Friday, 16 December 2016

பிரத்யட்சமான தெய்வம் சுதர்சனர்!

 
சூரியன் ஒன்றுதான். ஆனாலும் அதிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்களுக்குப் பல வண்ணங்கள். அதைப் போலவே பரம்பொருள் ஒன்றுதான். ஆனாலும், தத்துவ சொரூபமான அநேக வடிவங்களில் பல குண இயல்புகள் கொண்டு விளங்குகிறது. அப்பரம்பொருளை அணுகும் முறையிலும் உபாஸனையிலும் பல துறைகள்  நெறிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சுதர்சன உபாஸனை.

மகாவிஷ்ணுவின் கரங்கள் ஒன்றில் காணப்படும் சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் எனப்படுகிறார். அந்தச் சக்கரம் சுதர்சன சக்கரம் எனப்படுகிறது. காத்தல், படைத்தல், அழித்தல் என்ற முத்தொழிலில் காக்கும் தொழில் கொண்ட விஷ்ணுவுக்கு, துஷ்ட நிக்ரஹத்துக்கு பொறுப்பு இருப்பதால் ஆயுதப்படை அவசியம். அத்தகைய ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். அதனால் அவரை 'ஹேதிராஜன்’ என்றும் கூறுவர். திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கரத்துக்கு உரிய தெய்வம் என்பதால், சுதர்சனர் உக்கிர வடிவினர். வைணவர்கள் விஷ்ணுவின் சக்கர சக்தியை 'சக்கரத்தாழ்வார்’ என்று கூறுவர். சுதர்சனருக்கு சக்கரராயர் என்றும் ஒரு பெயர் உண்டு.

சுதர்சனர் பிரத்யட்சமான தெய்வம். நெறிமுறைகளுக்கு ஏற்ப தீவிரமாக உபாஸிப்பவர்களுக்கு, உக்கிர வடிவம் கொண்ட சக்கரத்தாழ்வார் மங்கலம் நல்குவதாக பல நூல்களும் கூறுகின்றன.

சுதர்சனரின் வீரம் கிளர்ந்தெழும் வடிவத்தையும், மங்கல இயல்பு களையும், சுதர்சன வழிபாட்டில் ஏற்படும் அருள் நலன் களையும் கீழ்க்காணும் சுலோகம் வர்ணிக்கிறது:

சங்கம் சக்கரம்ச சாபம் பரதம் அஸிகதா
குந்தம் அத்யுக்ர தம்ஷ்ட்ரம் ஜ்வாலா
  கேசம் த்ரிநேத்ரம்
ஜ்வல லலனனிபம் ஹார கேயூர வக்த்ரம்
வந்தே ஷட்கோண சக்ரம் சகல ரிபுஜன
ப்ராணா ஸம்ஹார சக்ரம்

சுதர்சன உபாசனை வீரம் அளிக்கவல்லது. தீர்க்கவொண்ணா நோய்களும் சுதர்சனரின் கடாட்சத்தால் நீங்கப் பெறும் என்பது சுதர்சன உபாஸகர்களின் அனுபவம். போர் முனையில் வெற்றித் திருமகளின் கடாட்சத்தைப் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு வீர வாழ்வு வாழ்ந்த பல மன்னர்கள் சுதர்சன உபாஸிகளாக இருந்திருக்கின்றனர்.

'சுதர்சன சதகம்’ எனும் நூறு பாசுரங்கள் கொண்ட அருள் மாலையை நெறி தவறாது முறைப்படிப் பாராயணம் செய்வதனால், எத்தகைய ஆபத்திலிருந்தும் விடுபெறலாம் என்பது சுதர்சன உபாஸிகளின் நம்பிக்கை.

சுதர்சன உபாஸனையின் பெருமைச் சிறப்புகளை நாடறியச் செய்தவர்களாள் ஸ்ரீநிகமாந்த மகாதேசிகரின் பணி ஒப்பற்றது. ஸ்ரீ தேசிகர் சிறந்த சுதர்சன உபாஸியாக விளங்கியதுடன் 'ஸ்ரீ சுதர்சன அஷ்டகம்’ என்ற பாமாலையையும் சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.

சுதர்சன வடிவங்கள்!

'சில்ப ரத்தினம்’ சுதர்சனரின் பல்வேரு வடிவங்களை வருணிக் கிறது. திருமாலின் சக்கரத்துக்கு உரிய தேவனை அந்நூல் 'சக்கர ரூபி விஷ்ணு’ என்று குறிப்பிடுவதுடன், சுதர்சனர் விஷ்ணுவின் அம்சமே என்பதையும் வலியுறுத்துகிறது. வேலாயுதத்தையே முருகனாக வழிபடுவதுபோல் சுதர்சனரையும் விஷ்ணுவாகவே பாவித்து வழிபடுவது மரபு. எண் கரங்கள் கொண்ட  சுதர்சனரையும், பதினாறு கரங்கள் கொண்ட வடிவையும், முப்பத்திரண்டு கரங்கள் கொண்ட வடிவையும், 'சில்பரத்தினம்’ குறிப்பிடுகிறது.

சாதாரணமாக ஆலயங்களில் சுதர்சனர் எட்டு அல்லது பதினாறு கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் வடிவைக் கல்லிலும் செம்பிலும் காணலாம். ப்ரயொக அவசரத்தில் போர்க்கெழும் கோலத்துடன் பாய்வது போல் பதினாறு கரங்களுடன் காணப்படுகிறார்.

காஞ்சியில் உள்ள அஷ்டபுஜர், எண் கரங்கள் கொண்ட பெருமான்,  திருமாலின் சுதர்சன சக்தி எனப்படுகிறார். குடந்தையில் திருக்கோயில் கொண்டுள்ள சக்கரபாணி, சுதர்சனரின் வடிவமே ஆகும். சக்கரத்தை கரத்தில் கொண்டு சக்கரபாணி என்றே பெயர் பெற்றிருக்கும் அப்பெருமான் சுதர்சனராகவே காட்சி தருகிறார்.

சுதர்சன வழிபாடு பேராபத்துக்களிலிருந்தும், தீரா நோயிலிருந்தும், எடுத்த காரியத்தில் ஏற்படும் இடையூறுகளிலிருந்தும் காக்க வல்லது என்பதால், குரு முகமாக உபதேசம் பெற்று ஜப, தவ, ஹோம, மஹா மந்திரங்களைச் செய்து பயனடையலாம்.

