Wednesday, 4 May 2016

திருப்பாற்கடல் மலர்ந்த ஐஸ்வர்ய மகாலட்சுமி!

லட்சுமி என்பதற்குப் பிரியாது, பொருத்தி இருப்பவள் என்பது பொருள். அவள் அனேக வடிவங்களில் உலகில் நிறைந்திருக்கிறாள். அவளை அஷ்ட லட்சுமிகளாகவும், ஷோடஸ லட்சுமிகளாகவும் கொண்டாடுகிறோம்.
 

செல்வமானது, வீடு, மாடு, மனை, படிப்பு, வீரம் என்ற பல நிலைகளில் இருந்தாலும், அது பொன்னாபரணங்களாலும், பொற்கட்டிகளாலும் இருக்கும்போதே முதன்மைச் சிறப்பைப் பெறுகிறது.

அதனால் மகாலட்சுமியை சுவர்ணலட்சுமி என்று கொண்டாடுகிறோம். பெரிய கூட்டத்தில் ஒருவர் தான் அணிந்திருக்கும்  பொன்னாபரணங்களுக்கு ஏற்பவே கூடுதல் மதிப்பைப் பெறுகிறார். செல்வங்களை அருளி சகல சௌபாக்கியங்களுடன் வாழவைக்கும் மகாலட்சுமியை சௌபாக்ய லட்சுமி என்று அழைக்கிறோம். சகல செல்வங்களையும்  தந்து அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் செல்வத் திருமகளை ஐஸ்வர்ய மகாலட்சுமி என்று போற்றுகிறோம்.


மகாலட்சுமியைத் திருமாலின் தேவியாகப் போற்றி வழிபடுவதே பொதுவான நிலையாகும். அவளை பாற்கடலில் இருந்து தோன்றிய கன்னிப் பெண்ணாக, மணமாலை ஏந்தி வரும் சுயம்வர லட்சுமியாக வழிபடுவது ஒருமுறையாகும். இவளைக் கன்யாலட்சுமி என்றும், சுயம்வர லட்சுமி என்றும் அழைக்கின்றனர். பாரத தேச சமய வழிபாட்டில் கன்னிப் பெண்கள் தனியிடம் பெறுகின்றனர். பெண் தெய்வங்களைக் கன்னிப் பெண் வடிவில் வைத்து வழிபட்டால் அதிகமான நன்மைகளைப் பெறலாம் என்று நம்புகின்றனர்.

செல்வத் திருமகளான மகாலட்சுமியைப் பாற்கடலில் இருந்து பிறந்து வரும் கன்னியாக வழிபடுவதே இந்த ஐஸ்வர்ய லட்சுமி வழிபாடாகும். இவளுடன் தோன்றிய கற்பகமரம், காமதேனு, உச்சைச்ரவஸ் என்னும் குதிரை, மணமாலை ஏந்திய அப்சரஸ், காவல் தேவியான விந்தியாவாசினி என்னும் துர்க்கை, இந்திரன் ஆகியோருடன் இவள் வடிவத்தையும் ஓவியமாக வரைந்து வழிபடுகின்றனர். இவள் திருமாலைக் கணவனாக வரித்து அவருக்கு மாலையிடும் கருத்தில் இருக்கின்றாள்.

பாற்கடலில் பிறந்த ஐஸ்வர்யங்களுடன் வீற்றிருப்பவளான  மகாலட்சுமியின் அருள் எல்லோருக்கும் கிடைத்து எல்லோரும் இன்பமுடன் வாழ வேண்டிப் பிரார்த்தித்து, பொதுவாக மகாலட்சுமி பூஜை நடைபெறுவதுண்டு. கார்த்திகை மாதத்து பஞ்சமிக்கு ஸ்ரீபஞ்சமி என்பது பெயர். ஐஸ்வர்யம் என்பதற்கு மேலான செல்வம் என்பது பொருள்.

ஒரு சமயம் சாகா நிலையைத் தரும் அமிர்தத்தைப் பெறுவதற்காக அசுரர்களும் தேவர்களும் கூடி  பாற்கடலைக்  கடைந்தபோது எட்டுக் கிளைகளுடன் கூடிய கற்பகவிருட்சம் தோன்றியது. அதில் காமவல்லி என்னும் கொடி படர்ந்திருந்தது. கிளைகளில் ஏராளமான பழங்களும், வண்ண வண்ணப் பூக்களும் இருந்தன.

அது தன் நிழலில் இருந்து கேட்பவர்களுக்குக் கேட்டதைக் கொடுக்கும் தெய்வீக மரமாக இருந்தது. அதற்குப் பிறகு ஐராவதம் என்னும் வெண்மை நிறம் கொண்ட யானை தோன்றியது. அதன் பிறகு காமதேனு என்னும் தெய்வீகப் பசு தோன்றியது. அதை அடுத்து வண்ணப் பட்டாடைகள் அணிந்து பலவிதமான ஆபரணங்களைப் பூண்ட 60,000 தேவமங்கையர் தோன்றினர். அவர்களை அடுத்து கௌஸ்துப மணி, பஞ்சவிருட்சங்கள் எனப் பல பொருட்கள் தோன்றின. அவற்றுடன் சந்திரன் தோன்றினான்.

இறுதியாக வண்ணப்பட்டாடை அணிந்து அனேக நவரத்தினங்கள் பதித்த அனேக அணிமணிகளைப் பூண்டவளாகப் பேரழகுப் பாவையாக மகாலட்சுமி தோன்றினாள். அவள் மணமாலையுடன் காணப்பட்டாள். அவளுக்கு அடுத்தபடியாக தேவவைத்தியனான தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டான். பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட பொருட்களை தேவர்கள் எடுத்துக் கொண்டனர்.

