Monday 30 January 2017

பூஜைக்கு உகந்த மலர்கள்!



“புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்பது திருமுறை. மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் வழிபாடு செய்வது இன்றியமையாதது.

திருக்கோயிலுக்குச் செல்லும்போது இறைவழிபாட்டிற்குரிய மலர்கள், அபிஷேகத் திரவியங்கள், தூபம், தீபம் முதலியவற்றிற்கான பொருள்களைக் கொண்டு செல்லவேண்டும்.

வழிபாட்டிற்குரியனவற்றை இடுப்பிற்குக் கீழே இருக்குமாறு எடுத்துச் செல்லக்கூடாது. இரு கைகளாலும் கொண்டுசெல்ல வேண்டும். தூய்மையான இடங்களில் வைக்கவேண்டும்.



 

காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், (தாழை – இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது.) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.

நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் ஆகியன நன்மை தரும்.

மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன.

அஷ்ட புஷ்பங்கள்!

அறுகு, சண்பகம், புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டுமாம்.

உபயோகிக்க நாட்கள்!

தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறு மாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், சண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.

கையிற்கொண்டு வந்தது, தானாக விழுந்தது, காய்ந்தது, முகர்ந்துபார்க்கப்பட்டது, அசுத்தமான இடம், பொருள்களில் வைக்கப்பட்டது ஆகியன பூஜைக்கு ஆகாதனவாம். மலர்களைக் கிள்ளிச் சாத்தக்கூடாது (முழு மலராகவே சாத்த வேண்டும்). இலைகளைக் கிள்ளிச் சாத்தலாம். வில்வம், துளசி முதலியவற்றைத் தளமாகச் சாத்தவேண்டும்.

பூஜைக்குரிய இலைகள் (பத்திரங்கள்)!

துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியன.

தேவர்களுக்கு ஆகாத மலர்கள்!

அட்சதை, வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதாம். செம்பரத்தை, தாழம்பூ, குந்தம், கேசரம், குடஜம், ஜபாபுஷ்பம் இவை சிவனுக்கு ஆகாதன. அறுகு, வெள்ளெருக்கு, மந்தாரம் இவை அம்மைக்கு ஆகாதன. வில்வம் சூரியனுக்கு கூடாது. துளசி விநாயகருக்குக் கூடாது.

மூன்று தளங்களை உடைய வில்வம் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள், சோம, சூரிய, அக்னி ஆகிய முக்கண்கள், மும்மூர்த்திகள் ஆகிய தன்மைகள் பெற்றன. மூன்று ஜன்மாக்களில் செய்த பாபத்தைப் போக்கும். மூன்று தளங்களும் இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்று சக்திகளின் வடிவம்.

பஞ்ச வில்வங்கள்!

முல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியன.

இறைவனுக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்து வழிபடாமல் உண்பவன் பொருள் நாசத்தை அடையும். எனவே உகந்தனவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும்.


உபசாரமில்லாவிடில் உண்டாகும் தீங்கு!

பூஜை இல்லாவிடின் ரோகமும், புஷ்பமில்லாவிடில் குலநாசமும், சந்தனமில்லாவிடின் குஷ்டரோகமும், ஜலமில்லாவிடில் துக்கமும், தூபமில்லாவிடில் சுகமின்மையும், தீபமில்லாவிடில் பொருள் முட்டுப்பாடும், நைவேத்யமில்லை எனில் வறட்சியும் மந்திரமில்லை எனின் வறுமையும் உண்டாலும்.


இத்தொகுப்பில் கண்ட செய்திகள் சிவாகமங்களில் கூறப்பெற்றவை. எனவே கூடுமானவரை விதிகளை உணர்ந்து தவறாது அபிஷேகம், அர்ச்சனை முதலிய வழிபாடுகளைச் செய்து நல்லன எல்லாம் பெருவோம்.

திருச்சிற்றம்பலம்!





 
 




 

No comments:

Post a Comment