Tuesday 26 July 2016

ஆடி மாத வாராஹி நவராத்திரி!


ஆதிபராசக்தியான ராஜராஜேஸ்வரிக்கு மந்திரி அல்லது மந்த்ரிணி சியாமளா தேவி. மாதங்கி அல்லது ராஜமாதங்கி என்றும் பெயர். (மதுரை மீனாட்சியை சியாமளா என்பர்). ராஜராஜேஸ்வரிக்கு சேனாதிபதி வாராஹிதேவி. மந்திரி, சேனாதிபதியின் ஆலோசனையில்தானே ராஜேஸ்வரி ராஜாங்கம் செய்யமுடியும். ஆகவேதான் வாராஹி தேவி முக்கியத்துவம் பெறுகிறாள்.பல சிவன் கோவில்களில் சப்த மாதர்கள் என்று ஏழு தேவிகள் இருப்பர். அவற்றுள் வாராஹியைக் காணலாம். வராகம் என்றால் பன்றி. தேவி பன்றி முகத்துடன் இருப்பாள். வராக அவதார விஷ்ணுவின் சக்தியே வாராஹி.


தாருகாசுரன் யுத்தத்தில் காளிக்கும், சும்பாசுரன் யுத்தத்தில் சண்டிகைக்கும், பண்டாசுரன் யுத்தத்தில் லலிதைக்கும் உறுதுணையாக இருந்தவள் வாராஹிதேவி.

சியாமளா தேவியின் ரதம்- கேயசக்கர ரதம்.
வாராஹி தேவியின் ரதம்- கிரிச்சக்கர ரதம்.

வாராஹிக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும், லலிதா உபாக்யானம் 12 நாமங்கள் முக்கியமானவை என்று கூறுகிறது.

பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மஹாஸேனா, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகியவையே அவை.

வாராஹிதேவியின் அருள்பெற இந்த 12 நாமங்களே போதும்.

இந்த தேவியை ஸ்வப்ன வாராஹி, தூம்ர வாராஹி, ப்ருஹத் வாராஹி, அஸ்த்ர வாராஹி என நான்கு ரூபங்களில் வர்ணிப்பர்.

வாராஹி விஷ்ணு சக்தியானதால் சங்கு, சக்கரம் உண்டு. அபய, வரத கரங்கள் உண்டு.

பொதுவாக நான்கு கரங்கள். ஆறு கரங்கள் இருந்தால் கூடுதலாக கேடயம், வாள் இருக்கும். எட்டு கரங்கள் என்றால் வில், அம்பும் இருக்கும்.

உபாசகனின் தீய எண்ணங்களை அழிப்பவள் வாராஹி. காஞ்சி காமாட்சி கோவிலில், தேவியின் இடப்புறம் கோஷ்ட தேவியாக வாராஹியைக் காணலாம்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் வாராஹிக்கு தனிச்சந்நிதி உண்டு. ராஜராஜனுடைய இஷ்டதெய்வம் வாராஹி. சோழ மன்னர்கள் போருக்குப் புறப்படுமுன் வெற்றியடைய வணங்கிய தேவி இவள்.

காசியில் திரிபுர பைரவி படித்துறையில் தரைமட்டத்திற்குக் கீழே பாதாள வாராஹி விளங்குகிறாள். பகலில் இவளை தரிசிக்கமுடியாது.

சென்னை சோழிங்கநல்லூர் பிரத்யங்கிரா கோவிலில் வாராஹிக்கு சந்நிதி உள்ளது.

திருச்சி- திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை வாராஹி என்பர்.

காயத்ரி:

ஸ்யாமளாயை வித்மஹே
ஹலஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்.

அபிராமி அந்தாதியில் வாராஹி நாமம் வரும் இரு துதிகள் சிந்திப்போமா!

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை நச்சு
வாயகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி சுக
நாயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே.

ஆடி மாத பஞ்சமி, செவ்வாய், ஞாயிறு, வெள்ளி தினங்களில் வாராஹி தேவியைத் துதித்து  நலமுடன் வாழ்வோமே.




No comments:

Post a Comment