மகாலட்சுமி திருமாலுக்கு மாலையிட்டு அவருக்குத் தேவியானாள். அமிர்தத்திற்குத் தேவர்களும் அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் மோகினி ஆரவாரத்துடன் தோன்றி, அனைவரையும் மாயையால் மயக்கி அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை அளித்து விட்டு எஞ்சியதை பாதுகாப்பான இடத்தில் வைத்தார். பிறகு திருமகளுடன் தனது வைகுண்டத்தை அடைந்தார்.

மகாலட்சுமியுடன் பாற்கடலில் பிறந்த அனைத்துப் பொருட்களையும் எழுதி வைத்து வழிபட்டால் சகல செல்வங்களையும் அடைந்து சுகமாக வாழலாம் என்று நம்பப்படுகிறது. வெண்பட்டுத் துணியில் சிவப்பு அல்லது நீலவண்ணத்தில் இந்த உருவத்தை எழுதி வழிபடுவது வழக்கம். பாற்கடலில் பிறந்த அனைத்துப் பொருட்களையும் தீட்டி வழிபடுவது இயலாது என்பதால், சிறந்ததாகவும், தனிச்சிறப்பு கொண்டதாகவும் இருக்கும் சிலவற்றை மட்டும் வரைந்து வழிபடுகிறோம்.

இங்கேயுள்ள படத்தில் நடுவில் ஐராவதம் என்னும் யானை மீது மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். அவளது மேற்கரங்களில் தாமரை மலர்கள் இருக்க, முன்கரங்களில் அபய முத்திரையும், அமிர்த கலசத்தையும் தாங்கியுள்ளாள். அவளுக்கு மேலே கற்பக மரம் நிழல் பரப்புகிறது.

லட்சுமியின் வலது தோளுக்கு மேல் உச்சைச்ரவஸ் என்னும் குதிரையும், இடது தோளுக்கு மேல் காமதேனு என்னும் பெண் முகம் கொண்ட பசுவும் உள்ளன. தேவியின் வலப்புறம் விந்தியாவாசினி என்னும் துர்க்காதேவி வில்லேந்தி நிற்கிறாள். அவளுக்கு அருகில் சந்திரதேவன் நிற்கின்றான். தேவியின் இடதுபுறம் மணமாலையைத் தாங்கியவாறு அப்சரப் பெண் நிற்கிறாள். (இங்குள்ள மகாலட்சுமி திருமணமாகாதவள். அப்போது தான் பாற்கடலில் பிறந்தவள். அவள் தனக்கென மணாளனைக் காணக் காத்திருப்பவள். அதனால் கன்யாலட்சுமி என்று போற்றப்படுகிறாள். ஆகவே இங்கு இவளைக் கன்னிப்பெண் தெய்வமாகவே கொண்டாடுகிறோம். அவளை அடுத்து தேவ வைத்தியனான தன்வந்திரி சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி ஆகியவற்றுடன் நிற்கின்றார்.

வேண்டியதை விரும்பியவாறு தரும் காமதேனு, தனது நிழலில் இருப்பவர் விரும்பியதை அளிக்கும் கற்பகமரம், எங்கும் எளிதில் செல்ல உதவிடும் உச்சைச்ரவஸ், காவல் தரும் விந்தியாவாசினி, மன அமைதியைத் தரும் சந்திரன், அழகும் இளமையும் நல்கும் அப்சரஸ், நோய் நொடி அற்ற வாழ்வைத் தரும் தன்வந்திரி ஆகியோர் புடைசூழ சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வை அளிக்கும் தேவியாக வரதான மங்கையாக மகாலட்சுமி வீற்றிருக்கும்படியாக அமைந்ததே இதன் அமைப்பாகும்.

ஐஸ்வர்யங்களுடன் வீற்றிருப்பதால், இந்த லட்சுமியின் வடிவம் ஐஸ்வர்ய லட்சுமி என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய லட்சுமியை

 வாழ்வில் வளமான செல்வநலம் பெற வேண்டி ஆயிரம் வில்வ தலங்கள், தாமரை மலர் களைக் கொண்டு  வழிபடுபவர் சகல செல்வங்களையும் பெற்று இனிது வாழ்வர்..  ஐச்வர்ய மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் இன்பமான வாழ்வைப் பெறு வோம்.


 

திருக்கண் மலர் ஆயிரம் ஆழி அரங்கருக்கே!

எல்லா எண்களையும்போல் அதுவும் ஓர் எண்தான். தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதுக்குப் பிறகு வரும், ஒன்று போட்டு மூன்று பூஜ்ஜியம். அவ்வளவுதானே?!

ஒரு பாறையைக் கல் என்று நினைத்தால், அது வெறும் கல், அதையே கடவுள் என்று எண்ணிப் பூஜிக்கும்போது, அதற்குத் தனி மரியாதை வந்துவிடுகிறதல்லவா? அதுபோல, ஆயிரம் என்பது சாதா ரண எண் அல்ல, அதற்கு இன்னொரு முக்கியமான பெருமை உண்டு.

‘ஆயிரம்’ என்ற சொல், கவிதைகளில் இடம்பெறும்போது, அதன் அர்த்தம், ‘மிகப் பெரிய எண்’. அதாவது, லட்சமும் ஆயிரம்தான், கோடியும் ஆயிரம்தான், லட்சம் கோடியும் ஆயிரம்தான்.

குறிப்பாக, பக்திப் பாடல்களில் இறைவனுக்கு ஆயிரம் துதி செய்வதாகச் சொல்வார்கள். அதன் அர்த்தம், அனுதினமும் அவனையே துதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். இதற்கு உதாரணமாக,  ஆயிரத்தின் மகத்துவம் சொல்லுகிற இரண்டு பாடல்களைப் பார்ப்போம், ஒன்று சிவன் பாட்டு, இன்னொன்று, திருமால் பாட்டு!

