Friday, 19 August 2016

விரும்பிய நல்ல வேலை கிடைக்க !

ஐராவத கஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடினம்
ஸஹஸ்ர நயனம் சக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத்!

-
ஸ்தோத்ர கதம்பம் (இந்திரன் துதி)

பொதுப்பொருள்:

பாற்கடலிலிருந்து தோன்றிய வெள்ளை யானையான ஐராவதத்தை வாகனமாகக் கொண்டவரே, இந்திரா நமஸ்காரம். தங்க நிற கிரீ டத்தைத் தரித்தவரே, ஆயிரம் கண்கள் கொண்டவரே, சக்கரம், வஜ்ராயுதத்தை ஆயுதங்களாகக் கொண்டவரே, தேவேந்திர பட்டினத்திற்குத் தலைவரே, நமஸ்காரம்.


(இத்துதியை தினமும் கூறி வர, அவரவர் தகுதிக்கேற்ப, உரிய, விரும்பிய வேலை கிடைக்கும்.)


21 விதை தூவுங்க! டிரான்ஸ்பர் வாங்குங்க!

விருப்பமான இடத்திற்கு டிரான்ஸ்பர் பெற விரும்புவோர் ஒரு வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம். அதிகாலையில் சூரியன் உதயமாவதற்கு முன் எழுந்து நீராடி தூய உடை உடுத்துங்கள்.

உதயமாகும்போது, கிழக்கு நோக்கி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். அப்போது காய்ந்த மிளகாயின் 21 விதைகளை சூரியனுக்கு பக்தியுடன் சமர்ப்பியுங்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். அப்போது, சூரியனுக்குரிய 12 மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.

ஓம் ஆதித்யாய நமஹ

ஓம் திவாகராய நமஹ

ஓம் பாஸ்கராய நமஹ

ஓம் ப்ரபாகராய நமஹ

ஓம் சஹஸுத்ர்ஷனவே நமஹ

ஓம் த்ரிலோசனாய நமஹ

ஓம் ஹரிதாஸவயே நமஹ

ஓம் விபாவஷே நமஹ

ஓம் தினக்ருதே நமஹ

ஓம் த்வாதசேத் மகயே நமஹ

ஓம் த்ரையி மூர்த்தயே நமஹ

ஓம் சூர்யாய நமஹ என்று சொல்லி வணங்குங்கள்.

சூரியன் அருளால் விரைவில் விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனிதனை அதிகாரப் பதவியில் அமர்த்தும் கிரகம் சூரியன். எனவே, வேலை சார்ந்த சிரமங்களைச் சந்திப்போர் எல்லாருமே இந்த வழிபாட்டைச் செய்யலாம்.


பதவி உயர்வைத் தரும் மந்திரம்

மந்திரம் 1:

சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம்

அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்


மந்திரம் 2:

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்

ச் ரீயம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜீஷதாம்

இந்த இரண்டு மந்திரங்களையும் ஜபிக்கும்போது,லட்சுமியை வெள்ளைத் தாமரை மற்றும் குங்குமப்பூவால் அர்ச்சிக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி/பதவி உயர்வு கிடைக்கும்.இந்த வழிமுறையை நமக்கு சித்விலாஸ விருத்தி என்ற நூல் சொல்லுகிறது.


 

Friday, 12 August 2016

திருச்சானூர் பத்மாவதி!

வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன்.

மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம்.

பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்தாராம். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை. தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள்.

தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம். திருமலை வேங்கடவனை  தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.

பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், ‘உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல்மங்கைக்கும் நல்வரவு’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது.

அலர்மேல்மங்கையின் தங்கத்தேர், வெள்ளித்தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்கச் செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம். கல்யாண விருந்து தயாரானவுடன் நிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை  அஹோபிலம் நரசிம்மருக்கு இருவரும் அந்த திசை நோக்கி  வைத்து நிவேதித்தார்களாம்.

‘வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ’ எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம். கீழ்த் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சானூர் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது.

 

ஆனந்த வாழ்வளிக்கும் ஆவணி ஞாயி!று!

 ஆவணி ஞாயிறு

நவக்கிரகங்களின் நாயகனாக இருப்பவர் சூரியன். இவர் மற்ற கிரகங்களுக்குச் சக்தியை அளிக்கும் வல்லமை பெற்றவர். சூரியனின் அருளைப் பெற விரும்புபவர்கள் சூரியனுக்குரிய ஆவணி மாதத்தில் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரியனுக்கு விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்வதோடு, ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை நேரத்தில் கோதுமை தானமும், ஏழு குதிரைகளுக்கும் ஏழுபிடி கொள்ளு தானமும் செய்துவந்தால் வாழ்வில் வசந்தம் வந்து சேர வழிபிறக்கும்.

