Friday, 16 December 2016

செட்டிப் புண்ணியம் யோகஹயக்ரீவர்!



 
குதிரை முகம் கொண்டு, அபாய கரங்களைக் காட்டியபடி தியான நிலையில் உள்ள ஹயக்ரீவரை, லஷ்மி தேவி மடியில் அமர்ந்திராமல் தனிமையில் அமர்ந்திருக்கும் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவரை எந்த ஆலயத்திலும் காண முடியாது.  அப்படிப்பட்ட அபூர்வமான காட்சியில் அமர்ந்துள்ள ஹயக்ரீவரை தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டிப் புண்ணியம் எனும்  கிராமத்தில் யோகஹயக்ரீவர் எனும் ஆலயத்தில் காணலாம். 
 
இந்த ஆலயத்தில் உள்ள யோகஹயக்ரீவரை கல்வி ஞானம், தேர்வுகளில் வெற்றி,  தொழிலில் வெற்றி,  நாட்டியம், இசை, சங்கீத கலைகளில் புகழ் பெற  என மாணவர்கள் முதல் அனைவரும் வந்து வேண்டிக் கொண்டு வணங்கும் ஆயிரத்துக்கும் முற்பட்ட வருட ஆலயம் ஆகும்.
 


பிரபஞ்சம் படைக்கப்பட்டப் பின் பிரளய காலத்தில்  ஒருமுறை கடுமையான யுத்தம் செய்து அசுரர்களை அழித்த களைப்பில் சமுத்திரத்திலே ஆயிலையில் யோக நித்திரையில் இருந்தார் மகா விஷ்ணு. அதற்கு முன்னர்தான் அவர் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பிரும்மன் நான்கு வேதங்களையும் படைத்து அவற்றை உலகிற்கு உபதேசித்த  பிரும்மா தனது படைப்புத் தொழிலையும்  துவக்கி இருந்தார்.

விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருந்து பிரும்மா வெளி வந்த அதே நேரத்தில் விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருந்த ஆயிலையில் இருந்த இரண்டு நீர் திவலைகளில் இருந்து மது மற்றும் கைடபன் எனும் இரண்டு அசுரர்கள் வெளி வந்து பிரும்மா செய்து வந்திருந்த படைப்புத் தொழிலையும்  தாமே செய்ய ஆசை கொண்டு பிரம்மனிடமிருந்த வேதங்களை திருடிக்  கொண்டு ஓடி விட்டார்கள். அந்த வேதங்களை திருடிக் கொண்டு சென்றவர்கள் அதை தக்க இடத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்று எண்ணி அதை கடலுக்கு அடியில் இருந்த பாதாளத்தில் கொண்டு சென்று ஒளித்து வைத்து விட்டு அங்கேயே குதிரை வடிவ முகம் கொண்டு இருந்தார்கள்.

வேதங்கள் அவர்கள் வசம் இருந்ததினால் அதை வைத்துக் கொண்டு தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து அழியா வரத்தையும்  பெற்றார்கள். அந்த வரத்தின்படி தம்மை அழிக்க குதிரை முகம் கொண்டவர் அவதரித்தால் மட்டுமே முடியும் எனும் அளவிற்கு வரத்தையும் பெற்றதை அறிந்து கொண்ட மகாவிஷ்ணு பிரும்மாவிடம் இருந்து அவர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வருவது மட்டும் அல்லாமல் அவர்களை முற்றிலும்  அழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாடகம் நடத்தினார்.  அந்த நாடகத்தின் ஒரு காட்சியாக வில்லின் நாண் மூலம் தலை அறுபட்டு குதிரை முகம் கிடைக்கப் பெற்றவர், ஹயம் என்றால் குதிரை என்பது அர்த்தம் என்பதினால் ஹயக்ரீவர் என்ற பெயரையும் பெற்றார்.
 
அந்த குதிரை முகத்தோடு கடலுக்குள் புகுந்து சென்று அந்த அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்டு வந்தார். அசுரர்களுடன் போரிட்ட குதிரை முகத்தைக் கொண்டிருந்த ஹயக்ரீவர் உக்ரமாக இருந்ததினால் அவர் கோபத்தைக் குறைக்க மகாலட்சுமி அவர் மடியில் அமர்ந்து கொண்டு அவரை சாந்தப் படுத்தினாள்.
 


இப்படியாக தசாவதார அவதாரங்கள் எடுக்க இருந்த காலத்துக்கு முன்னரே விஷ்ணு பகவான் எடுத்த முதல் அவதாரமான ஹயக்ரீவர் மடியில் லஷ்மி தேவி அமர்ந்திருந்த உருவமே லட்சுமி ஹயக்ரீவர் எனும் வடிவம் ஆயிற்று. அந்த கோலத்தில் அவர்கள் இருந்தபோது அங்கு வந்த சரஸ்வதி தேவி ஹயக்ரீவரிடம் வேண்டிக் கொண்டபடி சரஸ்வதிக்கும் ஞானத்தை உபதேசித்து கல்விக்கே அதிபதியான சரஸ்வதிக்கே குருவானார்.  ஆகவே ஹயக்ரீவரை வணங்கித் துதித்தால் சரஸ்வதியை வணங்கித் துதித்து பெற்ற அருளை  விட பல மடங்கு அருள் கிட்டும் என்பார்கள். 
 
தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல கல்வி அறிவு கிடைக்க  சரஸ்வதியை வணங்க வேண்டும் என்றாலும் அதன் பின்னர் சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவரையும் வணங்கித்  துதித்தால்தான் சரஸ்வதி தேவியிடம் இருந்து பெற்ற கல்வி ஞானம் முழுமை அடையும்,  இன்னும் அதிக கல்வி ஞானத்தை முழுமையாகப்  பெற்று வெற்றி மேல் வெற்றியும் அடையலாம் என்பது ஐதீகம் ஆகும். ஆனால் அங்கும் சின்ன நிபந்தனை இருந்தது.
 
கல்விக்காக சரஸ்வதியை வணங்காமல் ஹயக்ரீவரை மட்டுமே கல்விக்காக வணங்கினால் முழுமையான பலன் கிட்டாது. கல்வி ஞானத்தைப் பொருத்த ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவருடைய சீடரான சரஸ்வதிக்கும் மரியாதை தர வேண்டும் என்பதினால் சரஸ்வதியையும் வேண்டி விட்டு தம்முடைய அதாவது ஹயக்ரீவரின் அருளாசியைப் பெற வேண்டும் என்பதே ஹயக்ரீவரின் தத்துவம் என்பார்கள். மற்ற வேண்டுதல்களுக்காக  அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப ஹயக்ரீவரை நேரடியாக துதிக்கலாம் .

 
 செட்டிப்புண்ணிய ஆலயத்து ஹயக்ரீவரின் தோற்றம் !
 
இத்தனை மகிமை வாய்ந்த ஹயக்ரீவருக்கு தமிழ்நாட்டில் செட்டிப்புண்ணியம் எனும் கிராமத்தில் ஒரு ஆலயம் உள்ளது.  அவரை இங்கு வந்து வணங்கித் துதித்தால் அவர் அளவற்ற ஞானத்தையும், கல்வி அறிவையும் தந்து அனைத்து தேர்வுகளிலும் வெற்றி அடைய வைப்பார் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலான ஐதீகம் ஆயிற்று. அத்தனை மேன்மை வாய்ந்த சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனப்படும் ஹயக்ரீவரின் இந்த ஆலயம் எழுந்த வரலாறும், அந்த ஆலயத்தின் மேன்மையும் மகத்தானது. அந்த ஆலயம் தோன்றிய வரலாறு மற்றும் மேன்மை என்ன ?
 
 
ஆலயம் செல்லும் வழியில் உள்ள மலைத் தொடரில் உள்ள பாறைகளில்  காணப்படும்  இறைவனின் திருநாமம்  அந்த இடமே பெருமாள் குடியிருக்கும் இடம் என்பதை பறை சாற்றுகிறது

ஒரு காலத்தில் தென் இந்தியாவின் பல பகுதிகளும் முகலாய மன்னர்களின் பிடியிலும், அவர்களைத் தொடர்ந்து போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர் பிடிகளிலும் மாறி மாறி இருந்தபோது அந்த அன்னியர்கள்  பல இடங்களிலும் இருந்த இந்துக்களின் ஆலயங்களில் இருந்த நகைகளையும் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஆலய மூர்த்திகளையும் நாசப்படுத்தி வந்தார்கள்.  இந்துக்களின் ஆலயங்கள் குறிவைத்து நாசப்படுத்தப்பட்டதினால் பல இடங்களிலும் இருந்த பக்தர்கள் தாம்  வழிபட வேண்டும் என்பதற்காக ஆலயங்களை மறைவிடத்தில் அமைத்துக் கொண்டு அதில் வழிபட்டு வந்திருந்தார்கள்.  அதற்கும் முன்னதாக காலம் காலமாக வழிபடப்பட்டு வந்திருந்த ஆலயங்களில் இருந்த தெய்வீக மூர்த்திகளை காப்பாற்றுவதற்காக அங்கிருந்த விக்ரகங்களை இடம் பெயர்த்து எடுத்துச் சென்றார்கள்.
 