முதலில், திருவாரூரில் எழுந்தருளியிருக்கிற சிவபெருமானைப் பணிந்து போற்றும் வகையில் அப்பர் எழுதிய அற்புதமான இந்தப் பாடல்:

ஆயிரம் தாமரை போலும்,
ஆயிரம் சேவடி யானும்,
ஆயிரம் பொன்வரை போலும்,
ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும்,
ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்,
ஆரூர் அமர்ந்த அம்மானே!


ஆரூர் (அதாவது, திருவாரூர்) தலத்தில் எமக்கு அருள் புரியும் சிவனே, உனது திருவடிகள் இரண்டு மட்டுமல்ல, ஏகப்பட்ட திருவடிகள் உண்டு, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான தாமரைகளைப் போலச் சிவந்திருக்கின்றன! உன்னுடைய தோள்கள் இரண்டுமட்டு மல்ல, பல தோள்களை உடையவன் நீ, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான பொன் மலைகளைப்போல் வலுவோடு மின்னுகின்றன! உன்னுடைய திருமுடியும் ஒன்றல்ல, பலப்பல. அவை  அனைத்தும் ஆயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே இடத்தில் கூடியதைப்போல் பிரகாசிக்கின்றன. திருவடிகள், தோள்கள், திருமுடிகளைப்போலவே, உனக்குப் பல பெயர்களும் உண்டு. அவற்றை நாங் கள் பக்தியுடன் பாடித் துதிக்கிறோம், உன் கருணை வேண்டி நிற்கிறோம்!

இந்தப் பாடலில், ‘சிவனுக்கு இரண்டு கால், இரண்டு தோள், ஒரு தலைதானே இருக்க முடியும்? பிறகு எப்படி ஆயிரம் வந்தது? அப்படியே அவருக்கு ஆயிரம் தலை இருந்தாலும் இரண்டாயிரம் தோள், இரண்டாயிரம் கால் இருக்கவேண்டுமல்லவா?’ என்றெல்லாம் கால்குலேட்டரை எடுக்கக்கூடாது. எல்லாம் வல்ல இறைவனை உயர்வாக எண்ணிப் போற்றுகிறார் அப்பர்.  இங்கே ஆயிரம் என்பது  ‘மிகப் பெரிய ஓர் எண்’, அவ்வளவுதான்!

அடுத்து,  இதே பாணியில் அமைந்த இன்னோர் அழகான பாடல், வைணவத் தமிழ் இலக்கியங்களில் முக்கியமான நூல்களைக் கொண்ட ‘அஷ்டப் பிரபந்தம்’ என்ற திரட்டு. அதில் ‘திருவரங்கத்து மலை’யில் வரும் பாடல் இது. எழுதியவர் பெயர், திவ்யகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

புரம் ஆயிரம்,
திருக்கண் மலர் ஆயிரம்,
புண்டரிகக்கரம் ஆயிரம்,
கழல் கால் மலர் ஆயிரம்,
கண்ணி முடிச்சிரம் ஆயிரம்,
திருநாமமும் ஆயிரம்,
செய்ய கையில் அரம் ஆயிரம்
கொண்ட திண் திறல் ஆழி அரங்கருக்கே!


அங்கே திருவாரூர், இங்கே திருவரங்கம், அதாவது, ஸ்ரீரங்கம் ரங்கநாதருடைய பெருமையைப் பாடுகிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

அரங்கத்துப் பெருமானே, உன்னுடைய திருமேனி பல ஆயிரம், மலர் போன்ற உன் திருக்கண்கள் பல ஆயிரம், தாமரை மலரைப் போன்ற உன் கைகள் பல ஆயிரம், வீரக் கழல் அணிந்த, மலர்  போன்ற உன் கால்கள் பல ஆயிரம், மலர் மாலையும் கிரீடமும் அணிந்த உன் தலைகள் பல ஆயிரம்!

இப்போது, அப்பர் சொன்னதுபோலவே, பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் சொல்கிறார், ‘திருநாமமும் ஆயிரம்’, சிவனுக்கு மட்டுமல்ல, திருமாலுக்கும் பலப்பல பெயர்கள் உண்டல்லவா!

அடுத்து, இன்னும் நுட்பமான ஓர் அடி, ‘செய்ய கையில் அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி’.  ரங்கநாதரின் சிவந்த கைகளில் வலிமை மிகுந்த சக்ராயுதம் இருக்கிறது, அதில் ஆயிரக்கணக்கான அரங்கள் இருக்கின்றன.

சக்கரத்தின் வடிவத்தை அப்படியே கற்பனை செய்து பாருங்கள், அதன் விளிம்பில் சிறு சிறு அரங்கள் நிறைய இருக்குமல்லவா? அவைதானே ஒன்று சேர்ந்து தீமையின் தலையைக் களைகின்றன?


ஒரு பொறியாளரின் லாகவத்தோடு இதை மிக அழகாகக் கற்பனை செய்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், ‘உலகில் அறங்கள் யாவும் புரியும் என் இறைவா, உன்னுடைய கையில் உள்ள சக்ரா யுதத்தில்தான் எத்துணை எத்துணை அரங்கள்!’ என்று வியக்கிறார்.

மற்ற எல்லா வரிகளையெல்லாம்விட, இங்கேதான் ‘ஆயிரம்’ என்ற வார்த்தையின் சிறப்புப் பொருள் கச்சிதமாகப் பொருந்துகிறது, எண்ணமுடியாத எண்ணிக்கையில் சிறு அரங்களைக் கொண்ட சக்கர  ஆயுதம் என்பதால்!