 

சுகம் நல்கும் சிம்ம சுதர்சனர்!


இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சுதர்சனரை (சக்கரத்தாழ்வார்)  திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோயிலில் தரிசிக்கலாம். 

தல வரலாறு:

குருக்ஷத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக, தாமிரபரணியில் நீராடி பாவம் போக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் இத்தலம் அருகே வந்தபோது, ஒரு மருதமரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது, மகாவிஷ்ணு அவனது கனவில் தோன்றி, ""தான்  மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி, அங்கு வந்து தன்னை வணங்கினால், பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும்'' என்றார். விழித்தெழுந்த அர்ஜுனன், மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு சென்றபோது, பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டான். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.

கறிவேப்பிலை சாதம்:

கருவறையில் நீலமணி நாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியை போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் சுவாமிக்கு "கறிவேப்பிலை சாதம்', திருவோண நட்சத்திர தினத்தில் "பாயாசம்' நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, "அர்ஜுனபுரி ÷க்ஷத்திரம்' என்ற பெயரும் உண்டு.

சிம்ம வாகனத்தில் சுதர்சனர் :

இக்கோயிலில் உள்ள சுதர்சனர் தனிசன்னதியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சுவாமியையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் இருப்பது மற்ற இடங்களில் இல்லாத அதிசயம். இங்கு சுதர்சன ஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சம்:

பெருமாள் கோயிலாக இருந்தாலும், சிவ அம்சமான தட்சிணாமூர்த்தியும் இங்கிருப்பது மற்றொரு சிறப்பு. சுவாமியின் கருவறை விமானத்தின் தென்புறத்தில் இருக்கும் இந்த தட்சிணாமூர்த்தி, மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் இரண்டே சீடர்களுடன் இருக்கிறார். இவரது அமைப்பும் வித்தியாசமானது. மற்ற கோயில்களில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டு முயலகனை மிதித்தது போல் இருப்பார். இங்கோ இடது கையை தரையில் ஊன்றி, ஒரு காலை ஐயப்பனுக்குரியது போல், மடக்கி காட்சி தருகிறார்.

முன்மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயரும், அருகிலுள்ள ஒரு தூணில் வலது கையை மேலே தூக்கியும், இடது கையை மார்பில் வைத்தபடியுமான கோலத்தில் மற்றொரு ஆஞ்சநேயரும் உள்ளனர்.இந்த இரட்டை ஆஞ்சநேயர்களை வணங்கினால், வேண்டியது நிறைவேறும் என்கிறார்கள்.


திறக்கும் நேரம்: காலை 7.30 - 10 மணி, மாலை 5.30 - 8.30 மணி.

திருவிழா: சித்திரையில் பிரம்மோற்ஸவம்

இருப்பிடம்: மதுரையில் இருந்து தென்காசி செல்லும் ரோட்டில் 135 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது.

போன்: 99657 61050





 

வரகூர் ஆலயமும், நாராயண தீர்த்தரும்!


 
பூபதி ராஜன் என்ற சோழ மன்னனின் ஆட்சியில் இருந்த இடமே கீழ் தஞ்சாவூரில் உள்ள பூபதி ராஜபுரம் என்பது. அதுவே தற்போது வரகூர் என்று அழைக்கப்படுகிறது. வரகூர் தஞ்சாவூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். இங்குள்ள வெங்கடேச பெருமான் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. பல ஆலயங்கள் ஸ்வயம்புவாகத் தோன்றியதாகக் கூறப்படும் தெய்வங்களின் சிலையை கொண்டுள்ளதாக உள்ளதினால் அவை புனித தீர்த்தங்களாக ஆகி உள்ளன. அவற்றில் காவேரியின் கிளை நதியான குடமுருட்டி நதிக்கரையில் அமைந்துள்ள, சோழர்கள் காலத்தை சேர்ந்த, எண்ணூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் புராதானமான ஆலயம் எனக் கூறப்படும் இந்தத் தலமும் ஒன்று.  இதை பூலோக வைகுண்டம் என்றும் கூறுகிறார்கள்.


இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் தனது மடியில் தாயாரை அமர்த்திக் கொண்ட கோலத்தில் உள்ளார். அற்புதமான சோழ மன்னர்கள் காலத்துக் கலையில் காணப்படும் அதை வீர நாராயணன் எனும் சோழ மன்னனே  பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.



இங்குள்ள வெங்கடேச பெருமான் ஸ்வயம்புவாகத் தோன்றியவர் என்பது ஆலய வரலாற்றின் ஒரு பகுதி. அந்த ஆலய வரலாற்றுக்  கதை என்ன?

கர்ண பரம்பரை செய்திகளின்படி ஆந்திராவில் வரஹாபுரி எனும் கிராமத்தை சேர்ந்தவர் நாராயண தீர்த்தர். அவருடைய தந்தையின் பெயர் நீலகண்ட சாஸ்திரிகள். வைஷ்ணவ பரம்பரையை சேர்ந்தவர். கிருஷ்ண லீலா தாரண்கிணி எனும் புகழ் பெற்ற நாட்டிய பாடல்களை இயற்றியவர். கி.பி. 1675 இல் அவதரித்த அவருக்கு கோவிந்த சாஸ்திரி என்று பெயரிட்டு இருந்தார்கள். அந்த காலங்களில் வேதங்களை பயில்வது வைதீக குடும்ப பிராமணர்களின் பழக்கம். அதை பின்பற்றியே அவரும் வேதங்களைப் பயின்றது மட்டும் அல்ல, அதன் கூடவே நடன சாஸ்திரங்களையும் கற்றறிந்தார். சில வருடங்களில் திருமணம் அடைந்தாலும் விரைவிலேயே குடும்பத்தை துறந்து சன்யாசத்தை ஏற்கும் மன நிலை ஏற்பட்டது. அதற்கும் ஒரு நிகழ்ச்சியே அடித்தளமாக அமைந்தது.

