Tuesday, 26 July 2016

ஸ்ரீ சக்ர நாயகிகள்!


ஸ்ரீஆண்டாள் அவதரித்த புனித நாள் ஆடிப்பூரம். இந்த நன்னாளில் அம்மன் கோவில்களும் விழாக்கோலம் காணும். அன்று வளைகாப்பு வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.ஆடிப்பூரத் திருநாளில்தான் அம்பிகை பூப்பெய்தியதாகப் புராணம் சொல்வதால், அன்று வளையல்களால் அம்மனை அலங்கரிப்பதும், அர்ச்சனைத் தட்டுகளில் வளையல்களை சமர்ப்பிப்பதும் நடைபெறுகிறது. இதில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபனம் செய்யப்பட்ட அம்மன் கோவில்கள் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன. காவேரிக்கரையோரம் உள்ள திருவானைக்கா தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தனிச்சிறப்புடன் விளங்குகிறாள்.பொதுவாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது போல வெள்ளி, தாமிரம் ஆகிய உலோகங்களில் ஸ்ரீசக்கர யந்திரம் எழுதி அம்மனின் பீடத்தின்கீழ் அல்லது எதிரில் ஸ்தாபிதம் செய்வார்கள். ஆனால் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு காதுகளில் தாடங்கமாக (தோடுகள்) அணிவிக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகப் போற்றப்படுகிறது.ஆதிகாலத்தில் இந்த அன்னை மிகவும் உக்கிரமாகக் காட்சிதந்தாள். பக்தர்கள் அருகில் சென்று வழிபட பயந்தார்கள். பூஜை செய்யும் அர்ச்சகர்கூட சிறிய கோல்கொண்டு வஸ்திரம் அணிவிப்பதும், மலர் அலங்காரம் செய்வதுமாக இருந்தார்.ஒருசமயம் ஆதிசங்கரர் யாத்திரையாக இத்திருத்தலத்திற்கு வந்தபோது, ஈஸ்வரியின் நிலையை அறிந்து தியானம் மேற்கொண்டார். பிறகு, இரண்டு தாடங்கம் (தோடுகள்) உருவாக்கி மந்திரப் பிரயோகம் செய்து, ஈஸ்வரியின் காதுகளில் பொருத்தினார். ஒன்று ஸ்ரீசக்கரம் அமைந்த தாடங்கம்; மற்றொன்று சிவசக்கரம் அமைந்தது. மேலும், ஈஸ்வரியின் எதிரில் விநாயகரையும், சந்நிதியின் பின்புறம் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்து பூஜைசெய்யவே, ஈஸ்வரியின் உக்கிரம் முழுமையாகக் குறைந்து, தேவியின் பார்வை குளிர்ந்தது. இதன்பின் பக்தர்கள் நெருங்கிச் சென்று அன்னையை வழிபட்டு அருள்பெற்று வருகின்றனர். ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீவித்யாபூஜை முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. அத்துடன் ஆடிப்பூரத்தன்று சிறப்பு வழிபாடுகள் செய்தும் வளையல்களை சமர்ப்பித்தும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