ஆயிரம் துன்பம் வந்தால் என்ன?


ஆயிரம் நாமம் கொண்ட இறைவன் பெயரைச் சொன்னால் போதும், ஆயிரம் இன்பம் நம்மைத் தேடி வரும்!


என்ன? இது ஆயிரத்தில் ஒரு வார்த்தை’ என்கிறீர்களா? சரிதான்!





சமயபுரம் தாயே நீ தான் சர்வ சக்தி நீயே!



மகமாயி சமயபுத்தாயே - உன்
    மகளெனக்கு எல்லாமும் நியே
    கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்
    தரும் குங்குமத்தான் மங்கையர்க்கு காவல் (மகமாயி)

பெண்  கண்கொடுக்கும் கண்ணபுர தேவி
    அருள் தருவாள் இமயமலைச் செல்வி
    மூவிலை வேல் கைகொண்ட காளி
    பகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி (மகமாயி)

பெண்  வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு - அது
    வினைதீர்க்க நீ அமைந்த கூடு
    திருநீறே அம்மா உன் மருந்து - அதை
    அணிந்தாலே நோய் ஓடும் பறந்து

பெண்  பெற்றவளே நீ அறிவாய் என்னை உன்
    பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை
    கற்றகலை சிறு துளியே எனக்கு - அதை
    கடலாக்கி வைத்த புகழ் உனக்கு (மகமாயி)

 

 

மாரியம்மன் ஆலயங்களில், அவை அனைத்துக்குமான தலைமை பீடம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் ஆலயம். ‘சாய்ஞ்சா சமயபுரம்... சாதிச்சா கண்ணபுரம்’ என்பதற்கிணங்க வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் அளித்து சாதித்தவள் அவள். சாதித்து வருகிறவள். சாதிக்கப் போகிறவள். முக்காலங்களிலும் முதன்மை பெற்றவள்; வெகு சூட்சுமமானவள் முத்துமாரி!


கிருஷ்ணாவதார காலத்தில் கம்சன், தன்னைக் கொல்ல வந்த குழந்தை இதுவென எண்ணி, ஒரு பெண் குழந்தையை விண்ணிலே வீசியெறிந்து, அதனை வெட்ட வாளினை உயர்த்துகிறான். அக்குழந்தை வானத்தில் மிதந்தபடி, “ஏ... கம்சனே! உன்னைக் கொல்லப் போகிறவன் கோகுலத்தில் வளர்கிறான். நான் மாயாதேவி!” எனச் சொல்லியபடி வானில் பறந்து வந்து, பூமியில் ஒரு வேம்பு வனத்தினில் வந்தமர்கிறாள். அதுவே, ஆயிரம் கண்ணுடையாளின் ஆதி சமயபுரம் ஆயிற்று என்பதாக புராணம்.



கிழக்கு பிரதான வாசல். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதால், மேல் நோக்கி ராஜகோபுரத்தைத் தேடுகிறோம். பிறை நிலவுபோல ஒரு பகுதி துருத்திக்கொண்டு வெளியே தெரிகிறது. காரணம், மண்டபங்கள். அதுமட்டுமல்ல; சற்றே உயரம் குறைவான ராஜகோபுரம்.

அதைக் கடந்து உள்ளே சென்றால், எதிரே மின்னுகிறது தங்கத் தகடுகள் வேய்ந்த துவஜஸ்தம்பம். பலி பீடம். முதல் பிரகாரத்தின் உள்ளே இடதுபுறம் திரும்புகிறோம். விநாயகர் சன்னிதி!



பெரும்பாலான ஆலயங்களில் கன்னி மூலையில்தான் விநாயகர் சன்னிதி அமைந்திருக்கும். இங்கு கன்னி மூலைக்கும் அக்னி மூலைக்கும் மத்தியில் மகா கணபதி சன்னிதி! இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளையும் உள்ளடக்கிய மூன்று விநாயகர்கள் காட்சியளிக்கின்றனர். முச்சக்தி விநாயகர்களின் திருவருள் பெற்று, பிரகாரத்தில் நடக்கிறோம். ஸ்தல விருட்சமான சுயம்பு வேப்ப மரம் வளர்ந்தோங்கி நிற்கிறது. அதன் கிளைகள் எங்கிலும் வேண்டுதல் எழுதப்பட்ட திருவுளச்சீட்டுகள் நிறைந்துள்ளன. இது புனித மரமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


முதல் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நவராத்திரி மண்டபம். மேற்கு வாயில். மேற்கு கோபுரம். வட மேற்கில் வசந்த மண்டபம். ஈசான மூலையில் யாக சாலை மண்டபம். தங்க ரதக் கூடம். முதல் பிரகாரத்தின் வடபுறத்தில் அபிஷேக அம்மன் சன்னிதி. இந்த அம்மனின் திருமேனி மீது பட்டு வெளியேறும் திருமஞ்சன தீர்த்தம்தான், பக்தர்களுக்கான அருமருந்து. அம்மை நோய் கண்டவர்கள், சரும நோய் கொண்டவர்களுக்கான தெய்விக சர்வ ரோக நிவாரணியே, இந்த திரு மஞ்சன தீர்த்தம்தான்.

அபிஷேக அம்மனை வலம் வந்து பொன்னிறக் கொடிமரம், பலிபீடம் கடந்து நகர்ந்து சென்றால் எதிரே கருவறை! அங்கே காணும் விழிகள் கசிந்து, வேண்டும் மனங்கள் உருகி, வருந்தி வந்து வணங்கி நிற்கும் தம் மக்களை மெய்சிலிர்க்க வைத்து அரவணைத்துக் கொள்கிறாள் சமயபுரத்தாள்!


