Monday 30 November 2015

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் தரும் யோகங்கள்!

நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவரா? உங்களின் வாழ்வை மேம்படுத்தவே இந்தப் பகுதி!

‘ஸ்திர லக்னம்’ என்று அழைக்கப்படுவதில் மிகவும் வலிமை வாய்ந்தது சிம்மமே ஆகும். அள்ளிக் கொடுக்கும் குணம் கொண்ட சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, மனசாட்சிக்கு மாறாக பேசத் தெரியாது. ஏழை - பணக்காரர், படிக்காதவர் - மேதை என்று வித்தியாசம் பார்க்கத் தெரியாது. சிம்ம ராசிக்காரர்கள் கொஞ்சம் ஆர்ப்பாட்டம், அலங்காரமான பேச்சு என்று வளைய வருவார்கள். உணர்ச்சிவசப்பட்டு உளறாமல், வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக எடுத்துக் கொள்வார்கள். சிம்ம லக்னத்தில் பிறந்தால் அதிர்ஷ்டத்தோடு வாழும் பாக்கியம் கிடைக்கும்.

இவர்களுக்கு எப்போது ஒருவரைப் பிடிக்கும், எப்போது பிடிக்காமல் போகும் என்று ஒருவராலும் சொல்ல முடியாது. என்னதான் எதிரியாகவே இருந்தாலும் அவர்களை நேசிக்கவும் செய்வார்கள். எல்லோரும் இவர்களிடம் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். எவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்தாலும் கர்வம் கொள்ள மாட்டார்கள். தன்னை யாராவது ஏமாற்றுகிறார்கள் என்றால் காட்டுச் சிங்கம் போல கர்ஜிப்பார்கள். இவர்களிடத்தில் ஆத்ம பலம் அதிகம் உண்டு.

உதிப்பதும் அஸ்தமனமும் சூரியனுக்கு இயல்பு போல, இவர்கள் பல இடங்களில் புத்திசாலியாகத் தோன்றுவார்கள்; சில இடங்களில் இவர்களின் பேச்சு குழந்தைத்தனமாக இருக்கும். இவர்கள் வாழ்வில் மேன்மை பெற, தந்தையை இழந்த குழந்தைக்கு எல்லாவிதங்களிலும் உதவ வேண்டும். பார்வை இழந்தவருக்கு தேடிப்போய் அவர்களுக்கு என்ன மாதிரியான உதவி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். ஆறிப் போன உணவுகளைத் தவிர்க்கப் பார்க்கவும். உணவில் சூரிய காந்தி எண்ணெயை அதிகம் உபயோகப்படுத்தலாம்.

இவர்களுக்கு சூரியனுக்கு இணையாக செவ்வாய் அதிகமாக உதவப் போகிறார். கேந்திர ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான திரிகோணத்திற்கும் அதிபதியாக செவ்வாய் வருகிறார். செவ்வாய் நன்றாக இருந்தால் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாற்றுவார்கள். நான்காம் இடம் என்பது சுக ஸ்தானத்தைக் குறிப்பதால் ஆடம்பரமான பங்களாக்கள் கட்டிக்கொண்டு வாழ்வார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பரம்பரைச் சொத்து உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

தலைமை தாங்கி நடத்திச் செல்வதில் ஈடு இணையற்றவர்களாக இவர்களை சூரியன் விளங்க வைப்பார். பொதுவாக சனியை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் சூரியன் அமரக் கூடாது. சனியின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தால் எல்லா விஷயங்களிலும் காலதாமதமாக பலன்கள் கிடைக்கும். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் எந்தெந்த இடங்களில் லக்னாதிபதியான சூரியன் அமர்ந்திருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என இனி பார்க்கலாம்...

ஒன்றாம் இடத்தில் லக்னாதிபதியான சூரியன் அமர்ந்திருந்தால் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடலாகவும் விளங்குவார்கள். அறச்செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஈடுபடுவார்கள். அபாரமான நிர்வாகத் திறன் இருக்கும். நாலு பேரை வைத்து வேலை வாங்கும் நிலையில்தான் இருப்பார்கள். இவர்கள் பிறந்ததிலிருந்தே ஒரு நல்ல சூழ்நிலையில் வளர்வார்கள். இவர்கள் எதில் ஆர்வத்தோடு ஈடுபட்டாலும் முன்னுக்கு வருவார்கள். பார்ப்பதற்கே கம்பீரமாக இருப்பார்கள்.