இத்தலம் மட்டுமின்றி வேறு பல திருத்தலங்களிலும் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிதம் செய்திருக்கிறார்.தர்மபுரி மாவட்டம், தகடூர் கோட்டைத் திருத்தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம். ஆதியில் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் என்று அழைக்கப்பட்டது. இங்கு லிங்க வடிவில் அருள்புரியும் சிவபெருமான் பாணாசுரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது புராண வரலாறு. துர்வாசர், கௌசிகர், காசிபர், அகத்தியர், பரத்வாஜர் ஆகிய ஐந்து முனிவர்களாலும்; இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்டதிக் பாலகர்களாலும்; பஞ்சபாண்டவர்களாலும்; ஐராவதம் என்ற தேவ யானையாலும்; யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோராலும் வழிபடப்பட்ட திருத்தலம். குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலில், காஞ்சியில் தவமிருந்த யோக காமாட்சி சிவசக்தி ஐக்கிய நிலையில் யோக சக்தியாக தனிச்சந்நிதியில்  அருள்புரிகிறாள். ஸ்ரீகாமாட்சியம்மன் சந்நிதி 18 படிகள் கொண்ட உயர்ந்த மேடையின்மீது அமைந்துள்ளது. பிற ஆலயங்களில் ஸ்ரீசக்கரம் அம்மனுக்கு முன்பாகவோ, கீழ்ப்பகுதியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இங்கு அம்மன் சந்நிதியே ஸ்ரீசக்கர வடிவமான மேருவின்மீது நிறுவப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் ஆடிப்புரத் திருநாளன்று வளைகாப்பு வைபவம் மிகச்சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது.காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயக் கருவறையில், "வசின்யாதி வாக்தேவதைகள்' வீற்றிருந்து அருளும் ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சி மாநகரமே சக்கர வடிவில் அமைக்க ஆதிசங்கரர் அருள்புரிந்திருக்கிறார்.காசியில் (வாரணாசி) உலக மக்களுக்கு அன்னமளிக்கும் ஸ்ரீஅன்னபூரணி அருள்புரியும் கோவிலிலும் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். இதேபோல் கேரளாவில் கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோவிலிலும் அமைத்துள்ளார். சென்னைக்கு அருகே மாங்காடு தலத்தில் அருளும் தவக் காமாட்சியம்மன் அர்த்தமேரு, மகாமேரு, மகாசக்கர வடிவினளாக அருள்புரிகிறாள். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாக அமைத்து, அதன்மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட, தாமரையும், அதற்கு மேல்புறத்தில் ஸ்ரீசக்கர யந்திரமும் அமைக்கப்பட்டுள்ளன. 43 தேவதைகளைக் குறிக்கும் விதத்தில் 43 முக்கோணங்களைக் கொண்டுள்ளது. இதுபோல் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே அமைந்துள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்துள்ளன.

பொதுவாக ஆடிப்பூரத் திருநாளில் அம்பிகைக்கு ருது ஸ்நான வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு, பல அம்மன் கோவில்களில் கண்ணாடி வளையல்களை அடுக்கி சுவாசினி பூஜை நடைபெறும். அந்தவகையில், சென்னை திருவல்லிக் கேணி எல்லையம்மன் கோவிலில் வளையல் சாற்று விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த பழமையான ஆலயத்தில் ஆடி மாதம் பிரம்மோற்சவம் பதின்மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.மனம்போல் மணாளன் அமையவும், வாரிசுகள் வளமுடன் தொடரவும் பிள்ளைவரம் பெற்றுத்தரும் திருநாள் ஆடிப்பூரம். இந்த நன்னாளில் தங்கள் வீட்டில் நடைபெறும் விழாவாகக் கருதி, பக்தர்கள் வளைகாப்பு வைபவத்தை நிகழ்த்துகிறார்கள்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள வளைகாப்பு மண்டபத்தில், ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் உள்ளே அம்பாளுக்கு எதிரில் தீமிதி வைபவமும் நடைபெறும். இதுபோல வேறெங்கும் காணமுடியாதென்பர்.மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா "முளைக்கொட்டுவிழா' என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிராகாரத்திற்கு "ஆடி வீதி' என்றே பெயர்.திருநெல்வேலியில் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ஆலயத்தில் அம்பிகைக்கு "பூரம் கழித்தல்' எனப்படும் ருது ஸ்நான வைபவமும், வளைகாப்பும் சிறப் பாகக் கொண்டாடப் படுகிறது.நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் ஆலயம் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், சிவபெருமானின் ஏழு தியாக க்ஷேத்திரங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது. இங்கு நீலாயதாட்சியம்மன் கன்னி தெய்வமாக அருள்புரிகிறாள். ஆடிப்பூரத் தன்று அம்பிகைக்கு ருது ஸ்நான வைபவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒன்பது கன்னிப் பெண்களை வரிசையாக உட்காரவைத்து நலங்கிட்டு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம், பூ, சீப்பு, குங்குமச்சிமிழ், ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்குகிறார்கள்.திருக்கருகாவூர் அம்மனுக்கும் இதுபோல் ருது சாந்திவிழா நடைபெறுகிறது. அப்போது மங்கையர்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்துப் பெற்றுக்கொள்கிறார்கள்.திருச்சி உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள குங்குமவல்லி அம்மனுக்கு தைமாதம் மூன்றாம் வெள்ளிக் கிழமை வளையல் சாற்று அலங்காரம் மிகச்சிறப்பாக நடந்தாலும், ஆடிப்பூரத்தன்று கன்னியர்களும், குழந்தை வரம் வேண்டிக் காத்திருக்கும் தம்பதிகளும், சுகப்பிரசவம் வேண்டி வழிபடும் கர்ப்பிணிகளும் அம்மனுக்கு வளையல்களை பூஜைத்தட்டில் வைத்து அர்ச்சித்து, அதனைப் பிரசாதமாகப் பெற்று கைகளில் அணிந்துகொள்வர்.திருச்சி, தில்லை நகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள அன்னை சாரதாம்பாளுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் கண்ணாடி வளையல்களால் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையில் அலங்கரிப்பர். வளையல் அலங்காரத்தில் அம்பாள் மூன்று நாட்களுக்குக் காட்சிதருவாள். அம்பாளின் எதிரிலுள்ள ஸ்ரீசக்கர மேட்டையும் வளையல்களால் அலங்கரித்திருப்பர். பிறகு இவ்வளையல்களைப் பிரசாத மாக பெண்களுக்கு வழங்குவர்.மேலும், ஆடிப்பூரம் ஸ்ரீஆண்டாளுக்குரிய நாளாகவும் போற்றப்படுவதால், ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் விழாக்கோலம் காணும். பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் ஆகியன மிகச்சிறப்பாக நடைபெறுகின் றன. அந்த உற்சவத்தின் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருடசேவை தரிசிக்கத்தக்க ஒன்று. அப்போது, ஸ்ரீரங்கமன்னாருடன் சுற்றுவட்டாரக் கோவில்களில் அருள்புரியும் நான்கு பெருமாள் உற்சவர்களும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள். 7-ஆம் நாளன்று ஆண்டாள் மடியில்  தலைவைத்து ஸ்ரீரங்கமன்னார் சயனித்திருக்கும் காட்சியை தம்பதி சமேதராக தரிசிக்க, வாழ்வில் என்றும் சுகம் பெறலாம் என்பர். தேரோட்டத்தின்போது மதுரை கள்ளழகர் கோவிலிலிருந்து அனுப்பப்படும் பட்டுப்புடவையையே ஆண்டாளுக்கு சாற்றியிருப்பார்கள். ஆண்டாள் பவனி வரும் 75 அடி உயரம் கொண்ட திருத்தேர் கலையம்சம் கொண்டது. திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை வழிபட்டால் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்ல இயலாதவர்கள், அருகிலுள்ள பெருமாள் கோவிலில் அருள்புரியும் ஸ்ரீஆண்டாளை ஆடிப்பூரத்தில் தரிசித்தாலும் பலன் கிட்டும். அன்றைய தினம் சுமங்கலிகள் விரதம் மேற்கொண்டு  ஸ்ரீஆண்டாளை வழிபட, குடும்பத்தில் என்றும் சுகம் நிறைந்திருக்கும் என்பர்.

