Tuesday, 8 November 2016

பஞ்சாரண்ய திருத்தலங்கள்!

பாவங்கள் போக்கும் பஞ்சாரண்ய திருத்தலங்களுள் ஒன்று திருக்கொள்ளம்புதூர் எனப்படும் வில்வவனம். மற்றவை திருக்கருகாவூர் எனப்படும் பாதிரிவனம்; அவனியநல்லூர் என்ற முல்லைவனம்; அரித்துவாரமங்கலம் என்னும் வன்னிவனம்; திருஇரும்பூளை என்னும் ஆலங்குடி. இவை ஐந்தும் தொன்மையான தலங்களாகும்.மேற்கண்ட தலங்களனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த காலபூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், இந்த ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.பஞ்சாரண்ய தலங்களில் முதல் தலம் திருக்கருகாவூர். இது தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலிருந்து தெற்கே ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. வாகன வசதிகள் உள்ளன. விடியற்காலையில் தரிசிக்கவேண்டிய தலமாகும். சோழ நாட்டில் போர் நடந்தபோது கர்ப்பிணிப் பெண்கள் திருக்கருகாவூருக்கு அனுப்பி பாதுகாக்கப்பட்டார்கள் என்பது வரலாறு.இங்குள்ள சிவலிங்கத்திருமேனி சுயம்புலிங்கம். முன்பு இப்பகுதி முல்லைக்காடாக இருந்தபோது, லிங்கத்திருமேனியின்மீது முல்லைக்கொடிகள் படர்ந்திருந்தன. அதனால் ஏற்பட்ட தழும்பினை லிங்கத்திருமேனியில் இப்போதும் காணலாம். இந்தச் சுயம்புமூர்த்திக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது.கௌதமர், கார்கேய முனிவர்கள் இங்கு தவம் செய்தபோது, அவர்களுக்கு நித்ருவர் என்ற சிவபக்தரும், அவருடைய மனைவி வேதிகையும் பணிவிடை செய்துவந்தனர். பிள்ளைப்பேறு இல்லாத அவர்களின் ஏக்கத்தை அறிந்த முனிவர்கள், இறைவன் முல்லைநாதரையும் இறைவியையும் வேண்டிக்கொள்ளுமாறு உபதேசம் செய்தார்கள். அதன் பலனால் வேதிகை கருவுற்றாள்.
ஒருசமயம், வேதிகையின் கணவர் வெளியே சென்றிருந்த போது, கர்ப்பிணியான வேதிகை மயக்கநிலையில் சோர்ந்து படுத்திருந்தாள். அந்த வேளையில் ஊர்த்துவபாதர் எனும் முனிவர் அங்குவந்து பிட்சை கேட்க, மயக்கநிலையிலிருந்த வேதிகையால் எழுந்து பிட்சையிட முடியாமல்போனது. அதனால் கோபமடைந்த முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வருந்திய அவள் அம்பாளிடம் கதறியழுதாள். உடனே தேவியானவள் கர்ப்பரட்சகியாகத் தோன்றி, சிதைந்த கருவை ஒரு குடத்திலிட்டுப் பாதுகாத்து, பத்து மாதம் கழித்து "நைநுருவன்' எனும் குழந்தையாக அவளிடம் கொடுத்தருளினாள். மகிழ்ச்சியடைந்த வேதிகை தன்னைப்போல மற்றவர்களையும் காத்தருளவேண்டுமென்று தேவியிடம் வேண்டினாள். அன்னையும் இசைவுதந்தாள். அன்றிலிருந்து இந்த அன்னை கர்ப்பத்தை ரட்சிக்கும் அன்னையாக ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை என்று போற்றப்படுகிறாள். இந்த அம்பிகையை வேண்டிட, குழந்தைச் செல்வம் கிட்டும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவமும் நடைபெறும். உஷத் காலமாகிய காலை 5.00 மணிமுதல் 6.00 மணிக்குள் இத்தல இறைவனையும் இறைவியையும் தரிசிக்கவேண்டும்.அடுத்து, பஞ்சாரண்ய தலங்களில் இரண்டாவதான அவனியநல்லூர் செல்லவேண்டும். அங்கு காலை 8.30 மணிமுதல் 9.30 மணிக்குள் சௌந்தரநாயகி சமேத பாதிரிவனேஸ்வரரை தரிசிக்கவேண்டும். இத்தல இறைவன், இறைவியை வழிபட கண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பார்வை நன்கு தெரியும். தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் இக்கோவில் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன. இத்தல இறைவன் பாதிரி மரத்தடியில் சுயம்புமூர்த்தியாக விளங்கியதால், பாதிரி மரமே இத்தல விருட்சமாகக் கருதப்படுகிறது.பஞ்சாரண்ய திருத்தலங்களில் மூன்றாவது தலம் அரித்துவாரமங்கலம். கும்பகோணத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. உச்சிக்காலமாகிய காலை 11.00 மணிமுதல் 12.30 மணிவரை இத்தல இறைவனை வழிபடவேண்டும். இறைவன் ஸ்ரீபாதாளேஸ்வரர்; இறைவி அலங்கார அம்மை. கருவறையில் லிங்கத்திருமேனியின்முன் பெரியபள்ளம் இருக்கிறது. பள்ளத்தை பாழி என்றும் சொல்வர். இத்தலத்திற்கு திரு அரதைப் பெரும்பாழி என்ற பெயரும் உண்டு.இத்தலத்தில் இறைவனின் திருவடியைக் காண திருமால் பன்றியாகத் தோன்றி பாதாளத்தை ஏற்படுத்தினார் என்றும்; இறைவன் அந்த பள்ளத்தை கல்லால் மூடினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட, மனஆழத்தில் பதிந்திருக்கும் கவலைகள், குழப்பங்கள், மனஅழுத்தம் ஆகியவை நீங்குமென்பது ஐதீகம்.
அடுத்து தரிசிக்கவேண்டிய தலம் ஆலங்குடி. இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர்; இறைவி ஏலவார்குழலி. நவகிரகத் தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில், நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது, துர்வாச ரிஷி சிவபூஜை பிரசாதமாகிய மாலையைக் கொண்டுவருகையில், வழியில் இந்திரனைக் கண்டு அவனிடம் கொடுத்தார். அதை இந்திரன் அலட்சியமாக வாங்கி யானைத்தலையில் வைத்தான். அது அந்த மாலையைக் கீழேபோட்டு காலால் மிதித்து நாசமாக்கியது. இதனைக் கண்ட துர்வாசர் கோபம் கொண்டு, ""உன் பதவி, செல்வம் எல்லாம் அழியட்டும்'' என்று சாபமிட்டார். முனிவரின் சாபம் உடனே பலித்தது. அவன் அமர்ந்திருந்த ஐராவதம் யானை மறைந்தது. பிச்சைக்காரன்போல் நடுவீதியில் நின்றான் இந்திரன். பின்னர் தன் தவறை உணர்ந்து வருந்தி, இத்தல இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகிறது.இத்தல இறைவனை மாலை நேர பூஜையில் தரிசித்தால் குரு தோஷம் நீங்கும். குருவின் திருவருளால் வேண்டியது கிட்டும். மேலும், தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் விசேஷமானதால், வியாழக்கிழமைதோறும் வழிபட தடைகள் நீங்கி, விரைவில் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். நல்ல பதவிகிட்டும்; கல்வியில் சிறந்து விளங்கலாம்.ஐந்தாவதாக தரிசிக்கவேண்டிய திருத்தலம் திருக்கொள்ளம்புதூர். இது தீபாவளித் திருநாளுடன் தொடர்புடையது. தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் கொரடாச்சேரிக்கு அருகில் இத்தலம் உள்ளது. இறைவன் வில்வவனேஸ்வரர்; அம்பாள் சௌந்தராம்பிகை. இங்கு அர்த்தஜாம வழிபாடு புகழ்பெற்றது. இத்தலத்தின் மேற்கில் அகத்திய காவேரி என்கிற வெட்டாறு ஓடுகிறது. இதற்கு முள்ளியாறு என்ற பெயரும் உண்டு. ஓடம்போக்கி ஆறு என்று உள்ளூர் மக்கள் அழைப்பர். இத்தலத்தில்தான் இறைவன் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கி அருள்புரிந்தார் என்று புராணம் கூறுகிறது.கொள்ளாம்புதூர் ஆலயத்தில், தீபாவளித் திருநாளன்று நள்ளிரவில் நடைபெறவேண்டிய அர்த்தஜாம பூஜை அதற்கு அடுத்த நாள் காலையில் நடைபெறுகிறது. இதற்குக் காரணமானவர் திருஞானசம்பந்தர்.திருக்கருகாவூரில் உஷத்காலபூஜை, அவனியநல்லூரில் காலசந்தி, அரித்துவார மங்கலத்தில் உச்சிக்காலபூஜை, ஆலங்குடியில் சாயரட்ச பூஜை என்று கலந்துகொண்டு, திருக்கொள்ளம்புதூர் சென்று அர்த்தஜாம பூஜையில் கலந்துகொள்ள விரும்பினார் திருஞானசம்பந்தர்.அன்று ஐப்பசி மாத அமாவாசை தீபாவளி தினம். இருள்சூழ்ந்த அந்த வேளையில் தம் அடியார்களுடன் புறப்பட்டார் திருஞானசம்பந்தர். வழியில் முள்ளியாற்றைக் கடந்து செல்லவேண்டும். ஆனால் ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தருடன் வந்த சீடர்கள் எல்லாம் வெள்ளத்தைக் கண்டு அஞ்சினர். பூஜை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் படகுகள் இருந்தாலும் துடுப்புகள் இல்லை.ஞானசம்பந்தர் துணிச்சலுடன் படகை அவிழ்த்து ஏறியமர்ந்து, சீடர்களையும் அழைத்தார். வெள்ளத்தையும் திக்கு திசை அறியமுடியாத அமாவாசை இருளையும் கண்டு சீடர்கள் தயங்கினர். உடனே சம்பந்தர் திருப்பதிகம் பாட, அவர்கள் தைரியம் பெற்று ஓடத்தில் அமர்ந்தனர். ஓடம் நீரில் இப்படியும் அப்படியும் அசைந்துகொண்டிருந்தது. துடுப்பில்லாமல் எப்படி ஓடத்தை சரியாக செலுத்தமுடியும் என்று சீடர்கள் யோசித்தனர். அப்போது சம்பந்தர், "கொட்டமே கமழும்' என்ற பதிகத்தைப் பாடினார். இறையருளால் ஓடம் அமைதியாக நகர்ந்துகொண்டிருந்தது.திருக்கொள்ளம்புதூர் கோவில் அர்ச் சகர்கள், திருஞானசம்பந்தர் வருகையை முன்னரே அறிந்திருந்ததால் அவரை வரவேற்க கோவில் வாசலில் காத்திருந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. அர்த்தஜாம பூஜைக்கான நேரம் கடந்துவிட்டது. சம்பந்தர் வராதால் அர்ச்சகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். சிறிது நேரத்தில் சூரியன் உதித்துவிடுமே என்று வருந்தினார்கள். அதேபோல் அதிகாலை நேரத்தில் சீடர் களுடன் திருஞானசம்பந்தர் கோவிலுக்கு வந்தார். அவருக்காக அர்த்தஜாம பூஜை உஷத்காலத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வு இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஐப்பசி அமாவாசையன்று துவங்கும் தீபாவளித் திருவிழா மறுநாளும் நீடிக்கப் படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வருகைதந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் ஓடத்திருநாள் கொண்டாடப்படுகிறது.மேலும், இத்தலத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், இந்த ஊரில் இறப்பவர்களுக்கு சிவபெருமான் பஞ்சாட்சார மந்திரத்தை வலது செவியில் தாமே ஓதி முக்தியளிப்பதாக ஐதீகம்.பஞ்சாரண்ய திருத்தலங்களை ஒரே நாளில் தரிசித்தால் முற்பிறவிப் பாவங்கள், வினைகள், இப்பிறவி தோஷங்கள் அனைத் தும் விலகுமென்பது ஐதீகம்.
 

