Tuesday 8 November 2016

பஞ்சாரண்ய திருத்தலங்கள்!

பாவங்கள் போக்கும் பஞ்சாரண்ய திருத்தலங்களுள் ஒன்று திருக்கொள்ளம்புதூர் எனப்படும் வில்வவனம். மற்றவை திருக்கருகாவூர் எனப்படும் பாதிரிவனம்; அவனியநல்லூர் என்ற முல்லைவனம்; அரித்துவாரமங்கலம் என்னும் வன்னிவனம்; திருஇரும்பூளை என்னும் ஆலங்குடி. இவை ஐந்தும் தொன்மையான தலங்களாகும்.மேற்கண்ட தலங்களனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த காலபூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், இந்த ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.பஞ்சாரண்ய தலங்களில் முதல் தலம் திருக்கருகாவூர். இது தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலிருந்து தெற்கே ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. வாகன வசதிகள் உள்ளன. விடியற்காலையில் தரிசிக்கவேண்டிய தலமாகும். சோழ நாட்டில் போர் நடந்தபோது கர்ப்பிணிப் பெண்கள் திருக்கருகாவூருக்கு அனுப்பி பாதுகாக்கப்பட்டார்கள் என்பது வரலாறு.இங்குள்ள சிவலிங்கத்திருமேனி சுயம்புலிங்கம். முன்பு இப்பகுதி முல்லைக்காடாக இருந்தபோது, லிங்கத்திருமேனியின்மீது முல்லைக்கொடிகள் படர்ந்திருந்தன. அதனால் ஏற்பட்ட தழும்பினை லிங்கத்திருமேனியில் இப்போதும் காணலாம். இந்தச் சுயம்புமூர்த்திக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது.கௌதமர், கார்கேய முனிவர்கள் இங்கு தவம் செய்தபோது, அவர்களுக்கு நித்ருவர் என்ற சிவபக்தரும், அவருடைய மனைவி வேதிகையும் பணிவிடை செய்துவந்தனர். பிள்ளைப்பேறு இல்லாத அவர்களின் ஏக்கத்தை அறிந்த முனிவர்கள், இறைவன் முல்லைநாதரையும் இறைவியையும் வேண்டிக்கொள்ளுமாறு உபதேசம் செய்தார்கள். அதன் பலனால் வேதிகை கருவுற்றாள்.
ஒருசமயம், வேதிகையின் கணவர் வெளியே சென்றிருந்த போது, கர்ப்பிணியான வேதிகை மயக்கநிலையில் சோர்ந்து படுத்திருந்தாள். அந்த வேளையில் ஊர்த்துவபாதர் எனும் முனிவர் அங்குவந்து பிட்சை கேட்க, மயக்கநிலையிலிருந்த வேதிகையால் எழுந்து பிட்சையிட முடியாமல்போனது. அதனால் கோபமடைந்த முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வருந்திய அவள் அம்பாளிடம் கதறியழுதாள். உடனே தேவியானவள் கர்ப்பரட்சகியாகத் தோன்றி, சிதைந்த கருவை ஒரு குடத்திலிட்டுப் பாதுகாத்து, பத்து மாதம் கழித்து "நைநுருவன்' எனும் குழந்தையாக அவளிடம் கொடுத்தருளினாள். மகிழ்ச்சியடைந்த வேதிகை தன்னைப்போல மற்றவர்களையும் காத்தருளவேண்டுமென்று தேவியிடம் வேண்டினாள். அன்னையும் இசைவுதந்தாள். அன்றிலிருந்து இந்த அன்னை கர்ப்பத்தை ரட்சிக்கும் அன்னையாக ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை என்று போற்றப்படுகிறாள். இந்த அம்பிகையை வேண்டிட, குழந்தைச் செல்வம் கிட்டும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவமும் நடைபெறும். உஷத் காலமாகிய காலை 5.00 மணிமுதல் 6.00 மணிக்குள் இத்தல இறைவனையும் இறைவியையும் தரிசிக்கவேண்டும்.