திருமணம் ஆன கோவிந்த சாஸ்திரியின் மனைவியின் வீடு கிருஷ்ணா எனும் நதிக்கரைக்கு அந்தப் பக்கத்தில் இருந்தது. அகவே மனைவி எப்போதாவது தன்னுடைய தாய் வீட்டிற்குப் போனால் அவளைக் காண வேண்டும் என்பதற்காக அந்த நதியில் நீந்திக் கொண்டுதான் அந்தக் கரைப் பகுதியை அடைய வேண்டும் என்ற நிலை. இப்படியாக இருந்தபோது ஒருமுறை அவருடைய மனைவி தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வழக்கம்போல நதியில் இறங்கி நீந்தத் தொடங்கினார். திடீர் என நதியில் எங்கிருந்தோ வந்த வெள்ளமும் சுழல் போன்றதும் ஏற்பட்டு அவரை நீந்த விடாமல் தடுத்தது. எத்தனை முயன்றும் அவரால் நீந்த முடியவில்லை.
 
நதியில் முழுகப் போகின்ற நிலைக்கு வந்தவர் தன்னை மறந்து வேண்டினார் 'கிருஷ்ணா, என்னை இந்த வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினால் நான் சங்கரரைப் போலவே சன்யாசத்தை ஏற்றுக் கொண்டு விடுகிறேன்'. அவர் அப்படி சத்தியம் செய்து கொடுத்த அடுத்த கணம் வெள்ளம் வடியத் துவங்கியது. கலைப்படைன்தவர் அவர் அந்தக் கரையை அடைந்தார். ஆனால் நதியில் கிருஷ்ணருக்கு சத்தியம் செய்து கொடுத்ததை மனைவியிடம் சென்று எப்படி கூறுவது என்று யோசனை செய்தவாறு மனைவியின் வீட்டை அடைந்தார். அங்கு இன்னும் ஒரு ஆச்சர்யம். அவரைக் கண்ட அவரது மனைவிக்கு எந்த சலனமும் இல்லை. வீட்டிற்கு வந்தவரை கணவராக பார்க்காமல், ஒரு சன்யாசி வந்துள்ளதைப் போல அவருக்கு உபசாரம் செய்து தட்சணையும் கொடுத்து அவரை திருப்பி அனுப்பியும் வைத்தாள். அதுவே அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
 
ஒரு வேளை கிருஷ்ண பகவான் தன்னை சன்யாச கோலத்தை ஏற்கச் செய்யத்தான் அந்த நாடகத்தை நடத்தி உள்ளாரோ என்று குழம்பியவர் பல காலம் தனிமையில் இருந்தவாறு தியானம் செய்து வந்தார். மனம் பக்குவப் படத் துவங்கியது. அதே சமயம் அது முதல் அவருடைய மனைவியும் முகம் கோணாமல் தனது கணவரும், சன்யாசி  ஆகி விட்டவரான கோவிந்த சாஸ்திரிக்கும் ஒரு குருகுலத்தில் ஒரு துறவிக்கு அவருடைய சீடர்கள் எப்படி பணிவிடை செய்வார்களோ அதைப் போலவே அனைத்து பணிவிடைகளையும் செய்து வரலானார்.
 
சன்யாச தீட்ஷை பெற்றுக் கொள்ள முடிவு செய்தாலும் அவருக்கு சன்யாச தீட்ஷை தருவதற்கு அந்த ஊரில்  தக்க ஆசான் கிடைக்கவில்லை. சில நாட்களாக அவருடைய உள்ளுணர்வு காசிக்குப் போகுமாறு அவரை தூண்டிக் கொண்டே இருந்தது. ஆகவே ஒரு நாள் காசிக்கு கிளம்பிச் சென்றவர் அங்கு சிவராமானந்த தீர்த்தர் என்பவரை சந்திக்க நேர்ந்தது. தனது நிலையை விளக்கிக் கூறிய கோவிந்த சாஸ்திரிக்கு அவர் சன்யாச தீட்சையை முறைப்படி தந்து தனது சிஷ்யராக ஏற்றுக் கொண்டார். அங்கு அவருக்கு நாராயண தீர்த்தர் என்ற மறு பெயர் நாமகரணம் செய்யப்பட்டது. இப்படியாக கோவிந்த சாஸ்திரி என்பவர் நாராயண தீர்த்தர் என ஆனார்.

மெல்ல மெல்ல அவருக்கு பல மகான்களுடன் தொடர்ப்பு ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் போதேந்திர பிரும்ம ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதர ஐயாவாள் என்கிறார்கள். அவர்கள் இருவருமே அந்த காலத்தில் புகழ் பெற்றவர்கள். அவர்களிடமும் பாடங்களைப் பயின்றவருக்கு ஒருமுறை தீராத வாயிற்று வலி வந்துவிட்டது. என்ன செய்தும் நோய் குணமாகவில்லை என்பதினால் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல பெரியோர்களின் அறிவுரைப்படி நோய் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பெருமாள் தலங்களுக்கு சென்று வேண்டிக் கொள்ளத் துவங்கினார். அதுவே அவர் பெருமாள் ஆலயங்கள் பலவற்றுக்கும் விஜயம் செல்வதை துவக்கிய கட்டம் என்றும் கூறலாம். ஆனாலும் நோய் குணமாகவில்லை. அங்கும் இங்கும் சென்று கொண்டு இருந்தவர் ஒருமுறை நடுக் காவேரி எனும் கிராமத்தில் வந்தடைந்தபோது இரவாகி விட்டது. வயிற்று வலியும் தாங்கவில்லை. எதையும் உண்ண முடியாமல் அவதிப்பட்டவர் இரவில் எங்கு போய் தங்குவது என குழம்பியவாறு, வேறு வழி இன்றி அங்கிருந்த பிள்ளையார் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் படுத்துக் கொண்டார்.
 
அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய ஒரு முதியவர் உருவில் தோன்றிய பெருமாள் காலையில் எழுந்ததும், அவர் முன்னால் யார் தென்படுகிறார்களோ அவர்களை பின் தொடர்ந்து சென்று பெருமாளை தரிசிக்குமாறும், அதை செய்தால் வயிற்று வலி பிணி தீரும் என்றும் கூறினார். வந்தது கனவே என்றாலும் சரி அதையும் செய்யலாம் என முடிவெடுத்த நாராயண தீர்த்தர் வாயிற்று வலியோடு தூங்கினார். மறுநாள் விடிந்தது. அவர் கண் விழித்ததும் முதலில் கண்ணில் பட்டது ஒரு வெள்ளைப் பன்றியே. இறைவனது கட்டளைப்படி அவர் அதைப் பின்பற்றி சென்றார்.
 