சூரிய வழிபாட்டிற்கு விரதம் இருக்க உரிய நாள் ஆவணி ஞாயிற்றுக்கிழமை.

சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை நாளில் விரதமிருந்து வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தப்பிக்க இயலும். சூரியன் ஜாதகத்தின் பித்ருகாரகன் ஆவார். எனவே தினமும் நீராடியவுடன் கிழக்கு திசையை நோக்கிச் சூரிய பகவானை நமஸ்கரிப்பது அவசியமாகும்.நவக்கிரக சன்னதியில் நவகிரகங்களின் நடுநாயகமாக விளங்கும் சூரிய பகவானையும் வழிபடலாம். அதற்கும் மேலாக அதிகாலையில் சூரிய வணக்கம் செய்வது சூரிய பகவானின் அருளைப் பெறுவதற்குரிய மிகச் சிறந்த வழியாகும்.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. . இதனால் தான் ஆவணிமாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.

சூரிய பகவானின் அருளைப் பெறுவதற்கு சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், வாழ்வில் சகல செய்ல்களிலும் வெற்றியை அருளவல்ல அகத்தியர் அருளிய ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயம் துதியை சொல்லி சூரியனை வழிபட வேண்டும்

தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

இந்தியாவில் பாம்பை மூலவராகக் கொண்ட கோயில்கள் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் சில இடங்களிலும் உள்ளன. இந்தக் கோயில்களில் ஆவணி ஞாயிறு விழா விசேஷம். இந்நாளில், பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர்.

திருமணமாகாத பெண்கள் நல்ல மணமகன் வேண்டியும், திருமணமானவர்கள் சுமங்கலி பாக்கியும் வேண்டியும் நோற்பது ஆவணி ஞாயிறுவிரதம். இந்நாளில் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். புற்றுக்கு பால் ஊற்றலாம்.

 நாகர் சிலைக்கு  சந்தனம், மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து, அனந்தன், வாசுகி, கிஷ்காலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிகன், பத்மன் ஆகிய நாக தேவர்களின் பெயர்களை உச்சரித்து புற்றுக்கு பால், முட்டை ஊற்றி வழிபடுவர்.

அனந்தன், வாசுகி, கிஷ்காலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிகன், பத்மன்
 என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி இந்த நாளில் வேண்டிக்கொள்ளலாம்.  அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம். நாகர்கோவில் நாகராஜா கோவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில் மற்றும் கொழுவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், திருநாகேஸ்வரம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களுக்குச் சென்று சுவாமியை வணங்கி வரலாம்.

அரசமரத்தடியிலுள்ள நாகர் சிலைகளைத் தரிசிக்கலாம்.



 

வரலட்சுமி விரதம்!

வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ் விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும். 
 
ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  
சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது. மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) இந் நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ் விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் இலக்குமிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள். இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.


உள்ளத் தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால்; அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால்,  இல்லத்தில் செல்வம் கொழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுழுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் "பாக்கிய இலட்சுமியின்" அருளினால் மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் (குடும்பப் பெண்கள்) எல்லோரும் விரும்பிப் அனுஷ்டிக்கின்றனர். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் செல்லவச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.


மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். இலட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவளும் என்றும், பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.


 அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருந்து அவளைப் பூஜித்தால் எல்லா எல்லாப் பலன்களும் கிடைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.



விரத அனுஷ்டிக்கும் முறை:


இந்த விரதம் அனுட்டிப்பதற்கு வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.




அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.


சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.


உள்ளத்தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும்.







வரலக்ஷ்மி விரத கதை!



1. சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.
சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். நாளை பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும் வரலாம்.மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.

2. பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.
தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.
விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.
அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக!


Wednesday, 10 August 2016

ஆடி பதினெட்டாம் பெருக்கு!

எண் பதினெட்டு என்பது, வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாக முக்கியத்துவம் பெறுகின்றது. பதினேழு, பத்தொன்பது என்ற இரண்டு ஒற்றைச் சாளர (எதனாலும் வகுக்க முடியாத) எண்களுக்கு இடையில் உள்ள பதினெட்டிற்குக் கோடானு கோடி எண் சக்தி மகத்துவங்கள் உண்டு.