Friday, 4 November 2016

மங்கள வாழ்வு தரும் பிரம்மா!

படைப்புத் தொழிலை சிவபெருமானிடம் இருந்து பெற்ற பிரம்மதேவன் தானும் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மா கர்வம் கொண்டார். (முற்காலத்தில் ஈசனைப் போலவே, பிரம்மாவுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது.) இதனால் பிரம்மனுக்கு பாடம் புகட்ட எண்ணிய ஈசன், பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்றை கொய்துவிட்டார். மேலும் படைப்புத் தொழிலையும் அவரிடம் இருந்து பறித்தார்.

இதையடுத்து பிரம்மதேவன் தன்னுடைய தவறை உணர்ந்து, ஈசனிடம் மன்னிப்பு கோரினார். பூலோகத்தில் ஆங்காங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுமாறும், தகுந்த நேரம் வரும்போது பலன் கிடைக்கும் என்றும் சிவபெருமான் அருளினார். இதையடுத்து பிரம்மதேவன் பூலோகம் வந்து ஆங்காங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இறுதியில் திருப்பட்டூர் என்னும் தலத்திற்கு வந்து 12 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், பிரம்மனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அளித்து ஆசி வழங்கினார்.

பிரம்மன் வழிபட்ட இடம் என்பதால், இந்தத் தலத்தில் உள்ள ஈசன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் சிவ ஸ்தலமாக இருந்தாலும், இங்குள்ள பிரம்மா புகழ்பெற்று விளங்குகிறார். இங்கு பிரம்மா பிரமாண்ட தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். குரு பரிகாரத் தலமாக திகழும் இந்த ஆலயத்தில், மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னிதியில் 6 அடி உயரத்தில் தியான நிலையில் வீற்றிருக்கிறார் பிரம்மா.

குரு பகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், இந்த ஆலயத்தில் உள்ள பிரம்மாவுக்கு, வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. குருப்பெயர்ச்சி அன்றும், இத்தல பிரம்மாவுக்கு பரிகார யாக பூஜைகள் நடைபெறும். 7-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கான பரிகார தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

பிரம்மா விசேஷமானவராக இருந்தாலும், இத்தலத்தில் ஈசனே பிரதானம். சிவபெருமானை வழிபடும் பக்தர்களுக்கு, பிரம்மதேவனும் அருள்செய்வார். இந்த ஆலய ஈசனை வழிபட்டதால்தான், பிரம்மாவின் தலையெழுத்து மாறியது. எனவே இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களின் தலையெழுத்தை இத்தல பிரம்மதேவர், மங்களகரமாக மாற்றித்தருவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிறுகனூர் என்ற ஊர். இங்கிருந்து திருப்பட்டூர் செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தூரம் சென்றால், பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

21 - ஆனந்த வாழ்வருளும் அபீதகுஜாம்பாள்!


