Tuesday 1 December 2015

தீபாவளி பண்டிகை



தீபாவளி அன்று செய்ய வேண்டியவை:

1.
கங்கா குளியல்
2.
தீபாவளி மருந்து சாப்பிடுதல்
3.
குபேர பூசை

 

கங்கா குளியல்

 

கங்கா குளியல் என்பது ஒரு மனைப்பலகையை எடுத்துச் சுத்தம் செய்து அதில் மாக்கோலமிட்டு, அதைக் கிழக்கு நோக்கி வைத்து, அதில் குடும்பத்தினரில் ஒவ்வொருவராக அமர வைத்து இந்தச் சடங்கை நடத்துவர். இதைநலுங்குஎன்றும் சொல்வதுண்டு. மஞ்சள், குங்குமம் சந்தனம் முதலியவற்றை குடும்பத்தினர் நெற்றியிலிட்டு பூக்களைத் தூவி நலுங்கிட்ட பின், இறைவனுக்குப் படைத்த நல்லெண்ணெய்யைத் தலையில் தடவிக் குளிக்க வேண்டும். இந்து சமயக் குடும்பங்களில் நடத்தப் பெறும் இச்சடங்கில் குடும்பத்தின் வயது முதிர்ந்தவர் இந்தச் செயல்பாடுகளைச் செய்கின்றனர். நலுங்கைப் பெற்றுக் கொண்டவர் வயது முதிர்ந்தவரை வணங்கிய பின் குளிக்கச் செல்வர்.

 

தீபாவளி மருந்து

 

கங்கா குளியலுக்குப் பின்பு, எதையும் சாப்பிடுவதற்கு முன்பாகத் தீபாவளி மருந்தைச் சாப்பிட வேண்டும். தீபாவளியன்று, இனிப்பு மற்றும் பிற உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால் ஏற்படும் வயிற்று வலிகள் மற்றும் செரிமானமின்மை போன்றவைகளை இந்தத் தீபாவளி மருந்து அகற்றி விடும்.

இந்த மருந்தைத் தயாரிக்க சுக்கு, சீரகம், ஓமம், பூண்டு, பனங்கற்கண்டு (கருப்பட்டியும் பயன்படுத்தலாம்), சிறிது நெய் போன்றவை தேவைப்படுகின்றன. சுக்கு, சீரகம், ஓமம் மற்றும் பூண்டு போன்றவற்றை நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பனங்கற்கண்டு (கருப்பட்டி) பொடித்துப் போட்டு மெதுவாகக் கிளற வேண்டும். அந்தக் கரைசல் சர்க்கரைப் பாகு போன்ற நிலைக்கு வந்ததும், அதில் இடித்து வைத்திருக்கும் சுக்கு, சீரகம், ஓமம் மற்றும் பூண்டுக் கலவையைப் போட்டு கிளற வேண்டும். கலவை இறுகி வந்ததும் அதில் சிறிது நெய் விட்டு இலேசாகக் கிளறி இறக்கி விட வேண்டும். இதுதான் தீபாவளி மருந்து.

இந்தத் தீபாவளி மருந்தை வீட்டிலிருக்கும் சுமங்கலிப் பெண்களில் பெரியவராக இருப்பவர் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

 

 

குபேர பூசை

 

குபேர பூசையைத் தீபாவளியன்றோ அல்லது மறுநாளோ செய்யலாம். மகாலட்சுமியின் அருள் பெற்ற குபேரனை வணங்குவதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது தொன்ம நம்பிக்கை. இந்தக் குபேரப் பூசையைச் செய்யும் போது மகாலட்சுமியைச் செந்தாமரை மலர்களாலும், குபேரனைப் பொற்காசுகள் அல்லது வெள்ளிக் காசுகளால் (இக்காசுகள் இல்லாதவர்கள் சாதாரணமான நாணயங்களைப் பயன்படுத்தலாம்) அர்ச்சித்து வணங்கிட வேண்டும்.




No comments:

Post a Comment