Saturday, 1 October 2016

ஸ்ரீ ஹனுமத் புஜங்கம் (தமிழில்)!


ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதாஸௌர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்

பொன் போன்ற மேனியன். நவ வியாகரணங்களையும் கற்றவன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன்.
ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்களின் அனுமனே போற்றி.

`பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்

பேரொளி கொண்டவன். அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். சிறுவயதிலேயே
சூரியனை பழமென்று எண்ணி அதை விழுங்கப் பாய்ந்தவன்.  தீமைகளை அடியோடு அழிப்பதில் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

பஜே லக்ஷ்மணப்ராண ரஹாதிதக்ஷம்
பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்

லக்ஷ்மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி.
சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

கராலாட்ட ஹாஸம் க்ஷிதிக்ஷிப்தபாதம்
கநக்ராந்தப்பருங்கம் கடிஸ்தோருஜங்கம்
வியத்வ்யாப்வகேஸம் புஜாச்லேஷிதாச்சமம்
ஜயஸ்ரீ ஸமேதம் பஜே ராமதூதம்

சிம்மம் போல் கர்ஜனை செய்பவன். அழகான திருப்பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்யமான அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.

சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்

ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதம் போல் முழங்குபவனே போற்றி.
உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய்.
நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் ராமதாசனே போற்றி.

ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே

போரிலே நீ ருத்ரனைப் போல் பகைவர்களை எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது  ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது  நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமனின் பெருமைகளை யாரால் எப்படிக் கூற இயலும்?! எவராலும் முடியாது!

கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
ரணளக்ஷவணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்

பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீயே வானரக் கூட்டங்களுக்குத் தலைவன்.  நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன்.
 உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய

சகலவிதமான பீடைகளையும் போக்கியருள்பவனே. ராமனுக்கு இனியவனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:

பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:

பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் கடுஞ் சினத்திற்குத் தப்பியது?
உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி?

ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம

ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவ னே! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரனே. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறைப் பெற்ற தவசீலனே! இதற்கு என்ன தவம் செய்தனை?

ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
நீரதாரணரூட காட ப்ரதாபி
பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!

குருவே ஸ்ரீ ஹனுமனே! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன்மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபு வாக உள்ளவன் நீயே! உன்னைத் துதிக்கிறோம்.

மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே

ருத்ரனும் பிரம்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ!
 இசையில் லயிப்பவன்! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ,
 அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே! உன்னைப் போற்றுகிறேன்.

நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்

சத்யவடிவினனே போற்றி.
வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி.
சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி.
தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
நமஸ்தே பிங்களாக்ஷவய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்

நித்ய பிரம்மசாரியே போற்றி!
வாயு மைந்தனே போற்றி!
எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன்.
என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

ஹநூமத்புஜங்கப்ரயாதம் ப்ரபாதே ப்ரதோஷேபி வா
சார்தராத்ரேபி மர்த்ய படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால:
நமஸ் ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும்.
சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும்.
சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

ஆதிசங்கரர் அருளியது.
 

மங்களம் அருளும் மஹா கௌரி!

 

 
ச்யாம வர்ணாம் த்ரிநேத்ராம் சவராபயகராம் புஜாம்
ஸ பத்மாம் ஸாக்ஷமாலாம் ச ஸர்வாபரண பூஷிதாம்
ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் சுஸ்மிதாம் சுமனோகராம்
காமகோடீம் அஹம் வந்தே காமிதார்த்தப்ரதாயினீம்

 சிவ பெருமான் வேதங்களின் தத்துவத்தை தேவிக்கு உபதேசிக்கையில் கவனக்குறைவாக தேவி நடந்து கொண்டதால் ஈசனின் சாபத்திற்கு ஆளாகி கௌரி என்ற பெயரில் மனித வடிவமெடுத்து தவம் புரிந்து ஈசனை அடைந்ததாக வட மொழிப் புராணங்கள் கூறும்.

கௌரி என்றாலே தங்கநிறமுள்ளவள் என்று பொருள். பக்தர்களுக்கு எல்லையற்ற செல்வத்தையும், பொன்னையும் அளிப்பவளாதலின் ஸ்வர்ணகௌரி என்றும், ஸம்பத்கௌரி என்றும் அழைக்கப்படுகிறாள்.


ஆடி மாதம் சுக்லபட்ச திருதியை ஸம்பத்கௌரி அல்லது ஸ்வர்ணகௌரி விரதநாள் ஆகும்.

