Wednesday 4 May 2016

நல்லன எல்லாம் அருளும் ஸ்ரீ நாராயண ஹ்ருதயம்!


வேதவியாசர் பதினெட்டுப் புராணங்களையும் எழுதியவர். வேதங்களின் சாரமாக அமைந்திருக்கின்றன அந்தப் புராணங்கள். இவை மட்டுமல்லாது, இவர் சொல்லச் சொல்ல மஹாகணபதியே, மஹாபாரதம் எழுதியிருக்கிறார். அந்த வேதவியாசர் அடுத்த பிறவியில் ஜெயதேவராக அவதரித்து மஹாவிஷ்ணுவை உளமாறப் பாடி மகிழ்ந்தார். அஷ்டபதி பாடி, பாகவதப் பிரசங்கம் செய்து ஸ்ரீமன் நாராயணனின் புகழை உலகெங்கும் பரப்பினார். இப்போது நடைபெறும் பாகவதமேளா நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். கீதகோவிந்தம் என்ற மகா காவியத்தை இயற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பரிபூரண அருளைப் பெற்றார்.

இத்தகைய பெருமை பெற்ற ஸ்ரீவேதவியாஸர் அருளிய ஸ்ரீமன் நாராயண ஹ்ருதயம் ஸ்லோகங்களை  பாடி, பரந்தாமனின் பேரருளைக் கொண்டாடுவோம்.

ஸ்ரீமன்நாராயணோ ஜ்யோதிராத்மா
                  நாராயண: பர:
நாராயண: பரம் ப்ருஹ்ம நாராயண நமோஸ்துதே

ஸ்ரீமன் நாராயணனே பரமாத்மா. நாராயணனனே பரப்பிரம்ம ஸ்வரூபம். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயண: பரோ தேவோ தாதா நாராயண: பர:
நாராயண: பரோ த்யாதா நாராயண நமோஸ்துதே

நாராயணனே சிறந்த தேவன். எதையும் கொடுப்பவன் நாராயணனே. த்யானம் செய்கிறவனும் நாராயணந்தான். ஓ நாராயணனே! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயணம் பரம் தாம த்யாதா நாராயண: பர:
நாராயண: பரோ தர்மோ நாராயண நமோஸ்துதே

நாராயணனே சிறந்த ஸ்தானமாகத் திகழ்பவன். த்யானம் பண்ணுகிறவனும் பரம்பொருளான அந்த நாராயணனே. நாராயணனே ஞானத்தை அளிக்கும் தர்மவான். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயண: பரோ போதோ வித்யா நாராயண:பரா
விஸ்வம் நாராயண: ஸாக்ஷாத் நாராயண நமோஸ்துதே

நாராயணனே ஞானத்திலெல்லாம் தலைசிறந்தவன். சிறந்த வித்யையும் நாராயணனே. உலகமே சாக்ஷாத் நாராயண ஸ்வரூபம். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயணாத்விதிர் ஜாதோ ஜாதோ
நாராயணாச்சிவ:
ஜாதோ நாராயணாதிந்த்ரோ
நாராயண நமோஸ்துதே

நாராயணனிடமிருந்து பிரம்மதேவன் உண்டானார். நாராயணனிடமிருந்து சிவன் உண்டானார். நாராயணனிடமிருந்து இந்திரன் உண்டானார். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

ரவிர் நாராயணம் தேஜச்சந்த்ரோ
நாராயணம் மஹ:
வன்ஹிர் நாராயணஸ்ஸாக்ஷாத்
நாராயண நமோஸ்துதே.

நாராயணனைச் சேர்ந்த ஒளியே சூரியன். நாராயணனைச் சேர்ந்த பிரகாசமே சந்திரன். சாக்ஷாத் நாராயணனே அக்னிமயமானவன். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயண உபாஸ்ய: ஸ்யாத் குருர் நாராயண: பர:
நாராயண: பரோ போதோ
நாராயண நமோஸ்துதே.

நாராயணனே உபாஸிக்கத் தகுந்தவனாவான். நாராயணனே சிறந்த குரு. நாராயணனே சிறந்த ஞானம். ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயண: பலம் முக்யம் ஸித்திர்
நாராயணஸ்ஸுகம்
ஸர்வம் நாராயண: சுத்தோ
நாராயண நமோஸ்துதே.

நாராயணனே சிறந்த பலன். அந்தப் பலனால் கிடைக்கும் சித்தியாகிற சுகமும் நாராயணனே. யாவும் சுத்தமான நாராயணனே! ஓ நாராயணா! தங்களுக்கு நமஸ்காரம்.

நாராயண ஸ்த்வமேவாஸி
நாராயண ஹ்ருதி ஸ்தித:
ப்ரேரக: ப்ரேர்யமாணானாம் த்வயா
ப்ரேரிதமானஸ:

ஓ நாராயணா! தாங்களே என் உள்ளே இருக்கிறீர்கள். ஏவுகிறவர்களுக்கு அவ்வாறு ஏவும்படிச் செய்கிற மனமுடைய ஏவுகிறவரும் தாங்களே.

