Saturday, 12 March 2016

சுகமான வாழ்வு தரும் துளசி கல்யாணம்!


   கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை மேற்படி நாளில் "உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ' என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.

துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடியபின், துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.

மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும். அப்போது,

"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'


என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும். நல்ல முகூர்த்த நேரத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு.
துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள். துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார். அதனால் துளசிக்கு "விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா' என்ற பெயர்களும் உண்டு.

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம், மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம் வந்து, ""தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்''

என்றார். மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார் பகவான். அதைக் கண்ட பிருந்தை,

""பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே'' என்று துடிதுடித்து, ""கல்மனம் கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி நதியில் கிடக்கக் கடவீர்'' என்று சாபமிட்டாள். ""பிருந்தை, உன் சாபம் பலிக்கும். ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான் சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசியாக மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய். அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்'' என்றார்.

கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில் ஜலந்திரனின் மனைவியாக இருந்து,  பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசிதான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. துளசி தெய்வீக சக்தி கொண்டது.

துளசிக்கு ஸுலபா, ஸரசா, அம்ருதா, ச்யாமா, வைஷ்ணவி, கௌரி, பகுமஞ்சரி என்று வடமொழிகளில் பல பெயர்கள் உள்ளன.

மேலும், ஒன்பது வகையான துளசிச் செடிகள் உள்ளன. அவை: கரியமால் துளசி, கருந்துளசி,  கற்பூர துளசி, செந்துளசி, காட்டுத்துளசி, சிவதுளசி, நீலத்துளசி, பெருந்துளசி, நாய்த்துளசி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவை.

இதேபோல் ஆன்மிகத்திலும் இதற்கு தனிப்பெயர்கள் உள்ளன. அவை: திருத்துழாய், துளபம், துளவம், சுகந்தா, பிருந்தா, வைஷ்ணவி, லட்சுமி, கவுரி, மாதவி, ஹரிப்ரியா, அம்ருதா, சுரபி.

துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவனும், மத்தியில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள். எனவே துளசி இலையுடன் கூடிய நீர், கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.

ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்கவேண்டும். அப்போது,

"துளசி ஸ்யமருத ஜந்மாஸிஸதாத்வம்
கேஸவப் பிரியே
கேஸவார்தாம் லு நாமித்வாம் வரதாபவ
ஸோபதே'

என்ற சுலோகத்தை சொல்லிப் பறிக்க வேண்டும். நான்கு இலைகளுக்கு நடுவில் தளிரும் இருப்பதுபோல் (ஐந்து தளங்கள்) துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும். பௌர்ணமி, அமாவாசை, துவாதசி திதிகளிலும்; ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி, நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது. குளிக்காமலும் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.

சளித்தொல்லை, விஷக்காய்ச்சலுக்கு நல்ல மருந்து துளசி. துளசிச் செடி வீட்டிலிருந்தால் விஷப்பூச்சிகள், பாம்பு, தேள் போன்றவை வராது. இடி இடிக்கும்போது, இடியின் தாக்கம் நம் வீட்டின்மீது விழாமல் தடுக்கும் சக்தி துளசிக்கு உண்டு. நல்ல கிருமிநாசினியாகச் செயல்படுவதோடல்லாமல், ஆன்மிக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் போற்றப் படுகிறது.

வயிறு உபாதை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு துளசி இலையை மென்று தின்றுவந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். ஜீரணசக்தியையும் புத்துணர்ச்சி யையும் அளிக்கவல்லது துளசி. மேலும் பல நோய்களை குணமாக்கும் சக்திகொண்டது.

வீட்டின் தென்மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி கோலமிட்டு, மாடத்தின் கீழ்ப்பகுதியில் சிறிய அகல்விளக்கு ஏற்றி வழிபட, அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.  திருமால் ஆலயங்களில் துளசிவனம் இருக்கும். மேலும் துளசிமாடம் இருப்பதையும் காணலாம். துளசி மாடத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறும்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மிகவும் போற்றக்கூடிய துளசி மாடம் ஒன்றுள்ளது. இது மற்ற துளசிமாடத்தைவிட மாறுபட்டது. ஆமையின் திருவுருவத்தின்மேல் அமைந்துள்ளது இந்தத் துளசி மாடம். இதன் அருகில் வில்வமரமும் உள்ளது.

ஜலந்திரனை அழிக்க சிவபெருமானுக்கு உதவிய மகாவிஷ்ணு ஆமை அவதாரத்தில் இருக்க, அவருக்குப் பிடித்தமான பிருந்தையான துளசி அவர் முதுகில் மாடத்தில் உள்ளாள். இந்தத் துளசிமாடத்திற்கருகில் நெய்விளக்கு ஏற்றி கணவனும் மனைவியும் வலம் வந்தால் அவர்கள் மகாவிஷ்ணு, மகாலட்சுமியின் அம்சமாக அப்பொழுது மாறுவதாக ஐதீகம். இந்தத் துளசி மாடத்தை கன்னிப் பெண்கள் விளக்கேற்றி வழிபட, அவர்களுக்குப் பிடித்தமான வரன் அமையும்; சுமங்கலிகள் நீடூழி வாழ்வர்.

வீட்டில் துளசிமாடம் இல்லாதவர்கள் பெருமாள் கோவிலில் உள்ள துளசி மாடத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகமான வாழ்வு கிட்டும். 


 

நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தலம்!


திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம்  கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).  கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது.

இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர்.  மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.

மூன்று இளையனார்


இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.

அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.

அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.
ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான்.
திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான்.
அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

மலையளவு பயன்!

நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன.  இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.

தீபத் திருவிழா!



கற்பக விருட்சத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மையுடன்  
உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.

பரணி தீபம்!


பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

மகாதீபம்!


மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி  தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது.  3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.

தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை  தெரியும்.

திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.

லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!


 

Wednesday, 9 March 2016

கணபதியே வருவாய்!


கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்  
உமா ஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள்:

யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வழிபடப்படுபவரே!
விளாம்பழம், நாவல்பழங்களின் சாரத்தை ரசித்து உண்பவரே!
உமையவளின் புத்திரரே! துன்பம் தீர்ப்பவரே! விநாயகப்பெருமானே!
உம் திருவடி தாமரைகளைப் போற்றுகிறேன்.
 

வாசி தீரவே காசு நல்குவீர்!





தலம்: திருவீழிமிழலை பண்: குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்


வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே

இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே

செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே

நீறுபூசினீர் ஏறதேறினீர்
கூறுமிழலையீர் பேறும் அருளுமே

காமன்வேவஓர் தூமக்கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே

பிணிகொள் சடையினீர் மணிகொள்மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே

அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே

பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே

காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே.
 
 
திருச்சிற்றம்பலம்


இப்பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்து வந்தார். படிக்காசு பீடம் ஒன்று விநாயகர் சந்நிதி முன்பு காணப்படுகிறது.
இந்த விநாயகர் படிக்காசு விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார்.

நாமும் தினமும் இப்பதிகத்தை பாடி எல்லா வளங்களையும் பெறுவோம்.





 

Tuesday, 8 March 2016

திருச்செந்தூர் செந்தில்நாதர்

தல வரலாறு:
தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட் கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

சஷ்டி யாகம்:
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

கண்ணாடிக்கு அபிஷேகம் :
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

தெய்வானை திருக்கல்யாணம்:
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

முருகனுக்கு மஞ்சள் நீராட்டு!:
கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

மும்மூர்த்தி முருகன்!:
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

பக்தர்கள் செல்ல முடியாத கோபுர வாசல்! :
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

நான்கு உற்சவர்கள் :
பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

சந்தனமலை :
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

குரு பெயர்ச்சிக்கு இங்கே போங்க! :
திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

இரண்டு முருகன் :
சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம் :
மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோயிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாகச் சொல்கிறார்கள்.

பஞ்சலிங்க தரிசனம்:
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

கங்கை பூஜை :
தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

முருகனின் நைவேத்தியங்கள்: திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.

திருமுருகாற்றுப்படை:
வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒரு வர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது. இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

நேர்த்திக்கடன்: திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக் கொள்ள நல்ல வரன் அமையும். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது இரண்டாவது படைவீடாகும். இத்தலம் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. 

திருவிழா: பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

முகவரி: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628 205 தூத்துக்குடி மாவட்டம். போன்: +91-4639 - 242 221.
திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:  சுப்பிரமணியசுவாமி
உற்சவர்: சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்
அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
தீர்த்தம்: சரவணபொய்கை
பழமை: 2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருசெந்தூர்


திருமண வாழ்வருளும் திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி!


 
திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சிக்கு உட்பட்டதும்; காவிரி தென்கரைத் தலங்களில் 61-ஆவது தலமாகத் திகழ் வதும்; மூவரால் பாடல்பெற்றதும்; சேந்தனார் அருளிய திருவிசைப்பா, அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்று விளங்குகின்ற தலமிது. திருமால் சக்ராயுதம் பெற்றதும் இத்தலத்தில்தான். சிறந்த திருமணத்தலமாகவும் விளங்குகிறது- திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி திருக்கோவில்.

இறைவன்: வீழியழகர், தேஜிநீவனேஸ்வரர்;
இறைவி: சுந்தரகுஜாம்பிகை (அழகிய மாமுலையம்மை);
விநாயகர்: படிக்காசு விநாயகர்;
திருவுலாமூர்த்தி: கல்யாணசுந்தரர், மாப்பிள்ளை சுவாமி.


இத்தலம் பூகைலாசம், கல்யாண புரம், பஞ்சாக்கரபுரம், தட்சிணகாசி, ஷண்மங்கள ஸ்தலம், சுவேதகானனம், ஆகாச நகரம், பனசாரணியம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம் என பத்து திருநாமங்களைக் கொண்டது. திருஞானசம்பந்தர்-14, திருநாவுக்கரசர்-8, சுந்தரர்-1 என 23 தேவாரத் திருப்பதிகங்களால் பாடல்பெற்ற தலமாக சிறந்து விளங்குகிறது. இத்தலத்தில் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு திருமுறைகளில் பெரிதும் குறிக்கப்பெற்றுள்ளது.

சக்கரம் பெற்ற திருமால்


திருக்கயிலாயத்தில் சிவபெருமான் பார்வதி சமேதராய் சிவகணங்கள் புடைசூழ, நந்திதேவர் கையில் பொற்பிரம்பு தாங்கி வழிவகுத்துப் பணிசெய்ய,  இரு பக்கத்திலும் வேதங்களும் ஆகமங்களும் ஒலிக்க, தேவ துந்துபிகள் முழங்க திருக்கொலு வீற்றிருந்தார்.