இதேபோல ஆவணி சுக்லபட்ச சஷ்டீ தினம் மங்கள கௌரி விரததினமாகவும்,


 புரட்டாசி கிருஷ்ணபட்ச ஸப்தமியும், சுக்ல பட்ச பஞ்சமி யும் கஜகௌரி விரததினமாகவும்,


புரட்டாசி அமாவாசை விருத்தி கௌரிக்கு உரியதாக வும்,


 புரட்டாசி சுக்லபட்ச தசமி என்றும் விஜயதசமி தசரத லலிதா கௌரி விரதமாகவும்,


புரட்டாசி சுக்லபட்ச ஏகாதசியன்று துளசி கௌரி விரதமாகவும்,


ஐப்பசி அமாவாசையன்று கேதார ஈச்வரரை மகிழ்விக்கும் கேதார கௌரி விரதமாகவும்,


கார்த்திகை சுக்லபட்ச சதுர்த்தி பதரீகௌரி விரதமாகவும்,


பங்குனி சுக்ல பட்ச திருதியை ஸௌபாக்ய கௌரியை வழிபடுவதாகவும்,


சித்திரை சுக்லபட்ச சதுர்த்தி வரதாகவுரி விரதமாகவும்,


சித்திரை வளர்பிறை பஞ்சமி லாவண்ய கௌரிக்குரியதாயும்,


வைகாசிசுக்ல பட்ச பிரதமை புன்னாக கௌரி விரமாகவும்,


ஆனி சுக்லபட்ச திருதியை ரம்பா கௌரியை அனுஷ்டிக்கும் தினமாகவும்


ஆவணி சுக்லபட்ச பஞ்சமி சமீப கௌரி விரதமாகவும் கொண் டாடப்படுதல் வேண்டும்.

ஸம்பத் கௌரி செல்வத்தை அளிப்பாள். மங்கள கௌரி திருமணத்தையும் மாங்கல்ய மும் அருள்வாள். கஜகவுரி வலிமையையும், விருத்தி கவுரி மக்கட்பேற்றையும், துளசி கௌரி விஷ்ணுவின் அருளையும், கேதார கௌரி ப்ரமேச்வரனின் அருளையும், லாவண்யகௌரி அழகையும், ஸௌபாக்ய கௌரி எல்லா நன்மையும், புன்னாக கௌரி ஸர்ப்ப தோஷங் களை நீக்குதலையும், சமீப கௌரியம்மை தன் ஸாமீப்யமான மோட்சத்தையும் அருளுவார்கள்.

வரதம் என்னும் அம்பாள் காட்டும் முத்திரை எல்லா அபீஷ்டமும் (வேண்டுவன எல்லாம்) தரும் அபயமுத்திரை தன்னை அண்டியவர்கட்கு சரணாகதி அளித்து பயம் ஆபத்து இவற்றிலிருந்து காப்பாற்ற நான் இருக்கிறேன். நீ அஞ்ச வேண்டாம் என்று அம்பாள் அருளுவது ஆகும்.

எனவே, வரதா கௌரி பக்தர்கட்கு கேட்ட வரங்களை அளித்து அபயம் அளிப்பாள். ரம்பையினால் துதிக்கப் பெற்றவள் ரம்பாகவுரி. ‘ரம்பாதி வந்திதா’ என்று லலிதா சகஸ்ரம் கூறும், ரம்பா ஸேவித பாதுகா என்று பிரத்யங்கிரா ஸஹஸ்ர மும் இதை வலியுறுத்தும்.

ஸ்வர்ணகௌரி என்னும் ஸம்பத் கௌரியின் மூல மந்திரத்தை 16 பௌர்ணமி, 16 அமாவாசை பன்னீராயிரம் முறை உணவில் உப்பு எதுவும் சேர்க்காமல் அலவணாமாக (லவணம் என்றால் உப்பு. அல வணம் என்றால் உப்பு இன்றி என்று பொருள்) ஜபித்தால் கோரிய பலன் கிட்டும்.

ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூலமந்திரத்திற்கு உரிய ரிஷி ஆனந்த பைரவர். அனுஷ்டுப் சந்தஸ், ஸம்பத் கௌரி தேவதை, ஹ்ராம்-பீஜம், ஹ்ரீம்-சக்தி, ஹ்ரூம்-கீலகம் (ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ர-அங்கன்யாச கரநியாசங்கள்) மூல மந்திரம் பின் வருமாறு.

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி
ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி,
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத்ப்ரதம்
தேஹி குருகுரு ஸ்வாஹா

 மேற்படி மூலமந்திரத்தை வில்வதளங்களால் முக்கோண வடிவ ஹோமகுண்டத்தில் ஹோமம் செய்யின் எல்லையற்ற செல்வமும், மஞ்சள் தூயப்பட்டால் செய்தால் தங்கம், நகைகள் சேர்க்கையும், ரோஜா மலரால் ஹோமம் செய்தால் கல்வியில் தேர்ச்சியும், சிவந்த புஷ்பங்களால் செய்தால் மக்கள் கவர்ச்சியும், வேம்பு எண்ணையால் செய்யின் சத்ருநாசமும், தேனில் எள் கலந்து ஹோமம் செய்தால் பித்ருதோஷம் நீங்குதலும், சந்தனக்கட்டையால் செய்ய வியாபார அபிவிருத்தியும் ஏற்படும்.
 
 

பொன்மகள் புகழ் மாலை!




