Tuesday, 3 May 2016

அட்சய திருதியையில் ஸ்ரீ ஸ்வர்ண‌ கௌரி பூஜை!


ஸூவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ:
ஸூதான்ய வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
கல்யாண வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
விபூதி வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:

ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி

ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்

ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத் ப்ரதம்
தேஹி குருகுரு ஸ்வாஹா!

 சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே!
திருமண தினத்தில், மணமகள் மணமேடைக்குச் செல்லும் முன்பாக, கௌரி தேவியைப் பூஜிப்பது சம்பிரதாயம். கணவனோடு இணைந்து வெற்றிகரமாக இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வேண்டி, தேவியைப் பூஜித்த பின்பே திருமாங்கல்ய தாரணம் நடைபெறுகிறது.
ஸ்ரீ கௌரி தேவியைப் பூஜிப்பது அனைத்து தேவதைகளையும் பூஜிப்பதற்குச் சமம் என்கின்றன புராணங்கள். . நமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக, 108 வடிவங்களில் கௌரி தேவியை வடிவமைத்துப் பூஜிக்க வழி செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

 கீர்த்தி கௌரி, ஸ்ரீ பல(பலால) கௌரி, ஸ்ரீ ஹரிதாளிகா(விபத்தார) கௌரி, ஸ்ரீ கஜ கௌரி, ஸ்ரீ ஞான கௌரி, ஸ்ரீ மாஷா கௌரி, ஸ்ரீ சாம்ராஜ்ய மஹா கௌரி, ஸ்ரீ சம்பத் கௌரி என ஒரு வருடத்தில் கொண்டாடப்படும் கௌரி விரதங்கள் எண்ணற்றவை. அவரவருக்கு வேண்டிய பலனைப் பொறுத்தும் அவரவர் குடும்ப வழக்கங்களைப் பொறுத்தும், கௌரி விரதங்களை அனுசரிக்கலாம்.
ஸ்வர்ண கௌரி விரதம் ஆந்திர, கர்நாடக மற்றும் சில வட மாநிலங்களில் பிரதானமாகக் கொண்டாடப்படுகிறதுஅக்ஷய திருதியையில் ஸ்ரீ ஸ்வர்ண கௌரியைப் பூஜிக்க, வறுமை, தோஷங்கள் நீங்கும், குலதெய்வப் ப்ரீதி ஏற்படும்.தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகி, ஏராளமான தங்க ஆபரணங்களை அணியும் யோகம் அம்பிகை அருளால் கிடைக்கும்.
ஸ்ரீ ஸ்வர்ண கௌரி விரதத்தை அனுஷ்டிக்கும் முறை!
விரத தினத்திற்கு முன் தினம், இல்லம், பூஜையறையைச் சுத்தம் செய்து, பூஜைக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.

பூஜைக்குத் தேவையானவை:

 
கௌரி தேவியின் பிரதிமை (கலசத்திலும் ஆவாஹனம் செய்து பூஜிக்கலாம். அல்லது கலசத்தில் தேவியின் பிரதிமையை வைத்து அலங்கரிப்பதும் சிறப்பு). சிவனாரும் பார்வதி தேவியும் இணைந்திருக்கும் படத்தை வைத்துப் பூஜிப்பதும் வழக்கத்திலிருக்கிறது.

மாவிலை தோரணங்கள்,
மஞ்சள், குங்குமம், சந்தனம், ஊதுவத்தி, கற்பூரம், அக்ஷதை.

தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மற்ற வகைப் பழங்கள்.
பூமாலை, உதிரிப்பூ, கஜவஸ்திரம்,

புடவை, ரவிக்கை அல்லது இரண்டு ரவிக்கைத் துணிகள்,
திருவிளக்குகள், ஒற்றை ஆரத்தி(தீபம்), பஞ்சமுக ஆரத்தி.

தயிர்,பால், தேன், வெல்லம், நெய்(பஞ்சாமிர்த ஸ்நானத்திற்கு).
பஞ்சபாத்திர உத்திரிணி, தீப்பெட்டி முதலியன.

தேவிக்கு நிவேதனமாக, சர்க்கரைப் பொங்கல் செய்வது உசிதம். மற்ற நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில் போளி நிவேதனங்களில் பிரதான இடம் பெறுகிறது. தாமரைப்பூவின் இதழ்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பது விசேஷம்.

