Wednesday 24 February 2016

வள்ளி திருமணம்!


(மயிலில் உலகை வலம் வந்தும், மாங்கனியை முருகப்பெருமானால் பெற முடியவில்லை. விநாயகரோ, அம்மையப்பரே உலகம் என்று சொல்லி சிவபார்வதியை வலம் வந்து மாங்கனியைப் பெற்றார். பெற்றோர் மீது கோபம் கொண்ட முருகன் பழநி மலை மீது ஆண்டியாகி நின்றார். அண்ணனான விநாயகர், இச்செயலுக்குப் பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும் விதத்தில், தம்பி முருகன் வள்ளியை மணந்து குடும்பஸ்தனாக வாழ துணை நின்றார். பெரிய மதயானையாக வந்துவள்ளியைத் துரத்தினார். பயந்து போன வள்ளி, "முருகா! முருகா' என்று கூவியபடி ஓடினாள். எதிரில் நின்ற கிழவன் முருகனைக் கட்டியணைத்துக் கொண்டாள். மகிழ்ந்த முருகன் தன் சுயரூபத்தைக் காட்டி வள்ளியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின் நம்பிராஜன் தலைமையில் வள்ளிகல்யாணம் இனிதே நிறைவேறியது.)

முதலில் வள்ளி பிறந்ததைப் பார்ப்போம்

நமக்கெல்லாம் தெரிந்த கதையான வள்ளி கதையில் நம்பிராஜனின் மகளாய்ப் பிறக்கின்றாள் என்று ஒரு கதையும், நம்பிராஜன் கண்டெடுக்கின்றான் என இன்னொரு வகையும் உண்டு.
ஆனால் இந்தக் குமரி மாவட்டக் கதைப் பாடல்களில் சொல்லுவதே வேறே. ரிஷ்ய சிருங்கருக்கும், மற்றொரு பெண் மான் உருவில் இருந்த பெண்ணிற்கும் பிறந்த குழந்தையே வள்ளி. நம்பிராஜன் வேளி மலை அரசன். இவன் மனைவி மோகினி. இவன் வேட்டைக்குச் செல்லும்போது வள்ளிக் கிழங்குகள் சூழ்ந்த தோட்டத்தில் இந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்து வருகின்றான். இந்தக் குழந்தையைச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகின்றனர் நம்பிராஜன் குடும்பத்தில்.
குழந்தை அழுதால் பாடும் பாட்டெனச் சொல்லுவது,

"மானே நீ போட்ட சத்தம் மலக்குறவன் ஓடி வந்து ஓடி வந்து
வள்ளி தனை வளைத்துமே எடுத்தானே வளைத்துமே எடுத்தானே
பெண்பிள்ளை பிள்ளையல்லோ பிள்ளையே ஆயிப்போச்சு
ஆமணக்கு தண்டு வெட்டி  அது நிறையத் தேனடச்சு தேனடச்சு
அமுது பெறும்  நேரமெல்லாம் அமுது பசி அடக்கிவிட்டு
குச்சு போய்ச் சேர்ந்தார்கள்."

என்ற இவ்வாறு ஓடி வந்து வள்ளியாகிய குழந்தையின் அழுகையை அடக்குகின்றார்களாம், குறவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து. நம்பிராஜனுக்கு மகன்கள் நிறையப் பேர். அனைவரும் வள்ளியைத் தங்கள் சொந்த சகோதரி போலவே எண்ணிப் பாசமுடனும், நேசமுடனும் வளர்த்து வந்தார்கள். தினைப்புலத்தில் தினை அறுவடைக்குக் காத்து நின்றது. அங்கே பட்சிகள் வந்து செய்யும் இம்சை தாங்க முடியவில்லை. தன் மருமகள்கள் ஒவ்வொருவரையும் வேண்டுகின்றாள் நம்பிராஜன் மனைவியான மோகினி. ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு காரணம். மறுக்கின்றார்கள். ஒருத்திக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்கணும், ஒருத்திக்குக் குழந்தை பிறக்கப் போகின்றது. இன்னொருத்திக்குத் தலை நோவு. இப்படிச் சொல்ல, அங்கே மெல்ல, மெல்ல மாமியார், மருமகள் சண்டை உதயம் ஆகும்போல் சூழ்நிலை உருவெடுக்கின்றது. பார்த்தாள் வள்ளி, தானே தினைப்புலம் காவல்காப்பதாய்ச் சொல்லிக் கிளம்புகின்றாள். பதறுகின்றாள் மோகினி. ஆஹா, பொன்னைப் போல் போற்றி வளர்த்தபெண்ணாயிற்றே. எப்படி அனுப்புவது?? தயங்கினாள் மோகினி.