அப்போது திருமால் பெருமான்முன் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ""பெருமானே, என்னுடைய சக்கரம் மிகவும் வலிமை குன்றி யிருக்கிறது. ஆதலால் முன்னே சலந்தரனை வதைத்தருளிய சக்கரத்தை எனக்கு அனுக்கிரகிக்கவேண்டும்'' என்றார். அதற்குப் பரமன், ""காவிரிக்குத் தெற்கேயுள்ள தேஜிநீவனம் என்னும் தலத்தையடைந்து தவம் மேற்கொள்வீர்'' என்று திருவருள் புரிந்தார்.

உடனே திருமால் விடைபெற்று இத்தலத்தை அடைந்தார். தாமரைத் தடாகம் இயற்றக்கருதி காவிரி நதியை அழைத்தார். காவிரி நதியானது திருவலஞ்சுழிக்கு மேற்கே பிரிந்து அரிசொலாறு (அரிசில்) என்ற பெயரோடு திருவீழிமிழலையின் தென்திசையை அணுகியது. பின்பு வடக்கு நோக்கி சுவாமி சந்நிதியில் க்ஷீ ரநதியோடு (முட்டையாறு) சங்கமமாகி கிழக்கே சென்று கடலில் கலந்தது. விஷ்ணு ஓர் தடாகம் (பத்மதீர்த்தம்) இயற்றிச் செந்தாமரைகளை உண்டாக்கினார். பதினாறு சிங்கங்கள் தாங்குகின்ற விண்ணிழி விமானத்தைக் கொணர்ந்து, பரமனை அதில் எழுந்தருள்வித்தார். அனுதினமும் தீர்த்தப்புஷ்கரணியிலும், அரிசொல் நதியிலும் நீராடி, விபூதி உருத்திராக்க தாரணியாய் விதிப்படி ஆயிரம் தாமரைகளால் பூஜித்து வந்தார்.


இப்படி அனுதினமும் ஆயிரம் தாமரைகளால் பேராயிரம் சொல்லி அர்ச்சனை செய்துவந்தார். ஒருநாள் ஒரு பூ குறைந்தது. மறுபடியும் எண்ணிப்பார்த்தார். பின்னும் குறையக் கண்டார். இது இறைவன் திருவருள் என்றுணர்ந்தார். தாமரை மலருக்கு பதிலாக தன் கண்மலரை (அதாவது தனது வலது கண்ணைப் பறித்து) ஈசனின் திருவடியில் சமர்ப்பித்தார். அப்பொழுது சிவபெருமான் திருமால்முன் தோன்றி, சலந்தரனை வதைத்த சக்ராயுதத்தை அனுக்கிரகம் செய்தார். பின்பு திருமால் சிலகாலம் இங்கு தங்கி, தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கி (விஷ்ணு தீர்த்தம்) ஈசனை வழிபட்டு தன்னுலகு எய்தினார்.

யாகத்தீயில் தோன்றிய அம்பிகை


திருவீழிமிழலையில் காத்யாயனர் என்ற ரிஷி இருந்தார். அவர் மனைவியின் பெயர் சுமங்கலை. அவர்களுக்குப் பிள்ளைப் பேறில்லை. ஆதலால் தீர்த்தக் குளக்கரையில் தவச்சாலை அமைத்து, தினமும் முறைப்படி அழகிய மாமுலையம்மையையும் வீழிநாதரையும் தம் பத்தினியோடு வழிபட்டு அருந்தவம் புரிந்து வேள்விகளைச் செய்தார்.

ஒருநாள் யாகத்தீயில் அம்பிகையானவள் இடக்கரத்தில் அன்னபாத்திரமும், வலக்கரத்தில் அன்னம் படைக்கும் அகப்பையோடும் அன்னபூரணியாகக் காட்சியளித்து, ""முனிவரே, நீர் வேண்டும் வரம் யாது?'' என்று கேட்டாள். ""தாயே, நீயே எங்களுக்கு மகளாகப் பிறக்கவேண்டும். உன்னை நாங்கள் பரமேஸ்வரனுக்கு மணம் செய்து பார்க்கவேண்டும்'' என்று கேட்டார்கள். அவளும் அவ்வாறே வரம் தந்தாள்.

சில ஆண்டுகளுக்குப்பின்... சுமங்கலை நீராடச் சென்றபோது ஒரு பெரிய நீலோத்பவ மலரில் குழந்தை ஒன்று இருப்பதைப் பார்த்தாள். தேவியே குழந்தையாக வந்திருக்கிறாள் என்றறிந்து அதை அன்புடன் எடுத்துச் சென்றாள். குழந்தைக்கு காத்யாயினி என்று பெயரிட்டனர்.

சிவபக்தியும் அறிவும் ஆற்றலும் கொண்டு அவள் வளர்ந்தாள். காத்யாயினிக்கு மணப்பருவம் வந்தது. அவளுக்குத் திருமணம் செய்ய நினைத் தனர் தம்பதியர். காத்யாயனர் பரமனைக் குறித்து தவம்புரிந்தார். அவர் விருப்பத்தை நிறைவேற்ற
அவர்முன் தோன்றினார் சிவபெருமான்.

இறைவன் திருவடிகளில் வணங்கி, ""பெருமானே! இக்கன்னிகையை தேவரீர் மணக்கோலத்தோடு வந்து திருமணங்கொண்டருள வேண்டும்'' என்று பிரார்த்தித்தார்.