 பொன்நிறள் பொற்குணள் பொன்னிற முகத்தவள் பொன்னிற கரத்தவள் பொன்மகளே
பொற்கனி மழை பெய்து சத்குண சங்கரர் புகழை நிலைபெற செய்தவளே
பொன் நகை உடலையும் புன்னகை முகத்தையும் அணிசெய்ய அழகுடன் திகழ்பவளே
பொற்பதம் துதிப்பவர் அற்புத நலம் பெற பொற்கரம் உயர்த்தி அருள்பவளே

 
பொன் தோடுகள் தொங்கிடும் காதுகள் அது தந்து பக்தர்கள் குறையை கேட்பவளே
பொன் மூக்குத்தி அணிந்துள்ள நாசிகள் உடையவள் வளம் தரும் விழிகளால் அருள்பவளே
பொன் மகுடம் அணிந்துள்ள தலையதை அசைத்து பக்தர்கள் குறை செவி மடுப்பவளே
பொன் மாலைகள் புரளும் மார்பினில் பக்தர்கள் வாழ்ந்திட எண்ணங்கள் சுரப்பபவளே

 
பொற் கொலுசுகள் அணிசெய்யும் பாதங்கள் துதிப்பவர் வறுமையை ஏழ்மையை அழிப்பவளே
பொன் மெட்டிகள் அணிசெய்யும் அழகிய பாதங்கள் துதிப்பவர் வளம்பெற அருள்பவளே
பொன் வளையல்கள் அணிசெய்யும் கரங்களில் பங்கய மலர்களை உயர்த்தி பிடிப்பவளே
பொன் மோதிர விரல்கள் விளங்கிடும் கரங்கள் உயர்த்தி வரங்கள் அருள்பவளே

 
வைரம் வைடூரியம் மரகதம் முத்து மாணிக்கம் பவளம் புட்பராகம்
கோமேதகம் நீலம் நவ ரத்தினம் அனைத்தும் பதித்த பொன் இடை ஒட்டியாணம்
அணிந்துள்ள இடையோ இறையே உன்போல் உளதோ இலதோ எனத் தோன்றும்
உன் இடை போல் ஐயம் தராது உன் அன்பு உன் பக்தர்கள் வளமே அதைக் காட்டும்

 
பொற்றாமரை மேல் பொன்னிற பட்டு அணிந்து பொன்போல் மிளிர்கின்றாய்
பொற்குடம் உயர்த்தி வெண்ணிற இபங்கள் பூமழை பொழிந்திட குளிர்கின்றாய்
பொற்பதம் துதித்தேன் பொற்கரம் உயர்த்தி பொன் மகன் என்றென்னை செய்திடுவாய்
பொற்குணர் சற்குணர் நற்குணர் நாரணர் புகழ் புவியில் பரப்பிட உதவிடுவாய்

 
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் அன்பது அருள்வாய் பொருள் தருவாய்
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் அன்பது அருள்வாய் புகழ் தருவாய்
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் அன்பது அருள்வாய் வெல்ல வைப்பாய்
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் உலகெங்கும் என் புகழ் செல்ல வைப்பாய்

 
செய்யவள் துய்யவள் உண்மையள் நன்மையள் அன்பினள் பண்பினள் பெரும் செல்வி
துதிசெய்ய அருள்பவள் வரமது தருபவள் பொன்மழை பொழிபவள் பெரும் செல்வி
இனிமையள் கனிவினள் பொறுமையள் பெருமையள் அன்பினள் அறிவினள் பெரும்செல்வி
நன்மையை காத்திட தீமையை தீர்த்திட வன்மையாய் வெகுள்பவள் பெரும் செல்வி

 
பரம் பொருள் வடிவினள் வறுமைக்கு விடிவினள் துயருக்கு முடிவினள் பெரும் செல்வி
பாற்கடலில் தோன்றியே மாலவர் கரத்தினை மணம்செய்து பற்றிய பெரும் செல்வி
மாலவர் மார்பினில் மகிழ்ந்தே வசிக்கின்ற பார்கவர் தவ மகள் பெரும் செல்வி
மாலவர் பாதத்தை மடிமேல் வைத்து பதசேவை செய்யும் பெரும் செல்வி

 
சந்திரன் தங்கையே இந்திரன் தெய்வமே அரசரை அரசராய் செய்பவளே
சூரியன் மறைந்திடும் வேளையில் அனுதினம் இல்லங்கள் தோறும் வருபவளே
நாரணரின் ஆயிரம் பெயர்களை ஓதிட ஓதுவோர் கடன்களை தீர்ப்பவளே
தரும் குணம் கொண்டோர் இல்லத்தில் செல்வத்தை மழைபோல் அன்பால் வார்ப்பவளே

 
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி சந்திரன் தங்கையே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி மாலவர் மகிழ்ச்சியே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி பார்கவர் மகளே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி இதயவாசனார் இதயமே பெரும் செல்வி

 
கண்களால் அருள்பவள் செல்வத்தை தருபவள் வறுமையை துடைப்பவள் பெரும் செல்வி
கருவண்டென விளங்கிடும் அழகிய கண்களால் நோக்குவாய் ஊக்குவாய் பெரும் செல்வி
தாமரைக் கண்ணனை ரசித்திடும் கண்ணினள் கண் கண்டிடும் இடங்களில் வளம் கொழிக்கும்
அக்கண்களை கொண்டெனை கண்டிட வேண்டும் கண்களால் அருள்செய்யும் பெரும் செல்வி

 
பிள்ளையார் அத்தையே சரவணர் அத்தையே மாலவர் மனைவியே பெரும் செல்வி
தெய்வங்கள் யாவரும் கொண்டுள்ள செல்வங்கள் நீயே அருள்செய்தாய் பெரும் செல்வி
செல்வத்தின் உருவமே செல்வத்தின் வடிவமே செல்வத்தை தந்திடும் பெரும் செல்வி
நாரணர் நாயகி மாலவர் மார்பினள் பாற்கடல் வாசனார் பாசமே பெரும் செல்வி

 
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி ராமரின் சீதையே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி கண்ணனின் ருக்மிணி பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி ரங்கரின் நாயகி பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி வேங்கடரின் பத்மாவதி பெரும் செல்வி!
 
