Tuesday, 26 July 2016

சுபிட்சம் அருளும் சாகம்பரி தேவி!


அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியின் திருக்கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.



சாகம்பரி தேவி யார்? அவள் மகிமைகள் என்ன?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடுமையாக தவம் செய்து நான்முகனிடமிருந்து பெற்ற அரிய வரங்களால் துர்கமன் எனும் அசுரன் வேதங்களைக்  கவர்ந்து சென்றான். அதனால் வேதங்களும் மந்திரங்களும் அவனுக்கு அடிமையாயின. மேலும் அனைத்து உலகிலும் நடக்கும் நற்காரியங்களின் புண் ணிய பலன்களும் பூஜா பலன்களும் தன்னை வந்து அடைய வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான் அவன். அதனால் ஆணவம் கொண்டு  முனிவர்களைத் துன்புறுத்தினான்; அனைவருக்கும் பல கொடுமைகள் இழைத்தான்.



அனைத்துமே அவன் வசமாகி விட்டதால் பக்தர்கள் செய்யும் எந்த  புண்ணிய செயல்களின் பலனும் அவர்களுக்குக் கிட்டவில்லை. முனிவர்களும் ரிஷிகளும் யாகம், பூஜை என்ற தம் நித்திய கடமைகளைச் செய்ய முடி யாமல், உயிருக்கு பயந்து குகைகளிலும் பொந்துகளிலும் மறைந்து வாழ்ந்தனர். அதனால் மழை பெய்விப்பதற்கான யாகங்கள் நடைபெறவில்லை.  அதனால் மழை பொய்த்துப் போனது. பயிரினங்கள் கருகின. தண்ணீருக்கும் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எங்கும் வறட்சி, பஞ் சம், அன்ன ஆகாரம் இன்றி உயிரினங்கள் மடிந்தன.



அதைக் கண்டு அஞ்சிய தேவரும் முனிவரும் இமயமலைச் சாரலில் ஒன்று கூடி பராசக்தியை நோக்கி, ‘‘தேவி! கருணையே வடிவான உனக்கு பக்தர் களின் கஷ்டங்கள் தெரியாதா? பக்தர்களின் மேல் கருணை கொண்டு திருவருள் புரியக் கூடாதா?’’ என வேண்டினர்.



இந்த பிரபஞ்சத்தையே படைத்த  பராம்பிகை அவர்கள் கோரிக்கையை ஏற்றாள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் கைகளில் பச்சைப் பயிர், காய்கறிகளுடன் தோன்றி அனுக்ரஹம் செய்தாள். சில  நிமிடங்களில் காய்கள், கனிகள், தானியங்கள், உணவுப்பொருட்கள் போன்றவை அவள் உடம்பிலிருந்து பூத்துக் குலுங்கி தேவியின் அருள் மழையாகப் பொழிந்தன.

உணவுப் பஞ்சத்தைப் போக்கிய தேவி, தன் பக்தர்களின் கஷ்டங்களுக்குக் காரணமான துர்கமனை வதைக்கத் தீர்மானித்தாள். நெ ருப்பு வளையம் ஒன்றை உருவாக்கி, அதனுள் சென்று அமர்ந்து தன் உடலில் இருந்து பெரும் சக்தி சேனையை உற்பத்தி செய்தாள். 64000 தேவர் கள் மற்றும் பல்வேறு சக்திகள் அதிலிருந்து தோன்றினர். யாகமும் பூஜையும் செய்தால்தானே அதன் பலன் அந்த அசுரனுக்குச் செல்லும்! அதனால்  தேவி அழிக்கும் நெருப்பு வளையத்தை அமைத்தாள். அதுவே அவனை அழிக்கும் வளையமுமானது. தேவி தான் படைத்த படைகளுடன் சென்று  தேவர்களின் துணையோடு ஒன்பது நாட்கள் யுத்தம் செய்தாள். அதனால் பலன்களை இழந்த  துர்க்கமனை தன் சூலாயுதத்தால் அழித்தாள்.



உலக மக்களின் பஞ் சத்தைக் கண்டு மனம் வருந்தி, தேவி சிந்திய கண்ணீரே மாபெரும் வெள்ளமாகப் பெருக, ஒன்பதே நாட்களில் உலகமெங்கிலும் உள்ள ஆறு, ஏரி,  குளங்களையெல்லாம் நிரம்பின. தண்ணீர்ப் பஞ்சம் நீங்கியதால் பச்சைப் பயிர்களும் செழித்து வளர, உலகம் சுபிட்சமானது. தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் தோன்றியதால் அவளை சதாக்ஷி என்றும், கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி என்றும் அழைத்து, பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். சாகம் எனில் பச்சைக் கறிகாய் என்று பொருள். அன்று முதல் சாகம்பரி தேவி வழிபாடு தொடர்கிறது. துர்கமனை அழித்ததால் துர்க்கா தேவி என்றும் இத்தேவிக்கு பெயருண்டு.

சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப்  பொருள் என்றுமொரு பொருள் உண்டு. காரி எனில் அதைக்கொண்டவள் எனவே சாகாரி எனும் பொருள்படும்படி மகாராஷ்ட்ராவில் இத்தேவி வணங் கப்படுகிறாள்.



நிறைமணிக்காட்சி!

அன்று முதல் புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தில் சிவனோடு கூடிய அம்பாள் ஆலயங்களில் நிறைமணிகாட்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கியருளிய தேவியின் கருணைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இனியும் உலகில் கடும்பஞ்சம் தோன்றக் கூடாது  என வேண்டிக் கொண்டும் நிறைமணிக்காட்சி விழா நடத்தப்படுகிறது. எத்தனை உணவு பலகாரங்கள் உண்டோ, எத்தனை காய்கறி, கீரை வகைகள்  உண்டோ அத்தனை பொருட்களாலும் ஆலயத்தில் தோரணப் பந்தல் உருவாக்கி மகிழ்வர்.

