Monday 30 January 2017

வையம் இடந்த வராகர்!


*மீனாய், ஆமையாய் கொண்ட அவதாரங்கள் தேவருலகைக் காக்க அமைந்தது. நரசிம்ம அவதாரமோ தனது பக்தனைக் காத்து, துஷ்டனை சம்ஹரிக்க ஏற்பட்டது. வாமன, பரசுராம அவதாரங்கள் வழி தவறிப்போன அரசர், ஆட்சியாளர்களை அடக்கி அமைதியை நிலைநாட்ட அமைந்தது. ஸ்ரீராம, கிருஷ்ண அவதாரங் களோ, தர்மத்தை நிலைநாட்ட ஏற்பட்டது. 

ஆனால், வராக அவதாரமோ, வேத சம்ரட்சணத்துக்காகவும், ஹிரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமிப் பிராட்டியைக் காக்கவும் அமைந்தது.

தசாவதாரங்களில் வராக அவதாரம் வித்தியாச மானதுதான்! வராகம் எனில் பன்றி. அதுவும், மூக்கு நுனியில் கொம்பு உள்ள பன்றி. 

இந்த அவதாரத்துக்குக் காரணம்தான் என்ன?
அசுரன் ஹிரண்யாட்சன் தேவர்களுக்கும் மனிதர் களுக்கும் கற்பனைக்கு எட்டாத ஹிம்சைகளைக் கொடுத்து வந்தான். இதனால், அவர்கள் அடைந்த துயரங்கள் மிக அதிகம்! ஆனால், அசுரன் கொண்ட மகிழ்ச்சியே மிக மிக அதிகம். அசுரன் ஹிரண்யாட்சன் மகிழ்ச்சி நிறைவடையாததால் சலிப்படைந்த அவன், ஒரு கட்டத்தில் மொத்தமாக பூமியையே பிரபஞ்சத் திலிருந்து பிடுங்கிக் கொண்டு போ பெருங்கடலினுள் அமிழ்த்தி வைத்தான். பூமியை ஒளித்து வைத்ததில் அவனது மகிழ்ச்சி ஒரு நிறைவைக் கண்டது.

பூமிப் பிராட்டியைக் காணாது, வருணன், அக்னி, சூரியன் உள்ளிட்ட தேவர்கள் திகைத்தனர். பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஆற்றக்கூடிய தங்களின் கடமை தடைப்பட்டதைக் கண்டு தவியாத் தவித்தனர். வேறு வழியின்றி, காக்கும் தெய்வம் மஹா விஷ்ணுவிடம் முறையிட்டனர். 

அந்த பூமா தேவி...? ஆழ்கடலில் சிறைப்பட்டுக் கிடந்தாள்.
தம் பத்னி பூமிப்பிராட்டியை மீட்கவும், உயிரினங் கள் வாழவும் புதியதோர் அவதாரம் எடுத்தார் ஸ்ரீ மகா விஷ்ணு. அதுதான் வராக அவதாரம். 

வராக ரூபமா கடலினுள் பாந்தார். பூமிப் பிராட்டியை சிறைப் படுத்திக் கொக்கரித்துக் கொண்டிருந்த ஹிரண்யாட்சனைத் தம் மூக்குக் கொம்பால் குத்திக் கிழித்துக் கொன்றார். பின்னர், பூமா தேவியை மூக்கின் மேல் நிறுத்தி, கடலில் இருந்து மேலே கொணர்ந்தார். ஸ்ரீமந் நாராயணனின் இந்த அவதாரம் கண்டு, பூமி உள்ளிட்ட அனைத்து உலகங்களும் ஆனந்தத்தில் கொண்டாடின.

இத்தகைய அற்புதக் கோலத்தைத் தாங்கிய வராகப் பெருமான், பூவராகராகக் கோயில் கொண்டு அருள்பாலிப் பது கடலூர் மாவட்டம் , ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில்.
பிராட்டிக்கு அருள்புரிந்த பகவான், பக்தருக்காகவும் நிச்சயம் அருளுவான்!



No comments:

Post a Comment