Tuesday 3 May 2016

அட்சய திருதியையில் ஸ்ரீ ஸ்வர்ண‌ கௌரி பூஜை!


ஸூவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ:
ஸூதான்ய வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
கல்யாண வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:
விபூதி வ்ருத்திம் குரு மே க்ருஹே ஸ்ரீ:

ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி

ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்

ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத் ப்ரதம்
தேஹி குருகுரு ஸ்வாஹா!

 சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பிகே கௌரி நாராயணி நமோஸ்துதே!
திருமண தினத்தில், மணமகள் மணமேடைக்குச் செல்லும் முன்பாக, கௌரி தேவியைப் பூஜிப்பது சம்பிரதாயம். கணவனோடு இணைந்து வெற்றிகரமாக இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வேண்டி, தேவியைப் பூஜித்த பின்பே திருமாங்கல்ய தாரணம் நடைபெறுகிறது.
ஸ்ரீ கௌரி தேவியைப் பூஜிப்பது அனைத்து தேவதைகளையும் பூஜிப்பதற்குச் சமம் என்கின்றன புராணங்கள். . நமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக, 108 வடிவங்களில் கௌரி தேவியை வடிவமைத்துப் பூஜிக்க வழி செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

 கீர்த்தி கௌரி, ஸ்ரீ பல(பலால) கௌரி, ஸ்ரீ ஹரிதாளிகா(விபத்தார) கௌரி, ஸ்ரீ கஜ கௌரி, ஸ்ரீ ஞான கௌரி, ஸ்ரீ மாஷா கௌரி, ஸ்ரீ சாம்ராஜ்ய மஹா கௌரி, ஸ்ரீ சம்பத் கௌரி என ஒரு வருடத்தில் கொண்டாடப்படும் கௌரி விரதங்கள் எண்ணற்றவை. அவரவருக்கு வேண்டிய பலனைப் பொறுத்தும் அவரவர் குடும்ப வழக்கங்களைப் பொறுத்தும், கௌரி விரதங்களை அனுசரிக்கலாம்.
ஸ்வர்ண கௌரி விரதம் ஆந்திர, கர்நாடக மற்றும் சில வட மாநிலங்களில் பிரதானமாகக் கொண்டாடப்படுகிறதுஅக்ஷய திருதியையில் ஸ்ரீ ஸ்வர்ண கௌரியைப் பூஜிக்க, வறுமை, தோஷங்கள் நீங்கும், குலதெய்வப் ப்ரீதி ஏற்படும்.தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகி, ஏராளமான தங்க ஆபரணங்களை அணியும் யோகம் அம்பிகை அருளால் கிடைக்கும்.
ஸ்ரீ ஸ்வர்ண கௌரி விரதத்தை அனுஷ்டிக்கும் முறை!
விரத தினத்திற்கு முன் தினம், இல்லம், பூஜையறையைச் சுத்தம் செய்து, பூஜைக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.

பூஜைக்குத் தேவையானவை:

 
கௌரி தேவியின் பிரதிமை (கலசத்திலும் ஆவாஹனம் செய்து பூஜிக்கலாம். அல்லது கலசத்தில் தேவியின் பிரதிமையை வைத்து அலங்கரிப்பதும் சிறப்பு). சிவனாரும் பார்வதி தேவியும் இணைந்திருக்கும் படத்தை வைத்துப் பூஜிப்பதும் வழக்கத்திலிருக்கிறது.

மாவிலை தோரணங்கள்,
மஞ்சள், குங்குமம், சந்தனம், ஊதுவத்தி, கற்பூரம், அக்ஷதை.

தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மற்ற வகைப் பழங்கள்.
பூமாலை, உதிரிப்பூ, கஜவஸ்திரம்,

புடவை, ரவிக்கை அல்லது இரண்டு ரவிக்கைத் துணிகள்,
திருவிளக்குகள், ஒற்றை ஆரத்தி(தீபம்), பஞ்சமுக ஆரத்தி.

தயிர்,பால், தேன், வெல்லம், நெய்(பஞ்சாமிர்த ஸ்நானத்திற்கு).
பஞ்சபாத்திர உத்திரிணி, தீப்பெட்டி முதலியன.

