Sunday 17 April 2016

திருப்பம் தரும் திருச்செந்தூர் ஜெயந்தி நாதர்!

 தமிழ்நாட்டில் எங்கு ஒரு சிறிய மலைக்குன்று இருந்தாலும் அதன்மேல் ஒரு முருகன் கோயில் இருக்கும். அதனால்தான் முருகப்பெருமானை (மலையும் மலை சார்ந்த இடங்களில் இருப்பதால்) குறிஞ்சியாண்டவர் என்று சொல்கிறோம்,

எப்பொழுதும் மலை மீதே இருக்கும் முருகப்பெருமான் கடற்கரையோரமாக இருக்கும் தலம் திருச்செந்தூர். முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாகக் கருதப்படும் இத்திருத்தலம் தூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 56 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 88 கிமீ தொலைவிலும் உள்ளது.

முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்த பின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவமைத்து வழிப்பட்ட திருத்தலம் திருச்செந்தூராகும்.

சூரபத்மன் என்ற அசுரன் வீரமகேந்திரபுரி என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தான். அவன் சிவப்பெருமானை நோக்கி தவமிருந்து வரம் பல பெற்றிருந்ததால் மிகவும் கர்வத்துடன் தன்னை அழிக்க யாருமில்லை என்ற அகந்தையுடன் தேவர்களையும் அடக்கி கொடுமை செய்து வந்தான். இவனிடமிருந்து விடுதலை வேண்டிய தேவர்கள் சிவப்பெருமானிடம் முறையிட அவர் தன் மூன்றாம் கண்ணாகிய நெற்றிக் கண்ணை திறந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்கினார். அத்தீப்பொறிகளை அக்னி பகவான் மூலம் பெற்ற கங்கை இமயமலையில் இருக்கும் சரவணப்பொய்கையில் சேர்ப்பித்தது. அங்கே அந்த ஆறுப்பொறிகளும் ஆறுக் குழந்தைகளாக உருமாறின.

ஒரு சமயம் ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு வந்த இந்த ஆறுக் குழந்தைகளைக் காண பார்வதி தேவி வந்தார். அவர் அன்புடன் அந்த குழந்தைகளை அரவணைக்க ஆறுக் குழந்தைகளும் ஒன்றாக இணைந்து ஆறுதலை, பன்னிரெண்டு கைகளும் கொண்டு முருகப்பெருமானாக உருவெடுத்தன. முருகன் வாலிபப் பருவம் எட்டியதும் சிவப்பெருமானின் கட்டளைக்கிணங்க சூரப்பத்மனை வதம் செய்வதற்காக பெரும்படையுடன் திருச்செந்தூர் வந்து முற்றுகையிட்டார். தன் படைத்தளபதி வீரபாகுவை சூரப்பத்மனிடம் அனுப்பி தேவர்களை விடுவிக்குமாறு கூறினார். அவன் இதற்கு மறுக்கவே போர் மூண்டது.

கடுமையாக நடந்த போரின் முதல் ஐந்து நாட்களில், சூரபத்மனின் சகோதரர்களும், சேனையையும் அழித்தார். ஆறாம் நாள், சூரபத்மனுக்கும் முருகப்பெருமானுக்கும் போர் நடந்தது. மாமரத்தின் உருவில் ஒளிந்திருந்த சூரபத்மனை முருகப்பெருமான் தன் வேலால் இரண்டாகப் பிளந்தார். உடைந்த துண்டுகளில் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் உருமாறின. முருகப்பெருமான் மயிலினை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றார். அதைக் குறிக்கும் வகையில் கர்ப்பகிருகத்தின் முன் இரண்டு மயில்கள் உள்ளதை இப்பொழுதும் காணலாம். சூரப்பத்மனை வதம் (சூரசம்ஹாரம்) செய்த பின், முருகப்பெருமான் தன் தந்தை சிவபெருமானை வழிபட, ஐந்து லிங்கங்கள் அமைத்து வழிப்பட்டார். அந்த லிங்கங்கள் கர்ப்பகிரகத்தின் பின்புறம் பாம்பறை எனும் குகையில் அமைந்துள்ளன. முருகப்பெருமான் அவற்றை வழிப்பட்டுக்கொண்டிருப்பதால் கையில் மலர்களுடன் இருக்கும்விதமாக மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பஞ்சலிங்கங்கள் இருப்பதால்தான் மூலவர் சன்னிதானத்திற்கு முன்பாக இரண்டு மயில்களுடன் நந்தியும் காணப்படுகிறது.

