Friday 25 December 2015

பிறவாப் பேரின்பம் தரும் ஆருத்ரா தரிசனம்!


சிவாலயங்களில் ஆடலரசனான நடராஜப் பெருமானுக்கு ஆகமநியதிப்படி ஆறுகால பூஜையின்போது அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தேவர்களும் இதுபோன்று ஆறுகால பூஜை நிகழ்த்துவதாக சாஸ்திரம் கூறுகிறது.

நமக்கு ஓராண்டு என்பது தேவர் களுக்கு ஒரு நாளாகும்.


மார்கழி திருவாதிரைத் திருநாள் தேவர்களின் வைகறை வழிபாடு.
மாசி வளர்பிறை சதுர்த்தி காலசந்தி பூஜை.
சித்திரை திருவோணம் உச்சிக்கால பூஜை.
ஆனி உத்திரம் சாயரட்ச பூஜை.
ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாள் இரண்டாம் கால பூஜை.
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி நாள் அர்த்தஜாம பூஜை.


 இப்படி ஆறுகால பூஜையை தேவர்கள் நடத்துகிறார்கள். இவற்றில் மார்கழியில் நடைபெறும் அபிஷேகத் திருநாள் திருவாதிரைத் திருநாளாகும்.

இவ்வாறு அபிஷேகங்கள் காணும் ஆடல்வல்லான் யுகயுகமாய் பற்பல காரணங்களுக்காக நடனமாடி வருகிறார். அவர் ஆகாசவெளியில் ஆனந்தத் தாண்டவமாடும் திருத்தலம்தான் பொன்னம்பலம், சிற்றம்பலம், பெரிய கோவில், தில்லை எனப்படும் சிதம்பரமாகும்.

இத்தலத்திலுள்ள மூலஸ்தான லிங்கத்தில் சிவகலைகள் ஆயிரமும் ஒடுங்கியிருக்கிறதாம். இதிலிருந்து ஒரேயொரு கலை மட்டும் புறப்பட்டு, உலகிலுள்ள அனைத்து சிவத்தலங்களுக்கும் சென்றுவிட்டு, யாமத்தில் மீண்டும் தில்லைக்கு வந்து சிவலிங்கத்தில் ஒடுங்குகிறதாம். சுயம்பு லிங்கமாக அருள்புரியும் இறைவன் இங்கு மூலட்டானத்தார் என்று போற்றப்படுகிறார்.

தில்லையில் அருள்புரியும் சிவனாரின் ஆடல் திருவுருவம் சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சிதருகிறது.ராமநாதபுரத்திற்குத் தென்மேற்கில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் உத்தரகோசமங்கை. இங்கு ஒரே மரகதக் கல்லாலான பிரம்மாண்டமான நடராஜர் விக்ரகம் உள்ளது.

ஒளிவெள்ளத்தில் பார்த்தால், இந்த விக்ரகம் உயிரோட்டத்துடன் இருப்பது போல் தோன்றும். அபூர்வமான இந்த விக்ரகத்தில் மனித உடலில் உள்ளதுபோல் பச்சை நரம்புகள் இருப்பதை பக்தர்கள் பலரும் தரிசித்திருக்கிறார்கள்.இந்த விக்ரகம் ஒலி- ஒளி அதிர்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்க இந்தக் கோவிலில் மேளதாளங்கள் வாசிப்பதில்லை. எந்தவிதத்திலும் விக்ரகம் சேதப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆண்டுமுழுவதும் சந்தனக் காப்பிட்டு பாதுகாத்து வருகிறார்கள்.

வருடத்திற்கு ஒருநாள் மார்கழித் திருவாதிரைத் திருநாளன்று மட்டும் சந்தனக்
காப்பு களையப்படும். அன்று முழுவதும் மரகதக்கல் மேனியனான நடராஜப் பெருமானை பக்தர்கள் கண்டு பேருவகை கொள்ளலாம். இரவு மீண்டும் நடராஜருக்கு சந்தனக் காப்பு அணிவிக்கப்படும்.

முற்காலத்தில் கடல் வணிகத்தில் சிறந்துவிளங்கிய அப்துல்ஹமீது மரைக்காயர் என்பவருக்கு ஒரு பெரிய மரகதக்கல் கிடைத்தது. அவர்
அந்தக் கல்லை சேதுபதி மன்னருக்குப் பரிசளித்தார். மன்னர், சிறந்த ஸ்தபதிகளை வரவழைத்து அந்த மரகதக் கல்லை நடராஜர் விக்ரகமாக வடிக்கச்செய்தார். மரைக்காயர் என்ற அன்பர் கொடுத்த பச்சைக் கல்லால் செய்யப்பட்டதால் இதை "மரைக்காயர் பச்சை' என்கிறார்கள்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பிரம்மதேசம் கயிலாயநாதர் ஆலயத்திலுள்ள நடராஜரும் சந்தனக்காப்பிலேயே காட்சியளிப்பவர். ஓம் என்ற வடிவம் கல்லில் செதுக்கப்பட்டு ஸ்ரீநடராஜரைச் சுற்றி திருவாட்சியாக அமைக்கப்பட்டுள்ள ஒரே கோவில் இதுதான் என்று கூறப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஆறு முறை மட்டும் அபிஷேகம் காணும் நடராஜர், மற்ற நாட்களில் சந்தனக்காப்புடன் திகழ்கிறார்.

தில்லை நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை நாளில் சிறப்பு நிவேதனமாக களி படைக் கப்படுகிறது.



 

No comments:

Post a Comment