பரமன், ""சித்திரை மாதத்து மக நட்சத்திரத் திருநாளில் நாம் வந்து உம்மகளை மணப்போம்'' என்று அருள்புரிந்தார். அவ்வாறே சிவபெருமான் வருகை தர, முனிவரும் அவர் மனைவியும் மகள் காத்யாயினியை சிவபெருமானுக்கு கன்னிகாதானாம் செய்துகொடுத்தனர் என்கிறது திருவீழிமிழலை தலபுராணம்.

திருமணம் கைகூட...


இறைவனைத் திருமணம் புரிய உமையம்மை தவமிருந்து தம் எண்ணம் ஈடேறப் பெற்ற தலமாதலால், திருமணமாகாத பெண்கள் இத்தலத்திற்கு வந்து கல்யாணசுந்தரருக்கு மாலை அணிவித்து சுவாமி, அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒரு மண்டலம் (48 நாட்கள்) காலையில் எழுது நீராடி,

"தேவேந் திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரிய பாமினி
விவாகபாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம் ச தேஹிமே
பதிம்தேஹி சுதம்தேஹி
சௌபாக்யம் தேஹி மேசுபெ
சௌமாங்கல்யம் சுகம் ஞானம்
தேஹிமே சிவசுந்தரி
காத்யாயினி மகாமாயே
மகாயோகிந்தீஷ்வரி
நந்தகோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நமஹ நமஹ'

என்ற சுலோகத்தை பக்தியோடு ஓதிவந்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்று இத்தல மான்மியம் கூறுகிறது.

நல்ல கணவனை அடைய வேண்டுமென்று நினைப்பவர்கள் காத்யாயினி விரதம் மேற்கொள்ளவேண்டும். திருவீழிமிழலையில் காத்யாயினியாக வத்த உமாதேவி நோற்ற நோன்பு இது. இந்த விரதத்திற்குத் தலைவியும் அவளே! சீதாதேவி காத்யாயினி விரதமிருந்தே ராமனை கணவனாக அடையப்பெற்றாள் என்கிறது துளசி ராமாயணம். ருக்மிணி இந்த விரதமிருந்து கிருஷ்ணனை கணவனாகப் பெற்றாள் என்கிறது பாகவதம்.

சம்பந்தரும் அப்பரும் படிக்காசு பெற்றது


திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பல தலங்களையும் பணிந்து பாடி, பின் திருவீழிமிழலையை அடைந்து இறைவனைப் பணிந்து, இன்னிசைப் பாமாலைகள் சூட்டி இன்புற்றனர். ஐந்நூற்று மறையவர்களுக்கும் மற்ற அடியார்களுக்கும் அமுதூட்டி ஆவன செய்தார்கள். இருவரும் ஆலயத்துக்கு வடபுறத்திலுள்ள திருமடங்களில் தங்கி காலந்தோறும் பரமனைப் பணிந்த வண்ணம் பலநாள் தங்கியிருந்தனர்.

 

சிலகாலம் சென்றதும் அருவிலைக் காலமாகிய பஞ்சகாலம் வந்தது. அப்போது ஞானசம்பந்தரும் அப்பரும், "இக்காலத்தால் அடியார்களுக்கு கவலை வருமோ' என்று வருந்தினர். அச்சமயம் வீழிமிழலைப் பெருமான் இருவருடைய கனவிலும் தோன்றி, "உங்களை வழிபடும் அடியவர்களுக்காக, தினந்தோறும் உங்கள் இருவருக்கும் ஒவ்வொரு பொற்காசு தருகின்றோம். அதுகொண்டு அமு தூட்டி கவலை நீங்குக. பஞ்சம் அகன்றதும் அக்காசு பெறுதல் இலையாகும்' என்றருளினார்.

கனவு நீங்கி, பெருமான் கருணையை வியந்த அவர்கள் வைகறையில் ஆலயத்துக்குச் சென்றனர். கிழக்கு பீடத்தில் ஒரு பொற்காசு காணப்பட்டது. அதை சம்பந்தர் எடுத்துக்கொண்டார். வலம் வரும்போது மேற்கு பீடத்தில் ஒரு காசு இருப் பதைக் கண்டு, அதை அப்பர் பெருமான் எடுத்துக்கொண்டார். அமுதாக்குவாரிடத்தில் அக்காசு களைக் கொடுத்து, வேண்டிய பண்டங்களை வாங்கி அமுதமையுங்கள் என்றார்கள். அவர்களும் வேண்டியவற்றை வாங்கி இரண்டு பொழுதும் திருவமுது செய்தார்கள்.

சில நாட்கள் சென்றன. நாவுக்கரசர் திருமடத்தில் அடியவர்கள் சரியான நேரத்திற்கு உணவருந்துவதையும், தமது திருமடத்தில் காலதாமதமாக அடியவர்கள் உணவருந்துவதையும் ஞானசம்பந்தர் உணர்ந்து, பாகுகர்களை நோக்கி, ""ஏன் காலதாமதம்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ""தேவரீர் பெறுங்காசை கடைவீதிக்குக் கொண்டுசென்றால், நாவுக்கரசர் பெறும் காசுக்கு உடனே கொடுக்கிறார்கள். நம்முடைய காசுக்கு வட்டங் கேட்டு தீர்த்து, பின்புதான் பண்டங்களைக் கொடுக்கிறார்கள். அதனால்தான் காலதாமதம்'' என்று கூறினர்.