அன்னையைத் தேற்றி விட்டுப் புறப்படுகின்றாள் வள்ளி. கூடவே துணைக்குத் தோழிப் பெண்களை அனுப்பினாள் மோகினி. தோழிகள் புடை சூழ தினைப்புலம் வந்து, அங்கே மரத்தின் உச்சியில் தங்குவதற்குக் கட்டி இருக்கும் இடத்தில் தங்கிக் கொண்டு, கையில் ஒரு குச்சியையும் வைத்துக் கொண்டு வரும் பட்சிகளை விரட்டுகின்றாள் வள்ளி.. ஆலோலம், ஆலோலம், ஆலோலம் என்று பாடுகின்றாள் வள்ளி. அவள் ஆலோல சப்தம் கேட்டுப் பட்சிகள் பறந்தனவா? அவளைத் தூக்கிச் செல்ல கந்த பட்சி பறந்து வந்ததா??
வள்ளி தினைப்புலம் காக்க வந்துவிட்டாள். ஏற்கெனவே வள்ளியின் திருமணம் குறித்து அவளின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும், தாயான மோகினியும் கவலையுற்றிருந்தார்கள். ஆனால் நாரத முனியோ அவள் குறிஞ்சிக் கடவுளான முருகனுக்கே உரியவள் எனச் சொல்லி இருந்தார். முருகனாவது, வள்ளியை வந்து மணப்பதாவது! என்ன செய்வது என்றறியாமல் இருந்தனர் நம்பிராஜனும், மோகினியும். இந்நிலையில் வள்ளி தினப்புலம் காக்கச் சென்றாள். அங்கே தோழிகள் புடை சூழ "ஆலோலம்" பாடினாள். ஆடினாள். அப்போது தோழிகள் ஓடி வந்து வள்ளியிடம் வளைச் செட்டி வந்திருப்பதாய்க் கூற , அவனை அழைத்து வருகின்றனர். தோழியர் அழைத்து வந்த வளைச் செட்டியைப் பார்த்து வள்ளி, இவன் என்ன சிறு பிள்ளையாக இருக்கின்றானே என மனதிற்குள் எண்ணினாள். வள்ளியின் கை பிடித்து வளை போட செட்டி நெருங்கியதும், வள்ளி விதிர் விதிர்த்துப் போகின்றாள். அந்த ஆறுமுகன் பிடிக்க வேண்டிய கை இது, ஒரு வளைச்செட்டி பிடிக்கலாமோ என மயங்குகின்றாள். வளைச் செட்டியைத் துரத்துகின்றாள் வள்ளி. ஏளனமாய்ப் பேசுகின்றாள் அவனைப் பார்த்து. அவமானப் படுத்தித் திருப்பி அனுப்புகின்றாள். "ஏ! வளைச்செட்டி,

 "ஆருமற்ற வள்ளி நாம் அருந்தினையைக் காக்கப் போறேன்
வாசலிட்டுப் போறவளுக்கு வளசலு எனக்கெதுக்கு?"

என்று சொல்லி அவனை விரட்டுகின்றாள். வள்ளியின் அன்பின் ஆழம் புரிகின்றது கந்தனுக்கு. ஆம் வளைச் செட்டி வேடத்தில் வந்து வள்ளியைச் சோதனை செய்தது அந்தக் கந்தனே ஆகும். தினைப்புலம் காக்கும் போது வள்ளி தினைக் கொத்த வரும் கிளி, மைனா, குருவி, அன்னங்கள், காக்கைகள் போன்றவற்றை விரட்டுகின்றாள்.
ஆலோலம், ஆலோலம்,  ஆலோலங்கடி, சோஓஓஓஓஓஓ"
ஆலோலங்கடி சோஓஓஓஓஓ; ஆயலோ கிளி ஆயலோ
அன்னங்களே, வாத்துகளே போவென்று விரட்டினாலும்
குந்துகெட்ட வெள்ளக்கிளி ஆனாலும் போவதில்லை அடி
ஆலோலம், ஆலோலம்,  ஆலோலங்கடி சோஓஓஓஓ"

