Wednesday 23 December 2015

ஐயப்பனுக்கு தங்க அங்கி!




திருவனந்தபுரம்:

மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமியே... சரணம் ஐயப்பா என்ற முழக்கத்துடன் தங்க அங்கி பெட்டியை தரிசனம் செய்தனர்.கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜை தான் மண்டலபூஜை. இந்த நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 1973ல் 450 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது மண்டலபூஜைக்கு முந்தைய நாளிலும், மண்டலபூஜை நாளிலும் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும்.பத்தணந்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி ஒவ்வொரு ஆண்டும் மண்டலபூஜைக்கு நான்கு நாட்கள் முன்னதாக பவனியாக எடுத்து வரப்படுகிறது. சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு வழிநெடுகிலும்பக்தர்களுக்கு தரிசனம் வழங்கி இந்த பவனி பம்பை வந்தடையும்.


 
தங்க அங்கி பவனி!

இந்த ஆண்டு 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு தங்க அங்கி ஊர்வலம் நேற்று காலையில் ஆரன்முளாவிலிருந்து புறப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


 
பக்தர்களுக்கு தரிசனம்
 
காலையில் கிளம்பிய தங்க அங்கி ஊர்வலம் இரவு ஓமல்லூர் ரத்தகண்டசாமி கோயிலை அடைந்தது. இன்று காலை அங்கிருந்து புறப்படும் ஊர்வலம் 26ம் தேதி பிற்பகல் பம்பையை அடையும். பம்பை கணபதி கோயிலில் தங்க அங்கி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வைக்கப்படும்.

 
தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பன்
 
பம்பையில் இருந்து புறப்பட்டு மாலையில் சன்னிதானத்தை அடையும். இதன்பிறகு தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். மறுநாள் மதியம் 12.30 மணியளவில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடைபெறும். இந்த 2 நாளும் தங்க அங்கி அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம்.
 

 
குவியும் பக்தர்கள்:
 
மண்டலபூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சரங்குத்தியில் அங்கிக்கு வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரஇருக்கின்றனர். தங்க அங்கியில் ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
 
 


 

No comments:

Post a Comment