Friday 4 November 2016

27 - கோலாகலமாய் வாழச்செய்வாள் கோகர்ண நாயகி!

51 சக்தி பீடங்கள் - 27
கர்நாடக மாநிலம், கார்வார் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அரபிக்கடலோரம் உள்ள திருத்தலம் கோகர்ணம். தேவியின் கர்ணசக்தி பீடமாய் திகழ்கிறது திருத்தலம். இத்தல ஈசனான மகாபலேஸ்வரரின் தெற்கு வாயில் அருகே மகாசக்திபீட நாயகி, பத்ரகாளி வடிவத்தில் அருட்காட்சியளிக்கிறாள். இவள் கருவறை கோபுரம் ஸ்ரீசக்ரமேருவின் வடிவில் உள்ளது அற்புதமான அமைப்பாகும். இப்பீடத்தில் அமர்ந்தருளும் தேவி ஜகதாம்பிகை ஆணவம், மாயை, கன்மம் எனும் மும்மலங்களை அகற்றி அன்பர்களின் துயர்தீர்க்கும் பரமேஸ்வரி. கலங்கித் தவிக்கும் சித்தத்தை தெளிய வைத்து அறியாமை இருளை அகற்றி ஞானப்பேரொளி நம் மனதில் வீச அருள்பவள். நன்மை தரும் நல்வழியைக் காட்டி நல்ல உபதேசங்களைச் செய்யும் நல்லதோர் குருவாக விளங்கும் அன்னை. அவள் ஆயிரம் திருநாமங்களும் கல்லையும் கனிய வைக்கும். பல ஜென்மங்கள் எடுத்தும் நற்கதி பெறாது வருந்துவோர்க்கு தொல்லைகள் நீக்கி பேரானந்தத்தை அளிக்கும். ஞானமானது ஒளிவீச, பந்த பாசங்களை நீக்கி, உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தி ஆதார சக்தியான தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொள்ளும். இவளை வேண்டி அருள் பெறுவோம். இப்பீடம் மிகவும் விசேஷமான சக்திபீடமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.

இத்தலத்திற்கு ஏமகூடம் என்ற பெயரும் உண்டு. கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணிய பலன் இத்தலத்தை தரிசிப்பவர்களுக்குக் கிட்டும். வடக்கே காசிபோல் தெற்கே கோகர்ணம் சிறந்த தலமாகும். இத்தலம் பசுவின் காதுபோல தோற்றமளிப்பதால் இப்பெயர் வந்தது. முற்காலத்தில் சிருஷ்டித் தொழிலைப் புரிய நான்முகன் ஈசனைப் படைத்தாராம். ஆனால், ஈசனோ தவம் செய்யச் சென்றுவிட நான்முகனே படைக்கும் தொழிலை மேற்கொண்டாராம். அதனால் சினமடைந்த ஈசன் பூவுலகம் வரஎண்ணி வெளியே வர சிறிதும் இடமின்மையால் வளம் சுரக்கும் இப்பூமியில் சூட்சும வடிவம் தாங்கி பசுவின் காது வழியே தோன்றினாராம். கோ(பசு) கர்ணம்(காது). இதுவே இத்திருத்தலத்தின் பெயர்க் காரணம். பிரளய காலத்திலும் அழியாத இடம் என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.
ராமர் ராவணனைக் கொன்ற பிரம்மஹத்திதோஷம் இத்திருத்தலத்தில் தங்கியதால் நீங்கப்பெற்றதாக ஐதீகம். அதனால் இத்தல தீர்த்தம் ராமதீர்த்தம் என வழங்கப்படுகிறது. தேவர் தலைவன் இந்திரன், சிவன், கணபதி, கண்ணன் போன்றோரும் தம் தோஷங்களை நீக்கிக்கொண்ட திருத்தலமும் இதுவே.

