Monday, 30 January 2017

அழகைக் காக்கும் அரம்பேஸ்வரர்!




தேவலோக அப்சரஸ்களான ரம்பா, மேனகை, ஊர்வசி ஆகியோர் ஆழ்ந்த கவலையில் இருந்தனர். தங்கள் அழகு பொலிவிழந்து வருவதைக் கண்டு அவர்களுக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது. தங்கள் அழகை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, புதுப்பித்துக் கொள்வது என்று ஆலோசனைக் கேட்க தேவகுரு ப்ரஹஸ்பதியை அணுகினர். அவர்,  அம் மூவரையும் தெய்வநாயகேஸ்வரரை வழிபடுமாறு கூறினார்.

அதைக்கேட்ட தேவகன்னியர் தங்கள் தோழியருடன் கூவம் நதிக்கரைக்கு வந்து தெய்வநாயகேஸ்வரரைக் கண்டனர். ரம்பை ஒரு தீர்த்தத்தை அமைக்க, அதில் நீராடிய அனைவரும் தெய்வநாயகேஸ்வரரை வழிபட்டனர். அவருக்கு மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ததோடு, அருகே ஒரு பதினாறு பட்டைகள் கொண்ட லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தனர். 

வழிபாட்டுக்குப் பின் அவர்கள், தங்கள் அழகு புதுப்பொலிவுடன் மிளிர்வதைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர். ரம்பை பிரதிஷ்டை செய்த லிங்கம் ‘அரம்பேஸ்வரர்’ என்றும், ஊர் அரம்பையர்க் கோட்டம் என்றும் வழங்கப்பட்டது.

நாளடைவில் அது மருவி, ‘இலம்பையங்கோட்டூர்’ என்றும், இன்று எழுமியன்கோட்டூர் என்றும் அழைக்கப்படுகிறது. 


திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார் பரமன். பூமியே தேராக, சூரிய, சந்திரரே சக்கரங்களாக, பிரம்மன் தேரோட்டியாக, மேரு மலை வில்லாக, வாசுகியே நாணாக, நாராயணப் பெருமானை அம்பாகக் கொண்டு, தாரகாக்ஷன், கமலாக்ஷன் மற்றும் வித்யுன் மாலி ஆகியோரின் பறக்கும் நகரங்களை ஒரே அம்பில் வீழ்த்தப் புறப்பட்டு விட்டார் பரமன். 

என்ன தான் தந்தையானாலும் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் விநாயகரை வழிபட வேண்டும் என்பதை மறந்தார் பரமன். இதனைக் கண்ட விநாயகப் பெருமான் புன்முறுவலுடன் ஆகாயத்தில் எழுந்த பரமனை நோக்கினார். அவர் பார்வையைத் தாங்க இயலாமல் தேரின் அச்சு முறிந்தது. மேல் எழும்பிய தேர் நிலை தடுமாறி கீழே இறங்கியது.

சாய்ந்த ந்த தேரில் இருந்த பரமன்தன் கையில் இருந்த வில்லை தரையில் ஊன்றி நின்றார். அப்போது அவர் கழுத்தில் இருந்த கொன்றை மாலை சற்றுத் தொலைவில் போய் விழுந்தது. அதிலிருந்து பரமன் சுயம்பு லிங்கமாக அமர்ந்தார். தேவர்களையும் தெய்வங்களையும் திரிபுர அசுரர்களிடம் இருந்து காக்க வந்ததால் இறைவனுக்கு தெய்வநாயகேஸ்வரர் என்று பெயர்.


தொண்டை நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர் திருவிற்கோலம் திருத்தலத்தைப் பாடிவிட்டு இந்த வழியே சென்ற போது தன்னை அரம்பயர்க்கோட்டத்தில் பாட வேண்டும் என்று சிவபெருமான் விரும்பினார். ஆனால், சம்பந்தரால் மல்லிகை வனத்துக்குள் இருந்த தெய்வநாயகேஸ்வரரைக் கண்டுபிடிக்க இயல வில்லை. எனவே, ஈசன் ஒரு காளையாக மாறி சம்பந்தரை விரட்டினார். 

இறைவனைக் கண்ட சம்பந்தர் மனமுருகி, ‘எனதுரையை தனதுரையா’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். அப்பாடலில் இந்த இறைவனை வழிபடுவதன் மூலம் தங்கள் இளமையையும் அழகையும் நிரந்தரமாக்கி இறைவனை அடைந்து முக்தி பெறலாம் என்று கூறுகிறார். 

தெய்வநாயகேஸ்வரர் தீண்டா திருமேனியாகும். பூஜையின்போது கூட அவரை அர்ச்சகர்கள் தொடுவதில்லை. ஒரு சிறு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் அணிவிக்கப்படுகின்றன.

1983ஆம் ஆண்டு, இவ்வூரில் இடி விழுந்தது. பெருத்த சேதம் ஏற்படாமல் தன் விமானத்தில் இடியினைத் தாங்கி ஊரைக் காத்தார் தெய்வநாயகேஸ்வரர். கருவறை மூலவரின் மேல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 முதல் 7 வரையும், செப்டம்பர் 5 முதல் 11 வரையும் சூரியக் கதிர்கள் இறைவன் மீது விழுந்து வழிபாடு செய்கின்றன.



அன்னை கனககுஜாம்பிகை தன் பாதத்தில் காஞ்சி மகா பெரியவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரத்துடன் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். 



இக்கோயிலில் அருள்பாலிக்கும் யோக தட்சிணாமூர்த்தி தலையினை சாய்த்து, கண்களை மூடி, கைகளால் சின் முத்திரை காட்டி, அதைத் தன் யக்ஞோபவீதத்தின் ப்ரம்ம முடிச்சின் மேல்வைத்து ஒரு கரத்தில் திரிசூலமும், மறு கரத்தில் அக்க மாலையும் தாங்கி இருக்கும் கோலத்தைக் காண கண்கள் கோடி போதாது. 

குரு பெயர்ச்சி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் யோக தட்சிணாமூர்த்தியின் அருளினைப் பெற்று பலனடைகின்றனர்.

