Friday 5 January 2018

பன்னீர் மரங்கள்!

வீட்டுக்கொரு பன்னீர் மரத்தை ஏன் வளர்க்கனும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

பன்னீர் மரங்கள், உயரமாக வளரும் இந்த மரங்கள், பரந்து விரிந்த கிளைகளுடன், கரும் பச்சை நிறத்தில் சற்றே அகன்ற இலைகளுடன், உருவத்தில் நாதஸ்வரத்தை ஒத்த, நீண்ட நறுமணமுடைய வெள்ளை நிறத்தில் எழிலுடன் விளங்கும் மலர்களுடன், காட்சியளிக்கும்.

தமிழகத்தில் காண்பதற்கு மிக அரிதாகி விட்ட பன்னீர் மரங்கள், இலை, பூக்கள், மற்றும் மரம், வேர் இவற்றின் மூலம், மனிதர்க்கு பலன்கள் தருபவை. பன்னீர் மரத்தை அதன் தோற்றத்தைக் கொண்டு அடையாளம் காண முடியாத மனிதர்கள் கூட, பன்னீர் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில், அவ்விடங்களில் பரவும், அவற்றின் வசீகர நறுமணத்தின் மூலம், வெகு எளிதாக, அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வெள்ளை நிறத்தில், அளவில் சற்றே நீண்ட மலர்கள், தரும் வாசனை, மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் அளிக்கும். பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில், எதிர் மறை எண்ணங்கள் விலகி, மனதில் தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும். பன்னீர் மலர்கள் உடலுக்கும் மனதுக்கும் சக்தியை அளிக்கும்.

Reasons why we need to grow Indian cork tree and it's medicinal benefits
Image source

பொதுவாக, பன்னீர் மரங்கள் வீட்டில் இருந்தாலே, பெண்களுக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள் நீங்கி விடும், என்கின்றன சாத்திரங்கள்.

மேலும், மலர்கள் பூக்கும் காலங்களில், மரத்தினடியில் பூ மெத்தை போல பரவி, அந்த இடங்களில் சுகந்த நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும், பன்னீர் மலர்கள், இயற்கையின் அருட் கொடை என்றே, சொல்லலாம்.

தற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம், வாஸ்து என்ற காரணத்துக்காக, வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக, பன்னீர் மரங்கள் நட்டு வளர்க்கப் படுகின்றன. அதைப்போல சிலர், இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்று கூறியும், வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.

தெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

பன்னீர் மலர்கள், மனிதர்களின் மனதை அமைதிப் படுத்தும் தன்மை மிக்கதால், அரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன் படுகின்றன. சித்த மருத்துவத்தில் பன்னீர் மலர்கள், பித்த மருந்துகளில் இணை மருந்தாக, சேர்க்கப் படுகின்றன.

பித்தம் தணியும் :
பன்னீர் மலர்களை காய்ச்சி பருகி வர, உடல் நல பாதிப்பால், வாந்தி எடுப்பது நிற்கும். பன்னீர் மலர்களைக் கொண்டு, காய்ச்சும் நீரை பருகி வரும்போது, உடல் சூடு நீங்கி, தொண்டை வரட்சியைப் போக்கி, உடலின் பித்த பாதிப்புகளை சரி செய்து, நாவின் சுவையின்மையை நீக்கி, உணவுகளின் சுவை அறிய, வைக்கும்.

இரவில் மலரும் இயல்புடைய பன்னீர் மலர்களை நாடி, பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும், இரவில் இந்த மரத்தைச் சுற்றி வந்து, பன்னீர் மலர்களின் தேனை உண்ணுமாம்.

சுவாச பாதிப்புகள் நீங்கும் :
காய்ந்த பன்னீர் மலர்களை சிலர், சாம்பிராணி புகையில், இட்டு அந்த வாசனை மூலம், சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர்.

பன்னீர் மரத்தின் கிளைகள் கொண்ட மரப் பகுதி, தக்கை போன்ற தன்மையுடையதால், மருந்துகள் சேமிக்கப்படும் புட்டிகளில், காற்றை புக விடாமல் தடுத்து காக்க, புட்டிகளின் வாய்ப் பகுதியில் வைக்கப்படும் கார்க் எனும் தக்கை தயாரிக்க பயனாகிறது.

வயிற்றுப் போக்கு குணமாகும் :
பன்னீர் மரப் பட்டைகளை நீரிலிட்டு, மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் சுண்டியதும் பருகி வர, பேதி எனும் வயிற்றுக் கழிச்சல் பாதிப்பு குணமாகும்.