 

16 பேறுகளும் அருளும் பஞ்சபூதத் தல நாயகிகள்!

ட்சிணாயனம் எனும் தெற்குதிசைநோக்கி சூரியன் பயணிக்கத் தொடங்கும் கடக மாதமான ஆடி மாதத் தினை அம்மனுக்குரிய மாதமென்று  போற்றுவர். இம்மாதத்தில் வரும் சிறப்பு நாட்கள் ஒவ்வொன்றும் திருநாட்களாகும். அந்தவகையில் ஆடிப்பௌர்ணமி மிகவும் போற்றப்படுகிறது சந்திரனை மனோகாரகன் எனச் சொல்கிறது ஜோதிட நூல்.  எனவே இந்நாளில் இறைவழிபாட்டின் மூலம் நம் சிந்தனையை ஒருமுகப் படுத்தினால், மனோகாரகனான சந்திரன் சகல நன்மைகளையும் தந்தருள்வான் என்கின்றன வேத நூல்கள்.

சந்திரனுக்கு அதிபதி அம்பிகை. ஆகவே, இந்நாளில் அம்பிகையை தரிசித்து வழிபடுவதால் பூரண அருளும் ஆரோக்கியமும் கிட்டும். மேன்மேலும் உடல்நலம் வளம்பெற்று, ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றன வழிகாட்டி நூல்கள்.

அன்னை பராசக்தியை நிறைமதி நாளில் பெண்கள் பூஜை செய்துவந்தால், அன்னை தன் பரிபூரண அருளை அக்குடும்பத்திற்கு வாரிவழங்குகிறாள்.