அடுத்து, பஞ்சாரண்ய தலங்களில் இரண்டாவதான அவனியநல்லூர் செல்லவேண்டும். அங்கு காலை 8.30 மணிமுதல் 9.30 மணிக்குள் சௌந்தரநாயகி சமேத பாதிரிவனேஸ்வரரை தரிசிக்கவேண்டும். இத்தல இறைவன், இறைவியை வழிபட கண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பார்வை நன்கு தெரியும். தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் இக்கோவில் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன. இத்தல இறைவன் பாதிரி மரத்தடியில் சுயம்புமூர்த்தியாக விளங்கியதால், பாதிரி மரமே இத்தல விருட்சமாகக் கருதப்படுகிறது.பஞ்சாரண்ய திருத்தலங்களில் மூன்றாவது தலம் அரித்துவாரமங்கலம். கும்பகோணத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. உச்சிக்காலமாகிய காலை 11.00 மணிமுதல் 12.30 மணிவரை இத்தல இறைவனை வழிபடவேண்டும். இறைவன் ஸ்ரீபாதாளேஸ்வரர்; இறைவி அலங்கார அம்மை. கருவறையில் லிங்கத்திருமேனியின்முன் பெரியபள்ளம் இருக்கிறது. பள்ளத்தை பாழி என்றும் சொல்வர். இத்தலத்திற்கு திரு அரதைப் பெரும்பாழி என்ற பெயரும் உண்டு.இத்தலத்தில் இறைவனின் திருவடியைக் காண திருமால் பன்றியாகத் தோன்றி பாதாளத்தை ஏற்படுத்தினார் என்றும்; இறைவன் அந்த பள்ளத்தை கல்லால் மூடினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட, மனஆழத்தில் பதிந்திருக்கும் கவலைகள், குழப்பங்கள், மனஅழுத்தம் ஆகியவை நீங்குமென்பது ஐதீகம்.
அடுத்து தரிசிக்கவேண்டிய தலம் ஆலங்குடி. இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர்; இறைவி ஏலவார்குழலி. நவகிரகத் தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில், நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது, துர்வாச ரிஷி சிவபூஜை பிரசாதமாகிய மாலையைக் கொண்டுவருகையில், வழியில் இந்திரனைக் கண்டு அவனிடம் கொடுத்தார். அதை இந்திரன் அலட்சியமாக வாங்கி யானைத்தலையில் வைத்தான். அது அந்த மாலையைக் கீழேபோட்டு காலால் மிதித்து நாசமாக்கியது. இதனைக் கண்ட துர்வாசர் கோபம் கொண்டு, ""உன் பதவி, செல்வம் எல்லாம் அழியட்டும்'' என்று சாபமிட்டார். முனிவரின் சாபம் உடனே பலித்தது. அவன் அமர்ந்திருந்த ஐராவதம் யானை மறைந்தது. பிச்சைக்காரன்போல் நடுவீதியில் நின்றான் இந்திரன். பின்னர் தன் தவறை உணர்ந்து வருந்தி, இத்தல இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகிறது.இத்தல இறைவனை மாலை நேர பூஜையில் தரிசித்தால் குரு தோஷம் நீங்கும். குருவின் திருவருளால் வேண்டியது கிட்டும். மேலும், தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் விசேஷமானதால், வியாழக்கிழமைதோறும் வழிபட தடைகள் நீங்கி, விரைவில் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். நல்ல பதவிகிட்டும்; கல்வியில் சிறந்து விளங்கலாம்.ஐந்தாவதாக தரிசிக்கவேண்டிய திருத்தலம் திருக்கொள்ளம்புதூர். இது தீபாவளித் திருநாளுடன் தொடர்புடையது. தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் கொரடாச்சேரிக்கு அருகில் இத்தலம் உள்ளது. இறைவன் வில்வவனேஸ்வரர்; அம்பாள் சௌந்தராம்பிகை. இங்கு அர்த்தஜாம வழிபாடு புகழ்பெற்றது. இத்தலத்தின் மேற்கில் அகத்திய காவேரி என்கிற வெட்டாறு ஓடுகிறது. இதற்கு முள்ளியாறு என்ற பெயரும் உண்டு. ஓடம்போக்கி ஆறு என்று உள்ளூர் மக்கள் அழைப்பர். இத்தலத்தில்தான் இறைவன் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கி அருள்புரிந்தார் என்று புராணம் கூறுகிறது.