Friday 7 April 2017

உன்னத வாழ்வருளும் உஜ்ஜயினி காளி!

51 சக்தி பீடங்கள் - 48  

மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி பிரசித்தி பெற்ற திருத்தலம். ஏழு மோட்சபுரிகளுள் ஒன்றான இத்தலத்தில்தான் மகாகவிகாளிதாசர் அன்னை காளிகா தேவியின் அருள் பெற்று கவிச் சக்ரவர்த்தி ஆனார். இந்த காளி தேவியின் திருவருளைப் பெற்ற விக்ரமாதித்தன் உலகம் புகழும் வண்ணம் அரசாட்சி செலுத்தினான். தண்டி எனும் கவிஞர் பெருமைபட வாழ்ந்ததும் உஜ்ஜயினியே. ஒரு சமயம் உஜ்ஜயினியைத் தலை நகராகக் கொண்ட அவந்திகாபுரியில் ஒரு அந்தணர் தன் நான்கு மகன்களுடன் வசித்து வந்தார். அப்பொழுது தூஷணன் எனும் கொடியவன் அந்த அந்தணர் புரியும் யாகங்களுக்கும் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அதனால் அவ்வூரில் வாழ்ந்து வந்த அனைவரும் அந்த அந்தணரின் தலைமையில் ஒன்று கூடி மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி சிவ பூஜை செய்தனர். 

சிவ பூஜை செய்த மண் எடுத்த இடம் பெரிய குளமாக மாறியது. வழக்கப்படி தூஷணன் சிவ பூஜைக்கு இடையூறு செய்ய வந்தபோது அக்குளத்தினின்று ஈசன் மகாகாளேஸ்வரராக வெளித் தோன்றி அவனை வதைத்தார். அந்த அந்தணரின் வேண்டு கோளுக்கிணங்க ஈசன் அங்குள்ள பக்தர்கள் அனைவருக்கும் காட்சி கொடுத்தார். இத்தலம் 12 ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்று.  கிருஷ்ண பகவானால் ஆராதிக்கப்பட்டும், விக்ரமாதித்தனுக்கு திருவருள்புரிந்தும் அருளிய தேவி இந்த சக்திபீடத்தில் ஹரசித்திமாதா என்று வணங்கப்படுகிறாள். சக்தி பீடங்களுள் இப்பீடம் ருத்ராணி பீடமாக போற்றப்படுகிறது.  இந்த தேவி சரணடைந்தோரைக் காப்பவள். மாங்கல்ய பாக்யம் அருள்பவள். அன்பானவள். மகாசக்தி. உலகம் முழுவதும் சக்தியாக பரவி நிற்பவள். 

பேராபத்துகளிலிருந்து காத்தருள்பவள். தன் பாத கமலங்களை வணங்குவோரைக் காப்பாற்றுபவள். பைரவகிரி எனும் இப்பீடத்தில் அவந்தி சக்தியாய் அமர்ந்த பேரழகி. திருநீலகண்டரின் உயிராக விளங்குபவள். துன்புறும் மானிடர்களுக்கு உதவ உஜ்ஜயினியில் ஒப்பற்ற மாமணியாய் துலங்குபவள். நவ வித ஸித்திகளையும் தன் பக்தர்களுக்கு நல்குபவள். ஆயகலைகள் 64ம் இந்த சக்திபீட நாயகியைச் சரணடைவோரைச் சரணடைகின்றன.  அப்பகுதி மக்களுக்கு இவளே கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள். விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள அணையா குண்டத்திலிருந்து ஆரத்தி எடுத்து அம்பிகையை ஆராதிக்கின்றனர். 

இத்தேவியின் திருவருளைப் பெற்ற விக்ரமாதித்தனைப் பற்றி அறிவோம். சரித்திரம் பல விக்ரமாதித்தர்களைக் கண்டாலும், பட்டி விக்ரமாதித்தனே மிகவும் புகழ் பெற்றவன். அவன் காளிதேவியை நேரில் தரிசித்து வரம் பெற்றவன். காளியின் திருவருளால் அரிய சிம்மாசனம் கிடைக்கப்பெற்று அதிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் அரசாட்சி புரிந்தவன். விக்ரமாதித்தனுக்கு பட்டி எனும் நண்பன் இருந்தார். ஒரு நாள் அவர்கள் இருவரும் வீதியில் சென்று கொண்டிருந்த போது காளியின் உருவம் பதித்த கருங்கல்லைக் கண்டனர். அதனருகில் மகாகாளியின் திருவருளைப்பெறும் வழிமுறைகள் குறித்த வாசகங்கள் கற்களில் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். 