அம்பாளை வழிபட பல கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் ஏராளம். அந்தவகையில், பஞ்சபூதத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் அம்பாளை வழிபட, அனைத்து அம்பிகையையும் வழிபட்ட பலன் கிட்டும் என்பர்

பஞ்சபூதங்களில் நிலம் எனும் பூதத்தின் தலமாகத் திகழ்கிறது காஞ்சி. இங்குள்ள காமாட்சியம்மன் கோவிலில் ஐந்து காமாட்சிகள் அருள்புரிகின்றனர்.

கருவறையில் அருள்புரியும் தேவியை மூலகாமாட்சி என்பர். இந்த தேவியின் வலப்புறம் காட்சி தருபவள் தபஸ்காமாட்சி. ஒற்றைக்காலில் முள்முனையில் நின்று தவம் செய்கிறாள் இந்த தேவி. கருவறையின் கீழ்ப்பகுதியில் குகை போன்ற அமைப்புடைய பிலாத்துவாரம் ஒன்றுண்டு. இதனுள் அருள்புரிவது பிலாகாச காமாட்சி. இங்குள்ள ஸ்ரீசக்கர ரூபத்தை ஸ்ரீசக்கர காமாட்சியாக வணங்குவர். அடுத்து, பாததரிசனம் மட்டும் அருளும் காமாட்சியென்று ஐந்து காமாட்சிகள் அருள்புரிகின்றனர்.

காஞ்சியில் அன்னை எழுந்தருளக் காரணமென்ன?

ஒருசமயம் கயிலையில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் அன்னை. அதனால் உலகங்கள் யாவும் இருண்டன. இதனால் கோபம் கொண்ட ஈசன், தேவியை பூவுலகில் தவமியற்றுமாறு பணித்தார். அதன்படி பூவுலகில் காஞ்சிக்கு வந்த அம்பிகை, வேகவதி ஆற்றங்கரையில் மணலால் லிங்கம் பிடித்து ஈசனை வணங்கித் தவமிருந்தாள். அம்பிகையை சோதிக்க எண்ணிய சிவபெருமான் வேகவதி ஆற்றில் வெள்ளம் பெருக் கெடுக்க வைத்தார். நீரின் வேகத்தில் மணல் லிங்கம் கரைந்துவிடுமோ என்ற அச்சத்தில், அதைத் தழுவிக்கொண்டாள் அன்னை.

அம்பிகையின் பக்தியில் மகிழ்ந்த ஈசன் அவளுக்குக் காட்சி கொடுத் தருளினார். இவ்வாறு தவமிருந்த ஆதிசக்தியான அன்னையே ஸ்ரீகாமாட்சியானாள். இந்த தேவியை பௌர்ணமியன்று தரிசித்தால் மாங்கல்ய பலம் நீடிக்குமென்பது ஐதீகம்.

திருவானைக்கா நீர்த்தலமென்று போற்றப்படுகிறது. இங்கு ஜம்புகேஸ்வரர்-  ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அருள்புரிகிறார்கள். இங்குள்ள ஈஸ்வரி தனித்தன்மை பெற்றவ ளென்று புராண வரலாறு கூறுகிறது. ஆதிகாலத்தில் அசுரன் ஒருவனை வதம் செய்த ஈஸ்வரி இங்கு எழுந்தருளியதால், உக்கிரத்துடன் காட்சி தந்தாள். இதனால் பக்தர்கள் இந்த அம்பாளை வழிபட அஞ்சினர். இந்த நிலையில் இத்தலத்திற்கு யாத்திரையாக வந்த ஆதிசங்கரர், அம்பாளது உக்கிரத்தைத் தணிக்க விரும்பினார். அம்பாளின் காதுகளில் ஏற்கெனவே தோடுகள் இருந்தாலும், முறைப்படி மந்திரப் பிரயோகம் செய்து ஸ்ரீசக்கர ரூபமான இரு காதணிகளை அம்பாளுக்கு மேற்கொண்டு அணிவித்தார். மேலும், அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீவிநாயகப் பெருமான் திருவுருவத்தையும் பிரதிஷ்டை செய்ய, அம்பிகையும் சாந்தரூபமாகக் காட்சிதந்தாள். இன்று அம்பாள் காதுகளில் இரண்டு தாடங்கங்கள் இருப்பதை தரிசிக்கலாம். ஒன்று ஆதிகாலத்தில் அணிந்திருந்த தாடங்கம்.