முக்கியமாக எளிதில் படையினர் கண்டு பிடிக்க முடியாத மற்றும் செல்ல முடியாத வனப் பிரதேசங்களில் வழிபாட்டு தலம் அமைத்து அங்கு அந்த விக்ரகங்களை வைத்து வழிபட்டு வந்திருந்தார்கள்.

இந்த பின்னணியில்தான் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் இருந்த திருவஹந்திபுரம் எனும் ஊரில் பக்தர்களினால் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த தேவநாதப் பெருமாள் மற்றும் ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களின் சிலைகள் அன்னியர்களினால் நாசம் அடையாமல் இருக்க 1848 ஆம் ஆண்டில் அன்றைய திவானாக இருந்த திரு ரங்காச்சார் என்பவரால் பரம ரகசியமாக செட்டிப் புண்ணியத்தில் உள்ள இந்த ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த காலத்தில் சரியான சாலைகள் இல்லாத, போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த மற்றும் மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்த செங்கல்பட்டு அருகே இருந்த இடமே செட்டிப்புண்ணியம் என்பது.
 


முதலில் வரதராஜப் பெருமாளுக்காகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டு இருந்ததாம். அதன் பின்னரே தேவநாதப் பெருமாள் மற்றும் குதிரை முகத்துடன் யோக நித்திரையில் இருந்த ஹயக்ரீவருடைய சிலை மற்றும் உர்ச்சவ மூர்த்திகள் 1848 ஆம் ஆண்டுவாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டன. அதன் பின்னர் அதே போல ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த தஞ்சாவூரில் இருந்த உற்சவ மூர்த்திகளான சீதா-ராம-லஷ்மண-ஹனுமான் மூர்த்திகளும் 1868 ஆம் வாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்படலாயின.
 
 
ராமர் சன்னதியின் முகப்பு !

 
 
ராமர் சன்னதி !


இந்த ஆலயம் தோன்றிய காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது  என்று பொதுவாக கூறப்பட்டாலும் பலரும் நம்புவதைப் போல சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் பழமையான இந்த ஸ்ரீ தேவநாத பெருமாள் ஆலயத்தில் வரதராஜப்பெருமாள் மூலவராக வழிபடப்படுகிறார்.  ஆலயம் உள்ள இடமும், அதற்குள் உள்ள மூர்த்திகளின் மகிமைகளும் பரவலாக  வெளியில் தெரிந்தால் மீண்டும் அந்த ஆலயத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று  அந்த காலத்தில் இருந்த பக்தர்கள் அஞ்சியதினால்  அந்த ஆலயம் குறித்த அனைத்து செய்திகளுமே செவி வழி வார்த்தைகளாகவே இருந்து விட சமீப காலம்வரை பெருமளவிலான பொதுமக்களுக்கு செட்டிப் புண்ணியத்தில் மறைந்திருந்த  தெய்வீக மகிமை மிக்க ஆலயத்தின் விவரமோ அல்லது மகிமையோ அதிகமாக தெரியாமலேயே இருந்தன.

ஆயினும் கூத்தனூரில் இருந்த சரஸ்வதி ஆலய மகிமையைக்  குறித்து மட்டுமே தெரிந்திருந்த மக்களுக்கு மெல்ல மெல்ல ஹயக்ரீவரின் சக்தி  மற்றும் ஹயக்ரீவரின் மேன்மையும் வரலாறுகளும் தெரியவர கல்விச் செல்வத்தை அளவில்லாது வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி குடியேறி இருந்த ஆலயங்களை நோக்கிப் பக்தர்கள் படையெடுக்கலாயினர். பல இடங்களிலும் ஹயக்ரீவர் ஆலயமும் எழுந்தது. இந்த நிலையில்தான்  மெல்ல மெல்ல செட்டிப் புண்ணியத்தின் யோக ஹயக்ரீவர் ஆலய விவரங்களும்  வெளித் தெரியவரத்  துவங்கியதும் பக்தர்கள் அங்கு செல்லத் துவங்கினார்கள்.

அந்த காலத்திலும் கூட அதிக சாலை வசதிகளே இல்லாத, மலைப்  பகுதியில் இருந்த இந்த ஆலயத்துக்கு சென்று யோக ஹயக்ரீவரை தரிசித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உண்மையான பக்தர்கள் மட்டும் தத்தம் குழந்தைகளுடன் செட்டிப் புண்ணியத்தை தேடி வருவது வழக்கமாக இருந்து வந்திருந்ததாம்.
 
இந்த ஆலயத்தில் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் யோக முத்திரைக் கொண்டு தனியாகவே காட்சி தருவது அபூர்வமான காட்சி ஆகும்.  அனைத்து ஆலயங்களிலும் யோக ஹயக்ரீவர் மடியில் லஷ்மி தேவி அமர்ந்துள்ள காட்சியே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு ஹயக்ரீவர்  குதிரை முகம் கொண்டு தனிமையில் யோக நிலையில் அபாய முத்திரைக் காட்டியபடி ஸ்ரீ  தேவநாதன்  எனும் பெயரில் தனி சன்னதியில் காணப்படுவது விசேஷ காட்சி ஆகும்.
 
அவர் சன்னதியில் உற்சவ மூர்த்தியையும் வைத்து பூஜிக்கிறார்கள். அவர் சன்னதியின் அருகில் உள்ள சன்னதியில் ஹமப்ஜவல்லி எனும் பெயரில் லஷ்மி தேவி காட்சி தருகிறார். சன்னதிக்கு எதிர் புறத்தில் சற்றே தள்ளி அமைந்துள்ள தனி சன்னதியில் ராம-சீதா-லஷ்மண சமேதகர்களாக காட்சி தந்து கொண்டு இருக்க ஹனுமார் அவர்கள் முன்  மண்டி இட்டபடி காணப்படும் உற்சவ மூர்த்திக்கே மதியம் 12.00 மணிக்கு உச்ச கால ஆராதனை நடைபெறுகிறது.  இந்த ஆலயத்தில் அனைத்து சன்னதியிலும் சன்னதிக்குள்ளேயே  மூல மூர்த்திக்கு முன்பாக வைக்கப்பட்டு உள்ள உற்சவ  மூர்த்திக்கே ஏன் பூஜைகளை செய்கிறார்கள் என்பதற்கான காரணம் விளங்கவில்லை.
 
 
அங்கோளம் அல்லது அழிஞ்சல் எனும் தெய்வீக மரம்!
 

ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள அங்கோளம் அல்லது அழிஞ்சல் என்ற பெயருடைய தெய்வீக மரத்தில் தமது வேண்டுதலை நிறைவேற்றித் தர பக்தர்கள் தமது ஆடையில் இருந்து இரண்டு நூலை பிய்த்து எடுத்துக் கட்டுகிறார்கள். சிலர் வீடு கட்ட அருள் வேண்டி அந்த மரத்தின் அடியிலேயே கல்லினால் ஆன  சின்ன வீடு கட்டுகிறார்கள். 
 
 
சன்னதியின் வாயிலில் தமது பிரார்த்தனை நிறைவேற நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.


 
 
தேவநாத ஸ்வாமி சன்னதி நுழை வாயில் !
பரிமுகன் என அழைக்கப்படும் ஹயக்ரீவருடைய உருவ அம்சங்கள் என்னென்ன? 
 
சந்தியா தேவதைகள் நாசித் துவாரங்களாக இருக்க  நீண்ட நாசி,  குதிரை முகத்தில் உள்ள பிடரி மயிர்கள் சூரிய ஒளிக்கதிர்களால் அமைந்தவை,  கங்கையும், சரஸ்வதியும் அவரது புருவங்களாக அமர்ந்துள்ளார்கள், சந்திரனும் சூரியனும் அவரது கண்களாக அமர்ந்திருக்க அவருடைய பற்கள் பித்ரு தேவதைகள் ஆவர்.  பிரும்ம லோகம் இரண்டுமே மேலும் கீழுமாக அவர் வாயின் உதடுகளாக அமைந்தன என்பார்கள்.

ஒருவர் வாழ்க்கையில் அவருடைய மேன்மைக்கு சாட்சியாக  காணப்படுவது கல்வி ஞானமே.  ஆகவேதான் கல்வியும் செல்வமும் பெருக  இங்குள்ள யோக ஹயக்ரீவர் ஆலயத்துக்கு வந்து தேவநாத ஸ்வாமி எனும் பெயரில் எழுந்தருளி உள்ள யோக ஹயக்ரீவரை  வணங்குகிறார்கள். ஸ்வாமிக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்தி கூடும் என்பது நம்பிக்கை ஆகும்.
 
கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் வழிபடும் முறையிலேயே தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்களுடன் இங்கு வந்து   யோக ஹயக்ரீவரின் பாதத்தில் தாம் எடுத்துச் செல்லும் பேனா மற்றும் பென்சிலை வைத்து வணங்கிய பின் அதை எடுத்து செல்கின்றனர். இதன் காரணமாக செட்டி புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே இது பெயர் பெற்றுவிட்டது. கல்விக்காக வேண்டுபவர்கள் மட்டும் இன்றி  இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கும் , தமது தொழிலில் தடைகள் அகலவும்  இங்குள்ள ஹயக்ரீவரை வந்து வழிபடுகிறார்கள்.

இந்த பிரிவினரைத் தவிர அஞ்ஞானம் எனும் இருளை அகற்றி ஞானம் எனும் ஒளியை நோக்கி பயணிக்க விரும்பும் தம்முடைய பக்தர்களை ஞான நிலைக்கு அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக இருந்தவாறு யோக ஹயக்ரீவர் அருள் புரிகிறார். சில தலங்களில் யோக ஹயக்ரீவர் கல்வி ஞானம் பெற அருள் புரியும் வேளையில், அவர் மடியில் அமர்ந்துள்ள லஷ்மி தேவியோ அந்த பக்தர்களுக்கு கல்வி ஞானத்தோடு சேர்த்து செல்வத்தையும் வாரி வாரி வழங்கும் விதமாக அருள்புரிகிறார்.

சென்னையில் இருந்து செல்பவர்கள் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து மகேந்திரா சிட்டியின் நேர் எதிரில் உள்ள சின்ன சாலையில் இறங்கி மூன்று கிலோ மீட்டர் அளவுக்கு ஆலயம் செல்லும் வழியைக் காட்டும் பெயர் பலகைகளுடனான சற்றே மலை மீது ஏறிச் செல்லும் வகையில் அமைந்துள்ள பாதையிலேயே சென்றால் ஸ்ரீ தேவநாத ஸ்வாமி ஆலயத்தை அடையலாம்.
 
காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள யோகஹயக்ரீவரை திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும் என்பார்கள்.
 
 
 
 
 

கீழச்சூரியமூலை சூர்ய கோடீஸ்வரர் ஆலயம்!


 
 

கும்பகோணத்தின் அருகில் உள்ள கஞ்சனூருக்கு அருகில் உள்ளது கீழச்சூரியமூலை என்றொரு சிற்றூர். அங்குள்ள சூர்ய கோடீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த ஆலயம் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் சூரிய பகவான் தினமும் காலை முதல் மாலைவரை சிவபெருமானை வணங்கித் துதிப்பதாக ஐதீகம் உள்ளது.  அப்படி துதிப்பதின் மூலமே சூரிய  ஒளிக்கதிர் சக்தி குறையாமல் கிடைப்பதாகவும் ஐதீகமுள்ளதாம்.
 
இந்த ஆலயத்தின் புராணக் கதை என்ன?
உலகில் உள்ள அனைவரும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசனம் செய்து பல பயன்களை அடைகிறார்களே, ஆனால் தன்னால் மட்டும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சூரிய பகவானுக்கு ஏற்பட அவர் தன்னுடைய சீடரும் மாமுனிவருமான யாக்கியவல்லவரிடம் தனது மன வருத்தத்தையும் வேதனையையும் எடுத்துரைத்தார். 
 
அதைக் கேட்டு வேதனை அடைந்த அந்த மாமுனிவரும், அவருக்கு ஆறுதல் கூறி விட்டு, சூரிய பகவானுக்காக தானே சிவபெருமானை வழிபட்டு அதன் மூலம் சூரியனுக்கு   தன்னால் ஆன உதவியை செய்வதாக வாக்குறுதி கொடுத்தப் பின் தினமும் சிவபெருமானின் சன்னதிக்கு சென்று மாலையில் தான் பெற்று இருந்த அனைத்து வேத சக்தியையும் சூரிய கிரண சக்திகளாக மாற்றி அதை  இலுப்ப எண்ணை தீபத்தில் இறக்கி  வைத்து  சிவபெருமானை வழிபடலானார். தினமும் ஒரு கோடி  இலுப்பை எண்ணை  தீபம் ஏற்றி சூரியனுக்காக தவம் இருந்தார்.
 
தினமும் ஒரு கோடி இலுப்பை எண்ணை  தீபம் ஏற்றி சிவபெருமானை துதித்தபடி யாக்யவால்யகர் தவத்தில் இருந்தார் 

பல காலம் இப்படியாக சிவபெருமானை வழிபட்டு வந்த யாக்யவால்யகருக்கு நாளடைவில் இலுப்ப எண்ணை கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படத் துவங்கியது.  அனைத்து இடங்களிலும் இருந்த  இலுப்ப எண்ணையை   பயன் படுத்தி விட்டதினால் மேலும் இலுப்ப எண்ணை  கிடைப்பது கஷ்டமாகியது. அதனால் அவரது வழிபாடு தடைபடலாயிற்று. மாமுனிவர் அங்கும் இங்கும் அலைந்து இலுப்ப காய்களைக் கொண்டு வந்து எண்ணை எடுத்து அதனால் விளக்கு ஏற்றி வழிபட வேண்டியதாயிற்று. 
 
அதைக் கண்ட வேத சக்திகள் அந்த இலுப்ப எண்ணை தீபத்தினால் ஏற்றப்பட்ட விளக்கு அணைந்ததும் பூமியிலே சென்று புதைந்து கொண்டு இலுப்ப மரமாக மாறி வளரத் துவங்கின. இப்படியாக இலுப்ப மரங்களாக மாறிய மரங்களினால் அந்த இடமே இலுப்ப மரத்தினால் சூழ்ந்த அடர்ந்த வனப்பிரதேசமாக மாறி விட அது முதல் மாமுனிவருக்கு இலுப்பை எண்ணை கிடைப்பதில் எந்த தடங்கலும் இல்லாமல் போயிற்று.
 

தனது வேண்டுகோள் நிறைவேற வேண்டும் என்பதற்காக மாமுனிவர் யாக்யவால்யகர் தொடர்ந்து சூரிய கிரணங்களை இலுப்பை எண்ணை தீபத்தின் ஒளியாகவும், சூரியனார் தனக்கு அளித்த சக்திகள் அனைத்தையும் பாஸ்கர சக்கரம் எனும் ஒரு சக்கரமாகவும்  மாற்றி அமைத்து அதை சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்து வழிபடலானார். இப்படியாக தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு ஒரு கோடி இலுப்பை எண்ணை தீபங்களை தொடர்ந்து ஏற்றி, அந்த இடத்தையே காலை வேளையோ என்று அதிசயிக்க வைக்கும் அளவுக்கு சூரிய கிரணங்களினால் மினுமினுக்க வைத்து, சிவபெருமானை வழிபட்டு வந்த மாமுனிவர் யாக்யவால்யகர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன்னால் தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, யாக்யவால்யகரும் தனக்கு வேதங்களை பயில்வித்த தனது குருவான சூரியனின் வேதனையை சிவபெருமானிடம் எடுத்துக் கூறி அதற்கு தக்க உபாயம் செய்து பிரதோஷ காலத்தில் சூரியனும் சிவபெருமானை வணங்கித் துதிக்க சிவபெருமான் ஏற்பாடு செய்ய வேண்டும், சூரியனின் கிரணங்களைக் கொண்ட தீபத்தை தான் ஏற்றி வழிபட்டதினால் சூரியன் இழந்த ஆற்றலையும் திரும்பத் தந்து, சூரியனுக்கு இன்னும் அதிக ஒளிச் சக்தியை தினம் தினம் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த மாமுனிவருக்கு சிவபெருமான்  காட்சி தந்தது பிரதோஷ வழிபாடு துவங்கும் காலம் ஆகும். அதைக் கேட்ட சிவபெருமானும் அந்த இலுப்பை எண்ணையில் சூரியனின் கிரண சக்திகளை ஏற்றி யாக்யவால்யகர் வழிபட்டதினால் இனி மாலை வேளையில் இலுப்பை எண்ணை ஊற்றிய தீபத்தை தான் தங்கி உள்ள அந்த இடத்திலேயே ஏற்றி வழிபடும்போது சூரியனின் அருள் அங்குள்ளவர்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும்,   சூரியனின் கிரணத்தையே இலுப்பை எண்ணையில் ஏற்றி வழிபட்டதினால் சூரியனும் தினமும் காலை முதல் மாலைவரை தன்னை அங்கு வழிபட முடியும் என்றும்,  அதன் மூலம் இலுப்ப எண்ணை தீபத்தில்  இழந்த கிரண சக்திகள் சூரியனுக்கு மீண்டும் கைகூடுவது மட்டும் இல்லாமல், அது மேலும் மேலும் அதிகரிக்கும் என்றும் வரம் அருளினார். அது மட்டும் அல்லாமல் மாலை வேளையில் அந்த இலுப்பை எண்ணை விளக்கு தீபம் சூரிய கிரணத்தால் ஒளி விடுகிறது என்பதினால் தினமும் தனது ஒளியை பூமியில் வெளிப்படுத்தாமல் சூரியனால் மாலையிலும் அந்த இடத்தில் வந்து இலுப்ப எண்ணை ஒளி மூலம் தன்னை வணங்கித் துதிக்க முடியும் என்றும் அருள் புரிந்தார்.

