Sunday, 17 April 2016

வசந்தங்கள் வாழ்த்தும் வசந்த பஞ்சமி!

 
இந்தியாவில் காலத்தைக் கணக்கிடும்போது ஓர் ஆண்டை சூரியனின் சுழற்சி கதிக்கேற்ப உத்தரா யனம் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) என்றும்; தட்சிணா யனம் (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) என்றும் இரண்டு அயனங் களாகப் பிரித்துள்ளனர். இந்த இரண்டு அயனங்களை ருதுக்கள் எனப்படும் ஆறு பருவங்களாகப் பிரித்துள்ளனர்.
 
சித்திரை- வைகாசி வசந்த ருது (இளவேனில்); ஆனி-ஆடி, கிரீஷ்ம ருது  (முது வேனில்); ஆவணி- புரட்டாசி வர்ஷ ருது (கார்); ஐப்பசி- கார்த்திகை சரத் ருது (குளிர்); மார்கழி- தை ஹேமந்த ருது (முன் பனி);  மாசி- பங்குனி சிசிர ருது (பின் பனி) என்று ஆறு பருவங்கள் உள்ளன. இவற்றில் சித்திரை- வைகாசி மாதங்களுக்குரிய வசந்த ருது அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு பருவ நிலையாக உள்ளது.

 
வசந்தத்தின்போதுதான் மலர்கள் மலர்ந்து, இயற்கை எங்கும் இனிமையாகவும் கண்களுக்கு விருந்தாகவும் காட்சியளிக்கிறது. வட மாநிலங்களில்- குறிப்பாக மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் இந்த வசந்தகாலத் துவக்கத்தில் சரஸ்வதிதேவியை வழிபடும் வழக்கம் நிலவுகிறது.

 
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

 
  இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங் களிலும் குறிப்புகள் காணப்படு கின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவி யைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது.  

வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணா வாதினி, வாணி தையானி என்றும் போற்றப் படுகிறாள் சரஸ்வதிதேவி. நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள் மக்களுக்குக் கிட்ட இந்த நாளில் வட மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர்கூட இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலை களைக் கற்றதாகக் கூறப்படுகிறது.

 
தென்மாநிலங்களில் விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்குவது போன்று, மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளன்றுதான் வித்யா ரம்பம் துவக்கப்படு கிறது. இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும், சங்கீத உபகரணங் களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.
 
இந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படு கிறது. மஞ்சள் சாமந்தி மலர்கள் வட மாநிலங் களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய முக்கிய மலராகத் திகழ்கிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்! மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக் கப்பட்டு, பளிச்சென்று எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களைப் பறிக்கிறது.

 
பஞ்சாப் மாநிலத்தில் மிகச் சிறப்பாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்தப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற மலர்களைப் பூத்துச் சொரிய, அதற்குப் பொருத்தமாக மக்கள் மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து பாங்க்ரா நடனம் ஆடுகின்றனர்.
 

காஷ்மீர் மாநிலத்தில் வசந்தத் திருவிழாவாகக் கொண்டாடப் படும் இந்த வசந்த பஞ்சாமி நாளில் மக்கள் எல்லாரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். இந்த மஞ்சள் நிறம் தேவர்களால் விரும்பப் படுவதாகக் கூறப்படுகிறது.


ராஜஸ்தான் மாநிலத்தில் இந்நாளில் வகை வகையான உணவு வகைகளைத் தயாரித்து உண்பதிலும், பொது இடங்களில் பாடி மகிழ்வதிலும் மக்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் பாடும் பாடல்கள் இயற்கையையும் வசந்தத்தையும் போற்றுவதாக அமைந்துள்ளன. வட கிழக்கு மாநிலங்களில்- குறிப்பாக அசாமில் வசந்த பஞ்சமிக்குத் தனி இடம் உண்டு. மலைவாழ் மக்கள்- குறிப்பாக மலைவாசி இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி, வட்டமாக நின்று ஆடிப்பாடி மகிழ்கின்றனர். அன்று சரஸ்வதிதேவிக்கு மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.


 இந்த வசந்தகாலத்தில் ஏராளமாகக் காய்த்துக் குலுங்கும் பேரிக்காய்களும், வெள்ளை முள்ளங்கி விதைகளும் தாம்பாளத்தில் வைக்கப்பட்டு சரஸ்வதிதேவிக்குப்  பிரசாதமாக நிவேதிக்கப்படுகின்றன. இவற்றோடு படைக்கப்படும் லட்டு, பர்பி போன்ற இனிப்பு வகைகளும்கூட மஞ்சள் நிறம் சேர்த்தே தயாரிக்கப்படுகின்றன. வீடுகளில் கார்க்கி மீட்டா சாவல் எனப்படும் (பாஸ்மதி அரிசி, சர்க்கரை, நெய், குங்குமப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து செய்யப்படும் இனிப்பு மஞ்சள் பொங்கல்) சிறப்பு இனிப்பு மதிய உணவில் தவறாமல் இடம் பெறுகிறது.

பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர். அன்று பட்டங்கள் விடுவதில் போட்டிகளும் பரிசுகளும் வழங்குவதும் உண்டு. பெரியவர்களும் சிறுவர்களும் போட்டி போட்டிக் கொண்டு வண்ணமயமான பட்டங்களைப் பறக்கவிடுகின்றனர். அன்று சிறுவர்களின் கொண்டாட்டங்களுக்கும் அளவே இல்லை. பெற்றோர்களும் பெரியோரும் அன்று குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக இருக்க விடுகின்றனர்.

"வசந்த பஞ்சமி' என்றாலே வட மாநிலங்களில் இது சரஸ்வதிதேவியை வழிபடும் நாள் என்பதோடு  பங்குனி உத்திர நாளில் வட மாநிலங்களில் கொண்டாடப் படுகின்ற வண்ணமயமான ஹோலிப் பண்டிகைக்குக் கட்டியம் கூறும் ஒரு இனிய விழாவாக இந்த பஞ்சமி விளங்குகிறது.



 

திருப்பம் தரும் திருச்செந்தூர் ஜெயந்தி நாதர்!

 தமிழ்நாட்டில் எங்கு ஒரு சிறிய மலைக்குன்று இருந்தாலும் அதன்மேல் ஒரு முருகன் கோயில் இருக்கும். அதனால்தான் முருகப்பெருமானை (மலையும் மலை சார்ந்த இடங்களில் இருப்பதால்) குறிஞ்சியாண்டவர் என்று சொல்கிறோம்,

எப்பொழுதும் மலை மீதே இருக்கும் முருகப்பெருமான் கடற்கரையோரமாக இருக்கும் தலம் திருச்செந்தூர். முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாகக் கருதப்படும் இத்திருத்தலம் தூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 56 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 88 கிமீ தொலைவிலும் உள்ளது.

முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்த பின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவமைத்து வழிப்பட்ட திருத்தலம் திருச்செந்தூராகும்.

சூரபத்மன் என்ற அசுரன் வீரமகேந்திரபுரி என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தான். அவன் சிவப்பெருமானை நோக்கி தவமிருந்து வரம் பல பெற்றிருந்ததால் மிகவும் கர்வத்துடன் தன்னை அழிக்க யாருமில்லை என்ற அகந்தையுடன் தேவர்களையும் அடக்கி கொடுமை செய்து வந்தான். இவனிடமிருந்து விடுதலை வேண்டிய தேவர்கள் சிவப்பெருமானிடம் முறையிட அவர் தன் மூன்றாம் கண்ணாகிய நெற்றிக் கண்ணை திறந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்கினார். அத்தீப்பொறிகளை அக்னி பகவான் மூலம் பெற்ற கங்கை இமயமலையில் இருக்கும் சரவணப்பொய்கையில் சேர்ப்பித்தது. அங்கே அந்த ஆறுப்பொறிகளும் ஆறுக் குழந்தைகளாக உருமாறின.

ஒரு சமயம் ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு வந்த இந்த ஆறுக் குழந்தைகளைக் காண பார்வதி தேவி வந்தார். அவர் அன்புடன் அந்த குழந்தைகளை அரவணைக்க ஆறுக் குழந்தைகளும் ஒன்றாக இணைந்து ஆறுதலை, பன்னிரெண்டு கைகளும் கொண்டு முருகப்பெருமானாக உருவெடுத்தன. முருகன் வாலிபப் பருவம் எட்டியதும் சிவப்பெருமானின் கட்டளைக்கிணங்க சூரப்பத்மனை வதம் செய்வதற்காக பெரும்படையுடன் திருச்செந்தூர் வந்து முற்றுகையிட்டார். தன் படைத்தளபதி வீரபாகுவை சூரப்பத்மனிடம் அனுப்பி தேவர்களை விடுவிக்குமாறு கூறினார். அவன் இதற்கு மறுக்கவே போர் மூண்டது.

கடுமையாக நடந்த போரின் முதல் ஐந்து நாட்களில், சூரபத்மனின் சகோதரர்களும், சேனையையும் அழித்தார். ஆறாம் நாள், சூரபத்மனுக்கும் முருகப்பெருமானுக்கும் போர் நடந்தது. மாமரத்தின் உருவில் ஒளிந்திருந்த சூரபத்மனை முருகப்பெருமான் தன் வேலால் இரண்டாகப் பிளந்தார். உடைந்த துண்டுகளில் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் உருமாறின. முருகப்பெருமான் மயிலினை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றார். அதைக் குறிக்கும் வகையில் கர்ப்பகிருகத்தின் முன் இரண்டு மயில்கள் உள்ளதை இப்பொழுதும் காணலாம். சூரப்பத்மனை வதம் (சூரசம்ஹாரம்) செய்த பின், முருகப்பெருமான் தன் தந்தை சிவபெருமானை வழிபட, ஐந்து லிங்கங்கள் அமைத்து வழிப்பட்டார். அந்த லிங்கங்கள் கர்ப்பகிரகத்தின் பின்புறம் பாம்பறை எனும் குகையில் அமைந்துள்ளன. முருகப்பெருமான் அவற்றை வழிப்பட்டுக்கொண்டிருப்பதால் கையில் மலர்களுடன் இருக்கும்விதமாக மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பஞ்சலிங்கங்கள் இருப்பதால்தான் மூலவர் சன்னிதானத்திற்கு முன்பாக இரண்டு மயில்களுடன் நந்தியும் காணப்படுகிறது.

கோயில் அமைப்பு:

குறிஞ்சி ஆண்டவனான முருகப்பெருமான் எப்படி கடற்கரையில் இருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கலாம். உண்மையில் திருச்செந்தூரிலும் கடற்கரையோரமாக இருக்கும் சந்தனமலையில்தான் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். காலப்போக்கில் இங்கேயுள்ள சந்தன மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கந்தபுராணம், இவ்விடத்தை 'கந்தமானத பர்வதம்' என்று சிறப்பிக்கிறது. குறிஞ்சி மற்றும் முல்லையின் கலப்பு என இவ்விடம் பற்றி அகநானூறும் குறிப்பிடுகிறது, இதை உணர பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ள இடத்தை உற்று நோக்கினால் அது ஒரு மலை என்பது நன்குப் புலப்படும்.

இக்கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகள் கொண்டது. உயரம் 137 அடி உயரமும் 90 அடி அகலமும் கொண்டதாகும். தென்வடலாக அமைந்த இக்கோபுரத்தின் அகலம் 65 அடிகளாகும். இக்கோபுரத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் ராஜகோபுரம் பொதுவாக கிழக்குவாயிலிலேயே அமைக்கப்படும். ஆனால் திருச்செந்தூரில் கிழக்கு வாயில் கடலுக்கு மிக அருகில் இருப்பதால் அங்கே உறுதியான அடித்தளம் இடமுடியாதென்பதாலும் கடல் அரிப்பு ஏற்படும் என்பதாலும் ராஜகோபுரம் மேற்கு வாயிலில் கட்டப்பட்டுள்ளது.

சண்முக விலாசம்:

தெற்கு நோக்கியவாறு உள்ள வாயில் வழியாக உள்ளேச் சென்றதும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சண்முக விலாசம் என்னும் பெரிய மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபம் 120 அடி உயரமும், 86 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதைத் தாங்கி நிற்கின்றன.

இரண்டாவது பிரகாரம்:

முருகப் பெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருந்தாலும் திருச்செந்தூர் தலம் குருபகவானுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இதற்கு காரணம் முருகப்பெருமான் அசுரர்களுடன் போர் துவங்குவதற்கு முன்பு, சூரபத்மன் பற்றியும், அவன் சகோதரர்கள் மற்றும் அசுரகுலம் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ள விரும்பினார். முருகனின் விருப்பத்தை உணர்ந்த குருபகவான், திருச்செந்தூருக்கு வந்து அசுரர்கள் பற்றிய தகவல்களை முருகனுக்கு விளக்கிக் கூறியதோடு இத்தலத்திலேயே தங்கியும் விட்டார். குருபகவான் எழுந்தருளிய திருத்தலம் என்பதால் இதனை குரு பரிகார திருத்தலமாகவும் வழிபடுகிறார்கள். குரு பரிகாரத்திற்கும் குருப் பெயர்ச்சிக்கும் பெயர் பெற்ற இத்திருத்தலத்தின் இரண்டாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.

