Friday 2 December 2016

தீபங்கள் வாழ்த்தும் திருக்கார்த்திகை!

திருக்கார்த்திகை!
 
ருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. 

நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது,அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது.
 
ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின்  மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகை கூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். 
 
தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார். ‘‘தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு  நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்!’’ என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். 
 
நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி திதியில்  இறைவன் திருவுள்ளம் இரங்கியது.
 
இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர்.
 
சோம வார விரதம்:
 
சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.
 
சோமவார விரதம் – திங்கள் கிழமைகளில் இருப்பது 
                                 
சோம வார விரதம் – கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து இருத்தல் வேண்டும் சோம வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு, மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப்பதே முறை.
 
உமா மகேஸ்வரி விரதம்!
 
இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம். இரவு பலகாரம் பழம் சாப்பிடலாம்.
 
திருக்கார்த்திகை தினத் தன்று திருவண்ணாமலையில்  விஸ்வரூப தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதால், புயல் ஏற்பட்டால் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 
வாழ்க்கையில் புயல் போன்ற துன்பங்கள் வந்தாலும், தீப தரிசனம் செய்தால் அவை எளிதில் நீங்கி விடும் என்ற  தத்துவத்தையும் இது உணர்த்துகிறது.
 
சிவசக்தி தீபம்!

திருக்கார்த்திகை தினத்தன்று, “கிலியஞ்சட்டியி’ல் (களி மண்ணால் செய்யப்படும் விளக்கு) பசு நெய் அல்லது நல்லஎண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு, அதில் தான் விளக்கு ஏற்ற வேண்டும்.
 
 வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். 
 
விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, தீபத்தில் பசுநெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து, “சிவசக்தி’ சொரூப மாகிறது. 
பெரிய கார்த்திகை!
 
பன்னிரெண்டு மாதங் களிலும் கிருத்திகை வருகிறது. எனினும், கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியுடன் சேர்ந்து வருகிறது. ஆகவே, இதை, “பெரிய கார்த்திகை’ என்று போற்றுகின்றனர். 
 
கார்த்திகை மாதம் முழுவதுமே, தினசரி மாலையில் அகல் விளக்குகளை ஏற்றுவது நல்லது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், காசி நகரிலும் இவ்வழக்கம் இன்றும் உள்ளது.
 
கார்த்திகையின் சிறப்பு!
 
இருபத்தியேழு நட்சத்திரங்களில் ரோகிணி, கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களில், மற்ற 25 நட்சத்திரங்களும் அடக்கம். ஆகவே, கார்த்திகை ரோகிணி நட்சத்திரம் உள்ள நாட்களில் சந்திரனை தரிசித்தால், 27 நட்சத்திரங்களையும் வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
 
கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். முருக கடவுள் கார்த்திகேயன், பொறி வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக சொல்வோரும் உண்டு.
 
சொக்கப்பனை!

திருக்கார்த்திகை தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நாட்டி,அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்துக் கட்டுவர். மாலையில், சொக்கப் பனை கொளுத்தப்படும். ஆணவம் எரிகிறது, கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே இதன் தத்துவம். 
 
சிவன் முப்புரம் எரிந்த பாவனையை காட்டுவதற்காக சிவாலயங்களில் சொக்கப் பனை கொளுத்துகின்றனர். சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. 
 
கார்த்திகை என்றாலே தீபம் தானே நம் நினைவுக்கு வரும். விளக்கில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. திருவிளக்கை தீபலட்சுமி என்பர். துர்கையின் வடிவங்களிலும் தீப துர்கை உண்டு. தீபத்தில், தீபலட்சுமியாகத் திகழ்பவள்,வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும்; சொர்க்கத்தில் – லட்சுமியாகவும்; ராஜ்ஜியத்தில் – ராஜ்யலட்சுமியாகவும்; இல்லங்களில் – கிரகலட்சுமியாகவும் 
இருப்பதாக ஐதீகம். ஒரு வீட்டில் இருந்து, இன்னொரு வீட்டுக்கு தீபமேற்றப்பட்ட விளக்கை எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம். 
 