விரதத்தை காலை அல்லது மாலை வேளையில் அனுஷ்டிக்கலாம். மாலை வரை உபவாசமிருந்து, சூரிய அஸ்தமனமாகும் சமயம், அனுஷ்டிப்பதே சிறப்பு. முழுக்க உபவாசமிருக்க முடியாதவர்கள், பால், பழம் அருந்தலாம்.

மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், அம்பிகையை கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும். தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகி, ஏராளமான தங்க ஆபரணங்களை அணியும் யோகம் அம்பிகை அருளால் கிடைக்கும். மண்டபம் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும்.

வடக்குப் பார்த்து அமர்ந்து பூஜிக்க வேண்டும். அம்பிகையின் திருமுன் இருபுறமும் விளக்குகள் ஏற்ற வேண்டும். வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும்.

 
முதலில் விக்னேஸ்வர பூஜையைச் செய்து விட்டு, அம்பிகைக்கு (தியான, ஆவாஹனம் முதலிய) ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும்.
தேவியின் ஒவ்வொரு அங்கத்தையும்(அங்க பூஜை) பூஜித்து, பின் பதினாறு முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளுக்கு பூஜை செய்யவும். பின் ஸ்ரீ கௌரி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி அர்ச்சிக்க வேண்டும்.

 நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்து, பழங்கள் தாம்பூலம் நிவேதித்து, கற்பூரம் காட்டி வணங்கவும். கைநிறையப் பூக்களை எடுத்துச் சமர்ப்பித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ளவும்.
பின் தேவிக்கு, இரு நெய் தீபங்களை ஆரத்தி நீரின் நடுவில் ஏற்றி வைத்து ஆரத்தி காண்பிக்கவும். 16 சிறு மாவிளக்குகள் செய்து, நடுவில் தீபம் ஏற்றி அவற்றை ஒரு தட்டில் வைத்து சுற்றிக் காண்பிப்பது சிறப்பு.

 
பூஜைப் பலன்களை தேவிக்கு சமர்ப்பித்து அர்க்யப் பிரதானம் (உத்திரிணியால் பால், நீர் கலந்த தீர்த்தத்தை கிண்ணத்தில் சமர்ப்பித்தல்) செய்யவும். ஒரு பழம், சந்தனம், அக்ஷதையைக் கையில் வைத்துக் கொண்டும் அர்க்யம் விடலாம்).

சுமங்கலிகளுக்கு உணவளித்து, பழம், தாம்பூலம் அளித்து சிறப்பிக்க வேண்டும்.
பூஜை முடிந்தபின், அருகிலுள்ள,கோவிலுக்குச் சென்று, உமையம்மை சகிதராக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தரிசித்தல் சிறப்பு. பூஜைப் பிரசாதங்களைக் கட்டாயம் விநியோகிக்க வேண்டும். இதன் காரணம், பிரசாதம் பெறுபவர்களில் ஒருவராக பகவானும் எழுந்தருளி, பிரசாதத்தை ஏற்று நம் விருப்பங்களை ஈடேற்றி வைப்பார். பின் நாமும் பிரசாதத்தை பக்தியுடன் உண்ண வேண்டும்.
இரவு பிரசாதம் மட்டும் சாப்பிடுவது சிறப்பு. முடியாதவர்கள், பலகாரம் சாப்பிடலாம்.

 மறு நாள், தேவிக்கு சுருக்கமாக,புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது, தேவிக்கு, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பூக்கள் சமர்ப்பித்து வணங்கவும். பின், தேவியைத் தன் இருப்பிடம் எழுந்தருளப்(யதாஸ்தானம்) பிரார்த்தித்து, பிரதிமை அல்லது கலசத்தை சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும். கலசத்தில் அணிவித்த நகைகளை எடுத்து, சிறிது நேரம் அணிந்து விட்டு உள்ளே வைக்கலாம்.

 

திருவூடல் பார்த்தால் மறுவூடல் இல்லை!