அடுத்ததாக இத்தலத்தின் இன்னொரு விசேஷமும் இரண்டாம் பிரகாரத்திலேயே அமைந்துள்ளது. நாம் திருச்செந்தூர் செல்லும்போது அதையும் கவனிக்க தவறக்கூடாது. அதாவது சூரபத்மனை முருகன் வதம் செய்த இடம் திருச்செந்தூர். ஆனால் மூலவரோ வதம் முடிந்த பின்பு லிங்கம் அமைத்து பூஜை செய்யும் தோற்றத்தில் சாந்தமாக காட்சியளிக்கிறார். (பொதுவாகவே 'அழகென்ற சொல்லுக்கு முருகா' என்பதற்கு ஏற்ப அழகாகவும் சாந்தமாகவுமே நாம் பார்த்திருக்கிறோம்). ஆனால் இத்தலத்தில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள 'சூரசம்ஹார மூர்த்தி' அழகுடன் ஆவேசமும் வீரமும் ஒருங்கிணைந்துக் காணப்படுகிறார். இக்காட்சியை நாம் வேறெங்கும் காணமுடியாது.

மேலும் இரண்டாம் பிரகாரத்தில் மேலை கோபுரம் கட்ட உறுதுணையாக இருந்த மேலவாசல் விநாயகர் சன்னதி, பெருமாள் சன்னதியும் உள்ளது.

முதற்பிரகாரம்:

இங்கே மாப்பிள்ளைச்சாமி என அழைக்கப்படும் உற்சவமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.மேலும் வள்ளி தெய்வயானை சன்னதிகளும் யாகசாலையும் உள்ளது. நடராஜர் சன்னதியில் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்க அருகே சிவகாமியம்மையும் நடனத்தை மெய்மறந்து பார்த்தவண்ணம் இருக்கும் காரைக்காலம்மையாரையும் காணலாம்.

மூலவர்:

கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் கருவறையில், கிழக்கு நோக்கியவாறு மூலவர் செந்தில்நாதன் எழுந்தருளியுள்ளார். தலையில் சடையை எடுத்துக் கட்டியுள்ளார். நான்கு கரங்களுடன் திகழும் இவர், மேற்கரங்களில் வஜ்ரம், ஜப மாலையும், கீழ்க்கரங்களில் தாமரையும், ஊரு முத்திரையும் தாங்கியுள்ளார். மூலவருக்கு முன்பாக வலப்புறத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட ஸ்ரீபலிநாயகரும், இடப்புறம் தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீபலிநாயகரும் உள்ளனர்.

கர்ப்பகிருகத்திற்கு பின்புறம் அமைந்திருக்கும் பஞ்சலிங்கமூர்த்திகளை பூஜிக்கும் கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.

நாழிக்கிணறு:

தனது படைவீரர்களுக்கு தாகம் எடுத்தப்போது தனது வேலை ஊன்றி முருகப்பெருமான் உருவாக்கிய தீர்த்தம்தான் நாழிக்கிணறு. 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடி சதுரப்பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில் இருக்கும் நாழிக் கிணற்றில், நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. உப்புகரிக்கும் கடற்கரையின் அருகில் இருக்கும் இக்கிணற்றின் நீர் தூய்மையாக இருப்பது ஒரு அதிசயமாக கருதப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் முருகனை தரிசிக்கும் முன்பு கடலிலும் நாழிக்கிணற்றிலும் நீராடுவதை புண்ணியமாகக் கருதுகின்றனர்.


'ஓம்' வடிவம்: திருச்செந்தூர் உட்பிரகாரத்தை முறைப்படி சுற்றி வந்தால் அது 'ஓம்' வடிவில் அமைக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.

பூஜைகள் மற்றும் உற்சவங்கள்:இத்திருக்கோயிலில் குமார தந்திர முறைப்படி, ஒன்பது கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9.00 மணி வரை தொடர்ந்து திறந்தே இருக்கும். ஒவ்வொரு மாத விசாகம், கார்த்திகை சஷ்டி போன்ற தினங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடைப்பெறுகிறது.

வைகாசி விசாகத்தன்று ஸ்ரீஜெயந்திநாதர், வள்ளி, தெய்வயானையுடன் திருவீதியுலா நடைப்பெறும்.

கந்தசஷ்டி விழா:

சூரபத்மனை வதம் செய்த இடம் என்பதால் இங்கே கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முக்கிய வைபவமாகும். இதைக் காண வரும் மக்கள் அலை, கடலலையோடுப் போட்டிப் போடும். 7ம் நாள் தெய்வயானை அம்மனுடன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைப்பெறும்.


ஆவணி மற்றும் மாசி திருவிழா:

* 7ஆம் திருவிழா பச்சை சாத்தி
* 8ஆம் திருவிழா சிகப்பு சாத்தி
* 10ஆம் திருவிழா திருத்தேர் ( ஆண்டில் இருமுறை இத்தேர் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்).
* 11ஆம் திருவிழா தெப்பத் திருவிழா (ஆண்டுக்கு ஒரு முறை இத்திருவிழா நடைபெறுகிறது) (மாசி மாதம் மட்டும்)

எங்கே இருக்கிறது? எப்படி செல்வது?: தூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 56 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 88 கிமீ தொலைவிலும் உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களிலிலிருந்தும் திருச்செந்தூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளது. மேலும் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்கள் திருச்செந்தூருக்கு அருகிலிருக்கும் விமானத் தளங்களாகும்.

திருச்செந்தூரில் ஏராளமான இலவச தங்கும் விடுதிகள் உள்ளது. மேலும் குறைந்த கட்டணத்தில் நிறைய விடுதிகளும் குடில்களும் உள்ளது..

திருச்செந்தூர் சென்றால் அதன் சுற்றுப்புறத்தில் பல கோயில்கள் உள்ளது. சிவக்கொழுந்தீஸ்வர திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், நவதிருப்பதி, குலசை முத்தாரம்மன் ஆலயம் என பல பெயர்பெற்ற கோயில்கள் உள்ளன.

பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை ஊமையாக இருந்த குமரகுருபரர் பேச்சாற்றல் பெற்ற இத்திருத்தலத்தில் மூலவர் சன்னதியில் சந்தனமும் நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்ட பன்னீர் இலையில் விபூதியும் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இதை உண்ட, ஆதிசங்கரர் நோய் நீங்கி, ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம் பாடியதாகக் கூறுவர். இதுப் போல பல மகிமைகளைக் கொண்ட திருச்செந்தூர் தலத்திற்கு நாமும் ஒருமுறை சென்று நலம் பெறலாமே!


