Monday 30 January 2017

தென் தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்!


சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.
அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார்.

இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.


அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.

உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும்,

அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும்,

கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப் படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது.


முதல் மலர் பாபநாசம் (சூரிய தலம்)
இரண்டாவது மலர் சேரன்மாதேவி (சந்திரன்)
மூன்றாவது மலர் கோடகநல்லூர் (செவ்வாய்)
நான்காவது மலர் குன்னத்தூர்  (ராகு)ஐந்தாவது மலர்முறப்பநாடு  (குரு)ஆறாவது மலர் ஸ்ரீவைகுண்டம் (சனி)ஏழாவது மலர் தென் திருப்பேரை (புதன்)எட்டாவது மலர் ராஜபதி (கேது)ஒன்பதாவது மலர் சேர்ந்தபூமங்கலம் (சுக்கிரன்)



சூரிய தலம்: பாபநாசம்
அம்சம்: சூரியன் நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம் மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர் அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


சந்திர தலம்: சேரன்மகாதேவி அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம் மூலவர்: ஸ்ரீஅம்மைநாதர் அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


செவ்வாய் தலம்: கோடகநல்லூர் அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம் மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


ராகு தலம்: குன்னத்தூர் (சங்காணி)அம்சம்: ராகு நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம் மூலவர்: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர்அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. இது சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.


குரு தலம்: முறப்பநாடு அம்சம்: வியாழன் (குரு)நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி மூலவர்: ஸ்ரீகைலாச நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


சனி தலம்: ஸ்ரீவைகுண்டம் அம்சம்: சனி நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி மூலவர்: ஸ்ரீ கைலாச நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


புதன் தலம்: தென் திருப்பேரை அம்சம்: புதன் நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


கேது தலம்: ராஜபதி அம்சம்: கேது நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம் மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி இருப்பிடம்: தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


சுக்கிரன் தலம்: சேர்ந்த பூமங்கலம் அம்சம்: சுக்கிரன் நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம் மூலவர்: ஸ்ரீகைலாசநாதர் அம்பாள்: ஸ்ரீசௌந்தர்ய நாயகி இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.




இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. 



No comments:

Post a Comment