Friday 4 November 2016

24 - மகோன்னத வாழ்வருளும் மாணிக்காம்பாள்!

51 சக்தி பீடங்கள் - 24

ராஜமகேந்திரம் எனும் ஊர் தற்போது ராஜமுந்திரி என வழங்கப்படுகிறது. சென்னையிலிருந்து விஜயவாடாவைக் கடந்து எழுநூறு கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த இடத்தில்தான் அம்பிகையின் மாணிக்க சக்திபீடமான திராக்ஷாராமா உள்ளது.  இத்தலத்தை தக்ஷிணகாசி என்றும் வழங்குவர். ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திராக்ஷாராமம் மூன்றையும் த்ரிலிங்கதேசம் என அழைப்பர். காசியைப் போலவே இங்கும் சாட்சி கணபதி அருள்கிறார். நர்த்தன கணபதியும் இத்தலத்தில் திருவருட்பாலிக்கிறார். இத்தல க்ஷேத்ர மூர்த்தியாக லக்ஷ்மி நரசிம்மர் திருவருள்பாலிப்பதால் இங்கு தினமும் திருமணங்கள் நடைபெற்றுகொண்டிருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது. பிராகாரம் திரும்பும் இடத்தில் உள்ள சிறிய கோயில் செங்குஸ்தானம் என வழங்கப்படுகிறது. இது தேவர்களால் கட்டப்பட்டது. கலியுகத்தின் முடிவிலே மனிதன் கட்டை விரல் உயரம்தான் இருப்பான் என்கிறது புராணம்;

அப்போது அவர்களும் தரிசிக்கும் வண்ணம் இந்த செங்குஸ்தானம் ஆலயங்களுக்குரிய அத்தனை அம்சங்களோடும் கட்டப்பட்டுள்ளது. மேலும் இத்தலத்தில் சனிபகவானின் தந்தையாரான சூரியபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் உள்ளது. அவரை வணங்க சகலவித சனி தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். வியாஸ முனிவரால் உருவான ஆலயம் எனும் பெருமை உடையது இத்தலம். பல அற்புதமான சந்நதிகள் உள்ளன. அஷ்டதிக்பாலகர்கள் எட்டுத்திக்குகளிலும் அருள நடுவில் நான்முகன் எழுந்தருளியுள்ள அற்புத சந்நதியும் உண்டு. இத்தல நாயகனான ஈசன் மிக உயர்ந்த லிங்கமூர்த்தமாக, லைம் ஸ்டோன் எனப்படும் கல்லால் உருவானவர். மஞ்சளும், வெள்ளையுமாக ஜொலிக்கிறார். 15 அடி உயர மூர்த்தி இவர். அவரின் வலப்புறம் பத்ரகாளியும், இடப்புறம் அனுமனும் சந்நதி கொண்டுள்ளனர். அசோக வனத்தில் சீதாபிராட்டியை அனுமன் சந்தித்தது செவ்வாய்க்கிழமையன்று என்கிறது ராமாயணம். அதனால் இந்த அனுமனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வெற்றிலைமாலை சாத்தி வடைமாலைபோட்டு பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

இவரையும் ஈசனையும் தரிசித்தால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் சங்கல்ப ஸித்தி தலம் என்றும் போற்றப்படுகிறது. ஒரு பிராகாரத்தில் இருட்டு மூலை எனும் இருட்டுக் கோயிலும் இத்தலத்தில் உண்டு. அடுத்து நாம் தரிசிப்பது சக்திபீட நாயகியான மாணிக்காம்பாள். பிற கோயில்களில் ஸ்ரீசக்ரம் இறைவியின் முன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இங்கோ தேவி ஸ்ரீசக்ரத்தின் மீதே நின்று அருட்பாலிக்கிறாள். காஞ்சி காமாட்சியன்னையைப்போலவே முன்பு இந்த மாணிக்காம்பாள் மிகவும் உக்ரமாக இருந்தாளாம். என்ன காரணம்? தான் மேற்கொண்ட யாகத்திற்கு ஈசனை அழைக்கவில்லை தட்சன். அதனால் நியாயம் கேட்க தாட்சாயணி தட்சனிடம் வந்தாள். அவளை அவமானப்படுத்தினான் தட்சன். அதனால் மனம் நொந்த தாட்சாயணி அந்த யாக குண்டத்திலேயே குதித்து உயிர்நீத்தாள். அதனால் கோபமடைந்த ஈசன் தேவியின் சடலத்தை தோள் மீது சுமந்துகொண்டு உக்ரதாண்டவம் ஆட திருமால் தன் சக்ராயுதத்தால் தேவியின் உடலை கூறுகளாக்கி பூமியில் விழச்செய்து சக்தி பீடங்களாக்கினார்.

இந்த திராக்ஷாராமமும் தேவியின் சக்திபீடங்களுள் ஒன்று. அது மட்டுமல்ல அஷ்டசதச பீடங்கள் எனப்படும் பதினெட்டு பீடங்களுள் ஒன்று எனும் பெருமை பெற்றது. ‘மாணிக்ய தக்ஷ வாடிகா’ என இத்தலத்தை அழைப்பதுண்டு.  நம் உடலில் உள்ள பல சக்ரங்களில் மணிபூரக சக்ரத்தின் நாயகியாக மாணிக்காம்பாள் கூறப்பட்டுள்ளாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்து அம்பிகையின் கண்கள் மட்டும் பக்கவாட்டில் பார்ப்பது போன்ற அமைப்பில் மாற்றினாராம். அதனால் தேவி உக்ரம் தணிந்து சாந்த வடிவினளாக ஆனாள் என்கிறது தலபுராணம். கண்களை கண்மலர் கொண்டு அலங்கரித்திருக்கின்றனர். தட்சயாகம் நடந்த இடம் ஆலயத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. தேவி உக்ரமாக தோன்றிய காரணமும் அதுதான்.  தட்ச யாகம் நடந்த இடத்தில் ஒரு குட்டை உள்ளது. அதன் அருகில் தாட்சாயணி சிறிய சந்நதி கொண்டுள்ளாள். இப்பகுதி மக்கள் இவளை போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள், குங்குமம், சந்தனம், இட்டு பூ தூவி அர்ச்சிப்பர்.

இத்தேவி ஸ்ரீசக்ரத்தின்மீதே நின்றருள்வது சிறப்பான அமைப்பாகக் கருதப்படுகிறது. இத் தலத்தில் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் அம்பிகைக்கும் ஸ்ரீசக்ரத்திற்கும் சேர்த்தே செய்யப்படுவது மிகவும் விசேஷம். வர்ணனைக்கு எட்டாத தேவி இவள் என்பதை ‘நித்யக்லின்னா’ எனும் லலிதா ஸஹஸ்ர நாமம்(388), தயையால் நனைந்த இதயம் கொண்டவள் என போற்றுகிறது. அப்படிப்பட்ட தேவியின் கடைக்கண்பார்வை நம் ஆசைகளை நிறைவேற்றுவதாக அமைகிறது. தேவியை வழிபட லக்ஷ்மி கடாக்ஷம், சரஸ்வதியின் வித்யாஞானம் இரண்டையும் அடையலாம். ‘ஸசாமர ரமாவாணி ஸவ்யதக்ஷிணஸேவிதா’ எனறு லலிதா ஸஹஸ்ரநாமமும் கூறுகிறது. மேலும் ‘வக்த்ரலக்ஷ்மி பரிவாஹ ஸலன்மீனாபலோசனா’ என்றும் போற்றுகிறது. அதாவது, சுபவிசேஷம் நடக்கும்போது விட்டு வாயிலிலே தொங்கவிடப்படும் மாவிலைத் தோரணங்கள் வீட்டிற்கு வருபவர்களை ‘வா, வா’ என்று அழைப்பதுபோல் தேவியின் புருவங்கள் நம்மை அழைத்து லக்ஷ்மி சம்பத்துகளைக் கொடுக்கும் என்கிறது. அவ்வளவு மகிமை வாய்ந்த தேவி மாணிக்காம்பாளின் நயனங்கள், நலங்கள் பலவற்றை நமக்கு அளிக்கட்டும்.

அக்ஷர சக்தி பீடங்கள்!

பீடத்தின் பெயர் ஜாலந்தரம். தேவியின் இடது ஸ்தனம் விழுந்த இடம். பீட சக்தியின் நாமம் த்ரிபுரமாலினி. அக்ஷர சக்தியின் நாமம். ங (   ). அக்ஷர தேவியின் நாமம் அருந்ததி சக்தி எனும் டார்ணா தேவி. ரக்த வர்ணத்தினள். ஆறுமுகங்கள் கொண்டவள். திருக்கரங்களில் அம்பு, வில், கேடயம், கத்தி, அபய-வரத முத்திரைகளுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வருபவள். பீடசக்தியின் நாமம் திரிபுரமாலினி. இப்பீடத்தை பீஷணர் எனும் பைரவர் காக்கிறார். ஜலந்தரில் உள்ள விஷ்வமுகி ஆலயமே இப்பீட நாயகி அருட்பாலிக்கும் இடமாகும்.




 

No comments:

Post a Comment