இவர்களின் வெளித்தோற்றத்தை பார்க்கும்போதே மரியாதை உணர்வு ஏற்படும். தங்களின் வாழ்க்கை அனுபவங்களை மிக அழகாக வெளிப்படுத்துவார்கள். எதையுமே மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தும் தன்மை இருக்கும். கண்களில் கூர்மை இருக்கும். சூரியன் இரண்டாம் இடமான கன்னியில் இருந்தால், தேவையில்லாமல் நிறைய பேசுவார்கள். முன்கோபம் உள்ளவர்களாக இருப்பார்கள். பணத்தைத் தண்ணீராக செலவழிப்பார்கள். இந்த இடத்தில் தனித்த சூரியன் இருந்தாலே அலைச்சல் நிறைய இருக்கும்.

இவர்களுக்கு ஆரம்பக் கல்வி சுமாராக இருக்கும். மேல்நிலைக் கல்வி நன்றாக வரும். ‘அடங்க மறு’ என்பதுதான் இவர்களுக்கு தாரக மந்திரமாக இருக்கும். ஒரு அமைப்பு அல்லது நிர்வாகத்துக்குக் கட்டுப்படாத, விதிமுறைகளுக்கு முரண்படுகிற நபராகவே இருப்பார்கள். எதை, எங்கு, எப்படிப் பேசுவது எனும் கலையை நிச்சயம் அனுபவத்தில் கற்காவிட்டால் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும்.

மூன்றாம் இடமான துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். இதனால் எல்லாவற்றிற்கும் பயந்தபடி இருப்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இளைய சகோதர வகையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். ‘பணம் கொடுத்து பாசத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே’ என்று வருந்துவார்கள். இவர்களுக்குக் கீழே வேலை செய்யும் வேலையாட்களோடு ஏதேனும் பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். போக விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த நபரிடத்தில் உதவிகள் கிடைக்காது அவஸ்தைப்படுவார்கள்.

விருச்சிக ராசியான நான்காம் இடத்தில் சூரியன் அமர்ந்திருந்தால் அது தனியான விசேஷ பலன்களை அளிக்கும். அறிவுக் கூர்மை, ஆளுமைத் திறன், பெரிய நிறுவனங்களை உருவாக்குதல், உயர் ரக வாகனத்தை உருவாக்குதல் என்றிருப்பார்கள். தாய்வழிச் சொத்து கிடைக்கும் வாய்ப்பு அதிகம். எந்த வேலையை எடுத்தாலும் அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலைக்கு நகர்வார்கள். கல்லூரியில் பயிலும் காலத்தில் பெருமளவு சாதிப்பார்கள்.  இருப்பதிலேயே விருச்சிகத்தில் தனித்து நிற்கும் சூரியன்தான் நல்ல பலன்களை அளிப்பார். சிறிய பதவியிலிருந்து பெரும் பதவி வரை மேலே மேலே நகர்ந்து கொண்டிருப்பார்கள்.

ஐந்தாம் இடமான தனுசுக்குள் சூரியன் அமர்ந்தால் எமோஷனலாக இருக்கக் கூடாது. ‘ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்’ என்றிருப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயமாக அடிக்கடி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். எதிலுமே ஒரு தடுமாற்றம் இருந்துகொண்டே இருக்கும். உறவினர்களோடு அடிக்கடி பகை மூளும். அவர்களால் ஏமாற்றப்படுவார்கள். குழந்தை பாக்கியமே காலதாமதமாகத்தான் இருக்கும்.

அல்லது பெண்களாக இருப்பின் கருப்பை பிரச்னை இருக்கும். ஆறாம் இடமான மகரத்தில் சூரியன் நின்றிருந்தால் அதுவும் நன்மையைத்தான் தரும். தலைமை தாங்கும் பண்பு மிகுந்திருக்கும். கடன் என்றாலே காத தூரம் ஓடுவார்கள். உடம்பை பாதுகாப்பதில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். எதிரிகள் இருந்தால்தான் இவர்கள் சுவாரசியமாக வேலை பார்ப்பார்கள். சனி பகவானின் வீடான கும்பத்தில் சூரியன் இருந்தால் நிச்சயம் திருமணத் தடை இருந்து விலகும்.

அதிகமாக பேசும், சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் வாழ்க்கைத்துணை அமையும். இவர்கள் அடிக்கடி சமநிலையை இழப்பார்கள். யாரிடம் என்ன பேசவேண்டும் என்று தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். இவர்களில் சிலர் வெளிதேசம் சென்றால் கொஞ்சம் நிதானமாக இருப்பார்கள். கூட்டுத் தொழிலை தப்பித் தவறியும் செய்யவே கூடாது. 