சில ஆலயங்களில் அம்பாள், மற்றும் ஈசன் சந்நதியில்  பந்தல் போல மரக்கட்டைகளைக் கட்டுவர். பின் கயிற்றில் காய்கறிகளையும் பழவகைகளையும் மாலை போல் தொடுத்து அலங்காரமாகத் தொங்கவிடு வர். அனைத்து விதமான காய்கறிகளையும் கீரைகளையும் பசுமைத் தோரணமாகக் காண்பதே கண்களுக்கு விருந்தாக இருக்கும். நவராத்திரி கொலு பொம்மைகளைப் போல அம்பாளுக்கு முன்பு அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் காய்கனிகள் மனதைக் கவரும். இதைக் கண்டு களிக்கவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய் பக்தர்கள் அன்று ஆலயத்திற்கு வருவார்கள்.



தங்கள் வசதிக்கேற்ப காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் காணிக்கையாகத் தருவார்கள். அடுத்த நாள் அத்தனை உணவுப் பண்டங்களும் பிரசாதமாக அனைவருக்கும் பகிர்ந் தளிக்கப்படும். சென்னை சைதாப்பேட்டை காரணீசுவரர், மயிலை கபாலீஸ்வரர் - வெள்ளீஸ்வரர் - காரணீஸ்வரர், திருவாரூர் தியாகராஜர் ஆலயங் களில் நிறைமணி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.



சாகம்பரி த்யானம்

ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம்
ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம்
வர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீ
லோகாநாம் ஜநநீம் மஹேஸ தயிதாம் தாம் நௌமி ஸாகம்பரீம்

சாகம்பரி காயத்ரி

ஓம் சாகம்பர்யை வித்மஹே
சதாக்ஷ்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.




சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்திராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் ஆலயங்கள் உள்ளன.

சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை.


 

லலிதா நவரத்தின மாலை!

ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரோ சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தரன் ஆற்றநலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

1. வைரம்

கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங்கன வான தவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவள்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருள்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

2. நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரீ வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

3. முத்து

முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

4. பவளம்

அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோ
தேன்பொழிலாமீது செய்தவள் யாரோ
எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்குள் எண்ணமிகுந்தாள்
மந்திரவேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

5. மாணிக்கம்

காணக் கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

6. மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம்
மதுரிதபதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

7. கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீ மேல் இடினும் ஜெயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல் வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

8. புஷ்பராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணீ
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சல மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

9. வைடூர்யம்

வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாறொலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அளவற்று அசைவற்று அநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூர்யமே 
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

பயன்

எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார் 
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே.
 
 

கதிராமங்கலம் வனதுர்க்கா!

 
கிலமெல்லாம் ஆளுகின்ற மகாசக்தி அம்பிகை, கதிராமங்கலத்தில் வனதுர்க்கை என்ற திருப்பெயரோடு கோவில் கொண்டு தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு தாயுள்ளத்தோடு அருள்புரிந்து வருகிறாள்.

நவதுர்க்கைகளில் முதலாவதாக விளங்குபவள் வனதுர்க்காதான்.

அவள் வரலாறைப் பார்ப்போமா...

அசுரர்களால் ஈரேழு லோகத்திலும் இடர் பெருகியது. அது நீங்க மும்மூர்த்திகளும் தேவர்களும் ஆதிபராசக்தியின் அருள்வேண்டி பெரியதொரு யாகம் செய்தனர். அந்த யாக குண்டத்தில் தேவியானவள் எழுந்தருளி, "விரைவில் மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் இவர்களது கதை முடியும்' எனக் கூறி மறைந்தாள்.

அன்னை பராசக்தி பூவுலகம் வந்து மலைச் சாரலில் இளம்பெண்ணாக சஞ்சரித்தாள். அவளைக் கண்டு அசுரர்கள் மயங்கி, நெருங்கினர். அவர்களை மாய்க்க, அம்பிகை சர்வ தேவாதிதேவர்களின் அம்ச சக்தியையும் ஆத்மசக்தியையும் ஒன்றிணைத்து ஒரு வெற்றித் திருமகளை உருவாக்கினாள். அந்த மகாசக்திதான் துர்க்கை. அந்த துர்க்கையானவள் அசுரர்களை அழித்து அமரர்களைக் காத்தாள். பின்னர் ஏகாந்தியாக சிவமல்லிகாவனம் என்ற தலத்தில் தங்கி உலகநலன் கருதி தவம்புரியத் தொடங்கினாள். அந்தத் தலம்தான் தற்போது கதிராமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

கம்பருக்கு அருளிய துர்க்கை!

தேரழுந்தூரில் வாழ்ந்துவந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அன்னை வனதுர்க்கையின்மேல் அளவுகடந்த பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்த ஒரு செயலையும் துவங்குவதில்லை. ஒருநாள் மழைக்காலத்தில் கம்பர் வீட்டுக் கூரை சிதைந்தது. வீட்டுக்குள் மழைநீர் கொட்டியது. அப்போது கம்பர் மனமுருகி, "அம்மா! அடைமழை இடைவிடாது பெய்கிறதே. ஒரு கூரைகூட இல்லாமல் நீயே நனைந்தபடி நிற்கிறாய்! உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்' என்று மழையைப் பொருட்படுத்தாது ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக் கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டு இருந்ததைக் கண்டு வியந்து, "கதிர்தேவி, கதிர்வேய்ந்த மங்களநாயகி' என பாடிப் பரவினார். இதுதான் நாளடைவில் கதிராமங்கலம் என மருவியதாகக் கூறுகின்றனர்.

அகத்தியருக்கு அருளிய துர்க்கை!

உலகைச் சமன் செய்ய அகத்தியர் தென் திசை வந்தபோது, அதற்கு இடையூறாக எழுந்து நின்ற விந்திய அரக்கனை இந்த வனதுர்க்கையின் அருள்பெற்றுதான் அகத்தியர் அழித்தாராம்

என்று மனம் குளிர வாழ்த்திவிட்டு, திருக் கடவூருக்கு மகிழ்வோடு சென்றார். அதன்பின் மார்க்கண்டேயருக்கு, என்றும் பதினாறு என்று ஈசன் அருளியது அனைவரும் அறிந்ததே.

மிருகசீரிட நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை இணைந்த நாளில்தான் மிருகண்டு மகரிஷிக்கு காட்சி தத்தாளாம் தேவி.

அங்காரகனுக்கு அருளிய துர்க்கை!

முருகவேள் நரகாசுரனோடு போரிட்டபோது பூதப்படை வீரர்கள் காயமுற்றனர். அவர்களைக் காக்க பெருமளவில் ரத்தம் தேவைப்பட்டது. ரத்தத்துக்கு அதிபதியான செவ்வாய் அதற்கான சக்தியைப் பெறும்பொருட்டு, அங்காரகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையன்று, துர்க்கை வழிபாட்டிற்கு உகந்த ராகு காலத்தில் வனதுர்க்கை திருமுன் வந்தார். 54 எலுமிச்சம் பழங்களை இருகூறாக்கி அவற்றின் சாற்றினைப் பிழிந்து சேகரித்து, பின் அந்த எலுமிச்சை தோல்களை 108 அகல் விளக்குகளாக்கி, நெய் ஊற்றி, தாமரைத்தண்டுத் திரியினைப் போட்டு தீபம் ஏற்றும் நிலையில் வைத்தார். பின்னர் எலுமிச்சைச் சாற்றினை வனதுர்க்கைக்கு அபிஷேகம் செய்து, அந்த சாற்றினை ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்து, அதன்பின் 108 எலுமிச்சை தீபங்கள் ஏற்றி தேவியை வணங்கி, பின்னர் அபிஷேக சாற்றினை அங்காரகன்  பருகினார். பெரும் வலிமை பெற்றார். செவ்வாய்க்கு அங்காரகன், மங்களன் என்ற பெயர்களும் உண்டு. மங்களன் வழிபட்டதால், "மங்கள துர்க்கா' எனவும் இந்த தேவி அழைக்கப் படுகிறாள்.

குலதெய்வ வழிபாடு!

காவிரி தெற்கு வடக்காக ஓடும் வடகரை ஸ்தலமான கதிராமங்கலத்தில் வனதுர்க்கா பரமேஸ்வரி சர்வசக்தியாக விளங்குகிறாள். பொதுவாக ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை.

அதற்கேற்ப அன்னையின் முன்பக்கத் திருவுருவம் அம்பாள் வடிவமாகவும், பின்பக்கம் சர்ப்பாகாரமாய் பாம்பு படம் எடுத்தது போல் அமைந்து கண்டதுவாரம், கஷ்கதுவாரமில்லாமல் ஸ்வயம்புமூர்த்தமாய் உள்ளது. எனவே ராகு- கேது தோஷ நிவர்த்திக்கும் இவ்வன்னையை வணங்கலாம்.

ஆகம விதிப்படி விநாயகர் சந்நிதி இல்லாமல் கோவில் எதுவும் அமைவதில்லை. ஆனால் இங்கு விநாயகர் அம்பாளுடனே கலந்திருப்பதாக ஐதீகம். அதனால் தனியே விநாயகர் சந்நிதி இல்லை.  மற்ற தலங்களில் துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி சிம்மவாஹினியாக மகிஷாசுரனை பாதத்தில் வதைத்த வண்ணம் திருக்காட்சி தருவாள்.

ஆனால் இந்தத் தலத்திலோ கிழக்கு நோக்கி, அருளையும் பொருளையும் வாரி வழங்கும் மகாலஷ்மி அம்சமாக தாமரைப் பூவில் தாள் பதித்த வண்ணம், வலது மேற்கரத்தில் தீவினையறுக்க பிரத்யேக சக்கரம், இடதுமேற்கரத்தில் சங்கு, வலது கீழ்க்கரத்தில் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம் இடுப்பில் வைத்த எழிலான பாவனையுடன் அருளாட்சி புரிகிறாள். இது மிக அபூர்வ அமைப்பாகும்.

அதனால் குலதெய்வம் என்னவென்றே தெரியாதவர்கள், இந்த வனதுர்க்கைக்கு நான்கு எலுமிச்சை தீபமேற்றி நான்கு முறை வலம்வந்து குங்கும அர்ச்சனை செய்தால், அவரவர் குலதெய்வத்தின் அருள்கிட்டும்.

""இத்தல துர்க்கைக்கு காசி விசாலாட்சி, ஸ்ரீஅன்னபூரணி ஆகியோருடன் தொடர்புள்ளதால், அம்பாள் தினமும் காசி போய்வருவதாகவும் ஒரு ஐதீகம் உள்ளது. இதற்கேற்ப இன்றும் அம்பாளின் கோபுர விமானத்தில் அம்பாளுக்கு நேரே ஒரு சாண் சதுர அளவில் ஒரு துவாரம் உள்ளது. இதனால் இவளை ஆகாசதுர்க்கா என்றும் சொல்வர்'' என்கிறார் பரம்பரை ஆலய அர்ச்சகர்.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் கதிராமங்கலம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும்; மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் இவ்வாலயம் அமைந்துள்ளது. காலை 7.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.



 

ஆடி மாத வாராஹி நவராத்திரி!


ஆதிபராசக்தியான ராஜராஜேஸ்வரிக்கு மந்திரி அல்லது மந்த்ரிணி சியாமளா தேவி. மாதங்கி அல்லது ராஜமாதங்கி என்றும் பெயர். (மதுரை மீனாட்சியை சியாமளா என்பர்). ராஜராஜேஸ்வரிக்கு சேனாதிபதி வாராஹிதேவி. மந்திரி, சேனாதிபதியின் ஆலோசனையில்தானே ராஜேஸ்வரி ராஜாங்கம் செய்யமுடியும். ஆகவேதான் வாராஹி தேவி முக்கியத்துவம் பெறுகிறாள்.பல சிவன் கோவில்களில் சப்த மாதர்கள் என்று ஏழு தேவிகள் இருப்பர். அவற்றுள் வாராஹியைக் காணலாம். வராகம் என்றால் பன்றி. தேவி பன்றி முகத்துடன் இருப்பாள். வராக அவதார விஷ்ணுவின் சக்தியே வாராஹி.


தாருகாசுரன் யுத்தத்தில் காளிக்கும், சும்பாசுரன் யுத்தத்தில் சண்டிகைக்கும், பண்டாசுரன் யுத்தத்தில் லலிதைக்கும் உறுதுணையாக இருந்தவள் வாராஹிதேவி.

சியாமளா தேவியின் ரதம்- கேயசக்கர ரதம்.
வாராஹி தேவியின் ரதம்- கிரிச்சக்கர ரதம்.

வாராஹிக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும், லலிதா உபாக்யானம் 12 நாமங்கள் முக்கியமானவை என்று கூறுகிறது.

பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மஹாஸேனா, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகியவையே அவை.

வாராஹிதேவியின் அருள்பெற இந்த 12 நாமங்களே போதும்.

இந்த தேவியை ஸ்வப்ன வாராஹி, தூம்ர வாராஹி, ப்ருஹத் வாராஹி, அஸ்த்ர வாராஹி என நான்கு ரூபங்களில் வர்ணிப்பர்.

வாராஹி விஷ்ணு சக்தியானதால் சங்கு, சக்கரம் உண்டு. அபய, வரத கரங்கள் உண்டு.

பொதுவாக நான்கு கரங்கள். ஆறு கரங்கள் இருந்தால் கூடுதலாக கேடயம், வாள் இருக்கும். எட்டு கரங்கள் என்றால் வில், அம்பும் இருக்கும்.

உபாசகனின் தீய எண்ணங்களை அழிப்பவள் வாராஹி. காஞ்சி காமாட்சி கோவிலில், தேவியின் இடப்புறம் கோஷ்ட தேவியாக வாராஹியைக் காணலாம்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் வாராஹிக்கு தனிச்சந்நிதி உண்டு. ராஜராஜனுடைய இஷ்டதெய்வம் வாராஹி. சோழ மன்னர்கள் போருக்குப் புறப்படுமுன் வெற்றியடைய வணங்கிய தேவி இவள்.

காசியில் திரிபுர பைரவி படித்துறையில் தரைமட்டத்திற்குக் கீழே பாதாள வாராஹி விளங்குகிறாள். பகலில் இவளை தரிசிக்கமுடியாது.

சென்னை சோழிங்கநல்லூர் பிரத்யங்கிரா கோவிலில் வாராஹிக்கு சந்நிதி உள்ளது.

திருச்சி- திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை வாராஹி என்பர்.

காயத்ரி:

ஸ்யாமளாயை வித்மஹே
ஹலஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்.

அபிராமி அந்தாதியில் வாராஹி நாமம் வரும் இரு துதிகள் சிந்திப்போமா!

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை நச்சு
வாயகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி சுக
நாயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.

ஆடி மாத பஞ்சமி, செவ்வாய், ஞாயிறு, வெள்ளி தினங்களில் வாராஹி தேவியைத் துதித்து  நலமுடன் வாழ்வோமே.




ஸ்ரீ சக்ர நாயகிகள்!


ஸ்ரீஆண்டாள் அவதரித்த புனித நாள் ஆடிப்பூரம். இந்த நன்னாளில் அம்மன் கோவில்களும் விழாக்கோலம் காணும். அன்று வளைகாப்பு வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.ஆடிப்பூரத் திருநாளில்தான் அம்பிகை பூப்பெய்தியதாகப் புராணம் சொல்வதால், அன்று வளையல்களால் அம்மனை அலங்கரிப்பதும், அர்ச்சனைத் தட்டுகளில் வளையல்களை சமர்ப்பிப்பதும் நடைபெறுகிறது. இதில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபனம் செய்யப்பட்ட அம்மன் கோவில்கள் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன. காவேரிக்கரையோரம் உள்ள திருவானைக்கா தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தனிச்சிறப்புடன் விளங்குகிறாள்.பொதுவாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது போல வெள்ளி, தாமிரம் ஆகிய உலோகங்களில் ஸ்ரீசக்கர யந்திரம் எழுதி அம்மனின் பீடத்தின்கீழ் அல்லது எதிரில் ஸ்தாபிதம் செய்வார்கள். ஆனால் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு காதுகளில் தாடங்கமாக (தோடுகள்) அணிவிக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகப் போற்றப்படுகிறது.ஆதிகாலத்தில் இந்த அன்னை மிகவும் உக்கிரமாகக் காட்சிதந்தாள். பக்தர்கள் அருகில் சென்று வழிபட பயந்தார்கள். பூஜை செய்யும் அர்ச்சகர்கூட சிறிய கோல்கொண்டு வஸ்திரம் அணிவிப்பதும், மலர் அலங்காரம் செய்வதுமாக இருந்தார்.ஒருசமயம் ஆதிசங்கரர் யாத்திரையாக இத்திருத்தலத்திற்கு வந்தபோது, ஈஸ்வரியின் நிலையை அறிந்து தியானம் மேற்கொண்டார். பிறகு, இரண்டு தாடங்கம் (தோடுகள்) உருவாக்கி மந்திரப் பிரயோகம் செய்து, ஈஸ்வரியின் காதுகளில் பொருத்தினார். ஒன்று ஸ்ரீசக்கரம் அமைந்த தாடங்கம்; மற்றொன்று சிவசக்கரம் அமைந்தது. மேலும், ஈஸ்வரியின் எதிரில் விநாயகரையும், சந்நிதியின் பின்புறம் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்து பூஜைசெய்யவே, ஈஸ்வரியின் உக்கிரம் முழுமையாகக் குறைந்து, தேவியின் பார்வை குளிர்ந்தது. இதன்பின் பக்தர்கள் நெருங்கிச் சென்று அன்னையை வழிபட்டு அருள்பெற்று வருகின்றனர். ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீவித்யாபூஜை முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. அத்துடன் ஆடிப்பூரத்தன்று சிறப்பு வழிபாடுகள் செய்தும் வளையல்களை சமர்ப்பித்தும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

இத்தலம் மட்டுமின்றி வேறு பல திருத்தலங்களிலும் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிதம் செய்திருக்கிறார்.தர்மபுரி மாவட்டம், தகடூர் கோட்டைத் திருத்தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம். ஆதியில் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் என்று அழைக்கப்பட்டது. இங்கு லிங்க வடிவில் அருள்புரியும் சிவபெருமான் பாணாசுரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது புராண வரலாறு. துர்வாசர், கௌசிகர், காசிபர், அகத்தியர், பரத்வாஜர் ஆகிய ஐந்து முனிவர்களாலும்; இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்டதிக் பாலகர்களாலும்; பஞ்சபாண்டவர்களாலும்; ஐராவதம் என்ற தேவ யானையாலும்; யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோராலும் வழிபடப்பட்ட திருத்தலம். குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கப்பட்ட இக்கோவிலில், காஞ்சியில் தவமிருந்த யோக காமாட்சி சிவசக்தி ஐக்கிய நிலையில் யோக சக்தியாக தனிச்சந்நிதியில்  அருள்புரிகிறாள். ஸ்ரீகாமாட்சியம்மன் சந்நிதி 18 படிகள் கொண்ட உயர்ந்த மேடையின்மீது அமைந்துள்ளது. பிற ஆலயங்களில் ஸ்ரீசக்கரம் அம்மனுக்கு முன்பாகவோ, கீழ்ப்பகுதியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இங்கு அம்மன் சந்நிதியே ஸ்ரீசக்கர வடிவமான மேருவின்மீது நிறுவப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் ஆடிப்புரத் திருநாளன்று வளைகாப்பு வைபவம் மிகச்சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது.காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயக் கருவறையில், "வசின்யாதி வாக்தேவதைகள்' வீற்றிருந்து அருளும் ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சி மாநகரமே சக்கர வடிவில் அமைக்க ஆதிசங்கரர் அருள்புரிந்திருக்கிறார்.காசியில் (வாரணாசி) உலக மக்களுக்கு அன்னமளிக்கும் ஸ்ரீஅன்னபூரணி அருள்புரியும் கோவிலிலும் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். இதேபோல் கேரளாவில் கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோவிலிலும் அமைத்துள்ளார். சென்னைக்கு அருகே மாங்காடு தலத்தில் அருளும் தவக் காமாட்சியம்மன் அர்த்தமேரு, மகாமேரு, மகாசக்கர வடிவினளாக அருள்புரிகிறாள். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாக அமைத்து, அதன்மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட, தாமரையும், அதற்கு மேல்புறத்தில் ஸ்ரீசக்கர யந்திரமும் அமைக்கப்பட்டுள்ளன. 43 தேவதைகளைக் குறிக்கும் விதத்தில் 43 முக்கோணங்களைக் கொண்டுள்ளது. இதுபோல் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே அமைந்துள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் அமைந்துள்ளன.

பொதுவாக ஆடிப்பூரத் திருநாளில் அம்பிகைக்கு ருது ஸ்நான வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு, பல அம்மன் கோவில்களில் கண்ணாடி வளையல்களை அடுக்கி சுவாசினி பூஜை நடைபெறும். அந்தவகையில், சென்னை திருவல்லிக் கேணி எல்லையம்மன் கோவிலில் வளையல் சாற்று விழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த பழமையான ஆலயத்தில் ஆடி மாதம் பிரம்மோற்சவம் பதின்மூன்று நாட்கள் நடைபெறுகின்றன.மனம்போல் மணாளன் அமையவும், வாரிசுகள் வளமுடன் தொடரவும் பிள்ளைவரம் பெற்றுத்தரும் திருநாள் ஆடிப்பூரம். இந்த நன்னாளில் தங்கள் வீட்டில் நடைபெறும் விழாவாகக் கருதி, பக்தர்கள் வளைகாப்பு வைபவத்தை நிகழ்த்துகிறார்கள்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள வளைகாப்பு மண்டபத்தில், ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஆலயத்தின் உள்ளே அம்பாளுக்கு எதிரில் தீமிதி வைபவமும் நடைபெறும். இதுபோல வேறெங்கும் காணமுடியாதென்பர்.மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா "முளைக்கொட்டுவிழா' என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிராகாரத்திற்கு "ஆடி வீதி' என்றே பெயர்.திருநெல்வேலியில் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ஆலயத்தில் அம்பிகைக்கு "பூரம் கழித்தல்' எனப்படும் ருது ஸ்நான வைபவமும், வளைகாப்பும் சிறப் பாகக் கொண்டாடப் படுகிறது.நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் ஆலயம் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், சிவபெருமானின் ஏழு தியாக க்ஷேத்திரங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது. இங்கு நீலாயதாட்சியம்மன் கன்னி தெய்வமாக அருள்புரிகிறாள். ஆடிப்பூரத் தன்று அம்பிகைக்கு ருது ஸ்நான வைபவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒன்பது கன்னிப் பெண்களை வரிசையாக உட்காரவைத்து நலங்கிட்டு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம், பூ, சீப்பு, குங்குமச்சிமிழ், ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்குகிறார்கள்.திருக்கருகாவூர் அம்மனுக்கும் இதுபோல் ருது சாந்திவிழா நடைபெறுகிறது. அப்போது மங்கையர்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்துப் பெற்றுக்கொள்கிறார்கள்.திருச்சி உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள குங்குமவல்லி அம்மனுக்கு தைமாதம் மூன்றாம் வெள்ளிக் கிழமை வளையல் சாற்று அலங்காரம் மிகச்சிறப்பாக நடந்தாலும், ஆடிப்பூரத்தன்று கன்னியர்களும், குழந்தை வரம் வேண்டிக் காத்திருக்கும் தம்பதிகளும், சுகப்பிரசவம் வேண்டி வழிபடும் கர்ப்பிணிகளும் அம்மனுக்கு வளையல்களை பூஜைத்தட்டில் வைத்து அர்ச்சித்து, அதனைப் பிரசாதமாகப் பெற்று கைகளில் அணிந்துகொள்வர்.திருச்சி, தில்லை நகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள அன்னை சாரதாம்பாளுக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் கண்ணாடி வளையல்களால் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையில் அலங்கரிப்பர். வளையல் அலங்காரத்தில் அம்பாள் மூன்று நாட்களுக்குக் காட்சிதருவாள். அம்பாளின் எதிரிலுள்ள ஸ்ரீசக்கர மேட்டையும் வளையல்களால் அலங்கரித்திருப்பர். பிறகு இவ்வளையல்களைப் பிரசாத மாக பெண்களுக்கு வழங்குவர்.மேலும், ஆடிப்பூரம் ஸ்ரீஆண்டாளுக்குரிய நாளாகவும் போற்றப்படுவதால், ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் விழாக்கோலம் காணும். பிரம்மோற்சவம் மற்றும் தேரோட்டம் ஆகியன மிகச்சிறப்பாக நடைபெறுகின் றன. அந்த உற்சவத்தின் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருடசேவை தரிசிக்கத்தக்க ஒன்று. அப்போது, ஸ்ரீரங்கமன்னாருடன் சுற்றுவட்டாரக் கோவில்களில் அருள்புரியும் நான்கு பெருமாள் உற்சவர்களும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள். 7-ஆம் நாளன்று ஆண்டாள் மடியில்  தலைவைத்து ஸ்ரீரங்கமன்னார் சயனித்திருக்கும் காட்சியை தம்பதி சமேதராக தரிசிக்க, வாழ்வில் என்றும் சுகம் பெறலாம் என்பர். தேரோட்டத்தின்போது மதுரை கள்ளழகர் கோவிலிலிருந்து அனுப்பப்படும் பட்டுப்புடவையையே ஆண்டாளுக்கு சாற்றியிருப்பார்கள். ஆண்டாள் பவனி வரும் 75 அடி உயரம் கொண்ட திருத்தேர் கலையம்சம் கொண்டது. திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை வழிபட்டால் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்ல இயலாதவர்கள், அருகிலுள்ள பெருமாள் கோவிலில் அருள்புரியும் ஸ்ரீஆண்டாளை ஆடிப்பூரத்தில் தரிசித்தாலும் பலன் கிட்டும். அன்றைய தினம் சுமங்கலிகள் விரதம் மேற்கொண்டு  ஸ்ரீஆண்டாளை வழிபட, குடும்பத்தில் என்றும் சுகம் நிறைந்திருக்கும் என்பர்.

 

16 பேறுகளும் அருளும் பஞ்சபூதத் தல நாயகிகள்!

ட்சிணாயனம் எனும் தெற்குதிசைநோக்கி சூரியன் பயணிக்கத் தொடங்கும் கடக மாதமான ஆடி மாதத் தினை அம்மனுக்குரிய மாதமென்று  போற்றுவர். இம்மாதத்தில் வரும் சிறப்பு நாட்கள் ஒவ்வொன்றும் திருநாட்களாகும். அந்தவகையில் ஆடிப்பௌர்ணமி மிகவும் போற்றப்படுகிறது சந்திரனை மனோகாரகன் எனச் சொல்கிறது ஜோதிட நூல்.  எனவே இந்நாளில் இறைவழிபாட்டின் மூலம் நம் சிந்தனையை ஒருமுகப் படுத்தினால், மனோகாரகனான சந்திரன் சகல நன்மைகளையும் தந்தருள்வான் என்கின்றன வேத நூல்கள்.

சந்திரனுக்கு அதிபதி அம்பிகை. ஆகவே, இந்நாளில் அம்பிகையை தரிசித்து வழிபடுவதால் பூரண அருளும் ஆரோக்கியமும் கிட்டும். மேன்மேலும் உடல்நலம் வளம்பெற்று, ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றன வழிகாட்டி நூல்கள்.

அன்னை பராசக்தியை நிறைமதி நாளில் பெண்கள் பூஜை செய்துவந்தால், அன்னை தன் பரிபூரண அருளை அக்குடும்பத்திற்கு வாரிவழங்குகிறாள்.

அம்பாளை வழிபட பல கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் ஏராளம். அந்தவகையில், பஞ்சபூதத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் அம்பாளை வழிபட, அனைத்து அம்பிகையையும் வழிபட்ட பலன் கிட்டும் என்பர்

பஞ்சபூதங்களில் நிலம் எனும் பூதத்தின் தலமாகத் திகழ்கிறது காஞ்சி. இங்குள்ள காமாட்சியம்மன் கோவிலில் ஐந்து காமாட்சிகள் அருள்புரிகின்றனர்.

கருவறையில் அருள்புரியும் தேவியை மூலகாமாட்சி என்பர். இந்த தேவியின் வலப்புறம் காட்சி தருபவள் தபஸ்காமாட்சி. ஒற்றைக்காலில் முள்முனையில் நின்று தவம் செய்கிறாள் இந்த தேவி. கருவறையின் கீழ்ப்பகுதியில் குகை போன்ற அமைப்புடைய பிலாத்துவாரம் ஒன்றுண்டு. இதனுள் அருள்புரிவது பிலாகாச காமாட்சி. இங்குள்ள ஸ்ரீசக்கர ரூபத்தை ஸ்ரீசக்கர காமாட்சியாக வணங்குவர். அடுத்து, பாததரிசனம் மட்டும் அருளும் காமாட்சியென்று ஐந்து காமாட்சிகள் அருள்புரிகின்றனர்.

காஞ்சியில் அன்னை எழுந்தருளக் காரணமென்ன?

ஒருசமயம் கயிலையில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் அன்னை. அதனால் உலகங்கள் யாவும் இருண்டன. இதனால் கோபம் கொண்ட ஈசன், தேவியை பூவுலகில் தவமியற்றுமாறு பணித்தார். அதன்படி பூவுலகில் காஞ்சிக்கு வந்த அம்பிகை, வேகவதி ஆற்றங்கரையில் மணலால் லிங்கம் பிடித்து ஈசனை வணங்கித் தவமிருந்தாள். அம்பிகையை சோதிக்க எண்ணிய சிவபெருமான் வேகவதி ஆற்றில் வெள்ளம் பெருக் கெடுக்க வைத்தார். நீரின் வேகத்தில் மணல் லிங்கம் கரைந்துவிடுமோ என்ற அச்சத்தில், அதைத் தழுவிக்கொண்டாள் அன்னை.

அம்பிகையின் பக்தியில் மகிழ்ந்த ஈசன் அவளுக்குக் காட்சி கொடுத் தருளினார். இவ்வாறு தவமிருந்த ஆதிசக்தியான அன்னையே ஸ்ரீகாமாட்சியானாள். இந்த தேவியை பௌர்ணமியன்று தரிசித்தால் மாங்கல்ய பலம் நீடிக்குமென்பது ஐதீகம்.