அதன்படி அங்குள்ள ஆலமரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஐந்து உறிகளை ஒரே வீச்சில் அறுத்தெறிந்து விட்டு அருகில் உள்ள திரிசூலத்தில் பாய்ந்தான் விக்ரமாதித்தன். அதனால் மனமகிழ்ந்த காளிதேவி அங்கு தோன்றி, விக்ரமாதித்தனை ஆட்கொண்டு அவன் விருப்பப்படி அழகிய அரண்மனையையும் ஆயிரம் வருட ஆயுளையும் அருளினாள். அதை அறிந்த விக்ரமாதித்தனிடம் மிகுந்த அன்பு கொண்ட பட்டி தானும் அவனுடன் என்றும் இருக்க காளிதேவியை நோக்கித் தவம்புரிந்தான். தவத்துக்கு மெச்சிய அன்னை அவனுக்கு 2000 ஆண்டுகள் நீண்ட ஆயுளை வரமாக அளித்தாள். இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து மறைய வேண்டுமென்று நினைத்த விக்ரமாதித்தன் தனக்கு கொடுக்கப்பட்ட 1000 வருட அரசாட்சியை நீட்டிப்பதற்காக ஆறு மாதங்கள் காட்டிலும் ஆறு மாதங்கள் நகரிலுமாக கழித்தான். 

விக்ரமாதித்தனுக்கு திருவருள் புரிந்த இந்த காளி அடுத்து ஒரு மூடனை மகாகவியாக்கினாள். அதை அறிவோம். சுதன்மன் மற்றும் சுந்தரவதி எனும் அரசதம்பதியர்க்கு மகளாகப் பிறந்த வித்யாரத்னம் மிகவும் புலமை பெற்று விளங்கினாள். பல புலவர்களையும் கவிஞர்களையும் வாதில் தோற்கடித்து அவமானப்படுத்தி எள்ளி நகையாடினாள். அதனால் பலரின் வெறுப்புக்கும் ஆளானாள்.  அவளைப் பழிவாங்கக் காத்திருந்த அவர்கள் ஒரு மூடனைக் கண்டுபிடித்து அவனை சிறந்த கவிஞன் என அவளிடம் அறிமுகப்படுத்தி சூழ்ச்சி செய்து அவளுக்கு மணமுடித்தனர். திருமணமான பின் அவன் மூடன் என்பதை அறிந்து அவள் அவனை ஒதுக்கினாள். 

அதனால் மனம் நொந்து இந்த காளியிடம் நீயே துணை என சரணடைந்த மூடனை மகாகவிஞனாக்க திருவுளம் கொண்ட தேவி தன் திரிசூலத்தால் ப்ரணவமந்திரத்தை அவன் நாவில் எழுத அவன் பார் புகழும் கவிஞனானான், காளியின் திருவருள் பெற்ற அவன் ‘‘காளிதாஸன்’’ என்றானான். காளிதாசன் எழுதிய ஸ்யாமளாதண்டகம், மேகசந்தேஸம். குமாரசம்பவம் போன்ற நூல்கள் காலத்தால் அழியாதவை. இத்தலத்தருகே க்ஷிப்ரா நதிக்கரையில் குண்டலேஸ்வரர் எனும் சிவாலயம் உள்ளது. அங்கு உள்ள நந்தியம்பெருமான் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். அவர் அமர்ந்தால் உலக ப்ரளயம் ஏற்படும் எனும் கருத்து நிலவுகிறது.

கும்பமேளாவைப் போலவே இங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘‘ஹம்ஹஸித் மேளா’’ கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது க்ஷிப்ரா நதியில் நீராடி, ஈசனையும் ஹரசித்திமாதாவையும் தரிசித்தால் மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. கண்கண்ட தெய்வமாய் கவலைகளைப் போக்கும் காளியை சரணடைவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள்


பீடத்தின் பெயர் குருக்ஷேத்திரம். அம்பிகையின் வலது கணுக்கால் விழுந்த சக்திபீடம். அக்ஷரத்தின் நாமம்(  ). அக்ஷர சக்தியின் நாமம் வரதாதேவி எனும் நாராயணி தேவி. இவள் ஸ்படிகம் போன்ற தூய வெண்ணிறம் கொண்டவள். பட்டாடை அணிந்து ஸர்வாபரண பூஷிதையாக பொலிபவள். நான்கு திருக்கரங்களில் மேலிரு திருக்கரங்கள் தாமரை மலர்களைத் தரிக்க கீழிரு திருக்கரங்கள் அபய வரத முத்திரைகள் தரிக்கின்றன. அழகே உருவாய் அருளே வடிவாய் திகழ்பவள் இந்த நாராயணி தேவி. பீட சக்தியின் நாமம் ஸாவித்ரி. ஸ்தாணு பைரவர் இந்த சக்திபீடத்தின் காவலர். குருக்ஷேத்திரம் த்வைபாயனஸரோவரம் அருகே இந்த சக்திபீட நாயகி திருவருட்பாலிக்கிறாள்.

No comments:

Post a Comment