 

ஹரிதாளிகா விரதம்!

பாத்ரபத மாத சுக்ல பக்ஷ த்ருதியை  அன்று தேவியை பூஜித்து செய்ய வேண்டிய விருதம் இது.

திருமணம் நடைபெற வேண்டிய கன்னி பெண்கள்  இன்று மாலையில் தனது வீட்டில் வ்ருஷபத்தின் மீது பார்வதியுடன்   அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து கெளரீ ஸஹித மஹேஸ்வராய நம: என்று சொல்லி பூஜை அஷ்டோத்ர அர்ச்சனை செய்து பதினாறு தட்டுகளில்  வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள் தேங்காய் நிவேதனம் செய்து தெரிந்த ஸ்தோத்ரங்கள் சொல்லி ப்ரார்தித்து  

""மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸன்னாப வ பார்வதி"" (ஸ்மிருதி கெளஸ்துபம்—208)

என்னும் ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கவும்.

பிறகு இந்த 16 தட்டுகளையும் எட்டு தம்பதிகளுக்கு கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெறவும்..

இவ்வாறு செய்வதால் பெண்கள் சாஸ்திர ஸம்மத முறையில் தாங்கள் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்..

ஹிமவான் தன் பெண்ணான பார்வதியை சிவனல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தார். . பார்வதியின் தோழிகள் பார்வதியை வேறு ஒரு நதி கரைக்கு அழைத்து சென்று இந்த விரதம் செய்ய சொன்னார்கள். . இதன் பயனாக பரமசிவன் நேரில் வந்து ஹிமவானின் ஸம்மதத்துடன்  பார்வதியை ஏற்று கொண்டதாகவும் பவிஷ்யோத்திர புராணம் கூறுகிறது. .

 ஆகவே தான் "ஆலிபி; ஹாரிதா யஸ்மாத் தஸ்மாத் ஸா ஹரி தாளிகா " என்பதாக ஆலி எனப்படும் தோழிகளால் அபகரித்து செல்லப் பட்டதால் இந்த விருதத்திற்கு ஹரிதாளிகா விருதம் எனப்பெயர் ஏற்பட்டது.

 

11 - திருவொற்றியூர் வடிவுடை அம்மன் - 1

51 சக்தி பீடங்கள்


11 - திருவருள் பொழியும் திரிபுரசுந்தரி!
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவொற்றியூர்.

ஆதிபுரீஸ்வரர், படம்பக்கநாதர், ஏலேலருக்கு மாணிக்கங்கள் அளிக்கப்பட்டதால் மாணிக்கத்தியாகர் என்று ஈசனும், வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி என்று அம்பிகையும் பக்தர்களால் வணங்கப்படுகின்றனர்.

முன்னொரு காலத்தில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா ஈசனிடம் அனுமதி  கேட்டபோது சிவபெருமான் வெப்பம் உண்டாக்கி, அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்பக்கோள வடிவத்திலிருந்து ஒரு சிவலிங்கம் சுயம்புவாக ஒரு மகிழ மரத்தடியில் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் அமைந்தது. மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு, அதனாலேயே இத்தலம் ஒற்றியூர் என்றானது.

பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், வாசுகி  பாம்பிற்கு அருள்புரிய புற்று வடிவில் எழுந்தருளி அதனைத் தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் விளங்குகிறார். புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் மூன்று நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சாத்தப்பட்டு மூடி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். இந்த மூன்று நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிராகாரம் வரவேற்கிறது. கிழக்குச் சுற்று வெளிப் பிராகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நதி அமைந்திருக்கிறது. சக்தி பீடங்களில் இக்ஷூ பீடமாக இத்தலம் விளங்குகிறது. பெளர்ணமி தினத்தன்று வடிவுடை, திருவுடை, கொடியிடை நாயகியரை தரிசிப்பது பக்தர்கள் மரபு. உற்சவ அம்மன் சுக்கிரவார அம்மன் என போற்றப்படுகிறாள். இத்தேவியைக் குறித்த வடிவுடை மாணிக்கமாலை எனும் துதி புகழ்பெற்றது.