கணவன்  - மனைவிக்குள் சண்டை வந்தால் வீட்டிற்குள் மட்டும் கேட்குமாறு பேசினால் நல்லது. தெருவில் உள்ள மற்றவர்களுக்கு கேட்கும் வகையில் சத்தமாகப் பேசினால்... அவ்வளவுதான். அண்டை வீட்டுக்காரர்கள் அத்தனை பேருடைய கண்ணும் தம்பதியினரை மட்டுமே மொய்க்கும்.

 

சாதாரண தம்பதியினருக்கே இப்படிதான் என்றால், தெய்வீகத் தம்பதியினருக்குள் சண்டையென்றால் கேட்கவே வேண்டாம். பக்தர்கள் திரண்டு வந்து விடுவார்கள்.

ஒருமுறை, திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரும், உண்ணாமுலை அம்மனுக்கும் சண்டை போட்டுக்கொண்டார்கள். உடல் முழுக்க நகைகளைப் போட்டுக்கொண்டு, கிரிவலம் போகத் தயாராகிறார். அம்மன் அவரைத் திட்டுகிறார். ‘ஊரெல்லாம் திருட்டு பயம். அதிலும் கிரிவலப்பாதை என்பது காடு வேற, நகைகளெல்லாம் போட்டுக்கொண்டு போகாதீங்க’ என்று அம்மன் மன்றாடுகிறார். ஆனால் அருணாசலேஸ்வரர் கேட்பதாக இல்லை. ’உலகத்துக்கே நாயகனான என்னிடம் யார் கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்ற இறுமாப்பு அவருக்கு. அம்மனை ஒருவாறு சமாளித்துவிட்டு கிரிவலம் போகிறார்.

மறுநாள் காலையில் இறைவன் வரும் போது உண்மையிலேயே நகைகள் திருடு போயிருந்தன. அம்மனுக்கு கோபம் தாங்கவில்லை. ‘சொன்னதை கேட்காததால பார்த்தீங்களா, நகைகள் போயிடுச்சு. வீட்டுக்குள்ள வராதீங்க’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டு உற்சவ மூர்த்தியின் அறையைத் தாழ்ப்பாள் போட்டுக் கொள்கிறார். அருணாசலேஸ்வரர் விடுவாரா? அம்மனை ஒருவாறு சமாதானப்படுத்திவிட்டு, மீண்டும் ஒன்று சேர்கிறார்.

 

இந்த அழகிய உற்சவக் காட்சி, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மாலை திருவூடல் உற்சவம் நடைபெறுகிறது. அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனின் உற்சவ மூர்த்திகள் இரண்டும் குறுக்கும் நெடுக்குமாக பக்தர்கள் சூழ, சுற்றுவதே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். காண்போரையும் பரவசப்பட வைக்கும். அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் திருவூடல் தெரு என்று உள்ளது.

அன்று இரவு உற்சவமூர்த்தியான அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். மறுநாள் காணும் பொங்கல் அன்று காலை கோயிலில் உள்ள கருவறை மண்டபத்தில் உள்ள உற்சவமூர்த்தி சன்னதியில் மறுஊடல் என்ற உற்சவம் நடைபெறும்.

பக்தர்களை மட்டுமல்லாது காண்போரையும் பரவசப்படுத்தும் இந்த உற்சவம் ஒவ்வொரு ஆண்டும்   பொங்கல் பண்டிகை அன்றும்,  காணும் பொங்கல் அன்று நடைபெறுகிறது.



 

Monday, 2 May 2016

கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம!

 
தேவிபாகவதம் 9வது ஸ்கந்தம் 42வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த மஹாலக்ஷ்மி துதியை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் செல்வ வளம் கொழிக்கும்.

நம: கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம:
கிருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

தாமரைப் பூவில் வசிக்கின்ற ஸ்ரீ மஹாலக்ஷ்மியே நமஸ்காரம். ஸ்ரீ நாராயணன் மனைவியே நமஸ்காரம். ஸ்ரீ கிருஷ்ணருக்குப் பிரியமானவளே நமஸ்காரம்.