கார்த்திகை மாதத்தை மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் மாதம் என்பர். சிவ பெருமானையும், மகாவிஷ்ணுவையும், முருகப் பெருமானையும் கார்த்திகையில் வழிபட்டுப் பேறுகள் பல பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
 
இம்மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகித்து, வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சித்து, இனிப்புப் பொருட்களைச் சமர்ப் பித்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
 
மகாவிஷ்ணுவை துளசி தளத்தால் அர்ச்சித்து வழிபட்டால் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
 
முருகப் பெருமானுக்கு சந்தனாபிஷேகம் செய்து, இனிப்பான பழங்களைச் சமர்ப்பித்து வழிபட்டால் சந்தான பாக்கியம் கிட்டும்.
 
பொதுவாக கார்த்தி கையில் விளக்குதானம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு, தீபஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினால், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.
 
மக்கட்செல்வம் இல்லாத தம்பதியர் பக்தியுடன் இறைவழிபாட்டில் ஈடுபட்டு அன்புடன் தாம்பத்தியத்தில் கலந்திட  மக்கட் செல்வம் கிட்டும். கர்ப்பம் தரிப்பதில் உள்ள சிக்கல் நீங்கி  அழகிய- அறிவுள்ள குழந்தை பிறக்க வழி வகுக்கும். அதனால்தான் இம்மாதத் தினைத் திருமண மாதம் -மக்கட் செல்வத்தை அருளும் மாதம் என்று சொல்வர்.
 
கார்த்திகை பௌர்ணமி அன்று  சந்திரன் பூமிக்கு அருகில் நெருங்கி வருவதால், சந்திரனின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும். அன்று சிவபெருமான் தன் தேவியுடன்  பூமிக்கு அருகில் வந்து அருள்புரிவதாக ஐதீகம். அதனால், கார்த்திகைப் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப் பிக்கப் படுகிறது.
 
கிரிவலம் வருவதற்குப் பல மலைகள் உள்ளன. இதில் மிகவும் சிறப்புப் பெற்றது திருவண்ணாமலை.
கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும். லட்சம் மழைத்துளிகளில் ஒன்று  தேவசக்தி பெற்றது என்று சொல்லப்படுகிறது.
 
திருவண்ணாமலையை கார்த்திகைப் பௌர்ணமி அன்று  தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள்.
மகா விஷ்ணு மகாலட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இன்னும் சொல்லப் போனால் இறைவனே தன் தேவியுடன்  இம்மலையை தீபத் திருநாளுக்கு மறு நாளும், தைப்பொங்கல் சமயத்தில் மாட்டுப் பொங்கல் அன்றும் வலம் வருகிறார். அப் பொழுது அவர்களுடன் நாமும் வலம் வந்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்!
 
கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்த தாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும். நெல்லி மரம் இல்லாதபட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடை பெறும். சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர்.
 
கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப் படுகிறது. இதனால் யமவாதனை, யமபயம் நீங்கும்.
 
விருச்சிக மாதமாகிய கார்த்திகை மாதத்தில்  பௌர்ணமியுடன் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட, சகல பாக்கியங்களையும் பெறலாம்.
 
கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரையும் அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளில் திருவண்ணாமலையின் உச்சியில் சிவபெருமான் ஜோதி வடிவில் பிரகாசமாகத் திகழ்கிறார். இதனைத் தரிசித்தால் நோயற்ற வாழ்வும் பசித்த வேளையில் உணவும் வளமான வாழ்வும் கிட்டும் என்று ஆன்றோர் சொல்வர்.
 
சிவபெருமான் கார்த்திகைத் தீபத் திரு விழா அன்று திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி தருகிறார்.
 
ஸ்ரீரங்கத்திலோ பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.அப்போது பக்தர்களும் இக்காட்சியைக் கண்டு, பெருமாளை வழிபடுவார்கள். பெருமாளையும் சொக்கப்பனையையும் தரிசிக்கும் பக்தர்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.
 
 

No comments:

Post a Comment