மற்றொன்று ஆதிசங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரரூபமான தாடங்கம்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி இங்கு மகாதுர்க்கா, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று தேவியர் இணைந்த அகிலத்தின் நாயகியென போற்றப்படுகிறாள். சக்தி பீடங்களில் திருவானைக்கா வாராஹி பீடமென்பர். சதிதேவியின் முகவாய்க்கட்டை விழுந்த இடம். இங்கு ஒவ்வொரு நாளும் காலையில் பார்வதி அலங்காரத்திலும், நண்பகலில் மகாலட்சுமி அலங்காரத்திலும், இரவில் வெண்ணிறஆடை அணிந்து சரஸ்வதி கோலத்திலும் காட்சிதருகிறாள் ஈஸ்வரி.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மூலவருக்கு ஆடி மாதப் பௌர்ணமியன்று, காலை 10.15 முதல் 12.15 வரை நடக்கும் உச்சிக்காலப் பூஜையின்போது பூணூல் சாற்றப்படுகிறது. இது தனிச்சிறப்பு என்பர். இந்தக் கோலத்தில் ஈஸ்வரியை வழிபட, பெண்கள் தீர்க்கசுமங்கலி பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம்.

உச்சிக்கால பூஜையின்போது, அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனைப் பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே பூஜை செய்வதாக ஐதீகம். ஆடிப்பௌர்ணமியன்று இத்திருக்கோவில் விழாக்கோலம் காணும்.

ஆகாயத்தலமென்று போற்றப்படுவது சிதம்பரம். இந்த திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப்பெருமான் அருள்புரிகிறார். இத்திருக்கோவிலில் அன்னை சிவகாமசுந்தரி, சின்னஞ்சிறு பெண்போல் சிற்றாடை இடையுடுத்தி சிவகங்கை குளத்திற்கு மேற்கே, இரண்டு பிராகாரங்களுடன் தனிக்கோவில் கொண்டுள்ளாள். இதுதவிர, பஞ்சாட்சரப் படிகளின்மீது ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரியும் சித்சபையிலும், உற்சவ விக்ரகமாய் அருளாசி வழங்குகிறாள் அன்னை.

ஸ்ரீநடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை போன்ற திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடந்தாலும், ஆடிப் பௌர்ணமியன்று சிவகாம சுந்தரிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால், அன்று பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இந்த நாளில் சிவகாம சுந்தரியை தரிசித்தால், வீட்டுக்கு அடங்காத கணவர்கள் மனம்திருந்தி மனைவியை மதித்து நடப்பார்கள் என்பது ஐதீகம். இதன்காரணமாக இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் பெருமளவில் அன்னையை வணங்க வருவார்கள்.

பஞ்சபூதத் தலங்களில் வாயு (காற்று) தலமாகப் போற்றப்படுவது ஸ்ரீகாளஹஸ்தி (திருக்காளத்தி).

இத்திருக்கோவிலின் அம்பிகை ஞானப் பூங்கோதை  என்றும், ஞானப்பிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பிகையின்முன், சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட "அர்த்தமேரு' உள்ளதைக் காணலாம். அம்பிகையின் இடுப்பிலுள்ள ஒட்டியாணத்தில் கேது பகவானின் உருவம் காணப்படுகிறது.  சந்நிதிக்கு வெளியில், பிராகாரத்தின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை அணிவிக்கப்படுகிறது.

இத்தலம் சக்தி பீடங்களில் புவனேஸ்வரி பீடமாகப் போற்றப்படுகிறது. இங்கு ஆடிப்பௌர்ணமியன்று அம்பிகைக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெறுவதுடன், வைரமூக்குத்தியும் தங்கப்பாவாடையும் அணிவிப்பார்கள். இந்த திருக்கோலத்தினை தரிசித்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும்; பதினாறு வகையான பேறுகளும் பெற்று வளமுடன் வாழலாம்.

இத்திருக்கோவிலின் இறைவன் ஸ்ரீகாளத்தீஸ்வரநாதரின் கருவறையில், மற்ற தீபங்களெல்லாம் நின்று ஒளிவிடும்போது, ஒரு தீபம் மட்டும் ஆடிக்கொண்டே இருக்கும். கருவறையின் கதவுகளை காற்றுப் புகாவண்ணம் மூடினாலும் அந்த தீபம் மட்டும் அசைந்துகொண்டிருக்கும் அற்புதத்தைக் காணலாம். மேலும், இங்கு தீர்த்தப் பிரசாதம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது. இத்தலம் நாகதோஷ (ராகு- கேது) பரிகாரத்தலமாகத் திகழ்வதால், தினமும் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகளும், யாகங்களும் அம்பிகையின் முன் நடைபெறுகின்றன. அதற்குரிய கட்டணத்தைக் கோவிலில் செலுத்தி பக்தர்கள் அந்த தோஷப் பரிகாரப் பூஜையில் கலந்துகொண்டு நலம் பெறுகிறார்கள். மேலும் ஆடிப்பௌர்ணமியன்று ஸ்ரீஞானப் பூங்கோதை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

திருவண்ணாமலை, பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலம். இங்கு ஸ்ரீஅண்ணாமலையார் புகழ்பெற்றுத் திகழ்கிறார்.

