Thursday 15 December 2016

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணமறுமே!


திருமாலும், பிரம்மாவும் ஈசனின் அடிமுடியைத் தேடி ஓய்ந்து போய் இறுதியில் சரணடைந்ததும், இருவருக்கும் மத்தியில் செஞ்சுடர் ஸ்தாணுவாக, அக்னி ஸ்தம்பமாக இறைவன் நின்றதை அனைவரும் அறிவோம். இதுவே திருவண்ணாமலையின் தலபுராணம்.

இங்கு அடிமுடி காணும் முயற்சி என்பதே ஒரு ஜீவன் மெய்யறிவு பெறுதலேயாகும்.

மானுடர்களுக்குப் புரியும் பொருட்டு நடத்திக்காட்டுவதே தீபத்திருவிழாவாகும். திருவண்ணாமலையே சுயம் சிவமாகும். ஈசனே கருணைகொண்டு கிரியுருவாக உள்ள தலம். அந்த கிரியே லிங்கமாகும். அதையே அடிவாரத்தில் சிறு லிங்க மூர்த்தமாக பாவித்து அருணாசலேஸ்வரர் கோயிலாக்கியிருக்கின்றனர்.

அண்ணா என்றால் ‘நெருங்கவே முடியாத’ என்று அர்த்தம். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்கமுடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்தது. கார்த்திகையன்று நெற்பொரிக்கும், வெல்லத்திற்கும் கூட தத்துவம் உண்டு. தூய்மையான நெற்பொரி தன்னலமற்ற வள்ளல் தன்மையை குறிப்பதாகும். அன்பிற்கும், தூய உள்ளத்திற்கும் அறிகுறியாகும். பொரியும் தித்திப்புத் தன்மையை யுடைய வெல்லமும் ஒன்று கலந்து நிவேதனம் செய்யப்பட வேண்டுமென்று மயூர தலபுராணம் கூறுகின்றது. 

இறைவன் உறையும் கோயிலில் விளக்கிடுவோர் மெய்ஞானிகளாக விளங்குவார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார், கணம்புல்ல நாயனார். கணம்புல் என்ற ஒருவகைப்புல்லை அரிந்து வந்து அதனை விற்று, கிடைத்தத் தொகையில் அன்புடன் இறைவனுக்கு விளக்கேற்றி உவந்தார். சில நாட்களுக்குப் பின்னர் கணம்புல் விலை போகவில்லை. அதனால் அப்புல்லையே விளக்காக எரிக்கவே, இவர் கணம்புல்லர் என்னும் பெயர் பெற்றார். கார்த்திகை மாதம் கார்த்திகையன்று கணம்புல்லைத் திரியாக்கி ஒரு யாமப் பொழுது எரிக்க நியதிப்படி புல் போதவில்லை.

அன்பின் மிகுதியால் கணம்புல்லர் தமது திருமுடியை எரித்தார். புரம் எரித்த புனிதர் அவருக்குக் காட்சி தந்து மாட்சி மிக்க சிவபதம் வழங்கினார். திருஞானசம்பந்தர், தொண்டை நாட்டு தலங்களை தரிசித்தபடி வந்தார். சீர்காழியிலிருந்து ஒவ்வொரு தலமாக பயணித்தபடியே திருவறையணி நல்லூர் பெருமானைப் போற்றி வலம் வந்தார். அப்போது உடனிருந்த அன்பர்கள் திருவண்ணாமலை இதோ காட்சி தருகிறது என்று சம்பந்தருக்கு சுட்டிக் காட்டினர். அழல் வண்ணராகிய அண்ணாமலையை பார்த்தவுடன் குழந்தை அழகாக ஒரு பதிகம் பாடியது:

உண்ணாமுலை யுமையாளொடும்
உடனாகிய
ஒருவன் பெண்ணாகிய பெருமான்
மலை திருமாமணி
திகழ மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைய் முழ
வதிரும் அண்ணாமலை தொழுவார்
வினை வழுவாவண்ணமறுமே!

இதோடு மட்டுமல்லாமல் அண்ணாமலையை அடைந்து, ‘‘பூவார் மலர் கொண்டடியார் தொழுவார்’’ எனவும் பாடிப் பரவினார். திருநாவுக்கரசர் திருப்பைஞ்ஞீலி தலத்திலிருந்து அண்ணாமலையாரை அடைந்து,

வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையினை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையயடி யேன்மறந் துய்வனோ

- என்று பதிகம் பாடினார். மாணிக்கவாசகர் அருணைக்கு வந்து சில நாட்கள் தங்கி அண்ணா மலையாரைப் பணிந்து போற்றினார்.

