Thursday 29 October 2015

மஹா சங்கடஹர சதுர்த்தி



ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்!

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் வேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.



ஆவணி மாதம் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி தினம் மஹா சங்கடஹர சதுர்த்தியாக அனுசரிக்கப்படுகிறது. முழுமுதல் கடவுள் வேழமுகனாம் விநாயகக் கடவுளுக்கு மிகவும் உகந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம். இது மாதம் தோறும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. வருடத்தில் இரண்டு முறை ஆவணி மற்றும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தி தினம் மஹா சங்கடஹர சதுர்த்தியாக விசேஷமாக அனுஷ்டிக்கபடுகிறது.

விக்கினங்கள் தீர்க்கும் கடவுள் விநாயகர். அவரைக் குறித்து விரதம் இருந்து வழிபட்டு உபவாசத்துடன் நாள் முழுவதும் இருந்து அன்றைய தினம் இரவு சந்திரனை தரிசித்து வணங்கி பின்னர் உணவு அருந்த வேண்டும். இந்த விரதம் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி அடுத்த வருடம் ஆவணி மாதம் சங்கடஹர சதுர்த்தி வரை தொடர்ந்து ஒரு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதால் காரியசித்தி, விக்கினங்கள் அகலுதல், திருமணவரம், புத்திரபாக்கியம், நினைத்த காரியம் நிறைவேறுதல், ஆகியன கைகூடும். விரத தினத்தன்று காலையில் நீராடி அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு உபவாசத்தை துவங்க வேண்டும் அன்று முழுவதும் ஆகாரம் அருந்த கூடாது.

பின்னர் மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்துகொண்டு பின்னர் வீடு வந்து சந்திரன் உதயமானதும் வணங்கி விட்டு வீட்டு பூஜையறையில் விநாயகப் பெருமானுக்கு மலர் அர்ப்பணம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

 பின்னர் முழு உணவு அருந்தாமல் சிறிதளவு சிற்றுண்டி அல்லது பால் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.  விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் நிறைவு செய்ய  வேண்டும். சங்கடஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக!




No comments:

Post a Comment