Wednesday 4 May 2016

சகல கலையறிவும் அருளும் சரஸ்வதி!

சரஸ்வதி!

புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மாதான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப்படுகின்றாள் சரஸ்வதி.

ரிக் வேதம் ‘சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதிகாரணி’ என இவளைப் போற்றுகிறது. சரஸ்வதியின் வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப்படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா (சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி.

கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.

இவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடுகிறாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று.

பிரம்ம சக்தியாகத் திகழும்போது சரஸ்வதிக்கு பிராம்மி என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை இவள் முகமாகவும், நான்கு வேதங்கள் நான்கு திருக்கரங்களாகவும், இசையும் இலக்கணமும் ஸ்தனங்களாகவும், எண்ணும், எழுத்தும் இரு கண்களாகவும், இதிஹாசம், புராணம் ஆகியவை இரு திருவடிகளாகவும் கொண்ட இவள் கையில் இருக்கும் வீணை ஓங்கார வீணை - ஓங்காரத்தின் வடிவானது. கச்சபி என்னும் பெயருடைய இந்த வீணை பரமேஸ்வரனால் பிரம்மாவுக்கு அளிக்கப்பட்டு பிறகு சரஸ்வதிக்கு வந்தது.

பொதுவாக வெண் பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களில் சுவடி, ஜபமாலை, வீணை ஆகியவற்றைத் தாங்கிய வண்ணம் காணப்படும் சரஸ்வதி, ஆங்கார சக்தியாய்த் தோன்றும்போது எட்டுக் கரங்களில், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறுகிறது.

வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்கு கரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம், கெண்டி ஆகியவற்றையும் வலது மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முக வடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள்.

கல்விக்கு அதிதெய்வமாகப் போற்றப்படுபவள் சரஸ்வதியே! யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்குத் தேவையான ஞானம், தேஜஸ், வெற்றி ஆகியவற்றைக் கொடுப்பவளும் சரஸ்வதியே. யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்த முடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய் வார்க்கிறது.

 ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப்படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்த பின்பே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.

சகல கலைகளுக்கும் அதிதேவதையான இவளே சாரதை எனவும் போற்றப்படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப்படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவள் சமணம், பெளத்தம் மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப்படுகின்றாள். நவராத்திரியின் ஒன்பதாம் நாள் வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்து வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக் கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு.

அன்றைய தினம் பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்ப்பிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப்பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் “ஹரி ஓம்” எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள். அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள்.

அன்று மாலையில் நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்த நேரமாகவும், நல்ல விஷயங்களை ஆரம்பிக்கக்கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்ல நேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.


 

No comments:

Post a Comment