வாருங்கள், அருணாசல மலையின் அடிவாரத்தில் கோயில் கொண்டுள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தையும் தரிசிப்போம். அருணாசலேஸ்வரர் கோயில் மற்ற கோயிலைப் போலவே, கருவறை, முக மண்டபம், திருச்சுற்றுகள், மதில்கள் சூழ திகழ்கின்றது. கோயிலின் கீழ்த் திசையிலுள்ள பெரிய கோபுரத்திற்கு ராஜகோபுரம் என்று பெயர். கோயிலின் ராஜகோபுரத்தை நாயக்கர்களின் தலைமை குருவாகவும், அமைச்சராகவும் இருந்த கோவிந்த தீட்சிதரால் அமைக்கப்பட்டது.

வடக்குப் பக்கத்திலுள்ள கோபுரத்தை அம்மணி அம்மாள் கோபுரம் என்றும், தெற்குப் பக்கத்திலுள்ளதை திருமஞ்சன கோபுரமென்றும், மேற்குப் பக்கத்திலுள்ளதை பேய்க் கோபுரமென்றும் அழைப்பர். மேற்கு என்பதே மேக் என்பதாகி பேய்க் என்று திரிந்து விட்டது. கோபுரங்கள் நிறைய சூழ்ந்ததுபோலவே கோயிலினுள் ஞானப் பால் மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், திருவருள் விலாச மண்டபம், மாதப் பிறப்பு மண்டபம், ருத்ராட்ச மண்டபம், பன்னீர் மண்டபம், காட்சி மண்டபம் போன்ற மண்டபங் களும் உள்ளன.

கோயிலின் உள்ளேயிருக்கும் முதல் பிராகாரமும், இரண்டாம் பிராகாரமும் அதை ஒட்டிய மதிலும் மிக மிக பழமை வாய்ந்தது. மூன்றாம் பிராகாரம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இதை கிளிக்கோபுர வாயிலிலுள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம். நான்காவது, ஐந்தாவது பிராகாரங்களும், ஆயிரங்கால் மண்டபமும், பெரிய நந்தியும், சிவகங்கைத் தீர்த்தமும், வெளி வாயிற் கோபுரங்களும் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

ஆயிரம்கால் மண்டபத்தையும், சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும், கிளி கோபுரத்தை கி.பி 1053ம் ஆண்டு ராஜேந்திர சோழனும், பிரம்ம தீர்த்தத்தை கி.பி1230ம் ஆண்டு வேணுதாயனும், வள்ளால கோபுரத்தை கி.பி 1320ம் ஆண்டு வள்ளால மஹாராஜாவும் கட்டியுள்ளனர். மேலும், இக்கோயில் உருவாக குலோத்துங்கன், ராஜேந்திர சோழன், கோப்பெரும்சிங்கன், ஆதித்ய சோழன், மங்கையர்க்கரசி, விக்கிரம பாண்டியன், அம்மானை அம்மாள் ஆகியோரும் காரணமாக இருந்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட
பெருமைக்குரியது இந்த திருவண்ணாமலை.

இப்போது மீண்டும் ராஜகோபுரத்திற்குள் புகுவோம். வலப்புறத்தில் ஆயிரங்கால் மண்டபத்தை காணலாம். இது கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்தது. தூண்கள் முழுக்க சிவமூர்த்தங்களை செதுக்கியும், திருமாலின் அவதாரங்களை சிற்பங்களாக்கியும் கலைவித்தை காட்டியிருக்கிறார்கள். ஆயிரங்கால் மண்டபத்தின் தென்மேற்கே பகவான் ரமண மகரிஷி பால பருவத்தில் திருவண்ணாமலையை அடைந்து பாதாள லிங்கத்தில் அமர்ந்தார். இன்றும் அதை நினைவுபடுத்தும் வகையில் பகவானின் திருவுருவப் படத்தை வைத்திருக்கிறார்கள்.

முதல் பிராகாரத்தில் வராக உருவில் திருமால் கால்களை நீட்டி நீந்துவது போலவும், மேல் முடியின் மீது அன்னம் அமர்ந்திருப்பது போலவும், கண்ணியோடு லிங்கோத்பவர் விளங்குகின்றார். வழக்கமாக அன்னம் பறப்பது போலிருக்கும், ஆனால், இங்கு அன்னம் முடியின் மீது அமர்ந்திருப்பதுபோலுள்ளது புதுமையாகும். ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே கம்பத்து இளையனார்  சந்நதி. அருணகிரிநாதர் மனம் வெறுத்து வல்லாள மகராஜன் கோபுரத்திலிருந்து கீழே விழும்போது முருகப் பெருமான் அவரைத் தாங்கித் திருவருள் புரிந்தார்;

வள்ளி-தெய்வானை சமேதராகக் காட்சி தந்தார். ‘அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வடஅருகிற் சென்று கண்டு கொண்டேன்’ என்று பாடிப் போற்றுகிறார். இங்கு கிளி கோபுரமெனும் கோபுரமும் உண்டு. ஆச்சரியமான ஓர் நிகழ்வுக்கு இப்போதும் நிற்கும் சாட்சி இது. பிரபுட தேவராயர் என்பவர், தேவலோகத்திலிருந்து பாரிஜாத மலர் கொணர்க என்று அருணகிரியாரிடம் சொல்ல, அதனைக் கொணரும் பொருட்டு கிளியுருவில் அவர் செல்ல, அவருடன் பகைபாராட்டிய சம்பந்தாண்டான் அதனைத் தெரிந்து கொண்டு அருணகிரிநாதர் மரித்தார் என்று சொல்லி விட்டார்;

அருணகிரியாரின் உடலையும் தகனம் செய்துவிட்டனர். சிலநாட்கள் கழித்துத் திரும்பிய அருணகிரிநாதர், தான் விட்டுச் சென்ற தன் உடலைக் காணாது கிளியாகவே அந்த கோபுரத்தில் அமர்ந்து கந்தர் அனுபூதி என்கிற அற்புதமான பாடல்களை இயற்றினார். எனவேதான், அந்த கோபுரம் கிளி கோபுரம் என்றானது. கிளிக் கோபுர படித்துறைக்கு அருகேயே யானை திறை கொண்ட விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கம்பத்து இளையனார் சந்நதிக்குத் தெற்கே நாற்புறங்களிலும் திருமாளிகைப்பத்தி மண்டபத்துடன் குளம் அமைந்துள்ளது.

இது தீர்த்தவாரிக்கு பயன்படுத்தப்படுகிறது. இத்திருக்குளத்திற்கு திருமலை அம்மன் தேவி சமுத்திரம் என்னும் பெயரில் கால்வாய் வெட்டி, தண்ணீர் கொண்டு வந்ததாக கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது. இதற்கு அருகேயே விநாயகர் சந்நதியொன்றும் உண்டு. இவருக்கு சிவகங்கை விநாயகர் என்று பெயர். சிவகங்கை தீர்த்தம், விநாயகர் கோயிலெல்லாம் கடந்து செல்லும் முன் பெரிய நந்தி மண்டபம் அழகுற அமைந்துள்ளது. இந்த நந்தி வல்லாள மகராஜாவினால் கட்டப்பட்டது.

நான்காம் பிராகாரத்தில் கால பைரவர் சந்நதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம்,  சக்தி விலாசம், கருணை இல்லம், பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம், வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம், யானை திறை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார் ஆகியோரைக் கண்டு களிக்கலாம். கிளி கோபுரத்தின் நேர் எதிரே பதினாறு கால் மண்டபம் உள்ளது. தீபப் பெருவிழாவின்போது பத்தாம் நாள் காலை ஐந்து மணிக்கு பரணி தீபமும், மாலை சரியாக ஆறுமணிக்கு மலையின் மீது ஜோதியும் ஏற்றப்படும்.

அதற்கு முன்னரே பஞ்ச மூர்த்திகளும் பதினாறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அர்த்தநாரீஸ்வரர் தீபம் தாங்கிவந்து பலிபீடத்தின் முன்னர் தீபம் ஏற்றியவுடன் கார்த்திகை தீபம் எரிய, லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலைக்கு அரோகரா...’ என்று களிப்பு மிகுந்து கூவுவர். கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றின் வடபுறம் சம்பந்த விநாயகரும், தென்புறம் பழநி ஆண்டவரும் அருள்புரிகின்றார். சம்பந்த விநாயகர் செந்தூரம் அணிந்து சிவந்து காணப்படுகின்றார். பெரிய திருவுருவினராக, அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றார்.

இந்த விநாயகர் அசுரனைக் கொன்று அவனுடைய ரத்தத்தை பூசிக் கொண்டதாக கூறுவர். சக வருடம் 1262ல் வீரவல்லாள தேவர் ஆண்டபோது நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டு கோயிலில் உள்ளது. இதன் மூலம் சம்பந்தாண்டார் திருவண்ணாமலையில் இருந்தார், இவர் அண்ணாமலையார் கோயிலில் செல்வாக்கு பெற்றவர், இவர் அமைத்த விநாயகரே சம்பந்த விநாயகர் என்று பெயர் பெற்றிருக்கக் கூடும் என்கின்றனர்.   