அரம்பையர் அமைத்த அரம்பேஸ் வரர் கோயிலின் தென்கிழக்கு பகுதியில் வீற்றிருந்து தன்னை வணங்கு வோர்க்கு பதினாறு செல்வங்களும் வழங்கத் தயாராக இருக்கிறார்.


அமைவிடம்: சென்னை - அரக்கோணம் சாலையில் கூவம் கிராமத்தை கடந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எழுமியன்கோட்டூர் என்று கேட்டால்தான் மக்களுக்குத் தெரிகிறது. 

தரிசன நேரம்: கோயிலில் ஒரு கால பூஜை மட்டுமே. எனவே, அர்ச்சகரிடம் பேசி விட்டுச் செல்வது நலம்.தொடர்புக்கு: 96000 43000



திருப்பம் தரும் திருவொற்றியூர் வடிவுடையம்மன்!


பிரம்மனின் விருப்பத்திற்கேற்ப, இறைவன் பூமியில் சுயம்புவாக முதன்முதலில் தோன்றிய தலம், திருவொற்றியூர். ஒற்றியூர், ஆதிபுரி என்ற பெயர்கள், இதனை உறுதி செய்கின்றன. இங்குள்ள இறைவனின் பெயர் ‘ஆதிபுரீஸ்வரர்’ என்பதாகும். 

பல்லவர் காலத்தில் செங்கற்தளியாக இருந்து, முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில் கற்றளியாக எழுப்பப்பட்டது. இறைவனின் கருவறை, கஜபிருஷ்ட வடிவில் இருப்பது, பல்லவர் காலம் என்பதை உறுதி செய்கிறது.


தொண்டை நாட்டின் 32 தேவாரத் தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது.



சிவபெருமானை வழிபட பிரம்மன், விஷ்ணு, வாசுகி மூவரும் கடுந்தவம் இருந்து வரம் பெற்றனர். அதன் பயனால் ஆண்டுதோறும், மூவரும் கார்த்திகை பவுர்ணமி தொடங்கி மூன்று நாட்கள் இத்தல இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். ‘வாவியெல்லாம் தீர்த்தம், மணலெல்லாம் சிவலிங்கம்’ என பட்டினத்தார் இந்த தலத்தைப் புகழ்கின்றார்.



ஆலய அமைப்பு :

தொண்டை நாட்டின் 32 தேவாரத் தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரத்தின் எதிரே பிரமாண்ட திருக்குளம், ‘பிரம்ம தீர்த்தம்’ என்ற பெயரில் அமைந்துள்ளது.



ராஜகோபுரத்தினுள் நுழைந்ததும், வலதுபுறம் தெற்கு நோக்கிய வடிவுடையம்மன் சன்னிதி உள்ளது. தொடர்ந்து மகிழமரம், அதன் அருகே விநாயகர், முருகன், குழந்தையீசர் ஆகியோரது சன்னிதிகள் இருக்கின்றன.

இடதுபுறம் கொடிமரம், பலிபீடம், அதனருகே நந்திதேவர் காட்சி தருகிறார். அருகே ஜகந்நாதர் சன்னிதி, எதிரே சூரியன், நால்வர், சகஸ்ர லிங்கம், ராமநாதர், அமிர்தகண்டேஸ் வரர் ஆகியோரது சன்னிதிகள் அமைந்துள்ளன. வலச்சுற்றில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள், காளி சன்னிதி, ஆகாய லிங்கம், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்தீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஒற்றியூர் ஈசர் கோவில், நந்தவனத்தீசர், நந்தவனம், சொர்ண பைரவர் சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன.

கொடிமரத்தின் மேற்கே மாணிக்க தியாகராஜர் சன்னிதி, மூலவர் சன்னிதி, நடராஜர் சன்னிதி உள்ளன. சப்தவிடங்கத் தலங்களின் கணக்கில் வராத தியாகராஜரான இவர், ஏலேலருக்கு மாணிக்கங்கள் கொடுத்து உதவியதால், இவர் மாணிக்க தியாகராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு மார்கழி பவுர்ணமி இரவில் 18 திருநடனம் உண்டு.



ஆதிபுரீஸ்வரர் :

மூலவரான சுயம்பு ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவர் கவசம் சார்த்தப்பட்டு நாக வடிவில் சிவலிங்கத் திருமேனியில் சதுரவடிவ ஆவுடையாரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் கார்த்திகை பவுர்ணமி தொடங்கி, மூன்று நாட்கள் கவசம் நீக்கப்பட்டு, நிஜ லிங்க தரிசனம் தருவது கண்கொள்ளாக் காட்சியாகும். மூன்று நாட்களும் புணுகு சட்டம், ஜவ்வாது, சாம்பிராணி தைலம் சார்த்தப்படுகிறது. ஆவுடையாரின் மீது வழக்கமான லிங்கத் திருமேனிக்கு பதிலாக, படம் எடுத்த நாக வடிவில் இறைவன் காட்சி தருவது அபூர்வக் கோலமாகும். தன்னை வழிபட்ட வாசுகி பாம்பை, தனக்கு ஐக்கியப் படுத்தியதால், இத்தல இறைவன் இப்படி காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

இத்தல இறைவன் ‘படம்பக்க நாதர்’, ‘புற்றிடங்கொண்டார்’, ‘எழுத்தறியும் பெருமான்’ எனப் பலவாறு அழைக்கப்படுகிறார். இந்தப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், சோழமன்னன் அனைத்து கோவில்களின் படித்தரத்தையும் குறைத்து கட்டளை ஓலை அனுப்பினான். அந்த ஓலையை இத்தல இறைவனே திருத்தி, ‘ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க’ என எழுதியதால், இறைவனுக்கு ‘எழுத்தறியும் பெருமான்’ என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.



வடிவுடையம்மன் :

ஞான சக்தியாய் விளங்கும் இத்தல அம்பாளின் திருநாமம் ‘வடிவுடையம்மன்’ என்பதாகும். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் வீற்றிருக்கும் இந்த அன்னைக்கு, திரிபுரசுந்தரி, வடிவுடை மாணிக்கம் என்ற பெயர்களும் உண்டு. நான்கு கரங்களுடன் அபய வரத முத்திரையுடன் பக்தர்களின் குறை கேட்கும் விதமாக, வலதுபுறம் தலை சாய்ந்தபடி அம்பாள் காட்சி தருகிறாள்.