பத்மபத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம:
பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம:

தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களுடையவளும் தாமரை போன்ற முகமுடையவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம். தாமரைப் பூவை ஆசனமாகக் கொண்டவளே, கையில் தாமரையைத் தரித்திருப்பவளே, விஷ்ணு பத்தினியே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யை ஸர்வாராத்யை நமோ நம:
ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷதாத்ர்யை நமோ நம:

சகல சம்பத்துகளின் வடிவாக இருப்பவளும் அனைவராலும் ஆராதிக்கத் தகுந்தவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம். விஷ்ணுவிடத்தில் எங்கள் பக்தியைக் கொண்டு சேர்ப்பவளும் சந்தோஷத்தை அளிப்பவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

கிருஷ்ண வக்ஷ: ஸ்திதாயை ச கிருஷ்ணேஸாயை நமோ நம:
சந்த்ரஸோபாஸ்வரூபாயை ரத்னபத்மே ச ஸோபனே

கிருஷ்ணனுடைய திருமார்பில் வசிப்பவளே, கிருஷ்ணனை பதியாக உடையவளே, மஹாலக்ஷ்மி, நமஸ்காரம். சந்திரிகையின் வடிவாக இருப்பவளே, அழகிய பத்மராகம் என்னும் கல்லாலேயே ஆக்கப்பட்ட சகல சம்பத்துக்களுக்கும் நாயகியே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஸம்பத்யதிஷ்டாத்ருதேவ்யை மஹாதேவ்யை நமோ நம:
நமோவ்ருத்தி ஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோ நம:

ஐஸ்வர்யத்தின் வளர்ச்சியின் ஸ்வரூபமாக இருப்பவளே, மஹா தேவியாய் துலங்குபவளே, அந்த வளர்ச்சியைச் செய்பவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

வைகுண்டே யா மஹாலக்ஷ்மீர்யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே
ஸ்வர்க லக்ஷ்மீரிந்த்ரகேஹே ராஜலக்ஷ்மீர் ந்ருபாலயே

வைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியாகவும் பாற்கடலில் லக்ஷ்மியாகவும் இந்திரனுடைய வீட்டில் ஸ்வர்க்க லக்ஷ்மியாகவும் அரசனுடைய அரண்மனையில் ராஜ லக்ஷ்மியாகவும் விளங்குபவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

க்ருஹலக்ஷ்மீஸ்ச க்ருஹிணாம் கேஹே ச க்ருஹதேவதா
ஸுரபி: ஸாகரே ஜாதா தக்ஷிணாயக்ஞகாமினீ

கிருஹஸ்த தர்மத்தை அனுஷ்டிப்பவர்களின் வீட்டில் கிருஹலக்ஷ்மியாகவும் வீட்டைப் பாதுகாக்கும் தேவதையாகவும் பாற்கடலிலிருந்து உண்டான காமதேனு வடிவில் விளங்குபவளும் யாகத்தில் தானம் செய்யும்

தட்சணை வடிவாய் விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.
அதிதிர் தேவமாதா த்வம் கமலா கமலாலயா
ஸ்வாஹா த்வம் ச ஹவிர்தானே கவ்யதானே ஸ்வதா ஸ்ம்ருதா

தேவர்களின் தாயான அதிதியாகவும் தாமரைப் பூவாகவும் தாமரைப் பூமாலையைத் தரித்தவளும் தாமரைப் பூவில் வசிப்பவளும் தேவதைகளுக்கு யாகம் செய்யும் போது ஹவிஸை எடுத்துச் செல்லும் ஸ்வாஹா தேவியாகவும் பித்ருக்களுக்கு யாகம் செய்யும்போது ஸ்வதா தேவியாகவும் விளங்குபவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

த்வம் ஹி விஷ்ணுஸ்வரூபா ச ஸர்வாதாரா வஸுந்தரா
ஸுத்த ஸத்ஸ்வரூபா த்வம் நாராயணபராயணா

விஷ்ணு வடிவாகவும் யாவற்றிற்கும் ஆதாரமான பூமிதேவியாகவும் சுத்த ஸத்வகுண வடிவாகவும் நாராயணனையே அண்டியிருப்பவளாகவும் விளங்கும் மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

க்ரோதஸிம்ஸா வர்ஜிதா ச வரதா ஸாரதா ஸுபா
பரமார்த்தப்ரதா த்வம் ச ஹரிதாஸ்யப்ரதா பரா

கோபம், பிறருக்குத் துன்பம் செய்வது இவற்றை அறவே வெறுப்பவளே, அபீஷ்டங்களை அளிப்பவளே, மங்களத்தைச் செய்யும் சரஸ்வதியே, பரமார்த்த வடிவினளே, மஹாவிஷ்ணுவிற்கு சேவை புரிபவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஸர்வேஷாம் பரா மாதா ஸர்வபாந்தவரூபிணீ
தர்மார்த்த மாக மோக்ஷாணாம் த்வம் ச காரண ரூபிணீ