கோயில் அமைப்பு:

குறிஞ்சி ஆண்டவனான முருகப்பெருமான் எப்படி கடற்கரையில் இருக்கிறார் என்று ஆச்சர்யமாக இருக்கலாம். உண்மையில் திருச்செந்தூரிலும் கடற்கரையோரமாக இருக்கும் சந்தனமலையில்தான் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். காலப்போக்கில் இங்கேயுள்ள சந்தன மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கந்தபுராணம், இவ்விடத்தை 'கந்தமானத பர்வதம்' என்று சிறப்பிக்கிறது. குறிஞ்சி மற்றும் முல்லையின் கலப்பு என இவ்விடம் பற்றி அகநானூறும் குறிப்பிடுகிறது, இதை உணர பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ள இடத்தை உற்று நோக்கினால் அது ஒரு மலை என்பது நன்குப் புலப்படும்.

இக்கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகள் கொண்டது. உயரம் 137 அடி உயரமும் 90 அடி அகலமும் கொண்டதாகும். தென்வடலாக அமைந்த இக்கோபுரத்தின் அகலம் 65 அடிகளாகும். இக்கோபுரத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் ராஜகோபுரம் பொதுவாக கிழக்குவாயிலிலேயே அமைக்கப்படும். ஆனால் திருச்செந்தூரில் கிழக்கு வாயில் கடலுக்கு மிக அருகில் இருப்பதால் அங்கே உறுதியான அடித்தளம் இடமுடியாதென்பதாலும் கடல் அரிப்பு ஏற்படும் என்பதாலும் ராஜகோபுரம் மேற்கு வாயிலில் கட்டப்பட்டுள்ளது.

சண்முக விலாசம்:

தெற்கு நோக்கியவாறு உள்ள வாயில் வழியாக உள்ளேச் சென்றதும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சண்முக விலாசம் என்னும் பெரிய மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபம் 120 அடி உயரமும், 86 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதைத் தாங்கி நிற்கின்றன.

இரண்டாவது பிரகாரம்:

முருகப் பெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருந்தாலும் திருச்செந்தூர் தலம் குருபகவானுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இதற்கு காரணம் முருகப்பெருமான் அசுரர்களுடன் போர் துவங்குவதற்கு முன்பு, சூரபத்மன் பற்றியும், அவன் சகோதரர்கள் மற்றும் அசுரகுலம் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ள விரும்பினார். முருகனின் விருப்பத்தை உணர்ந்த குருபகவான், திருச்செந்தூருக்கு வந்து அசுரர்கள் பற்றிய தகவல்களை முருகனுக்கு விளக்கிக் கூறியதோடு இத்தலத்திலேயே தங்கியும் விட்டார். குருபகவான் எழுந்தருளிய திருத்தலம் என்பதால் இதனை குரு பரிகார திருத்தலமாகவும் வழிபடுகிறார்கள். குரு பரிகாரத்திற்கும் குருப் பெயர்ச்சிக்கும் பெயர் பெற்ற இத்திருத்தலத்தின் இரண்டாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.

அடுத்ததாக இத்தலத்தின் இன்னொரு விசேஷமும் இரண்டாம் பிரகாரத்திலேயே அமைந்துள்ளது. நாம் திருச்செந்தூர் செல்லும்போது அதையும் கவனிக்க தவறக்கூடாது. அதாவது சூரபத்மனை முருகன் வதம் செய்த இடம் திருச்செந்தூர். ஆனால் மூலவரோ வதம் முடிந்த பின்பு லிங்கம் அமைத்து பூஜை செய்யும் தோற்றத்தில் சாந்தமாக காட்சியளிக்கிறார். (பொதுவாகவே 'அழகென்ற சொல்லுக்கு முருகா' என்பதற்கு ஏற்ப அழகாகவும் சாந்தமாகவுமே நாம் பார்த்திருக்கிறோம்). ஆனால் இத்தலத்தில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள 'சூரசம்ஹார மூர்த்தி' அழகுடன் ஆவேசமும் வீரமும் ஒருங்கிணைந்துக் காணப்படுகிறார். இக்காட்சியை நாம் வேறெங்கும் காணமுடியாது.

மேலும் இரண்டாம் பிரகாரத்தில் மேலை கோபுரம் கட்ட உறுதுணையாக இருந்த மேலவாசல் விநாயகர் சன்னதி, பெருமாள் சன்னதியும் உள்ளது.

முதற்பிரகாரம்:

இங்கே மாப்பிள்ளைச்சாமி என அழைக்கப்படும் உற்சவமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.மேலும் வள்ளி தெய்வயானை சன்னதிகளும் யாகசாலையும் உள்ளது. நடராஜர் சன்னதியில் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்க அருகே சிவகாமியம்மையும் நடனத்தை மெய்மறந்து பார்த்தவண்ணம் இருக்கும் காரைக்காலம்மையாரையும் காணலாம்.