அதைக் கேட்டு மகிழ்ந்து காலையில் உதித்தெழுந்த சூரியன் அன்று மாலையிலேயே, சூரிய அஸ்தமனம் ஆகிய உடனேயே, பிரதோஷ காலம் முடியும் முன்பாகவே இலுப்பை எண்ணெய் தீப ஒளியில் பிரவேசித்து அதன் மூலம் சிவபெருமானை தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் பெற்றாராம். இப்படியாக மாமுனிவர் யாக்யவால்யகர் மூலம் சூரியனுக்கும் பிரதோஷ காலத்தில் மாலையிலும் பூமியிலே வந்து அந்த ஆலயத்தில் சிவபெருமானை வணங்கித் துதிக்க முடிந்தது.
 
அது முதல் சூரியன் மட்டுமல்லாது பலகோடி மண்டலத்து சூரிய அவதாரங்களும் சூரிய கணங்களும் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாலும் சூரியனுக்கு பிரகாசமான ஒளியை தரும் ஆற்றலை தந்தபடி சிவபெருமான் அங்கு தங்கி  இருப்பதினாலும் இங்குள்ள  சிவபெருமான் சூரிய கோடீஸ்வரர் என்ற பெயர் பெற்று  இங்கேயே தங்கி  அருள் புரிகிறார். யாக்யவால்யகரும் பல காலம் அங்கேயே தங்கி இருந்தார்.  அப்போது அவர் சிவபெருமானுக்காக செய்த ஒரு யாகத்தை தவறின்றி நடத்தி முடிக்க பைரவர் அவருக்கு ஆசானாக இருந்து அதை நிறைவேற்றித் தந்தார். அதனால் அந்த இடத்தில் தங்கிய பைரவரும் சொர்ண பைரவர் என்ற பெயரைப் பெற்றார்.
 
இப்படியாக தினம் தினம் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகும், வெளித் தெரியாமல் இலுப்பை எண்ணை தீப ஒளி மூலம் சூரிய பகவான் அங்கு வந்து சிவபெருமானை வணங்கித் துதிப்பதினால், மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னால் அங்கு வந்து சிவபெருமானுக்கு இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி வணங்கித் துதித்தால் சிவபெருமானின் அருள் மூலம் சூரியனின் அருளையும் பெற்று செய்வாய் கிரக தோஷங்களை விலக்கிக் கொள்ளலாம் என்பதாக ஐதீகம் ஏற்பட்டது.
 
பவளக் கொடி  மற்றும் சூர்யகோடீஸ்வரர் !
 
சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம் உள்ளது என்பதினால் காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை சூரிய கோடீஸ்வரராக லிங்க உருவில் அமர்ந்துள்ள மூல லிங்கத்தின் உருவம் நிழலாக கருவறை சுவற்றில் தொடர்ந்து தெரிகிறது. இத்தனைக்கும் அந்த கருவறையில் சிவலிங்கத்தின் உருவத்தை நிழலாகத் தரும் வகையில் சூரிய கிரணங்கள் நேரடியாக விழுவது இல்லை என்பது பெரிய அதிசயம் ஆகும்.
அங்குள்ள சன்னதியில் பவளக்கொடி எனும் பெயரில் பார்வதி தேவியும் சிவபெருமானுடன் தங்கி உள்ளார்.
 
 
அவர்களுக்குக் காவலாக சொர்ண பைரவர் எனும் பெயரில் பைரவரும் தங்கி உள்ளார். அந்த பைரவருக்கு பிரதோஷ காலத்தில் தீபாராதனை காட்டும்போது அவரது கழுத்தில் பவளமணி அளவில் சிவப்பு ஒளி தோன்றி மறைவதும் அது மெல்ல அசைவது போலவும் காட்சி தருவது அற்புதமான காட்சியாகும் என்கிறார்கள்.
 
சன்னதியில் துர்க்கை !
 
இங்குள்ள ஒரு சன்னதியில் குடி உள்ள துர்க்கையின் சிலையில் ஒரு காலில் மட்டுமே மெட்டி காணப்படுகிறது.  தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை துர்க்கை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் ஆகும்.
 
சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும், நிம்மதி கிடைக்கும், பார்வைக் கோளாறு நீங்கும் என்கிறார்கள்.  இக் கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும். கடன், நோய், எதிரிகள் பிரச்னை எளிதில் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
 
ஆலயம் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும், மாலை நான்கு முதல் ஏழு மணிவரையிலும்  திறந்து இருக்கும். இங்கு ஆலயத்தில் உள்ள சூர்யகோடீஸ்வரர் ஸ்வயம்புவாக எழுந்தருளியவர் ஆகும்.
:ஆலய விலாசம் :
அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,
 கீழச்சூரியமூலை,
தஞ்சாவூர். -613001.
 
 
 

Thursday, 15 December 2016

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணமறுமே!


திருமாலும், பிரம்மாவும் ஈசனின் அடிமுடியைத் தேடி ஓய்ந்து போய் இறுதியில் சரணடைந்ததும், இருவருக்கும் மத்தியில் செஞ்சுடர் ஸ்தாணுவாக, அக்னி ஸ்தம்பமாக இறைவன் நின்றதை அனைவரும் அறிவோம். இதுவே திருவண்ணாமலையின் தலபுராணம்.

இங்கு அடிமுடி காணும் முயற்சி என்பதே ஒரு ஜீவன் மெய்யறிவு பெறுதலேயாகும்.

மானுடர்களுக்குப் புரியும் பொருட்டு நடத்திக்காட்டுவதே தீபத்திருவிழாவாகும். திருவண்ணாமலையே சுயம் சிவமாகும். ஈசனே கருணைகொண்டு கிரியுருவாக உள்ள தலம். அந்த கிரியே லிங்கமாகும். அதையே அடிவாரத்தில் சிறு லிங்க மூர்த்தமாக பாவித்து அருணாசலேஸ்வரர் கோயிலாக்கியிருக்கின்றனர்.

அண்ணா என்றால் ‘நெருங்கவே முடியாத’ என்று அர்த்தம். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்கமுடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்தது. கார்த்திகையன்று நெற்பொரிக்கும், வெல்லத்திற்கும் கூட தத்துவம் உண்டு. தூய்மையான நெற்பொரி தன்னலமற்ற வள்ளல் தன்மையை குறிப்பதாகும். அன்பிற்கும், தூய உள்ளத்திற்கும் அறிகுறியாகும். பொரியும் தித்திப்புத் தன்மையை யுடைய வெல்லமும் ஒன்று கலந்து நிவேதனம் செய்யப்பட வேண்டுமென்று மயூர தலபுராணம் கூறுகின்றது. 

