Friday 12 August 2016

ஆனந்த வாழ்வளிக்கும் ஆவணி ஞாயி!று!

 ஆவணி ஞாயிறு

நவக்கிரகங்களின் நாயகனாக இருப்பவர் சூரியன். இவர் மற்ற கிரகங்களுக்குச் சக்தியை அளிக்கும் வல்லமை பெற்றவர். சூரியனின் அருளைப் பெற விரும்புபவர்கள் சூரியனுக்குரிய ஆவணி மாதத்தில் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரியனுக்கு விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்வதோடு, ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை நேரத்தில் கோதுமை தானமும், ஏழு குதிரைகளுக்கும் ஏழுபிடி கொள்ளு தானமும் செய்துவந்தால் வாழ்வில் வசந்தம் வந்து சேர வழிபிறக்கும்.

சூரிய வழிபாட்டிற்கு விரதம் இருக்க உரிய நாள் ஆவணி ஞாயிற்றுக்கிழமை.

சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை நாளில் விரதமிருந்து வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தப்பிக்க இயலும். சூரியன் ஜாதகத்தின் பித்ருகாரகன் ஆவார். எனவே தினமும் நீராடியவுடன் கிழக்கு திசையை நோக்கிச் சூரிய பகவானை நமஸ்கரிப்பது அவசியமாகும்.நவக்கிரக சன்னதியில் நவகிரகங்களின் நடுநாயகமாக விளங்கும் சூரிய பகவானையும் வழிபடலாம். அதற்கும் மேலாக அதிகாலையில் சூரிய வணக்கம் செய்வது சூரிய பகவானின் அருளைப் பெறுவதற்குரிய மிகச் சிறந்த வழியாகும்.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. . இதனால் தான் ஆவணிமாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.

சூரிய பகவானின் அருளைப் பெறுவதற்கு சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், வாழ்வில் சகல செய்ல்களிலும் வெற்றியை அருளவல்ல அகத்தியர் அருளிய ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயம் துதியை சொல்லி சூரியனை வழிபட வேண்டும்

தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

இந்தியாவில் பாம்பை மூலவராகக் கொண்ட கோயில்கள் நாகர்கோவிலிலும், கேரள மாநிலத்தில் சில இடங்களிலும் உள்ளன. இந்தக் கோயில்களில் ஆவணி ஞாயிறு விழா விசேஷம். இந்நாளில், பெண்கள் நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர்.

திருமணமாகாத பெண்கள் நல்ல மணமகன் வேண்டியும், திருமணமானவர்கள் சுமங்கலி பாக்கியும் வேண்டியும் நோற்பது ஆவணி ஞாயிறுவிரதம். இந்நாளில் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். புற்றுக்கு பால் ஊற்றலாம்.

 நாகர் சிலைக்கு  சந்தனம், மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து, அனந்தன், வாசுகி, கிஷ்காலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிகன், பத்மன் ஆகிய நாக தேவர்களின் பெயர்களை உச்சரித்து புற்றுக்கு பால், முட்டை ஊற்றி வழிபடுவர்.

அனந்தன், வாசுகி, கிஷ்காலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிகன், பத்மன்
 என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி இந்த நாளில் வேண்டிக்கொள்ளலாம்.  அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம். நாகர்கோவில் நாகராஜா கோவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில் மற்றும் கொழுவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், திருநாகேஸ்வரம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களுக்குச் சென்று சுவாமியை வணங்கி வரலாம்.

அரசமரத்தடியிலுள்ள நாகர் சிலைகளைத் தரிசிக்கலாம்.



 

No comments:

Post a Comment