51 சக்தி பீடங்கள்

நினைக்க முக்தி தரும் தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை. ஈசன் அண்ணாமலையாராகவும் அம்பிகை உண்ணாமுலையம்மன் எனும் அபீதகுஜாம்பாளாகவும் திருவருட்பாலிக்கும் திருத்தலம். சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரம்மதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் போன்றோர் பூஜித்துப் பேறுபெற்ற தலம். வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்ததால் மாறியதாக தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் நடைபெறும் பெரிய விழா கார்த்திகை தீபத் திருவிழாவாகும். இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நன்னாளில் நடைபெறும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பிரமோற்சவமும், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் ஆறுநாள் விழாவும், மாசிமகத்தில் வல்லாளன் திருவிழாவும், தை மாதம் திருவூடல் விழாவும், ஆனி விழாவும், ஆடியில் அம்பிகை விழாவும், பவித்ரோற்சவம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை உற்சவம், திருவா திரை முதலியனவும் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றன.

இத்தலம் பஞ்சபூதத்தலங்களுள் அக்கினி தலமாக போற்றப்படுகிறது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் அருணை சக்தி பீடமாக போற்றப்படுகிறது.

ஒரு சமயம் கயிலை மலையில் பார்வதிதேவியுடன், ஈசன் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஈசனைக் காண வந்த பிருங்கி முனிவர் ஈசனை மட்டும் வணங்கி வலம் வந்தார். ஆனால், தேவியை வணங்கவில்லை. அதனால் பார்வதி கோபமடைந்தாள். பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் ரத்தம் நீங்கி சக்தியை இழக்குமாறு சாபமளித்தார். பிருங்கி முனிவர் சதையும் ரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார். ஈசன் தம்முடைய பக்தனின் தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார். உடனே முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார். ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, ஈசனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.

இதனைக் கண்ட பார்வதிதேவி மனம் வருந்தி ஈசனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி ஈசனை நோக்கிக் கடுமையான தவத்தினை மேற்கொண்டாள். ஈசன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார். பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார். பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார். இவ்வாறு பார்வதி ஈசனின் பாதி உடலை பெற்ற தலம் இத்திருவண்ணாமலையாகும். கார்த்திகை தீபத்தின்போது அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தின் ஆனந்த நடனத்தை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே தரிசிக்க முடியும். பின் அடுத்த வருட கார்த்திகை தீபத்தின்போதுதான் அத்திருவுரு தரிசிக்கக் கிடைக்கும்.

உண்ணாமுலை அம்பிகையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? லலிதா ஸஹஸ்ர நாமம் தேவியைப் போற்றும் நாமங்களில் நிஸ்துலா - சிறந்த பொருள் அனைத்திலும் சிறந்தவள், எவர்க்கும் ஒப்பிலாதவள் என்கிறது. மேலும் ஸமானாதிக வர்ஜிதா - ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள். ஒப்பார் இல்லாத போது மிக்கார் எப்படி இருக்க முடியும்? தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் எனும் சதுர்விதபுருஷார்த்தங்களையும் அளிக்க வல்லவள். தேவியின் தாமரை போன்ற சிவந்த பாதங்களுக்கு அவற்றின் நகங்களின் பிரகாசமே நிலவாகிறதாம்! தாமரையின் கொழுப்பை அடக்கும் திருப்பாதங்கள் என்று மூககவியும் தன் ‘பாதாரவிந்த சதக’த்தில் அம்பிகையின் பாதங்களைப் புகழ்கிறார். இதைத்தான் அருணகிரிநாதரும் ‘சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில் தவ முறை தியானம் வைக்க’ என்கிறார். சரணங்கள் என்ற கமலங்களாலேயே ஆன ஆலயம் தேவியின் திருப்பாதங்களாகும்.

தேவியின் கண்களோ அதற்கும் மேலான கருணையைப் பொழிகின்றது. மிகவும் குளிர்ந்ததான, அழகான, சலனமான பார்வையை அம்பிகை நம்மீது செலுத்த வேண்டும். அன்பு கனிந்த பார்வை என்பது குளிர்ச்சியாக இருக்கும் தேவியின் பார்வை. அதன் மகிமையாலேயே ஈசனால் சாம்பலாக்கப்பட்ட மன்மதன் மீண்டும் உயிர்பிழைக்கப் பெற்றான். அம்பிகையின் குழந்தை என்ற பெருமையையும் பெற்றான். தேவியின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டால் போதும். யுகங்களில் செய்த பாவங்களும் பறந்தோடிவிடும்.

கங்கை என்னும் புண்ணிய நதியானது இமயத்தில் உற்பத்தியாகி அங்கிருந்து இறங்கிவந்து சூரிய புத்ரியான யமுனை நதியுடன்
கலக்கும் போது கருப்பு நிறமாக மாறி அங்குள்ள அன்னப்பறவைகளுடன் கூடியிருக்கும். அம்பிகையின் புன்சிரிப்பை கங்கை என்று வைத்துக்கொண்டால் அவளின் புன்னகையின் ஒளி குங்குமம், கஸ்தூரி சேர்ந்த கலவைச்சாந்தில் ஒரு விசித்ர நிறம் அடைந்து, ஹாரத்திலுள்ள முத்துகளில் வீசும்போது கங்கை அன்னப்பறவைகளுடன் கூடியது போலும், பருத்த மார்பகங்களின் மேல் அவ்வொளி பரவுவது இமய மலைச்சிகரத்தில் சஞ்சரிப்பது போலவும் தோன்றுகிறது.

சிவந்த உதடுகளில் புன்சிரிப்புடன் கூடிய தேவியின் கருணையை அடைந்தபின் பிற அன்னியர்களால் ஆக வேண்டியது எதுவும் இல்லை. இதையே அபிராமிபட்டரும் ‘அம்மா நீ என்னிடம் வைத்த பெருங்கருணை இருக்கும்போது தேவியின் அன்பர்களைத் தவிர மற்றவர்களுடன் உறவு கொள்ளேன். தேவியின் அன்பர்களே எனக்கும் அன்பர்கள்’ என்கிறார்.

தன்னை நினைத்து வணங்கும் அன்பர்களுக்கு ஆனந்த வாழ்வருளும் அபீதகுஜாம்பாளை மனமாற வணங்கி வளங்கள் பெறுவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்:

பீடத்தின் பெயர் ரத்னாவளி. தேவியின் வலது தோள் விழுந்த பீடம். பீட சக்தியின் நாமம் குமாரி. அக்ஷர சக்தியின் நாமம். கண்டிதா எனும் கத்யோதிநி தேவி. இந்த அம்பிகை மும்முகங்கள், நான்கு கரங்கள் கொண்டு விளங்கு பவள். மேற்கரங்களில் திரிசூலம், கட்கம் எனும் குறுவாள், கீழ்கரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தரித்தருள்பவள். கஞ்ஜகிரீடம் எனும் வாலாட்டிக் குருவி இத்தேவியின் வாகனமாக உள்ளது. இத்தலத்தை சிவபைரவர் எனும் பைரவர் காக்கிறார். குளித்தலை அருகில் உள்ள ரத்னகிரி இந்த அக்ஷர பீடமாக உள்ளது.

 

22 - பேரின்ப வாழ்வருளும் பிரமராம்பிகை!

51 சக்தி பீடங்கள் - 22

 

ஆந்திராவில், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரமராம்பிகை ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் கழுத்தின்  கீழ்ப்பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றான சைல பீடம் இது. இத்தலம் திருப்பருப்பதம் என்றும்  வழங்கப்படுகிறது. இந்த பீடத்தின் நாயகி பிரமராம்பிகை. இறைவன் மல்லிகார்ஜுனர் என்று அழைக்கப்படுகிறார். அர்ஜுனா  எனப்படும் மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்ட புனிதத்  தலங்களில் ஒன்றாக கர்னூல் மாவட்டத்தின் தலைமருதூர்  ஸ்ரீசைலம் விளங்குகிறது. சிலாத முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இடமாதலால் ஸ்ரீசைலம் எனப்பட்டது.