 

லக்ஷ்மி குபேரர் கோயில்-வண்டலூர்


இந்தியாவில் கொண்டாடப்படும் எண்ணற்ற பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் ஏதேனும் ஒரு அர்த்தம் வைத்திருக்கும் நம் இந்து மதம் அதை கொண்டாடும் முறையிலும் சில முக்கிய சடங்குகளை வைத்துள்ளது. சாதாரண சிறுப் பண்டிகைகளுக்கே அப்படியென்றால் பண்டிகைகளின் தலைவர் தீபாவளிக்கு இல்லாமல் இருக்குமா? தீபாவளிக் கொண்டாடும் காரணங்கள் அனைவரும் அறிந்ததே. மேலும் அவைப்பற்றி நாமும் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதால் அதைப் பற்றி இங்கே விளக்கவில்லை. ஆனால் தீபாவளியன்று நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் ஸ்ரீலக்ஷ்மி குபேரர் பூஜை.

குபேரன் யார்?

 ’விச்ரவசு’ எனும் முனிவர் ஒரு மகா பக்திமான். எந்நேரமும் சிவப்பெருமானை நினைத்து தவம் செய்துக் கொண்டிருப்பார். சில யாகங்கள் செய்ய வேண்டுமென்றால் வேதங்கள் அறிவுறுத்தும்படி திருமணம் செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்காக பரத்வாஜ மகரிஷியின் மகளை திருமணம் செய்தார். அவர்களுக்கு ‘வைஸ்ரவணன்’ என்று ஒரு மகன் பிறந்தான். அவனும் தந்தையைப் போலவே சிறந்த பக்திமானாக இருந்து எந்நேரமும் தவத்தில் இருந்தான்.

ஒரு சமயம் பெற்றோரின் ஆசியுடன் பிரம்மனை நோக்கி தவமிருக்க ஆரம்பித்தான். அவனது தவத்தை ஏற்ற பிரம்மா சகல தேவர்கள் புடை சூழ வந்து வைஸ்ரவணனுக்கு காட்சியளித்து ’என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்டார். ஆனால் வைஸ்ரவணனோ ‘தங்களை தரிசித்ததே பெரும் பாக்கியம் இதைவிட வேறென்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்டு திகைக்க செய்தான். இதைக் கண்டு அசந்துப் போன பிரம்மன் இத்தனை பக்தியுடன் இருக்கும் ஒருவனுக்கு தகுந்த பதவி ஏதேனும் கொடுக்க வேண்டும் என விரும்ப அனைத்து தேவர்களும் இதற்கு இசைந்தனர். அப்பொழுது அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவராக வடக்கு திசைக் காவலராக சகல செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாக நியமித்தனர்.

அசுரர்களும் தேவர்களும் பாற்கடல் கடைந்தப் போது அதிலிருந்து தோன்றியவள் மகாலட்சுமி. குபேரனின் சகோதரி எனக் கருதப்படும் மகாலட்சுமி தனதேவதை என்பது நாம் ஏற்கெனவே அறிந்ததே! அதனால் நாம் இவ்விருவரையும் சேர்ந்தே வணங்குகிறோம்.

குபேரனை என்று வழிப்படுவது?

தீபாவளித் திருநாளில் குபேரனை வழிப்படுவது மிகவும் சிறந்தது. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் வரும் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களிலும், வியாழக்கிழமையன்று வரும் பூச நட்சத்திர நாட்களிலும் இப்பூஜையை செய்யலாம். தேய்ப்பிறை பிரதமை திதி, மற்றும் சித்தயோகம், அமிர்தயோகம் கூடிய அஷ்டமி, நவமி அல்லாத எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் குபேரனை வழிப்படலாம்.

குபேரன் பிறந்த நட்சத்திரம் - பூசம்
குபேரனுக்குரிய திசை- வடக்கு
குபேரனுக்கு உகந்த கிழமை- வியாழன்

குபேர பூஜை செய்யும் முறை:

ஐப்பசி மாதம் வரும் அமாவாசை நாள் குபேரனுக்கு மிகவும் உகந்த நாள். இதே நாளில்தான் தீபாவளியும் கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து மேடையமைத்து அதில் விரிப்பின் மீது வாழையிலை விரித்து அதில் நவதானியங்களையும் ஒன்றோடு ஒன்று கலக்காமல் தனித்தனியே பரப்பி வைத்து அதன் நடுவே லக்ஷ்மி குபேர யந்திரத்தையோ அல்லது படத்தையோ வைத்து சந்தனம் குங்குமம் பூசி, பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். யந்திரத்தின் வலப்பக்கத்தில் கலசத்தில் நீர் நிரப்பி அதில் மஞ்சள் கலந்து மாவிலை வைத்து மலர்கள் சாத்தி வணங்க வேண்டும். சுலோகங்கள் எதுவும் தெரியாதவர்கள் கூட குபேரனின் பெயரையும் மகாலக்ஷ்மியின் பெயரையும் மனதார உச்சரித்தாலேப் போதும். நைவேத்தியமாக ஏலம், லவங்கம் போன்ற வாசனை திரவியங்கள் கலந்த பால் மற்றும் கேசரி செய்து வைக்கலாம்.


குபேர மந்திரம்:

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய
தன தான்யாதி பதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா!

இம்மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் நினைத்தது நடக்கும்.

குபேரன் ஆலயம்:

வளங்களை அள்ளித் தரும் ஸ்ரீலக்ஷ்மி குபேரருக்கு சென்னை வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்கலத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக  ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு அருகே இருக்கும் வேங்கட மங்கலம் பெருமாளின் பெயரோடு இருப்பதாலும், ரத்னமங்கலம் எனும் பெயரிலேயே மங்களம் இருப்பது மட்டுமின்றி குபேரனுக்கு உகந்த ரத்தினமும் இருப்பதால் இங்கே கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கே அமாவாசையன்று நாணயங்களால் நாமாகவே பூஜை செய்யலாம். இங்குள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பௌர்ணமியன்று 33 தங்கக் காசுகளால் பூஜை செய்வதும் விசேஷமாக இருக்கிறது.