த்வதாஞ்ஞாம் ஸிரஸா த்ருத்வா
ஜபாமி ஜனபாவனம்
நானோபாஸனமார்காணாம்
பாவக்ருத் பாவபோதக:

தங்களுடைய கட்டளையைத் தலைமேற்கொள்கிறேன். ஜனங்களைப் பரிசுத்தம் செய்யும் தங்கள் மந்திரத்தை ஜபிக்கிறேன். பலவித உபாசனை மார்க்கங்களின் பயனைச் செய்கிறவரும், அவற்றுக்கு மூலமாக உபதேசிப்பவரும் தாங்களே.

பாவக்ருத்பாவ பூதஸ்த்வம் மம
ஸெளக்யப்ரதோ பவ
தவன்மாயாமோஹிதம் விஸ்வம் த்வயைவ
பரிகல்பிதம்

தங்களை உபாஸிக்கும்படியாக இருப்பவர்களுக்கு அப்படித் தங்களை உபாஸிக்கும் நினைவை உண்டு பண்ணுகிறவரும், தாங்களே. தாங்கள் எனக்கு சுகத்தை அளிப்பவராக ஆக வேண்டும். இவ்வுலகமானது தங்களால் உண்டுபண்ணப்பட்டு தங்களுடைய மாயையாலேயே மோகமடைந்திருக்கிறது.

த்வததிஷ்டான மாத்ரேண ஸைவ
ஸர்வார்த்தகாரிணீ
த்வமேவைதாம் புரஸ்க்ருத்ய மம
காமான் ஸமர்பய

அந்த மாயையானது தங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு எல்லா காரியங்களையும் செய்து வருகிறது. தாங்களும் இந்த மாயையை முன்னிட்டுக் கொண்டு எனது விருப்பங்களையெல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

நமே த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம்
ந ஹி தைவதம்
த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்ய ரூபகம்

எனக்கு தங்களைக் காட்டிலும் வேறு ரட்சகர் இல்லை. தங்களைக் காட்டிலும் வேறு தெய்வமில்லை. புண்ணியமே உருவாகக் கொண்ட தங்களைக் காட்டிலும் வேறு ஒரு ரட்சகரை நான் அறியவில்லை.

யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே
பாவனாத்மனே
தத்ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா
ஸர்வதா விபோ

மனதின் எண்ணமாக இருக்கும் தங்களுக்கு நமஸ்காரம். ஜனன மரண சம்பந்தம் இருக்கும் வரையில் சர்வ காரிய சித்தியையும் தாங்கள் எப்பொழுதும் எல்லாப் பிராகாரமாகவும் அளிக்க வேண்டும்.

பாபினா மஹமேகாக்ர்யோ தயாலூனாம்
த்வமக்ரணீ:
தயனீயோ மதன்யோஸ்தி தவ கோத்ர ஜகத்ரயே

பாவிகளுக்குள் நான் தலைவன். தயை உள்ளவர்களுக்குள் தாங்கள் சிறந்தவர். தயை பண்ணத் தகுந்தவர். இம்மூவுலகத்திலும் எனக்கு தங்களைக் காட்டிலும் வேறு எவருமிலர்.

த்வயாப்யஹம் நஸ்ருஷ்டஸ்சேத்
நஸ்ய்ந்ந்த்தவ தயாலுதா
ஆமயோவா ந ஸ்ருஷ்டஸ்சேத்
ஒளஷதஸ்ய வ்ருதோதய:

தங்களால் நான் படைக்கப்பட வில்லையென்றால், தங்களுக்குள்ள கருணை வீணாகிவிடும். எப்படி நோய் இல்லாவிடில் அதற்காக  செய்துவைத்த மருந்தானது வீணாகிவிடுமோ, அது போலாகும்.

பாபஸங்கபரிக்ராந்த: பாபாத்மா பாரூபத்ருக்
த்வதன்ய: கோத்ரீ பாபேப்யஸ்த்ராதாமே
ஜகதீதலே

பாபக் குவியலால் ஆக்ரமிக்கப்பட்டவனும், பாபமாகவே இருப்பவனும், பாபத்தின் ரூபத்தையே தரிக்கின்றவனுமாக நான் இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை இவ்வுலகில் இந்த பாபங்களிலிருந்து விடுவிக்கின்றவர் உன்னைத் தவிர வேறு யார்?

த்வவேம மாதா ச பிதா த்வமேவ த்வமேவ
பந்துஸ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா ச குருஸ்த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ

ஓ தேவாதி தேவா! தாங்களே எனக்குத் தாய். தாங்களே தந்தை. தாங்களே எனது உறவினர். தாங்களே எனக்குத் தோழன். தாங்களே வித்தை. தாங்களே குரு. தாங்களே எனக்கு எல்லாமுமாக இருக்கின்றீர்கள்.

ப்ரார்த்தனா தசகம் சைவ மூலாஷ்டக மதாபிவா
ய: படேச் ச்ருணுயான்னித்யம் தஸ்ய
லக்ஷ்மீ: ஸ்திராபவேத்

ஸ்ரீமஹாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்யும் இந்தப் பத்து ஸ்லோகங்களை எவனொருவன் தினமும் படிப்பானோ அல்லது கேட்பானோ அவன் வீட்டில் மகாலக்ஷ்மி ஸ்திரமாக நிலைகொண்டுவிடுவாள்.




 

1 comment: