Monday 30 January 2017

நெமிலி பாலா திரிபுரசுந்தரி!



சுண்டு விரல் அளவு அம்மன், குசஸ்தலை ஆற்றில் தோன்றியவள், அடியாரின் வீட்டையே ஆலயமாக்கிக் கொண்ட அன்னை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குபவள், வேலூர் மாவட்டம் நெமிலியில் எழுந்தருளியுள்ள பாலா திரிபுரசுந்தரி!



உலகைக் காக்கும் மாதாவின் செல்ல மகளே பாலா. ஒன்பது வயதான இவள் ஆற்றலில் அன்னைக்கு நிகரானவர். அன்னை வித்யா என்றால், இவள் வித்யாபாலா. ஸ்ரீலலிதோ பாக்யானம் என்ற புராணத்தில் இவளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.



அன்னை லலிதா தேவியோடு போரிட்டு வெல்ல முடியாத பண்டாசுரன், தனது முப்பது மைந்தர்களை போருக்கு அனுப்பினான். லலிதாவின் மகளான பாலா தன் அன்னை லலிதாவிடம் கலசங்களையும், ஆயுதங்களையும் பெற்று ரதம் ஏறி போருக்கு புறப்பட்டாள். போரில் பண்டாசுரன் மகன்களுடன் போரிட்டு அனைவரையும் அழித்தாள். இதன்பின் பாலா, அன்னை லலிதாவோடு ஐக்கியமானாள் என்கிறது புராணம்.

அதன்பின் இந்தக் கலியுகத்தில் மீண்டும் கண்கண்ட தெய்வமாகத் தோன்றினாள் பாலா.



வேலூர் மாவட்டத்தில் உள்ள நெமிலியில், அம்மன் உபாசகரான சுப்பிரமணியர் என்பவர் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அவரது கனவில் தோன்றிய அன்னை பாலா, ‘உன்னோடு வாழும் அன்னை ராஜராஜேஸ்வரியின் கட்டளைக்கு இணங்க, ஆற்றில் மிதந்து குழந்தை பாலாவாக உன் ஊருக்கு வருகிறேன். என்னை உன் வீட்டில் வைத்து வழிபாடு செய்!’ என்றாள்.



கனவு கலைந்ததும் அந்த நடு இரவிலேயே கண் விழித்த சுப்பிரமணியர், உடனடியாக தன் வீட்டில் அருகில் ஓடும் குசஸ்தல ஆற்றிற்குச் சென்றார். 

அப்போது எதுவும் கிடைக்கவில்லை. மனம் தளர்ந்து போகாத நிலையில் மூன்றாம் நாளன்று அவர் ஆற்றில் மூழ்கி எழும்போது, அவரது கரங்களில் தவழ்ந்தாள் அன்னை பாலா.



ஒரு சுண்டு விரல் அளவே அன்னையின் உருவம் என்பது தனிச் சிறப்பு.

அன்னையின் ஆணைப்படி தன் வீட்டிலேயே வைத்து வழிபாடலானார். இந்த வீடே பிற்காலத்தில் பாலாபீடமாக உருமாறி, வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து வந்து அருள்பெற்றுச் செல்லும் ஆலயமாக மாற்றம் கண்டுள்ளது. 


அன்னை, பாலா திரிபுரசுந்தரி என்று அழைக்கப்படுகிறாள். அன்னை பாலாவிற்கு இசை மீது அளவற்ற பிரியம். கருவூர் சித்தர் இந்த அன்னையைப் பற்றி பாடல் பாடியுள்ளார்.


பாலா திரிபுரசுந்தரி!

ஒரு கையில் ஜெப மாலை, மற்றொரு கையில் புத்தகம் கொண்டு காட்சி தருவது பாலா திரிபுரசுந்தரியின் தோற்றம் ஆகும். 




உலகத்து தெய்வ உருவங்களில் சிறிய உருவம் கொண்டு விளங்குவது நெமிலி பாலா மட்டும்தான். சுண்டு விரல் அளவில் ஒளி வீசும் அமைப்பில் அன்னையானவள் காட்சி தருகின்றாள்.


சித்தர்களும், ஞானிகளும் போற்றும் தெய்வம் இவள். தெய்வங்களே சீராட்டும் குழந்தை இவள். அளவற்ற சக்தியை பெற்ற மையப்புள்ளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னையானவள் கோவிலில் குடிகொள்ளாமல், அடியாரின் வீட்டை தேர்வு செய்து குடி கொண்டு அருளாட்சி செய்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்னை பாலா திரிபுரசுந்தரி வீற்றிருக்கும் இடம் பாலாபீடம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.


காலை 9 மணிக்கு ஆலயம் திறந்திருக்கும். அப்போது பாலா திரிபுரசுந்தரியைத் தரிசிக்க முடியும்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா சத்திரம் தெருவில் அமைந்துள்ளது நெமிலி பாலா பீடம். இது அரக்கோணத்திற்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும், சோளிங்கருக்குக் கிழக்கே 26 கிலோமீட்டர் தூரத்திலும், காஞ்சீபுரத்திற்கு வடக்கே 24 கிலோமீட்டர் தொலைவிலும், காவேரிப்பாக்கத்திற்கு கிழக்கே 20 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து மேற்கே 85 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மாதத்தின் முதல் ஞாயிறு, புத்தாண்டு, நவராத்திரி இன்னிசை விழா, தை, ஆடி வெள்ளிகள், ஐப்பசி பூரத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

நினைத்த வரம் பெற விரும்புவோர் நெமிலி பாலாவை தரிசிக்கலாம். பாலா பீடத்தினர் ஆன்மிக யாத்திரையை மேற்கொள்வதால்,  பாலாவை தரிசிக்க விரும்புவோர் 04177-247216 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசி விட்டுச் செல்லலாம்.


No comments:

Post a Comment