திருவானைக்கா நீர்த்தலமென்று போற்றப்படுகிறது. இங்கு ஜம்புகேஸ்வரர்-  ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அருள்புரிகிறார்கள். இங்குள்ள ஈஸ்வரி தனித்தன்மை பெற்றவ ளென்று புராண வரலாறு கூறுகிறது. ஆதிகாலத்தில் அசுரன் ஒருவனை வதம் செய்த ஈஸ்வரி இங்கு எழுந்தருளியதால், உக்கிரத்துடன் காட்சி தந்தாள். இதனால் பக்தர்கள் இந்த அம்பாளை வழிபட அஞ்சினர். இந்த நிலையில் இத்தலத்திற்கு யாத்திரையாக வந்த ஆதிசங்கரர், அம்பாளது உக்கிரத்தைத் தணிக்க விரும்பினார். அம்பாளின் காதுகளில் ஏற்கெனவே தோடுகள் இருந்தாலும், முறைப்படி மந்திரப் பிரயோகம் செய்து ஸ்ரீசக்கர ரூபமான இரு காதணிகளை அம்பாளுக்கு மேற்கொண்டு அணிவித்தார். மேலும், அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீவிநாயகப் பெருமான் திருவுருவத்தையும் பிரதிஷ்டை செய்ய, அம்பிகையும் சாந்தரூபமாகக் காட்சிதந்தாள். இன்று அம்பாள் காதுகளில் இரண்டு தாடங்கங்கள் இருப்பதை தரிசிக்கலாம். ஒன்று ஆதிகாலத்தில் அணிந்திருந்த தாடங்கம்.

மற்றொன்று ஆதிசங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரரூபமான தாடங்கம்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி இங்கு மகாதுர்க்கா, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று தேவியர் இணைந்த அகிலத்தின் நாயகியென போற்றப்படுகிறாள். சக்தி பீடங்களில் திருவானைக்கா வாராஹி பீடமென்பர். சதிதேவியின் முகவாய்க்கட்டை விழுந்த இடம். இங்கு ஒவ்வொரு நாளும் காலையில் பார்வதி அலங்காரத்திலும், நண்பகலில் மகாலட்சுமி அலங்காரத்திலும், இரவில் வெண்ணிறஆடை அணிந்து சரஸ்வதி கோலத்திலும் காட்சிதருகிறாள் ஈஸ்வரி.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மூலவருக்கு ஆடி மாதப் பௌர்ணமியன்று, காலை 10.15 முதல் 12.15 வரை நடக்கும் உச்சிக்காலப் பூஜையின்போது பூணூல் சாற்றப்படுகிறது. இது தனிச்சிறப்பு என்பர். இந்தக் கோலத்தில் ஈஸ்வரியை வழிபட, பெண்கள் தீர்க்கசுமங்கலி பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம்.

உச்சிக்கால பூஜையின்போது, அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனைப் பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே பூஜை செய்வதாக ஐதீகம். ஆடிப்பௌர்ணமியன்று இத்திருக்கோவில் விழாக்கோலம் காணும்.

ஆகாயத்தலமென்று போற்றப்படுவது சிதம்பரம். இந்த திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப்பெருமான் அருள்புரிகிறார். இத்திருக்கோவிலில் அன்னை சிவகாமசுந்தரி, சின்னஞ்சிறு பெண்போல் சிற்றாடை இடையுடுத்தி சிவகங்கை குளத்திற்கு மேற்கே, இரண்டு பிராகாரங்களுடன் தனிக்கோவில் கொண்டுள்ளாள். இதுதவிர, பஞ்சாட்சரப் படிகளின்மீது ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரியும் சித்சபையிலும், உற்சவ விக்ரகமாய் அருளாசி வழங்குகிறாள் அன்னை.

ஸ்ரீநடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை போன்ற திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடந்தாலும், ஆடிப் பௌர்ணமியன்று சிவகாம சுந்தரிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால், அன்று பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இந்த நாளில் சிவகாம சுந்தரியை தரிசித்தால், வீட்டுக்கு அடங்காத கணவர்கள் மனம்திருந்தி மனைவியை மதித்து நடப்பார்கள் என்பது ஐதீகம். இதன்காரணமாக இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் பெருமளவில் அன்னையை வணங்க வருவார்கள்.

பஞ்சபூதத் தலங்களில் வாயு (காற்று) தலமாகப் போற்றப்படுவது ஸ்ரீகாளஹஸ்தி (திருக்காளத்தி).

இத்திருக்கோவிலின் அம்பிகை ஞானப் பூங்கோதை  என்றும், ஞானப்பிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பிகையின்முன், சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட "அர்த்தமேரு' உள்ளதைக் காணலாம். அம்பிகையின் இடுப்பிலுள்ள ஒட்டியாணத்தில் கேது பகவானின் உருவம் காணப்படுகிறது.  சந்நிதிக்கு வெளியில், பிராகாரத்தின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை அணிவிக்கப்படுகிறது.

இத்தலம் சக்தி பீடங்களில் புவனேஸ்வரி பீடமாகப் போற்றப்படுகிறது. இங்கு ஆடிப்பௌர்ணமியன்று அம்பிகைக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெறுவதுடன், வைரமூக்குத்தியும் தங்கப்பாவாடையும் அணிவிப்பார்கள். இந்த திருக்கோலத்தினை தரிசித்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும்; பதினாறு வகையான பேறுகளும் பெற்று வளமுடன் வாழலாம்.

இத்திருக்கோவிலின் இறைவன் ஸ்ரீகாளத்தீஸ்வரநாதரின் கருவறையில், மற்ற தீபங்களெல்லாம் நின்று ஒளிவிடும்போது, ஒரு தீபம் மட்டும் ஆடிக்கொண்டே இருக்கும். கருவறையின் கதவுகளை காற்றுப் புகாவண்ணம் மூடினாலும் அந்த தீபம் மட்டும் அசைந்துகொண்டிருக்கும் அற்புதத்தைக் காணலாம். மேலும், இங்கு தீர்த்தப் பிரசாதம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது. இத்தலம் நாகதோஷ (ராகு- கேது) பரிகாரத்தலமாகத் திகழ்வதால், தினமும் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகளும், யாகங்களும் அம்பிகையின் முன் நடைபெறுகின்றன. அதற்குரிய கட்டணத்தைக் கோவிலில் செலுத்தி பக்தர்கள் அந்த தோஷப் பரிகாரப் பூஜையில் கலந்துகொண்டு நலம் பெறுகிறார்கள். மேலும் ஆடிப்பௌர்ணமியன்று ஸ்ரீஞானப் பூங்கோதை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

திருவண்ணாமலை, பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலம். இங்கு ஸ்ரீஅண்ணாமலையார் புகழ்பெற்றுத் திகழ்கிறார்.