விக்கிரம சிம்மாசனத்தில் விற்றிருக்கிறாள், சுயம்புவும் கருவறை மூலவருமான மாரியம்மன். பூவுலகில் வேறெந்த மாரியம்மனுக்கும் விக்கிரம சிம்மாசனம் கிடையாது என்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. “இங்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டால், அது நிச்சயம் நிறைவேறும்.” என்கிறார்கள் பக்தர்கள். அந்த மகாமாரியம்மனைத்தான் இப்போது தரிசிக்கிறோம்.


 
மாதுளம் பூ நிற மேனி! சிரசில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. தங்கக் கிரீடம் தாங்கிக் குங்குமச் சிவப்பு நிறத்திருமுகத்துடன் திகழ்வதே ஒரு தனியழகு. அம்பாளின் திருமுகத்தில் திலகமாக முப்பத்தியாறு வைரக்கற்கள்.


 
அது என்ன கணக்கு? விக்கிரமாதித்தனுக்கு இந்திரன் பரிசளித்த சிம்மாசனத்தின் இரு புறங்களிலும் பதினெட்டு பதினெட்டு என மொத்தம் முப்பத்தியாறு படிகள். அவைகளை நிலைநிறுத்தும் விதமாக அம்மனின் திருமுகத்தில் திலகமென முப்பத்தியாறு வைரக்கற்கள்.



எட்டு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். கத்தி, சூலம், தாமரை, உடுக்கை ஆகியன வலது திருக்கரங்களில். பாசம், வில், மணி, கபாலம் ஆகியன இடது திருக்கரங்களில். ஏழு அசுரர்களின் தலைகளைக் கொய்து, அவைகளையே மாலையாக அணிந்துள்ளாள். இடது காலை மடக்கி (மடித்து) வைத்து, வலது காலை தொங்கவிட்டபடி வீற்றிருக்கிறாள்.

மாயா அசுரன் தலைமீது வலது கால் பதித்துள்ளாள். அதன் வலப்பக்கம் அசுரன் சண்டன் தலை, இடப்பக்கம் அசுரன் முண்டனின் தலையென, அம்பாளின் வலது காலின் அடியில் மூன்று அசுரர்களின் தலைகள்.


இத்தனை உக்கிரங்களைத் தாங்கியிருந்தபோதிலும், திருமுகத்தில் கருணை பொங்க, மந்தகாசப் புன்னகையுடன் காட்சி அருள்கிறாள், ஸ்ரீமாரியம்மன்.

கருவறைக்கு அருகில் உற்சவ அம்மன் சன்னிதி. மாரியம்மன் இங்கு ஆயிரங்கண்ணுடையாள் திருமேனியாக விக்கிரக வடிவில், தெற்கு நோக்கி சன்னிதி கொண்டுள்ளாள். முன்னோடியான கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி தனிச் சன்னிதி கொண்டுள்ளார்.



மத்தியில் சூர்ப்பநாயக்கர் சன்னிதி. அதன் கிழக்கே செல்லாண்டியம்மன் சன்னிதி. கிராம தேவதை அவள். அடுத்து, நின்ற திருக்கோலத்தில் பொன்னுக்கு அருளும் விநாயகர்.

“ஆதியில் கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம் என்றாகி தற்போது சமயபுரம். அதனால் ஊர் மாறி. காளிதான் இவள். பேர் மாறி, மாரி ஆனவள். மாரி என்றாலே கருமை நிறம் கொண்டவள். இவள் நிறமோ மாதுளம் பூ செந்நிறம். அதனால் உருமாறி (மேனி நிறம் மாறி). ஆயிரம் கண்ணுடையாள் உற்சவ மாரியம்மன் விக்கிரகம். பாலாபிஷேகத்தின்போது, அவளது திருமேனி மீது எண்ண முடியாத அளவுக்கு, அம்மை முத்துக்கள் தெரியும்.

எல்லா வயதினரின் அம்மை மற்றும் சரும நோயினை நீக்கிக் காத்தருள்பவளாக இங்கு வீற்றிருக்கிறாள் ஆயிரம் கண்ணுடையாள். அவளே சமயபுரத்தாள்!”



ஆடி வெள்ளித் திருவிழா!

ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். அதுவும் ஆடி கடைசி வெள்ளியன்று, லட்சக்கணக்கில் பெண்களும் ஆண்களும் திரள்கின்றனர். பொதுவாக எல்லா மாதங்களிலுமே செவ்வாய், வெள்ளி தினங்களில் சுமார் 50,000 பக்தர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு லட்சம்; அமாவாசை நாட்களில் இரண்டு லட்சம்; சித்திரை தேர்த் திருவிழாவின்போது ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் வந்து செல்கின்றனர்.


பச்சைப் பட்டினி விரதமும் பூச்சொரிதலும்!

மாசி மாதம் பூச்சொரிதல் விழா. மாசி கடைசி ஞாயிறு தொடங்கி, பங்குனி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் பூச்சொரிதல். முதல் பூ ஸ்ரீரங்கம் பெருமாளிடம் இருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே, மற்ற ஊர்கள் மற்றும் பக்தர்களிடமிருந்து வரும் பூக்கள் அம்மன் மீது சொரியப்படும். அந்த இருபத்தியெட்டு நாட்களிலும் சமயபுரம் மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் அனுஷ்டிக்கிறாள். அம்மனுக்கு இளநீர், பானகம், பழங்கள், பச்சரிசி துள்ளு மாவு மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது தினசரி ஆறு கால பூஜைகளிலும்.