கேரள நம்பூதிரிகளால் ஆராதிக்கப்படும் அம்பிகை இவள். அழகே வடிவாய் அருளே உருவாய் திகழ்பவள். வரப்ரசாதி. இத்தல ராஜகோபுரத்திற்கு வெளியே ஆதிகுரு தட்சிணாமூர்த்தி வடிவுடையம்மனுக்கு குருவாய் அமர்ந்து உபதேசம் செய்யும் நிலையில் திருவருள்பாலிக்கின்றார். வள்ளலார் ராமலிங்கரை உலகப் புகழ் பெறச் செய்தவள் வடிவுடையம்மன். ராமலிங்கர் தினமும் வடிவுடை அம்மன் கோயிலுக்குச் சென்று பல மணிநேரம் அன்னையை பார்த்துக் கொண்டே இருப்பார். அவருக்கு பக்தியில் இருந்த ஈடுபாடு படிப்பில் இல்லை. ஒருநாள் இரவு கோயிலிலேயே அதிக நேரம் பொழுதைச் செலவிட்டார். நடு இரவில் வீடு வந்து சேர்ந்தார். கதவு சாத்தப்பட்டிருந்தது. ராமலிங்கத்திற்கு நல்ல பசி. இந்த இரவில் கதவை தட்டினால் அண்ணிக்குதானே சிரமம் என்று கருதிய அவர், திண்ணையிலேயே பசியோடு படுத்தார். அப்போது, “ராமலிங்கம் எழுந்திரு, சாப்பிடலாம்” என்று அண்ணி தட்டி எழுப்பி வாழை இலையில் உணவு பரிமாறினாள்.

சாப்பிட்ட பிறகு அந்த திண்ணையிலேயே மீண்டும் தூங்கிவிட்டார் ராமலிங்கம். சில மணிநேரம் கழித்து யாரோ ராமலிங்கத்தை தட்டி எழுப்ப, விழித்தார். அண்ணிதான் நின்றிருந்தாள். “ராமலிங்கம் வெறும் வயிற்றோடு தூங்காதே; வந்து சாப்பிடு.” என்றாள். “இப்போதுதானே சாப்பாடு போட்டீர்கள். அதோ பாருங்கள் நான் சாப்பிட்ட இலை” என்றார். “இல்லை நான் சாப்பாடு போடவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதே. யார் உனக்கு உணவு தந்தது” என்றாள் அண்ணி. அண்ணியாக வந்தது திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்பதை உணர்ந்தார் ராமலிங்கம். அன்னை தந்த உணவு அவருக்கு பெரும் ஞானத்தையும் தமிழ்ப் புலமையையும் தந்தது. ராமலிங்க வள்ளலார் எனும் புகழை தந்தது. ஞானசக்தியான வடிவுடையம்மனை வணங்கினால் ஞானம் பெறுவர் என்பது நிசர்சனமான உண்மை.

பாண்டியன் ஆட்சியின்போது தன் கணவருக்கு அநீதியாக தீர்ப்பு வழங்கியதை அறிந்து கோபம் கொண்டு மதுரையை எரித்துவிட்டு, தனக்கு ஏற்பட்ட துன்பத்துக்கு நியாயம் கேட்க மீனாட்சி அம்மன் எங்கு இருக்கிறாள் என்று தேடிக் கொண்டே திருவொற்றியூருக்கு வந்துவிட்டாள் கண்ணகி. அங்கு தியாகராஜனான சிவபெருமானும் அம்பிகையும் தாயக்கட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கண்ணகி ஆவேசமாக அம்மனை நோக்கி வருவதை சிவபெருமான் பார்த்தார். மதுரையை எரித்தது போல் காளியின் ரூபமான கண்ணகி இந்த திருவொற்றியூரையும் எரித்துவிடுவாளோ என்ற எண்ணத்தில் ஈசன் சட்டென்று, விளையாடிக் கொண்டிருந்த தாயக்கட்டையை பக்கத்துக் கிணற்றில் கை தவறியதுபோல நழுவவிட்டார். இதைக் கண்ட கண்ணகி ஏதோ எண்ணத்தில் அந்தக் கிணற்றில் குதித்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணிய தியாகராஜர், அந்த கிணற்றை வட்டமான ஒரு பாறையால் மூடினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் திருவொற்றியூர் வந்த கண்ணகிக்கு வட்டப்பாறை அம்மன் என்று பெயர் வந்தது. ஒரு சமயம் கம்பர் சதுரானை பண்டிதர் மூலம் ராமாயணம் கேட்ட பிறகு அதை தமிழில் எழுத சிறந்த இடத்தை தேடினார். அப்போது அவர் மனதில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நினைவுக்கு வந்தது. அங்கு இருக்கும் வட்டப்பாறை அம்மன் கருவறைக்குச் சென்று ராமாயண காவியத்தை எழுதத் தொடங்கினார். வெளிச்சம் சரியாக இல்லாததால் கம்பரால் எழுத முடியவில்லை. அதனால் “ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே நந்தாது எழுதுதற்கு நள்ளிரவில் பிந்தாமல் பந்தம்பிடி” என்று பாடினார். இதை கேட்ட காளியும் கம்பரின் பேச்சை தட்டாமல் அவர் ராமாயண காவியம் எழுதி முடிக்கும்வரை கம்பரின் அருகிலேயே தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நின்றாள்.