பவுர்ணமி தோறும் காலையில் இச்சா சக்தியான மேலூர் திருவுடையம்மனையும், நண்பகலில் ஞானசக்தியான திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், மாலையில் கிரியாசக்தியான திருமுல்லைவாயில் கொடியிடையம்மனையும் வணங்குவது, பல்வேறு நன்மைகளை அருளும் என்பது ஐதீகம். இம்மூன்று திருவுருவங் களையும், ஒரே சிற்பிதான் வடிவமைத்தார் என்று கூறப்படுகிறது.

பிரம்மா, விஷ்ணு, வாசுகி என்ற நாகம், ஐயடிகள் காடவர்கோன், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சங்கிலி நாச்சியார், கலிய நாயனார், ஆதிசங்கரர், பட்டினத்தார், கம்பர், கவி காளமேகம், இரட்டைபுலவர் கள், அருணகிரிநாதர், ஒற்றி ஞானப்பிரகாசர், தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், வீணை குப்பையர், வள்ளலார், மறைமலை அடிகள், சிதம்பர முனிவர், திருவொற்றியூரான் அடிமை, கபாலி சாஸ்திரிகள் என பலரும் வணங்கிப் பேறு பெற்ற தலம் இது.

விழாக்கள் :

சித்திரையில் வட்டப்பாறை அம்மன் உற்சவம், வைகாசியில் 15 நாள் வசந்த உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், கலிய நாயனார் வீதியுலா, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தீபம், பவுர்ணமியில் மூலவர் கவசம் திறப்பு, மார்கழியில் ஆருத்ரா, 18 திருநடனம், பங்குனியில் பசுந்தயிர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.



இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமையில் மட்டும் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ச்சியாக சுவாமி தரிசனம் செய்யலாம்.

தொன்மையான மகிழ மரம் :

கயிலாயத்தில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர் ஆலால சுந்தரர். இவர் உமாதேவியின் தோழிகளான அநிந்திகை, கமலினி இருவரையும் விரும்பினார். இதையறிந்த சிவபெருமான், மூவரையும் மண்ணுலகில் பிறந்து இன்பம் துய்த்து மீள அருள்புரிந்தார்.

அதன்படி திருநாவலூரில் அவதரித்த சுந்தரர், திருவெண்ணை நல்லூரில் தடுத்தாட் கொள்ளப்பட்டார். பிறகு திருவாரூரில் பரவையாரை மணம் புரிந்து இல்லறம் புரிந்துவந்தார். தல யாத்திரையில் திருவொற்றியூர் வந்த போது, அங்கே ஞாயிறு தலத்தில் தோன்றிய மற்றொரு தோழியான சங்கிலி, திருவொற்றியூர் இறைவனுக்குத் தொண்டு செய்துவர, அவரை மணம் முடிக்க ஆசைப்பட்டார். மகிழ மரத்தின் அடியில் இறைவன் முன்பாக இரண்டாவதாக மணம் புரி கிறார், சுந்தரர். எல்லை தாண்ட மாட்டேன் என்ற சத்தியத்தையும் சங்கிலியாருக்குச் செய்து கொடுத்தார். விதி யாரை விட்டது?. திருவாரூர் திருவிழாவை காணும் பேராவலில் சத்தியத்தை மீறிப் பயணமான சுந்தரருக்குப் பார்வை பறிபோனது. ஆயினும் பயணத்தைத் தொடர்ந்த சுந்தரர், மனம் வருந்தி இறைவனை வேண்டினார். பூண்டியில் ஊன்றுகோல் கிடைத்தது, திருவேகம்பத்தில் ஒரு கண் பார்வையும், திருவாரூரில் மற்றொரு கண் பார்வையும் கிடைத்தது என்பது வரலாறு.

இங்குள்ள தல விருட்சமாக மகிழமரம் மிகவும் தொன்மையானது. சுந்தரர்- சங்கிலி நாச்சியார் திருமணத்திற்கு சாட்சியாக விளங்கிய இந்த மரம் இன்றும் பசுமையாக காட்சி தருகிறது. இதன் பின்புறம் இருவரின் திருமணத்திற்கு சாட்சியாக நின்ற சிவபெருமானின் திருவடிகள் தனிச் சன்னிதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் இத்தலத்தில், மகிழடி திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இங்கு சுந்தரமூர்த்தியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இதில் சுந்தரர் - சங்கிலி நாச்சியார் திருமணக் காட்சியைக் காணலாம்.

காளாமுகம் கவுலீசர் :

கி.பி. 11-ம் நூற்றாண்டில் சைவ சமய பிரிவுகளில் ஒன்றான, காளாமுக பிரிவின் இருப்பிடமாகத் திருவொற்றியூர் திகழ்ந்ததை வரலாறு கூறுகிறது. சர்வ சித்தாந்த விவேகம் எனும் வடமொழி நூல் இவர்களைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளது. காளாமுகம் என்பது சோமசித்தாந்த ஆகமம். இதைப் பின்பற்றுவோர் வணங்கிய தட்சிணாமூர்த்தியின் வடிவமே ‘கவுலீசர்’ ஆவார்.

இத்தல தியாகராஜர் சன்னிதியின் பின்புறம் தனிச்சன்னிதியில் கவுலீசர் வீற்றிருக்கிறார். முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திய கலைநயம் மிக்க சிற்பமாக இது விளங்குகிறது. நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் தலையில் ஜடாமகுடம், காதுகளில் ஸ்படிக குண்டலங்கள், வலது கரம் அருள்வழங்க, இடக்கரம் மார்பின் மீது உள்ளது. மேல் இடக்கரம் கபாலத்தையும், மேல் வலக்கரம் திரிசூலத் தண்டைத் தாங்கிபடி காட்சி தருகின்றன. கவுலீசர் அடியில், ஆதிசங்கரர் வடிவம் அமைந்துள்ளது.

பசிப்பிணியைப் போக்கிய அம்மன் :

வடலூர் ராமலிங்க சுவாமிகள் எனும் அருட்பிரகாச வள்ளலார், இந்த ஆலயத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். ஏழுகிணறு பகுதியில் உள்ள வீராச்சாமி தெருவில் தனது அண்ணனோடு தங்கி வாழ்ந்து வந்த வள்ளலார், நாள்தோறும் இத்தலம் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். ஒருநாள் தரிசனம் முடித்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது. வீட்டுக்கதவு சாத்தியிருந்ததால், அண்ணியை எழுப்ப விரும்பாத வள்ளலார், வெளியில் இருந்த திண்ணையில் பசியோடு படுத்து உறங்கினார்.

அப்போது அவரை எழுப்பிய அண்ணியார், வள்ளலாருக்கு உணவு படைத்துப் பசியாற்றினார். காலையில், இவரை மீண்டும் எழுப்பிய அண்ணியார், ‘ஏன் சாப்பிடாமலேயே உறங்கிவிட்டாய்? என்னை எழுப்பக் கூடாதா?’ என்று கேட்க, அவர் முன் இரவில் நடந்ததைக் கூற, அனைவருக்கும் வியப்பு. அப்போதுதான் வடிவுடையம்மனே, அண்ணியார் வடிவில் வந்து பசியைப் போக்கியது தெரியவந்தது.

அமைவிடம் :

சென்னையின் வடகோடியில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது, இந்த ஆலயம். சென்னை பாரிமுனையில் இருந்து வடக்கே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் திருவொற்றியூர் இருக்கிறது. ஏராள மான பேருந்து வசதிகள் உண்டு. சென்ட்ரலில் இருந்து புறநகர் ரெயில் மூலம் திருவொற்றியூர் வரலாம்.











மஞ்சள் கீற்று மங்கள வாழ்த்து!


மஞ்சள் ஒரு மங்கலம் நிறைந்த பொருள். அழகும் செல்வமும் சக்தியும் அள்ளித்தரும் அபூர்வமான வஸ்து. 
"காணும்" பொங்கல்... "கனுப்" பொங்கல்...
தன் மகள் (மக்கள்) எப்படி சீரோடும் சிறப்போடும் வாழ்கிறார்கள் என்று "காணும்" பொங்கல். அப்படியே என்றென்றும் ஆனந்தமாய் வாழவேண்டும் என வாழ்த்தும் பொங்கல். 

கரும்பில் உள்ள கனுக்களே விதைகள். அப்படி கரும்பைப் போன்ற இனிமையான நம் குடும்பம் வரும் தலைமுறைகளில் இந்த கனுக்கள் விளைந்து கரும்பாகி இனிப்பது போன்று அமைய வேண்டும் என்பதே  "கனுப் பொங்கல்"


கனுப் பொங்கலன்று நம் வீட்டுப் பெண் பிள்ளைகள் தன்னை விட வயதில், மூத்த பெண்மணிகளை நமஸ்கரித்து,அவர்களிடம்,நெற்றியில் மஞ்சள் கீறி விடச்சொல்லி, கையில் கொண்டு போகும் பசு மஞ்சளை கொடுப்போம் ,
அவர்களும்,நல்ல வார்த்தைகளை கூறிக்கொண்டேநெற்றியில் மஞ்சளை கீற்றி விடுவார்கள்.



அவை:


தாயோடும், தந்தையோடும்,
சீரோடும். , சிறப்போடும்,
பேரோடும், புகழோடும்,
பெருமையோடும், கீர்த்தியோடும் 
தெய்வங்கள் வாழ்த்து கூற
சிறுவயதில் தாலிகட்டி
வூர் மெச்ச மணமுடித்து

தையல்நாயகி போலத்
தொங்கத்தொங்கத் தாலிகட்டித்
பெரியவளாகி பிள்ளைகள் பெற்று
தொட்டிலும், பிள்ளையுமாக,

கொண்டவன், மனம் , மகிழத்
மாமியார் மாமனார் மெச்ச,
நாத்தியும் மாமியும் போற்ற
பிறந்தகத்தோர், பெருமை விளங்க

பெற்ற பிள்ளைகள் , ஆயுள் ஓங்க,
உற்றார் உறவினரோடு
புத்தாடை புது மலர் சூடி
புது மாப்பிள்ளை, மருமகளோடு,

புதுப்புது சந்தோஷம் பெருகி,
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி
என்றென்றும், வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடு, இருக்கணும்.

என்று. சொல்லி, வாழ்த்துவர்.
தாயே அனைத்துக் குடும்பங்களின் ஆதாரம். உலகத்தைக் காத்தருள்பவளும் தாயே. 

நம் வீட்டுப் பெண் பிள்ளைகள் திருமணமாகி கணவரோடும் அவர் வீட்டாரோடும் அவளது குழந்தைகளோடும் எல்லா செல்வங்களும் பெற்று இன்பமாய் வாழ வேண்டும். மேலும் பிறந்த வீட்டின் பெருமையை காப்பாற்ற வேண்டும் என்பவை மறக்காமல் மனதில் பதிவு செய்யவே நெற்றிப் பொட்டில் பசு மஞ்சளால் சிறு வயது முதலே பதிவு செய்கிறார்கள் நம் பெரியோர்கள். தமிழ் கலாச்சாரம் தன்னிகரற்றது

மங்களம் நிறைக்கும் குங்குமம்!


பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.  குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. 
மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.
இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி.  அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.
1. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
2. மூளைக்கு செல்லும் நரம்புகள் அனைத்தும் நெற்றிப் பகுதியின் வழியாக செல்வதால் அவைகளை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால்., குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். மேலும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.
3. பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
4. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
5. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
6. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
7. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
8. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
9. குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
10. குங்குமம் இருபுருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும் அலங்காரத்திற்காக இட்டுக்கொள்ளும் மற்றவைகளை  குங்குமத்திற்கு கீழே இட்டுக்கொள்ள கூடாது.

குங்குமம் இருபுருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ளுவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.


மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள்  இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுப்போம்.

Thursday, 26 January 2017

தோடு ஒளியால் தோன்றிய முழு நிலவு!