எனப் பாடிப் பறவைகளை விரட்டுகின்றாள் வள்ளி. அப்போது அங்கே ஒரு தள்ளாத வயது சென்ற கிழவர் வருகின்றார். கிழவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கின்றது. உடல் மட்டுமில்லாமல் அனைத்து அவயங்களும் ஆடுகின்றன. கையில் பிடித்திருந்த தடியும் கையில் பிடிக்க முடியாமல் தடுமாற்றத்தோடு வந்து கொண்டிருந்தார் கிழவர். தோழிகள் பார்த்தனர். கிழவரை மெதுவாய்க் கை பிடித்து அழைத்துச் சென்று வள்ளியிடம் கொண்டு சேர்த்தனர். கந்தன் நினைப்பில் இருந்த வள்ளி கிழவரைக் கொஞ்சம் எரிச்சலுடனேயே பார்த்தாள். என்னவென்று கேட்க, பாவம் தள்ளாத கிழவர், பசி போலிருக்கிறது, கை, கால் நடுக்கமாய் இருக்கிறது, அதான் இங்கே கொண்டு வந்து சேர்த்தோம் என்றனர் தோழிகள். சரி அந்தத் தினைமாவைக் கொஞ்சம் சாப்பிடக் கொடுங்கள் என்று தோழியரிடம் ஆணை இடுகின்றாள் வள்ளி. "வள்ளி, வள்ளி, நீ உன் கையால் கொடேன்!" என்று ஆசையுடன் கிழவர் கேட்க, கிழவருக்கு ஆசையைப் பாரேன், என்ற வள்ளிக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்து விடுகின்றது.

 "கல்லை உரலாக்கி கருங்கம்பை ஒலக்கையாக்கி
தேக்கிலையை அளவாக்கி தெள்ளி விடு வள்ளி
தினைமாவை அள்ளி"

சரி, கிழவர் தானே ஆசையை நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டே, தேனும், தினைமாவும் கலந்து கிழவருக்குக் கொடுக்கின்றாள் வள்ளி. ஒரு வாய் போடவில்லை, கிழவருக்கு, விக்கல் எடுத்து விடுகின்றது. பயத்தில் வள்ளியைக் கட்டிக் கொள்கின்றார் கிழவர். வள்ளிக்குக் கோபம் வந்துவிடுகின்றது. "தண்ணீர் தவிக்குதடி வள்ளி" என்று தண்ணீர் கேட்கின்றார் கிழவர். வள்ளி மறுக்க, கிழவர் யோசிக்கின்றார். இவள் எதற்கும் பயப்படவே மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கின்றாளே என நினைத்த வண்ணம், "வள்ளி, வள்ளி, இந்தக் காட்டு யானை இருக்கே!" என்று ஆரம்பித்தார்.

 யானையா? தாத்தா, இருங்க, இருங்க, போயிடாதீங்க! எனக்கு யானையைக் கண்டால் பயம்!" என்று வள்ளி நடுக்கத்துடன் ஓடி வந்து கிழவரைக் கட்டிக் கொள்கின்றாள். மனதில் சந்தேகம் பூக்கின்றது வள்ளிக்கு. கிழவர் மாதிரி இல்லையே கையும், காலும், என்று நினைத்துக் கொள்கின்றாள். ஆனாலும் யானை பயம் மனதில் முந்துகின்றது. கிழவருக்கு சந்தோஷம், " வள்ளி, ஏமாந்தாயா? ஏச்சுப்புட்டேனே, வள்ளி, ஏச்சுப் புட்டேனே!" என்று பாடி, ஆட, இவர் கிழவர் இல்லை என வள்ளியின் மனதில் உறுதிப் படுகின்றது.

 "சரி, தண்ணீர் தானே, தாத்தா, வாங்க , தண்ணீர் தருகின்றேன்"என்று அருகே இருந்த சுனைக்கு அழைத்துப் போய்க் கிழவரைச் சுனையில் தள்ளி விடுகின்றாள். பின் கை கொட்டிச் சிரிக்கின்றாள் வள்ளி. "ஏச்சுப்புட்டேனே, தாத்தா, ஏச்சுப்புட்டேனே!" என்று பாடி ஆடுகின்றாள் வள்ளி. "அப்படியா, வள்ளி, அதோ பார்!' என்கின்றார் கிழவர். அங்கே வந்தது ஒரு யானை பிளிறிக் கொண்டு. வள்ளிக்கு நடுக்கம் அதிகம் ஆகி அவளும் சுனைக்குள் இறங்கிக் கிழவரைக் கட்டிக் கொண்டாள். யானை போகவே இல்லை. அங்கேயே பிடிவாதமாய் நிற்கின்றது.