இறைவன் உறையும் கோயிலில் விளக்கிடுவோர் மெய்ஞானிகளாக விளங்குவார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார், கணம்புல்ல நாயனார். கணம்புல் என்ற ஒருவகைப்புல்லை அரிந்து வந்து அதனை விற்று, கிடைத்தத் தொகையில் அன்புடன் இறைவனுக்கு விளக்கேற்றி உவந்தார். சில நாட்களுக்குப் பின்னர் கணம்புல் விலை போகவில்லை. அதனால் அப்புல்லையே விளக்காக எரிக்கவே, இவர் கணம்புல்லர் என்னும் பெயர் பெற்றார். கார்த்திகை மாதம் கார்த்திகையன்று கணம்புல்லைத் திரியாக்கி ஒரு யாமப் பொழுது எரிக்க நியதிப்படி புல் போதவில்லை.

அன்பின் மிகுதியால் கணம்புல்லர் தமது திருமுடியை எரித்தார். புரம் எரித்த புனிதர் அவருக்குக் காட்சி தந்து மாட்சி மிக்க சிவபதம் வழங்கினார். திருஞானசம்பந்தர், தொண்டை நாட்டு தலங்களை தரிசித்தபடி வந்தார். சீர்காழியிலிருந்து ஒவ்வொரு தலமாக பயணித்தபடியே திருவறையணி நல்லூர் பெருமானைப் போற்றி வலம் வந்தார். அப்போது உடனிருந்த அன்பர்கள் திருவண்ணாமலை இதோ காட்சி தருகிறது என்று சம்பந்தருக்கு சுட்டிக் காட்டினர். அழல் வண்ணராகிய அண்ணாமலையை பார்த்தவுடன் குழந்தை அழகாக ஒரு பதிகம் பாடியது:

உண்ணாமுலை யுமையாளொடும்
உடனாகிய
ஒருவன் பெண்ணாகிய பெருமான்
மலை திருமாமணி
திகழ மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைய் முழ
வதிரும் அண்ணாமலை தொழுவார்
வினை வழுவாவண்ணமறுமே!

இதோடு மட்டுமல்லாமல் அண்ணாமலையை அடைந்து, ‘‘பூவார் மலர் கொண்டடியார் தொழுவார்’’ எனவும் பாடிப் பரவினார். திருநாவுக்கரசர் திருப்பைஞ்ஞீலி தலத்திலிருந்து அண்ணாமலையாரை அடைந்து,

வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையினை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையயடி யேன்மறந் துய்வனோ

- என்று பதிகம் பாடினார். மாணிக்கவாசகர் அருணைக்கு வந்து சில நாட்கள் தங்கி அண்ணா மலையாரைப் பணிந்து போற்றினார்.

வாருங்கள், அருணாசல மலையின் அடிவாரத்தில் கோயில் கொண்டுள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தையும் தரிசிப்போம். அருணாசலேஸ்வரர் கோயில் மற்ற கோயிலைப் போலவே, கருவறை, முக மண்டபம், திருச்சுற்றுகள், மதில்கள் சூழ திகழ்கின்றது. கோயிலின் கீழ்த் திசையிலுள்ள பெரிய கோபுரத்திற்கு ராஜகோபுரம் என்று பெயர். கோயிலின் ராஜகோபுரத்தை நாயக்கர்களின் தலைமை குருவாகவும், அமைச்சராகவும் இருந்த கோவிந்த தீட்சிதரால் அமைக்கப்பட்டது.

வடக்குப் பக்கத்திலுள்ள கோபுரத்தை அம்மணி அம்மாள் கோபுரம் என்றும், தெற்குப் பக்கத்திலுள்ளதை திருமஞ்சன கோபுரமென்றும், மேற்குப் பக்கத்திலுள்ளதை பேய்க் கோபுரமென்றும் அழைப்பர். மேற்கு என்பதே மேக் என்பதாகி பேய்க் என்று திரிந்து விட்டது. கோபுரங்கள் நிறைய சூழ்ந்ததுபோலவே கோயிலினுள் ஞானப் பால் மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், திருவருள் விலாச மண்டபம், மாதப் பிறப்பு மண்டபம், ருத்ராட்ச மண்டபம், பன்னீர் மண்டபம், காட்சி மண்டபம் போன்ற மண்டபங் களும் உள்ளன.

கோயிலின் உள்ளேயிருக்கும் முதல் பிராகாரமும், இரண்டாம் பிராகாரமும் அதை ஒட்டிய மதிலும் மிக மிக பழமை வாய்ந்தது. மூன்றாம் பிராகாரம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இதை கிளிக்கோபுர வாயிலிலுள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம். நான்காவது, ஐந்தாவது பிராகாரங்களும், ஆயிரங்கால் மண்டபமும், பெரிய நந்தியும், சிவகங்கைத் தீர்த்தமும், வெளி வாயிற் கோபுரங்களும் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

ஆயிரம்கால் மண்டபத்தையும், சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும், கிளி கோபுரத்தை கி.பி 1053ம் ஆண்டு ராஜேந்திர சோழனும், பிரம்ம தீர்த்தத்தை கி.பி1230ம் ஆண்டு வேணுதாயனும், வள்ளால கோபுரத்தை கி.பி 1320ம் ஆண்டு வள்ளால மஹாராஜாவும் கட்டியுள்ளனர். மேலும், இக்கோயில் உருவாக குலோத்துங்கன், ராஜேந்திர சோழன், கோப்பெரும்சிங்கன், ஆதித்ய சோழன், மங்கையர்க்கரசி, விக்கிரம பாண்டியன், அம்மானை அம்மாள் ஆகியோரும் காரணமாக இருந்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட
பெருமைக்குரியது இந்த திருவண்ணாமலை.

இப்போது மீண்டும் ராஜகோபுரத்திற்குள் புகுவோம். வலப்புறத்தில் ஆயிரங்கால் மண்டபத்தை காணலாம். இது கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்தது. தூண்கள் முழுக்க சிவமூர்த்தங்களை செதுக்கியும், திருமாலின் அவதாரங்களை சிற்பங்களாக்கியும் கலைவித்தை காட்டியிருக்கிறார்கள். ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்கே பகவான் ரமண மகரிஷி பால பருவத்தில் திருவண்ணாமலையை அடைந்து பாதாள லிங்கத்தில் அமர்ந்தார். இன்றும் அதை நினைவுபடுத்தும் வகையில் பகவானின் திருவுருவப் படத்தை வைத்திருக்கிறார்கள்.

முதல் பிராகாரத்தில் வராக உருவில் திருமால் கால்களை நீட்டி நீந்துவது போலவும், மேல் முடியின் மீது அன்னம் அமர்ந்திருப்பது போலவும், கண்ணியோடு லிங்கோத்பவர் விளங்குகின்றார். வழக்கமாக அன்னம் பறப்பது போலிருக்கும், ஆனால், இங்கு அன்னம் முடியின் மீது அமர்ந்திருப்பதுபோலுள்ளது புதுமையாகும். ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே கம்பத்து இளையனார்  சந்நதி. அருணகிரிநாதர் மனம் வெறுத்து வல்லாள மகராஜன் கோபுரத்திலிருந்து கீழே விழும்போது முருகப் பெருமான் அவரைத் தாங்கித் திருவருள் புரிந்தார்;

வள்ளி-தெய்வானை சமேதராகக் காட்சி தந்தார். ‘அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வடஅருகிற் சென்று கண்டு கொண்டேன்’ என்று பாடிப் போற்றுகிறார். இங்கு கிளி கோபுரமெனும் கோபுரமும் உண்டு. ஆச்சரியமான ஓர் நிகழ்வுக்கு இப்போதும் நிற்கும் சாட்சி இது. பிரபுட தேவராயர் என்பவர், தேவலோகத்திலிருந்து பாரிஜாத மலர் கொணர்க என்று அருணகிரியாரிடம் சொல்ல, அதனைக் கொணரும் பொருட்டு கிளியுருவில் அவர் செல்ல, அவருடன் பகைபாராட்டிய சம்பந்தாண்டான் அதனைத் தெரிந்து கொண்டு அருணகிரிநாதர் மரித்தார் என்று சொல்லி விட்டார்;

அருணகிரியாரின் உடலையும் தகனம் செய்துவிட்டனர். சிலநாட்கள் கழித்துத் திரும்பிய அருணகிரிநாதர், தான் விட்டுச் சென்ற தன் உடலைக் காணாது கிளியாகவே அந்த கோபுரத்தில் அமர்ந்து கந்தர் அனுபூதி என்கிற அற்புதமான பாடல்களை இயற்றினார். எனவேதான், அந்த கோபுரம் கிளி கோபுரம் என்றானது. கிளிக் கோபுர படித்துறைக்கு அருகேயே யானை திறை கொண்ட விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கம்பத்து இளையனார் சந்நதிக்குத் தெற்கே நாற்புறங்களிலும் திருமாளிகைப்பத்தி மண்டபத்துடன் குளம் அமைந்துள்ளது.