மீனத்தில் சூரியன் அமர்வதால் அலைச்சலிலேயே பாதி வாழ்க்கை போகும். அடுத்தடுத்து பயணப்படும் வேலையில் அமர்வார்கள். சிலர் வெளிநாட்டு வாழ் உரிமை பெற்று அங்கேயும் இருப்பார்கள். எல்லா சேமிப்புகளையும் திடீரென்று கரைப்பார்கள். இவர்கள் இரவில் பயணம் செய்யும்போது நிச்சயமாக உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சிறிய பிரச்னைக்குக் கூட நிலைகுலைந்து போவார்கள். கண்ணில் ஏதேனும் தொந்தரவு வந்து போகும். பல இடங்களில் கடனை வாங்கிவிட்டு அவஸ்தைப்படுவார்கள்.

மேஷத்தில் சூரியன் தனித்து நின்றால் தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே ஏதோஒரு பனிப்போர் இருந்துகொண்டே இருக்கும். தந்தையாரை எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகமிருக்கும். மேலும், தந்தையின் சொத்துகள் விரயமாவதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு. தந்தையார் மிகுந்த செல்வாக்கு உள்ளவராக இருப்பார். இவர்களில் பலர் ஆன்மிகத்தில் ஈடுபட்டு யாரிடமேனும் மந்திர உபதேசம் பெறுவார்கள். தர்ம நியாயத்திற்கு கட்டுப்படுவார்கள். தன்னால் இயன்ற அளவு ஏதேனும் டிரஸ்ட் தொடங்கி அதன்மூலம் நிறைய பேரை வாழ வைப்பார்கள்.

ரிஷபத்தில் சூரியன் தனித்து நின்றால் மருத்துவத் துறையில் பணியாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. கெமிக்கல் எஞ்சினியர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்று வருவார்கள். மருந்து நிறுவனங்களில் உயர் பதவியில் அமர்வார்கள். மிதுன ராசியில் அமர்ந்திருந்தால் மூத்த சகோதரர்களால் எந்த பிரச்னையும் இருக்காது. இவர்களில் பெரும்பாலும் தந்தையின் வேலையையோ தொழிலையோ எடுத்துச் செய்வார்கள். மிதுன புதன் இந்த இடத்திற்கு அதிபதியாக இருப்பதால் பலபேருக்கு இவர்களின் ஆலோசனையும் தேவைப்படும். தேவைக்கு அதிகமாக எதையுமே சேர்த்து வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

தனக்கு எது கிடைத்தாலும் அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள். இவர்கள் ஷேர் மார்க்கெட்டில் புகுந்து விளையாடலாம். பன்னிரெண்டாம் வீடான கடகத்தில் சூரியன் பகையாகச் சென்று மறைவதால் தூக்கம் எப்போதுமே சரியாக இருக்காது. பலர் சூட்சும சக்திகளோடு தொடர்பு வைத்திருப்பார்கள். பன்னிரெண்டாம் வீட்டிற்குரியவராக சந்திரன் வருவதால் ஜிலுஜிலுவென்றும், குளுமையாகவும் காற்று வீசினால் கண்கள் சொருகும். அயன சயன ஸ்தானம் எனப்படும் இந்த இடத்திற்கு சந்திரன் அதிபதியாக வருவதால், சில பல உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுவார்கள். பழைய கோயில்களைத் தேடித் தேடி ஓடுவார்கள்.

அதேபோல பழைய நூல்களையும் பதிப்பிப்பார்கள். இவர்கள் மிக நிச்சயமாக கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும். சூரியன் சிவகோத்திரத்தைச் சேர்ந்தவர். சூரியன் ஒரு நெருப்புக் குழம்பாக கொதிக்கும் கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரியனுக்கு நிகர்த்ததாக ஒரு தலத்தை சொல்ல வேண்டுமெனில் அது திருவண்ணாமலையே ஆகும். நெருப்புப் பந்து சூரியன் எனில், பூமியில் அதற்கு இணையான நெருப்புப் பந்தாகவும், நெருப்பு தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலையே ஆகும்.

அருணன் என்பதற்கு சூரியன் என்ற பொருளும் உண்டு. அருணாசலம் என்பதற்கு ‘அசையாத ஞான சூரியன்’ என்றும் பொருள் கொள்ளலாம். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் எப்போதும் வணங்கவேண்டிய தலம் திருவண்ணாமலை. இவர்களுக்கு யோகங்களை அள்ளித் தரக் காத்திருக்கிறார் அருணாசல சிவன். 
 
 

1 comment:

  1. என்னுடைய ஜென்ம லக்னம் மிதுனம். 9ம் இடமான கும்பத்தில் சூரியன் புதன் மற்றும் கேதுவுடன் இணைந்து உள்ளது. இதன் பலன் என்ன?

    ReplyDelete