இங்கு அருள்புரியும் அபிதகுஜாம்பாள் என்னும் உண்ணாமுலை அன்னை ஈசனைக் குறித்து தவமிருந்தாள். அதனால் மகிழ்ந்த இறைவன், கார்த்திகைத் தீபத்திருநாளில் ஜோதி உருவாய் மலைமீது காட்சிதந்து, அம்பிகைக்கு தன் இடப்பாகத் தினை அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

இத்தலத்தில் ஒவ்வொரு பௌர்ணமியும் சிறப்பிக்கப்படுவது யாவரும் அறிந்ததே. அம்பிகைக்குரிய ஆடிப்பௌர்ணமியன்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெறும். இந்நாளில் தம்பதி சமேதராக அம்பாளை வழிபட்டால் கணவன்- மனைவிக்குள் அன்பு மேலிடுவதுடன், குடும்பத்தில் ஒற்றுமையும் ஏற்பட்டு, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வில் மகிழ்ச்சி காண்பர் என்பது ஐதீகம்.

மேற்கண்ட ஐந்து தலங்களில் அருள்புரியும் அம்பாளை ஆடிப்பௌர்ணமி நாளில் தரிசிக்க இயலாதவர்கள், தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்று அம்பாளை வழிபட்டாலும், சகலபாக்கியங் களும் பெற்று நலமுடன் வாழலாம்.


 

மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்!


மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சக்தி பீடங்களில் முதன்மையானது.

ராஜமாதங்கி சியாமளா பீடம் என்றழைக்கப்படுகிறது.



மூலவரான மீனாட்சியம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லாலானது. தமிழகத்தில் மீனாட்சி சுந்த ரேஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் 366 கோவில்கள் உள்ளன. அதில் இக்கோவில்தான் முதன்மைக் கோவிலா கும். கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவ்வாலயம் இந்திய அதிசயங்களில் ஒன்றாகிவிட்டது.

பெரும்பாலான கோவில்களில் இறைவன் கிழக்கு முகமாகவும் இறைவி தெற்கு நோக்கியும் கோவில் கொண்டிருப்பர். ஆனால் மதுரையில் சுவாமியும் (சொக்கர்) அம்பிகையும் (மீனாட்சி) கிழக்கு நோக்கியே காட்சி தருகின்றனர்.

மதுரை தமிழகத்தின் 2-ஆவது பெரியநகரம். இது தூங்காநகரம் என பெயர் பெற்றது. இவ்வாலயம் கலையழகும், சிலையழகும், சிற்பத்திறனும், சித்திரவனப் பும் கொண்டது. நாத அமைப்பு கொண்ட தூண்களை உடையது. மூர்த்தி, தலம், தீர்த்தப்பெருமை கொண்டது. கடம்ப மரமும் வில்வ மரமும் தல விருட்சம். பொற்றாமரைக் குளம், வைகை நதி, கிருதமாலை, கொண்டாழி, தெப்பக் குளம், புறந்தொட்டி, நிர்மால்ய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்களாகும். சிறப்பு- மதுரைமல்லி, தாழம்பூ, குங்குமம், பிட்டு பலகாரம்.

பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்திரங்களாக இடம்பெற் றுள்ளன. இதே 64 திருவிளையாடல்கள் சுவாமி கோவில் மகாமண்டபத்தில் வண்ணச்சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன.

திருக்குறள் பெருமையை நிலைநாட்டிய சங்கப் பலகை தோன்றிய இடம் பொற்றாமரைக் குளம்தான். இக்குளத்தின் தென்புறச் சுவரில் 1,330 திருக்குறளும் வெண்சலவைக் கற்களில் பொறித்துப் பதித்துள்ளனர். இக்குளத்தில் இப்போது திருப்பனந்தாள் மடத்தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நம்பித் தம்பிரான் செய்தளித்த உண்மையான பொற்றாமரையையே மிதக்கவிட்டுள்ளனர்.

ராஜசேகர பாண்டியன் விருப்பப்படி நடராசர் தன் கால் மாற்றி ஆடிய தலமிது. அதுதான் வெள்ளி சபை என்ற ரஜத சபை. இது பஞ்ச சபைகளில் ஒன்று. பெயருக்கேற்றாற்போல் சந்நிதி முழுவதுமே வெள்ளியாலானது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த வெள்ளி வேலைப்பாடு கள் அனைத்தும் ஒரு முஸ்லிம் சிற்பியால் செய்து தரப் பட்டதுதான்.

மேலும் இவ்வாலயத்தில் பஞ்ச சபைகளும் உள்ளன. முதல் பிராகாரத்தில் கனகசபையும், ரத்ன சபையும்; வெள்ளியம்பலத்தில் ரஜதசபையும்; நூற்றுக்கால் மண்டபத்தில் தேவசபையும்; ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திர சபையும் அமைந்துள்ளன.

ஆயிரங்கால் மண்டபத்தில் ஒலியெழுப்பும் சிலைகள் பலவுள்ளன. அத்துடன் ஏழு இசைத்தூண்களும் உள்ளன.

இங்கு முக்கியமான இடம் திருமலை நாயக்கர் கோவிலிலுள்ள நூல் நிலையம். ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்தைத் தரிசித்து மீனாட்சியம்மன் அருளைப் பெறுவது அவசியம்.

இவ்வாலயத்தில் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் மிகவும் உயரமானது தென்கோபுரம். உயரம் 160 அடி. இதில் 1,511 சிற்பங்கள் உள்ளன.

மேலை கோபுரத்தில் 1,124 சிற்பங்களும்; கீழை கோபுரத்தில் 1,011 சிற்பங்களும்; வடகோபுரத்தில் 404 சிற்பங்களும்; விமானத்தில் 174 சுதைச் சிற்பங்களும் என மேலும் பல சிற்பங்களுடன் மொத்தம் 4,224 வண்ணச் சிற்பங்களைக் காணலாம். அத்துடன் ஆலயத்தில் 264 சுவாமி சிலைகளும் உள்ளன.
தெப்பக் குளத்தில் கிடைத்த ஏழு அடி உயர முக்குறுகுணிப் பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசி மாவால் மிகப்பெரிய கொழுக்கட்டை செய்து விநாயகர் சதுர்த்தி யன்று படைப்பார்கள். அம்மனுக்கு 15 திருப்பெயர்களும் சுவாமிக்கு 14 திருப்பெயர்களும் உள்ளன. ஆலய பிரசாதம் பிட்டுதான்!

மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை எழுந்தருளலும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களாகும்.