ரெங்கநாதன் தங்கச்சி... அவளுக்கு எத்தனை தங்கச்சி?

தைப்பூசத் திருநாளின்போது, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே எழுந்தருள்கிறாள் சமயபுரம் மாரியம்மன். ஸ்ரீரங்கம் பெருமாளும் அங்கு எழுந்தருள்கிறார். தன் தங்கை மாரியம்மனுக்கு, சீர் வரிசைப் பொருட்கள் தந்து அனுப்புகிறார் அண்ணன் நம்பெருமாள். அன்பில் மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், வலங்கைமான் மாரியம்மன், நார்த்தாமலை மாரியம்மன், பவானி பெரியபாளையம் மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன் என சமயபுரம் மாரியம்மனுக்கு மொத்தம் ஆறு தங்கைகள்.



திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது சமயபுரம்.

 கற்பூர நாயகியே! கனகவல்லி!
    காளி மகமாயி! கருமாரி அம்மா!
    பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
    பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
    விற்கால வேதவல்லி விசாலாட்சி!
    விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
    சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!
    சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!   (கற்பூர)

புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!
    புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
    நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!
    நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!
    கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!
    காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
    உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!
    உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!  (கற்பூர)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
    உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்
    அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
    அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
    கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
    காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
    சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!
    சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!   (கற்பூர)

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!
    காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
    பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!
    பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
    எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
    இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
    மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
    மகனுடைய குறைகளையும் தீருமம்மா!   (கற்பூர)

நெற்றியிலே குங்குமமே நிறைய வேண்டும்!
    நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
    கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
    கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
    சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
    ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
    மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
    மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!  (கற்பூர)

அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
    அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
    கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
    கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!
    முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
    முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
    எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
    என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!   (கற்பூர)

அன்புக்கே நானடிமையாக வேண்டும்!
    அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!
    வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!
    வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!
    பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!
    பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
    என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!
    என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!   (கற்பூர)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
    கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
    நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!
    நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
    செம்பவள வாயழகி உன்னெழிலோ!
    சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
    அம்பளவு விழியாலே உன்னை என்றும்
    அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!   (கற்பூர)

 காற்றாகி கனவாகிக் கடலாகினாய்!
    கயிறாகி உயிராகி உடலாகினாய்!
    நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
    நிலமாகி பயிராகி உணவாகினாய்!
    தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
    தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
    போற்றாத நாளில்லை தாயே உன்னை!
    பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை!   (கற்பூர)


 

நல்லன எல்லாம் அருளும் ஸ்ரீ நாராயண ஹ்ருதயம்!


வேதவியாசர் பதினெட்டுப் புராணங்களையும் எழுதியவர். வேதங்களின் சாரமாக அமைந்திருக்கின்றன அந்தப் புராணங்கள். இவை மட்டுமல்லாது, இவர் சொல்லச் சொல்ல மஹாகணபதியே, மஹாபாரதம் எழுதியிருக்கிறார். அந்த வேதவியாசர் அடுத்த பிறவியில் ஜெயதேவராக அவதரித்து மஹாவிஷ்ணுவை உளமாறப் பாடி மகிழ்ந்தார். அஷ்டபதி பாடி, பாகவதப் பிரசங்கம் செய்து ஸ்ரீமன் நாராயணனின் புகழை உலகெங்கும் பரப்பினார். இப்போது நடைபெறும் பாகவதமேளா நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். கீதகோவிந்தம் என்ற மகா காவியத்தை இயற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பரிபூரண அருளைப் பெற்றார்.

இத்தகைய பெருமை பெற்ற ஸ்ரீவேதவியாஸர் அருளிய ஸ்ரீமன் நாராயண ஹ்ருதயம் ஸ்லோகங்களை  பாடி, பரந்தாமனின் பேரருளைக் கொண்டாடுவோம்.

ஸ்ரீமன்நாராயணோ ஜ்யோதிராத்மா
                  நாராயண: பர:
நாராயண: பரம் ப்ருஹ்ம நாராயண நமோஸ்துதே

ஸ்ரீமன் நாராயணனே பரமாத்மா. நாராயணனனே பரப்பிரம்ம ஸ்வரூபம். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயண: பரோ தேவோ தாதா நாராயண: பர:
நாராயண: பரோ த்யாதா நாராயண நமோஸ்துதே

நாராயணனே சிறந்த தேவன். எதையும் கொடுப்பவன் நாராயணனே. த்யானம் செய்கிறவனும் நாராயணந்தான். ஓ நாராயணனே! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயணம் பரம் தாம த்யாதா நாராயண: பர:
நாராயண: பரோ தர்மோ நாராயண நமோஸ்துதே

நாராயணனே சிறந்த ஸ்தானமாகத் திகழ்பவன். த்யானம் பண்ணுகிறவனும் பரம்பொருளான அந்த நாராயணனே. நாராயணனே ஞானத்தை அளிக்கும் தர்மவான். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயண: பரோ போதோ வித்யா நாராயண:பரா
விஸ்வம் நாராயண: ஸாக்ஷாத் நாராயண நமோஸ்துதே

நாராயணனே ஞானத்திலெல்லாம் தலைசிறந்தவன். சிறந்த வித்யையும் நாராயணனே. உலகமே சாக்ஷாத் நாராயண ஸ்வரூபம். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயணாத்விதிர் ஜாதோ ஜாதோ
நாராயணாச்சிவ:
ஜாதோ நாராயணாதிந்த்ரோ
நாராயண நமோஸ்துதே

நாராயணனிடமிருந்து பிரம்மதேவன் உண்டானார். நாராயணனிடமிருந்து சிவன் உண்டானார். நாராயணனிடமிருந்து இந்திரன் உண்டானார். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

ரவிர் நாராயணம் தேஜச்சந்த்ரோ
நாராயணம் மஹ:
வன்ஹிர் நாராயணஸ்ஸாக்ஷாத்
நாராயண நமோஸ்துதே.