ஸ்ரீ அரைக்காசு அம்மன்:




புதுக்கோட்டை திருகோகர்ண பிரகாதாம்பாளைப் போல ரத்னமங்களத்திலும் அரைக்காசு அம்மனுக்கு என தனி சன்னதி இருக்கிறது. ஞாபக மறதியாக நாம் கைம்மாற்றி வைத்து காணாமல் போனப் பொருட்கள் திரும்ப கிடைக்க அரைக்காசு அம்மனை வழிப்படுவது வழக்கம். அப்படி பொருள் கிடைத்தவுடன் வீட்டிலேயே வெல்லத்தை பிள்ளையார் போல பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த வெல்ல பிள்ளையாரையே நைவேத்தியமாக உட்கொள்ளலாம்.
குபேரன் திருக்கல்யாணத்தன்று மகாலட்சுமி உருவம் பதித்த டாலர் காணாமல் போக அது திரும்பக் கிடைத்தால் அரைக்காசு அம்மனுக்கு சிலைப் பிரதிஷ்டை செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்பட காணாமல் போன செயின் பெருக்கும்போது குப்பையில் கிடைத்தது. அதை நினைத்து அதிசயித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் சிலை செய்யும் ஸ்தபதியும் ஸ்ரீலக்ஷ்மி குபேரர் சன்னதிக்கு வர உடனேப் பேசி முடிவு செய்து பதிமூன்றே நாட்களில் அம்மன் அருளால் ஸ்ரீஅரைக்காசு அம்மனுக்கு சன்னதி கட்டி முடிக்கப்பட்டது.

சகல செல்வங்களையும்  அள்ளித் தரும் ஸ்ரீலக்ஷ்மி குபேரரை ரத்தினமங்களம் சென்று ஒருமுறை தரிசித்து வரலாமே!

 

குருவாயூரப்பன்!

குருவாயூரப்பன்

திரும்பியப் பக்கமெல்லாம் ஆறுகள், ஓடைகள் என தண்ணீரும், தென்னை மரங்களும் செழுமையாக கண்ணுக்கு குளிர்ச்சியாக, மனதிற்கு இதமளிக்கின்றன. இவ்வளவு வளங்களுடன் செழிப்பாக இருக்கும் கேரள மாநிலத்தை, கடவுளின் சொந்த நாடு என்றுக் கூறிக்கொள்வதில் அளவிலாத பெருமை அவர்களுக்கு. அது உண்மையிலேயே கடவுளின் நாடோ, இல்லையோ, ஆனால் மகாவிஷ்ணுவே வழிப்பட்ட சிலையை நாமும் வணங்க வேண்டுமென்றால் குளுகுளு கேரளாவிற்குதான் செல்லவேண்டும்.
தேவர்களின் அதிபதி குருவும், காற்றின் அதிபதி வாயுவும், மிக புனித இடமாகக் கருதி மஹாவிஷ்ணுவின் கட்டளைப்படி அவரே வழிப்பட்ட சிலையை கொண்டுவந்து நிறுவிய இடம் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில், இருக்கும் குருவாயூர். குருவும்,வாயுவும் இணைந்து ஏற்படுத்திய கோயிலாதலால்தான் இவ்வூருக்கு இப்பெயரே வந்தது.

தல வரலாறு:
பிரஜாபதி சுடாப்பா என்பவரும், அவரது மனைவி ப்ரிஸ்னியும் பிரம்மாவை நோக்கி கடும் தவமியற்றி வந்தனர். அவர்கள் முன் தோன்றிய பிரம்மா அவர்களுக்கு மிக அழகான மஹாவிஷ்ணுவின் விக்கிரகத்தை கொடுத்து வணங்கும்படி கூறினார். அதன்படியே மிக சிரத்தையாக வணங்கி வந்த அவர்களின் பக்தியை கண்டு மெச்சிய மஹாவிஷ்ணுவே அவர்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதனால் பெருமகிழ்ச்சியடைந்த அந்த தம்பதியர் ஆர்வமிகுதியில் உங்களைப் போலவே ஒரு மகன் எங்களுக்கு வேண்டும் என மூன்று முறைக் கேட்டனர். அதைக் கேட்ட மஹாவிஷ்ணு தொடர்ந்து, ’மூன்று ஜென்மங்களிலும் உங்கள் மகனாக நானே வந்து அவதரிப்பேன். மேலும் அந்த மூன்று ஜென்மங்களிலும் பிரம்மா உங்களுக்கு வழங்கிய இந்த விக்கிரகமும் கிடைக்கப்பெறும்...’ என ஆசி வழங்கினார். அதன்படியே முதல் ஜென்மத்தில், சத்யா யுகத்தில் ம்ஹாவிஷ்ணு ’ப்ரிஸ்னிகர்ப்பா’வாகவும், இரண்டாவது ஜென்மத்தில்  பிரஜாபதி சுடாப்பா காஷ்யபராகவும், பிரிஸ்னி அதிதியாகவும் பிறந்தனர். அவரது மகனாக வாமன அவதாரமெடுத்தார் மஹாவிஷ்ணு. மூன்றாவது ஜென்மமாகிய துவாபரா யுகத்தில் வசுதேவர், தேவகிக்கு மகனாக கிருஷ்ணராக அவதாரமெடுத்தார்.  மூன்று ஜென்மங்களிலும் அந்த விக்கிரகமும் கூடவே இருந்தது. அந்த சிலையை கொண்டு கிருஷ்ணர் துவாரகையில் மிகப்பெரிய கோயிலைக் கட்டினார். பின்னர் துவாபரா யுகம் முடியும் சமயத்தில் தனது பக்தரான உதவாவிடம் குரு மற்றும் வாயுவின் உதவியோடு தென்னிந்தியாவில் ஏதேனும் ஒரு புண்ணிய இடத்தில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். அதன்படி குருவும், வாயுவும் தேடிப் பிடித்த இடம்தான் குருவாயூர்.
அங்கே சிலை நிறுவப்படும் அந்த பொன்னானத் தருணத்தில் சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் அங்கு வந்திருந்ததாகவும் அங்கே கோயிலினுள்ளே நிற்க இடமில்லாததால் சற்று தள்ளி நின்று வாழ்த்திய இடம்தான் இன்றைய மாமியூர் கோயில் எனக் கூறப்படுகிறது. குருவாயூர் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக மாமியூர் சென்று வரவேண்டும் எனவும் ஒரு ஐதீகம் உண்டு.

