலா பிரதேசங்களில் (கோஜாக்ரகா) கொண்டாடப்படுகிறது.
 

கோ - யார், ஜாக்ரதி - விழித்திருப்பது. அன்றிரவு, மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டுக்கும் எழுந்தருளி யார் தன் மீது உண்மையாகப் பக்தி செலுத்துகின்றனர் என்பதைக் கண்டறிய, ‘கோ ஜாக்ரதி?’ எனக் கேட்டவாறு நோட்டம் விட்டுக் கொண்டு போவாள் என்பது ஐதீகம்.
 
நியதிப்படி விரதம் அனுசரிப்பவர்களுக்கு அளவில்லா செல்வத்தையும், நல்வாழ்வையும் அளிப்பாளாம். அதனால்தான் இப்பூரண நிலவு ‘கோ ஜாக்ரதி பௌர்ணமி’ எனப் பெயர் பெற்று பின் ‘கோ ஜாகிரி’ என மருவிவிட்டது.
 

இதை விளக்குகிறது அன்று மனனம் செய்ய வேண்டிய கீழ்காணும் ஸ்லோகம்:
நிஷிதே வரதே லக்ஷ்மி, கோ ஜாக்ரதி இதி
பாஷிணி
ஜகதி பிரம்மதே தஸ்யம் லோக சேஷ்டாவலோகினி
தஸ்மே விரதம் ப்ரயச்சாமி யோ ஜாகர்த்தி
மஹீதலே"
 
 
அன்று பகலில் பசும்பால் மட்டும் அருந்தி பட்டினி இருப்பார்கள். இரவு சந்திரன் உதயமானதும், குறிப்பிட்ட முகூர்த்த வேளையில் வெண்ணிற ஐராவத யானை மேல் காட்சி தரும் இந்திரனையும், முதலை வாகனத்தில், தாமரைப் பூவில் அமர்ந்து அருள்பாலிக்கும் லக்ஷ்மியையும், சந்திரனுடன் ஒருசேரப் பூஜித்துவிட்டு, இளநீர் மற்றும் அவல் நிவேதனம் செய்து அதையே உட்கொண்டு விரதம் முடிப்பர்.
 
 
 
 

சுண்டக் காய்ச்சிய பாலில் உலர்ந்த பழங்கள், குங்குமப் பூ கலந்து மசாலா பால் தயாரிப்பார்கள். அதை நிலவொளியில் வைத்து மறுநாள் காலையில் அருந்துவார்கள். சந்திர கிரணங்களிலிருக்கும் மருத்துவக் குணங்கள் அடங்கிய துகள்கள் அதில் படிந்து உடலுக்கு வலுவூட்டும் என்பது நம்பிக்கை. மேலும், இரவில் குளிர்ந்த பாலுடன் அவல் சேர்த்துச் சாப்பிட்டால் இப்பருவக் காலத்துக்கே உரிய பித்த நோய் அண்டாது என்பது ஆயுர்வேத உண்மை.



இந்நாளில் தேவியை வரவேற்க வீடு, தெரு, கோயில்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டு, தீப விளக்கொளியில் ஜொலிக்கும். வீட்டில் யாருமில்லை என நினைத்து மகாலட்சுமி முன்னேறிப் போய்விடாமலிருக்க, வெளி வாயிலில் விளக்கு ஏற்றி வைப்பர்.

கோ ஜாகிரி விழா, கோவா மர்டோலி நகரில் மோகினி அவதார வடிவில், லக்ஷ்மி மகாலஸா நாராயணியாக அருள்பாலிக்கும் ஆலயத்தில் மிகக் கோலாகலமாக நடந்தேறும். ஆலய முகப்பில், 40 அடி உயரமுடைய, 150 சிறு அகல் விளக்குகளைக் கொண்ட, 21 வட்டத் தட்டுகளுடன் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் பித்தளை தீபஸ்தம்பம், 75 லிட்டர் எண்ணெய் கொண்டு ஏற்றப்பட்டு ஜெகஜ் ஜோதியாக மகாலஸா (லக்ஷ்மி) தேவியை வரவேற்பது காணக் கிடைக்காத காட்சி.
 
 

ஐப்பசி சௌபாக்ய-லாப-லக்ஷ்மி பஞ்சமி!



 சௌபாக்கிய பஞ்சமி (அ) லாப பஞ்சமி. வாழ்வில் (அ) தொழிலில் ஏற்படும் தேக்க நிலை மற்றும் இடையூறுகள் நீங்க!

தீபாவளி அமாவாசையை அடுத்து வரும் சுக்லபட்ச பஞ்சமி தினமே சௌபாக்கிய பஞ்சமி (அ) லாப பஞ்சமி என்றழைக்கப்படுகிறது.

இதனை கட பஞ்சமி என்றும் ஞான பஞ்சமி என்றும் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புதிய தொழில் அல்லது முயற்சிகளை இந்நாளில் தொடங்க, நிச்சயம் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. தீபாவளி லக்ஷ்மி பூஜை தினத்தன்று புதிய கணக்குகளைத் துவங்காதவர்கள் இன்று துவங்குவார்கள்.

மேலும் இந்நாளில் தான் பாண்டவர்கள் 13ஆம் ஆண்டு அஞ்ஞாத வாசத்தை முடித்து விராட தேசத்தை பாதுகாக்க கௌரவர் படை முன் தோன்றினான் என நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை பாண்டவ பஞ்சமி என்றும் வழங்குவர்.