Tuesday 26 July 2016

ஸ்ரீ சக்ர நாயகிகள்!


ஸ்ரீஆண்டாள் அவதரித்த புனித நாள் ஆடிப்பூரம். இந்த நன்னாளில் அம்மன் கோவில்களும் விழாக்கோலம் காணும். அன்று வளைகாப்பு வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.ஆடிப்பூரத் திருநாளில்தான் அம்பிகை பூப்பெய்தியதாகப் புராணம் சொல்வதால், அன்று வளையல்களால் அம்மனை அலங்கரிப்பதும், அர்ச்சனைத் தட்டுகளில் வளையல்களை சமர்ப்பிப்பதும் நடைபெறுகிறது. இதில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபனம் செய்யப்பட்ட அம்மன் கோவில்கள் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன. காவேரிக்கரையோரம் உள்ள திருவானைக்கா தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தனிச்சிறப்புடன் விளங்குகிறாள்.பொதுவாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது போல வெள்ளி, தாமிரம் ஆகிய உலோகங்களில் ஸ்ரீசக்கர யந்திரம் எழுதி அம்மனின் பீடத்தின்கீழ் அல்லது எதிரில் ஸ்தாபிதம் செய்வார்கள். ஆனால் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு காதுகளில் தாடங்கமாக (தோடுகள்) அணிவிக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகப் போற்றப்படுகிறது.ஆதிகாலத்தில் இந்த அன்னை மிகவும் உக்கிரமாகக் காட்சிதந்தாள். பக்தர்கள் அருகில் சென்று வழிபட பயந்தார்கள். பூஜை செய்யும் அர்ச்சகர்கூட சிறிய கோல்கொண்டு வஸ்திரம் அணிவிப்பதும், மலர் அலங்காரம் செய்வதுமாக இருந்தார்.ஒருசமயம் ஆதிசங்கரர் யாத்திரையாக இத்திருத்தலத்திற்கு வந்தபோது, ஈஸ்வரியின் நிலையை அறிந்து தியானம் மேற்கொண்டார். பிறகு, இரண்டு தாடங்கம் (தோடுகள்) உருவாக்கி மந்திரப் பிரயோகம் செய்து, ஈஸ்வரியின் காதுகளில் பொருத்தினார். ஒன்று ஸ்ரீசக்கரம் அமைந்த தாடங்கம்; மற்றொன்று சிவசக்கரம் அமைந்தது. மேலும், ஈஸ்வரியின் எதிரில் விநாயகரையும், சந்நிதியின் பின்புறம் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்து பூஜைசெய்யவே, ஈஸ்வரியின் உக்கிரம் முழுமையாகக் குறைந்து, தேவியின் பார்வை குளிர்ந்தது. இதன்பின் பக்தர்கள் நெருங்கிச் சென்று அன்னையை வழிபட்டு அருள்பெற்று வருகின்றனர். ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீவித்யாபூஜை முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. அத்துடன் ஆடிப்பூரத்தன்று சிறப்பு வழிபாடுகள் செய்தும் வளையல்களை சமர்ப்பித்தும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

இத்தலம் மட்டுமின்றி வேறு பல திருத்தலங்களிலும் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிதம் செய்திருக்கிறார்.தர்மபுரி மாவட்டம், தகடூர் கோட்டைத் திருத்தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம். ஆதியில் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் என்று அழைக்கப்பட்டது. இங்கு லிங்க வடிவில் அருள்புரியும் சிவபெருமான் பாணாசுரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது புராண வரலாறு. துர்வாசர், கௌசிகர், காசிபர், அகத்தியர், பரத்வாஜர் ஆகிய ஐந்து முனிவர்களாலும்; இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்டதிக் பாலகர்களாலும்; பஞ்சபாண்டவர்களாலும்; ஐராவதம் என்ற தேவ யானையாலும்; யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோராலும் வழிபடப்பட்ட திருத்தலம். குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலில், காஞ்சியில் தவமிருந்த யோக காமாட்சி சிவசக்தி ஐக்கிய நிலையில் யோக சக்தியாக தனிச்சந்நிதியில்  அருள்புரிகிறாள். ஸ்ரீகாமாட்சியம்மன் சந்நிதி 18 படிகள் கொண்ட உயர்ந்த மேடையின்மீது அமைந்துள்ளது. பிற ஆலயங்களில் ஸ்ரீசக்கரம் அம்மனுக்கு முன்பாகவோ, கீழ்ப்பகுதியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இங்கு அம்மன் சந்நிதியே ஸ்ரீசக்கர வடிவமான மேருவின்மீது நிறுவப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் ஆடிப்புரத் திருநாளன்று வளைகாப்பு வைபவம் மிகச்சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது.காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயக் கருவறையில், "வசின்யாதி வாக்தேவதைகள்' வீற்றிருந்து அருளும் ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சி மாநகரமே சக்கர வடிவில் அமைக்க ஆதிசங்கரர் அருள்புரிந்திருக்கிறார்.காசியில் (வாரணாசி) உலக மக்களுக்கு அன்னமளிக்கும் ஸ்ரீஅன்னபூரணி அருள்புரியும் கோவிலிலும் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். இதேபோல் கேரளாவில் கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோவிலிலும் அமைத்துள்ளார். சென்னைக்கு அருகே மாங்காடு தலத்தில் அருளும் தவக் காமாட்சியம்மன் அர்த்தமேரு, மகாமேரு, மகாசக்கர வடிவினளாக அருள்புரிகிறாள். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாக அமைத்து, அதன்மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட, தாமரையும், அதற்கு மேல்புறத்தில் ஸ்ரீசக்கர யந்திரமும் அமைக்கப்பட்டுள்ளன. 43 தேவதைகளைக் குறிக்கும் விதத்தில் 43 முக்கோணங்களைக் கொண்டுள்ளது. இதுபோல் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே அமைந்துள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்துள்ளன.