பன்னீர் மரத்தின் வேர்கள், உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது, ஜுரத்தை போக்கி, மனிதர்களின் நுரையீரலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கதாக, பன்னீர் மரத்தின் வேரை, நீரிலிட்டு காய்ச்சி பருகும் குடி நீர், விளங்குகிறது.

கும்பகோணம், திருவையாறு, சீர்காழி போன்ற ஆன்மீக இடங்களின் அருகே உள்ள பல கோவில்களில் தல மரமாக, பன்னீர் மரங்கள் திகழ்கின்றன.

பிரசாதம் :
அனைத்திலும் சிறப்பாக, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வழங்கப்படும் பன்னீர் இலை திருநீற்றுப் பிரசாதம், பக்தர்களிடையே, மிகுந்த பிரசித்தம், பக்தர்களின் மனக் குறைகள் மட்டுமல்லாமல், அவர்களின் உடல் குறைகளும் அந்த பன்னீர் இலை திருநீரை உட் கொள்ள நீங்கும், என்ற நம்பிக்கை முருக பக்தர்களுக்கு உண்டு.

அத்வைத தத்துவ போதனைகளை உலகுக்கு முதலில் அளித்து, மனிதர்களை நல்வழிப்படுத்திய ஆதி சங்கரர், ஒரு சமயம், இவரின் சமூக சீர்திருத்த கருத்துக்கு எதிர்ப்பாளர்களின் சதிகளின் பாதிப்பால், உடல் வியாதி உண்டாகி அதைப் போக்க, திருச்செந்தூர் முருகன் கோவிலில், திருமுருகனின் அதிகாலை விஸ்வரூப தரிசனம் காணப் பெற்று, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்று பிரசாதத்தின் மூலம், ஆதி சங்கரரின் உடல் பாதிப்புகள் நீங்கி, நலம் பெற்றார் என்பர்.

இன்றும் திருச்செந்தூர் முருகனின் அதி காலை விஸ்வரூப தரிசனத்தை, பெற வரும் பக்தர்களுக்கு எல்லாம், பன்னீர் இலை திருநீற்று பிரசாதமே, வழங்கப்பட்டு வருகிறது. முருகனுக்கு உகந்த மரமாக, பன்னீர் மரமும், பூஜிக்க ஏற்ற மலராகவும் பன்னீர் மலர்களும் விளங்குகின்றன.

இந்த பன்னீர் இலை திருநீற்றுப் பிரசாதத்தை, பக்தர்கள் வீடுகளில் வைத்துக் கொண்டு, வியாதிகள், மனத் துன்பங்கள் நேரும் சமயங்களில், முருகனை வேண்டி, நெற்றியில் இட்டுக் கொள்வர்.

தொன்மையான தருமை ஆதீனம் போன்ற சைவத் திரு மடங்களிலும், சன்னிதானங்கள் எனும் ஆதீனகர்த்தர்கள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும் போது, திருநீற்றுப் பிரசாதங்களை,. பன்னீர் இலைகளிலேயே வைத்து வழங்குகின்றனர்.

கட்டி வீக்கம் :
பன்னீர் இலை காண்பதற்கு, முருகனின் வேல் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும், பன்னீர் இலை மருத்துவ வகையிலும், உடலுக்கு நன்மைகள் அளிக்கக்கூடியது. உடல் வியாதிகள் தீர, பன்னீர் இலையில் வைத்து தரப்பட்ட திருநீற்றை உட்கொண்டு, பன்னீர் இலைகளையும் உட்கொள்வர்.

ஆன்மீகத்தில் சிறந்த இலையாக விளங்கும் பன்னீர் இலைகள், சித்த மருத்துவத்தில், உடலில் உள்ள வீக்கங்களை போக்கக் கூடியவையாக, அறியப்படுகின்றன. வீக்கங்களின் மேல் பன்னீர் இலைகளை வைத்து கட்டி வர, வீக்கங்கள் அகலும்.

அம்பாளை விஷேசமாக துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி எனும் மூன்றுவிதமான திருக்கோலங்களில் வழிபடும் நவ ராத்திரி விழாநாட்களின் எட்டாவது நாளில், கல்வி கேள்விகளுக்கு அருள் பாலிக்கும் சரஸ்வதி தேவியை, தாமரைப்பூ கோலமிட்டு, ரோஜாப்பூ மற்றும் பன்னீர் இலைகளைக்கொண்ட மாலையைச் சூட்டி, இனிப்பு பாயசம் படைத்து வணங்க வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.







No comments:

Post a Comment