இதனால்தான் எண் 18 ஆனது, அதிசாரம், அதிவேகம், அதிவாரம் போன்ற 18 முக்கியமான சாரங்களை உடைய எண்ணாக விசேஷமாக வழங்கப்படுகின்றது. மூல ஸ்தானத்திற்கு முன் பலகணி துவாரங்கள் கூடிய சுவர் உள்ள சாளரக் கோயில்களிலும், ஒன்பது, பதினெட்டு என்ற வகைகளில் சாளரங்கள் அமைந்திருக்கும்.



அக்காலத்தில் குளத்தின் படிக்கட்டுகள், ஆற்றுப் படிக்கட்டுகளைக் கூட, வாஸ்து இலக்கணங்களுக்கு ஏற்ப மன்னர்கள் அமைத்தமையால்தாம், ஆறுகளிலும், குளங்களிலும் வற்றாத நீர்வளம் பூரித்தது.

தற்காலத்தில் குளத்தைச் சீரமைப்பவர்கள், உத்தமப் பெரியோர்களை,  நாடி, குளம், ஆறு, ஏரிக்கான வாஸ்து இலக்கணங்களை அறிந்து, அதற்கேற்பச் செயல்படுதல் வேண்டும். குளம், ஆற்றின் படிக்கட்டுகள் 18 எண் என்ற வகையில் இருத்தலே சிறப்புடையது.


சபரி மலையிலும் பதினெட்டுப் படிகள் தாமே உள்ளன. பதனம்திட்டா என்ற மலைப் பகுதியில் அமையும் சபரிமலையானது, பதினெட்டுத் திட்டுக்களால் ஆக்கப் பெற்றதாகும். சபரி ஆற்றில் 18 + 28 தலைமுறைகளுக்குத் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். சபரி ஐயப்ப சுவாமி புலிப் பால் கொணர்ந்த வேங்கை 18 அடி நீளமுடையுதாகும்.


ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது மஹா விருத்தி நாளாகச் போற்றப்படுகின்றது. தொட்டதைத் துலங்கி விருத்தி செய்து தரும் நன்னாள். வறண்ட ஆற்றில் புதிதாக நீர் வரும் போது, இவ்வரிய காட்சியை, அதாவது முதன் முதலாக ஆற்றில் நீர் புரண்டு ஓடிவரும் வரும் காட்சிதனைக் காண்பது வாழ்வில் மிகச் சிறந்த பாக்யங்களுள் ஒன்றாகும். அனைவருக்கும் வாழ்வில் இது கிட்டி விடாது. இதற்கான முறையான பூஜைகளும் உண்டு.


வாழ்வில் எது பெருகுதல் வேண்டும், எது மறைதல் வேண்டும், எது மறைந்து தோன்றுதல் வேண்டும், எது முழுமையாகக் களையப் பெற வேண்டும் - என்று பதினெட்டு விதமான தாத்பர்ய விளக்கங்கள் ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும், இந்தப் பதினெட்டு உட்சாரப் பாங்கில் அமைத்து விடலாம்.


இவற்றின் விளக்கங்கள்தாம், தற்போதைய விஞ்ஞானத்தில் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் என்ற மூன்று விதமான அணுக்களாக (தொகுதிகளாக) வகுக்கப்பட்டுள்ளன. இவை எதிர்காலத்தில் 18 ஆக விரிவு பெறும். இவ்வாறு ஒவ்வொரு பொருளின் அணு விளக்கத்தையே ஆ(ற்)றுப் புலம் என்று மெய்ஞ்ஞானத்தில் உரைக்கின்றார்கள்.



இத்தகைய ஷட்புல சக்திகள் ஆடி பதினெட்டாம் நாளில் விருத்தி ஆகின்றன.

ஜோதிடக் கலையில் எண் சாஸ்திரமும் ஒரு முக்கியமான அங்கமே என்பதையே - பிற பண்டிகைகளைப் போல், நாள், திதி,நட்சத்திர வகையில் அல்லாது - தேதி எண்ணை ஒட்டிய இப்பண்டிகை சிறப்புடன் குறிக்கின்றது. இதே போல, தேதி மழை என்ற நாளும் வரும்.