அந்தப் பன்றியும் நேரே பூபதிராஜபுரம் கிராமத்தில் நுழைந்து, தற்போது அங்குள்ள வேங்கடேசபெருமாள் ஆலயத்துக்குள் நுழைந்து மறைந்து விட்டது. எத்தனை தேடியும் அதைக் காணவில்லை. வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள் புரிந்துள்ளார் என்பதை அறிந்து கொண்ட நாராயண தீர்த்தார் அங்கிருந்த பெருமாளை வணங்கித் துதித்தார். அடுத்த கணமே அவரது வயிற்று வழியும் மாயமாக அகன்றது. மகிழ்ச்சியில் பெருமாளை போற்றி அங்கேயே கீர்த்தனை பாடத் துவங்க, பெருமாள் அவருக்கு ருக்மிணி மற்றும் பாமாவுடன் சேர்ந்து கிருஷ்ணரின் உருவில் காட்சி கொடுத்தார். அந்த மகிழ்ச்சியில் மேலும் அவர் அங்கு பாடியதே கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது. பெருமாள் வராக ரூபத்தில் வந்து அவருக்கு காட்சி கொடுத்ததினால் பிற காலத்தில் அந்த கிராமம் வரகூர் என்ற பெயரையும் அடைந்தது.

இந்த ஆலயத்தில் மிகவும் பிரபலமானது உருயடி உற்சவம். பெருமாள் கிருஷ்ணர் வடிவில் வந்து காட்சி அள்ளித்ததினால் கிருஷ்ணருக்குப் பிடித்தமான உரியடி போன்ற ஆட்டத்தை ( உரியில் வைத்து இருந்த வெண்ணையை எடுத்து உண்ட கிருஷ்ணரின் கதை) இங்கு திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அதை இந்த ஆலயத்தில் கொண்டாடுவதற்கான தத்துவம் ஒன்று உள்ளது. கடவுளைக் காண்பது எளிதல்ல. விடா முயற்சி கொண்டு, எத்தனை ஏமாற்றம் பெற்றாலும், அவர் நாமத்தை விடாமல் மனதில் உறுதியாகக் கொண்டால் கடவுளைக் காணலாம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக கடவுளே உறி மீது கட்டப்பட்டு பொருள், வெண்ணை தடவிய கட்டை மீது எத்தனை வழுக்கினாலும் ஏறச் சென்று அல்லது தண்ணீரை பீச்சி அடித்து முகத்தை மறைத்தாலும், விடாமல் பலரது தோளின் மீது ஏறிச் சென்று, உறியை தட்டிப் பறிப்பதைப் போல, எந்த வழியிலாவது தீர்மானமாகச் சென்று கடவுளை அடைவதைக் காட்டும் நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்து உள்ளது.
 
ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் அதாவது காயத்திரி ஜபத்தன்று தொடங்கிப் பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும். முதல் நாள் அன்று உறியடி, அதற்கு அடுத்த நாள் அன்று ருக்குமணி கல்யாணம், மற்றும் கடைசியாக ஹனுமார் ஜெயந்தி என திருவிழாகைக் கொண்டாடுகிறார்கள். இந்த திருவிழாவை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் அவர் இயற்றிய கிருஷ்ண லீலா தரங்கிணியில் கொடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். கிருஷ்ணரின் லீலையை எடுத்துக் காட்டுவதே இனிமையும் எளிமையம், சொல்லழகும், பக்தி சுவையும் நிறைந்த நூலான கிருஷ்ண லீலா தரங்கிணி. இந்த நூலை இசை நாடகமாக மேடையில் அரங்கேற்றுவதற்கு ஏற்ற முறையில் நாராணய தீர்த்தர் இயற்றியிருக்கிறார்.
 
கிருஷ்ண லீலா நாட்டிய நாடகம்!
பின்னர் பல ஊர்களுக்கும் விஜயம் செய்து பக்தியைப் பரப்பி வந்தார். கடைசி கட்டத்தில் வரகூருக்கு வந்து நீண்ட நாட்கள் தங்கினார். அதன் பின்பு திருப்பூந்துருத்தியை அடைந்தார். அங்கு ஒரு சோலைப் பகுதியில் இருந்த மாமரத்தடியில் சென்று நிஷ்டையில் அமர்ந்து விட்டார். வெகு நாட்கள் கழித்து கண்விழித்த அவர், தனது 70 ஆவது வயதில் ஜீவ சமாதி அடைந்து விட்டார் என்றும், தற்போது அவர் சித்தியடைந்த இடம் குன்றக்குடி ஆதீனத்தினால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.
 
 
 
 
 
 
 

ஜலசயனா விஷ்ணு, காட்மாண்டு!


காட்மாண்டுவின் வடக்கு பகுதியில் உள்ள சிவபுரி மலைப் பள்ளத்தாக்குப் பக்தியில் உள்ளது புத்தநீல்கண்டா எனும் விஷ்ணுவின் ஆலயம். இதன் அர்த்தம் பழைய நீல நிற தொண்டை என்பது. ஆலயம் நகரின் மையப் பகுதியில் இருந்து சுமார் எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நகரில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அங்கு செல்ல பஸ்கள் உள்ளன.
 
காட்மாண்டுவில் தங்கிக் கொண்டால் இந்த ஆலயத்தில் தரிசனம் செய்தப் பின் அங்கிருந்து பசுபதிநாதர் ஆலயம், ஸ்வயம்புநாத் எனும் புத்தநாத் மற்றும் குகேஸ்வரி போன்ற ஆலயங்களுக்கும் சென்று தரிசிக்கலாம்.

இந்த ஆலயத்தில் உள்ள மூர்த்தி ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம். விஷ்ணு குப்தா என்ற லிச்சாவி வம்ச மன்னர் காலத்தில் இந்த சிலை செய்யப்பட்டு உள்ளதாம். நாற்பத்தி மூன்று அடி (43 அடி ) நீளமான ஒரு செயற்கைக் குளத்தில் பதினேழரை (17 அடி ) அடி நீளமான விஷ்ணுவின் சிலைக் காணப்படுகிறது.
 