யாவர்க்கும் சிறந்த தாயாகவும் யாவர்க்கும் உறவினராகவும் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் போன்றவைகளை அளிக்கக் காரண வடிவாகவும் திகழும் மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

யதா மாதா ஸ்தனாந்தானாம் ஸிஸூனாம் ஸைஸவே ஸதா
ததா த்வம் ஸர்வதா மாதா ஸர்வேஷாம் ஸர்வரூபத:

பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்போல் விளங்குபவளே, அந்த சிசுக்களை அரவணைத்துக் காப்பவளே, அதேபோல எல்லா உயிர்களுக்கும் பாசமிகு தாயாக பரிபாலிக்கும் மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

மாத்ரு ஹீன: ஸ்தனாந்தஸ்து ஸ ச ஜீவதி தைவத:
த்வயா ஹீனோ ஜன: கோபி ந ஜீவத்யேவ நிஸ்சிதம்

பால் அருந்தும் குழந்தைக்கு தாயே இல்லாது போனாலும் அது தெய்வத்தின் அருளால் பிழைத்து வளர்ந்து வரும். ஆனால் தங்கள் அருளில்லாமல் உலகில் ஒருவர் கூட ஜீவிக்க முடியாத பேருண்மையே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஸுப்ரஸன்ன ஸ்வரூபா த்வம் மாம்
ப்ரஸன்னா பவாம்பிகே
வைரிக்ரஸ்தம் ச விஷயம் தேஹி மஹ்யம் ஸநாதநி

அம்பிகையே, எழில் தோற்றத்துடன் எனக்கு நேரில் தரிசனமளிக்கக் கூடியவளே, சத்ருவினால் ஆக்ரமிக்கப்பட்ட என் நிலத்தை மீட்டுத் தரும் ஆதி ஸ்வரூபிணியான மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

அஹம் யாவத் த்வயாஹீனோ பந்து ஹீனச்ச பிக்ஷுக:
ஸர்வ ஸம்பத்விஹீனஸ்ச தாவதேவ ஹரிப்ரியே

மஹாவிஷ்ணுவின் மனைவியே! தங்கள் அருள் கிடைக்காத ஒருவன், உறவினர்கள் இல்லாதவனாயும் பிச்சைக்காரனாகவும் ஸர்வ ஸம்பத்துக்களற்றவனாயும் இருக்கும் உணர்வை அடைய வைப்பவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

க்ஞானம் தேஹி ச தர்மம் ச ஸர்வஸௌபாக்யமீப்ஸிதம்
ப்ரபாவம் ச ப்ரதாபம் ச ஸர்வாதிகார மேவ ச

நல்லறிவு, தர்மபுத்தி, கோரிய சகல பாக்யங்களையும் அருளும் பரோபகாரி, அடக்கும் சக்தி, யாவருக்கும் தலைமை ஏற்கும் அற்புத சக்தியே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஜயம் பராக்ரமம் யுத்தே பரமைஸ்வர்யமேவ ச
இத்யுக்த்வா ச மஹேந்த்ரஸ்ச ஸர்வைஸ்ஸுர கணைஸ்ஸஹ
ப்ரணநாம ஸாஸ்ருநேத்ரோ மூர்த்னா சைவ புன: புன:

யுத்தத்தில் சத்ருக்களை வென்று ஜயத்தையும் சிறந்த ஐஸ்வர்யத்தையும் கொடுத்தருளும் மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம். முப்பத்து மூன்று கோடி தேவர்களுடன் தேவேந்திரன் ஆனந்தக் கண்ணீர் விட்டு தலையால் பல முறை வணங்கி நமஸ்கரித்த மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

ப்ரஹ்மா ஸங்கரஸ்சைவ ஸேஷோ தர்மஸ்ச கேஸவ:
ஸர்வே சக்ரு: பரீஹாரம் ஸுரார்த்தே ச புன: புன:

பிரம்மன், சங்கரன், ஆதிசேஷன், தர்மதேவன், மஹாவிஷ்ணு முதலிய தேவர்களும் இந்திராதி தேவர்களுக்கு அவர்கள் விரும்பியதை எல்லாம் அருளிய மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

தேவேப்யஸ்ச வரம் தத்வா புஷ்பமாலாம் மனோஹரம்
கேசவாய ததௌ லக்ஷ்மீ: ஸம்துஷ்டா ஸுரஸம்ஸதி
யயும் தேவாஸ்ச ஸம்துஷ்டா: ஸ்வம் ஸ்வம் ஸ்தானம் ச நாரத:
தேவீ யயௌ ஹரே: ஸ்தானம் ஹ்ருஷ்டா க்ஷீரோதஸாயிந:

தேவர்கள் கோரிய வரங்களையெல்லாம் அளித்துவிட்டு, மனோஹரமான புஷ்ப மாலையை சந்தோஷத்துடன் மஹாவிஷ்ணுவின் கழுத்தில் அணிவித்தவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம். தேவர்களை சந்தோஷம் நிறைந்தவர்களாக, தத்தமது ஸ்தானங்களுக்கு அனுப்பி வைத்த மஹாலக்ஷ்மியே, தானும் மிகுந்த சந்தோஷத்துடன் பாற்கடலில் இருக்கும் தனது கணவனிடம் சென்றடைந்தவளே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

இதம் ஸ்தோத்ரம் மஹாபுண்யம் த்ரிஸந்த்யம் ய: படேந்நர:
குபேரதுல்ய: ஸ பவேத் ராஜ ராஜேஸ்வரோ மஹான்

இந்த ஸ்தோத்திரத்தை காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் படிக்கின்ற மனிதன் ராஜாதி ராஜனான குபேரனுக்கு நிகராகவும் மஹிமை வாய்ந்தவனாகவும் ஆவான் என்ற உண்மையை அனுபவபூர்வமாக உணர்த்திய மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.


 

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்!


 



மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர்.


வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவது ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு. கடைசித் தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். இது அவளது தாய் வீடு. எனவே, ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள்’ என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.
 
11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜ கோபுரம், 196 அடி உயரமுடையது.
 
இது இரட்டைக் கோயிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழைமையான வடபத்ரசாயி கோயில். மேற்கில் ஆண்டாள் திருக்கோயில். இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம். இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
 
 

ஆண்டாளின் திருக்கோயில் முழுதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்யாண மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், ஏகாதசி மண்டபம் ஆகியன சிற்ப வேலைப்பாடு மிகுந்தவை.
ஒரே கல்லாலான பெரிய தூண் துவஜஸ்தம்பம் சிறப்பானது.
 
உட் பிராகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது மாதவிப் பந்தல். அடுத்து மணி மண்டபம். இங்கு கம்பம் ஒன்றில், ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத் தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதை தட்டொளி என்பர்.மகா மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற மண்டபம் ஒன்று உள்ளது. இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகள் உள்ளன.

 
அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார். கருவறையில் ஆண்டாள்& ரங்க மன்னார், கருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள். திருவரங்கன், திருமணக் கோலத்தில் ராஜகோபாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூல விக்கிரகங்களுக்கு முன்னால் தங்கத்தாலான கோபால மஞ்சத்தில் உற்சவர்களாக இந்த மூவரும் எழுந்தருளி உள்ளனர்.ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர்& ரங்கமன்னார், ராஜ மன்னார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணிவார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாள்.‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை& மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.

தண்ணீர் பஞ்ச காலத்திலும்கூட இந்தத் திருக்கோயிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் நீர் வற்றுவது இல்லை. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறியவும் முடியவில்லை.
கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும் சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடினாள். அதை ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது ‘என் அண்ணன் அல்லவோ!’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து ஸ்ரீராமானுஜரை வரவேற்றது.



தினமும் விடியற் காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான்.
 
ஆண்டாள் சூடிய மாலைக்குத் தனி மகத்து வமே இருக்கிறது. வேங்கடாசலபதியே இந்த மாலையை ஆசையுடன் அணிகிறாரே! வேங்கடேசன் மீது அளவற்ற பக்தி கொண்ட ஆண்டாள், அவரைத் துதித்து நாச்சியார் திருமொழியில் பாடினாள். இதனால் மகிழ்ந்த வேங்கடேசன், ஆண்டாள் அணிந்த மாலையை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் என்கிறது புராணம். ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.
 
தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.


 
ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.
 
இங்கு ஆண்டாள் உலா வரும்போது, ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ பாடப்படுகிறது. செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு- மாதுளம் பூ; மரவல்லி இலை- கிளியின் உடல்; இறக்கைகள்- நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன். இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.
 
திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டா ளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி. இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.
 
சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண்டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர். சித்ரா பௌர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில், நெசவாளர்கள் வந்து தொழுவர்.
 
மார்கழி மற்றும் எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில், பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.
 
கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.

உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி மாளிகை:
 
உங்களது நீண்டகாலப்பிரச்னைகள் தீர ஒரு சுலபப் பரிகாரம்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்று ஆண்டாளுக்கு அர்ச்சனை செய்யவும்.(நம் பெயரில்தான்).பின்னர் கண்ணாடி மாளிகைக்குள் கைகூப்பிய வண்ணம் உங்களது ரூபத்தைப் பார்த்தபடி 16 சுற்று சுற்றுங்கள்.பின்னர்,அதைவிட்டு வெளியே வந்து ஒரு மாட்டிற்கு(கோவில் அருகே அல்லது நமது தெருவில்/ஊரில்)6 பழங்கள் வாங்கிக் கொடுங்கள்.இப்படி சௌகரியப்பட்ட நாட்களில் 9 நாட்கள் தொடர்ந்து அல்லது விட்டு விட்டோ செய்ய வேண்டும்.அடுத்த சில வாரங்களில் எல்லாப்பிரச்னைகளும் தீர்ந்துவிடுகின்றன.சிலருக்கு ஒரே தடவையிலும்,சிலருக்கு 9 தடவைக்குள்ளும்,சிலருக்கு 9 தடவை இப்படி செய்து முடித்தப்பின்னரும் பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.இதற்கு எந்த வித நாள்,நட்சத்திரமும் பார்க்க வேண்டாம்.
 
ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் இதில், சுமார் 1000 தேவ&தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரதம், ராமாயணக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தேரை வடம் பிடித்து இழுக்க 3,030 ஆட்களாவது வேண்டுமாம். பெரிய தேர், ஆலயக் கோபுரத்தின் உயரத்திலிருந்து முக்கால் பங்கு உயரம் உள்ளது
ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டின்போது கட்டியம் கூறும் உரிமையை நிரந்தரமாகப் பெற்றுள்ளவர்களை ‘வேத பிரான் பட்டர்’ என்கிறார்கள். பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தவர்கள் இவர்கள்.ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் விசேஷம் அரவணைப் பிரசாதம். பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் இரவில் படைக்கப்படும் இதில் வடை, தேன்குழல் (முறுக்கு) அப்பம், புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் ஆகிய ஏழு வித பதார்த்தங்கள் இடம்பெறுகின்றன.
 
பங்குனி திருக்கல்யாணத் தின்போது, திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி கோயிலிலிருந்து பரிவட்டமும் (பட்டு), ஆடிப்பூரத் தேரோட்டத்துக்கு, மதுரை அழகர் கோயில் கள்ளழகர் திருக்கோயிலிருந்து பட்டுப் புடவையும் அனுப்பி வைக்கப்பட்டு ஆண்டாளுக்கு சாத்துப்படி செய்வது வழக்கம்.
 
பெரியாழ்வார் இந்த ஆலயத்தின் முதல் தர்மகர்த்தாவாகப் போற்றப் படுகிறார். அவர் தர்மகர்த்தாவாக இருந்தபோது,ஸ்ரீஆண்டாளிடம்வரவுசெலவை ஒப்புவிப்பாராம்! இந்த நிகழ்ச்சி, வருடம்தோறும் ஆடி மாதம் 7வது நாளில் ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ‘நெல் அளக்கும்’ வைபவமாக நடைபெறுகிறது.
 
தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம் , மேலும் ஆண்டாள கோயில் தேர் உலக பிரசித்திப் பெற்றது .நன்றி bsubra.wordpress.com/