வட இந்திய அக்ஷர சக்தி பீடம்

பீடத்தின் பெயர் வாரனாஸி எனும் மணிகர்ணிகா. தேவியின் குண்டலங்கள் விழுந்த இடம். அட்சர சக்தியின் நாமம் (லும்-லுதும்பராதேவி). பீட சக்தியின் நாமம் விசாலாக்ஷி. இத்தேவிக்கு எட்டு திருக்கரங்கள். வலக்கரங்கள் திரிசூலம், பாசம், உடுக்கை, வரமுத்திரை தரித்தும், இடக்கரங்கள் கத்தி, கபாலம், குறுந்தடி, அபயம் தரித்தும் அருள்பவள். புலி வாகனத்தில் ஆரோகணித்து வருபவள் இத்தேவி.  இத்தலத்தை காலபைரவர் காக்கிறார். இந்த பீடம் காசியில் உள்ளது.

12 - திருவொற்றியூர் வடிவுடையம்மன் - 2

துணையிருந்து  பகை விரட்டும் அம்மன்!  
சக்தி பீடங்கள் : திருவொற்றியூர் வடிவுடையம்மன் (தொடர்ச்சி) 12ஒருமுறை இக்காளியின் சினம் அதிகமானது. இதனால் ஊருக்குள் பல பிரச்னைகள் உருவாகின. காளியின் சினம் தவிர்க்க ஆடு, கோழி என்று ஊர் மக்கள் பலி  கொடுத்து வந்தார்கள். இதை விரும்பாத ஸ்ரீஆதிசங்கரர் தேவியின் உக்கிரத்தை தணிக்க அவள் சந்நதிக்கு எதிரே ஒரு ஸ்ரீசக்கரம் நிறுவினார். இதனால் காளியின்  சினம் தணிந்தது. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு துணையிருந்து, அவர்களை விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகிறாள் வட்டப்பாறை அம்மன்.

சுந்தரர்  திருவொற்றியூர் இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனுக்கு பூமாலை கட்டித் தரும் தொண்டினை செய்து வந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டார். அவளை  மணந்து கொள்ள விரும்பி இறைவனை அவளிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி  சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார். சுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.

ஆகையால் ‘என்னைவிட்டுப் பிரிந்து சென்று விடுவாரே’ என்று சங்கிலி நாச்சியார் கூறினார். இறைவன் இதை சுந்தரரிடம் கூறினார். அதற்கு சுந்தரர்  இறைவனிடம், “ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடும் நான், ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம். இறைவன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப்  பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது. ஆகவே சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நதியில் இல்லாமல் மகிழ மரத்தடியில்  ஒளிந்து கொள்ளும்,’’ என்றார். இந்த விவரத்தை இறைவன் சங்கிலி நாச்சியாரிடம் தெரிவித்தார். எனவே திருமணம் நடக்கும் சமயம் சங்கிலி நாச்சியார்  சுந்தரரிடம் ‘‘மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல,’’ என்று கூறி மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி  கேட்டுக் கொண்டார். சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த இறைவனை மூன்று முறை வலம் வந்து, “என்றும் உன்னைப் பிரிய  மாட்டேன்” என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார்.

தலமரமான இந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிராகாரத்தில் உள்ளது. இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின்போது “மகிழடி சேவை” விழாவாக  நடைபெறுகிறது. மேலும் கிழக்கு வெளிப்பிராகாரத்தில் நவகிரகங்கள், விநாயகர், பாலசுப்ரமணியர், குழந்தையீஸ்வரர் ஆகியோரின் சந்நதிகள் கிழக்கு நோக்கி  அமைந்திருக்கின்றன. மேற்கு வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையாறும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர்,  நாகலிங்கேஸ்வரர், காளத்திநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோர் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நதி தனி  முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. வடக்கு வெளிச் சுற்றுப் பிராகாரத்தில் பைர வரும், கல்யாணசுந்தரரும் தனிச் சந்நதிகளில்  அருள்பாலிக்கிறார்கள்.பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.

தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருவொற்றியூர் தலமும் ஒன்று. இத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம்.  இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார். இந்த தியாகராஜர் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் (5 பதிகங்கள்), திருஞான  சம்பந்தர்(ஒரு பதிகம்), சுந்தரர் (2 பதிகங்கள்) மூவராலும் பாடப்பெற்ற சிவத்தலம் இது.

27 நட்சத்திரங்களும் இங்கு வந்து, தம் நாயகனான சிவபெருமானை  வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தாம் பிறந்த நட்சத்திர நாளில் அந்தந்த  நட்சத்திர லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷம். தெற்கு வெளிப் பிராகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன. தமது நட்சத்திர  நாளில் தமக்கு வசதிப்படி, அந்த நாளில் அந்த நட்சத்திரம் நிலவும் நேரத்தில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு பால் மற்றும் ஐந்து முகருத்ராட்சம்  ஒன்று (வசதியிருந்தால் ஒன்றுக்கும் மேல்) கொண்டு சென்று நட்சத்திர லிங்கங்கள் அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கே இருக்கும் பூசாரியிடம் பாலைக் கொடுத்து நமது நட்சத்திரத்துக்கு உரிய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும். அபிஷேகம் செய்யும்போது  அந்த லிங்கத்தின் மேல் நாம் கொண்டு வந்திருக்கும் ஐந்துமுக ருத்ராட்சத்தை வைக்க வேண்டும். பால் அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ‘ஓம் நமசிவாய  நம’ என்று ஜபிக்க வேண்டும். அபிஷேகம் முடிந்த பின்னர் நமது நட்சத்திர லிங்கத்திற்கு எதிராக அமர்ந்து நூற்று எட்டு முறை ஓம் நமசிவாய நம என்று ஜபிக்க  வேண்டும். பிறகு நேராக நமது வீட்டிற்கு வந்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஏழு மாதங்கள் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்து முடித்த நூறு  நாட்களுக்குள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்கு சந்தர்ப்பம் அமையும். வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லாதவர்களுக்கும் முன்னேற்றம்  கிடைக்க ஆரம்பிக்கும்.