குருவாயூர் கோயில் அமைப்பு:
இது இந்தியாவில் இருக்கும் முக்கியமான கோயில்களில் ஒன்று என்றாலும் இதன் அமைப்பு மற்ற கோயில்களைப் போல இருக்காது. ஆனால் இதன் கட்டடக் கலை கூத்தம்பலம், ஆனப்பந்தல் போன்றவற்றோடு கேரளக் கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
திருக்கோயில்:
திருக்கோயில் என்பதுதான் குருவும், வாயுவும் சேர்ந்து சிலையை பிரதிஷ்டை செய்த கர்ப்பகிரகம். இது சதுர வடிவிலும், இதன் கூரை கூம்பு வடிவிலும் இருக்கும். இதன் சுவர்களும், கதவுகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். கதவிற்கு முன்னால் இரு துவாரபாலகர்கள் சிலையும் உண்டு. திருக்கோயிலுக்கு முன்னால் இருப்பது நமஸ்கார மண்டபம். இதுவும் சதுர வடிவிலும், இதன் கூரை கூம்பு வடிவிலும் இருக்கும். திருக்கோயிலை சுற்றி சூழ்ந்திருக்கும் சுவர் நல்லம்பலம் அல்லது சுட்டம்பலம் என்றழைக்கப்படும். திருக்கோயிலின் இடதுப்புறம் ’மணிக்கின்னர்’ என்ற பெயர்பெற்ற கோயில் சன்னிதானம் உள்ளது. வலதுப்புறம் கோயில் சமையலறையான ‘மடப்பள்ளி’ உள்ளது. இதற்கு மிக அருகில் ‘சரஸ்வதி ஆரா’ என்று நவராத்திரி சமயத்தில் சரஸ்வதி பூஜை நடைப்பெறும் இடம் இருக்கிறது.
நல்லம்பலத்திற்கு வெளியே கொடிமரம் அமைந்திருக்கிறது. நல்லம்பலத்தின் வெளிச்சுவரையொட்டி கேரளக் கோயில்களின் விசேஷமான ’விளக்குமட்டம்’ (விளக்கு வரிசைகள்) உள்ளது.
கிழக்கு கோபுரத்திலிருந்து நல்லம்பலத்தின் மேற்கு பகுதி வரையிலான இடம் முழுவதும் ஓடு வேய்ந்திருக்கும். இவ்விடம் ’ஆனப்பந்தல்’ அல்லது ’நாடப்புறா’ என்றழைக்கப்படும். இது கோயில் யானைகளை கட்டி வைப்பதற்கும், பக்தர்கள் ஓய்வெடுப்பதற்குமான இடம். துலாபாரம் அமைந்திருப்பதும் இங்கேதான்.
கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்திருப்பது ’கூத்தம்பலம்’ எனும் கூத்து நடக்கும் இடம் உள்ளது. வடக்கு பகுதியில் ‘அக்ரசாலை’ எனும் உணவருந்தும் இடம் உள்ளது. இங்கேயே சொற்பொழிவுகளும் நடைப்பெறும்.

தினசரி பூஜை மற்றும் உற்சவங்கள்:
அதிகாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து அபிஷேகங்கள், ஆராதனைகள் முடிந்து மதியம் 1.30 மணிக்கு நடைசாத்தப்படும். பிறகு 4.30 மணியிலிருந்து இரவு 9.15 மணி வரை கோயில் திறந்திருக்கும். சிறப்பு பண்டிகையான ‘விளக்கு’ பண்டிகையன்று மட்டும்  ‘திரிபுகா’ நடைப்பெற்ற பிறகு நடைசாத்தப்படும். அதன் பிறகு விசேஷ தினங்களில் பாரம்பரிய நாட்டிய நாடகம் ‘கிருஷ்ணாட்டம்’ நடைப்பெறும்.
தினசரி பூஜைகளைத் தவிர உற்சவங்களும் படுவிமரிசையாக நடைப்பெறும். ஆண்டுதோறும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் 10 நாட்கள் உற்சவம் நடைப்பெறும். 10வது நாள் ‘ஆராட்டு’ முடிந்து உற்சவம் முடிவுறும். இதைத் தவிர சுக்லபட்ச ஏகாதசி, மண்டல பூஜை, விஷு, சரஸ்வதி பூஜை, திருவோணம், அஷ்டமி ரோகிணி... என பல பண்டிகைகள் விமரிசையாக நடைப்பெறும்.

எப்படி செல்வது?:
குருவாயூருக்கு பல ஊர்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருச்சூரிலிருந்து 5 நிமிடத்திற்கொரு பேருந்து உள்ளது. கேரள போக்குவரத்து கழகம் எல்லா பெருநகரங்களிலிருந்தும் பேருந்து வசதி செய்துக்கொடுத்திருக்கிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர், மைசூர், உடுப்பி போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. ரயில் மார்க்கமாக செல்ல வேண்டுமென்றால் கூட நிறைய ரயில்கள் இருக்கின்றன. சென்னை- மங்களூர் வழியில் திருச்சூர் இருப்பதால் இந்த வழியாக செல்லும் ரயில்களிலும் செல்லலாம்.

எங்கே தங்குவது?
குருவாயூர் தேவஸ்தானம் பக்தர்கள் தங்குவதற்கு வேண்டிய வசதிகளை செய்துக் கொடுத்துள்ளது. குருவாயூரில் நிறைய சத்திரங்களும், ஓய்வில்லங்களும் உள்ளன. அதைத் தவிர தனியார் லாட்ஜ்களும் நிறைய உள்ளன.

இத்தனை அழகும், வசதிகளும் நம்மை ‘குருவாயூருக்கு வாருங்கள். அங்கே குழந்தை சிரிப்பதை பாருங்கள்” என்று நம்மை அழைக்கின்றன. நாமும்தான் ஒருமுறை சென்று குழந்தையின் சிரிப்பை கண்டு வருவோமே!

 

ஏகாதசி!

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
* சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, ‘காமதா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘பாப மோகினி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.

* வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி ‘மோகினி ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘வருதித் ஏகாதசி’ என்றும் கூறப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமய மலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

* ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘அபார ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

* ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி ‘சயனி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘யோகினி’ என்றும் பெயர்பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

* ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது ‘புத்ரஜா’ என்றும், தேய்பிறை ஏகாதசியானது ‘காமிகா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘பத்மநாபா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘அஜா’ என்றும் பெயர் பெற்றது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ‘பிரபோதின’ எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான, ‘ரமா’ தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.

* மார்கழி மாத ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி‘ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘உத்பத்தி’ ஏகாதசி எனப்படுகிறது.

* தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘சுபலா’ என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

* மாசி மாத வளர்பிறை ஏகாதசி ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.
* பங்குனி தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’ எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து 
சென்று வெற்றி பெறுவீர். வளர்பிறை ஏகாதசி ‘ஆமலகி’ எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.
* ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.


சர்வ மங்களம் அருளும் சர்வ மங்களா நித்யா!

 ஸர்வ மங்களா நித்யா:

தங்கநிறம் கொண்ட இத்தேவி தாமரை மலரில் வீற்றருள்பவள். அன்னையின் திருவுடலை செந்நிற ரத்தினக் கற்களும், முத்துகள் பொதிந்த பதக்கங்களும், மாலைகளும் அணிசெய்கின்றன. கைகளில் வளையல்கள், தோள்வளை, முத்துகளும் மாணிக்கங்களும் பதித்த மகுடம் மற்றும் தண்டை ஆகியவற்றை அணிந்து ஸர்வாலங்கார பூஷிதையாக தேவி பொலிந்து அருள்கிறாள்.