இங்கு அருள்புரியும் அபிதகுஜாம்பாள் என்னும் உண்ணாமுலை அன்னை ஈசனைக் குறித்து தவமிருந்தாள். அதனால் மகிழ்ந்த இறைவன், கார்த்திகைத் தீபத்திருநாளில் ஜோதி உருவாய் மலைமீது காட்சிதந்து, அம்பிகைக்கு தன் இடப்பாகத் தினை அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

இத்தலத்தில் ஒவ்வொரு பௌர்ணமியும் சிறப்பிக்கப்படுவது யாவரும் அறிந்ததே. அம்பிகைக்குரிய ஆடிப்பௌர்ணமியன்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெறும். இந்நாளில் தம்பதி சமேதராக அம்பாளை வழிபட்டால் கணவன்- மனைவிக்குள் அன்பு மேலிடுவதுடன், குடும்பத்தில் ஒற்றுமையும் ஏற்பட்டு, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வில் மகிழ்ச்சி காண்பர் என்பது ஐதீகம்.

மேற்கண்ட ஐந்து தலங்களில் அருள்புரியும் அம்பாளை ஆடிப்பௌர்ணமி நாளில் தரிசிக்க இயலாதவர்கள், தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்று அம்பாளை வழிபட்டாலும், சகலபாக்கியங் களும் பெற்று நலமுடன் வாழலாம்.


 

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்!


மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சக்தி பீடங்களில் முதன்மையானது.

ராஜமாதங்கி சியாமளா பீடம் என்றழைக்கப்படுகிறது.



மூலவரான மீனாட்சியம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லாலானது. தமிழகத்தில் மீனாட்சி சுந்த ரேஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் 366 கோவில்கள் உள்ளன. அதில் இக்கோவில்தான் முதன்மைக் கோவிலா கும். கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவ்வாலயம் இந்திய அதிசயங்களில் ஒன்றாகிவிட்டது.

பெரும்பாலான கோவில்களில் இறைவன் கிழக்கு முகமாகவும் இறைவி தெற்கு நோக்கியும் கோவில் கொண்டிருப்பர். ஆனால் மதுரையில் சுவாமியும் (சொக்கர்) அம்பிகையும் (மீனாட்சி) கிழக்கு நோக்கியே காட்சி தருகின்றனர்.

மதுரை தமிழகத்தின் 2-ஆவது பெரியநகரம். இது தூங்காநகரம் என பெயர் பெற்றது. இவ்வாலயம் கலையழகும், சிலையழகும், சிற்பத்திறனும், சித்திரவனப் பும் கொண்டது. நாத அமைப்பு கொண்ட தூண்களை உடையது. மூர்த்தி, தலம், தீர்த்தப்பெருமை கொண்டது. கடம்ப மரமும் வில்வ மரமும் தல விருட்சம். பொற்றாமரைக் குளம், வைகை நதி, கிருதமாலை, கொண்டாழி, தெப்பக் குளம், புறந்தொட்டி, நிர்மால்ய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்களாகும். சிறப்பு- மதுரைமல்லி, தாழம்பூ, குங்குமம், பிட்டு பலகாரம்.

பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்திரங்களாக இடம்பெற் றுள்ளன. இதே 64 திருவிளையாடல்கள் சுவாமி கோவில் மகாமண்டபத்தில் வண்ணச்சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன.

திருக்குறள் பெருமையை நிலைநாட்டிய சங்கப் பலகை தோன்றிய இடம் பொற்றாமரைக் குளம்தான். இக்குளத்தின் தென்புறச் சுவரில் 1,330 திருக்குறளும் வெண்சலவைக் கற்களில் பொறித்துப் பதித்துள்ளனர். இக்குளத்தில் இப்போது திருப்பனந்தாள் மடத்தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நம்பித் தம்பிரான் செய்தளித்த உண்மையான பொற்றாமரையையே மிதக்கவிட்டுள்ளனர்.

