Monday 30 January 2017

மஞ்சள் கீற்று மங்கள வாழ்த்து!


மஞ்சள் ஒரு மங்கலம் நிறைந்த பொருள். அழகும் செல்வமும் சக்தியும் அள்ளித்தரும் அபூர்வமான வஸ்து. 
"காணும்" பொங்கல்... "கனுப்" பொங்கல்...
தன் மகள் (மக்கள்) எப்படி சீரோடும் சிறப்போடும் வாழ்கிறார்கள் என்று "காணும்" பொங்கல். அப்படியே என்றென்றும் ஆனந்தமாய் வாழவேண்டும் என வாழ்த்தும் பொங்கல். 

கரும்பில் உள்ள கனுக்களே விதைகள். அப்படி கரும்பைப் போன்ற இனிமையான நம் குடும்பம் வரும் தலைமுறைகளில் இந்த கனுக்கள் விளைந்து கரும்பாகி இனிப்பது போன்று அமைய வேண்டும் என்பதே  "கனுப் பொங்கல்"


கனுப் பொங்கலன்று நம் வீட்டுப் பெண் பிள்ளைகள் தன்னை விட வயதில், மூத்த பெண்மணிகளை நமஸ்கரித்து,அவர்களிடம்,நெற்றியில் மஞ்சள் கீறி விடச்சொல்லி, கையில் கொண்டு போகும் பசு மஞ்சளை கொடுப்போம் ,
அவர்களும்,நல்ல வார்த்தைகளை கூறிக்கொண்டேநெற்றியில் மஞ்சளை கீற்றி விடுவார்கள்.



அவை:


தாயோடும், தந்தையோடும்,
சீரோடும். , சிறப்போடும்,
பேரோடும், புகழோடும்,
பெருமையோடும், கீர்த்தியோடும் 
தெய்வங்கள் வாழ்த்து கூற
சிறுவயதில் தாலிகட்டி
வூர் மெச்ச மணமுடித்து

தையல்நாயகி போலத்
தொங்கத்தொங்கத் தாலிகட்டித்
பெரியவளாகி பிள்ளைகள் பெற்று
தொட்டிலும், பிள்ளையுமாக,

கொண்டவன், மனம் , மகிழத்
மாமியார் மாமனார் மெச்ச,
நாத்தியும் மாமியும் போற்ற
பிறந்தகத்தோர், பெருமை விளங்க

பெற்ற பிள்ளைகள் , ஆயுள் ஓங்க,
உற்றார் உறவினரோடு
புத்தாடை புது மலர் சூடி
புது மாப்பிள்ளை, மருமகளோடு,

புதுப்புது சந்தோஷம் பெருகி,
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி
என்றென்றும், வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடு, இருக்கணும்.

என்று. சொல்லி, வாழ்த்துவர்.
தாயே அனைத்துக் குடும்பங்களின் ஆதாரம். உலகத்தைக் காத்தருள்பவளும் தாயே. 

நம் வீட்டுப் பெண் பிள்ளைகள் திருமணமாகி கணவரோடும் அவர் வீட்டாரோடும் அவளது குழந்தைகளோடும் எல்லா செல்வங்களும் பெற்று இன்பமாய் வாழ வேண்டும். மேலும் பிறந்த வீட்டின் பெருமையை காப்பாற்ற வேண்டும் என்பவை மறக்காமல் மனதில் பதிவு செய்யவே நெற்றிப் பொட்டில் பசு மஞ்சளால் சிறு வயது முதலே பதிவு செய்கிறார்கள் நம் பெரியோர்கள். தமிழ் கலாச்சாரம் தன்னிகரற்றது

No comments:

Post a Comment