ராவணன் ஈசனிடமிருந்து பெற்ற ஆத்மலிங்கத்தை இலங்கையில் பிரதிஷ்டை செய்து பூஜித்தால் அவனை யாருமே வெல்ல முடியாது என்பதை உணர்ந்த தேவர்கள் விநாயகர் உதவியுடன் அந்த லிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்ய வைத்துவிட்டனர். அந்த லிங்கத்தை இழுக்க முயன்று தோல்வியுற்றான் ராவணன். ராவணனை விட பலம் மிக்கவராக இந்த ஈசன் விளங்கியதால் மகாபலேஸ்வர் என வழங்கப்படுகிறார்.   சிவலிங்கத்தைப் பெயர்க்க நினைத்த ராவணன் அன்னையின் கோபாக்னியால் ரத்தக்காயம் அடைந்தான். ராவணனுடைய ஆணவத்திற்கு அன்னையின் எச்சரிக்கை இத் தலத்திலேயே விடுக்கப்பட்டது என்பதற்கு அவன் இங்கு ரத்தம் சிந்திய நிகழ்ச்சியே முன்னோடியானது. ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக அன்னை விளங்குகின்றாள். இறைவன் வேறு, இறைவி வேறு என்றில்லை என்பதால் கோகர்ண தலத்தில் இறைவனின் சிறப்புகள் எல்லாம் அன்னையின் சிறப்பு களாகவே விளங்குகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமமும் இதையே சிவ ஞானப்ரதாயினீ என்று கூறுகிறது.

சிவ விஷயமான ஞானத்தை அம்பிகை தன் பக்தர்களுக்கு தருகிறாள் என்று சொல்லப்பட்டுள்ளது. தேவி ‘தக்ஷிணாமூர்த்தி ரூபிணி ஸனகாதி ஸமாராத்யா’ என மேலும் தேவியை ஈசனின் வடிவமாகவே லலிதா ஸஹஸ்ரநாமம் புகழ்கிறது. இப்படி குருமூர்த்தமாகி, சனகாதி முனிவர்களால் ஆராதிக்கப்பட்டு சிவஞானம் எனும் ப்ரம்மரஸத்தை பரமேஸ்வரன் பரமேஸ்வரி இருவரின் பேரருளாலேயே அடையமுடியும். காமேஸ்வரனான ஈசனின் பத்தினியாதலால் தேவி காமேஸ்வரியாகிறாள். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் இந்த அம்பிகையையும், ஈசனையும் அர்ச்சனை செய்து வழிபடுவது கையிலயங்கிரியில் இருக்கும் அம்மையப்பனை வணங்கி வழிபடுவதற்குச் சமம். இங்கு சதச்ருங்க மலையும், கோடி தீர்த்தமும், காயத்ரி நதியும் இருப்பதே அன்னையின் அருளுக்குக் கட்டியம் கூறுகிறது.  இத்தல விநாயகர் இரு கரங்களுடன் அழகு மிளிர தரிசனமளிக்கிறார். இந்த ஆத்மலிங்கத்திற்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விழா விமரிசையாக நடைபெறுகிறது. காசியைப்போலவே இங்கும் பக்தர்கள் தாங்களே ஈசனை அபிஷேகித்து பூஜைகள் செய்யலாம். தன்னை வணங்குவோர் வாழ்வை கோலாகலமாக்கியருளும் கோகர்ணநாயகியின் பாத கமலங்களை பணிவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் பெயர் உஜ்ஜயினி. அம்பிகையின் இடது முழங்கை விழுந்த சக்தி பீடம். அக்ஷர சக்தியின் நாமம் ஜ(   ). அக்ஷர தேவியின் நாமம் ஜயா தேவி எனும் போகதாதேவி. ரத்தவர்ணத்தினள். முக்கண்ணி. நாற்கரங்களிலும் கட்கம், கேடயம், வரமுத்திரை, அபயமுத்திரை தரித்தவள். சிம்மவாகனம் இத்தேவிக்குரியது. பீட சக்தியின் நாமம் மங்கள சண்டிகா. இத்தலத்தை கபிலாம்பரர் எனும் பைரவர் பாதுகாப்பதாக ஐதீகம். இத்தலம் மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினியில் ருத்ரஸாகர் அருகேயுள்ள சபார் நதிக்கரையில் அமைந்துள்ளது. அங்குள்ள ஸ்ரீயந்திரத்திற்கருகே அன்னை முழங்கை வடிவில் அமைந்திருப்பதாகவும், பகலில் இங்கும், இரவில் குஜராத்திலுள்ள மூல த்வாரகாவிலும் தேவி அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது.






 

No comments:

Post a Comment