மறுதினம் ஆலயத்துக்குச் சென்ற சம்பந்தர்,

"வாசிதீரவே காசுநல்குவீர்
மாசின் மிழலையீர், ஏசலில்லையே
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே'

என்னும் திருப்பதிகத்தைப் பாடி நற்காசு பெற்றார். அதுமுதல் காலத்தோடு அமுதமைத்து பலகாலம் அமுதூட்டினார்கள். பின்பு மழை பெய்து எங்கும் செழித்து விளைபொருட்கள் மிகுந்தன. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பலதலங்களை வணங்கத் திருவுளம்கொண்டு, மிழலைப்பெருமானிடத்தில் அருள்பெற்று பிரியாவிடை பெற்றுச்சென்றனர் என்று தலபுராணம் சொல்கின்றது. இதுபோல மேலும் பல சம்பவங்கள் உள்ளன.

கோவில் அமைப்பு


கிழக்கு நோக்கிய ஆலயத்தின் எதிரே விஷ்ணு தீர்த்தம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் வலப்புறம், இத்தலத்திற்குப் பெருமைகூட்டும் வௌவால் நந்தி மண்டபம் எனப்படும் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. நடுவில் தூண் இல்லாமல், சுண்ணாம்புக் கலவைகொண்டு ஒட்டிய இம்மண்டபத்தின் அமைப்பை வியக்காத வர் இல்லை. சித்திரை மாதத்திலே இறைவனது திருக்கல்யாண விழா இம்மண்டபத்தில்தான் நிகழும்.

இரண்டாம் கோபுரத்தைக் கடந்தவுடன் வெளித் திருச்சுற்றில் கிழக்கே, சம்பந்தருக்கு இறைவன் படிக்காசு அளித்த பலிபீடமும்; மேற்கே திருநாவுக்கரசருக்கு படிக்காசு வழங்கிய பலிபீடமும்; அருகில் படிக்காசு விநாயகரையும், அப்பர், திருஞானசம்பந்தர் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.

மூன்றாம் கோபுரவாயிலைக் கடந்தவுடன் முதற்பிராகாரம் உள்ளது. தெற்குப் பிராகாரத்தில் தலவிநாயகரும்; மேற்கே சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி முதலியோரும்; வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர். ஈசான்ய திசையில் விளங்கும் சபையில் நடராஜர் எழுந்தருளியுள்ளார். பிராகாரத்தை வலம் வரும்போது விண்ணிழி விமானத்தை நன்கு காணலாம். செப்புத்தகடுகள் வேயப்பெற்று தங்கக் கலசத்தோடு தனியழகுடன் திகழ்வது தனிச்சிறப்பு.

சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் வீற்றிருக்கும் தலங்கள் பல உண்டு. அங்கு மூலவரோ
உற்சவரோ மட்டுமே கல்யாண கோலத்தில் இருப்பர். மூலமூர்த்தி, உற்சவமூர்த்தி என இருவருமே திருமணக் கோலத்தில் விளங்கும் தலம் திருவீழிமிழலை ஒன்றே. அதனால்தான் திருவீழிமிழலை நாதரை அப்பர் பெருமான் "நித்தம் மணவாளன் என நிற்கின்றான்' என்று பாடுகிறார்.

திருமணத்தில் இரண்டு கால்களை முக்கியமாகச் சொல்வர். அரசனுடைய ஆணையை சாட்சியாக வைத்து திருமணம் நடக்கிறது என்ற பொருளில் ஒரு மரக் கொம்பினை நடுவர். மணமேடையில் இருக்கும் அந்தக் கொம்பு அரசாணைக்கால் எனப்படும். திருவீழிமிழலை கர்ப்பக்கிரக வாயிலில் அரசாணைக்கால் இருக் கிறது. இந்த அமைப்பு வேறெங்கும் இல்லாத விசேஷ அமைப்பாகும்.

இங்கு மண்டபத்தின் வடக்கில், தெற்குநோக்கி அமைந்துள்ள கல்யாண சபையில் மாப்பிள்ளை சுவாமி இருக்கிறார். இப்படி சபாமூர்த்தியாக- கல்யாணசுந்தராக இருப்பது இங்கு மட்டும்தான். அதேமண்டபப் பகுதியில் பந்தக்கால் என்ற தூணும் இருக்கிறது. இதையடுத்து பிட்சாடனர், காலசம்ஹாரமூர்த்தியும் அருள்புரிகின்றனர்.

மாடக்கோவில் வடிவிலுள்ள சுவாமி சந்நிதிக் குச் செல்லும்போது, பன்னிரண்டு ராசியைக் குறிக்கும் 12 படிக்கட்டுகள்மீது ஏறி, இறங்கும் போது நவகிரகங்களைக் குறிக்கின்ற ஒன்பது படிக்கட்டுகள் வழியாக வரும் அமைப்பில் காணப்படுகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் பாதாள நந்தி அருள்புரிகிறார்.

சுவாமி சந்நிதிக்கு அருகில், தியாகேசர் கையில் சக்ராயுதத்துடன் எழுந்தருளியிருப்பதை தரிசித்துவிட்டு, வடக்குப் பிராகாரத்திலுள்ள வாயில் வழியாக கிழக்கு நோக்கி அமைந்துள்ள அம்பாள் சந்நிதியை அடையலாம். அருள்மிகு சுந்தரகுஜாம்பிகையின் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் திகழ்வதைக் காணலாம்.

வியப்புமிகு வாழ்வருளும் வீழிநாதரை வழிபடுவோம். வெற்றிமீது வெற்றி குவிப்போம். ஓம் நமச்சிவாய!