மார்கண்டேயருக்கு என்றும் பதினாறாய் இருக்கும் சிரஞ்சீவி தன்மை அளித்து கால சம்ஹார மூர்த்தியாக அருள்பாலிப்பவர் திருக்கடவூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர். தன் பக்தனுக்காக அமாவாசை நாளில் முழு நிலவை வானில் தோன்றச் செய்த அன்னை அபிராமியின் அற்புதம் நிகழ்ந்த தலம் இது.



அபிராமி பட்டர்!

திருக்கடையூர் ஆலயத்தில் கணக்கராய் இருந்த அமிர்தலிங்கம் என்பவரது மகன் சுப்பிரமணியம். இவர் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் தினமும் பஞ்சாங்கம் படிக்கும் பணியைச் செய்து வந்தார். அம்மன் மீது கொண்டிருந்த அளவுகடந்த பக்தியின் காரணமாக, பஞ்சாங்கம் படித்து முடித்ததும், அபிராமி சன்னிதி முன்பு யோக நிஷ்டையில் அமர்ந்து விடுவார். இதனை பார்க்கும் சிலர் இவரை பித்தர் என்று தூற்றி வந்தனர். அது பற்றி சுப்பிரமணியம் கவலை கொள்ளாமல், அன்னையின் பாதமே தஞ்சம் என்றிருந்தார்.


தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர், தை அமாவாசை அன்று கடல் நீராட காவிரிப்பூம் பட்டினம் சென்றார். பின்னர் அங்கிருந்து திருக்கடையூர் ஆலயம் வந்து சேர்ந்தார். அப்போது அபிராமி அம்மன் சன்னிதியில் சுப்பிரமணியம், இவ்வுலகை மறந்த நிலையில் யோக நிஷ்டையில் இருப்பதை கவனித்தார்.

பின்னர் அவர் யார் என்று கோவில் அர்ச்சகர்களிடம் மன்னர் விசாரித்தார். அவர்களோ, ‘அம்மன் சன்னிதியில் பஞ்சாங்கம் படிப்பவர்’ என்று கூறினர். உடனே யோக நிஷ்டையில் இருந்தவரை அணுகிய மன்னர், ‘இன்று என்ன திதி?’ என்று கேட்டார். ஆனால் சுப்பிரமணியத்தின் காதிலோ அது ‘ஸ்திதி’ என்று விழுந்தது. அங்குதான் அன்னையின் விளையாட்டு ஆரம்பமானது. ‘ஸ்திதி’ என்றால் ‘நிலை’ என்று பொருள்.

மன்னர் கேட்ட சமயத்தில் சுப்பிரமணியம், பவுர்ணமி போன்ற ஒளி பொருந்திய அபிராமி அம்மனின் திருமுருக தரிசன நிலையில் லயித்திருந்ததால், ‘பவுர்ணமி’ என்று கூறிவிட்டார். மன்னனுக்கோ கடுமையான கோபம்  வந்துவிட்டது. ‘அமாவாசை, அதுவும் தை அமாவாசை என்னும் புண்ணிய தினம். ஆனால் பஞ்சாங்கம் வாசிக்கும் சுப்பிரமணியமோ, பவுர்ணமி என்று கூறுகிறாரே’ என்று மனம் கொந்தளித்தார் மன்னர்.

 அவர் கோபம் கொப்பளிக்கும் கண்களுடன் பேசத் தொடங்கினார். ‘இன்று இரவு பூரண சந்திரன் வானில் உதிக்காவிட்டால் உமக்கு மரண தண்டனை’ என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென புறப்பட்டுச் சென்று விட்டார்.

அபிராமி அம்மனை நினைத்து யோக நிஷ்டையில் இருந்து தன் நிலைக்கு திரும்பிய சுப்பிரமணியத்திடம், அர்ச்சகர்கள் நடந்ததைக் கூறினர். ‘அமாவாசையில் எப்படி முழு நிலவு தோன்றும்?’ என அர்ச்சகர்களும் சுப்பிரமணியத்திடம் கேட்டனர். அதற்கு சுப்பிரமணியத்திடம் இருந்து எவ்வித சலனமும் இல்லாது பதில் வந்தது. ‘என்னை அந்த நிலையில் இருந்து அமாவாசையை, பவுர்ணமி என்று சொல்ல வைத்தவள் அன்னை அபிராமி. எனவே, அவளே இதற்கும் நிச்சயம் பதில் சொல்வாள்’ என்றார்.

ஆலயத்தின் வெளியில் அக்கினிக் குண்டம் வளர்க்கப்பட்டது. அதற்கு மேல் நூறு கயிறுகள் தொங்கவிடப்பட்டன. அக்கயிறுகளின் மறுமுனையில் பெரிய உறி ஒன்றைக் கட்டித் தொங்க விட்டார்கள். அதற்கு ‘அரிகண்டம்’ என்று பெயர். நூறு கயிறுகளும் அறுக்கப் பட்டால் உறியில் இருப்பவர் அக்கினிக் குண்டத்தில் விழுந்து உயிர் துறப்பார்.

மாலை நேரம் வந்தது. அந்த உறியில் சுப்பிரமணியத்தை ஏற்றினர். அக்கினிக் குண்டத்தில் தீமூட்டப்பட்டது. தீ தகதகவென கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. சுப்பிரமணியம் உறியில் ஏறியதும், அபிராமி அம்மனின் கருவறை நோக்கி வணங்கிவிட்டு, சுற்றியிருந்த பக்தர்களுக்கும், மன்னனுக்கும் வணக்கம் தெரிவித்தார்.




அபிராமி அந்தாதி!

பின்னர் ‘தாரமர் கொன்றையும்’ எனத் தொடங்கும் விநாயகர் துதியைப் பாடி விட்டு, அபிராமியைப் போற்றி பாடல் களைப் பாடினார் சுப்பிரமணியம். அதுவே அபிராமி அந்தாதியானது. ‘உதிக்கின்ற செங்கதிர்’ எனத் தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடலை பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடல் நிறைவிலும், ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டது. அந்தாதியில் 78 பாடல்கள் பாடி முடித்து விட்டார். உறியிலும் 78 கயிறுகள் அறுக்கப்பட்டு விட்டன.