ஆனால், இந்தப் பரிகாரத்தைச் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும். பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலம் இது.  கலிய நாயனார் இங்கே பெருமானார் தொண்டு செய்திருக்கிறார். கலையழகும், வரலாற்று சிறப்புமிக்கதுமான அழகிய சிற்பங்களை ஆலயம் கொண்டிருக்கிறது. இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தின் கயிலாயமாகப் போற்றப்படுகிறது. ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்ற ஆதிசேஷன்  என்ற நாகராஜன் இந்த ஆலய ஈசனை வணங்கி வரங்களை பெற்றான். கோயிலுக்குள்ளே நந்தி தீர்த்தமும், வெளியே பிரும்ம தீர்த்தமும் அமைந்துள்ளன.  வேண்டுவோர் வேண்டியதை வேண்டு முன்னரே அருளும் வடிவுடையம்மனை வணங்கி வளங்கள் பெறுவோம்.
 
 

13 - திருவையாறு அறம் வளர்த்த அம்பிகை!


சக்தி பீடங்கள் - 13காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு சிவஸ்தலங்களில் திருவையாறு ஒன்று. மற்றவை: 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர், 5.திருவாஞ்சியம்.

திருவையாறு ஈசன் ஐயாறப்பர், பஞ்சநதீஸ்வரர் என்றும், இறைவி தர்மசம்வர்த்தனி, திரிபுரசுந்தரி என்றும் வணங்கப்படுகின்றனர். திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் கொண்டது. முதல் பிராகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தி மிகச் சிறப்புடையவர். இவர் ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரை; இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கி காட்சி தருகிறார். இவர் மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் திருவையாறு. தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமை) அமைந்திருப்பது சிறப்பம்சம்.

இச்சுற்றின் நாற்புறங்களிலும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நதியும், திரிபுரசுந்தரி சந்நதியும் இருக்கின்றன. சுவாமி சந்நதியிலும், அம்பாள் சந்நதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கம். இது பிருத்வி (மண்ணாலான) லிங்கம் என்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை; ஆவுடையார்மேல் மட்டுமே செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது.
இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள்.  இந்த இறைவி இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும், மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள். அன்னையின் புன்னகை இதழ்களும், கருணை முகமும் நம்மை செயலிழக்க வைக்கின்றன.

தென்னாட்டுச் சிவன் கோயில்களில் ‘படிநெல் திருவிழா’ எனும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆலயத்திலும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்கள் கானகங்களில் கனிகளையும், கிழங்குகளையும் உணவாக உட்கொண்டு வருவதைப் பார்த்த உலகநாயகி, சிவபெருமானிடம் அந்தக் குழந்தைகளின் உணவுக்காக தானியங்களை உற்பத்தி செய்துதரும்படி கேட்டுக்கொண்டபோது, சிவபெருமான் அன்னையிடம் ‘இரு நாழி’ தானியத்தை அளந்து கொடுத்து, உலகிலுள்ள மனிதர்கள் உண்டு வாழ வழிவகுத்தாராம். அந்த இரு நாழி தானியத்தை அன்னை தன் மக்களிடம் கொடுக்க, அவர்கள் அதனை பூமியில் விதைத்து ஒன்றைப் பத்தாக நூறாகப் பெருக்கி இன்று வரை உணவாக உண்டு வருகிறார்கள்.

இப்படி அம்பிகை 32 வகையான அறங்களைச் செய்து மக்கள் குறைவின்றி வாழ வழிவகுத்ததால்தான் அந்த பராசக்தி  இங்கு “அறம் வளர்த்த  நாயகி” எனும் அரும்பெயர் பெற்றாள். ‘அபிராமி அந்தாதி’யில், அபிராமி பட்டர், திருக்கடவூர் அன்னை அபிராமியைப் போற்றி பாடும்போது “ஐயனளந்த படியிரு நாழிகொண்டு இவ்வண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே” என்று பாடுகிறார். - ‘இப்படிப்பட்ட அறம்செய்த நாயகி நீ இருக்கும்போது, நான் கற்ற செந்தமிழ்ப் பாக்களால் வேறு எவரிடமெல்லாமோ சென்று பொய்யையும், மெய்யையும் சொல்லி முகஸ்துதி செய்து வாழ்வேனோ? இல்லை.