ஆலயத் தொடர்புக்கு: எஸ். பிச்சைமணி சிவாச்சாரியார், அலைபேசி: 75980 07177, டி.கே. மகாலிங்க சிவாச்சாரியார், அலைபேசி: 97100 79277. ஆலயத் தொலைபேசி எண்: 04366- 273050. காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில், பூந்தோட்டம் ரயில் நிலையத்திற்கு மேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணம், திருவாரூரி லிருந்து பஸ் வசதி உள்ளது.



 

Sunday, 6 March 2016

சர்வ மங்களம் தரும் சிவராத்திரி விரதம்!


சிவராத்திரி என்பதற்கு மங்களமான இரவு, இன்பம் தரும் இரவு என்று பொருள் சொல்லப்படுகிறது.

சிவராத்திரி வழிபாடு செய்வதனால் கிட்டும் பலன்கள் பற்றி சாஸ்திரங்கள் பலவாறு புகழ்கின்றன. மாசி மாத தேய்பிறை சதுர்த்த சியான மகாசிவராத்திரி நள்ளிரவு பதினான்கு நாழிகையில் செய்யும் சிவவழிபாடு கோடி பிரம்மஹத்தி தோஷங்களைக்கூட போக்குமளவு புனிதமானது.
சிவபெருமானை அபிஷேகப் பிரியர் என்பர். பொதுவாக சிவாலயங்களில், பிரதோஷத்தன்றும் விசேஷ நாட்களிலும் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதைக் காண்கிறோம். இந்த அபிஷேக வகைகளில் பலவிதங்கள் உள்ளன என்று சிவாகமம் கூறுகிறது.

பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், பழரசம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசி மாவு, நல்லெண்ணெய், புனித நதி தீர்த்தம் ஆகிய பதினாறு வகை பொருட்களை சிவலிங்கத்திற்கு அபிஷேகிக்க வேண்டுமென்று லிங்கபுராணம் கூறுகிறது.

மகாசிவராத்திரியானது நான்கு காலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு  காலத்திற்கும் ஒவ்வொரு வகை அபிஷேகங்கள், அலங்காரங்கள், நிவேதனங்கள் சமர்ப்பணம் செய்யப் படுகின்றன.

முதல் ஜாமத்தில் (மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை) இறைவனுக்கு பஞ்ச கவ்வியத்தால் அபிஷேகம் நடைபெறும். சந்தனம், வில்வம், தாமரை மலர்களால் அலங்காரம் செய்வர். சிவப்பு பட் டாடை அணிவிப்பர். அன்னம், பலகாரங்கள் நிவேதனம் செய்வர். ரிக்வேதம் ஓதுவார் கள். விளக்கெண்ணெய் தீபம் ஏற்றப்படும். அப்போது பக்தர்கள் சிவபுராணத்தைப் பாராயணம் செய்வது புண்ணிய பலன்களைத் தரும். இக்காலத்தில் சோமாஸ்கந்தரையும் வழிபடவேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் (இரவு 9.00 மணி முதல் 12.00 மணி வரை) சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால் கலந்த பஞ்சாமிர்தம் ஆகியவற்றை அபிஷேகம் செய்வர். சிவலிங்கத்தின்மீது பச்சைக்கற்பூரம் பூசுவர். மஞ்சள் நிற பருத்தி ஆடையை அணிவிப்பர். பாயசமும் லட்டும் நிவேதிப்பர். அப்போது, ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பிக்கப்படுகிறது. இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்றுவர். யஜுர் வேதம் ஓதுவார்கள். வழிபாட்டிற்கு தாமரை மற்றும் வில்வ மலர்களைப் பயன்படுத்துவார்கள். பலாப் பழத்தை நிவேதிப்பார்கள்.

மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை) லிங்கோத்பவரை வழிபடுதல் சிறப்பாகும். இது லிங்கோத்பவ காலம் எனப்படுகிறது. திருவண்ணாமலையில் இந்த நேரத்தில்தான் லிங்கோத்பவ உற்பத்தி ஆயிற்றாம். மார்க்கண்டேயரைக் காக்க சிவபெருமான் காலசம்ஹாரராக வெளிப்பட்டதும் இந்த நேரத்தில்தான் என்று புராணம் கூறுகிறது. இந்த மூன்றாம் காலத்தில் சிவலிங்கத்திற்கு தேனாபிஷேகம் செய்வர். சந்தனம் பூசுவர். வெள்ளை நிற கம்பளி ஆடை அணிவிப்பர். மாவுடன் நெய் கலந்து செய்த பலகாரங்களும், பாயசமும் நிவேதனம் செய்யப்படும். நெய் விளக்கேற்றி, கும்ப தீபம் காட்டுவார்கள்.

அறுகு மற்றும் தாழம்பூவைப் பயன்படுத்துவர். மாதுளம்பழம் நிவேதனம் செய்யப்படும். சாமவேதம் ஓதுவர்.

மூல லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதுடன் கருவறைக்குப் பின்னுள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். நெய்யபிஷேகம் செய்தவுடன் வெந்நீரால் அபிஷேகம் செய்து, பின் கம்பளி ஆடையை அணிவிப்பர். தாழம்பூ சாற்றப்படும். பொதுவாக சிவனுக்கு தாழம்பூ சாற்றுவதில்லை. வருடத்திற்கு ஒரே ஒருமுறை மட்டும் இந்தக் காலத்தில் தாழம்பூ சாற்றப் படுவதை தரிசிக்கலாம். லிங்கோத்பவருக்கு நெய்பூசி அபிஷேகிக்கும்போது ஸ்ரீருத்ரம் ஜெபிப்பார்கள். அந்த சமயத்தில் பக்தர்கள் லிங்கபுராண திருக்குறுந்தொகையையும் ஓதுவதால் புனிதம் சேரும். லிங்கோத்பவருக்கு எள்சாதம், சிவந்த நிறமுள்ள பழங்கள், நெற்பொரியும் வெல்லமும் சேர்த்து தயாரித்த பொரி உருண்டைகள், சுண்டல் ஆகியவற்றை நிவேதிப்பார்கள்.

நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.00 மணி வரை) செய்யப்படும் பூஜை மிகவும் முக்கியமானது. கரும்புச்சாறால் அபிஷேகம் செய்து கஸ்தூரி பூசுவார்கள். பச்சை நிற மலராடைகள் சாற்றுவார்கள். கோதுமை, நெய், சர்க்கரை சேர்த்துச் செய்த பலகாரங்களை நிவேதிப்பார்கள். நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவார்கள். மகாமேரு தீபம் என்ற தத்துவதீப ஆராதனை நடைபெறும். வாழைப்பழம் உள்ளிட்ட எல்லாவிதமான பழங்களையும் நிவேதனம் செய்வர். அதர்வண வேதம் பாராயணம் செய்யப்படும். பக்தர்கள் திருநாவுக்கரசர் அருளிய போற்றித் திருத்தாண்டகத்தை பாராயணம் செய்தால் முக்திக்கு வழிகாட்டும்.

விஷ்ணுவும் பிரம்மனும் "யார் பெரியவர்?' என்று போட்டியிட்டபோது, சிவன் ஜோதி வடிவாக அடிமுடி காணாதவனாக நின்ற காலமே சிவராத்திரி.

பிரளய காலத்தில் உலகம் நீரில் மூழ்கியதும், மீண்டும் உலகம் தோன்ற வேண்டுமென்று ஓரிரவின் நான்கு ஜாமங்களிலும் உமையவள் விழித்திருந்து சிவபூஜை செய்து பலன் பெற்ற நாள் சிவராத்திரி. இது கிருத யுகத்திற்கு முன்னர் நடந்த நிகழ்வாகும்.

திரேதா யுகத்துக்குமுன் முருகனும், துவாபர யுகத்துக்குமுன் விநாயகரும், கலியுகத்திற்குமுன் திருமாலும் சிவபூஜை செய்து, பிரளய காலத்தில் மூழ்கிய உலகம் மீண்டும் தோன்ற வழிவகுத்தார்கள் என்று லிங்கபுராணம் கூறுகிறது.

பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டதால் சிவபெருமான் மயங்கினார். உமையவள் பக்கத்திலிருந்து ஆசுவாசப்படுத்தி, நான்கு காலமும் கண்விழித்து தன் முந்தானையால் விசிறிக்கொண்டிருந்தாள். அதனால், சிவனின் மயக்கம் தெளிந்தது. உமையவளுடன் தேவர்களும் அப்போது சிவபெருமானைப் பூஜித்தார்கள். திரயோதசி மாலை வேளையில் சந்தியா நடனம் ஆடினார். அதைத் தொடர்ந்து வந்த சதுர்த்தசி இரவு நான்கு காலங்களிலும் தேவர்கள் ஈசனை அர்ச்சித்து பூஜை செய்தார்கள். அந்த நாள் மகாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

மாசி மாத மகாசிவராத்திரியைப்போல் ஒவ்வொரு மாதம் வரும் சிவராத்திரியும் போற்றப்படுகிறது.

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியாலும்;
வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சூரியனாலும்;
ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசானனாலும்;

ஆடி மாத தேய்பிறை சிவராத்திரி முருகனாலும்;
ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரனாலும்;
புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரி ஆதிசேஷனாலும்;
ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரனாலும்;
கார்த்திகை மாத இரண்டு சப்தமி திதியும், தேய்பிறை அஷ்டமியும் சரஸ்வதியாலும்;
மார்கழி மாத இரண்டு மாத சிவராத்திரிகள் மற்றும் வளர்பிறை, தேய்பிறையில் வரும் சதுர்த்தசிகள் லட்சுமியாலும்;
தை மாத வளர்பிறை திரிதியை நந்திதேவராலும்;
மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி தேவர்களாலும்;
பங்குனி வளர்பிறை திரிதியை சிவராத்திரி குபேரனாலும் வழிபடப்பட்டது என்று லிங்கபுராணம் கூறுகிறது.

சிவராத்திரி காலங்களில் நடைபெறும் அபிஷேகங்கள் தவிர, மேலும் சில அபிஷேகங்கள் உண்டு. சிவாகமம் கூறும் அந்த அபிஷேக நியதிகள் சற்று சிரமமாக இருந்தாலும், புகழ்பெற்ற சிவாலயங்களில் அந்த பத்தொன்பது விதமான அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த சிறப்பு அபிஷேகத்தின்போது 19 மேடைகள் அமைத்து, 19 கலசங்களில் புனித நீர் நிரப்பி, அந்தக் கலசங்களில் ஒவ்வொரு பொருட்களையும் இட்டு, மந்திரங்கள் ஜெபித்து, கலச நீரினை சிவலிங்கத்திற்கு அபிஷேகிப்பர்.

வஜ்ரம், மாணிக்கம், முத்து, இந்திர நீலம், பத்மராகம், பவளம், புஷ்பராகம், வைடூர்யம், ஸ்படிகம் ஆகியவற்றை கலசநீரிலிட்டு மந்திரம் சொல்வர். அந்தப் புனிதத் தீர்த்தமே ரத்னோதகம் எனப்படும்.

பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம், ஈயம், இரும்பு ஆகியவை இடப்பட்ட நீர் கொண்ட கலசம் லோகோதகம்.

பச்சை, நற்செங்கற்பொடி, பொன்னரிதாரம், மனோசிலை, கோரோசனை ஆகியவை கலந்த நீர் கொண்டது தாகோதகம்.

சாமை, தினை, எள், குறுவை சம்பா, அறுவாதம், யவநெல், கடுகு, செந்நெல் ஆகியவை கலந்த நீர் பீஜோதகம்.

முத்தக்காசு, கச்சோலம், சமுத்ரபச்சை, குங்குமப்பூ ஆகியவை கலந்த நீர் சுத்தோதகம்.

கடல் மண், மலை மண், ஆனைக்கோட்டு மண், புனிதத்தல மண், ஆற்று மண், தர்ப்பையடி மண், நண்டளை மண்- இப்படி புனித மண் கலந்த  நீரினை மிருதோதகம் என்பர்.

விஷ்ணுகிராந்தி, மஞ்சள், ஆனை வணங்கி, நெருஞ்சி, செங்கழுநீர், வாகையிலை, கருநெய்தல் ஆகியவை ஊறிய நீர் மார்ஜனோதகம்.

வெண்கடுகு, அறுகு, தர்ப்பை, பிள்ளைப் பூண்டு, தாமரைப்பூ ஆகியவை கொண்ட நீர் பரிமார்ஜனோதகம்.

தமால இலை, வன்னி இலை, துளசி, கரிசலாங்கண்ணி, வில்வம், நாயுருவி போன்றவை ஊறிய நீர் பத்திரோதகம்.

செண்கப்பூ, நிலத்தாமரை, புன்னைப்பூ, நந்தியாவட்டை, மகிழம்பூ, நாகப் பூ, பாதிரிப்பூ, வெள்ளெருக்கு, மல்லிகை ஆகிய மலர்கள் ஊறிய நீர் புஷ்போதகம்.

செங்கழுநீர், அகில், சந்தனம், முத்தக்காசு, வெட்டிவேர், கற்பூரம், குங்குமப்பூ ஆகியவை கலந்த நீர் மான்யோதகம்.

சூலம், வச்சிரம், கத்திமணி, துறட்டி, பாசம், பரிசை ஆகிய ஆயுதங்களைப் போட்ட நீர் அஸ்திரோதகம்.

மாம்பழம், மாதுளம்பழம், வாழை, எலுமிச்சை, பலாப்பழம், தேங்காய்த்துருவல் ஆகியவை ஊறிய நீர் பலோதகம்.

நாவல், பாதிரி, அரசு, அத்தி, பலாசு, ஆல் ஆகியவற்றின் பட்டைகள் ஊறிய நீர் காஷாயோதகம்.

தேன்மெழுகு, குறிஞ்சித் தேன்மெழுகு, பெருந்தேன் மெழுகு, கிருஷ்ணாப்பிரம், விஜ்ஜிராப்பிரம், லோகாப்பிரம், வாணக்கெந்தகம், சுரைக்காய் கந்தகம் ஆகியவை ஊறிய நீர் சுர்க்கோதகம்.

ஆனைக்கெந்தகம், சூரிய காந்தம், சந்திர காந்தம், அயக்காந்தம், ஊசிக்காந்தம், பொன் காந்தம் ஆகியவற்றுடன் சேர்ந்த நீர் காந்தோதகம்.

சந்தனவேர், நொச்சி வேர், நச்சுப்புல் வேர், வெட்டி வேர், கீழ்க்காய் வேர், நெல்லி வேர் ஆகியவை ஊறிய நீர் மூலோதகம்.

பஞ்சகவ்யம், கூருச்சப்பட்டை, குச்சலம் பட்டை, தர்ப்பை, மயிர்க் கொன்றை, நாயுருவி, கையாந்தகரை, கோரோசனை ஆகியவை ஊறிய நீர் சாந்தியோதகம்.

வெள்ளை லோத்தி கிராம்பு ஊறிய நீர் புஷ்கரோதகம் எனப்படும்.

கோதுமை, குளச்செந்நெல், சந்தனாதித் தைலம், நெல்லிமுள்ளி, மஞ்சள், மாவிலைகள் தனித்தனியாகப் போட்ட நீர் ஐந்து உதகங்களாகக் கொள்ளப்படும்.

மேற்கண்ட பொருட்களை சுத்தமான நீரில் தனித்தனி கலசத்தில் (குடம்) போட்டு, பூஜை செய்து, ஆகமங்களில் கூறியபடி வேதபாராயணம் ஓதி, பயபக்தியுடன் தெய்வத் திருமேனிக்கு (சிவலிங்கம்) அபிஷேகம் செய்வதனால் உலகமெங்கும் சுபிட்சங்கள் கூடும்; அமைதி நிலவும்.

பதினோரு ருத்ர ஜெபத்துடன் இந்த அபிஷேகத்தைச் செய்வார்கள். பூஜைக்குரிய பொருட்களை பக்தர்கள் அளித்து, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டால் சுகமான வாழ்வும், புனிதமும் சேரும்.

ஒருமுறை மகாசிவராத்திரி விரதமிருந்து, நான்கு காலபூஜையில் கலந்துகொண்டு, தங்களால் இயன்ற பொருளுதவி, தொண்டு செய்தால் நூறு ஏகாதசி விரதமிருந்த பலன் கிட்டுவதுடன் சிவனருளும் பெறலாம் என்று சிவாகமம் கூறுகிறது.