"ஆனையும் குதிக்குதல்லோ அசட்டாளம் பண்ணுதல்லோ
சண்டாளப் பண்டாரா- என்னை சதி மோசம் செய்தீரே
ஆனையை விலக்கி விடும் – நீர் ஆளையேக் கலக்குதல்லோ!"

என்று கிழவரிடம் யானையைக் கூப்பிடும்படியும், விரட்டும்படியும் வள்ளி கெஞ்சுகின்றாள். கிழவர் கெஞ்சினால் மிஞ்சுகின்றார், மிஞ்சினால் கெஞ்சுகின்றார். இப்போது கிழவரின் முறையாச்சே. வள்ளி சரியாக மாட்டிக் கொண்டாள். "வள்ளி, என் அருமை வள்ளி, ஆசை வள்ளி, நான் உனக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லு, என்னைக் கல்யாணம் செய்துக்குவியா? சரினு சொல்லு! ஆனை போகும்!" என்று சொல்கின்றார் கிழவர்.
வள்ளி மறுக்கின்றாள். "நீர் எனக்கு மாமன், நான் உமது மருமகள்" என்று வள்ளி சொல்ல, கிழவர் மறுக்கின்றார். யானை போக மறுக்கின்றது. யானையை எப்படியாவது துரத்தினால் போதும் என நினைத்த வள்ளியோ,

"ஆகட்டும், ஆகட்டும் தம்புரானே ஆனய விலக்கிவிடு
நீரெனக்குப் பாட்டாவாம் நானுனக்குப் பேத்தியாம்"

என்று சொல்கின்றாள் இம்முறை. ஆனால் கிழவர் இதற்கும் மசியவில்லையே. அழுத்தமாய் "வள்ளி, நீ என்னைக் கல்யாணம் செய்துக்கறேன் என்று சொல்லு, ஆனை போயிடும்" என்று சொல்கின்றார் கிழவர். அரை மனதோடு வள்ளி சம்மதிக்கின்றாள்.  அப்போது நம்பிராஜனுக்குத் தினைப்புலத்தில் ஒரு கிழவர் வந்து வள்ளியைத் துன்புறுத்துகின்றான் எனத் தகவல் கிட்ட, அவன் வள்ளியைப் பார்க்க விரைந்து வந்தான் தன் மகன்கள் அனைவருடனும்.

அவனும், அவன் கூட்டத்தாரும் வருவதைக் கண்டதும் "ஆஹா, பிழைத்தோம் " என நினைத்த வள்ளி, கிழவர் இருந்த பக்கம் திரும்ப அங்கே கிழவரைக் காணவில்லை. புதியதாய் ஒரு வேங்கை மரம் நிற்கின்றது. வள்ளிக்கு அப்போது தான் இதிலே ஏதோ விஷயம் இருக்கிறது எனப் புரிய, என்ன செய்யலாம் என யோசிக்கின்றாள். நம்பிராஜன் வந்து பார்த்துவிட்டு, "என்ன இது? புதுசாய் ஒரு வேங்கை மரம்? வெட்டுங்கள் இதை! " என்று சொல்ல, அதை வெட்ட ஆரம்பிக்க, வள்ளியோ, வேண்டாம், வேண்டாம் என அலறிக் கொண்டே அந்த வேங்கை மரத்தைக் கட்டிக் கொள்கின்றாள். ஆறுமுகன் தன் ஆறுமுகங்களோடும் தோன்றி வள்ளியை ஆட்கொள்கின்றான். நம்பிராஜன் திகைத்துப் போய் நிற்கின்றான்.

எத்தனையோ தெய்வத் திருமணங்கள் இருந்தாலும் இந்த வள்ளி திருமணக் கதை அனைவரையும் கவர்ந்தாப் போல்வேறு ஒன்று கவராது. அனைவருக்கும் பிடித்த கதையாகும் இது.

No comments:

Post a Comment