மூலவர்:

கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் கருவறையில், கிழக்கு நோக்கியவாறு மூலவர் செந்தில்நாதன் எழுந்தருளியுள்ளார். தலையில் சடையை எடுத்துக் கட்டியுள்ளார். நான்கு கரங்களுடன் திகழும் இவர், மேற்கரங்களில் வஜ்ரம், ஜப மாலையும், கீழ்க்கரங்களில் தாமரையும், ஊரு முத்திரையும் தாங்கியுள்ளார். மூலவருக்கு முன்பாக வலப்புறத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட ஸ்ரீபலிநாயகரும், இடப்புறம் தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீபலிநாயகரும் உள்ளனர்.

கர்ப்பகிருகத்திற்கு பின்புறம் அமைந்திருக்கும் பஞ்சலிங்கமூர்த்திகளை பூஜிக்கும் கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.

நாழிக்கிணறு:

தனது படைவீரர்களுக்கு தாகம் எடுத்தப்போது தனது வேலை ஊன்றி முருகப்பெருமான் உருவாக்கிய தீர்த்தம்தான் நாழிக்கிணறு. 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடி சதுரப்பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில் இருக்கும் நாழிக் கிணற்றில், நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. உப்புகரிக்கும் கடற்கரையின் அருகில் இருக்கும் இக்கிணற்றின் நீர் தூய்மையாக இருப்பது ஒரு அதிசயமாக கருதப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் முருகனை தரிசிக்கும் முன்பு கடலிலும் நாழிக்கிணற்றிலும் நீராடுவதை புண்ணியமாகக் கருதுகின்றனர்.


'ஓம்' வடிவம்: திருச்செந்தூர் உட்பிரகாரத்தை முறைப்படி சுற்றி வந்தால் அது 'ஓம்' வடிவில் அமைக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.

பூஜைகள் மற்றும் உற்சவங்கள்:இத்திருக்கோயிலில் குமார தந்திர முறைப்படி, ஒன்பது கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9.00 மணி வரை தொடர்ந்து திறந்தே இருக்கும். ஒவ்வொரு மாத விசாகம், கார்த்திகை சஷ்டி போன்ற தினங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடைப்பெறுகிறது.

வைகாசி விசாகத்தன்று ஸ்ரீஜெயந்திநாதர், வள்ளி, தெய்வயானையுடன் திருவீதியுலா நடைப்பெறும்.

கந்தசஷ்டி விழா:

சூரபத்மனை வதம் செய்த இடம் என்பதால் இங்கே கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முக்கிய வைபவமாகும். இதைக் காண வரும் மக்கள் அலை, கடலலையோடுப் போட்டிப் போடும். 7ம் நாள் தெய்வயானை அம்மனுடன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைப்பெறும்.


ஆவணி மற்றும் மாசி திருவிழா:

* 7ஆம் திருவிழா பச்சை சாத்தி
* 8ஆம் திருவிழா சிகப்பு சாத்தி
* 10ஆம் திருவிழா திருத்தேர் ( ஆண்டில் இருமுறை இத்தேர் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்).
* 11ஆம் திருவிழா தெப்பத் திருவிழா (ஆண்டுக்கு ஒரு முறை இத்திருவிழா நடைபெறுகிறது) (மாசி மாதம் மட்டும்)

எங்கே இருக்கிறது? எப்படி செல்வது?: தூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 56 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 88 கிமீ தொலைவிலும் உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களிலிலிருந்தும் திருச்செந்தூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளது. மேலும் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்கள் திருச்செந்தூருக்கு அருகிலிருக்கும் விமானத் தளங்களாகும்.

திருச்செந்தூரில் ஏராளமான இலவச தங்கும் விடுதிகள் உள்ளது. மேலும் குறைந்த கட்டணத்தில் நிறைய விடுதிகளும் குடில்களும் உள்ளது..

திருச்செந்தூர் சென்றால் அதன் சுற்றுப்புறத்தில் பல கோயில்கள் உள்ளது. சிவக்கொழுந்தீஸ்வர திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், நவதிருப்பதி, குலசை முத்தாரம்மன் ஆலயம் என பல பெயர்பெற்ற கோயில்கள் உள்ளன.

பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை ஊமையாக இருந்த குமரகுருபரர் பேச்சாற்றல் பெற்ற இத்திருத்தலத்தில் மூலவர் சன்னதியில் சந்தனமும் நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்ட பன்னீர் இலையில் விபூதியும் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இதை உண்ட, ஆதிசங்கரர் நோய் நீங்கி, ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம் பாடியதாகக் கூறுவர். இதுப் போல பல மகிமைகளைக் கொண்ட திருச்செந்தூர் தலத்திற்கு நாமும் ஒருமுறை சென்று நலம் பெறலாமே!


 

No comments:

Post a Comment