78–வது பாடலின் நிறைவில் ‘துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே’ என்று உறுதிபட அபிராமியிடம் வேண்டினார். இதற்கு மேலும், தன் பக்தனை தவிக்க விடுவாளா அந்த அன்னை. சுப்பிரமணியம் 79–வது பாடலாக ‘விழிக்கே அருளுண்டு’ என்று பாடத் தொடங்கியதுதான் தாமதம், அன்னை அபிராமி சுப்பிரமணியத்துக்கு காட்சி தந்து, தன் காதில் இருந்த தாடங்கம் (தோடு) ஒன்றைக் கழற்றி வானில் வீச, அது முழு மதியாய் பூரண சந்திரனாய் பல மடங்கு பிரகாசத்துடன் ஒளி வீசியது.




தோடு ஒளியால் தோன்றிய முழு நிலவு!

ஆம்! அன்னையிடம் வேண்டிய பக்தனுக்காக, அமாவாசை நாளில் வானில் முழு நிலவு தோன்றியது. மன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும் அன்னை அபிராமியின் அருள்திறத்தையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். மன்னன் சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டி, ‘அபிராமி பட்டர்’ என்னும் திருப்பெயரை அவருக்குச் சூட்டினார்.




அப்போது வானில் அசரீரி எழுந்தது. ‘அன்பனே! நீ மன்னனிடம் கூறியச் சொல்லை மெய்ப்பித்து விட்டோம். தொடங்கிய அந்தாதியைத் தொடர்ந்து பாடி முடிப்பாயாக!’ என்றது அந்தக் குரல்; அது அபிராமி அன்னையின் அமுதக் குரல். அன்னையின் சொல்படி தொடர்ந்து 100 பாடல்கள் பாடி, நூற்பயனாக ‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’ என்னும் பாடலுடன் அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார் அபிராமி பட்டர். தன்னுடைய பக்தியால், அன்னையை அற்புதம் நிகழ்த்தச் செய்த அபிராமி பட்டருக்கு சரபோஜி மன்னர் பெரும் மானியம் வழங்கி சிறப்பித்தார். அதற்குச் சான்றாக உரிமை செப்புப் பட்டயம் ஒன்று, அபிராமி பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

அன்னை அபிராமியின் ஆலயம்!

அன்னை அபிராமியின் ஆலயம் தனிக்கோபுரத்துடன், அமிர்தகடேஸ்வரர் ஆலயத் தென்மதிலும், மேல் மதிலும் கூடும் இடத்தில் இருக்கிறது. ‘அபிராமி’ என்னும் வடமொழி சொல்லுக்கு ‘அழகி’ என்று பொருள். மூன்றடி உயர பீடத்தில், நான்கு திருக்கரங்களுடன் அன்னை அபிராமி கிழக்குப் பார்த்த வண்ணம் நின்றத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


இத்தல அன்னையை, சரஸ்வதிதேவி பூஜித்து அருள் பெற்றுள்ளார். கருவறையின் பின்புறம் சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன.

திருக்கடையூரில் இன்றும் அபிராமி பட்டர் வாழ்ந்த வீடு இருக்கிறது. திருக்கடையூர் மேல் வளாகத் தெருவில் உள்ள மூன்றாவது வீடு அபிராமி பட்டர் வீடு ஆகும். இருபது அடி அகலம் கொண்ட ஓட்டு வீடு. வீட்டின் சுவரில், ‘அருளாளர் ஸ்ரீ அபிராமி பட்டர் அவதார இல்லம். தோற்றம் 18–ம் நூற்றாண்டு. புதுப்பிக்கப்பட்ட தேதி 16–8–1978’ என்று கறுப்புக் கல்லில் பொறித்து பதித்திருக்கிறார்கள். தை அமாவாசை திருநாளில் அபிராமி அன்னையையும், அபிராமி பட்டரின் இல்லத்தையும் கண்டு தரிசித்து மகிழலாம்.


தை அமாவாசையில்  முழுநிலவு உற்சவம்!

திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், தை அமாவாசை அன்று இரவு 9 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்க அபிராமி பட்டர் உற்சவம் நடைபெறும். அப்போது அபிராமி அந்தாதி பாடப்படும். அந்த சமயத்தில் அபிராமி அம்மன் நவரத்தின அங்கி அணிந்து வீற்றிருப்பார். ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் அபிராமி அம்மனுக்கு தங்கக் காசு சமர்ப்பித்து, தீபாராதனை செய்யப்படும். 79–வது பாடலின்போது ஆலய கொடி மரத்தின் அருகில் பவுர்ணமி தோன்றும் ஐதீக நிகழ்வு நடத்திக் காட்டப்படும்.

 

Wednesday, 25 January 2017

விருப்பங்களை நிறைவேற்றும் வீரராகவர்!




அமாவாசை என்பது பித்ரு வழிபாட்டுக்கு உகந்த நாளாகத் திகழ்கிறது. அதிலும் உத்ராயன துவக்க காலத்தில் வரும் தை அமாவாசை மிகச் சிறந்தது. இந்த நாளில் பல புனிதத் தலங்களில் முன்னோர் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அவற்றில் சிறப்பான ஒரு தலம் சென்னை- அரக்கோணம் இடையே அமைந்துள்ள திருவள்ளூர் ஆகும். 

தட்சனை வதம் செய்ததால் வீரபத்திரரை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அவர் திருவள்ளூரிலுள்ள ஹ்ருத்தாபநாசினி தீர்த்தத்தில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றாராம். குளத்தில் வாயு மூலையில் தீர்த்தேஸ்வ
ரர் என்னும் சிவபெருமானைக் காணலாம்.



இக்குளம் மகிமை பெற காரணம் என்ன?

நாரதர் திரிலோக சஞ்சாரியாயிற்றே! அவர் ஆகாய மார்க்கமாகப் போய்க்கொண்டிருந்தார். அச்சமயம் இக் குளத்தில் வசிஷ்டர், வாமதேவர், அத்ரி, பிருகு, காஸ்யபர், விஸ்வாமித்திரர், வால்மீகி போன்ற பல ரிஷிகளும், இந்திராதி தேவர்களும் நீராடிக் கொண்டிருந்தார்களாம். அதைக்கண்டு வியந்த நாரதர் கீழே இறங்கிவந்து, "இன்று தை அமாவாசை- உத்ராயன காலம். தாங்கள் கங்கையில் ஸ்நானம் செய்யாது இங்கு செய்வதன் விசேடம் என்ன' என்று வினவினார். அவர்கள்
"பிரம்மாவைக் கேள்' என்றனர். நாரதர் பிரம்மாவின் மானசபுத்திரர் அல்லவா. தனயனின் கேள்விக்கு தந்தை பிரம்மா பின்வருமாறு கூறினார்.