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக் குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற  இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தை களைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர்  சிலகாலம்தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை  அறிந்த நந்தி, ‘தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக் குறித்துக் கடுந்தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,’ என்றார்.

தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வரமுடியாது  என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த ‘நந்தியால்’ என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது  தம்பியாகிய பர்வதனும் தவமிருந்தான். பர்வதன் கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன்மீது இருக்க வேண்டும்  என்ற வரம் பெற்றான். அதன்படி பர்வதனை ஒரு மலையாக்கி ஸ்ரீபர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக  அம்மலையின் மீது எழுந்தருளினார். அந்த ஸ்ரீபர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை  எனப் பொருள்படும்.

பரமேஸ்வரன் ஒருமுறை அர்த்தநாரீஸ்வரராக, மகரிஷி பிருங்கிக்குக் காட்சி அளித்தார். அப்போது பார்வதியைத் தவிர்த்துவிட்டு  சிவனை மட்டும் வலம்வர அவர் விரும்பினாராம். எனவே, வண்டு உருவத்துக்கு மாறி அவர்களுக்கு இடையே ஒரு துளை  போட்டு ஈசனை மட்டும் வலம் வந்தாராம். இதனால் சினம் கொண்ட பார்வதி, அந்த வண்டின் சக்தி முழுவதையும் கிரகித்துக்  கொண்டதால் முனிவர் செயலிழந்து தவித்தார். ஆனால், அவரது ஆழ்ந்த தூய ஈஸ்வர பக்தியை ஈசனிடமிருந்து கேட்ட தேவி,  பிருங்கிக்குப் புத்துயிர் அளித்தார்.

வண்டு உருவில் இருந்த மகரிஷியை ஆட்கொண்டதால், அன்னை பிரமராம்பிகை எனப் பெயர் பெற்றாள். ‘பிரமர’ என்றால்  வண்டு எனப் பொருள். மேலும், அன்னையும் அவளது பரிவார தேவதைகளும் ஒருமுறை கருவண்டுகளாக மாறி, அருணா  என்ற அசுரனின் உடல் முழுவதையும் கொட்டி சம்ஹரித்ததால் இந்தப் பெயர் பெற்றாள் என்றும் புராணங்களில்  கூறப்பட்டுள்ளது. அன்னையின் கருவறை பின்புறச் சுவரில் உள்ள துவாரத்தில் காதை வைத்துக் கவனித்தால், வண்டின்  ரீங்காரத்தை இப்போதும் கேட்கலாம்.

தேவியின் பீஜாட்சரமான ஹ்ரீம் இந்த பீடத்தில் விசேஷமாக இடம் பெற்றுள்ளது. இங்கு மல்லிகார்ஜுன சுவாமிகளின்  ஆலயத்துக்குப் பின்னால், சற்று உயரமான இன்னொரு பிராகாரம் இருக்கிறது. இந்த பிராகாரத்தில்தான் அம்மை  ஸ்ரீபிரமராம்பிகை தேவி ஆலயம் உள்ளது. ஆலயத்தின் படிக்கட்டுக்குப் பக்கத்தில் நவபிரம்மாக்கள் பிரதிஷ்டை செய்த 9  லிங்கங்கள் இருக்கின்றன. இந்தப் பிராகார நுழைவாயிலுக்கு அருகில் பிள்ளையார் அருள்கிறார். இவரையும் வணங்கிவிட்டு  உள்ளே பிரவேசிக்கிறோம்.

அடுத்து அம்பாளுடைய ஆலயமண்டபம் இருக்கிறது. இதற்கு சிம்ம மண்டபம் என்று பெயர். சிம்ம மண்டபத்தை அடுத்து சிம்ம  துவாரத்துக்கு இடப்பக்கம் சீதா ஸகஸ்ரலிங்கம் இருக்கிறது. இந்த இரண்டாவது பிராகாரத்துக்கு நடுவில்தான் பிரமராம்பிகை தேவியின் ஆலயம் உள்ளது. பிரமராம்பாள் சந்நதி 30 படிகளுக்கு மேலே அமைந்துள்ளது விசேஷமாகும். இத்தலத்திற்கு ஆதிசங்கரர் வருகை தந்து அத்வைதக் கொள்கையைப் பரப்பி சிவானந்தலஹரி பாடினார். பிரமராம்பாள் அஷ்டகத்தை அம்பிகைக்கு அர்ப் பணித்தார். இப்பீட நாயகி மல்லிகார்ஜுனருடன் பிரமராம்பாளாய் அமர்ந்திருப்பவள்.

அவளைப் போன்று அன்போடு காக்கவல்ல தெய்வம் வேறு உண்டோ? மலைவாழ் வேடனாக ஈசன் இத்தலம் வந்து வேடுவப்  பெண்ணான பார்வதியை மணந்ததால் விழாக்காலங்களில் மலைவாழ் மக்கள் இத்தல கருவறைவரை அனுமதிக்கப்படுவது  இன்றும் தொடர்கிறது. இத்தலத்தில் உபதேசிக்கப்படும் மந்திரங்கள் சர்வசித்திகளையும் தரவல்லது.

அன்னையின் சந்நதியில் ஆதிசங்கரர் நிறுவிய சக்ரத்தை நாம் தரிசிக்கலாம். அதிலிருந்து வரும் அதிர்வலைகளை உணரும்  போதே, நாம் செய்த பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. சைல கோபுர தரிசனம் பாப விமோசனம் என்பார்கள். கிழக்கே கிருஷ்ண  தேவராயர் கட்டிய கோபுரம், மேற்கே பிரம்மானந்த ராயர் கோபுரம், வடக்கே சத்ரபதி சிவாஜி கட்டிய கோபுரம், தெற்கே ஹரிஹர  ராயர் கட்டிய கோபுரம் என நான்கு திசைகளில் நான்கு கோபுர வாயில்கள் உள்ள பெருமை பெற்ற தலம் இது. ஆலயத்தின்  வெளியே கங்காதரர் ஒரு மண்டபத்திலும் சற்று தள்ளி கூரை இல்லாத மண்டபத்தில் வெயில் மழையைத் தாங்கியவாறு  ‘பைலுவீரபத்திரர்கள்’ க்ஷேத்ர பாலகர்களாக அருள்பாலிக்கிறார்கள்.

மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா, இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா  மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் ‘மல்லிகார்ஜுனர்’ எனப்படுகிறார். ஆந்திராவிலுள்ள இந்த ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலம் அர்ஜுனத் தலமாகும். மருத
மரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் மூன்று; அவை அர்ஜுனத் தலங்கள் எனப்படுகின்றன.

இத்தலம் அவற்றுள் மல்லிகார்ஜுனம் எனப்படும். பிற இரண்டும்: (1) திருவிடைமருதூர் - மத்தியார்ஜுனம், (2) திருநெல்வேலி  மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் - புடார்ஜுனம். மேதி, ரவி, ஜுவி என்னும் மூன்று  மரங்களின் சேர்க்கையே (மற்றொரு தலமரமான) திரிபலா மரம் என்பர். தத்தாத்ரேயர் இம்மரத்தடியில் தவஞ்செய்ததால் இது  தத்தாத்ரேய விருட்சம் என்றும் சொல்லப்படுகிறது. இம்மரம் விருத்த மல்லிகார்ஜுனர் கோயிலில் உள்ளது. (இங்கு கரவீரம்  என்னும் பழமையான மரமும் உள்ளது.) ஸ்ரீசைலத்துக்கு முன்னால் சாட்சி கணபதி ஆலயத்தை முதலில் அடையலாம். வருகிற  யாத்ரீகர்ளுக்குச் சாட்சியாக விளங்கும் இக்கணபதியை ஆராதித்துவிட்டுதான் மல்லிகார்ஜுனரை தரிசிக்கப் போகவேண்டும்  என்பது ஐதீகம். இங்கிருந்தே ஸ்ரீசைலம் ஆலயத்தின் கோபுரக்காட்சி மிக ரம்மியமாகத் தென்படும்.

குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதால், கங்கையில் 2000 முறை குளிப்பதால், நர்மதா நதிக்கரையில் பல  வருடங்கள் தவம் செய்வதால், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு  புண்ணியம் ஸ்ரீசைலம் பிரமராம்பிகை-மல்லிகார்ஜுனரை ஒருமுறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது.  இத்தலத்தை தரிசிக்க வரும் அன்பர்கள் தாங்கள் நினைத்த செயலை நிறைவேற்ற ஈசனும் அம்பிகையும் திருவருள்  பாலிக்கின்றனர். சக்தியைப் பணிந்தால் சர்வமும் நிச்சயம் ஈடேறும்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் பெயர் மிதிலா. தேவியின் இடது தோள் விழுந்த இடம். அக்ஷர சக்தியின் நாமம். பீட சக்தியின் நாமம் காயத்ரி தேவி  எனும் தூம்ரா தேவி. இந்த அம்பிகை நான்கு திருமுகங்கள் கொண்டவள். வலக்கரங்கள் சூலம், அக்ஷமாலை, ஸ்வருவம், வரத  முத்திரை தரிக்க, இடக்கரங்களில் புஸ்தகம், கிண்டி, கபாலம், அபய முத்திரை தரித்தவள். இத்தேவி சிங்கத்தின் மீது  ஆரோகணித்து வருபவள். இப்பீடத்தை மகோதரர் எனும் பைரவர் காவல் காக்கிறார். இத்தலம் நேபாள எல்லையில் ஜனக்பூர்  ரயில் நிலையம் அருகில் உள்ளது. ஜனக்புரியிலிருந்து 50 கி.மீ.தொலைவில் உச்சேட் என்ற பகுதி உள்ளது. சஹாரா ரயில்  நிலையம் அருகில் உள்ள உச்சேட்டிலிருந்து சுமார் 14.கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இப்பீடம். தேவி ஆலயம் உள்ள  கிராமம் வனகாம் ஹிம்ஸி என அழைக்கப்படுகிறது.

23 - ஞானமருளும் ஞானப்ரசூனாம்பிகை!


51-சக்தி பீடங்கள் - 23
சுவர்ணமுகி என்றழைக்கப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம் திருக்காளத்தி!

ராகு, கேதுவான சாயா கிரகங்களின் தீமை  அடக்கப்பட்டு, நல்ல கிரகங்களாக இங்கே நன்மை அருள்கின்றன.

ஞானம் தரும் நாயகியாக அம்மன் இங்கே அருள் பெருக்குகிறாள். ஞானப்பூங்கோதை,  ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, சிற்புட்கேசி, வண்டார் குழலாள் என்று பற்பல பெயர்களில் அழைக்கப்படும் அம்பிகையின் சந்நதி அற்புதமாகப்  பொலிகிறது. உள்ளே நுழையும் இடத்தில் உயரமான அலங்காரத் திருவிளக்கு. அடுத்து சிம்ம வாகனம். இதைத் தொட்டு வணங்கச் சொல்கிறார்கள். ஈசனின்  சந்நதியில் நந்திதேவரைத் தொடக்கூடாது. ஆனால், இந்த அம்பாள் சந்நதி சிம்மத்தைத் தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கினால், நினைத்த காரியம்  கைகூடும் என்று நம்பிக்கை.

அம்பாள் சந்நதிக்குள் நுழைகிறோம். நின்ற திருக்கோலத்தில் ஞானப்ரசூனாம்பிகை. இரண்டு திருக்கரங்கள். அம்பிகையின் இடுப்பில் ஒட்டியாணமாகக்  கட்டப்பட்டிருக்கும் கேது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை சார்த்தப்பெறுகிறது. அம்பாளுக்கு முன்னால், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த  அர்த்தமேரு. ஞானப்ரசூனாம்பிகை, ஞானமும் அறிவும் வடிவானவள். இவளை வணங்கினால், கிரக தோஷங்கள் தீரும்; அறிவு கூடும். அம்பிகை இங்கே  ஞானப்ரசூனாம்பிகை ஆனது எப்படி? கயிலாயத்தில் ஒருநாள். சிவ பஞ்சாட்சர மந்திரத்தைத் தனக்கு உபதேசிக்கும்படி, ஐயனிடம் தேவி வேண்டி நின்றாள்.   அதற்கு ஒப்புக் கொண்ட ஐயனும், அம்மையை மௌன நிலைமைக்குப் போகச்செய்தார். ஆனால், ராஜசகுணம் தலைதூக்கத் தன் பணிப்பெண் மாலினியிடம் தான்  உபதேசம் பெற இருப்பதை அம்பிகை கூறிவிட்டாள். இதனால், மானுடப் பெண்ணாகும்படி சபிக்கப்பட்டு பூமிக்கு வந்தாள்.

நாரத ரிஷி சொன்னதற்கேற்ப, ஸ்வர்ணமுகி நதி தீரத்தை அடைந்து, வாயுலிங்கத்துக்கு அருகில் அமர்ந்து தவம் புரிந்தாள். காற்றை மட்டுமே சுவாசித்து, அகன்ற  வில்வ தளங்களால் பூஜித்து, தவம் செய்தாள். தனது தவத்தைக் காக்க, துர்க்கையைக் காவல் வைத்தாள். வேண்டுமென்றே இறையனார் பிரளய வெள்ளத்தை  ஏற்படுத்த, துர்க்கை அந்த நீர் முழுவதையும் தன் உள்ளங்கையில் ஏந்திக் குடித்தாள். அம்பாள் மேலும் கடுந்தவம் புரிய, தைமாதப் பௌர்ணமி அன்று இறையனார்  பிரத்தியட்சமாகி, சாத்விக குணம் நிரம்பப் பெற்றிருந்த தன் நாயகிக்குப் பஞ்சாட்சரியை உபதேசித்தார். அம்பிகை, மானுடப் பெண்ணாக, இரண்டு கரங்களுடனே,  ஞானப்ரசூனாம்பிகா ஆனாள். ஹஸ்தஸ்த ஸாகர என்றழைக்கப்படும் துர்க்கை (பிரளய சமுத்திரத்தைக் கரத்தால் குடித்தவள்), கருமை நிறம் மாறித் தங்க நிறம்  பெற்றாள். அதனாலேயே, கனக துர்க்கா ஆனாள். சந்நதியைத் தனியாக உள்வலம் வரலாம். கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை.

சந்நதியைவிட்டு வெளியே வந்து, மீண்டும் பிராகாரத்தை அடைகிறோம். சந்நதிக்கு நேர் எதிரில், பிராகாரக் கூரையில் ராசிச் சக்கரம் ஓவியம். அம்பாள் எதிரில்  நின்று கொண்டு, அவரவர் ராசியைப் பார்த்து, அம்பாள் பாதங்களைப் பணிந்து வழிபடுதல் மரபு.  அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாக கோடிட்டுக்  காட்டப்பட்டுள்ள தரை மூலையில் மூன்று தலைகள் சேர்ந்திருக்கும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு  அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. சீகாளத்தி என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி  என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள்  சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள்.

ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத  பிரச்னையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு-கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்னையிலிருந்து விடுபடுகின்றனர். சிவனின்  உடலிலேயே பாம்பிற்கு இடமளிக்கப்பட்டுள்ளதால், ராகு - கேது தோஷம் நீங்க இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இக்கோயிலின் மற்றொரு  தனிச்சிறப்பு, பொதுவாக சூரிய, சந்திர கிரகண காலங்களில் எல்லா கோயில்களும் மூடப்படும். ஆனால், இத்திருத்தலத்தில் மட்டும்தான் அப்பொழுது சிறப்பு  பூஜைகள் செய்யப்படும். இங்குள்ள சரஸ்வதி தீர்த்த நீரை, பிறவியிலேயே பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது.  சுவாமிமீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தும் போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இக்கவசத்தில்  இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் தந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு  வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது.  கருவறை அகழி அமைப்புடையது. கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நதியில் திருநீறு தரும் மரபில்லையாம்; பச்சைக்கற்பூரத்தைப்  பன்னீர்விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தருகின்றனர். மூலவருக்கு கங்கைநீரை தவிர (சுவாமிக்கு மேலே தாராபாத்திரமுள்ளது)  வேறெதுவும் மேனியில் படக்கூடாது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே. இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசாத்தும் வழக்கமில்லை;  காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.

தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தினுள்  பிரவேசிப்பதே முக்தி எனப் படுகிறது.

சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா - கூடூர் ரயில் மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து  110 கி.மீ. தொலைவிலும் உள்ள சிறந்த தலம்.

24 - மகோன்னத வாழ்வருளும் மாணிக்காம்பாள்!

51 சக்தி பீடங்கள் - 24

ராஜமகேந்திரம் எனும் ஊர் தற்போது ராஜமுந்திரி என வழங்கப்படுகிறது. சென்னையிலிருந்து விஜயவாடாவைக் கடந்து எழுநூறு கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த இடத்தில்தான் அம்பிகையின் மாணிக்க சக்திபீடமான திராக்ஷாராமா உள்ளது.  இத்தலத்தை தக்ஷிணகாசி என்றும் வழங்குவர். ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திராக்ஷாராமம் மூன்றையும் த்ரிலிங்கதேசம் என அழைப்பர். காசியைப் போலவே இங்கும் சாட்சி கணபதி அருள்கிறார். நர்த்தன கணபதியும் இத்தலத்தில் திருவருட்பாலிக்கிறார். இத்தல க்ஷேத்ர மூர்த்தியாக லக்ஷ்மி நரசிம்மர் திருவருள்பாலிப்பதால் இங்கு தினமும் திருமணங்கள் நடைபெற்றுகொண்டிருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது. பிராகாரம் திரும்பும் இடத்தில் உள்ள சிறிய கோயில் செங்குஸ்தானம் என வழங்கப்படுகிறது. இது தேவர்களால் கட்டப்பட்டது. கலியுகத்தின் முடிவிலே மனிதன் கட்டை விரல் உயரம்தான் இருப்பான் என்கிறது புராணம்;

அப்போது அவர்களும் தரிசிக்கும் வண்ணம் இந்த செங்குஸ்தானம் ஆலயங்களுக்குரிய அத்தனை அம்சங்களோடும் கட்டப்பட்டுள்ளது. மேலும் இத்தலத்தில் சனிபகவானின் தந்தையாரான சூரியபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் உள்ளது. அவரை வணங்க சகலவித சனி தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். வியாஸ முனிவரால் உருவான ஆலயம் எனும் பெருமை உடையது இத்தலம். பல அற்புதமான சந்நதிகள் உள்ளன. அஷ்டதிக்பாலகர்கள் எட்டுத்திக்குகளிலும் அருள நடுவில் நான்முகன் எழுந்தருளியுள்ள அற்புத சந்நதியும் உண்டு. இத்தல நாயகனான ஈசன் மிக உயர்ந்த லிங்கமூர்த்தமாக, லைம் ஸ்டோன் எனப்படும் கல்லால் உருவானவர். மஞ்சளும், வெள்ளையுமாக ஜொலிக்கிறார். 15 அடி உயர மூர்த்தி இவர். அவரின் வலப்புறம் பத்ரகாளியும், இடப்புறம் அனுமனும் சந்நதி கொண்டுள்ளனர். அசோக வனத்தில் சீதாபிராட்டியை அனுமன் சந்தித்தது செவ்வாய்க்கிழமையன்று என்கிறது ராமாயணம். அதனால் இந்த அனுமனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வெற்றிலைமாலை சாத்தி வடைமாலைபோட்டு பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

இவரையும் ஈசனையும் தரிசித்தால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் சங்கல்ப ஸித்தி தலம் என்றும் போற்றப்படுகிறது. ஒரு பிராகாரத்தில் இருட்டு மூலை எனும் இருட்டுக் கோயிலும் இத்தலத்தில் உண்டு. அடுத்து நாம் தரிசிப்பது சக்திபீட நாயகியான மாணிக்காம்பாள். பிற கோயில்களில் ஸ்ரீசக்ரம் இறைவியின் முன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இங்கோ தேவி ஸ்ரீசக்ரத்தின் மீதே நின்று அருட்பாலிக்கிறாள். காஞ்சி காமாட்சியன்னையைப்போலவே முன்பு இந்த மாணிக்காம்பாள் மிகவும் உக்ரமாக இருந்தாளாம். என்ன காரணம்? தான் மேற்கொண்ட யாகத்திற்கு ஈசனை அழைக்கவில்லை தட்சன். அதனால் நியாயம் கேட்க தாட்சாயணி தட்சனிடம் வந்தாள். அவளை அவமானப்படுத்தினான் தட்சன். அதனால் மனம் நொந்த தாட்சாயணி அந்த யாக குண்டத்திலேயே குதித்து உயிர்நீத்தாள். அதனால் கோபமடைந்த ஈசன் தேவியின் சடலத்தை தோள் மீது சுமந்துகொண்டு உக்ரதாண்டவம் ஆட திருமால் தன் சக்ராயுதத்தால் தேவியின் உடலை கூறுகளாக்கி பூமியில் விழச்செய்து சக்தி பீடங்களாக்கினார்.

இந்த திராக்ஷாராமமும் தேவியின் சக்திபீடங்களுள் ஒன்று. அது மட்டுமல்ல அஷ்டசதச பீடங்கள் எனப்படும் பதினெட்டு பீடங்களுள் ஒன்று எனும் பெருமை பெற்றது. ‘மாணிக்ய தக்ஷ வாடிகா’ என இத்தலத்தை அழைப்பதுண்டு.  நம் உடலில் உள்ள பல சக்ரங்களில் மணிபூரக சக்ரத்தின் நாயகியாக மாணிக்காம்பாள் கூறப்பட்டுள்ளாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்து அம்பிகையின் கண்கள் மட்டும் பக்கவாட்டில் பார்ப்பது போன்ற அமைப்பில் மாற்றினாராம். அதனால் தேவி உக்ரம் தணிந்து சாந்த வடிவினளாக ஆனாள் என்கிறது தலபுராணம். கண்களை கண்மலர் கொண்டு அலங்கரித்திருக்கின்றனர். தட்சயாகம் நடந்த இடம் ஆலயத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. தேவி உக்ரமாக தோன்றிய காரணமும் அதுதான்.  தட்ச யாகம் நடந்த இடத்தில் ஒரு குட்டை உள்ளது. அதன் அருகில் தாட்சாயணி சிறிய சந்நதி கொண்டுள்ளாள். இப்பகுதி மக்கள் இவளை போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள், குங்குமம், சந்தனம், இட்டு பூ தூவி அர்ச்சிப்பர்.