கொள்ளாம்புதூர் ஆலயத்தில், தீபாவளித் திருநாளன்று நள்ளிரவில் நடைபெறவேண்டிய அர்த்தஜாம பூஜை அதற்கு அடுத்த நாள் காலையில் நடைபெறுகிறது. இதற்குக் காரணமானவர் திருஞானசம்பந்தர்.திருக்கருகாவூரில் உஷத்காலபூஜை, அவனியநல்லூரில் காலசந்தி, அரித்துவார மங்கலத்தில் உச்சிக்காலபூஜை, ஆலங்குடியில் சாயரட்ச பூஜை என்று கலந்துகொண்டு, திருக்கொள்ளம்புதூர் சென்று அர்த்தஜாம பூஜையில் கலந்துகொள்ள விரும்பினார் திருஞானசம்பந்தர்.அன்று ஐப்பசி மாத அமாவாசை தீபாவளி தினம். இருள்சூழ்ந்த அந்த வேளையில் தம் அடியார்களுடன் புறப்பட்டார் திருஞானசம்பந்தர். வழியில் முள்ளியாற்றைக் கடந்து செல்லவேண்டும். ஆனால் ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தருடன் வந்த சீடர்கள் எல்லாம் வெள்ளத்தைக் கண்டு அஞ்சினர். பூஜை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் படகுகள் இருந்தாலும் துடுப்புகள் இல்லை.ஞானசம்பந்தர் துணிச்சலுடன் படகை அவிழ்த்து ஏறியமர்ந்து, சீடர்களையும் அழைத்தார். வெள்ளத்தையும் திக்கு திசை அறியமுடியாத அமாவாசை இருளையும் கண்டு சீடர்கள் தயங்கினர். உடனே சம்பந்தர் திருப்பதிகம் பாட, அவர்கள் தைரியம் பெற்று ஓடத்தில் அமர்ந்தனர். ஓடம் நீரில் இப்படியும் அப்படியும் அசைந்துகொண்டிருந்தது. துடுப்பில்லாமல் எப்படி ஓடத்தை சரியாக செலுத்தமுடியும் என்று சீடர்கள் யோசித்தனர். அப்போது சம்பந்தர், "கொட்டமே கமழும்' என்ற பதிகத்தைப் பாடினார். இறையருளால் ஓடம் அமைதியாக நகர்ந்துகொண்டிருந்தது.திருக்கொள்ளம்புதூர் கோவில் அர்ச் சகர்கள், திருஞானசம்பந்தர் வருகையை முன்னரே அறிந்திருந்ததால் அவரை வரவேற்க கோவில் வாசலில் காத்திருந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. அர்த்தஜாம பூஜைக்கான நேரம் கடந்துவிட்டது. சம்பந்தர் வராதால் அர்ச்சகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். சிறிது நேரத்தில் சூரியன் உதித்துவிடுமே என்று வருந்தினார்கள். அதேபோல் அதிகாலை நேரத்தில் சீடர் களுடன் திருஞானசம்பந்தர் கோவிலுக்கு வந்தார். அவருக்காக அர்த்தஜாம பூஜை உஷத்காலத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வு இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஐப்பசி அமாவாசையன்று துவங்கும் தீபாவளித் திருவிழா மறுநாளும் நீடிக்கப் படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வருகைதந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் ஓடத்திருநாள் கொண்டாடப்படுகிறது.மேலும், இத்தலத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், இந்த ஊரில் இறப்பவர்களுக்கு சிவபெருமான் பஞ்சாட்சார மந்திரத்தை வலது செவியில் தாமே ஓதி முக்தியளிப்பதாக ஐதீகம்.பஞ்சாரண்ய திருத்தலங்களை ஒரே நாளில் தரிசித்தால் முற்பிறவிப் பாவங்கள், வினைகள், இப்பிறவி தோஷங்கள் அனைத் தும் விலகுமென்பது ஐதீகம்.
 

No comments:

Post a Comment