தை அமாவாசை பகவத் சாந்நித்யமான திருநாள். பிரத்யும்ன மகாராஜா தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமென்று வலது கால் கட்டை விரல் மட்டும் கீழே பதிய (மாங்காடு காமாட்சி போன்று) மகாவிஷ்ணுவைக் குறித்து  தவம் செய்தான். தவத்தில் நெகிழ்ந்த பெருமாள் தரிசனம் தந்து, "வரம் யாது தேவை' என வினவினார். அவன் குழந்தை பாக்கியத்துடன், விஷ்ணு தரிசனம் தந்த தை அமாவாசை புனித நாளாகவும், இந்த தடாகம் கங்கையிலும் மேலான பலனைத் தருமாறும் வேண்டினான்.

மகாவிஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.

இங்குள்ள பெருமாள் வீரராகவர் சயன கோலத்தில் உள்ளார். பெருமாள் நின்ற கோலத்தில்தான் அதிகம் காணப்படுவார். அமர்ந்த கோலம் குறைவு. சயன கோலம் அதிலும் குறைவு. 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருவனந்தபுரம் போன்ற 18 தலங்களில் சயன கோலத்தில் காணலாம்.



பெருமாளுக்கு வீரராகவர் என்று பெயர் வரக் காரணமென்ன? 

சாலிஹோத்ர முனிவர் தவம் செய்து பகவானை தரிசிக்க தகுந்த இடம் தேடினார். எந்த இடமும் மோட்சபுரிகளும் அவருக்கு உகந்ததாகத் தோன்றவில்லை. வினோதம். ஆனால் தமிழ்நாட்டு பாக்கியம்- தென்திசை நோக்கிவர, வீக்ஷாரண்யம் என்கிற இந்த இடம் அவர் மனதுக்குப் பிடித்தது. ஒரு வருடம் தவத்திலிருப்பார். பின்னர் விழித்தெழுந்து நிலத்தில் நெல் பொறுக்கி, உமி நீக்கி சமைத்து, எவருக்காவது உணவளித்தபின்பு தான் உண்ணும் நியதியை உடையவர்.

அதுபோல ஒருமுறை சமைத்தபின், யாருக்காவது உணவளிக்க எண்ணினார். ஆனால் கானகம் என்பதால் அப்போது எவரும் தென்படவில்லை. ஒரு வருடம் தவம் மேற்கொண்டதால் மிகுந்த களைப்புடனும் பசியுடனும் இருந்தார் முனிவர். "பகவானே, நீயே துணை' என்று நெகிழ்ந்தார். அப்போது முதியவர் ஒருவர் தள்ளாடியபடி வந்து, "பசி காதை அடைக்கிறது. உண்ண ஏதாவது கிடைக்குமா' என்றார். சாலிஹோத்ர முனிவருக்கு சந்தோஷம். முதியவரின் கால்களைக் கழுவி, இலையிட்டு உணவு பரிமாறினார்.

"பசி தீரவில்லை. இன்னும் போடு போடு' என்று சமையல் முழுவதையும் உண்டார். "உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு' என்ற பழமொழிபோல், "உடல் தள்ளாடுகிறது. தூக்கம் வருகிறது. சிறிது சயனிக்கலாமா? எவ்வுள்?' என்றார். "இவ்வுள் சயனிக்கலாம்' என்று தனது குடிலில் படுக்கை விரித்து சயனிக்கச் செய்து, கால் கைகள் பிடித்துவிட்டார். முனிவர் வலது புறம் உட்கார, அவர் தலைமீது தன் கையை தாங்கலாக இருத்தினார். சிறிது நேரத்தில் படுத்த கிழவர் கல்லாகினார். ஆதிசேடனும் சேர்ந்தார். சின்முத்ரையில் பிரமனை ஆசீர்வதித்தார். அந்த கோலத்தையே இன்று கோவிலில் காணலாம்.

திருஎவ்வுள் ஊர் என்ற பெயரே திருவள்ளூர் என்று மருவியது. நரசிம்மரையும், சீதா, லட்சுமண, ஆஞ்சனேயர் சமேத ராமரையும் இங்கு தரிசிக்கலாம். தனியாக தாயார் சந்நிதியும் உள்ளது. தாயார் பெயர் கனகவல்லி. இதற்கும் ஒரு காரணம் உண்டு.

ராமாவதாரத்தில் இராவணன் கவர்ந்துசென்றது மாயா சீதா. (வேதவதி என்று பெயர்). அசல்
சீதை அக்னியில் மறைந்தாள். ஆகவேதான், இராவண சம்ஹாரம் முடிந்ததும், அந்த மாயா சீதா அக்னியில் மறைந் தாள்; அசல் சீதை தோன்றினாள்.

மாயா சீதா அக்னியில் மறையும்முன் ராமபிரானை திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். ராமர், "அது நிச்சயம் நடக்கும். ஆனால் இப்போதில்லை' என்றாராம்.

அந்த வேதவதியே திருவள்ளூரில் (தர்மஸேனபுரம்) தர்மசேன மகாராஜா  செய்த தவப்பயனாக வசுமதியாகப் பிறந்தாள். பத்மாவதியைத் தேடி திருப்பதி வேங்கடாசலபதி குதிரை மீதேறிச் சென்றார். வள்ளியைத் தேடி கந்தன் வேடனாக சென்று மன்றாடினான். அதேபோன்று வசுமதியைத் தேடி வீரராகவர் ஒரு இளவரசனாக குதிரைமீது சென்றார். மணம்புரிய வேண்டினார். வசுமதி தனது குலதெய்வமான வீரராகவரை வேண்டினாள்.