இத்தேவி ஸ்ரீசக்ரத்தின்மீதே நின்றருள்வது சிறப்பான அமைப்பாகக் கருதப்படுகிறது. இத் தலத்தில் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் அம்பிகைக்கும் ஸ்ரீசக்ரத்திற்கும் சேர்த்தே செய்யப்படுவது மிகவும் விசேஷம். வர்ணனைக்கு எட்டாத தேவி இவள் என்பதை ‘நித்யக்லின்னா’ எனும் லலிதா ஸஹஸ்ர நாமம்(388), தயையால் நனைந்த இதயம் கொண்டவள் என போற்றுகிறது. அப்படிப்பட்ட தேவியின் கடைக்கண்பார்வை நம் ஆசைகளை நிறைவேற்றுவதாக அமைகிறது. தேவியை வழிபட லக்ஷ்மி கடாக்ஷம், சரஸ்வதியின் வித்யாஞானம் இரண்டையும் அடையலாம். ‘ஸசாமர ரமாவாணி ஸவ்யதக்ஷிணஸேவிதா’ எனறு லலிதா ஸஹஸ்ரநாமமும் கூறுகிறது. மேலும் ‘வக்த்ரலக்ஷ்மி பரிவாஹ ஸலன்மீனாபலோசனா’ என்றும் போற்றுகிறது. அதாவது, சுபவிசேஷம் நடக்கும்போது விட்டு வாயிலிலே தொங்கவிடப்படும் மாவிலைத் தோரணங்கள் வீட்டிற்கு வருபவர்களை ‘வா, வா’ என்று அழைப்பதுபோல் தேவியின் புருவங்கள் நம்மை அழைத்து லக்ஷ்மி சம்பத்துகளைக் கொடுக்கும் என்கிறது. அவ்வளவு மகிமை வாய்ந்த தேவி மாணிக்காம்பாளின் நயனங்கள், நலங்கள் பலவற்றை நமக்கு அளிக்கட்டும்.

அக்ஷர சக்தி பீடங்கள்!

பீடத்தின் பெயர் ஜாலந்தரம். தேவியின் இடது ஸ்தனம் விழுந்த இடம். பீட சக்தியின் நாமம் த்ரிபுரமாலினி. அக்ஷர சக்தியின் நாமம். ங (   ). அக்ஷர தேவியின் நாமம் அருந்ததி சக்தி எனும் டார்ணா தேவி. ரக்த வர்ணத்தினள். ஆறுமுகங்கள் கொண்டவள். திருக்கரங்களில் அம்பு, வில், கேடயம், கத்தி, அபய-வரத முத்திரைகளுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வருபவள். பீடசக்தியின் நாமம் திரிபுரமாலினி. இப்பீடத்தை பீஷணர் எனும் பைரவர் காக்கிறார். ஜலந்தரில் உள்ள விஷ்வமுகி ஆலயமே இப்பீட நாயகி அருட்பாலிக்கும் இடமாகும்.




 

25 - வளமான வாழ்வருளும் வைஷ்ணவி தேவி!

51 சக்தி பீடங்கள் - 25
தவயோகிகளும், சித்தபுருஷர்களும் குடிபுகும் சித்தபீடம் காஷ்மீரம். இமயமலைச்சாரலில் தென்னாடுடைய சிவனே குடிபுகுந்தான் - தவம்புரிய, தவம் செய்பவர்களுக்கு அருள்பாலிக்க சங்கரர், ராமானுஜர் முதலான பரமாச்சாரியர்கள்கூட தம் தர்ம சித்தாந்தங்களை நிலைநாட்ட காஷ்மீரத்தை உயரிய ஞானபீடமாகக் கருதி வந்தார்கள். அப்பிரதேசத்தில் பல தெய்வத் திருக்கோயில்கள் இன்றும் மகிமையோடு விளங்கிவருகின்றன. அவற்றில் தலையாயது, வைஷ்ணவி பகவதி என்று போற்றப்பெறும் வைஷ்ணோதேவி ஆலயம். தேவியின் 51 தலையாய சக்திபீடங்களுள் இப்பீடம் வைஷ்ணவி பீடமாக திருவருட்பாலிக்கிறது. காஷ்மீரம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை ஜம்மு, கச்மீர், லத்தாக். ஜம்மு பகுதியில்தான் புராதனமான இந்து ஆலயங்கள் அதிகம். சுத்த மகாதேவர், கெளரிகுண்டம், சுயம்பு பரமசிவன், சுதாதரர், அமரநாதர் - இப்படிப் பல தெய்வங்களுக்கான திருக்கோயில்கள் பிரபலமானவை.

மலைப்பாங்கான பகுதியில் குகைக்குள் அமைந்திருக்கிறது வைஷ்ணவி தேவியின் சித்த பீடம் எனும் திருக்கோயில். இந்த பகுதி, இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான இடம். ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தகோடிகளும் இங்கு ஆண்டுதோறும் வந்துபோகிறார்கள். தெய்வபக்தி இல்லாதவர்கள்கூட இப்பகுதிக்கு வந்ததும், இயற்கையின் தெய்வீகப் பொலிவைக் கண்டு பக்தி பரவசத்துடன் மெய்சிலிர்த்துப் போகிறார்கள். பக்தர்கள் பெறும் பரமானந்தம், சொல்லில் அடங்காது. அன்னையின் ‘தர்பார்’ அப்பகுதி முழுவதும் தெய்வீகப் பொலிவு மிளிர வியாபித்திருப்பதைக் காண்கிறோம். 1947ம் ஆண்டு வரை பக்கத்து மாநிலங்களிலிருந்துதான் இத்தலத்திற்கு பக்தர்கள் வந்து கொண்டிருந்தார்கள். பிறகு இத் திருத்தலத்தின் பெருமை பாரதமெங்கும் பரவியதால், எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து குவிகிறார்கள். டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டும், பனிமழை காரணமாக அதிகக் கூட்டம் இருக்காது. மற்ற மாதங்களில் ‘ஜெய் மாதாஜி!’ என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் கூட்டம் பெருகிவரும்.

மகாவிஷ்ணுவின் சக்தி சொரூபமாக ஆவிர்ப்பவித்த அருள்தான் வைஷ்ணவி தேவி. இமயமலைச் சாரலில் குகைக்குள் திருக்கோயில் கொண்டிருக்கிறாள் அவள். இயற்கையின் புனிதமான பனிபடர்ந்த சூழலில் அமைந்திருக்கும் திருச்சந்நதியில் வைஷ்ணவி தேவிக்கு இருமருங்கிலும் மகாகாளியும் - மகாசரஸ்வதியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க கொலுவீற்றிருக்கிறார்கள். ஜீவராசிகளின் இயக்கத்திற்கே ஆதாரசக்திகளான இம்மூன்று மகாதேவிகளின் ஒருமித்த சாந்நித்தியம் அருள்பொங்கும் திவ்யதிருக்கோலமதை இந்த சக்திபீடத்தில் அனுபவிக்கலாம். வைஷ்ணவி தேவியின் சந்நதிக்கு குகை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்தப் பாதையில் வைஷ்ணவி தேவியின் திருப்பாதங்களைத் திருமஞ்சனம் செய்தபடி கங்கை பிரவாகிக்கிறாள். பக்தர்கள் புனித கங்கையில் நீராடியவாறே அன்னையின் அருள் பெற மெல்ல முன்னேறிச் செல்லேவண்டும். முன்பெல்லாம் திரும்பி வருவதற்கும் இதுதான் வழியாக இருந்தது.