பொதுவாக ஆடிப்பூரத் திருநாளில் அம்பிகைக்கு ருது ஸ்நான வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு, பல அம்மன் கோவில்களில் கண்ணாடி வளையல்களை அடுக்கி சுவாசினி பூஜை நடைபெறும். அந்தவகையில், சென்னை திருவல்லிக் கேணி எல்லையம்மன் கோவிலில் வளையல் சாற்று விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த பழமையான ஆலயத்தில் ஆடி மாதம் பிரம்மோற்சவம் பதின்மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.மனம்போல் மணாளன் அமையவும், வாரிசுகள் வளமுடன் தொடரவும் பிள்ளைவரம் பெற்றுத்தரும் திருநாள் ஆடிப்பூரம். இந்த நன்னாளில் தங்கள் வீட்டில் நடைபெறும் விழாவாகக் கருதி, பக்தர்கள் வளைகாப்பு வைபவத்தை நிகழ்த்துகிறார்கள்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள வளைகாப்பு மண்டபத்தில், ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் உள்ளே அம்பாளுக்கு எதிரில் தீமிதி வைபவமும் நடைபெறும். இதுபோல வேறெங்கும் காணமுடியாதென்பர்.மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா "முளைக்கொட்டுவிழா' என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிராகாரத்திற்கு "ஆடி வீதி' என்றே பெயர்.திருநெல்வேலியில் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ஆலயத்தில் அம்பிகைக்கு "பூரம் கழித்தல்' எனப்படும் ருது ஸ்நான வைபவமும், வளைகாப்பும் சிறப் பாகக் கொண்டாடப் படுகிறது.நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் ஆலயம் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், சிவபெருமானின் ஏழு தியாக க்ஷேத்திரங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது. இங்கு நீலாயதாட்சியம்மன் கன்னி தெய்வமாக அருள்புரிகிறாள். ஆடிப்பூரத் தன்று அம்பிகைக்கு ருது ஸ்நான வைபவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒன்பது கன்னிப் பெண்களை வரிசையாக உட்காரவைத்து நலங்கிட்டு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம், பூ, சீப்பு, குங்குமச்சிமிழ், ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்குகிறார்கள்.திருக்கருகாவூர் அம்மனுக்கும் இதுபோல் ருது சாந்திவிழா நடைபெறுகிறது. அப்போது மங்கையர்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்துப் பெற்றுக்கொள்கிறார்கள்.திருச்சி உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள குங்குமவல்லி அம்மனுக்கு தைமாதம் மூன்றாம் வெள்ளிக் கிழமை வளையல் சாற்று அலங்காரம் மிகச்சிறப்பாக நடந்தாலும், ஆடிப்பூரத்தன்று கன்னியர்களும், குழந்தை வரம் வேண்டிக் காத்திருக்கும் தம்பதிகளும், சுகப்பிரசவம் வேண்டி வழிபடும் கர்ப்பிணிகளும் அம்மனுக்கு வளையல்களை பூஜைத்தட்டில் வைத்து அர்ச்சித்து, அதனைப் பிரசாதமாகப் பெற்று கைகளில் அணிந்துகொள்வர்.திருச்சி, தில்லை நகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள அன்னை சாரதாம்பாளுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் கண்ணாடி வளையல்களால் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையில் அலங்கரிப்பர். வளையல் அலங்காரத்தில் அம்பாள் மூன்று நாட்களுக்குக் காட்சிதருவாள். அம்பாளின் எதிரிலுள்ள ஸ்ரீசக்கர மேட்டையும் வளையல்களால் அலங்கரித்திருப்பர். பிறகு இவ்வளையல்களைப் பிரசாத மாக பெண்களுக்கு வழங்குவர்.மேலும், ஆடிப்பூரம் ஸ்ரீஆண்டாளுக்குரிய நாளாகவும் போற்றப்படுவதால், ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் விழாக்கோலம் காணும். பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் ஆகியன மிகச்சிறப்பாக நடைபெறுகின் றன. அந்த உற்சவத்தின் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருடசேவை தரிசிக்கத்தக்க ஒன்று. அப்போது, ஸ்ரீரங்கமன்னாருடன் சுற்றுவட்டாரக் கோவில்களில் அருள்புரியும் நான்கு பெருமாள் உற்சவர்களும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள். 7-ஆம் நாளன்று ஆண்டாள் மடியில்  தலைவைத்து ஸ்ரீரங்கமன்னார் சயனித்திருக்கும் காட்சியை தம்பதி சமேதராக தரிசிக்க, வாழ்வில் என்றும் சுகம் பெறலாம் என்பர். தேரோட்டத்தின்போது மதுரை கள்ளழகர் கோவிலிலிருந்து அனுப்பப்படும் பட்டுப்புடவையையே ஆண்டாளுக்கு சாற்றியிருப்பார்கள். ஆண்டாள் பவனி வரும் 75 அடி உயரம் கொண்ட திருத்தேர் கலையம்சம் கொண்டது. திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை வழிபட்டால் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்ல இயலாதவர்கள், அருகிலுள்ள பெருமாள் கோவிலில் அருள்புரியும் ஸ்ரீஆண்டாளை ஆடிப்பூரத்தில் தரிசித்தாலும் பலன் கிட்டும். அன்றைய தினம் சுமங்கலிகள் விரதம் மேற்கொண்டு  ஸ்ரீஆண்டாளை வழிபட, குடும்பத்தில் என்றும் சுகம் நிறைந்திருக்கும் என்பர்.

 

No comments:

Post a Comment