ராஜசேகர பாண்டியன் விருப்பப்படி நடராசர் தன் கால் மாற்றி ஆடிய தலமிது. அதுதான் வெள்ளி சபை என்ற ரஜத சபை. இது பஞ்ச சபைகளில் ஒன்று. பெயருக்கேற்றாற்போல் சந்நிதி முழுவதுமே வெள்ளியாலானது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த வெள்ளி வேலைப்பாடு கள் அனைத்தும் ஒரு முஸ்லிம் சிற்பியால் செய்து தரப் பட்டதுதான்.

மேலும் இவ்வாலயத்தில் பஞ்ச சபைகளும் உள்ளன. முதல் பிராகாரத்தில் கனகசபையும், ரத்ன சபையும்; வெள்ளியம்பலத்தில் ரஜதசபையும்; நூற்றுக்கால் மண்டபத்தில் தேவசபையும்; ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திர சபையும் அமைந்துள்ளன.

ஆயிரங்கால் மண்டபத்தில் ஒலியெழுப்பும் சிலைகள் பலவுள்ளன. அத்துடன் ஏழு இசைத்தூண்களும் உள்ளன.

இங்கு முக்கியமான இடம் திருமலை நாயக்கர் கோவிலிலுள்ள நூல் நிலையம். ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்தைத் தரிசித்து மீனாட்சியம்மன் அருளைப் பெறுவது அவசியம்.

இவ்வாலயத்தில் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் மிகவும் உயரமானது தென்கோபுரம். உயரம் 160 அடி. இதில் 1,511 சிற்பங்கள் உள்ளன.

மேலை கோபுரத்தில் 1,124 சிற்பங்களும்; கீழை கோபுரத்தில் 1,011 சிற்பங்களும்; வடகோபுரத்தில் 404 சிற்பங்களும்; விமானத்தில் 174 சுதைச் சிற்பங்களும் என மேலும் பல சிற்பங்களுடன் மொத்தம் 4,224 வண்ணச் சிற்பங்களைக் காணலாம். அத்துடன் ஆலயத்தில் 264 சுவாமி சிலைகளும் உள்ளன.
தெப்பக் குளத்தில் கிடைத்த ஏழு அடி உயர முக்குறுகுணிப் பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசி மாவால் மிகப்பெரிய கொழுக்கட்டை செய்து விநாயகர் சதுர்த்தி யன்று படைப்பார்கள். அம்மனுக்கு 15 திருப்பெயர்களும் சுவாமிக்கு 14 திருப்பெயர்களும் உள்ளன. ஆலய பிரசாதம் பிட்டுதான்!

மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை எழுந்தருளலும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களாகும்.


 

மகிமை பொருத்திய ஆடி அமாவாசை!

ரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்குநோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை). ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும்.
ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும்  சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை. தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.
அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே, அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப் பிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவையாகும். இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும், அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள் தரிசித்திருப்பார்கள். கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டாக்கள் (வேதவிற்பன்னர் கள்) காட்டுவர்.
ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
அன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.
எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபடவேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூயைறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சௌபாக்கியங்களுடன் வாழ்வர்.


 

ஆடி அமாவாசை விரத கதை!

 
ஆடி அமாவாசை  பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.

அன்றைய தினம் ஒரு கதையைப் படித்தபிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.

விரதம் சரி… அது என்ன கதை?

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்தயாத்திரை மேற்கொண்டான். அதன்பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, “உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்’ என்று கூறியது.

அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, “உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்’ என்ற குரல் கேட்டது.

இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம்முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது,  பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம்பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.
அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும்வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விடிந்தபின் தன் கணவன் இறந்துவிட்டானென்ற உண்மை தெரியவந்தது. அழுதாள்… அரற்றினாள்… தவித்தாள்… தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.

உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்துகிடந்த இளவரசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.

இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், “இருண்டுபோன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினாள்.

மகிழ்ந்த அம்பிகை, “ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்’ என சொல்லி மறைந்தாள்.


 
 

ராஜ யோகம் அருளும் ராஜகுரு!