இந்த அம்பிகை எப்போதும் அனைத்து மங்களங்களுடனும் இருப்பவள்; அந்த மங்களங்களை தன் பக்தர்களுக்கு அருள்வதிலும் தன்னிகரற்றவள். இத்தேவியின் கடைக்கண் பார்வை அனவரதமும் அன்பர்களைக் காக்கின்றது. தன் நான்கு கரகமலங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம், அபயவரதம் தரித்துள்ளாள். சிவப்புப் பட்டு உடுத்தியவள். இந்த அம்பிகையைச் சுற்றி 72 சக்திகள் காவலாய் உள்ளதாய் புராணங்கள் பகர்கின்றன.

ஸர்வ மங்களாதேவி திதி நித்யா தேவிகளுக்கு மாறாக ஆயுதங்கள் ஏதுமின்றி சாந்த வடிவினளாக அருட்காட்சியளிக்கிறாள். சௌம்யமான அன்னையின் திருமுகத்தில் நிலவும் அமைதியுடன் கூடிய இளநகை அலாதியானது.



 அம்பாளை பூஜித்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று கேட்டால், கிடைக்காதது ஒன்றுமில்லை என்பதுதான் பதில். சர்வ மங்களா நித்யாவின் திருவடித் தாமரைகளைப் பணிந்து ஸர்வமங்களங்களும் பெறுவோம்.

வழிபடு பலன்:

உலகியல் வாழ்க்கைத் தேவைகள், கல்வி, வேலை, திருமணம், மகப்பேறு, தொழிலில் வெற்றி, செல்வம், செல்வாக்கு, புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகிய அனைத்தையும் தந்து அன்பர்களை ஆன்மிக நிலையிலும் மேம்படுத்துபவள் இந்த தேவி. பிரயாணங்களின் போது ஆபத்து நேராமல் காப்பவள்.

ஸர்வமங்களா காயத்ரி

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூல மந்த்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்வௌம் ஸர்வமங்களாயை நம:

த்யான ஸ்லோகங்கள்

பார்ணவேந்து ஸந்நிபானானாம் ப்ரதீப்த குண்டலாம்
ஸர்வலோக பூஜிதாங்க்ரி திவ்ய பங்கஜாம்
சிவாம் ஸர்வலோகநாயகீம் ஸமஸ்த ஸௌபாக்ய தாயகாம்

ஸர்வமங்களாம் பஜேப்ரஸனன்ன விக்ரஹாம்ஸதா.
ஸுவர்ண வர்ணீம் ருசிராம் முக்தா மாணிக்ய பூஷிதாம்

மாணிக்ய முகுடாம் நேத்ர த்வயப்ரேங்கத்யா பாராம்
த்விபுஜாம் ஸுஹாஸனாம் பத்மம் த்வஷ்ட ஷோடஸத்வயை:
பர்வீண நீபேதேஸ சதுர்த்வார பூஸத்மயக்மகை:
மாதுலிங்க பலம் தக்ஷே ததானாம் கர பங்கஜே

வாமேந நிஜபக்தானாம் ப்ரயச்சந்தீம் தனாதிகம்
ஸ்வ ஸமானாபிஹி ரபித: ஸக்திப்ய: பரிவாரிதாம்.
ஷட் ஸப்ததிபிரந்யாபி ரக்ஷரோத்தாபி ரந்விதாம்
ப்ரயோகேஷ்வந்யதா நித்ய ஸபர்யாசுக்த சக்தியாம்.

ஸுக்ல பக்தாஸனே ரம்யாம் சந்த்ரகுந்த ஸமத்யுதிம்
ஸுப்ரஸன்னாம் ஸஸிமுகீம் நாநாரத்ன விபூஷிதாம்
அனந்த முக்தாபரணாம் ஸ்ராவந்தீ பும்ருத த்ரவம்
வரதாபய வேஷாட்யாம் ஸ்மரேத் ஸௌபாக்ய வர்த்தனீம்.

ரக்தோத்பல சமப்ரக்யாம் மதுபத்ர நிபேஷணாம்
இஷு கார்முக புஷ்பை: சுபாசாங்குஸ ஸமன் விதாம்
ஸுப்ரஸன்னாம் ஸஸிமுகீம் நாநாரத்ன விபூஷிதாம்
ஸுப்ரபதாஸஸ்யாம் தாம் பஜாமி ஸர்வமங்களாம்.

ஸ்ரீஸூக்த நித்யா ஸ்லோகம்

ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ஓம்கார ப்ரக்ருதிக,
ஸ்ரீ ப்ரீதி கலாத்மிகாம் ஸ்ரீஸர்வமங்களா
நித்யா ஸ்வரூபாம் பீஜாகர்ஷிணீ ஸக்தி ஸ்வரூபாம்,
ஸ்ரீ ஸங்கர்ஷண வக்ஷஸ்தல கமல வாஸினீம்

ஸர்வமங்கள தேவதாம் ஸ்ரீசாந்தி லக்ஷ்மி ஸ்வரூப ஸர்வமங்கள நித்யாயை நம:

வழிபட வேண்டிய திதிகள்
ஸுக்ல பக்ஷ த்ரயோதசி / க்ருஷ்ண பக்ஷ த்ரிதியை
(த்ரயோதசி திதி ரூப ஸர்வமங்கள நித்யாயை நம:)

திதி தேவதை: ரதி, மன்மதன்

நைவேத்யம் : கடலை சுண்டல்

பூஜைக்கான புஷ்பங்கள்: செந்தாமரைப் பூக்கள்.

திதி தான பலன்:
கடலை சுண்டல் செய்து தேவிக்கு நிவேதித்து தானம் செய்தால் சந்ததி விருத்தியாகும்.

பஞ்சோபசார பூஜை
ஓம் ஸர்வமங்களா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் ஸர்வமங்களா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்:
ஆன்மிக நாட்டம் உடையவர்கள். தங்களின் தகுதிக்கு ஏற்ப தானம் செய்பவர்கள். அழகானவர்கள். மிகுந்த காமம் உடையவர்கள். எதிலும் வித்வானாகத் திகழ்பவர்கள். செல்வந்தர்கள்.சஞ்சல குணம் உள்ள புதல்வனை உடையவர்கள். நாட்டியத்தைக் கண்டு மகிழ ஆவல் கொண்டவர்கள். நாற்கால் பிராணிகளிடத்தில் பிரியமுள்ளவர்கள். திட்டமிட்டு செயல்படுபவர்கள்.