இது தீர்த்தவாரிக்கு பயன்படுத்தப்படுகிறது. இத்திருக்குளத்திற்கு திருமலை அம்மன் தேவி சமுத்திரம் என்னும் பெயரில் கால்வாய் வெட்டி, தண்ணீர் கொண்டு வந்ததாக கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது. இதற்கு அருகேயே விநாயகர் சந்நதியொன்றும் உண்டு. இவருக்கு சிவகங்கை விநாயகர் என்று பெயர். சிவகங்கை தீர்த்தம், விநாயகர் கோயிலெல்லாம் கடந்து செல்லும் முன் பெரிய நந்தி மண்டபம் அழகுற அமைந்துள்ளது. இந்த நந்தி வல்லாள மகராஜாவினால் கட்டப்பட்டது.

நான்காம் பிராகாரத்தில் கால பைரவர் சந்நதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம்,  சக்தி விலாசம், கருணை இல்லம், பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம், வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம், யானை திறை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார் ஆகியோரைக் கண்டு களிக்கலாம். கிளி கோபுரத்தின் நேர் எதிரே பதினாறு கால் மண்டபம் உள்ளது. தீபப் பெருவிழாவின்போது பத்தாம் நாள் காலை ஐந்து மணிக்கு பரணி தீபமும், மாலை சரியாக ஆறுமணிக்கு மலையின் மீது ஜோதியும் ஏற்றப்படும்.

அதற்கு முன்னரே பஞ்ச மூர்த்திகளும் பதினாறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அர்த்தநாரீஸ்வரர் தீபம் தாங்கிவந்து பலிபீடத்தின் முன்னர் தீபம் ஏற்றியவுடன் கார்த்திகை தீபம் எரிய, லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலைக்கு அரோகரா...’ என்று களிப்பு மிகுந்து கூவுவர். கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றின் வடபுறம் சம்பந்த விநாயகரும், தென்புறம் பழநி ஆண்டவரும் அருள்புரிகின்றார். சம்பந்த விநாயகர் செந்தூரம் அணிந்து சிவந்து காணப்படுகின்றார். பெரிய திருவுருவினராக, அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றார்.

இந்த விநாயகர் அசுரனைக் கொன்று அவனுடைய ரத்தத்தை பூசிக் கொண்டதாக கூறுவர். சக வருடம் 1262ல் வீரவல்லாள தேவர் ஆண்டபோது நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டு கோயிலில் உள்ளது. இதன் மூலம் சம்பந்தாண்டார் திருவண்ணாமலையில் இருந்தார், இவர் அண்ணாமலையார் கோயிலில் செல்வாக்கு பெற்றவர், இவர் அமைத்த விநாயகரே சம்பந்த விநாயகர் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும் என்கின்றனர்.   

மூன்றாம் பிராகாரத்தில் சோகாளத்தீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சிதம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளின் திருச்சந்நதிகள் உள்ளன. மற்றைய பஞ்சபூதத் தலங்களுக்குள் செல்ல முடியாதவர்கள் இங்கேயே ஐந்து மூர்த்திகளையும் வழிபடலாம். மகிழ மரத்தடியில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், நந்தியை தரிசிக்கலாம். இங்கிருந்து நேராக அர்த்தமண்டபம், கருவறையை அடையலாம். அருணாசலேஸ்வரர் லிங்க மூர்த்தத்தில் பேரருள் பொழிகிறார்.

மூலவர் கோயிலின் வெளிப் பிராகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்களை வணங்கிச் சென்றால், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும் இரண்டாம் பிராகாரத்தில் வணங்கலாம். பள்ளியறையும் இங்கேயே உள்ளது. காலசங்காரர் திருவுருவம் மூன்றடி உயரத்தில் மழு, பாசம், சூலம், கபாலம் ஆகியவை கொண்டு, காலனைக் கடிகின்ற மூர்த்தியாகக் காணப்படுகின்றது. 

அருணாசலேஸ்வரரை தரிசித்தபின் தனிக்கோயிலில் வீற்றிருக்கும் உண்ணாமுலை அம்மனை தரிசிக்கலாம். அம்பிகை கோயிலின் மண்டபத்தில் நவகிரகங்களை தரிசித்து மகாமண்டபத்திற்குள் நுழைந்தால் பதினாறு தூண்களுமே கலைப்பெட்டகங்களாக திகழ்கின்றன. அம்பாள் உண்ணாமுலையம்மன் சமஸ்கிருதத்தில் அபிதகுஜாம்பிகை என்றழைக்கப்படுகிறாள். அம்மன் கருவறை முழுவதும் சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது. இக்கருவறையைச் சுற்றியுள்ள பிராகாரத்தின் மேற்கே உற்சவ  மூர்த்திகள் உள்ளனர்.

கருவறையைச் சுற்றிலும் அந்தராலத்திலும் ஐந்து சக்தி அம்மன்கள் தேவகோட்டத்தில் உள்ளனர். ஒவ்வொரு அம்மனும் ஒன்றரை அடி உயரம். திருச்சந்நதிக்கு வெளியேயுள்ள மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் அழகிய அஷ்ட லட்சுமிகள் இருப்பதால் இது அஷ்டலட்சுமி மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது. இக்கோயிலில் மிக அழகிய செப்புத் திருமேனிகளை விழாக்களில் தரிசிக்கலாம். சற்றே வித்தியாசமாகத் தோன்றும் பிடாரியைக் குறிப்பாகச் சொல்லலாம். செப்புத் திருமேனியளான பிடாரியம்மன் சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.

தலையில் தீச்சுவாலை, வாயில் கோரைப்  பற்கள். உடுக்கை, பாசம், சூலம், கபாலம் ஏந்தியிருக்கிறாள். அடுத்து இரண்டரை அடி உயர பராசக்தி சுக்கிரவார புறப்பாடு காண்பவள். அங்குசம், பாசம், அபயம், வரத முத்திரையோடு அருள்கிறாள். பள்ளியறை அம்மனின் செப்புத் திருமேனி பிற்கால கலையம்சம் கொண்டது. கிரீட மகுடம், கச்சை, மகர குண்டலங்கள், கொலுசு, பாடகம் கொண்டு விளங்குகிறது. இங்கு அருணாசல மலையே பிரதானம். இந்த மலையையே ஞானிகள் போற்றுகிறார்கள்; புராணங்களும் விவரிக்கின்றன.

எனவே, அருணாசல மலையின் மகிமையை தெரிந்து கொள்வது சிரத்தையை அதிகமாக்கும். சிந்தையின் ஏகாகிரகத்தை இன்னும் கூர்மையாக்கும். பக்தியையும் புஷ்டியாக்கும். பெறுதற்கும் அரிதான பேறான ஞானத்தை வழங்கும்.

ஞானமே உருகொண்ட ஈசன், தூல உருகொண்ட மலையாகத் தன்னை அபிமானித்திருக்கிறார். அதனால்தான் இந்த மலை வேறல்ல, சிவம் வேறல்ல. அருணாசல மலையே சிவபெருமான். சிவபெருமானே அருணாசல மலை. ஆத்மப் பிரதட்சணம் செய்திருக்கிறீர்களா. கவலைப்படாதீர்கள்.

இந்த அருணாசலத்தை வலம் வாருங்கள். அதுவே கிருபையைப் பெறும் வழி. அசலமான மலையை சுற்றும்போது மனம் நிச்சலமாக மாறும். சலசலத்துக் கொண்டிருக்கும் மனதை அசலமாக்கும் மலை இது. ஆதியந்தமற்ற அந்த ஆத்மா அருணாசலமாக இங்கு எழுந்தருளியுள்ளது.’’ 

வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசயம்!


கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவாலயம்!
 
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.
 
 
பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
 
இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.
 
பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.



Friday, 2 December 2016

தீபங்கள் வாழ்த்தும் திருக்கார்த்திகை!

திருக்கார்த்திகை!
 
ருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. 

நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது,அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது.
 
ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின்  மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகை கூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். 
 
தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார். ‘‘தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு  நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்!’’ என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். 
 
நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி திதியில்  இறைவன் திருவுள்ளம் இரங்கியது.
 
இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர்.
 
சோம வார விரதம்:
 
சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.
 
சோமவார விரதம் – திங்கள் கிழமைகளில் இருப்பது 
                                 
சோம வார விரதம் – கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து இருத்தல் வேண்டும் சோம வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு, மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப்பதே முறை.
 
உமா மகேஸ்வரி விரதம்!
 
இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம். இரவு பலகாரம் பழம் சாப்பிடலாம்.
 
திருக்கார்த்திகை தினத் தன்று திருவண்ணாமலையில்  விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதால், புயல் ஏற்பட்டால் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 
வாழ்க்கையில் புயல் போன்ற துன்பங்கள் வந்தாலும், தீப தரிசனம் செய்தால் அவை எளிதில் நீங்கி விடும் என்ற  தத்துவத்தையும் இது உணர்த்துகிறது.
 
சிவசக்தி தீபம்!

திருக்கார்த்திகை தினத்தன்று, “கிலியஞ்சட்டியி’ல் (களி மண்ணால் செய்யப்படும் விளக்கு) பசு நெய் அல்லது நல்லஎண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு, அதில் தான் விளக்கு ஏற்ற வேண்டும்.
 
 வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். 
 
விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, தீபத்தில் பசுநெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து, “சிவசக்தி’ சொரூப மாகிறது. 
பெரிய கார்த்திகை!
 
பன்னிரெண்டு மாதங் களிலும் கிருத்திகை வருகிறது. எனினும், கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியுடன் சேர்ந்து வருகிறது. ஆகவே, இதை, “பெரிய கார்த்திகை’ என்று போற்றுகின்றனர். 
 
கார்த்திகை மாதம் முழுவதுமே, தினசரி மாலையில் அகல் விளக்குகளை ஏற்றுவது நல்லது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், காசி நகரிலும் இவ்வழக்கம் இன்றும் உள்ளது.
 
கார்த்திகையின் சிறப்பு!
 
இருபத்தியேழு நட்சத்திரங்களில் ரோகிணி, கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களில், மற்ற 25 நட்சத்திரங்களும் அடக்கம். ஆகவே, கார்த்திகை ரோகிணி நட்சத்திரம் உள்ள நாட்களில் சந்திரனை தரிசித்தால், 27 நட்சத்திரங்களையும் வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
 
கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். முருக கடவுள் கார்த்திகேயன், பொறி வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக சொல்வோரும் உண்டு.
 
சொக்கப்பனை!

திருக்கார்த்திகை தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நாட்டி,அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்துக் கட்டுவர். மாலையில், சொக்கப் பனை கொளுத்தப்படும். ஆணவம் எரிகிறது, கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே இதன் தத்துவம். 
 
சிவன் முப்புரம் எரிந்த பாவனையை காட்டுவதற்காக சிவாலயங்களில் சொக்கப் பனை கொளுத்துகின்றனர். சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. 
 
கார்த்திகை என்றாலே தீபம் தானே நம் நினைவுக்கு வரும். விளக்கில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. திருவிளக்கை தீபலட்சுமி என்பர். துர்கையின் வடிவங்களிலும் தீப துர்கை உண்டு. தீபத்தில், தீபலட்சுமியாகத் திகழ்பவள்,வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும்; சொர்க்கத்தில் – லட்சுமியாகவும்; ராஜ்ஜியத்தில் – ராஜ்யலட்சுமியாகவும்; இல்லங்களில் – கிரகலட்சுமியாகவும் 
இருப்பதாக ஐதீகம். ஒரு வீட்டில் இருந்து, இன்னொரு வீட்டுக்கு தீபமேற்றப்பட்ட விளக்கை எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம். 
 
கார்த்திகை மாதத்தை மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் மாதம் என்பர். சிவ பெருமானையும், மகாவிஷ்ணுவையும், முருகப் பெருமானையும் கார்த்திகையில் வழிபட்டுப் பேறுகள் பல பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
 
இம்மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகித்து, வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சித்து, இனிப்புப் பொருட்களைச் சமர்ப் பித்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
 
மகாவிஷ்ணுவை துளசி தளத்தால் அர்ச்சித்து வழிபட்டால் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
 
முருகப் பெருமானுக்கு சந்தனாபிஷேகம் செய்து, இனிப்பான பழங்களைச் சமர்ப்பித்து வழிபட்டால் சந்தான பாக்கியம் கிட்டும்.
 
பொதுவாக கார்த்தி கையில் விளக்குதானம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு, தீபஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினால், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.
 
மக்கட்செல்வம் இல்லாத தம்பதியர் பக்தியுடன் இறைவழிபாட்டில் ஈடுபட்டு அன்புடன் தாம்பத்தியத்தில் கலந்திட  மக்கட் செல்வம் கிட்டும். கர்ப்பம் தரிப்பதில் உள்ள சிக்கல் நீங்கி  அழகிய- அறிவுள்ள குழந்தை பிறக்க வழி வகுக்கும். அதனால்தான் இம்மாதத் தினைத் திருமண மாதம் -மக்கட் செல்வத்தை அருளும் மாதம் என்று சொல்வர்.
 
கார்த்திகை பௌர்ணமி அன்று  சந்திரன் பூமிக்கு அருகில் நெருங்கி வருவதால், சந்திரனின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும். அன்று சிவபெருமான் தன் தேவியுடன்  பூமிக்கு அருகில் வந்து அருள்புரிவதாக ஐதீகம். அதனால், கார்த்திகைப் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப் பிக்கப் படுகிறது.
 
கிரிவலம் வருவதற்குப் பல மலைகள் உள்ளன. இதில் மிகவும் சிறப்புப் பெற்றது திருவண்ணாமலை.
கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும். லட்சம் மழைத்துளிகளில் ஒன்று  தேவசக்தி பெற்றது என்று சொல்லப்படுகிறது.
 
திருவண்ணாமலையை கார்த்திகைப் பௌர்ணமி அன்று  தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள்.
மகா விஷ்ணு மகாலட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இன்னும் சொல்லப் போனால் இறைவனே தன் தேவியுடன்  இம்மலையை தீபத் திருநாளுக்கு மறு நாளும், தைப்பொங்கல் சமயத்தில் மாட்டுப் பொங்கல் அன்றும் வலம் வருகிறார். அப் பொழுது அவர்களுடன் நாமும் வலம் வந்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்!
 
கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்த தாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். நெல்லி மரம் இல்லாதபட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடை பெறும். சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர்.
 
கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப் படுகிறது. இதனால் யமவாதனை, யமபயம் நீங்கும்.
 
விருச்சிக மாதமாகிய கார்த்திகை மாதத்தில்  பௌர்ணமியுடன் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட, சகல பாக்கியங்களையும் பெறலாம்.
 
கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரையும் அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளில் திருவண்ணாமலையின் உச்சியில் சிவபெருமான் ஜோதி வடிவில் பிரகாசமாகத் திகழ்கிறார். இதனைத் தரிசித்தால் நோயற்ற வாழ்வும் பசித்த வேளையில் உணவும் வளமான வாழ்வும் கிட்டும் என்று ஆன்றோர் சொல்வர்.
 
சிவபெருமான் கார்த்திகைத் தீபத் திரு விழா அன்று திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி தருகிறார்.
 
ஸ்ரீரங்கத்திலோ பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.அப்போது பக்தர்களும் இக்காட்சியைக் கண்டு, பெருமாளை வழிபடுவார்கள். பெருமாளையும் சொக்கப்பனையையும் தரிசிக்கும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.
 
 

Thursday, 1 December 2016

வெற்றியின் ரகசியம் விஜயாபதி!






இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.

விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது.

 
விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது, அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும், ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள். அப்படி கொன்றதால்,  இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி...
 
300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது. இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது. எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும்.
 
விஸ்வாமித்திர மகரிஷி, தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர். விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர்.
 
கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற தகுதி பெற்றார் .

விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து . அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும் (காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )

விஜயாபதியில் அமைந்துள்ள  ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனைஅன்னதானம் நடைபெறுகிறது.


விஸ்வாமித்திரமகரிஷி கோவில்!






 
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!



 
 
 
 

விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு!





க்ஷத்திரிய குல அரசனான காதியின் மகள் சத்யவதிக்கும், கௌசிக குலத்தைச் சார்ந்த பிராமணர் ரிஷிகா என்பவருக்கும் பிறந்தவர் விஸ்வாமித்திரர் என்கிறது விஷ்ணு புராணம். சத்யவதி கர்ப்பவதியாக இருக்கும்போது, பிராமணனைப் போன்ற குணமுடைய குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பினார்


ரிஷிகா. ஆனால், சத்யவதியின் மனதில், க்ஷத்திரியனைப் போல் வீரமுள்ள குழந்தைதான் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முதல் குழந்தையான விஸ்வாமித்திரர் தாயின் க்ஷத்திரிய குல சாயலாகவும், பிராமண குல பண்புடனும் பிறந்தார்.


அவர் தம்பியான ஜமதக்னி போர்க்குணம் நிறைந்த பிராமணனாகவும் க்ஷத்திரியர்களை அழிக்கவும் மனம் கொண்டிருந்தார். விஸ்வாமித்ர முனிவர் க்ஷத்திரிய குலத்தைச் சார்ந்தவராக இருந்தபடியால், அவரிடம் கோபம், வேகம், வேட்கை ஆகியவை இயற்கையாகவே இருந்தன.

ராஜ குலத்தைச் சார்ந்ததால், ரிஷி எல்லாவற்றையும் தன் அதிகாரத்தால் பெற வேண்டும் என்ற ஆணவம் அவரிடம் நிறைந்திருந்தது.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் புத்திரரான வசிஷ்ட மகரிஷியைப் போல் தானும் படைப்பாற்றல் பெற வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த எண்ணம் கொள்ளாமல், சுயநலத் தேவைகளுக்காக படைப்புச் சக்தியைப் பெற பெரும் முயற்சி கொண்டார்.

அதில் தோல்வியையும் கண்டார். இவர் அஷ்டதிக் பாலகர்களைப் பார்த்தாலும், அவர்களைப் போல் தனக்கே அத்துணை சக்திகளும் வேண்டும் என்றே நினைப்பார்.

விஸ்வாமித்திரருக்கு, தான் வசிஷ்டரைப் போல் பிரம்மரிஷியாக வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இத்துடன் வசிஷ்ட மகரிஷியே தன்னை பிரம்மரிஷியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறியும் அவர் மனதில் இருந்தது. அவரின் க்ஷத்திரிய குல அரச குணத்தால், அவரின் தவ வலிமைகள் எல்லாம் அவரின் சுய ஆசாபாசங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.




விஸ்வாமித்திரை சிறந்த பிரம்மகுல ரிஷியாக மாற்ற, இந்திரனுக்கு ஆணையிட்டார் பிரம்மா. இந்திரன் தன் சபையில் உள்ள சிறந்த அழகியும், அறிவில் சிறந்தவளுமான மேனகையை முதலில் அனுப்பி, அவர் புத்தி எனும் இரண்டாம் நிலையிலிருந்து பெண் சக்தியின் ஆக்ஞா சக்கரத்தை விஸ்வாமித்திரருக்கு வழங்க முயற்சித்தார். விஸ்வாமித்திரர் மேனகையின் ஆக்ஞை சக்கரத்தை பந்தத்தில் ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், கீழ்நிலையான காமத்தில் லயித்துவிட்டார்.

தன் சுய அறிவினால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியும் என்று நினைத்த விஸ்வாமித்திரருக்கு, பிரம்மா பாடம் புகட்ட நினைத்தார். விஸ்வாமித்திரர் முன்னால் தோன்றி, அவர் பிரம்ம ரிஷிதான் என்று கூறியவுடன், அதை பிரம்ம ரிஷியான வசிஷ்டர் தன் வாயால் சொல்ல வேண்டும் என்று கூறினார். வசிஷ்டர் அப்படித் தன்னை ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா என்கிற கோபத்துடனும் ஆணவத்துடனும் ஒரு கட்டத்தில் அவரைக் கொல்லவும் துணிந்தார்.


வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி இதை அறிந்து, தன் கணவரிடம் விஸ்வாமித்திரர் பிரம்மரிஷிதான் என்று அவர் தம் வாயால் கூறி விடும்படி ஆலோசனை வழங்கினார்.
மகரிஷியும் தன் திருவுளம் திறந்து,

அருந்ததியே! நான் விஸ்வாமித்திரரின் மேல் கொண்ட பேரன்பினாலேயே, அவரை பிரம்ம ரிஷி என்று என் மனமார ஏற்றுக்கொள்வதுடன் எல்லோர் முன்னிலையிலும் இதைக் கூறுவேன் என்றார்.


வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தின் வெளியில் அவரைக் கொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் செவிகளில் வசிஷ்டர் கூறிய வார்த்தைகள் விழுந்தன. அவை விஸ்வாமித்திரரின் ஆணவம், அகந்தை, கோபம் எனும் க்ஷத்திரிய குணங்களைச் சுக்குநூறாக உடைத்தன.


தன்மீது அன்பு கொண்ட வசிஷ்டரைக் கொல்ல நினைத்ததை எண்ணி, மனம் பதைத்து கண்ணீர் மல்க தன் பாவங்களை வசிஷ்டரின் பாதங்களில் சமர்ப்பித்துக் கதறினார்.

விஸ்வாமித்திரரை வாரி அணைத்துக் கொண்ட வசிஷ்டர், விஸ்வாமித்திரரின் ஆக்ஞா சக்கரம் விழிப்பு உணர்வு பெற, புருவ மத்தியில் தொட்டு ஆசிர்வதித்து பிரம்மரிஷி என்று அழைத்து வாழ்த்தினார். பிரம்மரிஷி என்ற பட்டம், அவருக்கு பெருமையைத் தராமல் பொறுமையைத் தந்து விழிப்பு உணர்வையும் தந்தது.

ஆண் குலத்திற்கே விழிப்பு உணர்வு எனும் மூன்றாம் கண்ணைக் கொடுத்த சக்தியை, தன் புருவ மத்தியில் ஐந்து முகமுடைய காயத்ரிதேவியாக விஸ்வாமித்திரர் கண்டுணர்ந்தார். காயத்ரிதேவியின் தரிசனம், பஞ்சமா பாவத்திலிருந்து அவரை விடுதலையாக்கியதுடன், அவரின் உடலில் பஞ்ச வாயுக்களையும் சரிசெய்து நிலைப்படுத்தியதுடன், பஞ்சபூதங்களுடன் இணைந்து வாழும் வாழ்வையும் விஸ்வாமித்திரருக்குக் கொடுத்தது.


விஸ்வாமித்திர
ர் உன்னதமான மூன்றாம் உணர்வு நிலையில் , அதன் வல்லமையை அனைவரும் உணரும் வண்ணமாக காயத்ரி மந்திரத்தைப் போல் சிறந்த மந்திரம் இல்லை என்று சொல்லும்படியாக உருவாக்கினார். கிருஷ்ண பரமாத்மாவும், மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கின்றேன் என்று கீதையில் கூறுகின்றார்.


பாவங்களை நீக்கி, சமநிலைப்படுத்தி, சந்தோஷத்தைக் கொடுத்து சக்தியைப் பெருக்கும் மிகவும் சக்திவாய்ந்த காயத்ரி மந்திரம் எனும் மந்திரத்தை விஸ்வாமித்திரரே இந்த உலகிற்குக் கொடுத்தார் என்று ரிக் வேதம் கூறுகின்றது.

ரிக்வேதத்தின் 5-ஆம் பகுதியை விஸ்வாமித்திரர்தான் இயற்றினார்.

விஸ்வாமித்திரரின் வாழ்க்கை, முழுமையாக மாற்றப்பட்டுவிட்டது. மனிதனின் கடமைகள் பற்றிய முழு உண்மைகளை எழுதியதுடன், லஞ்சம் கொடுப்பது, லஞ்சம் பெறுவதின் சாபங்களையும் குறித்து எழுதினார் என்று, மஹாபாரதம் அனுசாசன பர்வம் 93-ஆம் அதிகாரம் 43-ஆம் பதத்தில் கூறப்பட்டுள்ளது.


ராமாயணத்தில் ராமபிரானுக்கும், லட்சுமணருக்கும், அதர்மத்துக்கு எதிராக எப்படி அஸ்திரங்களைப் பயன்படுத்துவது என்று போதித்து, 47 வகையான அஸ்திரங்களை எப்படிப் பிரயோகிப்பது என்றும் விஸ்வாமித்திரர் போதித்தார் என்று வால்மீகி ராமாயண பாலகாண்ட 27-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.



ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதியில்  உள்ளது.

விஸ்வாமித்திரமகரிஷி கோவில்