பதினெட்டாம் பெருக்கு நாளன்று, ஓடுகின்ற புண்ணிய நதியைத் தரிசனம் செய்து, இயன்றால் ஓடும் ஆற்று நீரில் நீராடி, பதினெட்டு விதமான பொருட்களை, (எத்தகைய ஏழ்மையில் இருப்பவர்களும்) தானம் செய்து, பெருமாளை வழிபட்டால், பதினெட்டு விதங்களில் பொருட்கள், திரவியங்கள், ஆஸ்திகள் நன்கு விருத்தியாக, த்ரயஷட்காரப் பித்ரு மண்டல தேவதைகள் உதவுவர்.


ஒரு மனிதன் உயிர் வாழ, காற்று, உணவு, ஆடை போன்று பதினெட்டு விதமான மூலதாரப் பொருட்கள் தேவை. இவற்றில் சில விருத்தியாகும், சில குறித்த அளவில் போதுமானது. சிலவற்றில் ஒன்றே ஒன்று இருந்தால் போதும். இவ்வாறு பதினெட்டு வகை மூல ஜீவ சக்திகள் விருத்தியாகும் நாளில், தான்யம், தங்கம், வெள்ளி, பழம், அன்னம், காய், காலணி என்று பதினெட்டு விதமான தானங்களைச் செய்து பயன்பெறுக!



ழையாக, வசதியற்று இருப்போரும் கூட, தன்னிடம் இருப்பனவற்றில் சிலவற்றையாவது தானம் செய்திட வேண்டும். பல்வகைப் பூக்கள், தான்யங்கள், பொரி என 18 வகைகளைச் சிறிதளவிலாவது தானமளித்தல் கடினமானது அல்லவே!

18ஆம் படிக் கருப்பர், 18 படிகளுடன் அருளும் சாஸ்தா / ஐயப்பன், 18 கரங்கள் கூடிய தெய்வ மூர்த்திகள், 18 கோயில் கலசத் தரிசனம், 18 படிகள் உள்ள ஆறு, திருக்குளம் என்றவாறாக - 18 சம்பந்தப்பட்ட வழிபாடுகளை ஆற்றுதலால், குடும்பத்தில் முதியோர்களைப் பேணாது, வயதானோர், முதியவர்களின் சாபங்கள் அகல நல்வழிகள் பிறக்கும்.




உண்மையில் மிகச் சிறப்புடன் வாஸ்து இலக்கணங்களை இப்பூவுலகில் கடைபிடிக்கின்ற ஜீவன் யார் / எது தெரியுமா? நிச்சயமாக மனித குலத்தார் அல்லர்! ஆம், சிறப்பான பட்சியான தூக்கணாங் குருவியே, எந்த மரத்தில், எந்தத் திசையில், எவ்வாறு கூட்டைக் கட்டுவது என்பது முதலாக, தன் கூட்டைக் கட்டுவதில் ஓர் இம்மி கூடப் பிசகாமல், வாஸ்து லட்சணங்களைப் பரிபூரணமாக ஒட்டியவாறு தன் வீட்டுக் கூட்டைக் கட்டிக் கொள்கின்றது என்பது பலரும் அறியாப் பொருளாகும்.


அருணாசல கிரிவலத்திலோ, ஆலய வழிபாட்டிற்குச் செல்லும் போதோ, தம்பதியர் தூக்கணாங் குருவியின் கூடு தரிசனத்தை பெறுதல் உண்மையில் மிகவும் சுபசகுன, மங்களகரமானதாகும். எந்த மரக் கூடு, கூடு தொங்கும் திசை போன்ற நிலைகளைப் பொறுத்துப் பலாபலன்கள் அமையும். எனவே, புது வீட்டிற்கு அஸ்திவாரம் போடுபவர்கள், தூக்கணாங் குருவிக் கூடு உள்ள மரத்திற்குத் தக்க விருட்ச பூஜைகளை ஆற்றி, பதினெட்டு முறை வலம் வந்து வணங்கிய பின் பூஜையை தொடங்குதல் சிறப்பான வாஸ்துப் பலன்களைத் தரும். இதற்காகவே, அக்காலத்தில் புது வீடு கட்டுபவர்கள், விருட்ச பூஜைக்கான திரவியங்களை, ஒரு மஞ்சள் பையில் வைத்தவாறு, தூக்கணாங்குருவி கூடு உள்ள மரத்தைத் தேடிச் செல்வார்கள்.