நாராயணனைச் சேர்ந்த ஒளியே சூரியன். நாராயணனைச் சேர்ந்த பிரகாசமே சந்திரன். சாக்ஷாத் நாராயணனே அக்னிமயமானவன். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயண உபாஸ்ய: ஸ்யாத் குருர் நாராயண: பர:
நாராயண: பரோ போதோ
நாராயண நமோஸ்துதே.

நாராயணனே உபாஸிக்கத் தகுந்தவனாவான். நாராயணனே சிறந்த குரு. நாராயணனே சிறந்த ஞானம். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயண: பலம் முக்யம் ஸித்திர்
நாராயணஸ்ஸுகம்
ஸர்வம் நாராயண: சுத்தோ
நாராயண நமோஸ்துதே.

நாராயணனே சிறந்த பலன். அந்தப் பலனால் கிடைக்கும் சித்தியாகிற சுகமும் நாராயணனே. யாவும் சுத்தமான நாராயணனே! ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயண ஸ்த்வமேவாஸி
நாராயண ஹ்ருதி ஸ்தித:
ப்ரேரக: ப்ரேர்யமாணானாம் த்வயா
ப்ரேரிதமானஸ:

ஓ நாராயணா! தாங்களே என் உள்ளே இருக்கிறீர்கள். ஏவுகிறவர்களுக்கு அவ்வாறு ஏவும்படிச் செய்கிற மனமுடைய ஏவுகிறவரும் தாங்களே.

த்வதாஞ்ஞாம் ஸிரஸா த்ருத்வா
ஜபாமி ஜனபாவனம்
நானோபாஸனமார்காணாம்
பாவக்ருத் பாவபோதக:

தங்களுடைய கட்டளையைத் தலைமேற்கொள்கிறேன். ஜனங்களைப் பரிசுத்தம் செய்யும் தங்கள் மந்திரத்தை ஜபிக்கிறேன். பலவித உபாசனை மார்க்கங்களின் பயனைச் செய்கிறவரும், அவற்றுக்கு மூலமாக உபதேசிப்பவரும் தாங்களே.

பாவக்ருத்பாவ பூதஸ்த்வம் மம
ஸெளக்யப்ரதோ பவ
தவன்மாயாமோஹிதம் விஸ்வம் த்வயைவ
பரிகல்பிதம்

தங்களை உபாஸிக்கும்படியாக இருப்பவர்களுக்கு அப்படித் தங்களை உபாஸிக்கும் நினைவை உண்டு பண்ணுகிறவரும், தாங்களே. தாங்கள் எனக்கு சுகத்தை அளிப்பவராக ஆக வேண்டும். இவ்வுலகமானது தங்களால் உண்டுபண்ணப்பட்டு தங்களுடைய மாயையாலேயே மோகமடைந்திருக்கிறது.

த்வததிஷ்டான மாத்ரேண ஸைவ
ஸர்வார்த்தகாரிணீ
த்வமேவைதாம் புரஸ்க்ருத்ய மம
காமான் ஸமர்பய

அந்த மாயையானது தங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு எல்லா காரியங்களையும் செய்து வருகிறது. தாங்களும் இந்த மாயையை முன்னிட்டுக் கொண்டு எனது விருப்பங்களையெல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

நமே த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம்
ந ஹி தைவதம்
த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்ய ரூபகம்

எனக்கு தங்களைக் காட்டிலும் வேறு ரட்சகர் இல்லை. தங்களைக் காட்டிலும் வேறு தெய்வமில்லை. புண்ணியமே உருவாகக் கொண்ட தங்களைக் காட்டிலும் வேறு ஒரு ரட்சகரை நான் அறியவில்லை.

யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே
பாவனாத்மனே
தத்ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா
ஸர்வதா விபோ

மனதின் எண்ணமாக இருக்கும் தங்களுக்கு நமஸ்காரம். ஜனன மரண சம்பந்தம் இருக்கும் வரையில் சர்வ காரிய சித்தியையும் தாங்கள் எப்பொழுதும் எல்லாப் பிராகாரமாகவும் அளிக்க வேண்டும்.

பாபினா மஹமேகாக்ர்யோ தயாலூனாம்
த்வமக்ரணீ:
தயனீயோ மதன்யோஸ்தி தவ கோத்ர ஜகத்ரயே

பாவிகளுக்குள் நான் தலைவன். தயை உள்ளவர்களுக்குள் தாங்கள் சிறந்தவர். தயை பண்ணத் தகுந்தவர். இம்மூவுலகத்திலும் எனக்கு தங்களைக் காட்டிலும் வேறு எவருமிலர்.

த்வயாப்யஹம் நஸ்ருஷ்டஸ்சேத்
நஸ்ய்ந்ந்த்தவ தயாலுதா
ஆமயோவா ந ஸ்ருஷ்டஸ்சேத்
ஒளஷதஸ்ய வ்ருதோதய:

தங்களால் நான் படைக்கப்பட வில்லையென்றால், தங்களுக்குள்ள கருணை வீணாகிவிடும். எப்படி நோய் இல்லாவிடில் அதற்காக  செய்துவைத்த மருந்தானது வீணாகிவிடுமோ, அது போலாகும்.

