Sunday 27 March 2016

அரசர் கோவில் ஆறு விரல் மகாலக்ஷ்மி!


ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிர கிரகத்துக்கு உரிய எண் ஆறு. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி செய்யும் இருபதாண்டு காலம், யோகம் நிறைந்த காலம் என்பார்கள். சுக்கிரன் என்றாலே அதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர். மக்களுக்கு செல்வத்தையும், செல்வாக்கையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் ஒவ்வொரு வெள்ளிகிழமைதோறும் பாலாற்றங்கரையில் உள்ள அரசர் கோயிலில் உறையும் சுந்தர மகாலட்சுமியை தரிசனம் செய்ய வருகிறார் என்பது காலத்தால் நிலைத்து நிற்கும் நம்பிக்கை.

சுக்கிரதிசை அடிக்கிறதுஎன்றாலே ஒருவர், ஓஹோவென்று வாழ்கிறார் என்று பொருள். அப்படி சகல சௌபாக்கியங்களையும் தரும் சுக்கிரனே வெள்ளிதோறும் சுந்தர மகாலட்சுமியை தரிசனம் செய்ய வருகிறார் என்றால், அந்த மகாலட்சுமியின் கடாட்சம் கிட்டுமானால், எப்படிப்பட்ட வாழ்க்கை ஒருவருக்கு கிடைக்கும்?

மகாலட்சுமி சுக்கிரனுக்கு ப்ரீதியானவர் என்பதற்கு மற்றொரு சான்று, அரசர் கோயிலில் வாசம் செய்யும் மகாலட்சுமிக்கு வலது பாதத்தில் ஆறு விரல்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? அது மட்டுமா? சகல ஐஸ்வர்யங்களையும் நமக்கு தருபவர்கள், அறுபத்தி நான்கு லட்சுமிகள். எல்லா லட்சுமிகளுக்கும் தாயார் இந்த சுந்தர மகாலட்சுமி தான். இவருக்கு பெருந்தேவி தாயார் என்ற திருநாமமும் உண்டு. சுந்தர மகாலட்சுமி தாயாருடன் உடனுறைபவர்கமலவரதராஜ பெருமாள். கமல வரதராஜர் காஞ்சி வரதருக்கும் மூத்தவராம்.
 
கமல வரதராஜர் உடனுறை சுந்தர மகாலட்சுமியும் அரசர் கோயிலில் எழுந்தருளியது குறித்து புராண வரலாறு என்ன சொல்கிறது?

பிரம்மா பாப விமோசனம் தேடிக் கொண்டிருந்த சமயம். பல தவச் சீலர்களை கலந்தாலோசிக்கிறார் பிரம்மா. மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் மாதவனும் சேர்ந்து எங்கு காட்சி தருகிறார்களோ அந்தத் திருத்தலத்தில் அவர்களின் தரிசனம் கிடைத் தால் தான் பாப விமோசனம்" என்று முனிவர்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் வைகுண்டவாசனின் விளையாட்டுதானே! பூலோகத்துக்கு வரும் நாராயணன், பாலாற்றங்கரையில் வாசம் செய்கிறார். அந்த சமயம் ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார். ஆண்டவரும் அரசரும் அங்கே சந்திக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட பிரம்மா விரைந்து வந்த இருவரையும் தரிசனம் செய்கிறார். நாராயணர் அவருக்கு பாபவிமோசனம் கொடுத்து, பாலாற்றிலிருந்து மண் எடுத்துச் சென்று யாக குண்டம் கட்டி வேள்வி செய்யச் சொல்கிறார். பிரம்மா மண்ணை எடுத்துக் கொண்டு போய் காஞ்சிபுரத்தில் வேள்வியைத் துவக்குகிறார்.

