Monday 18 January 2016

வியாழனன்று விழி திறக்கும் வேங்கடவன்!

அதிக அலங்காரம் இல்லாத, முக்கால் விழிகளைத் திறந்து பார்த்தபடி தரிசனமளிக்கும் பெருமாளை ஒவ்வொரு வியாழக் கிழமையும் கண்குளிர காணலாம். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர்.

பெருமாள் நம்மை நேரடியாகப் பார்க்கவில்லையே என்ற  ஆதங்கம் மறைந்து அவர் விழிகளில் நாம் நிறைந்திருக்கும் அனுபவத்தால் மெய் சிலிர்ப்பது உண்மை. அலங்காரமும் கவசங்களும் இல்லாமல்  கிட்டத்தட்ட அவரது முழு உருவத்தையுமே நம்மால் தரிசிக்க முடியும். எப்பேர்பட்ட பாக்கியம் இது!

பெருமாளை கொஞ்சம் கிட்டத்தில் சென்று தரிசிக்கும்போது ஒரு படி குறுக்கிடும். விஷயம் தெரிந்தவர்கள் இந்தப் படியை மிதிக்காமல் தாண்டிச்  செல்வார்கள். ஆனால் இந்தப் படிமீது ஏறி நின்றால் பெருமாளை இன்னும் வசதியாகக் காண முடியும் என்பதும் உண்மைதான். இந்தப் படிக்கு  குலசேகரன் படி என்று பெயர். ‘திருச்சந்நதியில் படியாய் அமைந்து உன் பவள வாய் காண்பேனே’ என்று அவர் வேண்டிக் கொண்டதற்கிணங்க,  அங்கே அவர் படியாய் அமைந்திருக்கிறார் என்பது ஐதீகம். இந்தப்  படி, பொன் தகடால் மூடப்பட்டிருக்கிறது.

‘ஜர்கண்டி’ விரட்டலினூடே பெருமாளை ஓரிரு விநாடிகள் தரிசித்து விட்டு, வெளியே வந்தால் மடப்பள்ளி அருகே தீர்த்த பிரசாதம் கொடுக்கிறார்கள்.  சிலசமயம் துளசி தளங்கள் வழங்கி, சடாரியும் சாத்துகிறார்கள். இந்த மடப்பள்ளிக்குள் சென்றால் சமையலை மேற்பார்வையிட்டு, உரிய  ஆணைகளைப் பிறப்பிக்கும் வகுளமாலிகையை தரிசிக்கலாம்.

பிரதட்சணத்தைத் தொடர்ந்தால் உறுதியாக வேலி அமைக்கப்பட்டிருக்கும் நீண்ட மண்டபத்தினுள், பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட  பணம் எண்ணப்பட்டு தொகுக்கப்படுகிறது. இந்தப் பணிக்கு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் சிலரையும் மக்கள் பிரதிநிதியாக சேர்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது; பெருமாளின் கருணையைப் பொறுத்தது.

அடுத்து வலம் திரும்பி வடக்கு பிராகாரத்தை அடைந்தால், அங்கே பலர் மண்டபத்தின் மேலேறி வானோக்கிப் பார்ப்பார்கள். அவர்கள் தரிசனம் காண்பது, விமான வெங்கடேஸ்வரரை. பெருமாளின் ஆனந்த நிலைய விமானத்தில் வைகுண்டவாசனாகக் காட்சியளிக்கும் இந்த  வெங்கடேஸ்வரரைப் பார்த்து, கருவறையில் நிறைவேறாத ஏக்கத்தை இங்கே தீர்த்துக் கொள்ளலாம். இவருக்கு வெள்ளியாலான திருவாசி  அமைத்து அடையாளம் காட்டியிருக்கிறார்கள். அம்புக்குறி வழிகாட்டலும் உண்டு.

அடுத்து, மிக நீண்டதாக பக்தர் வரிசை. ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தும் உண்டியல் காவலர் பாதுகாப்போடு காட்சி தருகிறது. துணியால்  மறைக்கப்பட்ட உண்டியல். மேலே நான்கு புறங்களிலும், கையை உயர்த்தி, விரல்களை மட்டும் விட்டு, காணிக்கைகளைப் போடக்கூடிய அளவுக்கு  சிறு சிறு துவாரங்கள். உண்டியலை வலம் வந்து, பலிபீடம், கொடிமரம் அருகே வந்து, கீழே விழுந்து நமஸ்கரிக்கலாம்.