பாபஸங்கபரிக்ராந்த: பாபாத்மா பாரூபத்ருக்
த்வதன்ய: கோத்ரீ பாபேப்யஸ்த்ராதாமே
ஜகதீதலே

பாபக் குவியலால் ஆக்ரமிக்கப்பட்டவனும், பாபமாகவே இருப்பவனும், பாபத்தின் ரூபத்தையே தரிக்கின்றவனுமாக நான் இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை இவ்வுலகில் இந்த பாபங்களிலிருந்து விடுவிக்கின்றவர் உன்னைத் தவிர வேறு யார்?

த்வவேம மாதா ச பிதா த்வமேவ த்வமேவ
பந்துஸ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா ச குருஸ்த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ

ஓ தேவாதி தேவா! தாங்களே எனக்குத் தாய். தாங்களே தந்தை. தாங்களே எனது உறவினர். தாங்களே எனக்குத் தோழன். தாங்களே வித்தை. தாங்களே குரு. தாங்களே எனக்கு எல்லாமுமாக இருக்கின்றீர்கள்.

ப்ரார்த்தனா தசகம் சைவ மூலாஷ்டக மதாபிவா
ய: படேச் ச்ருணுயான்னித்யம் தஸ்ய
லக்ஷ்மீ: ஸ்திராபவேத்

ஸ்ரீமஹாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்யும் இந்தப் பத்து ஸ்லோகங்களை எவனொருவன் தினமும் படிப்பானோ அல்லது கேட்பானோ அவன் வீட்டில் மகாலக்ஷ்மி ஸ்திரமாக நிலைகொண்டுவிடுவாள்.




 

சகல கலையறிவும் அருளும் சரஸ்வதி!

சரஸ்வதி!

புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மாதான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப்படுகின்றாள் சரஸ்வதி.

ரிக் வேதம் ‘சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதிகாரணி’ என இவளைப் போற்றுகிறது. சரஸ்வதியின் வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப்படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா (சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி.

கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.

இவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடுகிறாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று.

பிரம்ம சக்தியாகத் திகழும்போது சரஸ்வதிக்கு பிராம்மி என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை இவள் முகமாகவும், நான்கு வேதங்கள் நான்கு திருக்கரங்களாகவும், இசையும் இலக்கணமும் ஸ்தனங்களாகவும், எண்ணும், எழுத்தும் இரு கண்களாகவும், இதிஹாசம், புராணம் ஆகியவை இரு திருவடிகளாகவும் கொண்ட இவள் கையில் இருக்கும் வீணை ஓங்கார வீணை - ஓங்காரத்தின் வடிவானது. கச்சபி என்னும் பெயருடைய இந்த வீணை பரமேஸ்வரனால் பிரம்மாவுக்கு அளிக்கப்பட்டு பிறகு சரஸ்வதிக்கு வந்தது.

பொதுவாக வெண் பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களில் சுவடி, ஜபமாலை, வீணை ஆகியவற்றைத் தாங்கிய வண்ணம் காணப்படும் சரஸ்வதி, ஆங்கார சக்தியாய்த் தோன்றும்போது எட்டுக் கரங்களில், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறுகிறது.

வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்கு கரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம், கெண்டி ஆகியவற்றையும் வலது மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முக வடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள்.

கல்விக்கு அதிதெய்வமாகப் போற்றப்படுபவள் சரஸ்வதியே! யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்குத் தேவையான ஞானம், தேஜஸ், வெற்றி ஆகியவற்றைக் கொடுப்பவளும் சரஸ்வதியே. யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்த முடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய் வார்க்கிறது.

 ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப்படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்த பின்பே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.

சகல கலைகளுக்கும் அதிதேவதையான இவளே சாரதை எனவும் போற்றப்படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப்படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவள் சமணம், பெளத்தம் மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப்படுகின்றாள். நவராத்திரியின் ஒன்பதாம் நாள் வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்து வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக் கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு.

அன்றைய தினம் பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்ப்பிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப்பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் “ஹரி ஓம்” எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள். அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள்.

அன்று மாலையில் நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்த நேரமாகவும், நல்ல விஷயங்களை ஆரம்பிக்கக்கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்ல நேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.


 

திருப்பங்கள் தரும் திருமலை பிரம்மோற்சவ தரிசனம்!

திருப்பதி-திருமலையில்  புரட்டாசி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தின் அடிப்படையில்  பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.

ஹோமத்தில் பயன்படுத்தும் பொருட்களும், பயனும்!


வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது

துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது

அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது

நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது

பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது

அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது

வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது

அருகம் புல் : விநாயகருக்கும் ராகுவுக்கும் பிடித்தது

மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்

பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி என்பார்கள்.

தாமரை புஷ்பம் : லக்ஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது

மாதுளை மரம் : வசீகரம் கிடைக்கும். தேஜஸ் பெறலாம்.

அத்திக் குச்சி : மக்கட்பேறு.

நாயுருவி குச்சி : மகாலக்ஷ்மி கடாட்சம்

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை

அரசங் குச்சி : அரசாங்க நன்மை

கருங்காலிக் கட்டை: ஏவல், பில்லி சூனியம் அகலும்.

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.

புரசங் குச்சி : குழந்தைகள் கல்வியும் ஞானமும் பெறுவர்.

வில்வக் குச்சி : செல்வம் சேரும்

அருகம்புல் : விஷபயம் நீங்கும்.

ஆலங் குச்சி : புகழைச் சேர்க்கும்.

நொச்சி : காரியத்தடை விலகும்.

வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சகல செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து 'சோமாம்ருதம்' ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் பிரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.

வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.

நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.

அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும்.

பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.

தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.

ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.

இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.

தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்