 


குரு தலங்களாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகியவை விளங்குகின்றன. இவற்றுள் திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


பிரளய காலத்தில் அழியாமல் இருந்து, மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். வசிஷ்ட முனிவர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து தவம் இருந்து இறைவனை வழிபட்டுள்ளார். ஆதலால் இந்த தலம் வசிஷ்டாஸ்ரமம் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தை தென்குடித்திட்டை என்றும் அழைப்பர்.



பஞ்சலிங்க தலம் :

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ஸ்ரீவயம்பூதேஸ்வரர் என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.



மங்களம் தரும் மங்களாம்பிகை :

மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்று அழைக்கின்றனர். சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.

இறைவி, இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளார். சிவன் இல்லையேல் சக்தியில்லை. சக்தியில்லையேல் சிவன் இல்லை. ஆண், பெண் சமத்துவத்திற்கு அற்புத உதாரணமாக அம்மன் இத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார். அம்மன் சன்னிதிக்கு எதிரே விமானத்தில் மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தோஷம் நீங்க தங்கள் ராசிக்கு கீழே நின்று அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.



குரு பகவான் :

நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.



இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங் களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு. நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.



இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



இறைவன் மீது சொட்டும் நீர்:

நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.

திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

மகாவிஷ்ணு உருவாக்கிய தீர்த்தம் :

இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன.

மகாவிஷ்ணு ஒரு சமயம் யோக நித்திரையில் இருக்கும் போது, மது, கைடவர் என்ற இரு அரக்கர்கள் தோன்றி தேவர்களை துன்புறுத்தினர். நித்திரை அகன்று எழுந்த மகாவிஷ்ணு, அசுரர்களை எதிர்த்து போர் புரிந்தார். அப்போது விஷ்ணு தன் பலம் குறைவதை உணர்ந்தார். தன் பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் பலம் ஏற்பட்டு அரக்கர்களை அழித்தார். மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட குளம் ‘சக்கர தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.



குரு கிரக பரிகாரங்கள் :

வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம்.

மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ‘அடாணா’ ராகத்தில் குருபகவானின் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்வதும் நலம் தரும். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.

அமைவிடம் :

தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திட்டை என்னும் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியில் இருந்து திட்டைக்கு சாலை பிரிந்து செல்கிறது. தஞ்சையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.





புதாஷ்டமி விரதம்!

சிவ மகா புராணத்தில் அஷ்டமி விரதம் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அஷ்டமி என்பது எட்டாவது திதி. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இந்த விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும். அஷ்டமி நாட்களில் தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத்தரும் அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றும் சிவபுராணம் கூறுகிறது.

கவுசிகன் என்பவன் மிக விலையுயர்ந்த எருது ஒன்றினை வளர்த்து வந்தான். அந்த எருது ஒரு சமயம் காணாமல் போய்விட்டது. காணாமல் போன எருதைத் தேடி புறப்பட்டான் கவுசிகன். அவன் சகோதரியும் உடன் சென்றாள். பல நாட்கள் தேடினார்கள். இறுதியில் ஒரு இடத்தில் குளத்தில் தேவலோகப் பெண்கள் ஜலக்கிரீடை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவர்களிடம் சென்று தங்களுக்குப் பசிப்பதாகவும் பசிக்கு உணவு வேண்டும் என்றும் கேட்டார்கள். அப்போது அவர்கள் விரதம் ஒன்றைப் பற்றி சொல்லி அந்த விரதத்தை மேற்கொண்டால் உங்களுக்கு உணவும் கிடைக்கும் மேலும் காணாமல் போன எருதும் கிடைக்கும் என்றார்கள்.download (1)

தேவலோக பெண்களால் கூறப்பட்ட விரதம் புதாஷ்டமி விரதம். அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் அஷ்டமியாவது புதன் கிழமை அன்று வந்தால் அந்த நாள் புதாஷ்டமி எனப்படும்.

கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்தான் காணாமல் போன காளை கிடைத்தது. அவன் சகோதரிக்கும் நல்ல கணவன் கிடைத்தான். கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்ததால் அரசனானான்.கவுசிகனுடைய பெற்றொர் நரகத்தில் அவதிப்பட்டு கிடந்தார்கள் விரதத்தின் பலனால் அவனுடைய பெற்றொர் நரக வேதனையிலிருந்து விடுபட்டார்கள்.

புதாஷ்டமி விரதமிருந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம் நன் மக்கள் பேறு உண்டாகும் மரணத்துக்குப் பின் பேரின்ப வாழ்வு நிச்சயம்