9ம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஊஞ்சல், 1139 ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட, உபதேச கோலத்தில் காட்சி தரும் ராமானுஜரின் சிலா வடிவம்,  மூலவரின் கர்ப்பகிரகத்திலேயே இருக்கும் ராமர்சீதைலட்சுமணர், விநய ஆஞ்சநேயர், கையில் வெண்ணெயுடன் நர்த்தனமாடும் கண்ணன்  ஆகியோரை நேரடியாக தரிசிக்க இயலாவிட்டாலும், அவர்கள் அங்கிருப்பதாகிய தகவலால் மனசுக்குள் தரிசித்துக்கொள்ளலாம்!

பங்காரு வாசல்  வழியாக வெளியே வருமுன், சின்னம்மா தேவி திருமலா தேவி சமேதராக கிருஷ்ண தேவராயரை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம். 1517ம் ஆண் டு, தான் போரில் வெற்றி பெற்றதன் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இந்த மன்னர் ஆனந்த விமான நிலையத்திற்கு தங்க முலாம்  பூசுவதற்காக 30,000 வராஹன்களைக் காணிக்கையாக செலுத்தியிருக்கிறார். இவருக்கு மரியாதை செய்யும் வகையில், வருடந்தோறும் ஒருநாள்,  பெருமாள் உற்சவராக, இவர் இருப்பிடம் எழுந்தருளுகிறார்.

கோயில் மதில் சுவர்களிலும் பிற பகுதிகளிலும் காணப்படும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் தமிழ் மொழியே பிரதான அங்கம் வகிக்கிறது.  தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்று பல்வேறு தமிழ் நூல்களிலும் திருவேங்கடமுடையான் சிறப்பி க்கப்பட்டிருக்கிறான். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், திருப்பா ணாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் என்று வைணவப் பெருமக்கள், மொத்தம் 204 பாடல்களால் திருமலையை, மலையப்பனைப் போற்றி வணங்கியிருக்கிறார்கள்.

ராமானுஜர் முறைப்படுத்திய ஒழுகுமுறைகள் இந்தக் கோயிலில் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. வைகானச ஆகமப்படி, தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. அவை: சுப்ரபாத சேவை, பிரதான அர்ச்சனை, நண்பகல் வழிபாடு, தோமால சேவை, திருவீசம், ஏகந்த  சேவை.

பொதுவான இந்த ஆறு சேவைகளின் உட்பிரிவுகளாக கொலு பஞ்சாங்க ச்ராவணம், சஹஸ்ரநாமார்ச்சனை, கல்யாணோற்சவம், டோலோற்சவம்,  ஸஹஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஆர்ஜித வசந்தோற்சவம், திங்கட்கிழமைகளில் விசேஷ பூஜை, எட்டு இதழ் தாமரைத்  திருவடி பூஜை (செவ்வாய்கிழமை), ஹஸ்ர கலசாபிஷேகம் (புதன்கிழமை), திருப்பாவாடை, பூலங்கி சேவைகள் (வியாழக்கிழமை), அபிஷேகம்,  நிஜபாத தரிசனம் (வெள்ளிக்கிழமை) என்று பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழிபாடுகளில் முன்கூட்டியே குறிப்பிட்ட  கட்டணம் கட்டியிருக்கும் பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்தப் பட்டியல் தவிர வேறு பல சேவைகளும் உள்ளன.

திருமலை சென்று வேங்கடவனை தரிசிக்கும்வரை கீழ்காணும் வேங்கடேச தியான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்:

ஸ்ரீ சேஷா சலமூர்த்தி வேங்கடபதி: ஸர்வார்த்தத: ப்ராங்முக:
தீர்த்தம் ஸ்வாமி ஸரோ, விமாநமதுலந்த் வானந்த தாமேதிச
ஸ்ரீ வைகுண்ட மபாஸ்ய தத்ர ரஸிகே: பத்மோபரிஸ் தாக்யயா,
நாயக்யாஸ ஹமோத தேத்ரி ஜகதாம் பூத்யை ப்ரஸந்ந: பர:
ஸ்ரீ விஷ்ணு ஸ்தலாதர்சம்

பொதுப் பொருள்: திருமலை என்று பெயர்பெற்ற திருவேங்கடம் எனும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருவேங்கடநாதனே  நமஸ்காரம்.

அலர்மேல் மங்கைத் தாயாருடன், ஆனந்த நிலைய விமான நிழலில், ஸ்வாமி தீர்த்தக் கரையில், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில்  காட்சி தரும் வேங்கடவனே நமஸ்காரம்.

தொண்டைமான் சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்து அருளியவரே, ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து தன்  தேவியுடன், மூவுலகையும் காப்பதற்காக அவதரித்த பெருமாளே நமஸ்காரம்.

No comments:

Post a Comment