இந்த நிலையில் பாற்கடல்வாசனைக் கண்ட ஜனகர் தினசரி அவருக்கு பூஜை செய்து வருகிறார். ஒரு நாள் ஜனகர் ஏதோ வேலையாகச் சென்றவர் பூஜை நேரம் முடிந்ததும் திரும்புகிறார். வந்து பார்த்தால் பூஜை நடந்து முடிந்ததற்கான தடயங்கள் தெரிகின்றன. அதிர்ச்சியடைகிறார் ஜனகர். பெருமாளே வந்து தனக்குத் தானே பூஜை செய்துவிட்டு போனதாக சொல்கிறார் காவலாளி. அதிர்ச்சியடையும் ஜனகர், ‘இப்படி நடந்து விட்டதேஎன்று மனம் கலங்குகிறார். இதற்கிடையில் பெருமாள் ஜனகர் இருந்த இடத்துக்குப் போய் தனக்குத் தானே பூஜை செய்து கொண்டதைக் கேள்விப்பட்ட மகாலட்சுமி கோபப்படுகிறார். அவரை சமாதானப்படுத்தும் விதமாக இங்கே வந்து என்னை தரிசிப்பவர்களைவிட உன்னை தரிசிப்பவர்களுக்கே, ஐஸ்வரியங்கள் சேரும்" என்று சொல்கிறார்.

தன் தவறுக்கு பரிகாரமாக ஜனகர் பெருமாளுக்கு தேவ சிற்பி விஸ்வகர்மா மூலம் கோயில் கட்ட, அது அரசர் கோயிலென அழைக்கப்பட்டது. அங்கேகமலவரதராஜரும் சுந்தர மகாலட்சுமியும் எழுந்தருளி கால, காலமாக மக்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்கள்.

இந்தக் கோயிலில் முதலில் தாயாரைத்தான் வணங்க வேண்டும். தாமரை பீடத்தில் பத்மாசன நிலையில் காட்சி கொடுக்கிறார் தாயார். மேல் இரு கரங்களில் தாமரை. கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரையுடன் ரட்சிக்கின்றன. பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலுக்கு அடுத்து ஆறாவது விரல். பெயருக்கு ஏற்றார் போல்சுந்தரமாக காட்சியளிக்கிறார். வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்களையும் கொடுப்பாள் மகாலட்சுமி.

தாயார் சன்னிதி கருவறை முன் மண்டபத்து தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டினால் வித்தியாசமான சப்தத்தை எழுப்புகின்றன. தூணில் உள்ள ஒரு துவாரத்தில் தர்ப்பையை விட்டால் நான்காகப் பிரிந்து வெளிவருகிறது. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம் குபேர கோமுகம் என்கிறார்கள். தாயார் சன்னிதி சடாரியில் மேல் உள்ள பாதத்திலும் ஆறு விரல்கள். தாயாருக்கு பலாச்சுளை நைவேத்தியம் சிறப்பு. இப்படி பலாச்சுளைகளை கொடுத்த சித்தரின் சிற்பம் மண்டபத்தில் இருக்கிறது. தாயார் கருவறை முன் மண்டபம் முழுக்க சிற்பங்களின் அணிவகுப்பு.

பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம். வலது கரத்தில் தாமரை மொட்டு. தாயார் கொடுத்தது. ‘கமலவரதராஜர் என்ற திருநாமத்துக்கு காரணம் புரிந்திருக்குமே! பிள்ளையார் தும்பிக்கை ஆழ்வார் என்று வணங்கப்படுகிறார். பெருமாள் சன்னிதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் ஆகியோர் உற்சவர் கோலத்தில் இருக்கிறார்கள்.

கோயிலில் கஜபூஜை செய்தால் விசேஷம். மேலும் பின்புறம் ஓடும் பாலாற்றில் பித்ரு காரியம் செய்வது சிறப்பு. விஜயநகர பேரரசர்கள், மூன்றாம் ராஜராஜன், ஜடாவர்மன், சுந்தர பாண்டியன் ஆகியோர் கோயிலுக்கு திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் சொல்வது மட்டுமல்லாமல்; தொன்மையையும் வெளிப்படுத்துகின்றன. திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

செல்லும்வழி:
G.S.T.
சாலையில் மாமண்டூரை அடுத்து, படாளம் சந்திப்பிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது அரசர் கோவில்.

தொடர்புக்கு: 88706 30150
 
 

No comments:

Post a Comment