 பாற்கடலில் ஆயிரம் தலை ஆதிசேஷன் மீது விஷ்ணு பகவான் படுத்து இருந்ததைப் போலவே பதினோரு தலை ஆதிசேஷன் மீது படுத்த காட்சியில் செதுக்கப்பட்டு உள்ள நிலையில் விஷ்ணு காணப்படுகிறார். கால்களை மடித்து வைத்தவாறு படுத்துக் கொண்டு இருக்கும் விஷ்ணுவின் நான்கு கைகளில் அவருடைய சின்னமான சங்கு, சக்கரம், தாமரை மலர் மற்றும் கதை போன்றவை உள்ளன. அதை செதுக்கி உள்ள கல்லைப் போன்ற கல் அந்த நாட்டில் வேறு எங்குமே கிடைக்கவில்லையாம். இந்த சிலை எட்டாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

இந்த சிலை கிடைத்தக் கதை ஒன்றை அங்குள்ளவர்கள் கூறுகிறார்களாம். எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த அந்த சிலைக் காணாமல் போய் விட்டது. ஒருமுறை அந்தப் பகுதியில் இருந்த ஒரு கணவனும், மனைவியும் நிலத்தை உழுது கொண்டு இருந்தபோது அவர்களது கலப்பை எதோ பாறை ஒன்றின் மீது இடித்ததைப் போல சப்தம் கொடுத்தது. ஓரளவு தெரிந்த ஒரு கல் பாறையில் ரத்தமும் இருந்தது. ஆகவே அதை மேலும் தோண்டிப் பார்த்தபோது அவர்கள் இந்த சிலையைக் கண்டார்கள். பின்னர் உள்ளூர் மக்களின் உதவியுடன் ஆலயம் அமைத்து உள்ளார்கள்.

ஆனால் இது குறித்த இன்னொரு செய்தியும் உள்ளது. அந்த நாட்டை ஆண்டு வந்த பிரதாப மல்லா எனும் மன்னனுக்கு கனவில் வந்த விஷ்ணு தனக்கு ஒரு ஆலயத்தை இங்கு அமைக்குமாறு கூறியதினால் பூமியில் இருந்து கிடைத்த அந்த சிலையைக் கொண்டு இந்த ஆலயத்தை அவர் நிறுவினார் என்றும் கூறுகிறார்கள்.
 
இன்னொரு விசேஷமான செய்தி என்ன என்றால் இந்த நாட்டை சேர்ந்த மன்னர்கள் தாம் ஆட்சியில் இருக்கும்போது இந்த ஆலயத்துக்கு செல்ல மாட்டார்களாம். அப்படி சென்றுவிட்டுத் திரும்பினால் அவர்கள் அழிவை சந்திப்பார்கள் என்பது நம்பிக்கையாம் .
 
 அந்த நூற்றாண்டிலேயே செதுக்கப்பட்டு உள்ள மூன்று விஷ்ணுவின் சிலைகளில் ஒன்று இந்த ஆலயத்தில் இருக்க, அதை மன்னர்கள் பார்க்க இயலாது என்பதினால் மற்ற இரண்டையும் பாலாஜு கார்டன் என்ற பொது இடத்திலும் மூன்றாவதை மன்னர்களின் அரண்மனையிலும் வைத்து இருக்கின்றார்கள்.
 
நீலத் தொண்டை என்பது சிவபெருமானைக் குறிப்பது. ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் தொண்டை நீல நிறமாயிற்று. அந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் போனவர் கோசைன்குண்ட் என்ற நதியில் வந்து படுத்துக் கொண்டார் என்றும் , அங்கிருந்து தண்ணீர் இங்கு வருவதினால் அதற்கு பழைய நீலத் தொண்டை என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
 
இந்த ஆலயத்தில் படிக்கட்டில் இறங்கி விஷ்ணுவின் கால்களைத் தொட்டு வணங்க இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பிற மதத்தவர்களுக்கு அந்த அனுமதி கிடையாது. தூரத்தில் இருந்து மட்டுமே அவரை தரிசிக்க முடியும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரும் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து கலந்து கொள்கிறார்கள். அப்போது வரும் ஹரிபோதிசினி ஏகாதசி தினத்தன்று விஷ்ணு விழித்தெழுந்து கொள்வதாக நம்புகிறார்கள். இந்த விஷ்ணுவை ஜலசயனா என்றும் அழைக்கின்றார்கள்.
 
 
 
 
 
 
 

108 பிள்ளையார் ஆலயம்!



பெங்களூரில் ஒரு ஆலயத்தில் 108 வினாயகர் சிலைகள் பிரமிட் போல நிறுவப்பட்டு உள்ள படியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அவற்றை ஆகம முறைப்படி 108 வினாயக உருவங்களுக்கு உண்டான மந்திரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அவை 108 பிள்ளையார் தத்துவத்தை பிரதிபலிக்கிறதாம். அதை 108 பிள்ளையார் ஆலயம் என்று கூறுகிறார்கள்.
 
பல வருடங்களுக்கு முன்னால் குமாரசாமி லேஅவுட் எனும் இடத்தில் கட்டிடங்கள் எழும்ப அங்கு சாலைகள் போடப்பட்டதாம். அப்போது சாலை அமைக்கும் ஒரு ஒப்பந்தக்காரரின் கனவில் வினாயகர் தோன்றி அங்கு தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறியதாகவும், அவரும் அவர் கனவில் வந்தது போலவே அங்கு ஆலயம் அமைத்ததாகவும் சிலர் கூறினார்கள்.
 
 
கர்னாடகத்தில் 108 வினாயகர் சிலைகளை கருவறை சன்னிதானத்தில் கொண்ட ஆலயம் வேறு எதுவுமே கிடையாது. அங்கு வருபவர்கள் பிராத்தனைகளை நிறைவேற அர்சிக்கும்போது 108 வினாயகருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்யும் விதமாக அந்த சிலைகளின் கீழ் மட்டத்தில் உள்ள மூல வினாயகருக்கே பூஜைகளை செய்த பின் அனைத்து வினாயகரின் சிலைக்கும் கற்பூர ஆரத்தியைக் காட்டுகிறார்கள்.
 
 ஆலயம் செல்லும் வழி சற்று கடினமாக இருக்கிறது என்றாலும் குமாரசாமி லேஅவுட்டில் அந்த ஆலயம் செல்லும் வழியைக் கேட்டால் அங்கு செல்லும் வழியைக் கூறுகிறார்கள்.

இது போல 108 வினாயகர் சிலைகளைக் கொண்ட ஆலயம் ஒன்று கோயம்பத்தூர் அல்லது பழனியிலும் உள்ளதாகக் கூறுகிறார்கள்.
 
 
 
 
 
 
 

பெனர்கட்டா (குன்றி மணி) மாரி அம்மன்!



வித்தியாசமான பூஜை முறையைக் கொண்ட பெனர்கட்டா பஸ் நிலையத்தின் அருகில் (குன்றி மணி) மாரி அம்மன்! அங்குள்ள மாரி அம்மன் அற்புதமாக காட்சி தருகிறாள்.
 
அந்த சன்னிதானத்தின் அருகில் தனியாக ஒரு அம்மன் சிலையை குந்து மணி நிரம்பிய தாம்பாளத்தில் வைத்து இருக்கிறார்கள். அனவரவருக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்குமாறு அந்த அம்மனிடம் மனதில் வேண்டிக் கொண்டு அந்த தாம்பாளத்தில் உள்ள குந்துமணிகளை  இரு கை நிறைய எடுத்துக் கொண்டு அந்த அம்மன் மீது அபிஷேகம் செய்வது போல  மூன்று முறை போட வேண்டும். அதன் பின் அந்த அம்மனை வணங்கி விட்டு வந்தால் எண்ணியது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
 
தமிழ்நாட்டில் கிராமங்கள் சிலவற்றில் குந்துமணியை அம்மனின் கண்களாக  பாவித்து அதை பூஜிப்பார்களாம். அம்மனின் சிவந்த முகத்தில் உள்ள கரிய கண்களை பிரதிபலிக்கிறதாம்  அந்த கருப்பு நிற விழி போன்ற பாகம். அதனால்தான் அந்த காலங்களில் செய்யப்பட்ட தெய்வ பொம்மைகளின் முகத்தில் கண்களாக குந்துமணிகளைப் பதிப்பார்களாம். அதன் ஐதீகம் என்ன என்றால் அந்த பொம்மையை வைத்து உள்ளவர்கள் வீட்டில் அம்மனே துணையாக விழித்திருந்து காப்பாற்றி வருவாராம். 
சாதாரணமாக கேரளத்து ஆலயங்கள் சிலவற்றில் குந்துமணியைக் கொண்டு அர்ச்சனை செய்வதும், பிரார்த்தனை செய்யும் வழக்கமும்  உள்ளதாம்.

குருவாயூர் ஆலயத்திலேயே கிருஷ்ணரை வேண்டிக் கொண்டு அங்கு ஒரு உருளியில் வைக்கப்பட்டு உள்ள குந்துமணிகளை கையில் எடுத்துக்  கொண்டு அவற்றை அதில் மீண்டும் போட வேண்டுமாம். குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டியும், நோய் நொடிகள் தீரவும் இந்த விதமான பிராத்தனை நடைபெறுகிறதாம். மேலும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பின், தங்கள் குழந்தைகளை அந்த குந்துமணிகளை வாரி எடுத்து, மீண்டும் அதிலேயே போடச் செய்வர். இதனால் குழந்தைகள்  வரும் காலத்தில் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.


 
இந்த ஆலயத்தில் குந்துமணிக்கு முக்கியத்துவம் வந்ததின் பின்னணிக் கதை ஒன்றைக் கூறுகிறார்கள். ஒருமுறை கிருஷ்ணரின் பரம பக்தையான ஏழை  ஒருவள்  அவள் வீட்டில் இருந்த குந்துமணி மரத்தில் இருந்து எடுத்த குந்துமணிகளை விற்பனை செய்ய  கடைவீதிக்கு   சென்றாள். வழியில் அவளுக்கு கிருஷ்ணரைக் காண ஆசை வந்துவிட அந்த ஆலயத்துக்கு சென்றாள். அப்போது அங்கு   அரசனின் யானையை அழைத்து வந்த சேவகர்களின் தள்ளுமுள்ளினால் அவள் கீழே விழ அவள் பையில் இருந்து அனைத்து குந்துமணிகளும் மண்ணில் விழுந்தன.
 
அதன் மீது காலை வைத்து விட்ட யானை மதம் பிடித்து அங்கிருந்த அனைத்தையும் நாசம் செய்தது.  அதே நேரத்தில் அந்த நாட்டு  மன்னனின்   கனவில் வந்த கிருஷ்ணர் தனது பக்தைக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு பரிகாரமாக இனி அவர் ஆலயத்தில் அந்த ஏழைப் பெண்மணியின்  நினைவாக குந்துமணிக்கும்  மகத்துவம் இருக்கும் என்று கூறியதினால் கிருஷ்ண பூஜையில் குந்துமணி பூஜையும் முக்கியமானதாக ஆயிற்றாம்.
 
 
 
 

கூந்தலூர் முருகன் ஆலயம்!





சென்னையில் இருந்து மாயவரம் மற்றும் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது பூந்தோட்டம்.  அதன் அருகில் உள்ளதே கூந்தலூர் எனும் சிறு கிராமம்.
 
கூந்தலூரில் உள்ள ஆயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான முருகன் ஆலயம் இது ஆகும். 
 
முருகன் சன்னதி! 
இங்குள்ள சிவபெருமான் மற்றும் பார்வதியை 'ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர்'  என்று அழைக்கிறார்கள். ஜம்பு என்றால் நாவல் பழம் அல்லது நரி என்ற இரு அர்த்தம் உண்டு. இந்த ஆலயம் அமைக்கப்பட்ட காலத்தில் இந்தப் பகுதி முழுவதுமே நாவல் பழ மரங்களினால் சூழப்பட்டு இருந்ததினாலும், ஒருமுறை சாபத்தினால் நரி உருவெடுத்த முனிவர் ஒருவர் ஒன்று இங்கு வந்து சிவபெருமானை வணங்கி துதித்து தன்னுடைய சாபத்தை விலக்கிக் கொண்டதினாலும் இந்த ஆலயத்து இறைவனை  ஜம்புகாரணேசுவரர் என அழைக்கப்பட்டதாக செவி வழி வரலாறு உள்ளது.
 
இந்த ஆலயத்துக்கு சிறப்பு பலவும் உண்டு. அவை அனைத்தும் செவி வழி  வரலாறு என்பதாகவே  உள்ளன.
 