தர்மசேனன் தன் மகள் ஒரு இளவரசனை விரும்புகிறாள் என்பதை தோழிகள் மூலம் அறிந்து, அந்த இளவரசனைக் கண்டு, "குலம், கோத்திரம், உற்றார்- உறவினர் எவர்' என்று வினவ, "இந்த வீரராகவக் கடவுள் முன் சத்தியம் செய்கிறேன். உமது பெண்ணுக்கு எந்தக் குறையும் வாராது. கல்யாணம் செய்து கொடும்' என்றார்.

தர்மசேனனும் நம்பி, கல்யாணத்தை விமரிசையாகச் செய்தார். கடைசியில் கரம்பிடித்து கோவில் தரிசனம் செய்ய இருவரும் வர, இளவரசன் மணமகளுடன் கருவறைக்குள் புகுந்து மறைந்தான்.


அப்போதுதான் தர்மசேனர் இளவரசனாக வந்தவர் தன் குலதெய்வமான வீரராகவரே என்பதை உணர்ந்தான்.

வசுமதி தங்க நிறமாக இருந்ததால் கனகவல்லி. (முன்னெல்லாம் திருவள்ளூரில் பெண்களுக்கு கனகவல்லி என்ற பெயர் அதிகம் உண்டு. இப்போது மாறிவிட்டது.)

ஆக, ஹ்ருத்தாபநாசினி தீர்த்தம் நம் மனக் கவலையை மாற்றும்; உடல்பிணி போக்கும். வீரராகவனை தரிசிக்க, மணமாகாத வர்கள் சீக்கிரமே மணமாலை பெறுவர். பிள்ளைப்பேறும் பெறுவர். 

இந்த தை அமாவாசையன்று ஹ்ருத்தா பநாசினி குளத்தில் நீராடி, (பிதுர்கடன் செய்ய வேண்டியவர்கள் செய்து) வீரராகவர்- கனகவல்லி தம்பதியரை தரிசித்து நலன் பல அடையலாம்.


மகாளய பட்ச மகிமை!

சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை ஆகியவை முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.

ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அம்பிகை கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும்.

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.


மகாளய அமாவாசை மகிமை!


பித்ருக்களுக்காகவே 14 நாட்கள் நோன்பிருந்து, அந்தந்த நாட்களுக்கு உரிய பித்ரு பூஜைகளை செய்துக் கொண்டிருந்த நம் அனைவரையும் மேல் உலகில் உள்ள அனைத்து பித்ருக்களும் ஆசி கூற ஆவலுடன் நம் அருகில் வந்து நிற்கும் புண்ணிய நாள் மகாளய அமாவாசை நாளாகும்.


மகாளய அமாவாசையன்று பித்ரு பூஜை, தர்ப்பண காரியங்கள், அன்னதானம் ஆகியவற்றை மனதாலும், வாக்காலும், சரீரத்தினாலும் சிறப்புடன் செய்து நிறைவாக பித்ருக்களை மனதார வணங்கிடல் வேண்டும். நமக்கு வேண்டியதை நாம் கேட்காமலேயே பித்ருக்கள் அருள்வார்கள்.


மதியம் 12 மணிக்குள் வருவதற்கு முன்னரே பித்ரு தர்ப்பணம் செய்வது உசிதம். தொடங்குவதற்கு முன்னர் நம்முடைய நியாயமான கோரிக்கைகளையும், பிரார்த்தனைகளையும் முன் வைத்து பித்ருக்களின் ஆசி பெற வேண்டும். அதற்கு பின்னரே இறைவனை வழிபட வேண்டும்.


மகாளய பட்சத்தில் பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரை விசேஷமான நாட்கள்தான். என்றாலும் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு.


தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திபடுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அவற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்தால் மிகவும் விசேஷம்.

மகாளய பட்சத்தின் 16 நாட்களும் மிகவும் முக்கியமான நாட்களாகும் என்பதால் குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.


பிரதமை முதலாம் நாள் அன்று செய்யப்படும் சிரார்த்தம் அல்லது தர்ப்பண காரியங்களுக்கு தன லாபம் கிட்டும்.

துவீதியை இரண்டாம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜையால் சந்ததி விருத்தி உண்டாகும்.

திருதியை மூன்றாம் நாளன்று செய்யப்படும் பித்ரு காரியங்களுக்கு சிறந்த திருமண பாக்கியம் பெற்று நல்ல, மனதிற்கு பிடித்த வரன் அமையும்.

சதுர்த்தி நான்காம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜனத்திற்கு சத்துருக்களை அகற்றும் சக்தி உண்டு.

பஞ்சமி ஐந்தாம் நாளன்று பித்ரு காரியங்கள் செய்வதால் சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும். 

சஷ்டி ஆறாம் நாளன்று பித்ருக்களை நினைவு கூர்ந்து பித்ரு காரியங்களை செய்தால் உயர்ந்த புகழைப் பெறுவான்.

சப்தமி-ஏழாம் நாளன்று பித்ருக்களை நினைவு கூர்ந்து பித்ரு காரியங்களை செய்தால் சிறந்த வம்ச விருத்தி பெறுவான்.

அஷ்டமி எட்டாம் நாளன்று சிரார்த்தம் மற்றும் தர்ப்பண காரியங்களைச் செய்பவன் சிறந்த புத்தியை அடைவான். 

நவமி ஒன்பதாம் நாளன்று செய்யப்படும் பித்ரு பூஜனைக்கு அழகுள்ள மனைவி அமைவாள்.

தசமி பத்தாம் நாளன்று பித்ரு பூஜனம் செய்பவன் இஷ்டப்பட்டதை எல்லாம் அடைவான்.

ஏகாதசி பதினொன்றாம் நாளன்று மனதார பித்ருக்களை வழிபட்டு சிரார்த்த, தர்ப்பண காரியங்களை செய்பவன் அனைத்து வேதங்களையும் பெறுவான். 

துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜனம் செய்பவன் ஸ்வர்ண லாபம் பெறுவான்.

திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவன் அறிவு ஞான சக்தி, பசுக்கள் தேஹ ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம் அனைத்தும் பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

சதுர்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் செய்யப்படும் பித்ரு காரியங்களால் திருப்தி அடைவார்கள். 

மகாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை ஆராதித்து, மனதார வணங்கினால் சகல பாக்கியங்களும் கிட்டும்.