மூன்றாம் பிராகாரத்தில் சோகாளத்தீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சிதம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளின் திருச்சந்நதிகள் உள்ளன. மற்றைய பஞ்சபூதத் தலங்களுக்குள் செல்ல முடியாதவர்கள் இங்கேயே ஐந்து மூர்த்திகளையும் வழிபடலாம். மகிழ மரத்தடியில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், நந்தியை தரிசிக்கலாம். இங்கிருந்து நேராக அர்த்தமண்டபம், கருவறையை அடையலாம். அருணாசலேஸ்வரர் லிங்க மூர்த்தத்தில் பேரருள் பொழிகிறார்.

மூலவர் கோயிலின் வெளிப் பிராகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்களை வணங்கிச் சென்றால், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும் இரண்டாம் பிராகாரத்தில் வணங்கலாம். பள்ளியறையும் இங்கேயே உள்ளது. காலசங்காரர் திருவுருவம் மூன்றடி உயரத்தில் மழு, பாசம், சூலம், கபாலம் ஆகியவை கொண்டு, காலனைக் கடிகின்ற மூர்த்தியாகக் காணப்படுகின்றது. 

அருணாசலேஸ்வரரை தரிசித்தபின் தனிக்கோயிலில் வீற்றிருக்கும் உண்ணாமுலை அம்மனை தரிசிக்கலாம். அம்பிகை கோயிலின் மண்டபத்தில் நவகிரகங்களை தரிசித்து மகாமண்டபத்திற்குள் நுழைந்தால் பதினாறு தூண்களுமே கலைப்பெட்டகங்களாக திகழ்கின்றன. அம்பாள் உண்ணாமுலையம்மன் சமஸ்கிருதத்தில் அபிதகுஜாம்பிகை என்றழைக்கப்படுகிறாள். அம்மன் கருவறை முழுவதும் சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது. இக்கருவறையைச் சுற்றியுள்ள பிராகாரத்தின் மேற்கே உற்சவ  மூர்த்திகள் உள்ளனர்.

கருவறையைச் சுற்றிலும் அந்தராலத்திலும் ஐந்து சக்தி அம்மன்கள் தேவகோட்டத்தில் உள்ளனர். ஒவ்வொரு அம்மனும் ஒன்றரை அடி உயரம். திருச்சந்நதிக்கு வெளியேயுள்ள மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் அழகிய அஷ்ட லட்சுமிகள் இருப்பதால் இது அஷ்டலட்சுமி மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது. இக்கோயிலில் மிக அழகிய செப்புத் திருமேனிகளை விழாக்களில் தரிசிக்கலாம். சற்றே வித்தியாசமாகத் தோன்றும் பிடாரியைக் குறிப்பாகச் சொல்லலாம். செப்புத் திருமேனியளான பிடாரியம்மன் சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.

தலையில் தீச்சுவாலை, வாயில் கோரைப்  பற்கள். உடுக்கை, பாசம், சூலம், கபாலம் ஏந்தியிருக்கிறாள். அடுத்து இரண்டரை அடி உயர பராசக்தி சுக்கிரவார புறப்பாடு காண்பவள். அங்குசம், பாசம், அபயம், வரத முத்திரையோடு அருள்கிறாள். பள்ளியறை அம்மனின் செப்புத் திருமேனி பிற்கால கலையம்சம் கொண்டது. கிரீட மகுடம், கச்சை, மகர குண்டலங்கள், கொலுசு, பாடகம் கொண்டு விளங்குகிறது. இங்கு அருணாசல மலையே பிரதானம். இந்த மலையையே ஞானிகள் போற்றுகிறார்கள்; புராணங்களும் விவரிக்கின்றன.

எனவே, அருணாசல மலையின் மகிமையை தெரிந்து கொள்வது சிரத்தையை அதிகமாக்கும். சிந்தையின் ஏகாகிரகத்தை இன்னும் கூர்மையாக்கும். பக்தியையும் புஷ்டியாக்கும். பெறுதற்கும் அரிதான பேறான ஞானத்தை வழங்கும்.

ஞானமே உருகொண்ட ஈசன், தூல உருகொண்ட மலையாகத் தன்னை அபிமானித்திருக்கிறார். அதனால்தான் இந்த மலை வேறல்ல, சிவம் வேறல்ல. அருணாசல மலையே சிவபெருமான். சிவபெருமானே அருணாசல மலை. ஆத்மப் பிரதட்சணம் செய்திருக்கிறீர்களா. கவலைப்படாதீர்கள்.

இந்த அருணாசலத்தை வலம் வாருங்கள். அதுவே கிருபையைப் பெறும் வழி. அசலமான மலையை சுற்றும்போது மனம் நிச்சலமாக மாறும். சலசலத்துக் கொண்டிருக்கும் மனதை அசலமாக்கும் மலை இது. ஆதியந்தமற்ற அந்த ஆத்மா அருணாசலமாக இங்கு எழுந்தருளியுள்ளது.’’ 

No comments:

Post a Comment