தேவிக்கு நிவேதனமாக, சர்க்கரைப் பொங்கல் செய்வது உசிதம். மற்ற நிவேதனங்களும் செய்யலாம். கர்நாடகாவில் போளி நிவேதனங்களில் பிரதான இடம் பெறுகிறது. தாமரைப்பூவின் இதழ்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பது விசேஷம்.

விரதத்தை காலை அல்லது மாலை வேளையில் அனுஷ்டிக்கலாம். மாலை வரை உபவாசமிருந்து, சூரிய அஸ்தமனமாகும் சமயம், அனுஷ்டிப்பதே சிறப்பு. முழுக்க உபவாசமிருக்க முடியாதவர்கள், பால், பழம் அருந்தலாம்.

மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், அம்பிகையை கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும். தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகி, ஏராளமான தங்க ஆபரணங்களை அணியும் யோகம் அம்பிகை அருளால் கிடைக்கும். மண்டபம் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும்.

வடக்குப் பார்த்து அமர்ந்து பூஜிக்க வேண்டும். அம்பிகையின் திருமுன் இருபுறமும் விளக்குகள் ஏற்ற வேண்டும். வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும்.

 
முதலில் விக்னேஸ்வர பூஜையைச் செய்து விட்டு, அம்பிகைக்கு (தியான, ஆவாஹனம் முதலிய) ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும்.
தேவியின் ஒவ்வொரு அங்கத்தையும்(அங்க பூஜை) பூஜித்து, பின் பதினாறு முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளுக்கு பூஜை செய்யவும். பின் ஸ்ரீ கௌரி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி அர்ச்சிக்க வேண்டும்.

 நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்து, பழங்கள் தாம்பூலம் நிவேதித்து, கற்பூரம் காட்டி வணங்கவும். கைநிறையப் பூக்களை எடுத்துச் சமர்ப்பித்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ளவும்.
பின் தேவிக்கு, இரு நெய் தீபங்களை ஆரத்தி நீரின் நடுவில் ஏற்றி வைத்து ஆரத்தி காண்பிக்கவும். 16 சிறு மாவிளக்குகள் செய்து, நடுவில் தீபம் ஏற்றி அவற்றை ஒரு தட்டில் வைத்து சுற்றிக் காண்பிப்பது சிறப்பு.

 
பூஜைப் பலன்களை தேவிக்கு சமர்ப்பித்து அர்க்யப் பிரதானம் (உத்திரிணியால் பால், நீர் கலந்த தீர்த்தத்தை கிண்ணத்தில் சமர்ப்பித்தல்) செய்யவும். ஒரு பழம், சந்தனம், அக்ஷதையைக் கையில் வைத்துக் கொண்டும் அர்க்யம் விடலாம்).

சுமங்கலிகளுக்கு உணவளித்து, பழம், தாம்பூலம் அளித்து சிறப்பிக்க வேண்டும்.
பூஜை முடிந்தபின், அருகிலுள்ள,கோவிலுக்குச் சென்று, உமையம்மை சகிதராக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தரிசித்தல் சிறப்பு. பூஜைப் பிரசாதங்களைக் கட்டாயம் விநியோகிக்க வேண்டும். இதன் காரணம், பிரசாதம் பெறுபவர்களில் ஒருவராக பகவானும் எழுந்தருளி, பிரசாதத்தை ஏற்று நம் விருப்பங்களை ஈடேற்றி வைப்பார். பின் நாமும் பிரசாதத்தை பக்தியுடன் உண்ண வேண்டும்.
இரவு பிரசாதம் மட்டும் சாப்பிடுவது சிறப்பு. முடியாதவர்கள், பலகாரம் சாப்பிடலாம்.

 மறு நாள், தேவிக்கு சுருக்கமாக,புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது, தேவிக்கு, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி, பூக்கள் சமர்ப்பித்து வணங்கவும். பின், தேவியைத் தன் இருப்பிடம் எழுந்தருளப்(யதாஸ்தானம்) பிரார்த்தித்து, பிரதிமை அல்லது கலசத்தை சிறிது வடக்காக நகர்த்தி வைக்கவும். கலசத்தில் அணிவித்த நகைகளை எடுத்து, சிறிது நேரம் அணிந்து விட்டு உள்ளே வைக்கலாம்.

 

No comments:

Post a Comment