ஒரு கூட்டைக் கட்ட, தூக்கணாங்குருவிக்கு சுத்தமாகப் பதினெட்டு நாட்களாகும். அதாவது, பதினெட்டாம் நாளில் இது தன் கூட்டிற்குக் கிரகப் பிரவேசம் கொண்டாடும்.

ஸ்வர்ண கௌரி விரத மஹிமை!

ஸ்வர்ண கௌரி விரதம் ஆந்திர, கர்நாடக மற்றும் சில வட மாநிலங்களில் பிரதானமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை, பிரளய காலத்தின் முடிவில், உலகெங்கும் சூழ்ந்திருந்த அலைகடலில் ஒரு ஸ்வர்ண லிங்கம் தோன்றியது. அதில் ஈசனை தேவர்கள் யாவரும் பூஜிக்க, அதிலிருந்து, பொன்மயமான சிவனாரும் உமையம்மையும் தோன்றி அருள் புரிந்தனர்.


இது நிகழ்ந்த நாள், ஆவணி மாதம் வளர்பிறை திருதியை நன்னாளாகும். ஆகவே, அன்று ஸ்ரீ ஸ்வர்ண கௌரியைப் பூஜிக்க, வறுமை, தோஷங்கள் நீங்கும், குலதெய்வப் ப்ரீதி ஏற்படும்.தங்க ஆபரணங்களால் அழகுற அலங்கரிப்பது விசேஷம். இதனால் குடும்பத்தில் தங்கம் வாங்கும் வசதி பெருகி, ஏராளமான தங்க ஆபரணங்களை அணியும் யோகம் அம்பிகை அருளால் கிடைக்கும்.

 
ஸ்வர்ண கௌரி விரத மஹிமை:


இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பௌராணிகர் திருவாய் மொழியாக அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப் படுவதாகிய கௌரி விரதங்களின் முக்கியத்துவம் இதில் மறைபொருளாகப் புலப்படும்.


ஒரு முறை, ஸ்கந்தப் பெருமான், சிவனாரிடம், இந்த விரதக் காரணம் பற்றி வினவ, அவரும் பின் வருமாறு அருளிச் செய்தார்.


முன்னொரு காலத்தில், ஸரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.


ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு தடாக(குள)க் கரையில் அப்ஸரஸ்கள் ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களை அணுகி, 'இந்த விரதம் யாது?, அதன் பலன் என்ன?' என்று கேட்டான். அவர்களும், இது 'ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆவணி மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயையன்று அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும்' என்று கூறி விரதம் அனுஷ்டிக்கும் முறையையும் சொன்னார்கள்.


அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு விரதத்தை முறையுடன் அனுஷ்டித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான். அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான்.


முதல் மனைவி, இதைக் கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள். அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் துவங்கி விட்டது.


இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே, அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே, கணவனின் அன்புக்கு உரியவளாகி விட்டாள்.


முதல் மனைவியோ, அகம்பாவம் கொண்டு தான் செய்த தவறுக்காக, கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள். அவள் கானகம் சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, தேவியைத் துதித்துக் கொண்டே, அங்கிருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களைச் சுற்றி வந்தாள்.ஆனால் முக்காலமும் உணர்ந்த மெய்ஞ்ஞானிகளான முனிவர்கள், தேவியை நிந்திப்பவர்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்பதை உணர்ந்த காரணத்தினால், அவளை அங்கிருக்க ஒட்டாது விரட்டினார்கள்.


பிறகு அவள் இங்குமங்கும் அலைந்து திரியும் வேளையில், ஒரு தடாகத்தின் அருகில் உள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு, அவள் அருகில் சென்றாள். ஆனால் வனதேவதையும் அவளை விரட்டவே, மனம் நொந்து சென்றாள்.


ராணியானவள், எந்த வேளையிலும் கௌரி தேவியைத் துதித்து, மன்னிப்பு வேண்டி வந்த காரணத்தினால், அப்போது, கௌரி தேவி மன மகிழ்ந்து அவள் முன் தோன்றினாள். உடனே, ராணியும், ஆனந்தக் கண்ணீர் பெருக, மனம் உருக, தேவியைப் பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, கௌரி தேவியிடம் சௌபாக்ய வரம் பெற்று நாடு திரும்பினாள்


அங்கு தேவியின் அருளால், அரசன் அவளை மிகப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். அவளும், சகல சுகங்களையும் முன் போல் அனுபவித்து சிறப்புற வாழ்ந்தாள்.


எனவே, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும்.


இக பர நலன்களை அடைந்து வளமாக வாழ்வர்.