Thursday 29 October 2015

வெற்றிகளை அருளும் விநாயகி!


கஜமுகம் கொண்ட இப்பெண் தேவதையை, விநாயகி என்ற பெயரை மாத்திரம் இலிங்க புராணம் (02-27-215) கூறுகிறது. 

ஸ்காந்த புராணம் இவளை கஜானனை என்று அழைக்கிறது. 

விஷ்ணு தர்மோத்ர புராணம் (1-226-6) மாத்ரு கணங்களில் கணேசினியும் ஒருவள் என்கிறது. 


அந்தகாசூரனின் குருதியைப் பருக, சிவனால் படைக்கப்பட்ட தேவதையே இவள் என்கிறது மத்ஸ்ய புராணம் (179-18). 

பெண் தெய்வ நாமாக்களை கூறும் வன துர்கோபநிஷத் எனும் கிரந்தத்தில் இவள் நாமம் கணேஸ்வரி என்று கூறப்பட்டுள்ளது.

கஜானனி, கஜானனை, கணேசினி, கணேஸ்வரி, விக்நேஸ்வரி, விநாயகி, லம்போதரி, ஐங்கிணி, வைய நாயகி  என்ற பெயர்களும் உண்டு. 



 லலிதாம்பிக்கைக்கு 64 கோடி யோகினிகள், பரிவார தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள் என்று லலிதா ஸகஸ்ர நாமம் கூறுகிறது. 

பெண் உருவம் கொண்ட விநாயகி, இந்த யோகினிகளில் ஒருவர் என்று வட மாநிலத்தார் கருதுகின்றனர். 



வடமொழியில் ஸ்கந்த புராணத்தில் காசிக் காண்டத்தில் யோகினி களின் பட்டியலில் விநாயகி, கஜானனா எனும் பெயர்கள் காணப் படுகின்றன. அறுபத்தி நான்கு யோகினிகளின் பட்டிலில் விநாயகியும் காணப்படுகிறாள். 

யோகினி என்பவர்கள், அன்னை பார்வதி அசுரர்களை எதிர்த்துப் போரிடக் காளியாகச் சென்றபோது, அன்னையைச் சூழ்ந்து நின்று காளிக்கு உதவி யாக அசுரர்களை எதிர்த் தவர்கள். 


தென்னாட்டிலோ அவளை ‘ஸ்ரீவாஞ்சா கல்ப லதா ஸ்ரீவித்யா கணபதி’ என்று சக்தி ரூபமாக பாவித்து ஸ்ரீவித்யா உபாசகர்கள் அவளை வழிபடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் ஒரு தூணில் விநாயகி யின் சிற்பமுள்ளது. இது கி.பி.17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். 

அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளது. தலையில் வேலைப் பாடுடன் கூடிய அழ கிய மகுடம் விளங்கு கிறது. மேற்கைகளில் அங்குச- பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய- வரத ஹஸ்தங் களாக விளங்குகின் றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம். கழுத்தணியும் பூணூ லும் அழகு செய்கின் றன. கால்களில் சிலம் புகள். அழகாகக் கட்டப்பட்ட ஆடை யும் மேகலையும் அழகூட்டுகின்றன. இடப்புறம் திரும்பி பாதத்தைத் தொடுமளவு துதிக்கை நீண்டு விளங்குகிறது.


குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிற்பம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில், சுவாமி சந்நிதியின் நுழைவாயிலில் வடபுறமுள்ள தூணில் காணப்படுகிறது.

இது நின்ற கோலம். தலையில் மகுடம்; சற்றே வலப்பக்கம் சாய்ந்து காணப்படுகிறது. 

இதனைப் போன்ற மற்றொரு உருவத்தை சிதம்பரத்திலும் காணலாம். 

நின்ற கோலம்தான். வலக்கையில் பூங்கொத்து. இடக்கை தூக்கிய நிலை. கழுத்திற்குக் கீழ் கச்சையற்ற இரு நகில்கள். இடுப்பிற்குக்கீழ் புலியின் இடுப்பும் இரு கால்களும் உள்ளன. தூக்கிய வால். இத்தகைய யானைத் தலை, பெண் மார்பு- கை, புலியின் கால்பாகம் உடைய சிற்பங்களை சிற்ப நூலார் வியாக்ரபாத விநாயகி என்பார்கள். 



சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள்  ஏராளமாக உள்ளன.

இதில் ஒன்று விநாயகர் பெண் வடிவத்தில் இருக்கின்ற சிற்பமாகும். விக்னேஸ்வரி என்ற பெயரில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

இவற்றைத் தவிர, திருச்செந்தூர், பவானி, திருக்குறுங்குடி ஆகிய இடங்களிலும், திருநெல்வேலித் தேரிலும்  சிற்ப வடிவில் சிரித்துக்கொண்டிருக்கும் விநாயகி வடிவங்களும், ஒருகாலத்தில், அவள் வழிபாடு மிகப்புகழ் பெற்றதாக இருந்திருக்கவேண்டும் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கின்றன .
 
 

No comments:

Post a Comment