இராமாயண காலத்தில் தசரத மன்னனின் கட்டளைப்படி ராமரும், சீதையும் வனவாசத்துக்கு சென்ற போது இந்த வழியே வந்து இந்த வனத்தில் சில காலம் தங்கி இங்கு எழுந்தருளி இருந்த ஜம்புகாரணேஸ்வரரை வழிபட்டு உள்ளார்கள். அவர்கள் தங்கி இருந்த குடிசையின் அருகில் தாம் குளித்து நீராட சீதா தேவி ஒரு நீர் நிலையை அமைத்தாராம். அந்த நீர் நிலையே சீதா தீர்த்தம் என்பதாகவும், அந்த தீர்த்தத்தின் அருகில் அமர்ந்து கொண்டு சீதா பிராட்டியார் தமது கூந்தலை வருடி விட்டுக் கொள்ளும்போது சீதையின் தலை முடிகள் அந்த நீருக்குள் விழுந்து அந்த தீர்த்தத்தை புனிதமாக்கிக் கொண்டே இருந்ததாம் என்பதாகவும் புராணக் கதை உள்ளது.
 
உண்மையில் கூந்தல் என்பது தலை முடியல்ல, அது காரணப் பெயர் ஆகும். அந்த தலை முடிகள் என்பவை சீதையின்  உடலில் இருந்து வெளியேறிய தேவகணங்களே. சீதை லஷ்மியின் அவதாரம் என்பதினால் அந்த நீர் நிலையைக் காத்தபடி நின்றிருந்த தேவ கணங்கள் அங்கேயே வாசம் செய்தன. இதனால்தான் இந்த இடமே கூந்தல் காத்த ஊர் என்பதாக முன்னர் கூறப்பட்டு, கூந்தலூர் என பின்னர் மருவி உள்ளதாம்.
 
கூத்தப்பனை மரம்!
 
 
கூந்தலூர் என்ற பெயர் வர இன்னொரு காரணமும் உண்டு. நாவல் மரங்களைத் தவிர கூந்தப்பனை எனும் பெயரைக் கொண்ட பனை மரங்கள் நிறைந்த பகுதியாகவும்  இந்த இடம் இருந்ததால் இப்பகுதி கூந்தலூர் என்று பெயர் பெற்றது என்றும் செய்தி உள்ளது.  இந்த மரத்தை கூந்தல்பனை, இரும்பனை, திப்பிலிபனை என்றும் கூறுவார்கள்.
 
இம்மரத்தைப் பார்க்கும்போது, குளித்து முடித்த பின் ஒரு பெண் தன் கூந்தலை விரித்து உலர்த்திக் கொண்டிருப்பது போலவும், பூங்கொத்துகள் நீளமான கூந்தலைப் போலவும் தோன்றுவதால் இந்த மரங்கள் அடர்ந்திருந்த இந்தப் பகுதி கூந்தல்பனையூர்  என்ற பெயர் பெற்று இருந்திருக்கலாம் என்கிறார்கள். அதைத்தான் சீதையின் கூந்தல் என்றும், அதுவே பின்னர் மருவி கூந்தலூர் என்றாகிற்று என்கிறார்கள்.
 
 
 ரோம ரிஷி!

இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு என்ன என்றால், இது சிவன் ஆலயம் என்றாலும் முருகப் பெருமானுக்கே அதிக முக்கியத்துவம் தரும் ஆலயமாக உள்ளது. அதனால்தான் முருகனின் சன்னதியும் ஆலயத்தின் முன்புறத்தில் முதலாவதாக அமைந்துள்ளது. அதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு.
 
சித்தர்களில் மேன்மையானவரும் மகா ரிஷியுமான ரோம ரிஷி என்பவர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து கூந்தலூர் ஆலய சிவபெருமானிடம் இருந்து அறிய ஆற்றலைப் பெற்றார். அந்த சக்தியின்படி அவரால் தனது தாடியில் இருந்து தங்கத்தை வரவழைக்க முடிந்தது. அந்த ஆற்றலைக் கொண்டு ரோம ரிஷி அவரை நாடி வந்த ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக தமது அஷ்டமா சித்தியால் தாடி வழியே பொன்னை  வரவழைத்து அவர்களுக்கு அளித்து வந்தார்.
 
இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்தவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருமுறை தாடியில் இருந்து பொன்னை வரவழைக்கும் அவருடைய சக்தியை தடுத்து நிறுத்தினார். சிவபெருமானின் திருவிளையாடல் காரணமாக ரோம ரிஷியின் தாடி வழியே பொன் வந்து கொண்டிருந்தது நின்று விட்டது. அதனால் அவரால் ஏழைகளுக்கு முன்னைப் போல உதவிட முடியவில்லை.
 
என்ன காரணத்தினால் தான் சக்தியை இழக்க வேண்டியதாயிற்று என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் தவித்து  மனம் தளர்ந்து போன ரோம ரிஷி அடுத்த நாளே தனது தாடியை நீக்கி விட்டார். தாடியை எடுத்தப் பின் முடியை சுத்தப்படுத்திக் கொள்ள குளிக்கக் கூட மறந்து விட்டு தன்னை மறந்த நிலையில் சிவபெருமானை தரிசிக்க கூந்தலூர் ஆலயத்துக்குள் செல்லத் துவங்கினார்.
 
 ஆலயத்துக்குள் நுழைய வந்த ரோம ரிஷியை முருகனும், வினாயகரும் தடுத்து  நிறுத்தினார்கள்!
 
 
அப்படிப்பட்ட நிலையில் நீராடாமல் சிவனை தரிசிக்க ஆலயத்துக்குள் நுழைய வந்த ரோம ரிஷியை உள்ளே நுழைய விடாமல் வாயிலிலேயே வினாயகப் பெருமானும் முருகனும் அவரை தடுத்து நிறுத்தினார்கள். அதன் பிறகே தன்  நினைவுக்கு வந்து தன் தவறை உணர்ந்த ரோம ரிஷியும் மனம் வருந்தி ஆலய வாயிலிலேயே அமர்ந்து கொண்டு சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்கும் வகையில் தவம் இருந்தார்.
 
 அவர் பக்தியையும், தவத்தையும் மெச்சிய சிவபெருமானும் ஆலயத்திற்கு வெளியே வந்து அந்த ரிஷிக்கு காட்சி தந்ததும் இல்லாமல் மீண்டும் அவருக்கு இன்னும் பல ஆற்றல்களையும் சக்தியையும் தந்தருளினார். வெளித் தூய்மையை விட மனத் தூய்மையே பெரியது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அந்த திருவிளையாடலை சிவபெருமான் நடத்தியதாக தல வரலாறு கூறுகிறது.
நடந்தேறிய அந்த நாடகத்தில் ரோம ரிஷியை ஆலயத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தப் பின் முருகப்பெருமான் அங்கேயே அமர்ந்து கொண்டார். அதனால் முருகப் பெருமான் அங்கு அமர்ந்திருந்த ஆலயத்தில் அதே முன் பகுதியில் அவருடைய சன்னதி  அமைந்தது. 
 
அதற்கு முன்பாக தனக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள அங்கு வந்து சிவபெருமானை துதித்தபடி பல காலம் தவத்தில் இருந்த சனிபகவான் அன்றும்  நீர் நிலையில் குளித்தப் பின் உள்ளே நுழைய வந்தபோது அவரையும் முருகன் தடுத்து நிறுத்தி கூறினாராம் 'இனி இந்த தலத்தில் வந்து என்னை வழிபடுபவர்களின் அனைத்து சனி தோஷங்களையும் அந்த நிமிடமே விலக்கிக் கொள்ள நீங்கள் சம்மதித்தால் மட்டுமே உங்களை உள்ளே நுழைய விடுவேன்' என்று கோபத்துடன் கூற அதைக் கண்டு பயந்து போன சனி பகவானும் தனக்கு ஏற்பட்ட சாபம் விலக வேண்டும் எனில்  கூந்தலூர் ஜம்புகேஸ்வரரின் அருள் வேண்டுமே என்பதற்காக வேறு வழி இன்றி அந்த உறுதிமொழியை அனைவர் முன்னிலையிலும் முருகனுக்குத் தந்த பின்னரே சனி பகவானை உள்ளே நுழைய முருகன் அனுமதித்தாராம்.
 
 அதன் பின் சனி பகவானும் முருகன் சன்னதிக்கு எதிர்புறத்தில் சென்று அமர்ந்து கொண்டு தமது தவத்தை தொடர்ந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்று  சாபத்தை விலக்கிக் கொண்டாராம்.  சனி பகவான் அமர்ந்திருந்த  இடத்திலேயே சனி பகவானுக்கும் சன்னதி அமைந்தது.
 
தேவ மயிலுடன் முருகன்!

இத் தலத்தில் முருகன் ஈசான்ய மூலையில் தனது இரு தேவியருடன் மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சூரசம்ஹாரத்திற்கு முன்பே முருகனுக்கு இருந்த மயில் வாகனம் இது என்பதினால்தான் இங்குள்ள மயில் தேவ மயில் என்ற பெயரைப் பெற்றது. ஈசான்ய மூலையில் தேவமயிலுடன் தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி தருவதும், ஈசான்யப் பார்வையால் சனீச்வரரை நோக்கி இருப்பதினாலும் சனிஸ்வரரின் தொல்லைகளை இந்த முருகனே களைவதாக ஐதீகம் உள்ளது.
 
அது மட்டும் இல்லாமல் சனி மற்றும் செவ்வாய் கிரக சன்னதிகள் இந்த ஆலயத்தில் எதிர் எதிராக அமைந்துள்ளதால் இத்தலம் சனி-செவ்வாய் கிரக பாதிப்புகள் நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

ஈசான்ய மூலை என்பது என்ன?
 
எட்டு திசைகளில் வடக்கு திசையும், கிழக்கு திசையும் சந்திக்கும் இடமே ஈசான்ய மூலை என்பதாகும். ஈசான்ய மூலை என்பது ஈசனானவர், அதாவது சிவபெருமான் வசிக்கும் இடம் என்பது பொதுவான நம்பிக்கை ஆகும். ஆகவேதான் வீட்டிலும் கூட ஈசான்ய மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அங்கு பூஜை அறையையோ அல்லது பூஜை அறை அமைக்க முடியாதவர்கள் தெய்வத்தின் படத்தையோ அங்கு வைத்து வணங்குவது சிறப்பு என்பதாக பண்டிதர்கள் அறிவுறுத்துவார்கள்.
 
வடக்கு திசையும், கிழக்கு திசையும் சந்திக்கும் ஈசான்ய மூலையில் தெய்வப் படத்தை வைத்து நமஸ்கரித்து வணங்கலாம். ஒருவர் வீட்டிலேயே கூட வடகிழக்கு மூலை ஈசன் உள்ள இடம் என்பதினால்தான் வடகிழக்கு மூலை ஒரு இடத்தின் ஆற்றல் தரும் இடம் என்பார்கள்.
 
 
எட்டு பட்டைகள்  உள்ள  தாரா லிங்கம்!

இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு, இங்குள்ள ஒரு சன்னதியில் பதினாறு பட்டைகள் (16) கொண்ட தாரா லிங்கம் அல்லது பாணப்பட்டை சிவலிங்கம்  எனப்படும் சிவலிங்கம் ஒன்றும் காணப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவகை லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சம் உண்டு. அவற்றில் ஒன்றே தாரா லிங்கம் என்பதாகும். பல்லவர் காலத்தை சார்ந்த அபூர்வமான தாரா லிங்கம் என்பது பாணப் பகுதியில் பட்டைகளோடு காட்சி தரும் லிங்கங்கள் ஆகும். அப்படிப்பட்ட லிங்கங்கள் அனைத்து ஆலயங்களிலும் இருக்காது. தாரா லிங்கங்களில் எட்டு பட்டை, பதினாறு பட்டை மற்றும் பன்னிரண்டு பட்டைகளைக் கொண்ட தாரா லிங்கத்தை வணங்கி வந்தால் பல செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை ஆகும். 

 அனைத்து சிவன் ஆலயத்து பிரகாரத்திலும் காணப்படும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பால சுப்ரமணியர், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் போன்றவர்கள் சன்னதிகள் இங்கும் அமைந்துள்ளன.
 
கும்பகோணத்துக்கு தென் கிழக்கே சுமார் 10 அல்லது 12 கிலோ தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது கூந்தலூர் ஆலயம். நாச்சியார் கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் சாலையில் சென்றோ அல்லது நாச்சியார் கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவு பயணித்தோ இங்கு செல்லலாம். சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் பல பேருந்துகள் கூந்தலூர் வழியே செல்கின்றன.