இப்பொழுது திரும்பிவர வேறு வழிப்பாதையை ஆலய நிர்வாகம் அமைத்துத் தந்திருக்கிறது. எல்லா பிரபல திருக்கோயில்களுக்குமே தலவரலாறு உண்டு. வைஷ்ணவிதேவி கோயிலும் இதற்கு விதிவிலக்கல்ல... பக்கத்திலுள்ள சிறுநகரமான கட்டா பகுதியில் ஹம்ஸாவி என்று ஒரு கிராமம். இங்கு ஸ்ரீதரபண்டிதர் எனும் பரமபக்தர் வாழ்ந்திருந்தார். தீவிர தேவிஉபாசகர். ஒருநாள் அவர் கனவில் வைஷ்ணவி தேவி தோன்றி, ‘‘என்னை மலைக் குகைக்குள் வந்து தரிசித்து அருள்பெறுவாயாக!’’ என்று சொன்னாள். மலைக்குகையைத் தேடி அலைந்தார் ஸ்ரீதரபண்டிதர். ஒருநாள் ஆடுகளை மேய்த்துக் ெகாண்டிருந்த இடைப்பிள்ளைகள் ஒரு குகைக்குள்ளிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள், ‘‘பல மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மிக அழகான சிறுமி சர்வாலங்கார பூஷிதையாய் துள்ளி விளையாடிக் ெகாண்டிருந்தாள். நாங்கள் அவளைக் காண அருகில் சென்றோம்.

உடனே மாயமாய் மறைந்துவிட்டாள். நாங்கள் ஏக்கத்துடன் அவளைப் போற்றிப் பாடிக் கொண்டிருந்தோம். ஒருநாள் இந்தக் குகைக்குள் நுழைந்து சென்றாள். நாங்களும் பின்தொடர்ந்தோம். அந்தத் தெய்வீகப் பெண் அமர்ந்திருந்த இடத்தில் பிறகு இந்த அம்மன் சிலை இருந்தது. நாங்கள் தினமும் இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம்’’ என்றார்கள். ஸ்ரீதரபண்டிதர் அகம் மகிழ்ந்தார். கனவில் தோன்றிய தேவியின் திருவுருவம் எதிரே காட்சி அளித்தது. ஆதிமகாசக்தியின் வடிவமான வைஷ்ணவி சக்தியின் திருமூர்த்தம் என்பதை உணர்ந்தார். தினமும் வந்து பூஜை, புனஸ்காரம், நிவேதனம் என்று முறையாக வழிபாடுகளைச் செய்துவந்தார். அவருடன் சில பக்தர்களும் வரத் தொடங்கினார்கள்.

பிறகு இத் தேவியின் மகிமை பிரகாசிக்கத் தொடங்கவே, அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் தேவியைத் தரிசிக்க வந்தார்கள். ஸ்ரீதரபண்டிதரின் காலம் கி.பி. 1725. அப்போது காஷ்மீரத்தை ரணஜித்தேவர் எனும் அரசர் ஆட்சிபுரிந்து வந்தார். இம் மன்னவரும் வைஷ்ணவி தேவியின் பக்தரானார். திருக்கோயிலை உருவாக்கியவர் இவர்தான். ஸ்ரீதரபண்டிதர் முதல்முறையாக வைஷ்ணவி தேவியை தரிசித்த இடத்தை நுழைவாயிலாக அமைத்திருக்கிறார்கள். இதை ‘தர்சனீ தர்வாஜா’ என்று அழைக்கிறார்கள். இங்கிருந்து மும்முடிச் சிகரமாகத் திகழும் இமயமலையைத் தரிசிப்பது பரவசமூட்டும் திவ்ய அனுபவம். இப்பகுதிக்கு ‘த்ரிகூடம்’ என்று பெயர். சீக்கிய மதகுரு கோவிந்தசிங் இங்கு தரிசனத்திற்காக வருவது வழக்கமாம்.

வைஷ்ணவி தேவியின் அருளுக்காக இங்கு தவமிருக்கும் மகான்கள் எத்தனையோபேர்! வைஷ்ணவி தேவியின் அவதாரம் குறித்து இப்படி ஒரு கதை வழங்கப்படுகிறது: ரத்னாசாகரர் எனும் மகாபுருஷருக்கு ஒரு பெண் பிறந்தாள். இளம் பிராயத்திலிருந்தே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் தீவிரபக்தி கொண்டிருந்தாள். திருமணப்பிராயம் வந்தபோது ‘ஸ்ரீராமபிரானைத் தவிர, வேறு எவரையும் கணவராக வரிக்கமாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு தவம் புரியத் தொடங்கினாள். ஸ்ரீராமர் வனவாசம் புரிந்து கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்தார். ஒரு பெண் தம்மையே வரிக்கத் தவமிருப்பதை அறிந்து அவள் இல்லத்திற்கு எழுந்தருளினார். அப்பெண்ணுக்கு அறிவுறுத்தி, அவளது சங்கல்பத்தை மாற்ற முயன்றார். ‘‘எனக்குத் திருமணமாகி விட்டது. நான் ஏகபத்தினிவிரதன். என்னை மறந்துவிடு’’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் பயனில்லை.

அவள் பக்திக்குப் பணிந்த  ஸ்ரீராமபிரான் வரமளித்தார்: ‘‘அடுத்த அவதாரத்தில் உன்னை என் தேவியாக ஏற்றுக் கொள்கிறேன். அதுவரையில் ‘வைஷ்ணவி பகவதி’யாக நீ தவம் புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பாயாக.’’ தெய்வீகப் பெண் மகிழ்ச்சியுடன் இந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டாள். தவவலிமையால் மூன்று மகாதேவிகளின் சொரூபமாக மாறினாள். இன்றும் அதே திருக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறாள் என்று வேறு ஒரு தலபுராணமும் இத்தலத்திற்கு உண்டு. ஜம்மு நகரிலிருந்து நிறைய பஸ், கார் வசதிகள் உள்ளன. வழியில் முக்கிய இடங்களில் தங்குவதற்கு தர்ம சாலைகள் இருக்கின்றன.
ஜம்முவிலிருந்து 75 கி.மீ., கட்டா, அங்கிருந்து 18 கி.மீ. நடந்து சென்று  வைஷ்ணவி தேவியின் குகைக்கோயிலை அடையலாம்.

மட்ட குதிரைகள் மீதமர்ந்தும் பயணப்படலாம். நடந்து சென்றால், இயற்கையின் தெய்வீகப் பொலிவை - கண்கொள்ளா எழில் காட்சிகளைத் தரிசித்துக் கொண்டே செல்லலாம். குகைக்கு அருகிலும் தர்மசாலைகள்,  உண்டி கொடுத்து, உறங்க இடம் கொடுத்து அன்புடன் உபசரிக்கக் காத்திருக்கின்றன. அன்பும், பண்பும், எளிமையும் கொண்ட கிராம மக்கள் யாத்திரிகர்களுக்கு உதவக் காத்திருக்கிறார்கள். வேறு மதத்தினரும் வைஷ்ணதேவியைத் தரிசிக்க வருகிறார்கள். ‘ஜெய் மாதாஜி, வைஷ்ணோதேவி!’ எனும் பக்தி கோஷம் அம்மலைப் பகுதிகளில் தொடர்ந்து எதிரொலித்துக்கொண்டிருப்பதே வைஷ்ணவி தேவியின் மகத்தான சாந்நிந்தியத்திற்குக் கட்டியம் கூறுவதுபோல் இருக்கிறது.