யந்திரம் வரையும் முறை: சந்தன குங்குமக் கலவையால் வட்டம், எட்டிதழ்கள், பதினாறிதழ்கள், முப்பத்தியிரண்டு இதழ்கள், வட்டம் நான்கு வாயில்களுடைய இரு சதுரங்கள் என்று வரையவும்.
எட்டுத் தளங்களில் பத்ரா, பவானி, பாவ்யா, விசாலாக்ஷி, சுவிஸ்மிதா, கருணா, கமலா, கல்பா ஆகிய சக்திகளையும், 16 தளங்களில் கலா, பூரணி, நித்யா, அம்ருதா, ஜீவிதா, தயா, அசோகா, அமலா, பூர்ணா, புண்யா, பாக்யா, உத்யாதா,  விவேகா, விஸ்வா, விபவா, விநாதா போன்ற சக்திகளையும், 32 தளங்களில் காமினி, கேசரி, சர்வபூரணா, பரமேஸ்வரி, கௌரி, சிவா, அமேயா, விமலா, விஜயா, பரா, பவித்ரா, பத்மினி, திவ்யா, விஸ்வேஸி, சிவவல்லபா, அசேஷரூபா, ஆனந்தா, அம்புஜாக்ஷி, வரதா, வாக்ப்ரதா, வாணி, விவிதா, வேத விக்ரஹா, வித்யா, வாகீஸ்வரி, சந்தியா, சம்யதா, சரஸ்வதி, நிர்மலா, தனரூபா, தனதா, அபயங்கரீ போன்ற சக்திகளையும் பூஜிக்க வேண்டும்.

இத்திதியில் செய்யத் தக்கவைநற்செயல்கள்:

ஸௌபாக்கியத்தைத் தரவல்ல செயல்கள், நாட்டியம் பயிலுதல், கதை, கட்டுரை போன்றவற்றை எழுதுதல், அணிகலன்கள் வாங்குதல் போன்றவை.

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ ஸர்வ மங்களா நித்யா துதி

திரயோதசியான தொருது இடையின் மையம்
சேர்ந்தாரா தாரமதில் வேரூமூன்றி
புரியாகும் ஆக்கினையைக் கடந்து மேவி
குருவாகிக் குரு பதத்தில் புரிக்கும் அம்மை

அறிவை அறிவால் அறிந்தே அனுபவத்தில்
வரியொடுங்கும் பாதமதை அருளிச் செய்வாய்
துறவுதனை மனமடையத் துணைசெய்தாயே
சோதியே மனோன்மணியே! சுழிமுனை வாழ்வே.

அகத்தியர் அருளிய கிருஷ்ண பக்ஷ ஸர்வமங்களா நித்யா துதி

வாழ்வான உலகமெல்லாம் நீயேயம்மா
மண்டலங்கள் எங்கெங்கும் வளர்ந்த சோதி
தாழ்வேது உனையடைந்த சித்தர்க்கெல்லாம்
தங்கமயமாய் இருந்த தேவி ரூபி

பாழ்போகா வாக்கு நல்ல சித்தி தந்து
பாக்கியமே அடங்காத அண்டத்தூடே
சூழ்ந்திருந்து மகிழ்ந்தென்னை பெற்ற மாதா
சோதி மனோன்மணித்தாயே சுழிமுனைவாழ்வே.

மாத்ருகா அர்ச்சனை

ஓம் ஸர்வமங்களாயை நம:
ஓம் பவ்யாயை நம:
ஓம் மங்கலாயை நம:
ஓம் மங்கலப்ரபாயை நம:
ஓம் காந்த்யை நம:
ஓம் ஸ்ரியை நம:

ஓம் ப்ரீத்யை நம:
ஓம் சலாயை நம:
ஓம் ஜ்யோத்ஸ்னாயை நம:
ஓம் விலாஸின்யை நம:
ஓம் வரதாயை நம:
ஓம் வாரிஜாயை நம:

ஓம் வ்யாக்ராயை நம:
ஓம் சாரவ்யை நம:
ஓம் வாஸ்து தேவதாயை நம:
ஓம் அனந்த சக்த்யை நம:
ஓம் காமிகாயை நம:
ஓம் ஸக்தயே நம:

ஓம் அதுலாயை நம:
ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
ஓம் க்ஞான தாயின்யை நம:
ஓம் யுக்தயே நம:
ஓம் ஸுயுக்தயே நம:
ஓம் அன்வீக்ஷிக்யை நம:

ஓம் குக்ஷிபோதாயை நம:
ஓம் மதாலஸாயை நம:
ஓம் ப்ரஹ்ம வித்யாயை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஒம் வேக்ஷ்யாயை நம:

ஓம் மஹா யந்த்ராயை நம:
ஓம் ப்ரவாஹின்யை நம:
ஓம் த்யானாயை நம:
ஓம் த்யேயாயை நம:
ஓம் த்யானகம்யாயை நம:

ஓம் யோகின்யை நம:
ஓம் யோகஸித்திதாயை நம:
ஓம் அக்ஷராயை நம:
ஓம் ப்ரஹ்மவித்யாயை நம:

ஓம் ப்ரபாயை நம:
ஓம் வேக்ஷ்யாயை நம:
ஓம் மஹாயந்த்ராயை நம:
ஓம் ப்ரவாஹின்யை நம:
ஓம் ஸிவப்ரதாயை நம:
ஓம் பஞ்சப்ரஹ்மாத்மிகாயை நம:

ஓம் த்ரிபுராயை நம:
ஓம் பீஜ தத்வகாயை நம:
ஓம் ஸர்வ பீஜாத்மிகா ஸித்தயே நம:
ஓம் அஜ்ஜானோபாதி காமின்யை நம:

ஓம் கல்பாந்த தனோஜ்வலாயை நம:
ஓம் ஸத்வ்ருத்தயே நம:
ஓம் வ்யாள பூஷணாயை நம:

 

Saturday, 16 April 2016

செல்வ வளம் தரும் சித்திரை மாதம்!


சித்திரை மாதத்தை வசந்த மாதம் என்றும் கூறுவர். மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள்.

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் என்று கூறப்படுகிறது. சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம்.

சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன.

அட்சய திருதியை

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு. சித்திரையில் வரும் அட்சய திரிதியை அன்று வசதி படைத்தவர்கள் தங்கம் வாங்கு வார்கள். அன்று ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும் (மஞ்சள், உப்பு) குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்பது நம்பிக்கை.

லட்சுமி பூஜை

சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

பஞ்சாங்கம்

திருமாலின் நரசிம்ஹ அவதாரம், பரசுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான். ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதரித்ததும் இந்நாளில் தான். சித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சொக்கநாதர்- மீனாட்சியைத் திருக் கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரையில் சித்திரை மாதம் நடைபெறுகிறது.

சித்ரா பவுர்ணமி

சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு. கள்ளழகர் விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம்.