உன் புகழ்பாடி உன் சந்நதியில் உன் கோடி சூரிய பிரகாச முக தரிசனம் செய்வதையே பாக்கியமாகக் கருதுகிறேன்’ என்பது பொருள். அம்பாளுக்கு திரிபுரசுந்தரி, தர்மாம்பிகை எனும் திருப்பெயர்களும் வழங்கப்படுகின்றன. பார்ப்போர் மனம் தன் அருளில் ஆழ்ந்திடும் வண்ணம் அம்பிகையின் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் கொண்டு விளங்குகிறாள். நான்கு திருக்கரங்கள். பின் இரு கரங்களில் அக்கமாலை, கெண்டி தாங்கியும், முன்னிரு கரங்களில் ஒன்று அபயஹஸ்தமாகவும், மற்றொன்று வரதம் காட்டியும் அமைந்திருக்கிறாள். நின்ற கோலத்தில் முழு அலங்கார பூஷிதையாக அம்மனைக் காண்பதற்குக் கண்கள் கோடி வேண்டும்.  சக்தி பீடங்களில் இத்தலம் தர்மபீடம் என போற்றப்படுகிறது. இந்த தர்மசம்வர்த்தனி அம்பிகை மிகவும் வரப்ரசாதி. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜருக்கு ஒருமுறை ஓயாத இருமல் ஏற்பட்டது.

வீட்டினுள் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார் அவர். அப்போது அவர் மனைவியிடம் ஐயாறப்பர் ஆலயத்தில் ஒரு பெண்மணி, தியாகராஜருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் கஷாயம் வைத்துக் கொடுக்குமாறு யோசனை சொன்னாள். அதன்படி மனைவி கொடுத்த கஷாயத்தை குடித்த மறுநொடியே அவரின் இருமல் நின்றது. அப்போது யோசனை சொன்ன பெண்மணி அவர்கள் வீட்டைக் கடந்து சென்றாள். அவள் அணிந்திருந்த தங்க ஆரத்தை எங்கோ பார்த்த நினைவாக உள்ளதே என தியாகராஜர் யோசித்த மறுநொடியே அவர் நினைவில் தர்மசம்வர்த்தனி தோன்றி, தானே ஸ்ரீராமனின் உத்தரவுப்படி உனக்கு கஷாயம் தயாரித்துத் தரச் சொன்னேன் என்று கூறினாள். அதனால் மகிழ்ந்த தியாகராஜர் நிறைய கிருதிகளை தேவியின்மேல் இயற்றியருளியுள்ளார். ‘விதி சக்ராதுலகு தொரகுணா’ என்ற யமுனாகல்யாணி ராகக் கீர்த்தனையில், தர்மசம்வர்த்தனியான அன்னையின் வெள்ளிக்கிழமை தர்பார் வைபவத்தை மிக அழகான சொல்-இசை ஓவியமாகவே வர்ணிக்கிறார், தியாகராஜர்.

‘பிரம்மா, இந்திரன் முதலான தேவர்களுக்கும் காணக்கிடைக்காத தர்மம் என்னும் கடலில் துயிலும் அன்னையின் இந்த சேவையைக் காண வாரீர்! அன்னையின் வரவை எதிர்நோக்கி அனைவரும் காத்துள்ளனர். விருதுச் சின்னங்களை ஏந்தி நிற்கின்றனர். ஜய ஜய என்ற கோஷங்களை எழுப்புகின்றனர். நாட்டியமாடுகின்றனர். மலர்களைச் சொரிகின்றனர். அன்னை பராசக்தி (தர்மசம்வர்த்தனி) மஹாலட்சுமியுடன் சிரித்துப் பேசியபடி வருகிறாள்; அவளுடைய பிரகாசமான புன்னகையுடன் போட்டியிட்டபடி அவளணிந்துள்ள வைர வைடூரிய ஹாரங்கள் ஜொலிக்கின்றன,’ என்னவெல்லாம் நேர்முக வர்ணனையாளர் போல விவரிப்பவர், முத்தாய்ப்பாக, நம் உள்ளம் குளிர வைக்கிறார். அதாவது, தேவர்கள் ‘தடபட’ வென பூமியில் விழுந்து தண்டமிட்டு வணங்குவதை கடைக்கண்ணால் பார்த்து அங்கீகரித்துக் கொள்ளும் அழகை நமக்குப் பிடித்துக் காட்டுகிறார். ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நதி மிகவும் முக்கியமானது. இச்சந்நதியில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும்.

பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியத்தை சமர்ப்பிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை யமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு ஆலயத்திற்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் யமபயம் நீங்கும் என்பது நம்பிக்கை. சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வந்தபோது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் “ஓலம் ஓலம்” என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும்! திருவையாறு செல்பவர்கள் இதனையும் அனுபவிப்பார்கள். ‘வர வேண்டும் வரவேண்டும் தாயே ஒரு வரம் தரவேண்டும் தரவேண்டும் நீயே’ எனும் பாடலின்படி ஒரு வரம் அல்ல ஓராயிரம் வரமருளும் தர்மசம்வர்த்தனியின் பதமலர்களைப் பணிவோம்.

தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது. திருவையாற்றின் மையப் பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது.